வியாழன், ஜூலை 15, 2021

நீலாவணன் கவிதைகள் --- எம். ஏ. நுஃமான்

நீலாவணனின் கவிதைகள் ”ஒத்திகை” என்ற தலைப்பில் 2001 இல் கொழும்பு நன்னூல் பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது.
இந் நூல் வெளிவந்து ஒரு வருட காலத்திலேயே அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக அறியமுடிவது மகிழ்ச்சி தரும் செய்தி.
நீலாவணனின் இக் கவிதை நூலுக்கு எம்.ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரை எமது இலக்கிய வரலாற்றில் நீலாவணனின் இடத்தினை நிர்ணயம் செய்யவும், செய்தும் எழுதப்பட்டிருகின்றது.
”ஒத்திகை” என்ற இக் கவிதை நூலினை அச்சிட்ட நீலாவணனின் மகன் எஸ். எழில்வேந்தன் அவர்களுக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களும் நன்றி சொல்லி இம் முன்னுரையை இங்கே மீளப் பதிவாக்குகின்றோம்.

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண்விடுக்காத பூனைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்
நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண்ணெதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...


நீலாவணன் இறந்தபோது அவர் நினைவாக நான் எழுதிய கவிதை இவ்வாறுதான் தொடங்குகின்றது. நீலாவணனுக்கும் எனக்குமிடையே நிலவிய உறவு இரண்டு கவிஞர்களுக்கிடையே இருந்த வெறும் இலக்கிய உறவுமட்டுமல்ல. அண்ணன் தம்பி உறவாகவும், குருசிஷ்ய உறவாகவும் கூட இது இருந்தது. நீலாவணனின் உறவு கிடைத்திருக்காவிட்டால் உண்மையில் நான் ஒரு கவிஞனாக, இலக்கியகாரனாக உருவாகியிருக்க முடியாது என்றே நம்புகின்றேன்.

நான் முதல்முதல் நீலாவணனைச் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. 1960ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். கல்முனையில் க.பொ.த. வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.

அந்நாட்களில் இலக்கியம் - கவிதை போன்ற சங்கதிகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பத்திரிகைகளில் வரும் எழுத்துக்களை வாசிப்பதுண்டு. கவிதை, சதை என அவ்வப்போது ஏதோ கிறுக்கியதும் உண்டு. எனது இலக்கிய ஈடுபாடு அவ்வளவுதான். இதற்கு மேல் ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயம் எதுவும் இல்லை. எனது வகுப்பறை நண்பன் சத்திய நாதனுக்கும் என்போல் எழுத்தில் ஈடுபாடு இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்துவதற்குத் தீர்மானித்தோம். ஒரு நூறு ரூபா போல் பணமும் சேர்த்தோம்.அதுதான் எங்களது கைமுதல் . அதை வைத்துக்கொண்டுதான் ஒருபத்திரிகையை அச்சிட்டு வெளியிடத் துணிந்தோம். அதை எங்கள் அறியாமையின் துணிச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு நாள் சத்தியன் என்னிடம் சொன்னான். “நீலாவணன் என்றுஒரு கவிஞர் இருக்கிறார். நல்ல ஆள் போலத் தெரியுது. நேற்று தபாற்கந்தோரடியில் கண்டு பத்திரிகை அடிக்கிறது சம்பந்தமாகக் கதைத்தேன். ஒரு நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். நாம் போய்ச் சந்திப்போம்,”என்று.
நீலாவணனின் கவிதைகள் எவற்றையும் அப்போது படித்திருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அன்று பின்னேரமோ, மறுநாளோ நாங்கள் இருவரும் நீலாவணனை சந்திக்கச் சென்றோம். நீலாவணன் கோயிலடியில் இருப்பதாகச் செய்திகிடைத்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நாங்கள் கோயில் வளவுக்குச் சென்றோம். ஒரு கறுத்து மெலிந்த மனிதர் தன்னந்தனியாக, கோயிலைச் சுற்றி வளர்ந்து கிடந்த பற்றைகளை வெட்டிக் கொத்தித் துப்பரவு செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் நீலாவணன் என்று சத்தியன் சொன்னான். எங்களைக் கண்டதும் மடித்துக்கட்டியிருந்த சாறனை அவிழ்த்துவிட்டபடி அவர் எங்களை நோக்கிவந்தார். கோயில் திண்ணையில் அமர்ந்து நாங்கள் கதைத்தோம். இந்தக் கோயிலை யாரும் கவனிப்பதில்லை என்று அவர் குறைப்பட்டுக்கொண்டார். எங்கள் முதல் சந்திப்பிலேயே நீலாவணனின் தனித்துவமான ஆளுமையை அவரின் நல்லியல்பை நான் கண்டேன்.

மற்றவர்களைக் குறைகூறுவதோடு நில்லாது, தானே அதைச் சரிப்படுத்த முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. தனது ஊர் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்ற நியாயமான அக்கறை அவரது மனதில் எப்போதும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுதிய ‘பாவம் வாத்தியார்' கவிதை இதன் வெளிப்பாடுதான். அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகளை முதலில் வாசித்தபோது நீலாவணனை முதல்முதல் கோயிலடியில் சந்தித்த காட்சியே எனக்கு ஞாபகம் வந்தது.

“ஏழேழ் தலைமுறைக்கும் எம்மூரின் கோயில்
மதிலாய் உயர்ந்து நிற்கும் மாபெரிய காடு
அதிலே உமக்கென்ன அக்கறையோ?. பள்ளிச்
சிறுவரை விட்டுச் சிரைத்து நிலவேர்
அறுத்துப் பிடுங்கி, அகற்றி, அம்மன் வீதியினை
வெட்டை வெளியாக்கி வெள்ளை மணல் கொட்டி வைத்தீர்
புற்றுடைத்துப் பாம்புகளும் போக விடை கொடுத்தீர்.”

கோயிலடிச் சந்திப்புக்குப் பிறகு நாங்கள் பத்திரிகை வெளியிடாவிட்டாலும் (அதுவே பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாடும் மீனாக வெளிவந்தது.) நீலாவணனின் வீடே எங்கள் இலக்கியப் பயிற்சிக் களமாக மாறியது. உண்மையில் நீலாவணனின் தொடர்பின் மூலம் நான் ஒரு புதிய உலகுள் பிரவேசித்தேன். என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த, அதுவரை நான் காணாத பரந்த இலக்கிய உலகத்தை அவரது உறவின் மூலம் நான் தரிசித்தேன்.
மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மு.சடாட்சரன், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், கனக சூரியம் போன்ற எமது பிரதேசக் கவிஞர்கள் எனது நண்பர்கள் ஆனார்கள். மஹாகவி, எஸ்.பொன்னுத்துரை, எம். ஏ. ரஹ்மான் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

பாரதி, பாரதிதாசன், ச.து.சு.யோகியார், புதுமைப் பித்தன், அழகிரிசாமி போன்றோரின் படைப்புகள் எனக்குப் பரிச்சயமாகின. சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம் எனப் பரந்த பழந்தமிழ் இலக்கியம் என் ரசனை எல்லையை விரிவுப்படுத்தியது. டால்ஸ்டாய், செக்கோவ், கார்க்கி, மாப்பசான், ஹெமிங்வே, செல்மா லாகர்லாவ் உலகின் சிறந்த படைப்பாளிகள் தமிழ் மொழி மூலம் எனக்கு அறிமுகமானார்கள். இப் பரந்த இலக்கிய உலகின் ஜன்னல்களை எனக்குத் திறந்துவிட்டவர் நீலாவணன்தான்.நீலாவணனுக்கு ஒரு ஆரோக்கியமான இலக்கியப் பசி இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கும் அவர் அதைத் தொற்ற வைத்தார்.

II


நீலாவணன் ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் முக்கியமான இடம்பெறுபவர். ஈழத்து நவீன கவிதை பற்றிப் பேசும்போது மஹாகவி, முருகையன், நீலாவணன் மூவரையும் குறிப்பிடாமல் வேறு யாரையும் குறிப்பிட முடியாது. மூவரும் தனித் தன்மைகளும் பொதுப் பண்புகளும் உடைய மும்மூர்த்திகள். ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இவர்களது செல்வாக்கு மிக ஆழமானது. முன்னவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தவர். நீலாவணன் கிழக்கின் பிரதிநிதி. கிழக்கிலங்கையின் தனிப்பெரும் கவித்துவ ஆளுமையாக அவர் திகழ்ந்தார். அவரது சமகாலத்தவர்களான புரட்சிக்கமால், அண்ணல் ஆகிய இருவரும் அளவாலும், தரத்தாலும் அவருக்கு அடுத்த இடத்தில் தான் வருவார்கள். கிழக்கிலங்கையில் கல்முனைப் பிரதேசம் தமிழ்க் கவிதையின் தலைநகராகக் கருதத்தக்கது. பல முக்கியமான கவிஞர்கள் இப்பிரதேசத்தில் உருவானதில் நீலாவணனின் செல்வாக்கு கணிசமானது.

நீலாவணன் 31.05.1931 ஆம் ஆண்டு பிறந்து 11.01.1975ல் திடீரெனத் தாக்கிய இதய நோயினால் காலமானார். சரியாக 44 ஆண்டுகளே வாழ்ந்தார்.பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மஹாகவி போல் அதிக சாதனைகள் செய்து அற்ப ஆயுளில் மறைந்தவர் அவர். தன் ஆயுளில் அரைவாசிக் காலம்,சுமார் இரண்டு தசாப்தங்கள், இலக்கிய உலகில் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரது முதல் கவிதை 1953ல் பிரசுரமானது. இறுதிவரை அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்தார். கவிதை, சிறுகதை, நாடகம், உருவகக்கதை , நடைச் சித்திரம், கட்டுரை என அவரது இலக்கிய அக்கறை விசாலமானது. எனினும் கவிதையையே அவர் தன் பிரதான இலக்கிய வடிவமாகக் கொண்டார்.

சுமார் இருபது ஆண்டுகால அவரது இலக்கிய வாழ்வில் சில நூற்றுக்கணக்கான கவிதைகளும், வேளாண்மை என்ற குறுங்காவியமும், மூன்று பாநாடகங்களும் அவரது கவித்துவ அறுவடையாக உள்ளன. புனை கதைகளும், கட்டுரைகளுமாகப் பல உள்ளன. எனினும் அவரது வாழ்நாளில் தன் கவிதைத் தொகுதி ஒன்றையேனும் வெளிக்கொண்டுவர அவரால் முடியவில்லை. மரணத்தின் பின்பே அவரது கைப்படத் தொகுத்திருந்த 56 கவிதைகளைக் கொண்ட அவரது முதலாவது கவிதைத் தொகுதி ’வழி’ என்ற பெயரில் 1976ல் வெளிவந்தது. சில ஆண்டுகளின்பின் 1982ல் அவரது ’வேளாண்மை’ காவியம் வ.அ. இராசரத்தினத்தின் முயற்சியால் நூலுருவாகியது.
நீலாவணன் மறைந்த கால் நூற்றாண்டு காலத்தில் அவரது படைப்புகள் என்று இவ்விரு நூல்கள் மட்டுமே வெளிவந்தன. மஹாகவி இறந்தபிறகு எனது முயற்சியால் அவரது நூல்கள் சில வெளிவந்தன. அதுபோல் நீலாவணனின் நூல்கள் ஒன்றிரண்டையாவது வெளிக்கொண்டுவர முடியவில்லையே என்ற மனக்குறையும் குற்ற உணர்வும் எனக்கு நிறைய உண்டு. ’வழி’யை அச்சுருவாக்கும் பொறுப்பை நானே ஏற்றுச் செய்தேன் என்ற திருப்தி இதற்கு ஒரு நிவாரணம் ஆகாது. இப்போது நீலாவணன் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படைப்புகள் அனைத்தையும் நூலுருவாக்க அவரது துணைவியார் என் மரியாதைக்குரிய அழகேஸ்வரி அக்கா அவர்களும், மகன் எழில் வேந்தனும் முன்வந்துள்ளனர். இவர்களது முயற்சியால் இப்போது இத்தொகுப்பு வெளிவருகின்றது. இத்தொகுப்பு முயற்சியில் பங்குகொள்வதற்கும், இதற்கு ஒரு முன்னுரை எழுதுவதற்கும் கிடைத்த வாய்ப்பை ஒரு பிராயச்சித்தமாகவே கருதுகிறேன்.

III


இதுவரை நூல் உருப் பெறாத நீலாவணனின் 80 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 1953 முதல் 1974 வரையுள்ள இருபதுஆண்டு காலத்தில் அவர் எழுதிய கவிதைகளுள் சில இவை. ஏற்கனவே வெளிவந்த ’வழி’யில் இடம்பெற்ற கவிதைகள் எவையும் இதில் இல்லை. நீலாவணனின் கவித்துவ ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புவர்கள் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளோடு, வழி, வேளாண்மை ஆகியவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
நூலுருப்பெற வேண்டிய அவரது கவிதைகள் இன்னும் அநேகம் உள்ளன. அவரது பரிமாணத்தை அறிந்துகொள்வதற்கு அவையும் அவசியமானவை. இந்த முன்னுரை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கு மட்டுமன்றி நீலாவணனின் முழுக்கவிதைகளுக்கும் ஒரு அறிமுகமாகவே அமைகின்றது.

நீலாவணன் எத்தகைய கவிஞன்?. தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் அவரும் ஒருவர் என இவ்வினாவுக்கு நாம் ஒரு வசனத்தில் விடை கூறலாம். ஆனால், இந்த முக்கியத்துவம் அவருக்கு எவ்வாறு வருகின்றது?. இதற்கு நாம் ஒற்றை வரியில் பதில் கூறுவது சிரமமானது. இதற்குரிய விடை கவிதை பற்றிய நமது பார்வையைப் பொறுத்து வேறுபடக்கூடும். கவிதை பற்றிய நமது பார்வை ஒற்றைப் பரிமாணம் உடையதெனின் நீலாவணனுடைய முக்கியத்துவத்தையும் நாம் அவ்வகையிலேயே நிறுவமுனைவோம்.
வாழ்வின் பன்முகத்தன்மையையும் கவிதையின் பன்முகத்தன்மையையும் நமது பார்வை உள்ளடக்குமாயின் நீலாவணனின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீட்டிலும் நாம் இப்பன்முகத் தன்மையை வலியுறுத்துவோம்,இதை ஒரு உதாரணத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

நண்பர் மு.பொன்னம்பலம் சில ஆண்டுகளுக்கு முன் 'யதார்த்தமும்ஆத்மார்த்தமும்' என்று ஒரு கட்டுரை எழுதினார். இதே தலைப்பிலான அவருடைய கட்டுரைத் தொகுதியில் (1991) இது இடம் பெற்றுள்ளது.
யதார்த்தத்தை நிராகரித்து ஆர்மார்த்தத்தை இனிவரும் யுகத்தின் கலைப் பார்வையாக மேன்மைப்படுத்த முயலும் ஒரு பலவீனமான கட்டுரை அது. அக்கட்டுரையில் மஹாகவியையும் நீலாவணனையும் ஒப்பிட்டு வேறுபடுத்த முனைகிறார் மு.பொ. ஒரு வகையான பட்டிமன்ற விவாத முறையைப் பயன்படுத்தி, மஹாகவியை ஒரு சாதாரண யதார்த்த வாதியாகக் கீழ் இறக்கும் நண்பர், நீலாவணனை ஒரு ஆத்மார்த்தியாக மேல் உயர்த்துகிறார். என்றாலும், நீலாவணனின் ஆத்மார்த்தம் கூட ஊனமுடையது என்றும் மு.பொன்னம்பலம், சு.விஸ்வரத்தினம், மு.தளையசிங்கம் ஆகியோரே பூரண ஆத்மார்த்திகள் என்றும் இவர்களே இனிவரும் யுகத்தின் கலைஞர்கள் என்றும் கூறுகிறார்.
இவ்வகையில் மஹாகவியைவிட நீலாவணன் மேலானவர். நீலாவணனைவிட மு.பொ. மேலானவர் என நிறுவ முனைகிறார்.

இந்தப் பார்வை கலை இலக்கியம் பற்றிய ஒற்றைப் பரிமாணப் பார்வை என்பது வெளிப்படை. இப் பார்வையின் அடிப்படையில் “நீலாவணனின் தீ, ஓ வண்டிக்காரா, போகிறேன் என்றோ சொன்னாய் ஆகிய இந்த மூன்று கவிதைகளே அவருக்கு இலக்கிய உலகில் நிரந்தர இடத்தைத் தரக் கூடியன" என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய பார்வையை முருகையன் 'வெளி ஒதுக்கற் கொள்கை” என்று சொல்வார். அதாவது, தனக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரித்தல். இப்பார்வை முற்றிலும் அகநிலைச் சார்பானது. மஹாகவியை நிராகரிப்பதற்கும், நீலாவணனை ஓர் அளவுக்கேனும் உயர்த்துவதற்கும் மு.பொ. இந்த அகநிலைச் சார்பையே அடிப்படையான பிரமாணமாகக் கொள்கிறார்.
மு.பொ.வின் இந்தப் பார்வை நீலாவணனின் சமூகசார்பான சமூக விமர்சனப்பாங்கான கவிதைகளையெல்லாம் புறமொதுக்கி, தனது குறுகிய ஆர்மார்த்தக் கூண்டுக்குள் நீலாவணனை அடைத்துவிட அவருக்கு வாய்ப்பளிக்கிறது. தும்பிக்கையையே யானையாகக் காணும் ஒரு பார்வைக் கோளாறுதான் இது. நீலாவணனின் பன்முகத் தன்மையைக் காணமறுத்து தனக்குப் பிடித்த முகமே அவரது முகம் எனச் சாதிக்க முனையும் இப்பார்வை நீலாவணனுக்குப் பெருமை சேர்க்காததோடு அவரின் முக்கியத் துவத்தையும் வரையறுத்துவிடுகின்றது.

பிற எல்லாச் சிறந்த கலைஞர்களையும் போல் நீலாவணன் என்ற கவிஞனும் தான் வாழ்ந்த காலத்தினதும், தான் வந்த பாரம்பரியத்தினதும் தனது சொந்த ஆளுமையினதும் உருவாக்கம் தான். இவற்றின் கூட்டுக் கலவைதான் அவரது கவிதைகள், ஆனால், வேறு பலமுக்கிய படைப்பாளிகளைப் போல்வாழ்க்கை பற்றிய தீவிரமான தத்துவப் பார்வை எதையும் நீலாவணன் வரித்துக்கொள்ளவில்லை. வாழ்க்கையின் தேவைகளுக்கும் சவால்களுக்கும் தன் சொந்த ஆளுமையின் தூண்டுதல்களுக்கேற்ப அவர் எதிர்வினையாற்றினார். புறநிலையான சமூக யதார்த்தத்துக்கும், பாரம்பரியமான ஆன்மீகத் தேடலுக்கும், இலக்கிய மரபுக்கும் அவர் ஒரே சமயத்தில் முகம் கொடுத்தார். இதனால் ஒரேசமயத்தில் இவரிடம் பல்வேறுபட்ட போக்குகளை நாம் அடையாளம் காணமுடிகிறது. அவ்வகையில் நீலாவணனை பல போக்குகளின், பலவிதமான உணர்வுகளின் கூட்டுக்கலவை எனக் கூறுவது தவறாகாது.

நண்பர் மௌனகுரு அவர்கள் நீலாவணன் பற்றி எழுதிய கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் (1994) என்ற தனது நூலில் நீலாவணனின் கவிதைப் போக்கின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாக வேறுபடுத்திப் பார்க்கிறார். இது ஒரு வகையில் மிகை எளிமைப்படுத்தப்பட்ட வேறுபாடு என்றே எனக்குத் தோன்றுகின்றது.
நீலாவணன், பாவம் வாத்தியார், உறவு முதலிய சமூகவிமர்சனக் கவிதைகளை எழுதிய அதே காலப் பகுதியில் தான் பயண காவியம், பனிப்பாலை, தீ போன்ற ஆன்மீகத் தேடல் என்று விளக்கக் கூடிய கவிதைகளையும் எழுதினார். தயவுசெய்து சிரியாதே, ஓவியம் ஒன்று, மங்களநாயகன் போன்ற அழகிய காதல் கவிதைகளையும் அவர் இதே காலப்பகுதியில்தான் எழுதினார்.

கால ஓட்டத்தினூடு அவரது கவித்துவ முதிர்ச்சியைக் காணமுடிகிறது. அதேவேளை ஒரே கால கட்டத்தில் அவரிடம் பல போக்குகளையும் காணமுடிகிறது. அவ்வவ்போதைய வெவ்வேறுபட்ட உணர்வுத் தூண்டல்களுக்குத் தன் மரபு நிலைப்பட்டும், ஆளுமை சார்ந்தும் அவர் துலங்கினார். இது அவரது கவிதைகளுக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றது. இவ்வகையில், மொழி உணர்வு, காதல், சமூக விமர்சனம்,ஆன்மீகத் தேடல் என்பன அவரது கவிதையின் பலமுகங்கள் எனலாம். இவற்றுள் ஒன்றை உயர்த்தி மற்றவற்றை நிராகரிப்பது நீலாவணனைச் சரியாக மதிப்பிடுவதாக அமையாது.

IV


நீலாவணன் எழுத்துத்துறையில் பிரவேசித்த காலம் (1950கள்)இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். இலங்கையில் இடதுசாரி இயக்கம் மட்டுமன்றி, இனத்துவ முரண்பாடும், இனவாத அரசியலும் கூர்மை பெறத்தொடங்கியதும் இக்கால கட்டத்திலேயே. சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற சிங்கள தேசிய வாதத்தின் நிலைப்பாடு தமிழ் உணர்ச்சியையும், தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசியவாதத்தையம் கிளர்ந்தெழச் செய்தது. 1955 முதல் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இது தீவிரமாக வெளிப்பட்டது. உண்மையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இக்கால கட்டத்தை அரசியல் எதிர்ப்புக் கவிதையின் (PROTEST POETRY)தொடக்ககாலம் எனலாம். இலங்கையின் அன்றைய முன்னணிக் கவிஞர்கள் பலரும் தமிழ் உரிமைப் போராட்டத்தை ஊக்கப்படுத்திக் கவிதை எழுதினர். மாபாடி என்ற புனை பெயரில் மஹாகவி இத்தகைய ஒன்பது கவிதைகள்எழுதியிருக்கிறார். முருகையன் இதைவிட அதிக கவிதைகள் எழுதினார். நீலாவணனின் மொழி உரிமைப் போராட்டக் கவிதைகள் கணிசமானவை. வீறார்ந்த உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதைகளாக இவை அமைந்தன. சங்ககால வீரயுக மரபில் இருந்தும் இக்கவிதைகள் ஊட்டம் பெற்றன. மொழிஉரிமைப் போராட்டத்தில் தான் இறக்க நேர்ந்தால் தன்மகன் எழில் வேந்தனை தகப்பன் சென்ற பாதையில் போருக்கு அனுப்பவேண்டும் என ஒருபாடலில் நீலாவணன் தன் மனைவியை வேண்டுகிறார். எழில் வேந்தன் அப்போது குழந்தைப் பருவத்தில் இருந்தான். முருகையன், மஹாகவி போலன்றி நீலாவணன் தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளிலும் நேரடியாகத் தோன்றியவர். கட்சிக் கொள்கைப் பிரச்சாரம் சார்ந்த சில கவிதைகளும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இத்தகைய தமிழ் இயக்கப் பாடல்கள் 1958க்குப் பிறகு பெரும்பாலும் முடிவுக்கு வந்தன. 1958இன் இனக் கலவரமும், அது கவிஞர்களுக்கு ஏற்படுத்திய ஒரு தார்மீக அதிர்ச்சியும் இதற்குக் காரணம் எனலாம். 1960க்குப் பிறகு வேறுபல கவிஞர்களைப் போல் நீலாவணனும் தமிழ் அரசியல் இயக்கத்திலிருந்து பெரிதும் ஒதுங்கி இருந்தார்.

இக்காலத்தில் தோன்றிய தமிழ் இயக்கக் கவிதைகள் அவற்றுக்கே உரிய அழகியல் அம்சங்களையும் இலக்கிய வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தன. எனினும், நீலாவணனோ, மஹாகவி, முருகையன் ஆகியோரோ இக்கவிதைகளைத் தங்கள் தொகுதிகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கருதியிருக்கவில்லை. இவற்றுக்கான உரிமையை இவர்கள் மெளனமாக மறுதலித்தார்கள் என்றும் கூறலாம். எனினும். இவை நமது சமகாலக் கவிதை வரலாற்றின் ஓர் அங்கமாக உள்ளன என்பதை மறுக்கமுடியாது. இவற்றின் அழகியல் தனியாக ஆராயப்படவேண்டியது. நீலாவணனின் இத்தகைய கவிதைகளுள் ஒன்று மட்டும் -தமிழே எழுவாய்- இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அடுத்துவரும் தொகுதிகளில் ஏனையவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகம் அவரது காதல் கவிதைகளாகும். அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பாலும் இறுதிக் கட்டம் வரை காதல் அவரது முக்கிய கருப்பொருளாக இருந்திருக்கிறது. நீலாவணனின் காதல் கவிதைகளில் இரு வகைகளை நாம் காணலாம். ஒன்று, உடல் சார்ந்த விரக உணர்வின் வெளிப்பாடாக அமைபவை. அவரது ஆரம்பகாலக் காதல் கவிதைகள் பெரும்பாலும் இத்தகையன. இத்தகைய கவிதைகளுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து இது தொடங்குகின்றது. திராவிட இயக்கக் கவிஞர்கள் இதனை அதன் உச்சத்துக்குக் கொண்டு சென்றனர்.
பாலியல் கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பெண் உடல் வனப்பையும், உடல் உறவு நடத்தைகளையும் இவர்கள் நுணுக்கமாகச் சித்தரித்தனர். கருணாநிதி முதல் கண்ணதாசன் வரை நாம் இதனைக் காணலாம். சங்க இலக்கியக் காட்சிகள் சிலவற்றுக்கு இவர்கள் கொடுத்த கவிதை விபரணம் காமியம் செறிந்தது.

1950, 60களில் தமிழ்க் கவிதையில் இது ஒரு மரபாக நிலைகொண்டது. நீலாவணனின் முதல் கவிதையான 'ஓடிவருவதென்னேரமோ” இம்மரபின் வெளிப்பாடுதான். 1959ல் அவர் கலித்தொகைப் பாடல் ஒன்றை(கயமலர் உண் கண்ணாய் - குறிஞ்சிக்கலி) தழுவி எழுதிய 'இனிக்கும்அன்பு' இம்மரபின் தொடர்ச்சியாக அமைகின்றது. வழியிலும் இத்தொகுதியிலும் இத்தகைய கவிதைகள் சில இடம்பெற்றுள்ளன. நீலாவணனின் சொல்லாட்சி,கற்பனைத் திறன் ஆகியவற்றை நாம் இவற்றில் காணமுடிகிறது.

நீலாவணனின் இரண்டாவது வகையான காதல் கவிதைகள் வெறும் உடல்சார் விரகத்தைத் தாண்டிய, சூழ்ந்த உள்ளக் கிளர்ச்சிதரும் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை. போகவிடு, ஓவியம் ஒன்று, போகின்றேன் என்றோ சொன்னாய், மங்கள நாயகன், வேடன், சீவனைத்தான் வேண்டுமடி போன்றவை இத்தகையன.
இவற்றிலும் உடல்சார் பாலியல் பொதிந்திருப்பினும் உள்ளக் கிளர்ச்சி அனுபவமே இவற்றின் அடிப்படைத் தொனியாகும். இவற்றில் தமிழ்ப் பக்தி மரபின் செல்வாக்கையும் நாம் காணலாம். இத்தகைய கவிதைகள் நீலாவணனின் தனித்துவத்தை நிலைநாட்டுவன என்பதில் ஐயமில்லை. பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா போன்ற தமிழின் அழிவற்ற காதல் கவிதைகளுள் இவையும் இடம்பெறும் என்றே நம்புகிறேன்.

நீலாவணனின் சமூக விமர்சனம் சார்ந்த கவிதைகள் அவரது கவித்துவ ஆளுமையின் இன்னுமொரு முகமாகும். தன் ஆரம்ப காலத்திலிருந்தே சமூகயதார்த்தத்தில் காலூன்றி நின்றவர் நீலாவணன். சமுதாய உணர்வு மிக்கவராக வாழ்ந்தவர் அவர். சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள்,ஊழல்கள், வறுமை, சாதிப்பாகுபாடு, சீதன முறை, நிறவெறி போன்றவற்றுக்கு எதிரான தன் உணர்வுகளைக் கவிதையில் வெளிப்படுத்தினார். அவ்வகையில் அவரது கவிதைகள் பலவற்றில் சமூக சார்பு முனைப்பாகத் தெரிகிறது. ‘பாவம்வாத்தியார்' இவ்வகையில் அவரது உச்ச சாதனை எனலாம். உறவு, போதியோ பொன்னியம்மா, வெளுத்துக்கட்டு போன்றவையும் அவரது முக்கியமான படைப்புகள். அவருடைய வேளாண்மை ஒரு விவரணச் சித்திரம் எனலாம்.
கிழக்கிலங்கையின் பண்பாட்டு ஆவணமாகவே நீலாவணன் அதனை உருவாக்கினார். ஒரு காவியத்துக்குரிய வலுவான மையம் அதில் இல்லை.எனினும் மானிடவியல் சார்ந்த இலக்கிய முக்கியத்துவம் அதற்கு உண்டு. யதார்த்தத்தைப் புறந்தள்ளும் ஆத்மார்த்திகள் இத்தகைய கவிதைகளை ஒதுக்கிவிடுவது விசனத்துக்குரியது.

மறைஞானப் பாங்கான அல்லது ஆன்மீகத் தேடல்களாக அமையும் கவிதைகள் நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகமாகும். நீலாவணன் ஒரு மறைஞானியாக (MYSTIC) வாழ்ந்தவர் அல்ல. பாரம்பரியமான சமய நம்பிக்கையின் வழிவந்தவர் அவர். சமய மெய்ஞானத்தில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. 1960 களில் நடுப் பகுதியிலிருந்து அவரது கவிதைகளில் இதன் செல்வாக்கைக் காணலாம். 1964ல் இவர் எழுதிய துயில் மரணத்தில் நிறைவு காணும் பக்குவம் பற்றிப் பேசுகிறது. பனிப்பாலை, தீ, பயணகாவியம், போகவிடு , ஓ வண்டிக்காரா ,ஒத்திகை , விளக்கு முதலிய கவிதைகள் இவரது ஆன்மிகத் தேடல்சார்ந்த கவிதைகளாகக் கருதப்படலாம். இவற்றில் கையாளப்பட்டுள்ள மொழி குறியீடு அல்லது உருவகப் பாங்கானது. அதனால் பலதளப் பொருண்மை உடையது. இவற்றுட் சில கவிதைகள் (பனிப்பாலை, போகவிடு) பாலியல் படிமங்களால் பின்னப்பட்டவை. இவை பாலியல் கவிதைகளாக அல்லது ஆன்மிகக்கவிதைகளாக விளக்கத்தக்கன.

சாதாரண சம்பவங்களையும் குறியீட்டுப் பாங்கில் கையாண்டு அவற்றில் ஓர் ஆன்மீக உட்பொருள் காணும் வகையிலும் இவருடைய சில கவிதைகள் அமைந்துள்ளன. சுமை, புற்று, விடை தாருங்கள், அஞ்சலோட்டம், பலூன்,பட்டம், முத்தக்காச்சு போன்றவை இத்தகையன. உண்மை, சத்தியம்,பற்றறுத்தல், தீவினை களைதல் போன்ற அரூபமான எண்ணங்கள் இக்கவிதைகளில் அழுத்தப்படுகின்றன. உண்மையைக் காதலிப்பவர் இறப்பதில்லை என்ற கருத்தும் இவரது கவிதை ஒன்றில் வெளிப்படுகிறது.

“உண்மை என்கிற சாந்தி இடத்திலே
உயிரை வைத்திங்கு வந்தவர் நாமெலாம்
என்னவோய் இறப்பென்று மொழிகிறீர்?
இல்லை நாம் இறவாதவர்..."

இதுவரை நோக்கியதில் இருந்து நீலாவணனின் பன்முகத் தன்மையை நாம் இனங்காணலாம். இப்பன்முகத் தன்மையே நீலாவணனின் பலம் என்றுகூற வேண்டும். வாழ்க்கையின் பன்முகத்தன்மைக்கு இயல்பாக முகம் கொடுக்கும் எந்த ஒரு படைப்பாளியிடத்திலும் நாம் இந்தப் பன்முகத்தன்மையைக் காணலாம். விமர்சகன் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தனக்குப் பிடித்ததை மட்டும் படைப்பாளியிடம் தேடுதலும், அது கிடைக்கும்போது அவனை உயர்த்துதலும்,அது கிடைக்காதபோது அவனைத் தாழ்த்துதலும் நேரிய விமர்சனத்தின் பாற்பட்டதல்ல. ஒரு நேரிய விமர்சகன் தன்விமர்சனச் சட்டத்தை ஒரு கூண்டாக அமைத்துக்கொண்டு தன்னை அதற்குள் சிறைவைத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையின் பன்முகத் தன்மைக்கும் இலக்கியத்தின் பன்முகத் தன்மைக்கும் அவன் முகம் கொடுத்தே ஆக வேண்டும். இது மாக்சிய விமர்சகனுக்கும் பொருந்தும். ஆத்மார்த்த விமர்சகனுக்கும் பொருந்தும்.

V


நீலாவணன் கவிதைகளை முழுமையாகப் படிப்போர் அவரிடம் மரபுவழிச் சிந்தனையும் புதுமை நாட்டமும் ஒருமித்து இருப்பதை அவதானிக்கலாம். இன்னும் ஒரு வகையில் சொல்வதானால் சமூக மாற்றத்தை வேண்டிநிற்கும் புத்துலக நோக்கும் பாரம்பரியமான ஆன்மிக விழுமியங்களும் ஒன்று கலந்த ஒரு கலவையாக நாம் அவரைக் காணலாம் ஆயினும், கவிதையின் வடிவத்தை,அதன் ஊடகத்தைப் பொறுத்தவரை அவர் முற்றிலும் மரபுவழிச் சிந்தனையின் வயப்பட்டவராகவே இருந்தார். அதாவது, யாப்பே கவிதையின் ஊடகமாக அமைய வேண்டும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. இது மஹாகவி, முருகையன் உட்பட இலங்கையின் நவீன முன்னோடிக்கவிஞர்கள் அனைவரிடமும் இருந்த ஒரு இறுக்கமான நம்பிக்கைதான். கொள்கை ரீதியாக இவர்கள் புதுக்கவிதை அல்லது வசனக் கவிதைக்கு எதிராக இருந்தார்கள்.
கவிதை பழைமையில் காலூன்றி நிற்கவேண்டும் என்பதே நீலாவணனின் கருத்தாக இருந்தது. பழைமையின் வழியிலேயே புதுமை முகிழ்க்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார்.

கவிதை பற்றிய நீலாவணனின் கவிதை ஒன்று பின்வருமாறு:
பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.

இளமைக் கயிற்றில் கனவைத் தொடுக்கும்' கவிதை பழைமையின் அடித்தளத்திலேயே பயிராகின்றது என்பதை இக்கவிதை கூறுகின்றது. “வழியின்பழமை அறியாது இருளில் நுழையின் வருமோ நவமே" என்று நீலாவணன் தன் வழிக் கவிதையில் கேள்வி எழுப்புகிறார். தமிழ்க் கவிதையின் மரபுத்தொடர்ச்சியை இனங்காட்டும் ஒரு கவிதை முயற்சியே அவரது வழி, யாப்புமரபை வலியுறுத்தி யாப்பை மீறிய புதுக்கவிதை மரபைச் சாடும் இக்கவிதையில்'யாப்பும் முந்தைய வழியும் தேர்ந்த மொழியறி புலவர்" களே போற்றப்படுகின்றனர். இவர்களே அறவழிப்புலவர். யாப்பை மீறும் ‘புதுமைவாணர்கள்' 'தமிழின் கவிதைக் கலையின் மகிமை' அறியாதவர்களாய், அதன் அமிர்தப் பொருளைக் கொலை செய்பவர்களாய்ச் சித்தரிக்கப்படுகின்றனர். நீலாவணன் உட்பட நமது முன்னோடிக் கவிஞர்களைப் பொறுத்தவரை யாப்பு ஒரு புனிதப் பொருளாகவே அமைந்தது.

1960 களின் நடுப்பகுதி வரையுள்ள ஈழத்துக் கவிதையை அவதானித்தால் யாப்போசை அதில் முனைப்பாக இருப்பதை நாம் காணலாம். யாப்போசையைப் பேணும் வகையில் கவிதைகள் சாபிரித்து எழுதவும் அச்சிடவும் பட்டன. ஆயினும், 60 களின் நடுப்பகுதியிலிருந்து நாம் இதில் பெரிய மாற்றத்தைக் - காண்கின்றோம். யாப்பின் வரம்புக்குள் நின்று கொண்டே யாப்போசையைத் தளர்த்தி, அதன் இடத்தில் பேச்சோசையைப் புகுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சீர், தளைக்கேற்ப சொற்களைப் பிரிக்காமை, செய்யுளின் அடி அமைப்பைப் புறக்கணித்து பொருள் அமைப்புக் கேற்ற வரிஅமைத்தல், சிறு வாக்கிய அமைப்பைப் பேணுதல், ஓசை நிரப்பியாக இடம்பெறும் அசைச் சொற்களைத் தவிர்த்தல் போன்ற உத்திகள் இதன் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. கவிப்பொருளில் ஏற்பட்ட மாற்றமும், வளர்ச்சியடைந்து வந்த புதுக் கவிதை இயக்கத்தின் செல்வாக்கும் இதற்குக் காரணம் எனலாம்.
1960களில் யாப்பு மரபுக்குள் பேச்சோசையை அறிமுகப்படுத்தியதில் மஹாகவியின் பங்கு தலையாயது. முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் இதில் முக்கிய பங்காற்றினர். நீலாவணனின் பங்கும் இதில் கணிசமானது. அவரது பல கவிதைகளில் நாம் இதனைக் காணலாம். பாவம் வாத்தியார், உறவு, வேளாண்மை போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம், இத்தொகுப்பில் உள்ள பட்டம், நெருப்பே வா,புதிர், பள்ளங்கள், எட்டாதிரு முதலியவை புதுக்கவிதையோ என்ற மயக்கத்தைத்தருவன. ஆயின் இவை சுத்தமான யாப்பில் அமைந்தவை. வரியமைப்புமாற்றம் இவற்றுக்குப் புதுக்கவிதையின் தோற்றத்தைத் தருகிறது.

நீலாவணனிடம் லாவகமான செய்யுள் ஆற்றல் இருந்தது. இலங்கையில் தமிழ்ச் செய்யுள் நடையைச் செழுமைப்படுத்திய முன்னோடிகளுள் நீலாவணனும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. பொதுவாக இலங்கையின் பிறபாகங்களைவிட, கல்முனைப் பிரதேசக் கவிஞர்கள் செழுமையான செய்யுள்நடை வல்லவர்களாக இருப்பதற்கு நீலாவணனின் உடனிருப்பும் செல்வாக்கும் ஒரு முக்கிய காரணம் என்றே கருதுகிறேன்.
நீலாவணன் அலாதியான முறையில் தன் கவிதைகளை வாசித்துக்காட்டுவார். கவி அரங்குகளில் அவரது கவிதைகள் எடுபட்டமைக்கு அதுவும் ஒரு காரணம் கவிதைகளை இனிமையாகப் பாடும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. மாலை வேளைகளில் நீலாவணைக் கடற்கரையில் மணலில் படுத்தவாறே அவர் பாடுவதைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்ததுண்டு. போகிறேன் என்றோ சொன்னாய், ஓ வண்டிக்காரா ஆகிய பாடல்களை அவர் பாடக்கேட்ட அனுபவம் அற்புதமானது.
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கப்பாடலை அவர் உணர்வோடு பாடக் கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நீலாவணன் மென் உணர்வுமிக்கவர். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .இதனால் தன் உண்மையான தோழர்கள் பலரின் நட்பையும் அவர் துண்டித்துக் கொண்டதுண்டு. எஸ்.பொன்னுத்துரை நீலாவணன் நினைவுகள் என்ற தன்நூலில் (1994) இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். நீலாவணனின் கடைசி ஆண்டுகளில் அவரை விட்டு விலகி இருக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கும் நேர்ந்தது. மஹாகவியோடும் அவர் தன் உறவைத் துண்டித்திருந்தார். நீலாவணன் தன் நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதே இதற்குக் காரணம் என்று தோன்றுகின்றது. அதுபோல் நீலாவணனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

எரித்த தீபம் அணைந்திடில் மீண்டும் இங்கு
ஏற்றிவைத்துத் தொழுவதற்காக நாம்
அறிந்திராத புதியர் அபூர்வமாய்
ஆண்டு தோறும் அவனியில் தோன்றினும்
புரிந்துகொள்ளப்படாமலும் போகலாம்
போற்றவும் படலாம் சில வேளையில்........

என வேட்கை என்ற தன் கவிதையில் நீலாவணன் எழுதினார். நீலாவணனைச் சரியாகப் புரிந்துகொள்வதும், ஈழத்துக் கவிதையில் அவருக்குரிய இடத்தை உறுதிப்படுத்துவதும் நமது கடமையாகும். இதற்கு ஒரு முன் தேவையாக அவரது படைப்புகள் அனைத்தும் நூல் உருப் பெறவேண்டும். அதேவேளையில் அவரது கவித்துவ ஆளுமையின் பன்முகத் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றும் வெளிவரவேண்டும். தமிழின் மிகச் சிறந்த கவிதைகள் சிலவற்றையேனும் நீலாவணன் எழுதியுள்ளார் என்பதை அப்போது வெளிஉலகம் அறிந்துகொள்ளும்.

எம். ஏ. நுஃமான்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்லைக்கழகம்

வெள்ளி, ஜூலை 02, 2021

இலங்கையர்கோன் அவர்களின் சிறுகதை:

மச்சாள்

என் எட்டு வயதின் ஆச்சர்யத்தால் அகன்ற கண்களுடன் பார்க்கும் பொழுது இருபது வயது கடந்த என் மைத்துனியைப் போல அழகான பெண் இந்த வையகத்தில் இருக்க முடியாது என்றே தோன்றிற்று.

ஹெலன், சீதை, கிளியோப்பாற்றா முதலிய உலகப்பிரசித்தி பெற்ற அழகிகளைப்பற்றியெல்லாம் அந்த வயதிலேயே கேள்வியுற்றிருந்தேன். அவர்கள் எல்லாம் என் மைத்துனியிடம் பிச்சை வாங்க வேண்டும்; அல்லது அவர்கள் எல்லாருடைய அழகையும் வேடிக்கை பார்க்கும் உரு விதி சேர்த்து சமைத்து விட்ட ரூபமோ அவள்! பளிங்குக் கன்னங்களின் மேல் பதறிச் சிறகடிக்கும் கருங்கண் இமைகள். அவைகளின் மேல் குவளையின் கருமையைச் சாறாக்கி வடித்து யாரோ ஒரு அழகுக் கலைஞன் மெல்லியதாக வளைந்து வரைந்து விட்டது போன்ற புருவங்கள். அவைகளின் மேல் வெண்பிறை நுதல் ....

நான் மெய் மறந்து அவளையே கண் கொட்டாமல் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். அவள் தன் நீண்டகருங் கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள். சீப்பின் பற்கள் சிதறிவிடும்படி அத்தனை அடர்த்தியாகவும் இருந்தது அவளுடைய கூந்தல்.

“என்னடா , அப்படிப் பார்க்கிறாய்?”

நான் மாங்காய் திருடுகையில் கையுங் களவுமாய்ப் பிடிபட்ட சிறுவன் போல் அலறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றேன். என் சேப்பில் இருந்த கண்ணாடி'மாபிள்’ கள் அலங்கோலமாகச் சிமெண்ட் நிலத்தில் விழுந்து சிதறின. அத்துடன் என் கனவும் கலக்கமும் கலைந்தன.

''ஒண்டும் இல்லை."

"பின்னை ஏன் அப்பிடி என்னை விழுங்கிற மாதிரிப்பார்த்துக் கொண்டிருந்தாய்?"

" உம்மை எப்ப நான் பார்த்தனான்? அந்தச் சுவரிலை இருக்கிற பல்லியை அல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்."

“இல்லை, என்னைத்தான் நீ பார்த்தாய் !"

“உம்மிலை என்ன கிடக்குது பார்க்கிறதுக்கு ! ஓகோ,அப்பிடியோ உமக்கு யோசனை?"

”ஏன்டா,நான் வடிவில்லையே?”

சிறுவனாகிய என்னுடன் எதுவும் பேசலாம் என்ற எண்ணம் போலும் அவளுக்கு; தான் அழகானவள் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. அத்துடன் அதைக் குறித்து இறுமாப்பும்......

"சொல்லேன்டா, நான் வடிவில்லையே?"

“எனக்கு அதெல்லாம் தெரியுமே?"

”இந்த வயதிலை சினிமாப்படம் எல்லாம் பார்க்கிறாய். நாவல்ஸ் புத்தகம் எல்லாம் படிக்கிறாய். இது மட்டும் தெரியாமல் கிடக்கே உனக்கு? சொல்லு மச்சான்." என்று குழைந்தாள். அவள் என்னைத் திடுக்கிட வைத்ததற்காக அவள் மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.

”அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்? மச்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார்; அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு அவர் நல்லாய்ச் சொல்லுவார்."

"போடா! குரங்கு, சனியன் ! இனி அடிதான் வாங்கப் போறாய் என்னட்டை!"

அவள் கன்னங்கள் சிவந்தன. நாணம், கோபம், மகிழ்ச்சி எதுவோ நான் அறிந்தேனோ? அவள் தலை சீவிக் கொண்டை போட்டு விட்டபடியால், கண்ணாடியை நகர்த்தி விட்டு மான் போல் துடித்தெழுந்து நின்றாள். அவள் கையிலே நீளமான தடித்த சீப்பு இருந்தது. நான் சிறிது தூரத்தில் போய் விலகி நின்று கொண்டேன். சிறுவர்களுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி, அவள் மனத்தை மேலும் கிளறிவிட முனைந்தேன்.

“சும்மா கணக்கு விடாதையும், மச்சாள் ! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக்கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ?"

அவள் திடீரென்று சிரித்து விட்டாள்.

”அட குரங்குக் குட்டி! உனக்கு இதெல்லாம் எப்பிடியடா தெரியும்? சரி வா, இவ்வளவு நேரமும் மாபிள் அடிச்சுக் களைச்சுப் போனாய், இனி கால் முகம் கழுவிப் போட்டு வந்து சோத்தைத் தின்!" அவள் பேச்சை மாற்ற முயன்றாலும் நான் விடவில்லை.

“அதுகும் தெரியும், இன்னும் ஒரு மாதத்தையால், என்ரை அண்ணன் உம்மைக் கலியாணம் முடிக்கப் போறார் எண்டதும் தெரியும்!''

“அட குரங்கே........!"

அவளுடைய குரலில் கோபம் இல்லை. எல்லை இல்லாத ஒரு குதூகலம்தான் தொனித்தது. தனிக் கறுப்பு வளையல் அணிந்த தன் வெண்ணிறக் கை ஒன்றை மணிக்கட்டுடன் மடித்து தன் துடி இடையில் வைத்துக்கொண்டு என்னைத் தன் அகன்ற கருவிழிகளால் உற்று நெடு நோக்கு நோக்கினாள்.

உண்மையில் என்னைத்தான் நோக்கினாளோ அல்லது தன் மனக் கண்களால் என் முகச் சாயல் கொண்டிருந்த...... ?

அவள் நோக்கு எனக்குச் சங்கடமாக இருந்தது. என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

"மச்சாள், எனக்குப் பசிக்குது. இப்ப சோறு தாறீரா அல்லது.....”.

அவள் மோனம் கலைந்தது.

“வா” என்றாள் அன்புகனிய, “முட்டைப் பொரியலும் சோறும் தாறன்......”

அவள் பெயர் கர்ணகை ; என் பெயர்...? அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.

என் அண்ணாவின் பெயர் சண்முகதாஸன். சுருக்கமாக எஸ்.தாஸன் என்று வைத்துக் கொண்டிருந்தார். அவர் பீ. ஏ. பாஸ் பண்ணிவிட்டு அடுத்த ஊரில் ஒரு கலாசாலையில் உபாத்திமைத் தொழில் செய்து கொண்டிருந்தார்.

கர்ணகை சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட கன்னி; தந்தையின் கண்ணுட் கருமணி. அவளுக்காக அவர் மறு விவாகமே வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் என்னுடைய அம்மாவின் ஒரே தமையன். அவர் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். அதிற் கிடைத்த வேதனம் அவர்கள் இருவருக்கும் போதுமானது. தன் மகளுக்கென அதில் மீதம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணமாக வங்கியில் போட்டு வைத்திருந்தார். அத்துடன் வீடும் வளவும் சிறிது வயல் நிலமும் அவருக்குச் சொந்தம்.

எல்லாம் தன் மகளுக்கு என்றே வைத்திருந்தார். எங்கள் வீட்டில் என் அம்மா வைத்தது தான் சட்டம். என் தந்தை காசு தேடும் யந்திரம்...அவ்வளவு தான். என் தாய் எங்கள் வீட்டை ஒரு சிற்றரசி போல ஆட்சி செய்த படியால் சிறு வயதில் எனக்கு என் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை.

அவர் எனக்கு என்றும் தூரத்துப் பச்சை...... ஏதோ காற்சட்டை, கோட், டை, சப்பாத்து, தொப்பி முதலியன காலையில் அணிவார். பிறகு மாலையில் வந்து அவைகளைக் களைந்து வைத்துவிட்டு ஒரு மலிந்த எட்டு முழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு பத்திரிகை பார்ப்பார். சம்பள நாளன்று தம் கையிற் கிடைத்த பணத்தை என் தாய் கையில் வைத்துவிட்டு, வீட்டு விவகாரம் எதிலும் சிரத்தை இல்லாமலே இருந்து விடுவார்.

எங்களில் எல்லாமாக எட்டுச் சகோதரர்கள், பெண்கள் அறுவர், ஆண்கள் இருவர். அண்ணன் தான் எல்லாரிலும் மூத்தவர். நான் கடைக்குட்டி. இடையில் ஆறு பெண்கள். என் அக்காமார் என் காதுகளைப் பிய்த்து எடுத்து என்னைத் தங்களுடைய சேவகனாக நடத்தினார்கள். நூற்பந்து வாங்கி வா, ஊசி வாங்கி வா, சட்டைத் துணிவாங்கி வா, அது வாங்கி வா, இது வாங்கி வா என்று எல்லாம் ஏவி என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார்கள்…..

அதனால் நான் என் கர்ணகை மச்சாளிடம் போய் அண்டுவேன். என்னுடைய அண்ணனுக்கும் கர்ணகை மச்சாளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறதே, அதன் பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடப் போகிறாளே என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டதும் என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் துள்ளி , என் அக்காமாருக்கு இதனால் ஒரு பாடம் படிப்பிக்கலாம் என்று எத்தனையோ குழந்தைக் கனவுகள் எல்லாம் கண்டுவிட்டேன். அதற்கிடையில் என்னுடைய அண்ணன் உபாத்திமைத் தொழிலில் இருந்து ஏதோ ஒரு சோதனை பாஸ்பண்ணி ஓர் அதிகாரப் பதவிக்குப் போய்விட்டார். அன்றும் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று அலுத்துப் போய் வந்த மாமாவுக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். நான் அவளருகிற் போய் அமர்ந்து கொண்டேன்.

“குடிடா மச்சான், தேத்தண்ணி!''

"மச்சாள், உமக்கு ஒரு புதினம் தெரியுமா?”

”அட குடிச்சுப் போட்டு கதையன். இன்னொரு ரஷ்யாக்காரன் சந்திர மண்டலத்திற் போய் சேர்ந்திட்டானோ அல்லது, அல்லது...... என்ன இவ்வளவு அவதிப்படுகிறாய்! குடியடா தேத்தண்ணியை!”

”மச்சாள், இந்தப் புதினம் கேள்விப்பட்டீரோ? தெரியாது போலக் கதைக்கிறீர். என்ரை அண்ணன் பெரிய சோதனை பாஸ் பண்ணிப் போட்டார். அவருக்கு இனிமேல் மாமாவைப் போல வாத்தி வேலை இல்லை; இனிப் பெரிய கவுண்மேந்து உத்தியோகம்."

”என்னடா சொல்லுகிறாய், குரங்கா!"

“இனிமேல் உம்மடை தேத்தண்ணி குடிக்கமாட்டேன். பெரியண்ணன் வந்து உம்மைக் கலியாணம் முடிச்சு எங்கடை வீட்டை கொண்டுவந்த அதன் பிறகு உம்மடை கையாலை ஒரு தேத்தண்ணி தந்தால் குடிப்பன். இப்ப அதெல்லாம் ஏலாது.”

”போடா சனி, போடா குரங்.., போடா மூதே! இதிலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலை வாங்கப்போறாய் என்னட்டை!”

“என்ன மச்சாள், உமக்குச் சந்தோஷமில்லையா?"

“போடா?”

அவளுடைய மென்மையான கன்னங்கள் மறுபடி திடிரென்று சிவந்தன. அவள் குங்குமம் அணிந்திராவிட்டாலும் பிறைமதி யொத்த அந்த நெற்றி குங்குமம் போலச் சிவந்துவிட்டது. அவள் உடனே எழுந்து என் மாமாவான தன் தந்தைக்குத் தேநீரும் பலகாரமும் கொண்டு சென்றாள். வெட்கம் என்னையும் பிய்த்துத் தின்றது. நான் ஓடிவிட்டேன்.

ஆனால் அந்த மணம் நடக்கவில்லை. என் தந்தைக்கு வாய் இல்லை. என் தாய்க்குப் பணமோகம். என் அண்ணாவுக்கு ஆங்கில மோகம். இரக்கமற்ற என் ஆறு அக்காமாருக்கும் அண்ணனுடைய பதவிக்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற ஒரு மூட எண்ணம். ஆங்கிலப் படிப்பு, பவிசு...

ஒரு நாள் என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவிடம் வாதாடினார். பேசினார். எல்லாம் முதன் முறையாகத்தான், நான் அறிந்தமட்டில்! அவர் அழுதார். என் குடும்பத்தவர் எல்லோருமாகச் சேர்ந்து அவர் வாயை அடக்கிவிட்டனர். ஏழு பெண்கள் சேர்ந்து பேசும்பொழுது வயோதிபராகிய ஒரு ஆண் எம்மாத்திரம்?

அன்று என் தந்தைக்காக இரங்கினேன், உடனே கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று குங்குமம் அணிந்திருந்தாள். தன் நீண்ட கூந்தலை வாரிமுடித்து அதிலே மணம் கமழும் மல்லிகையும் அணிந்திருந்தாள். - அது ஒரு தனி அழகு. எட்டு வயதுச் சிறுவனாகிய எனக்குக்கூட அந்த அழகு புலப்பட்டது. நான் ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டேன்.

யானைத் தந்தத்தால் படைக்கப்பட்ட பதுமைபோல அவள் வீட்டு வாசலிலே நின்றாள் ; அந்த வீட்டை ஆளும் திருமகள் போல நின்றாள்.

ஏதோ கூறவென்று ஓடிப்போன நான் மலைத்து நின்றுவிட்டேன்.

அவள் அதிகாரமாகவே பேசினாள்.

”என்னடா!”

“ஒண்டுமில்லை மச்சாள்.”

”என்ன என்னவோ கிளிச்சுக் கொட்டுகிறது போலை ஓடிவாறாய்! மாமி மச்சாள்மார் எல்லாரும் நல்லாயிருக்கினமோ?”

“ஓம் மச்சாள்!"

“என்னடா என்னவோ செத்த வீட்டுக்குச் சொல்ல வந்தவன் போலை ஒரு மாதிரிக் கதைக்கிறாய்.பொறு மச்சான்; இப்ப ஐயா வந்திடுவர். நீயும் அவரோடை இருந்து கொழுக்கட்டையும் வடையும் தின்னன்.”

”ஓம் மச்சாள்.”

ஆனால் நான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்லுவேன்? என் நா எழவில்லை. என் குழந்தை மனம் இடிந்து விட்டது.

“எனக்கு வீட்டிலை வேலை கிடக்குது மச்சாள்” என்று அழாக்குறையாகச் சொல்லிவிட்டு எடுத்தேன் ஓட்டம். என்னுடைய அண்ணனுக்கு எங்கோ ஓரிடத்தில் கலியாணம் பேசி முடித்து வைத்துவிட்டாள் அம்மா.

என்னுடைய பிறவூர் மச்சாள் வந்தாள். என்னுடைய குழந்தை மனத்திற்கு அசிங்கத்தின் சின்னமாகவே அவள் தோன்றினாள். கன்னம் கரேலன்று கொழுத்திருந்த முகத்திலே கறுத்தத் தோலை வெள்ளத் தோலாக்க முயலும் பவுடர்ப் பூச்சு, கையிலே விலை உயர்ந்த ஒரு கைக்கடிகாரம். கழுத்திலே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, அதிலே தான் தாலியும் கோத்துக் கிடந்தது. பின்னி முடிந்த கூந்தலிலே வைத்துத் தொடுத்த முடிமயிர் புறம்பாகத் தெரிந்தது. அவளுடைய இடையிலே மெலிவோ மென்மையோ இல்லை. உடலிலே அழகில்லை. குரலிலே இனிமை இல்லை. மனத்திலே அன்பில்லை..

எனக்கு உடனே வீட்டைவிட்டு ஓடி விடவேண்டும் போலத் தோன்றியது.

எங்கே ஓடுவேன் நான்?

என் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் என்றும் போலச் சந்தோஷமாகவே இருந்தாள்.

யாரோ ஒரு தெய்வச் சிற்பி தன் வல்லமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அடுக்கிவிட்ட முத்து வரிசையை வளைத்து மாணிக்கக்கரை கட்டிவிட்டது போன்று இருந்தது அவள் புன்னகை.

எதற்கும் கலங்காத வீரத்தமிழ் மகள் போல் என்னைக் கண்டவுடன் அவள் கண்கள் சிரித்தன.

"வாடா மச்சான், இஞ்சை வந்து கொஞ்சம் கலியாணவீட்டுப் பலகாரம் சாப்பிடேன்!”

“என்ன மச்சாள், எனக்கெண்டே வச்சிருக்கிறீர் எங்கடை கலியாண வீட்டுப் பலகாரம் எல்லாம்…..” என் குரல் தடைப்பட்டு விம்மி நின்றது.

எனக்கு அழுகை.

“அதிலை என்னடா மச்சான்? நீ எண்டாலும் என்னைக் கலியாணம் முடிக்க மாட்டியோ?"

பகலெல்லாம் தண்ணொளியை நல்கிவிட்டு மேல்வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்று பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெருவெள்ளம் கொண்டு பாய்வது போல அவளுடைய அழகிய கருங் கண்ணிமைகள் அறுந்து சிதறும்படி கண்ணீர் ஊற்றுப் பாய்ந்து புரண்டு வழிந்தது....... ஆ! அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள்!

எடுத்தேன் ஓட்டம்! என் கண்களிலும் கண்ணீராறு! ரத்த ஆறு நெருப்பாறு!

என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசினாள். .அப்பொழுது எனக்குப் பத்து வயதாகி விட்டது.

”ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லையாம்?" ”ஆர் சொன்னது?”

“உன்ரை கொண்ணன் தான் சொல்லுறான்.”

“எந்த மச்சாள்?”

"அதென்ன கேள்வி? ஏன் கொண்ணன்ரை பெண்சாதிதான். அல்லது வேறேயும் உமக்கொரு மச்சாள் இருக்கோ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக்கேல்லை!”

”ஓ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன்பாட்டுக்கு மூத்தக்காவோடை இங்கிலீசையும் பேசிக்கொண்டு திரியிறா. இல்லை, கேக்கிறன் நீங்கள் எண்டாலும் யோசிச்சியளோ அம்மா, எனக்குக் கொஞ்ச இங்கிலீசு படிப்பிச்சு வைக்க வேணும் எண்டு. அது எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித் தெருவழிய திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன?அக்காமாருக்கு என்ன? என்ரை அண்ணன்ரை பெண்சாதியோடை பேசேல்லை எண்டதுதான் உங்களுக்குக் குறையாய்ப் போச்சு!”

”ஏன் அவ என்ன உம்மடை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ, அல்லது கொப்பற்றை பவீசுக்குக் குறைஞ்சு போச்சோ! அதுதான் நீங்கள் இரண்டு பேரும் அவவோடை பேசிறயில்லை!”

அம்மா, எனக்கு அப்பிடி இங்கிலீசு பேசத் தெரியாது. சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி என்னட்டை கதைக்கிறியள்? என்னை என் பாட்டிற்கு விட்டிட்டால் படிச்சுச் கிடிச்சு ஒரு மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விருப்பமில்லை யெண்டால் இப்ப சொல்லி விடுங்கோ நான் போறன்.”

“எங்கேயோ போகப் போறாராம்!”

“ஏன் போகப்படாது?”

அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது.அவள் அலறினாள். குளறினாள். என் தந்தையைக்கூட ஏசினாள், இப்படி என்னை ஒரு தாய் சொல்லை மதிக்காத மகனாக வளர்த்து விட்டார் என்று! என்னுடைய தாய் மீண்டும் பேசினாள்.

“டேய் ! பார்த்தியா, உன்ரை மச்சாள் கொண்டு வந்த சீதனத்தை! அவளின்ரை நகைப் பெட்டியை நீ எப்பவெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய்!''

“இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்லுறியள்.அம்மா?”

“நீயும் அப்பிடி ஒரு பொம்பிளையை முடிக்க வேணுமெண்டது தான் உன்ரை காலத்திலை.''

“அம்மா நான் சொல்லுறன் எண்டு கோபிக்க வேண்டாம். உங்களுக்குக் காசு தானே தேவை? ஆனால் என்ரை மச்சாளின்ரை முகத்திலை இருக்கிற வயிரங்களை - வைடூரியங்களை - மாணிக்கங்களை எந்த நகைப் பெட்டியிலை காணலாம்? அல்லது அவவின்ரை கையிலை இருக்கிற கறுத்த வளையலுக்குப் போதுமோ இந்த நகையெல்லாம்….?”

”என்னடா உளறுகிறாய்?"

“அம்மா, நான் உளறவில்லை. நீங்கள் எங்கடை அண்ணன் கர்ணகை மச்சாளை முடிக்கிறது எண்ட சம்மதத்தோடை இருந்து போட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக்கும் காணிக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வடிவும் அன்பும் இல்லாத ஒரு பொம்பிளையை வீட்டிலை கொண்டு வந்துசேர்த்தியளே!"

எனக்கு மறுபடி அழுகை!

விம்மி விம்பி அழுதேன். என் கர்ணகை மச்சாளின் இயற்கை லக்ஷ்மீகரமும் அழகும் என் அண்ணனுக்கும் இந்த வீட்டிற்கும் கிட்டாமல் செய்து விட்டாளே என் தாய் என்று. அதன் பிறகு என் தாய் இரக்கமற்ற ஒரு தாடகையாகி விட்டாள்.

“ஓகோ அப்படியா விஷயம்? நீரும் உம்மடை அப்பரோடை சேர்த்தியோ? அப்படி எண்டால் அந்த கர்ணகிப் பத்தினியை ஓண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடுச்சுக் கொண்டு வந்து இந்த வீட்டிலே வைச்சுக் கும்பிடுங்கோ! அவள் என்ரை அண்ணற்றை மேள்! ஆனால் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கனவிலையும் எண்ணயில்லை !”

அரக்கி!

எனக்குக் கண்ணீர் மாலைகள் ......

"என்ன அழுகிறீர்? ஹூ! உம்முடைய மூக்கிலை சளிவடியுது! அதைப் போய் துடையடா! அதின் பிறகு முகத்தைக் கழுவிப்போட்டு இன்னும் பாக்காத சினிமாப்படம் இருந்தால் அதையும் போய்ப் பார்!''

அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ணனுடையது.

அம்மா தன் மார்புச் சேலையைச் சரி செய்து கொண்டு அவசரமாகத் தன் தலைமயிரையும் சரி செய்து கொண்டாள் ........

,அதன் பிறகு என் அண்ணன் உள்ளே வந்து,"என்ன கூட்டாளி அழுகிறியோ?" என்றார்.

"ஒண்டுமில்லை.''

“என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?"

"வேண்டாம்.”

“இனி. நீ கிறிக்கற் விளையாடிப் பழகவேணும், காருக்குள்ளை இருக்குது 'பாட்', 'விக்கட்', 'பந்து' எல்லாம்"

அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்துவிட்டாள். அம்மா அவளை வினயமாகப் பற்களைக் காட்டி வரவேற்றாள். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் பற்களை மட்டும் காட்டத் தெரியும்…..

அண்ணன் என் தலையைத் தடவினார் அன்பாக! அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை.

தமிழ் தெரிந்திருந்தால் தானே, அந்த இழுமென் மொழியைப் பேசுவதற்கு!

அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினாள். எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது.

"யார் மூக்குச் சிந்தி அசிங்கமாக நிற்கும் இந்தப் பையன்?"

அண்ணன் மௌனம்!

யார்? உங்கள் வீட்டு வேலைக்காரப் பையனா? ஏய் போய்!”

அதற்குள் என் மூத்த அக்கா குறுக்கிட்டு விட்டாள் ஆங்கிலத்தில்!

அது எங்கள் தம்பி ஆக இளையவன் மச்சாள், வாருங்கோ உள்ளே.

"அம்மா தன் பற்களைக் காட்டிக் கொண்டு பின்தொடர எல்லோரும் உள்ளே போய்விட்டார்கள்.

அண்ணனுடைய கார்ச் சாரதி ஏதோ ஒரு பார்சலைக் கொண்டுவந்து என் கையில் வைத்தான்! இது ஐயாவின் தம்பிக்கு! உடனே அவரிடம் கொடுக்க வேண்டும்!

நான் உடனே அதை மூலைக்குள் எறிந்துவிட்டேன். என் மனம் வேதனைப்பட்டது.

உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஓடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது; ஓடினேன்.

அவள் ஏதோ கண்ணீருக்கள் மூழ்கித் தலைவிரி கோலமாகக் கிடந்து புலம்பிக்கொண்டிருப்பாள் என்ற மனப் பதற்றத்துடன் ஓடினேன். என் கற்பனையினால் என் கண்களில் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு…..

ஆனால்….ஆனால்......!

அரசகுமாரிகள் அழுவதில்லை. அது அவர்கள் அழகிற்கும். மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக்குப் போலும்!

அவளுடைய கண்ணுக்கு மை. கன்னத்திற்கு றூஜ். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை ஏதோ இறுமாப்பில இவை எல்லாம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்று முதலில் யோசித்தேன்.

அருகில் சென்று பார்த்தேன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னால் பதறி நின்றேன்.

அவள் சிரித்தாள்.

அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக்குறுகி நாணும்படி என் சேட்டைப் பிடித்து இழுத்து விட்டாள்.

“என்னடா மச்சான், அழுகிறாய்?"

“ஒண்டும் இல்லை!”

“இஞ்சை வா ! கொஞ்சம், ‘சொக்கிலேட்டு’த் தின்; வாடா!”

என்னை அணைத்துக் கொண்டு உள்ளே சென்று என் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள்.

இப்பவே எல்லாம் திண்டு முடிக்க வேணும் என்று பணித்தாள். தின்றேன்....... இவ்வளவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ணனும் எங்கள் வீடும் இழந்து விட நேரிட்டு விட்டதே என்று எண்ணினேன்.

சுவைத்து விழுங்கிய 'சொக்கலேட்டு' தொண்டையில் சிக்கிக்கொண்டது. அவள் என் தலையில் தட்டினாள், நெஞ்சையும் முதுகையும் தடவினாள்.......அவள் அன்பு......

மீண்டும் என் கண்களில் முத்துமாலை........

“என்னடா மச்சான், இப்ப மாபிள் அடிக்கிறதை விட்டு கிறிக்கட் அடிக்கத் துவங்கி விட்டியாம்?''

அதற்குள் என் கண்ணீரைச் சமாளித்து விட்டேன்.

“உமக்கு ஆர் இதெல்லாம் சொன்ளது?”

தனிக் கருவளைக்கவின் தந்த தன் வெள்ளை மணிக்கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள்.

“ஒருத்தரும் இல்லை!"

ஆனால் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்து கொண்டு விடுவார்கள் என்ற உலக அனுபவம் அந்தச் சிறுவயதில் எனக்கில்லை......

என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒருநாள் மாலை நான் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் தனியே வந்து பேசினாள்.

”என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபுவுக்கு?"

"என்ன அம்மா?”

“மச்சாளுக்குக் கலியாணமாம்.”

“எந்த மச்சாள்?”

“ஏன் உன்ரை மச்சாளுக்குத்தான்!”

”எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்; முதலில் அண்ணன் பெண்சாதி…."

“வாயைப் பார். வாயை! என்னட்டை அடி வாங்கப் போறாய், கண்டியோ?”

”எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான் தான் எப்பவோ வீட்டை விட்டுப் போறன் எண்டு சொல்லிப் போட்டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் என்ன?”

என் கண்களில் கண்ணீர் உப்பாகிக் கரிந்து நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டினேன்.

அம்மா, என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என் தோள் மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரை மயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்கமடைந்தவள் போல மெதுவாகக் கண்ணீர் கலந்த குரலுடன் பேசினாள்.

“நீ கோவிக்கிறது சரியடா மேனே! உன்ரை கர்ணகை மச்சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்க வேணும்; அந்தநேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந்திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி...”

நான் பொங்கித் துளித்த கண்ணீரை அடக்க முயன்றபடி புத்தகத்தின் பக்கங்களை ஓரு பைத்தியகாரன் போலப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

சிறிது அன்பு எத்தனை கண்ணீரை வருவித்து விடும் என்று வியந்தேன்…..

“இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில் கலியாணமாம்!"

எனக்குச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது.ஆனால், அழுகைதான் வந்தது. புத்தகங்களைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினேன்.

மங்கிய வானத்திலே மதி, மங்கித் தவழ்ந்தது. தென்னை மரங்களின் தலைகளிலே காற்றின் ஓலம்!

தொலைவிலே இரட்டைக் கூகைகளின் குரல்…மேளவாத்யம் “ஜாம் ஜாம்'' என்று ஒலிக்க எங்களுடைய மாமாகூட எழுந்து நடமாடித் திரிகிறார். தன் பொங்கும் வயிற்றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக் கொண்டு! என்னுடைய அண்ணனும் அவருடைய மனைவியும் அவருடைய புது மோட்டார் வண்டியிலே வந்தார்கள்.

என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தான். புண்ணியத்தின் அருகில் பாவம் இருப்பது போல. அத்துடன் என்னுடைய அண்ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும்படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதய சூரியனின் புறத்தே கார்முகில் நிற்பது போல. அம்மாவும் நின்றிருந்தாள் தன் நரிப்பார்வையோடு….

எனக்கு எங்காவது சென்று அழவேண்டும் போல இருந்தது.......

மறுநாள் மணப்பெண்ணாகிய என் மச்சாள் ஒரு அறையில் தனியே இருந்தாள். இணைக் கூறையும் அணிந்துகொண்டு.......!

அவள் அழுதுகொண்டிருப்பாள் என்று அஞ்சி நான் வெளியே நின்றேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என்னைக் கண்டவுடன், ”ஏய் மச்சான்” என்று ஏதோ காணாததைக் கண்டுவிட்டது போலக் குரல் கொடுத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.

அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங்கள் உண்ணத் தந்தாள். என்னோடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அந்த நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக்குற்றது. ஓடிவிடலாம் என்று எழுந்தேன்.

அவள் விடவில்லை. என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படியே தன் முன்னால் அமர்த்திக் கொண்டாள்.

“ஒரு இடமும் போகயில்லை மச்சாள்! சும்மா வெளியாலை போய் விளையாடப் போறன்!”

“இரடா மச்சான்! நல்லாய் வயிறு முட்டத் தின்னன்ரா!”

அவளைக் கேலி செய்யவேண்டும் என்று எண்ணினேன்.

“என்ன மச்சாள், ராத்திரி மணவறையிலை கூறைச்சீலையும் உடுத்து நகை எல்லாம் போட்டுத் தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்தீரே! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கைபோச்சுது?”

“போடா குரங்கே, சனியன், மூதேசி!”

அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்து விட்ட மரகதங்கள் போல் மின்னின...... கண்ணீர்…?

ஆனால் அரசிகள் அழுவதில்லையே!

வியாழன், ஜூன் 24, 2021

அ.செ.முருகானந்தன் - வாழ்வும் பணியும்


எழுதியவர்: கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை (1921-1991)


1973 ஆம் ஆண்டு தை மாதம் அம்பனை, தெல்லிப்பழை ’கலைப்பெரு மன்றம்’ நடத்திய உழவர் விழாவில் அ.செ.முருகானந்தன் அவர்களுக்கு ’சிந்தனைச் செல்வர்’ என்ற கௌரவ விருது வழங்கி, அதனது உழவர்விழா மலரினை ’மறுலர்ச்சிக் காலம் – இலக்கியச் சிறப்பிதழாகவும் வெளியிட்டுள்ளது.
அதனைச் செயற்படுத்தியவர்களையும் அவர்களது கைங்கரியத்தையும் நன்றியுடன் நினைவிற்கொண்டு அம் மலரில் இருந்து இக் கட்டுரை எடுக்கப்படுகின்றது.


ஈழத்து இலக்கியத் துறையிலே தமக்கெனச் சிறப்பான ஓர் இடத்தை வகித்துக்கொண்டிருக்கும் அ. செ. முருகானந்தன் 1921ஆம் ஆண்டில் மாவிட்டபுரக் கிராமத்திலே பிறந்தார்கள்.
”நான் பிறந்து வளர்ந்த குடும்பம் ஓரளவு பெரியது. அக் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாரும் கலையார்வம் கொண்டவர்கள். இதனால் நான் இளமையைக் கழித்த அந்த மனை எந்த வேளையிலும் கலகலப்பாக இருக்கும். இசையும், ஓவியமும் அக் குடும்பத்தின் பரம்பரைச் சொத்துக்கள். என் பாட்டியாரும், அன்னையும் ஓய்வு நேரங்களிலே புராண இதிகாசக் கதைகளை வாசிப்பார்கள். கல்லூரிக் கல்வி பெற்றுக் கொண்டிருந்த அக்குடும்பத்து இளைஞர் ஒருவர் தாம் கற்று வந்த பாடத்திலுள்ள கதைகளை அழகாக எடுத்துக்கூறி என் போன்ற இளைஞர்களைக் களிப்பூட்டுவார். இத்தகைய சூழலிலே நான் வளர்ந்தேன். இதனால் என்னிடத்தே கதைகளைக் கற்பனையில் எழுதவேண்டுமென்ற ஆவல் முளை கொண்டுவிட்டது.''

இவ்வாறு தமது சிறுகதை எழுதும் முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைந்திருந்த காரணங்களை 'அ. செ. மு.’ ஒரு தினம் எனக்கு விளக்கிக் கூறினார்கள். அவர் விபரித்த அக் குடும்பம் பற்றிய செய்தியை நட்புத் தொடர்பினால் அறிந்திருந்தவனாதலாலே அவர் கூற்றில் அமைந்திருந்த உண்மையை யான் உணர்ந்தேன். இளமையில் ஏற்படும் மனப்பதிவுகள் பிற்காலத்திலே நலந்தரும் வகையில் விரிந்து மலருமென்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார் ’அ. செ. மு.’

முருகானந்தனது இளமைக் காலம் மாவிட்டபுரம், அளவெட்டி ஆகிய கிராமங்களில் மாறி மாறிக் கழிந்தது. அதனால் அவரது இளமைக் கல்வியும் மேற்கூறப்பட்ட கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் நிகழ்ந்தது. எனினும், சில நாட்களின் பின் அவர் அளவெட்டியையே தமது நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டார். அதனாலே தான் அவர் தமது பெயரின் முதலிலே ' அளவெட்டி' என்பதைக் குறிப்பிடும் 'அ' என்ற எழுத்தைச் சேர்த்திருக்கின்றார். பிரபல எழுத்தாளராய்ப் புகழ் நிறுவி மறைந்த அ. ந. கந்தசாமியின் பெயரின் முன்னமைந்துள்ள அகரமும் அளவெட்டியையே குறிக்கின்றது என்பதையும் இவ்விடத்தே சொல்லிவைக்க விரும்புகிறேன்.

முருகானந்தன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலே தமது கல்வியைத்தொடர்ந்தார். எழுத்துத் துறையில் அவர் ஈடுபடுவதற்கு மகாஜனக் கல்லூரியும் ஓரளவுக்குத் துணைபுரிந்ததென்றே கூறலாம். தமது தமிழார்வத்தைத் தூண்டியும், தாம் எழுதுங் கட்டுரைகளை வியந்தும் தமது தமிழ்ப்பாட ஆசிரியராக வாய்த்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்கள் தமது பிற்காலத் திறமைக்குப் பேராதரவாக இருந்தார் என்பது முருகானந்தன் அவர்களது நன்றிகலந்த கூற்றாகும்.

இவ்வாசிரியரேயன்றி திரு. செ. சின்னத்துரை ஆசிரியரும், அதிபர், திரு. கா. சின்னப்பா அவர்களும் தமது தமிழ்த் தேர்ச்சிக்கும் பூர்வமான படைப்புக்களுக்கும் பேருதவி புரிந்தார்களெனவும் அவர் கூறுகின்றார். இந்த நல்லாசிரியர்களின் பணியினாலே தான் அ. ந. கந்தசாமியும், 'மஹாகவி’ து. உருத்திரமூர்த்தியும் எழுத்துத்துறையிலே பிரபலம் எய்தினார்கள் எனவுந் துணிந்து கூறிவிடலாம். அ. செ. மு, அ. ந. க., மஹாகவி ஆகிய மூவரும் மகாஜனக் கல்லூரியின் மும்மணிகள் எனப் போற்றப்படுகின்றமையை நாடறியும். அ. செ. மு. கல்லூரியிற் படித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியப் பத்திரிகையாகிய ஆநந்த போதினியில் 'கண்டிக் கடைசி அரசன்' என்ற உரைச் சித்திரம் ஒன்றை எழுதியிருந்தார். இதுவே முதலிற் பிரசுரமான அவரது எழுத்து முயற்சியாகும். மிகச் சிறு வயதிலேயே இந்தத் தகுதி அவருக்குக் கிடைத்தமையைக் கொண்டு நாம் அவருடைய எழுத்தாற்றலின் வேகத்தைக் கணிக்கமுடியும். இக் காலத்திலேதான் அவர் தம்மொத்த இளைஞர்களோடு சேர்ந்து அளவெட்டியில் ஒரு வாசிகசாலையை நிறுவினார். அந்தச் சிறிய கொட்டிலிலே மறுமலர்ச்சி' என்ற கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு இலக்கிய உலகிலே ஒரு புதிய சஞ்சிகை உருவாதற்குத் காரணமான முதன் முளைகள் வளர்ச்சி பெற்றன. ஆம், 'அ. செ. மு.' வின் இலக்கிய நண்பர்களே பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திலே கூடிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் ஆவர்.

இந்த வாசிகசாலையிற் கூடிய இலக்கியநண்பர்கள் அக்காலத்தில் ஈழகேசரியில் அமைந்த 'கல்வி அநுபந்தம்' என்ற மாணவர் பகுதி மலருக்குக் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை அனுப்பி, பிரசுரத் தகுதியும் பெற்றனர். அந்தப் பத்திரிகை நடாத்திய பல போட்டிகளிற் பரிசுகளும் பெற்றனர். அப்பத்திரிகையை நடாத்திய அதிபர் திரு. நா. பொன்னையாவினதும், ஆசிரியர் திரு. சோ. சிவபாதசுந்தரத்தினதும் பெருமதிப்புக்கு அ. செ. மு. ஆளானார். கல்லூரியில் எட்டாவது வகுப்பிற் கற்றுக் கொண்டிருக்கும் காலத்திலேயே அ. செ. மு. பத்திரிகை வாசகர்களுக்கு நன்கு பரிச்சய எழுத்தாளராகி விட்டார்.

அவருக்கு இக்காலத்திலே கல்வியை மேலுந் தொடர முடியவில்லை. கணிதம் முதலிய பாடங்களிற் சித்தியடைய முடியாமையோடு உடல் நலக்குறைவும் பீடித்துக் கொள்ளவே அ. செ. மு. கற்பதை நிறுத்தி, பத்திரிகைத் தொழிலைப் பற்றிக் கொள்ளலாம் என்று விரும்பினார். இவரது திறமையை முன்னரே அறிந்து வைத்திருந்த ஈழகேசரி அதிபர் திரு. பொன்னையாஅவர்கள் 1941 இல் அ. செ. மு. வை விரும்பி ஏற்று ஆசிரியர் குழுவினருள் ஒருவராக்கினார். அன்று இராஜ. அரியரத்தினம் ஈழகேசரியின் ஆசிரியராக இருந்தார். அவர் அப் பதவியின் நீங்கியபின் ஆசிரியராக அமர்ந்த அ.செ.மு. வியக்கத்தக்க வகையிலே ஈழகேசரியை நடாத்தி வந்தார். அன்று தொடங்கிய பத்திரிகைத் தொடர்பு இன்று வரையும் நீங்காமல் இருக்கின்ற நிலையை அ.செ.மு. பேணி வருகின்றார். 1943 இல் கொழும்பிலே அன்பர் பூபதிதாசர் தொடங்க விரும்பிய ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகும் பொருட்டு அங்கு சென்ற முருகானந்தன் அந் நோக்கம் சித்தி பெறாமற்போக வீரகேசரிப் பத்திரிகையிலே எழுத்தாளராகச் சேர்ந்து கொண்டார். ஓராண்டின் பின்னர் யாழ்ப்பாணம் வந்த அவர் 1945 இல் மறுமலர்ச்சிச் சஞ்சிகையை வெளியிடும் முயற்சியில் ’வரதர்'அவர்களோடு சேர்ந்து அதன் ஆசிரியப் பதவியிலே தங்கினார். இந்தக் காலமே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை வடிவில் வெளிவந்து ஈழத்து இளம் எழுத்தாளர் பரம்பரையைத் தூண்டி வளர்த்த காலம் ஆகும். வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் பெற இயலாக் காரணத்தினாலே தொழில் ஏதும் தேட எண்ணித் திருகோணமலைக்குச் சென்றார் முருகானந்தன். அங்கு தொழில் கிடைக்கவில்லை. ஆனால் தாழையடி சபாரத்தினத்தின் நட்புக் கிடைத்தது. மீண்டும் எழுத்துத்துறையும், பத்திரிகைத் தொழிலும் அவரை வந்தடைந்தன. அங்கிருந்து சிறப்புப் பத்திரிகை பத்திரிகை நிருபராகக் கடமை பூண்டு வாழ்ந்தார். அக்காலத்திலே தான்'எரிமலை' என்ற ஒரு பத்திரிகையும் வெளியிட்டார். இஃது அவர் தனி முயற்சியேயாகும். அது ஐந்து இதழ்கள் வெளிவந்தபின் நின்றுவிட்டது.

1949 இல் மீண்டும் முருகானந்தன் கொழும்புக்குச் சென்றார். அங்கே 'சுதந்திரன்' பத்திரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராக அமர்ந்தார். செய்திப் பகுதி ஆசிரியராக இருந்த போதினும், தமது மிகத் திறமையான படைப்புக்களை அக்காலத்திலே தான் அவர் ஆக்கினார். இதன் பின் 1951இல் இருந்து ஐந்து ஆண்டுகள் 'வீரகேசரிப் பத்திரிகை' யின் ஆசிரியர் குழுவில் அமர்ந்து அரிய எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். இக்காலத்தில் இவரை வருத்திய 'ஆஸ்த்துமா' நோய் மிகவும் கருத்தாகத் தம் பணியைச் செய்வதற்கு இவரை அனுமதிக்கவில்லை. அதனால் வீரகேசரியில் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து ஈழகேசரியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். 1958இன் பின் வறுமையும், நோயும் நன்கு பற்றிக் கொள்ளவே அ.செ.மு. சிறிது காலம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டவர் போல அடங்கியிருந்து விட நேர்ந்தது. எனினும் வானொலி நாடகத்திற்குப் பரிசு கிடைத்தது இக் காலத்திலே தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கால ஓய்வின் பின் முருகானந்தன் 1963 இல் இருந்து இன்றுவரை ஈழநாடு பத்திரிகையில் தொடர்பு கொண்டு எழுத்துப் பணி செய்து வருகின்றார். சில காலம் அப்பத்திரிகையின் வாரமலருக்குப் பொறுப்பாளராக இவர் அமர்ந்திருந்தார். அக்காலத்தில் இவரதுவாழ்க்கை அநுபவங்களும், தொடர்பு பூண்ட மக்களின் இயல்பும் இவருடைய எழுத்துக்களில் இடம்பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை அடைந்த கட்டுரைகள் பலவாக வெளிவந்தன.

வாழ்வை எழுத்துத் துறைக்கே அர்ப்பணித்து. அந்தத் துறைக்கு வேண்டிய படைப்பாற்றல் மிகுதியும் பெற்றிருந்தும் அவற்றை நூல் வடிவமைப்பில் வெளியிடுதற்கியலாது நோயும் வசதிக்குறைவும் பெற்று மனமடிவுடன் வாழும் எழுத்தாளர் இவரன்றிப் பிறர் இருக்க முடியாது என்பது என் கருத்து. இன்று இந்தச் சிறந்த எழுத்தாளர் ஒரு சிறிய கொட்டிலிலே தமதுஅன்னையார் துணையோடு வாழ்ந்து வருகின்றார். எழுதுவதற்குரிய பேனா, காகித வசதிகள் தாமும் இவரிடம் இல்லாத நிலைமையைக் காணும்போது எம்மை அறியாமலே எமது கண் கலங்கும் நிலையைப் பெறுகின்றது. இங்ஙனமாயினும் தம்மைத் தேடிவரும் நண்பர்களை உபசரிப்பதில் முருகானந்தனும், அவரது அன்னையும் மிகுந்த கருத்துடன் இருக்கிறார்கள். தாம்பூலம், தேநீர் முதலிய உபசரிப்போடு இன்முகமும் அன்பு கனிந்த உரையும் தந்து மகிழ்வூட்டுகிறார்கள். எவ்வளவோ இலக்கியப் பணிகளை இவரிடமிருந்து பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் இவர் இவ்வாறு 'முடங்கிக்'கிடக்கும் நிலை நேர்ந்திருக்கிறதே என்றுதான் முருகானந்தனைச் சந்தித்து உரையாடி மீளும் இலக்கியப் பிரியர்கள் எண்ணிச் செல்கின்றார்கள்.

முருகானந்தனது படைப்புக்களில் நூல் வடிவம் பெற்றது ‘புகையில் தெரிந்த முகம்' என்ற ஒரு குறு நாவலாகும் மற்றையவை பத்திரிகையில் வெளிவந்தமையோடு அடங்கிவிட்டன. ஈழநாடு பத்திரிகையில் வெளியான ' யாத்திரிகன்' என்பது இவரது நாவலாகும். இதைத்தவிர ‘வசந்த மல்லிகை' என்ற ஒரு சிறு நாவலும் இவரால் எழுதப்பட்டுள்ளது. ’மனிதமாடு’ என்ற சிறுகதை தென்னிந்தியாவிலே தொகுக்கப்பட்ட 'கதைக் கோவை' ஒன்றில் இடம் பெற்று அங்குள்ள அறிஞர்களது ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. இவர் மிகச் சிறந்தனவான 30 சிறு கதைகளை எழுதியிருப்பதாக அடக்கமாகக் கூறுகிறார். ஆனால் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப்பல. சிறந்த சில நாடகங்களும் இவரது படைப்புக்களாக உள்ளன. "நீங்கள் எழுதிய சிறுகதைகளுள் உங்களுக்கு மிகப்பிடித்தமானது எது?'' என யான் கேட்டேன். சிறிது சிந்தித்து விட்டு "நான் மிக முயன்று ஓர் இலட்சியத்தை அமைத்து ஒரு கதை எழுதியுள்ளேன். அது சிங்கள நாட்டைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது. எனது சிந்தனையிலே தோன்றிய கற்பனை முழுமையாகத் திறம்பட அமைந்தது அக் கதை. அதுவே எனக்கு பிடித்தது என்றார். “எல்லாம் சொல்லிவிட்டீர்கள், கதையின் பெயரை மட்டும் கூறவில்லையே” என்றேன். ”ஒகோ”, என்று சிரித்துவிட்டு “அக் கதையின் பெயர் ‘மாணிக்கப் பொன் மயிலாள்’ என்பது. ஈழநாடு வாரமலரில் வெளிவந்தது” என்றார். யான் அதன்மேல் ஒன்றும் பேசவில்லை. ஏனெனில் அந்தக் கதையை நான் வாசிக்கவில்லை.

முப்பது ஆண்டுகளின் முன் பார்த்த அதே உருவத்தில் – அதனிலும் சிறிது மெலிந்த ஒல்லியான வடிவத்தில் - முருகானந்தன் இன்று காட்சி தருகிறார். விபூதியைப் பட்டையாகப் பரவிப் பூசிக் கொண்டு ஒரு சால்வையால் தம்மைப் போர்த்தபடி படுக்கையிற் சாய்ந்திருந்து கொண்டு மேல் நோக்கிச் சிந்தித்தபடியே அவர் இருப்பார். அவரைப் பற்றியிருக்கும் நீண்ட நாளைய நோய் இன்னும் அவரை விட்டு நீங்கிய பாடில்லை. அந்த நோய் இன்னும் அவரைப் பற்றி நிற்கிறது என்பதை அவரோடு உரையாடத் தொடங்கிய சிலநிமிடங்களுக்குள்ளேயே நாம் உணர்ந்துகொள்ள முடியும். இந்நிலையையும் அவரிடத்திலே அடங்கியிருக்கும் எழுத்தாற்றலையும் ஒரு சேர நோக்கி உன்னும் எவருக்கும் ஒரு தரமேனும் ஓர் ஏக்கப் பொருமல் எழாமற் போகாது. நாம் ஒன்று செய்யக் கடமைப்பட்டுள்ளோம். முருகானந்தனை இலக்கிய உலகு நினைவுகூர்தற்கு, என்றும் எண்ணி எண்ணிக் களிப்பதற்கு உரிய முயற்சி ஒன்று செய்தல் வேண்டும். அவர் வாழ் நாளிலேயே அவரது சிறந்த படைப்புக்கள் சிலவற்றையேனும் தொகுத்து நூல் வடிவு செய்து அதனையும், அதன் வருமானத்தையும் அவருக்குச் சமர்ப்பித்து அதனால் அவர் கொள்ளும் ஆத்ம திருப்தியைக் காண்பதே நாம் செய்ய வேண்டிய செயலாகும். இஃது என்று நிகழுமோ அன்றே முருகானந்தனைக் கௌரவித்தவர்களாவோம். அவரது பெருமையை உணர்ந்தவர்களாவோம்.


(கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை (1921-1991) அவர்களின் புகைப்படம் ஒன்றினைக் கேட்டவுடனேயே அனுப்பியுதவிய நண்பர் க.ஆதவன்(டென்மார்க்) அவர்களுக்கு மிக்க நன்றிகள்)

ஞாயிறு, ஜூன் 20, 2021

உண்மையில் ஹிட்லரின் ‘மைன் கேம்ப்’ (Mein Kampf) மூன்று தரம் வாசித்துள்ளேன். ஹிட்லரின் கொள்கையை சிலர் இங்கு ஆதரிக்கவும் செய்தார்கள். தமிழ் நாட்டிலும் சிலர் ஆதரித்தார்கள். ஹிட்லர் ஜேர்மனியை மேம்படுத்தி விட்டார். இங்கும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றார்கள்.எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களுக்கு ’இயல்’ விருது வழங்கப்பட்டபோது கனடாவில் இருந்து நண்பர் செல்வம் அவர்கள் தனது ’காலம்’ சஞ்சிகையின் 17 ஆவது இதழை (ஜனவரி 2003) கே. கணேஷ் சிறப்பிதழாக வெளியிட்டார். அந்த இதழில் மிகமுக்கியமான இந்த நேர்முகமும் இடம்பெற்றுள்ளது. மிக நன்றியுடன் இந் நேர்காணலை மீளவும் முன்வைக்கின்றோம்.

எழுத்தாளர் கே. கணேஷ் அவர்களை நேர்கண்டவர் : எம்.ஏ.நுஃமான்


எம்.ஏ.நுஃமான்: வாழ்க்கையில் மதத்தின் பங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கே. கணேஷ் : மதம் என்பது சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுவது. அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கின்றது. எந்தச் சமயமாக இருந்தாலும் அது நமக்கு ஒரு நெறிமுறையை வகுத்துக்கொடுக்கிறது. அந்த நெறிமுறையில் எது நல்லது எது கெட்டது என்பதைப் பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எல்லா மதத்தினருக்கும் இறைவன் பொதுவானவன். ஒருசாராருக்கு மட்டும் உரியவன் அல்ல. இருப்பது ஒரே ஒரு இறைவன்தான். நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் குல்லா போட்டிருக்கிறீர்களா; வேட்டி கட்டி இருக்கிறீர்களா; சாறன் கட்டி இருக்கிறீர்களா; நாமம் போட்டிருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை, இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். ஆண்டவனுக்குப் பயந்துக்கிட்டு இருந்தோம் என்றால், நெறிமுறைகள் அது சட்டமாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். இல்லை என்றுசொன்னால் திக்குத் திசைமாறிப் போகும். தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது மாதிரி.

எம்.ஏ.நுஃமான்: நீங்கள் இறை நம்பிக்கையை மதங்களோடு, ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சேர்த்துப் பார்க்கவில்லையா?

கே. கணேஷ் : இல்லை, இல்லை. எல்லா மதங்களையும் நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும். சைவமோ, வைஷ்ணவமோ எல்லாத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். மதங்களில் இருந்து நல்லவைகளைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையையும் ஒழுக்க நெறியில் வைத்திருக்க வேண்டும்.

எம்.ஏ.நுஃமான்:பொதுவாக மார்க்சியம் இருத்தல், அதாவது வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது.

கே. கணேஷ் : ஆமா.

எம்.ஏ.நுஃமான்: ஆனால் மதம் சிந்தனைதான் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உண்டு.

கே. கணேஷ் : ஆமா! ஆமா, தற்போதுள்ள நிலையில் எல்லாவற்றையும் பொருளாதாரம்தான் பாதிக்கின்றது. ஆனால், என்னைக் கேட்டால் ஆத்மீகம் தான் மனிதனுக்கு அவசியமாகத் தெரிகிறது. இன்றைய அணுகுண்டு யுகத்தில் இது அவசியமாகத் தோன்றுகிறது. ”கடவுள் இல்லாவிட்டாலும் கடவுள் ஒருத்தரை சிருஷ்டி பண்ணிக் கொள்” என்று வால்டேயர்(Voltaire) சொன்ன மாதிரி ஒவ்வொரு மனிசனுக்கும் கடவுள் அவசியமாக இருக்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட மதத்தில் வெறிபிடிக்காமல் ஆத்மீக முறையில் போகும் எதையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

எம்.ஏ.நுஃமான்: இப்படிச் சொன்னால் என்ன?: நீங்கள் மார்க்சியத்தின் தத்துவார்த்த அம்சத்தை அதாவது பொருள் முதல்வாதத்தை அவ்வளவு பொருட்படுத்தவில்லை.

கே. கணேஷ் : தத்துவார்த்த அம்சத்தை இல்லை!

எம்.ஏ.நுஃமான்:ஆனால், அதன் அரசியல் அம்சத்தை நீங்கள் ஏற்றக்கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா?

கே. கணேஷ்: ஆம். சில தத்துவங்கள் ஏற்புடையதாக இருக்கின்றன.

எம்.ஏ.நுஃமான்:அந்த அடிப்படையில் தான் நீங்கள் மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்புபட்டு இருந்தீர்களா?

கே.கணேஷ்: ஆம். ஏனென்றால், மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது போல இந்தத் தத்துவங்களினால் பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நினைத்தேன். சோவியத் ருஷ்ஷியாவை ஒரு சொர்க்க பூமியாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எனக்கு அங்கு போக வாய்ப்புக் கிடைத்தபோது, அங்கு சென்று பார்த்தபோது அது சொர்க்க பூமியாக இருக்கவில்லை. ஆனால், ஒரு மாயையிலே தான் ரொம்பப் பேர் மயங்கி இருந்தார்கள். அந்த மாயையை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்க்கும் போது அதனுடைய பல விசயங்கள் தெரிய வந்தன. உதாரணமாக ஸ்டாலின் கொடுமைகள். அதன் சாயல்தான் பல இடங்களிலும் நடக்கின்றது. இதையெல்லாம் பார்த்தபோது கடைசியில் எனது தீர்மானம் என்னவென்றால் மனிசன் நல்லா இருந்தா உலகமும் நல்லா இருக்கும். உலகம் நல்லா இருக்கிறதுக்கு மனிசன் நல்லா இருக்க வேணும்.

எம்.ஏ.நுஃமான்:இந்தக் கருத்து உங்களுக்குள் இளமைக் காலத்திலேயே இருந்ததா அல்லது இப்போது உங்களுக்குத் தோன்றுவதா?

கே. கணேஷ்: இளமையில் அம்மாவிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட மதக்கல்விதான் எனது அடிப்படை. அந்த வாய்ப்பு எனக்கு இருந்தது. அதை நான் விரிவுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஊடுருவிப் பார்க்கும்போது மதம் மனிசனுக்கு அவசியம். அதாவது ஒரு நெறிமுறை அவசியம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அந்த நெறிமுறையை மீறினால் பாதகம் ஏற்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்.

எம்.ஏ.நுஃமான்:ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு இந்தக் கருத்து இருந்தது?

கே.கணேஷ்:ஆமா! ஆமா, இந்தக் கருத்து உள்ளேயே இருந்தது.

எம்.ஏ.நுஃமான்:ஆனால், பொதுவாக உங்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் ஒரு மார்க்சியவாதி – ஒரு இடதுசாரி - கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்றே சொல்லுவார்கள். நீங்கள் ஒரு பொருள் முதல்வாதி - ஒரு நாஸ்திகர் என்ற கருத்தே பலருக்கும் இருக்கின்றது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டை நீங்கள் காணவில்லையா?

கே.கணேஷ்: வெளியில் உள்ளவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். உறவினர்கள் கூட என்னை ஒதுக்கி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்டு என்று ஒரு பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அது அவங்க அவங்களுடைய போக்கு. அதை நாம் குறை சொல்லுவதற்கில்லை. அவர்களுடைய கொள்கைகளும் எண்ணங்களும் அந்த மாதிரி இருந்தது. அவர்களுக்கு ஆழந்து பார்க்கக் கூடிய தன்மை கிடையாது. இன்றைக்கு இந்த சமுதாயத்தில் யாருக்குமே இது இல்லாமல் இருக்கு.
நான் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு நான் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். மோகன் குமாரமங்கலம்(1916-1973) பேசிக்கொண்டிருந்தார். நான் அழைத்துப் போயிருந்த நண்பர் ஒரு ட்றொட்ஸ்கியவாதி. அவரை ஒரு தீண்டாதவர் மாதிரி அங்கிருந்தவர்கள் ஒதுக்கிவைத்தார்கள். ட்றொட்ஸ்கி உண்மையிலேயே ஒரு பெரிய புத்திசாலி. அவர் கொலை செய்யப்பட்டார். அது எனக்குப் பெரிய தாக்கமாக இருந்தது. பின்னாளில் ட்றொட்ஸ்கியவாதிகளை ஒரு சாதிவகுப்பு மாதிரியே தள்ளி வைக்கிற நிலை இருந்தது.

எம்.ஏ.நுஃமான்:மதங்களில் இருக்கிற 'செக்ரேறியனிசம்'(sectarianism)மாதிரி.

கே.கணேஷ்:ஆம். அப்பிடி மதங்களில் இருக்கிற மாதிரி, ஒரு மதத்தையே அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். கம்யூனிசம் என்பதே ஒரு மதம் ஆகிவிட்டது. சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று எப்படிப் பிரிந்ததோ அந்த மாதிரி இவர்களும் பிரிந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் இப்போது கொள்கை வேறுபாட்டில் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நான் எல்லாவற்றையும் ஊடுருவி என்னுடைய கொள்கையை உருவாக்கிக் கொள்கிறேன், சுதந்திரமாக.
அதனால் அவர் அதிலையும் இருக்கமாட்டார், இதிலையும் இருக்கமாட்டார் என்று என்னைப் பற்றி சிலபேர் சொல்வார்கள். இப்படி நம்மில் சில இடதுசாரிகளும் இருந்துள்ளனர். எனக்கும் அதில் ஊடுருவிச் செல்வதற்கு இஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இதில் தீவிர பங்கு எடுக்காமல் போனதற்கு இதுவே காரணம். சும்மா இருப்பதே சுகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி இருப்பது. சும்மா மேடையில் ஏறாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இதுதான். ஏனென்றால் மௌனம் என்பது ஞானம். இது எனக்காக ஒரு சௌகரியத்துக்காக நான் சொல்வது. இது ஒரு Philosophy (மெய்யியல் கோட்பாடு) அல்ல. ஆனால் அதுதான் உண்மை. இன்றைக்கு இருக்கிற குத்து வெட்டுக்களைப் பார்க்கும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒழுக்கம் முக்கியமானதாகக் கருதினேன். அவ்வளவுதான். அந்த ஒழுக்கத்துக்கு வால்டேயர் கூறியது மாதிரி அது அவசியம் என்றுதான் நினைக்கிறேன்.

எம்.ஏ.நுஃமான்:மத நம்பிக்கை இல்லாமல் ஒருவன் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

கே.கணேஷ்:கஷ்டம் என்று தான் நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் பிறக்கும்போதே மதத்தோடு பிறக்கிறான். அதில் உள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்களில் வளர்கிறான். அவர் அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பண்பாட்டில் நல்லவை கெட்டவை எவை என்று தெரிந்துகொண்டான் என்றால் நல்லது தான்.
ஆனால் இப்பொழுது என்ன நிலை இருக்கிறது என்பது பிரச்சினைதான். இப்போது பழைய நிலை இல்லை. ஒரு வெறித்தன்மை ஏற்பட்டுப் போகிறது. அது ரொம்ப வருந்தத் தக்கது. இதைத்தான் ஃபண்டமென்றலிசம்(fundamentalism) என்கிறோம். இந்தப் ஃபண்டமென்றலிசம் இன்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு மதத்தில் மட்டும் என்று இல்லை. அதே மாதிரித்தான் அரசியல் கொள்கைகளும்.
ஃபண்டமென்றலிசம் என்றால் ஒரு வெறித்தன்மை. அந்த வெறித்தன்மையைப் போக்கி, உண்மையான நடுவுநிலைப் போக்கோடு ஆண்டவனைப் பார்த்தான் என்றால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது.

எம்.ஏ.நுஃமான்:தேசியவாதம் கூட ஒருவகையில் அதன் முதிர்ந்த வடிவத்தில் வெறித் தன்மைக்கு இட்டுச் செல்வதே. ஜேர்மன் தேசியவாதம், இத்தாலிய தேசியவாதம் எல்லாம் பாஸிசமாக வளர்ந்தது. அப்படிப் பார்க்கும் போது இன்றைய நிலையில் இலங்கையில் பௌத்த அல்லது தமிழ்த் தேசியவாதம், இந்தியாவில் வளர்ந்துள்ள இந்து தேசியவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கே.கணேஷ்: அந்தக் காலத்தில் உண்மையில் ஹிட்லரின் ‘மைன் கேம்ப்’ (Mein Kampf) மூன்று தரம் வாசித்துள்ளேன். ஹிட்லரின் கொள்கையை சிலர் இங்கு ஆதரிக்கவும் செய்தார்கள். தமிழ் நாட்டிலும் சிலர் ஆதரித்தார்கள். ஹிட்லர் ஜேர்மனியை மேம்படுத்தி விட்டார். இங்கும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றார்கள். சிலர் ஜப்பானையும் ஆதரித்தார்கள். இந்த மாதிரி தேசியவாதத்தினால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்றார்கள். உண்மையைச் சொல்லப்போனால் காந்தியந்தான் என்னைக் கவர்ந்தது. இந்திய தேசியவாதத்தில் காந்தியம் இருந்தது. அதனால் எனக்குக் காந்தியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று காந்தி சொன்னார். ஏனென்றால், அது institutionalized (நிறுவனமயம்) ஆகக் கூடாது என்றுதான். அரசியலில் அவ்வாறு நடக்கிறது. மதத்திலும் அவ்வாறு அமைப்பு முறைகள் உருவாகின்றன. இதனால் பல கோளாறுகள் வரத்தான் செய்யும். அரசியலில் இருந்தமாதிரி மதத்திலும் இது வந்துவிட்டால் அதுதான் பெரிய பிரச்சினையாகிறது. இதுதான் கடைசியில் அடிப்படைவாதமாகிறது. ஏறக்குறைய தேசியவாதமும் அதேநிலையில் தான் இருக்கிறது. மொழி, மதம், அரசியல் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. வேறுபாடு காட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதற்கு ஒழுக்கம் என்கிற ஒன்று வேணும். ஒவ்வொருத்தரும் ஆத்மாவைச் சுத்தமாக்கிக் கொண்டால் தான் இவற்றை வெல்ல முடியும் என்பது என் கருத்து.

எம்.ஏ.நுஃமான்:மார்க்சியத்தில் முக்கியமாக உங்களைக் கவர்ந்தஅம்சங்கள் எவை?

கே.கணேஷ்: தொழிலாளர்கள், உழைப்பவர்கள் எல்லோருமே மிகவும் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள். இது நாம் கண்ணால் பார்ப்பது. மார்க்சியம் இவர்களுக்கு ஒரு சொர்க்கத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் பின்னால் பார்க்கும் போது அது ஒரு மாயையாகப் போய்விட்டது.
நாம் பாஸிசத்தைக் குறைசொன்னோம். கடைசியில் இவர்களும் பாஸிசத்தைத்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் மதங்களைச் சொன்ன மாதிரி. பெயரில்தான் கம்யூனிசம் இருந்ததே ஒழிய நடைமுறையில் இருக்கவில்லை. உண்மையில் போலந்திலும், செக்கோஸிலவாக்கியாவிலும் சுதந்திரத்தை நசுக்கிய முறை, கருத்துக்களைத் தன்னிச்சையாக வளர முடியாமல் செய்த ஒரு தன்மை, இவற்றையெல்லாம் பார்த்தபோது வேண்டாம் என்று ஆகிவிட்டது.

எம்.ஏ.நுஃமான்:ஒரு குறிப்பிட்ட கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்ற மார்க்சிய இயக்கம் போன்ற ஒன்று, அந்தக் கருத்து நிலையின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க முனையும்போது இந்தமாதிரி நடக்கக்கூடிய அடக்குமறைகள் தவிர்க்க முடியாதவை என்ற ஒரு கருத்து இருக்கிறது. ரஷ்ஷியாவில் எவ்வளவோ அடக்குமுறைகள் இருந்தாலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த அந்த நாட்டை ஒரு பெரிய சக்தியாக, பெரிய சமூகமாக வளர்த்தெடுப்பதற்கு லெனின், ஸ்டாலின் ஆகியோரின் சர்வாதிகார முறைமை பயன்பட்டிருக்கு என்ற ஒரு கருத்து உண்டு. அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கே.கணேஷ்: ஜேர்மனியிலும், இத்தாலியிலும் பாஸிசம் வளர்ந்தது. அந்த நாடுகளும் பெரும் சக்திகளாக வளர்ந்தன. ஆனால் நான் சொல்லுவது என்னவென்றால் aims and means, அதாவது நோக்கமும் வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அந்த சமூகம் எதுவாக இருந்தாலும் நிலைத்து நிற்காது. ஜேர்மனியும், இத்தாலியும் யுத்தத்தில் அழிந்தன. ஜப்பானும்தான் அழிந்தது. மீண்டும் அவற்றைக் கட்டி எழுப்ப வேண்டி இருந்தது. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கும் போது அதீத (அதிதீவிர?) சித்தாந்தங்கள் உருப்படுவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எம்.ஏ.நுஃமான்:முசோலினி, ஹிட்லர் ஆகியோரின் சர்வாதிகார முறைக்கும் ஸ்டாலினின் சர்வாதிகார முறைக்கும் இடையில் நீங்கள் வேறுபாடு ஒன்றையும் காணவில்லையா?

கே.கணேஷ்: ஆரம்பத்தில் கம்யூனிசம் சிறந்ததாகத் தெரிந்தது. ஏனென்றால் அது பொதுமக்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒரு நாட்டை என்று இல்லாமல் உலகம் முழுவதையும் அது கருத்தில் கொண்டிருந்தது. புரட்சியினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பாட்டாளிகள் மட்டுமல்ல விவசாயிகளும் புரட்சியின் பங்காளிகள் என்ற நிலை இருந்தது. ஆனால் பாட்டாளிகள், கைத் தொழில் துறையில் இருப்பவர்கள்தான் முக்கியத்துவம் பெற்றார்கள். அப்புறம் மாஓசேதுங் வந்தார். அவர் வந்த பொழுது நினைத்தோம். ஆனால் கடைசியில் பார்க்கும்போது விவசாயிகளுக்கு மேலாக கைத்தொழில் துறைதான் மேலாதிக்கத்துக்கு வந்தது. விவசாயிகள் கஸ்டத்துக்காளாயினர். இத்தகைய நடைமுறையைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது எல்லா முறைகளும் சுயநலத்தில் தான் முடிவடைகின்றன என்று கூறத் தோன்றுகின்றது.

எம்.ஏ.நுஃமான்:சோவியத் ரஷ்ஷியாவின் வீழ்ச்சிக்கும் உலகளாவிய ரீதியில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே காரணியாக இருந்திருக்கிறது என்று கூறப்படுகின்றது. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

கே.கணேஷ்: அதில் சந்தேகமே கிடையாது. ரஷ்ஷியரும் அமெரிக்காவின் தத்துவங்களை அதாவது முதலாளித்துவத்தை உடைப்பதற்கு முயன்றார்கள். அமெரிக்கா தனது சக்திகளைப் பயன்படுத்தி ரஷ்ஷியாவை உடைக்க முயன்றது. CIA போன்றஸ்தாபனங்கள் இதில் முயன்றன. ரஷ்ஷியர்களும் இதைச் செய்தார்கள். ஒருவர் மற்றவருடைய சித்தாந்தத்தை அழிப்பதற்காகவும் தங்கள் சித்தாந்தத்தை வளர்ப்பதற்காகவும் வேலை செய்தார்கள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டே மற்றவருடைய தத்துவத்தைப் பற்றிக் குறை சொன்னார்கள். அந்தக் குற்றச் சாட்டுக்களில் உண்மையும் இருந்தது.

எம்.ஏ.நுஃமான்:தற்போதைய நிலையில் உலகளாவிய ரீதியிலும்சரி, தேசிய ரீதியிலும் சரி, சமூக ஏற்றத் தாழ்வுகள், முரண்பாடுகள், மோதல்கள் எல்லாவற்றையும் நீக்கி மனித விடுதலையைக் கொண்டுவர முடியுமாக இருந்தால், எந்த அமைப்பு மூலமாக அதைக்கொண்டு வரலாம் என்று நினைக்கிறீர்கள்?

கே.கணேஷ்:எந்த அமைப்பு என்பதற்கு அடிப்படை என்ன என்று கேட்டால் கல்வி அடிப்படையில் இருந்துதான் தொடங்க வேண்டி இருக்கிறது. புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கல்வி வேண்டும். புதிய தலைமுறைக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு , நேர்மை போன்ற நல்ல உயர்ந்த பண்புகளை, விழுமியங்களை ஊட்ட வேண்டும். அதில் இருந்துதான் புதிய சமுதாயம் வரமுடியும். இப்போது இருப்பதைப் பற்றி நான் சொல்லப்போனால் என்னை ஒரு ஃபெசிமிஸ்ற்(pessimist), அவநம்பிக்கைவாதி என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் நான் சொல்வது ஃபெசிமிசம்(pessimism) அல்ல. புதிய முறையில் தான் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அது படிப்படியாகத்தான்வரும். அது தானே உருவாகும். அதாவது கலியுகம் மறைந்து திருதயுகம் வரவேண்டும்.

எம்.ஏ.நுஃமான்:பொதுவாக எல்லா மதங்களும் மக்கள் மத்தியில் ஒழுக்கத்தையும், இறை நம்பிக்கையையும் பலப்படுத்தி அதன் மூலம் கட்டுப்பாடான ஒழுக்கம் மிகுந்த உயர் மனிதர்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், மதங்கள் அந்தக் குறிக்கோளில் இதுகாலவரை வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியவில்லை. மதங்களின் பெயரில் பெரிய அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளன.

கே.கணேஷ்: fundermentalism அது, இது என்று எத்தனையோ உருவாகியுள்ளன.

எம்.ஏ.நுஃமான்: ஆம். ஆனால், இப்போது நீங்கள் அந்த மாதிரியான ஒரு கருத்தைத்தான் சொல்லப் பார்க்கிறீர்கள்.

கே.கணேஷ்: ஆமா.

எம்.ஏ.நுஃமான்:அது நடைமுறையில் சாத்தியமா?

கே.கணேஷ்:சாத்தியமில்லை.

எம்.ஏ.நுஃமான்:மதங்கள் எல்லாம் அரசியல் மயப்பட்டுப் போன இன்றைய நிலையில், இறை நம்பிக்கை சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த போதனைகள் மூலம் ஒரு புதிய சமூகத்தைக் கட்டி வளர்க்கலாம் என்பது எந்தஅளவு சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கே.கணேஷ்:இன்றைய நிலையில் நாம் விரக்தி அடைந்துதான் போயிருக்கிறோம். ஆனால், உலகம் முழுவதும் பார்த்தீர்கள் என்றால் பிறநாடுகளில் கூட துன்புறும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இரக்க உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இதைக் காட்டுகின்றன. அவையும் ஸ்தாபனமயப்பட்டு, அவற்றிலும் பல கோளாறுகள் உள்ளனதான். இருப்பினும் அவற்றின் ஊடாகவும் நல்லவை நடக்கின்றன. மனிதன் என்பவன் தானே உணர்பவனாகவும் இருக்கிறான்.
எப்பொழுதும் நமக்குள் நன்மை, தீமையை உணரக் கூடிய ஒரு சக்தி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரிச்சுவடியில் இருந்துதான் நாம் இப்பொழுது ஆரம்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் இல் "பாலும் சமுதாயம் சமுதாயமாவது ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயமாக வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

எம்.ஏ.நுஃமான்:மார்க்சிய சித்தாந்தத்துக்கு உலகளாவிய ரீதியில்ஒரு எதிர்காலம் இல்லை என்றா கருதுகிறீர்கள் ?

கே.கணேஷ்: மார்க்சிய தத்துவமே அடிப்படையில் தொழிலாளர்களை மையமாகக் கொண்டது தானே. அது தொழிலாளர்கள் - உழைப்பவர்கள் உயரவேண்டும் என்ற தத்துவம் - அந்தத் தத்துவத்தை யாருமே மறுக்க முடியாது. உழைப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் உயரவேண்டும் என்ற அந்த அடிப்படைத் தத்துவத்துக்கு வரும் போதுதான் நான் முன்னர் கூறியது போல மதத்தில் எப்படி ஒரு Common denominator வரவேண்டுமோ, அதேமாதிரி ஒரு இரக்கத்தன்மை, ஒரு மனிசத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற நிலைக்கு வருகிறோம். தனிப்பட்ட முறையில் மதத்தைக் குறை சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கப் போனால் எல்லாவற்றிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் மீறி அடிப்படைத் தத்துவத்தைத்தான் பார்க்க வேண்டும்.
அடிப்படைத் தத்துவமே நசுக்கப்பட்டவர்கள் அல்லது கீழ்நிலையில் உள்ளவர்கள் உயரவேண்டும் என்பது. உயர வேண்டுமானால் அவர்கள் ஒழுக்கத்தை விடக் கூடாது. அதைவிட்டுவிட்டால் அந்த சமூகம் உருவாக முடியாது.

எம்.ஏ.நுஃமான்:ஒழுக்கம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?

கே.கணேஷ்: ஒழுக்கம் என்று நான் சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய நேர்மை,சமூகத்துக்கு முரண் இல்லாத பண்புகள், அடிப்படைப் பண்புகள் என்று சொல்லுகிறோம் அல்லவா, எல்லா மதங்களும் அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றில் உயர்ந்தவற்றை நாம்எடுத்துக் கொள்ளலாம்.

எம்.ஏ.நுஃமான்: உயரிய பண்புகளைத்தான் ஒழுக்கம் என்று சொல்லுகிறீர்கள்?

கே.கணேஷ்: ஆமா. ஆமா, நான் வரையறுத்துச் சொல்லக் கூடியது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இப்பொழுது மாமிசம் சாப்பிடுகிற ஒருவனைச் சைவனாக இருக்கச் சொல்லமுடியாது. சைவனாக இருப்பவனை மாமிசம் சாப்பிடச் சொல்ல முடியாது. அடிப்படையில் எது நன்மை எது தீமை என்று தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே குடிக்கக்கூடாது, கொலை செய்யக்கூடாது. இந்த அடிப்படைப் பண்புகளை மட்டும் கவனித்தாலே போதும் பஞ்சமாபாதகங்களைச் செய்யாமல் இருந்தால் அதுவே பெரிய விசயம்.

எம்.ஏ.நுஃமான்: இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லக்கூடிய தீர்வுகள்என்ன?

கே.கணேஷ்: எல்லாவற்றுக்கும் பொறுமை சார்ந்த ஒரு நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வேன். ஒருவருக்கும் பொறுமை இல்லை. மொழி, மதம் எல்லாம் ஒரு வெறித் தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வெறித் தன்மை இல்லாமல் நடுவு நிலையோடுதான் பார்க்கவேண்டும். அதற்கு உயர்ந்த பண்புகள் உருவாக வேண்டும். மேலோர்கள் அல்லது சான்றோர்கள் என்று சொல்கிறோமே, அந்தச் சான்றாண்மை ஏற்பட வேண்டும். அது இல்லாவிட்டால் என்ன தீர்வுதான் வந்தாலும் அது போய்க் கொண்டுதான் இருக்கும்.

புதன், ஜூன் 16, 2021

கே. கணேஷ் (1920-2004) அவர்களை நேர்காணல்!!! தி.ஞானசேகரன்

இலங்கையில் இருந்து வெளிவரும் 'ஞானம்' கலை இலக்கிய சஞ்சிகை தன் டிசம்பர் 2002 இன் முப்பத்தோராவது இதழை எழுத்தாளர் கே. கணேஷ் அவர்கள் சிறப்பு மலராக வெளியிட்டிருக்கின்றது.

அதனுள்ளே இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் கே. கணேஷ் அவர்களைப் பேட்டி கண்டும், அவரது இலக்கிய வரலாறு, இலக்கிய முயற்சிகள் போன்றவற்றை சிரத்தையுடன் ஆவணப்படுத்தியுமுள்ளார். அது காலத்தால் ஆற்றிய அருஞ்செயல். ஞானம் கலை இலக்கிய சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுக்கும் நன்றி!


இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த முன்னோடி.தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகையான பாரதியை வெளியிட்டவர். உலகத் தமிழ்க் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுக் கவுன்சில் உறுப்பினர்.
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி அகில உலகரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மேகங்கள் என்ற கவிதையை எழுதி வெற்றிபெற்று ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹிட்டோவின் அரசவைக் கவிஞர்கள் பாராட்டு விருதைப் பெற்றவர்.
இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச் சபை சாகித்திய மண்டல உறுப்பினராக 1975 முதல் 1977 வரை பணியாற்றியவர். றோயல் ஏஸியாற்றிக் சொசைட்டியின் ஆயுட்கால உறுப்பினர்.
பென் - PEN ஸ்தாபனத்தின் உறுப்பினர். இது கவிஞர்கள் நாடக ஆசிரியர்கள், பத்திரிகையாசிரியர்கள், நாவலாசிரியர்களைக் கொண்ட சர்வதேச ஸ்தாபனமாகும்.
உக்ரேனிலும் பல்கேரியாவிலும் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இரு தடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர்.

இந்து சமய கலாசார அமைச்சின் இலக்கியச் செம்மல் விருது,இலங்கை அரசின் கலாபூஷணம் விருது பெற்றவர்.

உலக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து 22 மொழி பெயர்ப்புநூல்களை வெளிக்கொணர்ந்தவர்.


தி.ஞா.: முதலில் தங்களது பூர்வீகம் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ்: எனது பெற்றோரும், முதாதையர்களும் தமிழகத்தின் திருச்சிமாவட்டத்தை சேர்ந்த தத்தமங்கலம் என்ற சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். எனது தந்தையார் வழி வைணவர்களாக ஸ்ரீரங்கம் அரங்கநாதனையும், திருப்பதி வெங்கடாசலபதியையும் குலதெய்வமாக அமைந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 'தாது வருஷப்பஞ்சத்தில்' அடிபட்டு மன்னார் - மாத்தளை வழிவந்து குடியேறியவர்கள்.
முன் தலைமுறையினர் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிந்து படிப்படியாய் செல்வம் அடைந்து வாழ்ந்தவர்கள். உழைப்பையே ஊதியமாகக் கொண்டவர்கள். அதிலே நாட்டமுடையவர்களாக இருந்ததால் கல்வியில் நாட்டமில்லாத சமூகத்தினராக இருந்தனர்.தாய் வழித் தாத்தா மலைநாட்டில் கங்காணியாக இருந்தவர். அவர்தொழில் புரிந்த தோட்டத்துரையான வெள்ளையரின் நன்மதிப்பைப் பெற்றதால், துரை அவரை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த Justice Schneider என்ற பறங்கியருக்கு அறிமுகஞ் செய்து வைத்தார்.
அவர் களுத்துறை அருகேயுள்ள தனது Fullerton estate என்ற தென்னந்தோட்டத்தில் தாத்தாவைக் கங்காணியாக நியமித்தார். அத்தோடு அக்காலத்தில் அரசு நிறுவனமான பொதுப்பாதை அமைப்புகளின் பொறியிலளாராக இருந்த வெள்ளையர்களிடம் சிபார்சு செய்து பாதையமைக்கும் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணியாளராக நியமனம் பெற உதவி செய்தார். அக்காலத்தில் P.W.D.Overseers என்போர் ரைட்டர்கள் என அழைக்கப்பட்டனர்.
அத்துறையில் ஆங்கிலங்கற்ற ஈழத்தமிழர்களே செயல்புரிந்தனர். இதில் எனது தாத்தா ஒருவரே இதுவரை பணிபுரிந்த ஒரே இந்தியர் .தவிரவும் 1926களில் இவர் பேருவளை ரைட்டர்' பதவி வகித்த காலத்தில், அவரது மகன் (எனது தாய்மாமன்) கொழும்புக்கும் களுத்துறைக்கு மிடையேபயணப்பேருந்து சேவை நடத்தியவர். கண்டி தலாத்துஓய பேருந்து சேவையை முதலில் நடத்தியவரும் அவரே. அம்பிட்டியாவில் தென்னந்தோட்டமாகிய தலப்பின்னா உரிமையாளராகவும் எனது தாத்தா விளங்கினார். 'எங்கள் தாத்தாவுக்கு கொம்பன் யானை இருந்தது' என்ற கதையாக அமைந்தது இது. அக்கால உயர்நிலை பிற்காலத்தே சரிந்து போனது வேறுகதை.

தி.ஞா. : உங்களது தந்தையார் வழி வைணவர்கள் என்கிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு கணேஷ் என்ற பெயர் எப்படி அமைந்தது? இது சைவர்களுக்கு அமையும் பெயர் அல்லவா!

கே.கணேஷ்: பாட்டனார் பெயரையே பேரனுக்கும் சூட்டும் மரபுடையவர்களாதலால் எனது பெயர் 'நாராயணன்' என்றுதான் அமைந்திருக்க வேண்டும். எனது பெற்றோருக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் பிள்ளைப் பாக்கியத்திற்கு ஏங்கிய நிலையில் திருச்சி தத்தமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையருகே பிள்ளையார் சிலை அமைத்து, அரசும் வேம்பும் வளர்த்து, சுற்றி வழிபட்டு எனது அன்னை வேளூரம்மாள் விநாயகரது கிருபையால் என்னைப் பெற்றெடுத்தார் என்பர். தலைப்பிள்ளையின் பிரசவம் தாய்வழித் தாத்தா அகத்திலே நடைபெறும் மரபுவழியில், கண்டி - அம்பிட்டியில் தென்னந்தோட்ட உரிமையுற்றிருந்த 'தலைப்பின்னாவ' தோட்டத்தில் நான் பிறந்தேன். விநாயகர் கிருயைால் நான் பிறந்ததினால் எனது பெற்றோர் எனக்குச் சித்திவிநாயகம் எனப்பெயரிட்டனர்.
எனது தாய்மாமன் முத்துசாமிப்பிள்ளை, அம்மா ஆகியோர் என்னை 'கணேசன்' எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கவே அதுவே நிலைபெற்றுவிட்டது.


தி. ஞா . : அந்தக்காலத்தில் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் எவற்றில் எழுதினீர்கள்?
கே.கணேஷ்:1932இல் மாணவனாக இருந்தபோது டாக்டர் வரதராஜநாயுடு அவர்களது ‘தமிழ்நாடு' வார சஞ்சிகையில் எழுதினேன். ஆனந்தபோதினியிலும் எழுதியுள்ளேன். மணிக்கொடி, மாதர் மறுமணம், ஜனசக்தி, லோகசக்தி, கல்கி, வேறும் சில. ஞாபகம் இல்லை.

தி.ஞா.: ‘மணிக்கொடி’ சிறந்த எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கிய பத்திரிகை பி.எஸ்.இராமையா, புதுமைப்பித்தன் ஆகியோர் அதிலேதான் எழுதினார்கள். அப்பத்திரிகையில் உங்களது ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:மணிக்கொடியில் எனது 'ஆசாபாசம்' என்ற சிறுகதையும், எனது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியான அதிஷ்டசாலி' என்ற ஹங்கேரியச் சிறுகதையும் வெளிவந்தன. தற்போது கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மணிக்கொடித் தொகுப்பில் அதிஷ்டசாலி இணைக்கப்பட்டுள்ளது. தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயரிலேயே அது வெளிவந்துள்ளது.

தி.ஞா: 'மாதர் மறுமணம்' இதழிலும் எழுதியதாக கூறினீர்கள். அதென்ன மாதர் மறுமணம்? பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?


கே.கணேஷ்:காரைக்குடி காங்கிரஸ் காரரும் இலக்கிய ஆர்வலருமான தனவணிகர் சொ.முருகப்பா அவர்கள் சீர்திருத்த நோக்குடன் ஒரு விதவையை மணந்தார். அவர் பெயர் மரகதவல்லி. சொ.மரகதவல்லி முருகப்பா நடத்தியமாத இதழ்தான் 'மாதர் மறுமணம்' இது ஒரு சீர்திருத்த நோக்கம் கொண்ட பத்திரிகை. வீரகேசரி ஆசிரியராக இருந்த கே.வி.எஸ்.வாஸ் (பி.ஏ.ஹானஸ்) அவர்களும் அதில் அப்போது எழுதிக்கொண்டிருந்தார்.


தி.ஞா.: தத்தமங்கலம் க.கணேசன் பின்னர் கே.கணேஷ் ஆக மாறியது எப்படி?


கே.கணேஷ்:ஆர்.கே.நாராயணன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் தனது பெயரை ஆர்.கே.நாராயன் என்று சுருக்கிக் கொண்டார். அது தந்த இன்ஸ்பிரேசனில் நானும் கே.கணேஷ் என்று எனது பெயரைச் சுருக்கி, மனுப்போட்டு கோர்ட் மூலம் அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

தி.ஞா.: புனைபெயர்களில் எழுதியதுண்டா?

கே.கணேஷ்: நான் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர் சித்திவிநாயகம். நான் பிறந்தது சித்தார்த்தி வருஷம். இதன் காரணமாக ‘சித்தார்த்தன்' என்ற புனைபெயரில் எழுதியதுண்டு. மற்ற புனைபெயர் 'கலாநேசன்', 'கே.ஜி', 'மலைமகன்' இத்தியாதி.

தி.ஞா.: தாங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.


கே.கணேஷ்:ஆரம்பக்கல்வி தோட்டத்து எல்லையில் இருக்கும் BaptishMission பெண்கள் கல்லூரியில் சிங்களத்தில் படித்தேன். பெண்கள் கல்லூரியென்றாலும் சிறுவர்கள் சேரலாம். நான் முதலில் கற்ற மொழி சிங்களம்.அங்கு ஓரிரு ஆண்டுகள் படித்தேன். பின்னர் கண்டி St Anthony's கல்லூரியில்படித்தேன். (அக்கல்லூரி தற்போது St Sylvester கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் இருந்தது.) எனது உறவினர் அங்கு ஆசிரியராக இருந்தார். அங்கு தமிழ்மொழி கிடையாது. ஆங்கிலத்தில் கற்றேன். தமிழில் பேசினால் தண்டனை.தமிழ்மொழியை எனது தாயார் வீட்டில் எனக்குக் கற்பித்தார்.
தனது நண்பிகளின் பிள்ளைகள் சிலருக்கும் எனக்கும் கையில் பிரம்போடு ஓர் ஆசிரியரைப்போல் கற்பித்தார். அன்றாடம் திருப்புகழ், ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி போன்ற நீதி நூல்களையும் தேவார திருவாசகங்களையும் புகட்டினார். அதுவே எனது குருதியில் ஓடுகிறது. தமிழ்மீது ஒரு தனிப்பற்று ஏற்பட்டது. தமிழகத்திலிருந்தும் நூல்களை அஞ்சல்வழி பெற்றுத்தந்தவர் தாயார். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை , ஆரவல்லி ,சூரவல்லி கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை போன்ற நூல்களையும் ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி நாவலையும் படித்தேன்.
தவிர அக்காலத்து தமிழாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம்தமிழகத்து தமிழ் அறிஞர்களது நூல்களை இரவல் பெற்றுப் படித்தேன்.தவிரவும் அதிஷ்டவசமாக, கண்டியில் திருகோணமலைவீதியில் எனதுதந்தையார் பங்காளியாக இருந்த, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த செம்பனூர்வாசியான ஆறு.சுப.சுப்பையா அம்பலம் அவர்களது கடையின் முன் பகுதியில்சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் அமைந்த 'போஸ்' சங்கம் வாசிகசாலை இருந்தது.அதனை தமிழ் ஆர்வலர்கள் ஆர்.எம்.செல்லையா போன்றோர் நடத்தினர்.

அந்த வாசிகசாலையில் மறைமலையடிகளின் 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்),இளவழகனாரின் (பாலசுந்தரம்), 'முல்லைக்கொடி', திரு.வி.க.வின சென்னைசைவ சித்தாந்த நூற்பதிப்பக்தின் செந்தமிழ்ச் செல்வி, கரந்தை தமிழ்ச்சங்கம் வெளியிட்ட 'தமிழ்ப்பொழில்' ஆகிய சஞ்சிகைகள் வந்தன. அவற்றைத்தொடர்ச்சியாக வாசித்தேன். இதன் தாக்கத்தினால் தமிழ் அறிவைவளர்த்ததோடு இந்தியாவில் உள்ள விடுதலை இயக்கம் குறித்தசஞ்சிகைகளையும் படித்ததனால் ஆங்கில ஆட்சியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது.ஆங்கில மொழிமீது பற்றுக் குறைந்து தமிழ் மீது பற்று அதிகமாகியது.

தி.ஞா.: மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி கற்கும் எண்ணம்எப்படி ஏற்பட்டது?


கே.கணேஷ்:மதுரை தமிழ்ச் சங்கத்தில் கல்வி பயின்ற தஞ்சை அறந்தாங்கிவாசியான திரு முத்துராமலிங்கம், போஸ் சங்கத்தில் முக்கியஸ்தராக இருந்தார்.இவர் தமிழக மு.ரா.கந்தசாமிக் கவிராயரின் மகன் பண்டிதர் க.பழனிக்குமார்அவர்களின் மாணாக்கர். மதுரை தமிழ்ச் சங்கத்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்த்தேர்வில் முதல் வெள்ளித்தோடா' பரிசு பெற்றவர். இவர் அப்போது தனியார்நடத்திய கல்லூரி ஒன்றிலும் ஆசானாக இருந்தார். அக்கல்லூரி பிற்காலத்தில்'மகாத்மா காந்திக்கல்லூரி' என்றும் பின்பு Hindu Senior கல்லூரி என்றும்பெயர் பெற்றது. இவரே என்னை மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்விகற்கும்படி ஆலோசனை கூறினார். தனது ஆசிரியரான பண்டிதர் க.பழனிக்குமார்அவர்களுக்கும் கடிதம் கொடுத்தார்.

தி.ஞா.: தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படிப்பதற்கு அடிப்படைக்கல்வித்தகைமைகள் ஏதாவது இருக்க வேண்டுமா?

கே.கணேஷ்: நான் அறிமுகக் கடிதம் பெற்று சென்ற போது, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள உயர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக க.பழனிக்குமார் கடமையாற்றினார். நான் சென்றபோது சித்திரை - கோடை விடுமுறைக்காக தமிழ் சங்கக்கல்லூரி மூடியிருந்தது. அதனால் அந்த விடுமுறை நாட்களில், தனது மாணவர் ஒருவருடன் தங்கியிருக்க திரு க.பழனிக்குமார் ஒழுங்குசெய்தார். அத்தோடு தமிழ்ச் சங்கத்தில் சேர்வதற்கு வேண்டிய பயிற்சியைக்கொடுத்தார். தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பாலர் வகுப்பு தேர்வு பெற்ற பின்,முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம் முடிவாக பண்டிதர் தேர்வு நடைபெறும். பாலர் வகுப்புக்குரிய பாடங்களாக ஆறுமுக நாவலருடைய பாலபாடம்,ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்றவற்றையும் நாவலரின் உரைநடை வளத்தையும் பயிற்சி பெற வாய்ப்புக் கிடைத்தது.தவிரவும் யாப்பு இலக்கண நெறிகளை உணரவும் வெண்பா பயிற்சி பெறவும்,நளவெண்பா போன்ற நூல்கள் பாடநூல்களாக அமைந்தன. இவற்றில் பண்டிதர் க.பழனிக்குமார் எனக்குத் தந்த பயிற்சி, தமிழ்ச் சங்கத்திலே சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் தங்கியிருந்து 1934 முதல் அங்கு கல்விகற்றேன். தமிழ்ச் சங்கம், இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களது ஆதரவுடன் தொடங்கப்பட்டது. மாணவர்கள் தங்குவதற்கு உறைவிடமும் இலவசக் கல்விபெற வாய்ப்பும் கிடைத்தன.

தி.ஞா. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு காலம் பயின்றீர்கள்?

கே.கணேஷ்:சிறிது காலத்திலேயே நான் தமிழ்ச் சங்கத்தை விட்டுவிலக வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. எனது சைவஉணவு காரணமாக பகல் இரவு சாப்பாட்டிற்கு வெளியே சென்று உணவருந்தி வரவேண்டிய நிலை. போகும் வழியில் 'ஜதீந்தாஸ் நிலையம்' என்ற வாசிகசாலை அமைந்திருந்தது. இந்த வாசிகசாலை பாரதியாருடன் நெருங்கிய தொடர்புடைய ரா.ஸ்ரீநிவாச வரத ஐயங்காரின் நன்கொடையில், அவரது மனைவி பத்மாசினி அம்மாள் நினைவாக இயங்கி வந்தது. இந்த வாசிகசாலையில் வரும் ஏடுகளை தொடர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது.ஜதிந்தாஸ் நாட்டுப்பற்று காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டவர். சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு சரியில்லை என்ற காரணத்தால் அறுபத்து மூன்று நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி. அவரது நினைவாக அமைக்கப்பட்டதே ஜதீந்தாஸ் நிலையம்.

இந்த நிலையம் காங்கிரஸ் இளைஞர்களால் அமைக்கப்பட்டது.அத்தோடு இணைந்து மேலே குறிப்பிட்ட வாசிகசாலை அமைந்திருந்தது.அங்கு ஏற்பட்ட நண்பர்கள் தொடர்பால், அவர்கள் என்னைத் தம்முடன் இணைந்து கொள்ளும்படி வேண்டினர். இதில் உறுப்பினராக இருந்த, தற்போது இந்திய அரசின் தியாகச் சின்னம் தாமிர விருது பெற்றவரும், திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ளவருமான‘இ.மா.பா.' என்ற இ.மாயாண்டி பாரதியின் நட்புக் கிட்டியது. அவருடன் 70,மேலைமாசி வீதி இல்லத்தில் தங்கி தமிழ்சங்கக் கல்லூரியில் பாடம் கற்று வந்தேன்.

அக்காலத்தில் 34, 35 களில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்ததால் ஜெயப்பிரகாஷ் நாராயன், சந்திரபோஸ் போன்றவர்கள்,காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவு போன்று இயங்கிய 'காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி'யில் (காங்கிரஸ் அபேதவாதக் கட்சியில்) இருந்தார்கள். அந்தக்கட்சி சார்ந்த அன்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயன் எழுதிய Why Socialism அபேதவாதம் ஏன்? என்ற நூலும்,ஜவகர்லால் நேரு எழுதிய Whither India - இந்தியா எங்கு செல்கிறது? என்ற நூலும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய'சாம்ய வாதம்' என்ற நூலும் வழிகாட்ட எனக்கு இடதுசாரிக் கொள்கைளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக 'ஆக்ரா'வில் இருந்த அபேதவாதக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் காரணாக இந்திய இரகசிய பொலிசார் என்னை விசாரிக்க, தமிழ்ச்சங்க தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டனர்.பொதுவாகவே அக்காலத்தில் உயர் பதவி வகித்தவர்கள் அரச விசுவாசிகளாக இருந்தனர். மிதவாதியான தலைமை ஆசிரியர் என்னை அழைத்து "நீ காங்கிரஸ் அங்கத்தவனா?" என்று கேட்டார்.

நான், "இல்லை......அக்கொள்கையில் ஈடுபாடு உடையவன்” என்று சொன்னேன். அதற்குத் தலைமை ஆசிரியர், “நீ இன்று ஈடுபாடு என்பாய், நாளை பாம்(வெடிகுண்டு)போடுவாய் - நம்பமுடியாது” என்றார். என்னை எச்சரித்தார். ஏற்கனவே நான் ராமநாதபுரம் சேது சமஸ்தான உறவினரான - மதுரை காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதி சிபாரிசுடன் காங்கிரஸ் தொடர்புடைய ராஜாராம் பாண்டிதேவரிடம் இருந்து சிபார்சுக் கடிதம் பெற்றிருந்தமையால், “பாலர் வகுப்புத்தேர்வு' முடியும்வரை படிக்க அனுமதி தருகிறேன். அதுவரை இங்கு கற்கலாம்.அதன்பின்னர் விலகிவிடவேண்டும்” என்றார் தலைமை ஆசிரியர். அதன்காரணமாக நான் சிலமாதங்களில் தமிழ்ச்சங்கக் கல்லூரியை விட்டு விலகவேண்டியதாயிற்று.

தி.ஞா.: அதன்பின்னர் எவ்வாறு உங்கள் கல்வியைத் தொடர்ந்தீர்கள்?

கே.கணேஷ்:சென்னைப் பல்கலைக்கழக 'வித்துவான் நுழைவுத் தேர்வு'விண்ணப்பம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இத் தேர்வானது எஸ்.எஸ்.எல்.சி.வகுப்பு தமிழ் இலக்கிய பாடத்திட்டம் சார்ந்த கேள்விகளுடன் வித்துவான் நுழைவுத்தேர்வு மாணவர்களுக்காக மேலதிகக் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். அதற்கென நான் விண்ணப்பப் பத்திரத்தை அனுப்புவதற்குக் கடைசி நாள் மதுரை Treasury இல் கடைசி விண்ணப்பதாரனாய் சென்றேன். உயர் அதிகாரி அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். தேர்வில் சான்றிதழ் பெற்று திருவையாறு அரசக் கல்லூரியில் சேர்ந்து எனது கல்வியைத் தொடர்ந்தேன்.

தி.ஞா.: 'லோக சக்தி' இதழுடன் உங்களுக்கிருந்த தொடர்புகள்பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்: நான் இலங்கைக்குத் திரும்பிய பின்னர், சித்தாரிப்பேட்டையில்இருந்த ம.கி.திருவேங்கடம் என்பாரை ஆசிரியராகக் கொண்டு லோகசக்த ிஇதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அது சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும், இளைஞர்களைக் கவர்வதாகவும் இருந்தது.அரசியல், இலக்கியம் சார்ந்திருந்ததால் அதற்குப் பெரும் ஆதரவு இருந்தது.இந்த இதழ் சக்திதாசன் சுப்பிரமணியம், கே.இராமநாதன், இ.மாயாண்டி பாரதி ஆகியோர் அமைத்த இளைஞர் காங்கிரஸ் என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளிவந்தது.

இ.மாயாண்டி பாரதி எழுதிய 'படுகளத்தில் பாரதி தேவி' என்ற நூல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அதிலிருந்து கிடைத்தவருமானம் லோகசக்தி வெளிவர உதவியது. அத்துடன் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தையும் நடத்தினார்கள். மாயாண்டி பாரதியுடன் தொடர்பு கொண்டு இந்த இதழுக்கு நான் கட்டுரைகள் கவிதைகள் எழுதினேன். இந்த இதழுக்குநான் சந்தாவும் சேர்த்து அனுப்பினேன். இந்தத் தொடர்பால் கே. இராமநாதனின் தொடர்பும் கிடைத்தது.

தி.ஞா.: கே. இராமநாதனுடன் இணைந்து கொழும்பில் 'நவசக்தியிலும்'தேசாபிமானியிலும் பணிபுரிந்தீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:கே.இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியத்துடன் திருவி.க.வின்நவசக்தியில் பணிபுரிந்தவர். இவர்களைப் பற்றி திருவி.க. தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். கே.இராமநாதன் பிற்காலத்தில் இலங்கை வந்து சமசமாஜக்கட்சி நடத்திய 'சமதர்மம்' என்ற ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தார். இவர் பல தொழிற்சங்கங்களை அமைத்தார். பிற்காலத்தில் சமசமாஜக்கட்சி பிளவுபட்டபோது, B.L.P. கட்சி எனவும், யுனைட்டெட் சோஷலிஸ்ட் பார்ட்டி (U.S.P)எனவும் வழங்கியது. கே. இராமநாதன் சமதர்மம் ஏட்டிலிருந்து விலகி யு.எஸ்.பி.கட்சியின் சார்பில் தேசாபிமானி என்ற இதழின் ஆசிரியரானார். யு.எஸ்.பி.கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. நான் கே. இராமநாதனுடன் இணைந்து தேசாபிமானியிலும் நவசக்தியிலும் பணிபுரியவாய்ப்புக் கிடைத்தது.

தி.ஞா.: முற்போக்கு இலக்கியத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்படக்காரணமாயிருந்த பின்னணியைக் கூறுங்கள்.

கே.கணேஷ்:கே.இராமநாதன் இலங்கையில் 'சுருட்டுத் தொழிலாளர் சங்கம்','கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்' போன்ற தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். அதில் பல மலையாளிகள் இருந்தனர். அதனால் கேரளநாட்டு(மலையாள) அரசியல் இலக்கியத் தொடர்புகள், முற்போக்குச் சிந்தனைகள் ஏற்பட்டன. இவர்கள் வாயிலாக கேசவதேவ், சங்கரகுருப்பு, தகழி சிவசங்கரன்பிள்ளை, பிரேம்ஜி ஆகியோரது இலக்கியங்களை அறிந்து கொள்ளவாய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்போக்கு இலக்கியத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. (பிற்காலத்தில் தேசாபிமானியில் பணிபுரிந்த அச்சுவேலி ஞானசுந்தரம் பிரேம்ஜியின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டு தன்பெரையும் பிரேம்ஜி என மாற்றினார்).

தி.ஞா.: மணிக்கொடி சஞ்சிகையுடன் தங்களுக்கு இருந்த தொடர்புகள்பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:நான் மதுரையில் இருக்கும்போதே மணிக்கொடி சஞ்சிகைய ைவாசிக்கத் தொடங்கினேன். திருவையாறில் இருக்கும்போதும் மணிக்கொடி வாசகனாக இருந்தேன்.பின்னர் மணிக்கொடியில் எனது ஆசாபாசம், அதிஷ்டசாலி என்ற கதைகளை எழுதினேன். மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ்.ராமையாவுடன் எனக்குக் கடிதத்தொடர்பு இருந்தது. அவர் 'அன்டன் செக்கோவ்' ரஷ்ய சிறுகதை ஆசிரியருடைய சிறுகதைகளையும், அக்காலத்து பெயர்பெற்ற ஆங்கில எழுத்தாளர் John Galsworthy எழுதிய Forsyte Saga' வரிசை நூல்களையும் படிக்கும்படி கூறினார். அவ்வகையில் நான் அவற்றை ஆர்வத்துடன் படித்தேன். மணிக்கொடி ஆசிரியராக இருந்த ப.இராமசாமி பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தபோது அவருடன் மலைநாட்டுக்குச் சென்று மணிக்கொடிக்கு சந்தா சேர்த்தோம்.

தி.ஞா.: முதன் முதலில் இலங்கையில் ஓர் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க தாங்கள் பின்னணியில் இருந்து உழைத்ததாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:இரண்டாவது மகாயுத்த காலத்தில் லண்டனில் தங்க நேர்ந்த டாக்டர் முல்கராஜ் ஆனந்த் அவர்களது Untouchables என்ற நாவலை London Lawrance And Wishart நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை நான் வாசித்து,லண்டனில் பி.பி.சியில் பகுதிநேர நிருபராக கடைமையாற்றிக் கொண்டிருந்த முல்க்ராஜ் ஆனந்த்துடன் தொடர்பு கொண்டேன். அந்நூலை மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் அனுமத ிபெற்று மொழி பெயர்த்தேன். அவரது முற்போக்குச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன.

அது இரண்டாவது மகாயுத்தகாலம். அதனால் அவர் அக்காலத்தில் இந்தியாவுக்கு திரும்பிவர முடியாத நிலையில் இருந்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து, பம்பாயில் தங்கியிருந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை , கே. அப்பாஸ்,கிருஷ்ணசந்தர், பிரேம்சந்த் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார்.அப்போது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதன் கிளைகள ைஅமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தபோது, கொம்பனித் தெருவில் உள்ள Polski-பொல்ஸ்கி ஹோட்டலில் (தற்போதைய Nippon Hotel) 'அகில இலங்கை எழுத்தாளர் சங்கம்' ஆரம்பிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்த அடிகள் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்கா உப தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். டாக்டர் சரத் சந்திரவும் நானும் (கே.கணேஷ்) இணைச் செயலாளர்களாகவும், பி.கந்தையா அவர்கள் பொருளாளராகவும்,தேர்ந்தெடுக்கப்பட்டோம். டாக்டர் சரத் சந்திர மேற்படிப்புக்காக லண்டன் சென்றதும் அதன் இயக்கம் குன்றியது.

தி.ஞா.: முற்போக்கு எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் அவர்களின் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

கே.கணேஷ்: 'Bombay Chronicle' என்ற பத்திரிகையின் வாரப்பதிப்பில்,Last Page' என்ற பத்தி எழுத்துக்கள் எழுதுவதன் மூலம் கே.ஏ.அப்பாஸ் அக்காலத்தில் பிரசித்தமாகியிருந்தார். அந்தப் பத்தி எழுத்துக்களை நான் விரும்பிப் படிப்பேன். இதன் காரணமாக அப்பாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவரது சிறுகதைகள் பம்பாயில் வெளியான கம்யூனிஸ்ட்பத்திரிகைகளான People's Front, People's Age ஆகிய வாரப் பதிப்புகளில் வெளிவந்தன. குறிப்பாக காஷ்மீர் மக்கள் நடத்திய மன்னர் ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தை சித்திரிக்கும் ‘குங்குமப் பூ' (Saffron Blosons) என்ற சிறுகதையின் அமைப்பும் அதனுடைய கருப்பொருளும் உருவ அமைப்பும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதை உடன் தமிழில் மொழிபெயர்த்து அவரது அனுமதி பெற்று தென்னிந்திய இதழ்களில் வெளியிட்டேன்.

பின்னர் அவரது பல சிறுகதைகளை மொழிபெயர்த்து தமிழக சஞ்சிகைகளில் வெளிவரச் செய்தேன். சென்னையில்நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் வருகை தந்தபோது நானும் அங்கு சென்று முதன் முதலில்அவரை நேரில் சந்தித்தேன்.

தி.ஞா.: 1945இல் இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அப்பாஸ், தி.க.சி போன்றோருடன் இணைந்து உருவாக்கினீர்கள். இதன் பின்னணியை கூறுங்கள்.

கே.கணேஷ்:அக்காலத்தில் சென்னை, மதராஸ் மாநிலமாக விளங்கியது.கேரளம் தமிழ்நாடு கன்னடா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மாநிலமாகவும் சென்னை தலைநகராகவும் விளங்கியது. சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவிற்கு கே.ஏ.அப்பாஸ் வந்திருந்தார். அப்பொழுது ஆந்திரக்காரராகிய ஜஸ்டிஸ் ராஜமன்னார் மேல்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். அவருடைய விருந்தினராக கே.ஏ.அப்பாஸ் இருந்தார். அவரை நான் நீதிபதியின் வீட்டில் சந்தித்தேன். சந்தித்தபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்திலும் அமைப்பது பற்றிப் பேசினோம். இதன் விளைவாக பின்னர் ஒரு தொடக்கக் கூட்டத்தை மைலாப்பூர் Tutorial College ஏ.ஜி.வெங்கடாச்சாரி அவர்கள் தலைமையில் நடத்தினோம்.

தி.க.சி.,தமிழொளி, குயிலன், சக்திதாசன் சுப்பிரமணியம், ஆர்வி, சாண்டில்யன் புனைபெயருடைய சுதேச மித்திரன் துணை ஆசிரியர் திரு பாஷ்யம் ஐயங்கார் போன்றோர் துணையுடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. இதற்கு நான் பின்னணியில் இருந்து இயங்கினேன்.

தி.ஞா.: கல்கி இதழில் தாங்கள் மொழிபெயர்த்த கே.ஏ.அப்பாஸின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வாறு ஏற்பட்டன?

கே.கணேஷ்: முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டகாலகட்டத்தில், நானும் அப்பாஸும் சேர்ந்து, கல்கியை சென்று பார்த்தோம்.அப்போது கல்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி - ரி.சதாசிவம் தம்பதியினரின் இல்லத்தில் இருந்தார். அவர்கள் எமக்குப் பகல்போசன விருந்து அளித்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னால் மொழிபெயர்க்கப்பட்ட அப்பாஸின் கதைகளை கல்கியில் தொடர்ச்சியாக வெளியிட கல்கி உடன்பட்டார்.அவ்விதமே பல கதைகள் கல்கியில் மணியனின் சித்திரத்துடன் வெளியாகின.அக்கதைகள் பின்னர் குங்குமப் பூ என்ற தலைப்பில் தி.ஜ.ரா. அவர்களுடைய முகவுரையுடன் சென்னை இன்ப நிலைய வெளியீடாக இரண்டு பதிப்புகளாக வெளிவந்தன.

தி.ஞா.: அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைஆரம்பிப்பதற்குத் தாங்கள் முன்னோடியாக இருந்ததாக அறிகிறோம்.அதுபற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:அகில இலங்கை எழுத்தாளர் சங்கம், டாக்டர் சரத் சந்திரமேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் செயற்படாமல் போயிற்று.40:-சிறிதுகாலத்தின் பின்னர் நானும் கே.இராமநாதனும் இணைந்து நடத்தியபாரதி பத்திரிகை எழுத்தாளர்கள், தேசாபிமானி எழுத்தாளர்கள், நவசக்திஎழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைஆரம்பித்தோம். இதில் செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், ,அ.ந.கந்தசாமி முதலியோரும் ஆரம்ப முயற்சிக்குப் பக்கபலமாக நின்றனர்.பிற்காலத்தே பிரேம்ஜி , இளங்கீரன், என். கே.ரகுநாதன், எச். எம்.பி.முகைதீன்,எஸ்.பொ., கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல், பி.இராமநாதன்,நீர்வைப் பொன்னையன், முருகபூபதி, சோமகாந்தன் போன்றோர் இணைந்துகொண்டனர். பின்னர் இதிலிருந்து கொள்கை முரண்பாடுகள் காரணமாகசிலர் பிரிந்து சென்றது வருந்தத்தக்கது.

தி.ஞா.: சுதந்திரன் பத்திரிகையில் பணியாற்றிய காலம் குறித்துகூறுங்கள்.

கே.கணேஷ்:நான் இந்தியாவிலிருந்து திரும்பிவந்தபோது எனதுபெருமதிப்பிற்குரிய டி.ராமானுஜம் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள்இந்தியாவில் நடந்த போராட்டங்கள் பற்றி சுதந்திரனில் எழுதுமாறுபணித்ததோடு திரு செல்வநாயகம் அவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்தார்.தமிழுணர்வு இங்கும் ஏற்படக்கூடிய வகையில் நான் கட்டுரைத் தொடரைஎழுதினேன். பின்னர் 1956இல் சுதந்திரன் செய்தி ஆசிரியராக சிலகாலம்பணிபுரிய நேர்ந்தது. எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்தார்.

எஸ்.ராஜதுரை,சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி ஆகியோரும் அங்கு பணியாற்றினார்கள். அங்கு நான் பணிபுரிந்த காலத்திலேதான் எனக்குத் திருமணம் நடந்தது.அதன்பின்னர் நான் சுதந்திரனிலிருந்து விலகிவிட்டேன். டி.ராமானுஜம் அவர்களே எனது ஆளுமை வளர்ச்சிக்கு பேருதவி செய்தவர். அவரும் நானும்பிற்காலத்தில் கண்டியில் அமைந்த இலங்கை இந்தியன் காங்கிரஸின்இணைச்செயலாளராக இருந்தோம்.

தி.ஞா.: வீரகேசரியில் பணிபுரிந்த நாட்களை நினைவு மீட்டுங்கள்.

கே.கணேஷ்:இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில், வீரகேசரிவாரப்பதிப்பில், திரு . லோகநாதன் அவர்களின் கீழ் நான் துணையாசிரியராகப்பணிபுரிந்துள்ளேன். அச்சமயம் கே.பி.ஹரன் ஆசிரியராகவும், கே.வி.எஸ். வாஸ்அவர்கள் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததைத்தொடர்ந்து வெளிவந்த வீரகேசரி சுதந்திரமலர் தயாரிக்கும் பொறுப்பும் எனக்குக்கிடைத்தது. நான் பணிபுரிந்தபோது, வீரகேசரி முகவரிக்கு கம்யூனிஸ்ட்தொடர் புடைய ஏடுகளும், என் பெயருக்குக் கடிதங்களும் வரவேமுகாமையாளர்கள் அதனை விரும்பாமல் என்னை விலக்கிவிட்டனர்.

தி.ஞா.: தாங்கள் நடத்திய பாரதி இதழ் பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்: கே. இராமநாதன் அவர்கள் பத்திரிகைத் தொடர்புகள் விட்டுப் போனதால் இந்தியா சென்று சுதேசமித்திரனில் நிருபராகப்பணியாற்றினார். அவரும் நானும் இணையாசிரியர்களாக 'பாரதி' சஞ்சிகையைத்தொடங்கினோம். மகாகவி பாரதியின் பெயரிலேயே ஒரு ஏடு தோன்ற வேண்டும்என்ற எண்ணத்துடன் இச்சஞ்சிகையைத் தொடங்கினோம். பீற்றர் கெனமன் அவர்களது வீட்டையே செயலகமாகக் கொண்டு சஞ்சிகை வெளிவந்தது.இதற்கு மூலதனம் வேண்டியபோது என்பெயரில் எனது தந்தை எழுதி வைத்த தலாத்துஓய தற்போதைய தலாத்து ஓய மத்திய மகாவித்தியாலயம் அமைந்திருக்கும் இடத்தை விற்று சஞ்சிகையை ஆரம்பித்தோம். சிறிதுகாலத்தின் பின்னர் கே. இராமநாதன் இந்தியா சென்றார். பின்னர் அ.ந.கந்தசாமி இணைந்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி பாரதியை நடத்தினோம்.

தி.ஞா.: கம்யூனிஸ்ட் கட்சிப்பிரமுகர் ப.ஜீவானந்தம் இலங்கைவந்தபோது அவருடன் தாங்கள் இலங்கையின் பல இடங்களுக்கும்சென்றதாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்: 1950இல் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸ் மாநாடுஇந்தியாவில் நடந்தபோது, இங்கிருந்து இலங்கைப் பிரதிநிதியாக கட்சித்தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சென்றிருந்தார். அம்மாநாட்டில் ஒருமுக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பி.ஷி.ஜோஷி என்பாருடைய கொள்கைகள் மிதவாதத் தன்மை உடையன என்றும் அது இயக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், பலாத்காரமுறையிலேயே பாட்டாளி அரசு அமைக்கத் திட்டமிட வேண்டும் எனவும் P.T.ரணதேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்திற்கு ப.ஜீவானந்தம் அவர்களும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார்.தீர்மானம் காரணமாக, அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ய இருந்ததை முன்கூட்டியே உணர்ந்த டாக்டர் விக்கிரமசிங்கா ஜீவானந்தத்தை இலங்கைக்கு அழைத்து வந்தார்.

அக்காலத்தில் பயணச்சீட்டு விசா முறைகள் இருக்கவில்லை. எனவே அவரை அழைத்துவருவதில் எவ்வித கஷ்டமும் இருக்கவில்லை. இலங்கையில் கம்யூனிஸ்ட்கட்சி பிரசாரத்திற்காக அவரை அழைத்து வந்தார். அவரும் சிலகாலம் இலங்கையில் தங்கியிருந்து யாழ்ப்பாணம், மலையகம் முதலிய இடங்களுக்குச் சென்றுகூட்டங்கள் நடத்தினார். ஏற்கனவே அவரது ஜனசக்தி இதழில் நான் எழுதியிருந்தேன் . அதனால் அவருடன் தொடர்பு இருந்தது. கண்டிக்கு வந்தபோது எனது இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். இதற்கிடையில் இந்தியாவில் எதிர்பார்த்தது போலவே கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமான கட்சி எனத்தடை செய்யப்பட்டது. பல அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்களில் சிலர் தமிழகத்தில் தலைமறைவாக கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

தி.ஞா. : ப.ஜீவானந்தம் இலங்கையில் தங்களுடன் இருந்த காலகட்டத்தில் அவருக்கு வேறு எவ்வகையில் உதவி புரிந்தீர்கள்?

கே.கணேஷ்:அக்காலகட்டத்தில், நாஞ்சில் நாடு கேரளநாட்டு மலையாளஆட்சியில் இருந்தமையால் தமிழகத்துடன் கன்னியாகுமரி, நாகர்கோயில்முதலிய பகுதிகள் தமிழகத்துடன் சேரவேண்டுமென ம.பொ.சி., கே.ரி.தங்கமணி,ப. ஜீவானந்தம் முதலியோர் போராடி வந்தனர். அதன் விளைவாக தற்போதுசென்னை மாநிலத்தோடு இப்பகுதிகள் சேர்ந்தது யாவரும் அறிந்ததே.அது தொடர்பாக அக்காலத்தில் நாகர் கோயிலில் எழுத்தாளர் மாநாடுஒன்று நடைபெற்றது. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாடகக் கலைஞர்கள் டீ.கே.சண்முகம் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது ஆதரவில்இந்த மாநாடு ஏற்பாடாகி இருந்தது. இந்த மாநாட்டுக்கு ப.ஜீவானந்தம்அவர்கள் வாழ்த்துக்கூறி தந்து அனுப்பிய ஒரு மடலை, நான் அங்கு கொண்டுசென்று சேர்க்கவேண்டியிருந்தது. அதனை நாராயணன் என்பவரிடம்.சமர்ப்பித்தேன். அவர் அந்த வாழ்த்துச் செய்தியை, அஞ்ஞாதவாசம் செய்யும்ஜீவானந்தம் அவர்களிடமிருந்து கிடைத்த செய்தி ' எனக்கூறி கூட்டத்தில்அதனை வாசித்தார். அது பலரது கரகோஷத்தைப் பெற்றது.


தி.ஞா. : ப.ஜீவானந்தத்துடன் தாங்கள் சிலகாலம் யாழ்ப்பாணத்திலும் தங்கியிருந்ததாக அறிகிறோம். அக்காலத்தைய செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்: சென்னையில் அஞ்ஞாதவாசம் செய்த தமிழக மத்திய குழுவினர்,ப.ஜீவானந்தம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்துடனும் இலங்கையுடனும் நான் தொடர்புள்ளவன் என்ற காரணத்தினாலும், பேச்சுமொழி நடையுடை பாவனைகளில் நான் இந்தியனாக இருந்தது எவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தினாலும் என்னை ஜீவானந்தம் அவர்களை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி பணிக்கப்பட்டது. இதனை பி.கந்தையா அவர்களே என்னைக் கேட்டுக்கொண்டார். வல்வெட்டித்துறையிலிருந்து அவரைத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆசிரியர், கார்த்திகேசு மாஸ்டர் ஆகியோரே இந்த ஏற்பாடுகளைச் செய்தனர். கார்த்திகேசு மாஸ்டர் வீட்டில் நான் தங்கியிருந்தேன். ப.ஜீவானந்தம் அவர்கள் அப்போது திருநெல்வேலி ரி.துரைசிங்கம் வீட்டில் தங்கியிருக்க நான் அங்கு சென்று அவரை சென்று அவரை அழைத்துச் செல்வதாக இருந்தது.இச்சந்தர்ப்பத்திலேதான் இந்தியாவில் ஹைகிரபாத் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து கஜாக்கர்' படை அமைத்துப் போராட்டம் நடத்தினர். இதனை அடக்க ராஜாஜி அவர்கள் கவர்னராகவும் வல்லவாய்படேல் உள்நாட்டு அமைச்சராகவும் இருந்து எடுக்கப்பட்ட பொலிஸ் அக்ஷன் காரணமாக கிளர்ச்சி அடங்கியது. அக்காலகட்டம் வரை நானும் ஜீவானந்தமும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தோம். ஹைதரபாத் கெடுபிடிகள் காரணமாக இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களது ஆணைப்படி இந்திய கரையோரப்பகுதிகள் இந்திய கடற்படையினரது கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால்யாழ்ப்பாணத்தில் எனது தங்குதல் நீண்டுவிட்டது. ஜீவானந்தமும் நானும்நிலைமை சீரடையும்வரை யாழ்நகரில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அக்காலகட்டத்தில் ஜீவானந்தம் பல கூட்டங்களில் கலந்துகொண்டார்.அத்தோடு கம்யூனிஸம் என்ற நூலை துரைசிங்கம் வீட்டில் இருந்த காலத்தில் எழுதினார். அந்நூல் துரைசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. கார்த்திகேசு மாஸ்டர் இல்லத்திற்கு ப.ஜீவானந்தம் வரும்போது, டொமினிக் ஜீவா, எஸ்.பொ.,தி. ராஜகோபால் போன்றவர்கள் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிட்டியது.ஜீவானந்தம் மீது கொண்ட பக்தியினால், டொமினிக் ஜீவா தனது பெயரை ‘ஜீவா' என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார்.

தி.ஞா.: பின்னர் எவ்வாறு ப.ஜீவானந்தம் அவர்களை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்த்தீர்கள்?

கே.கணேஷ்:ஜீவானந்தம் அவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்குகொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு எனக்கிருந்ததன் காரணமாக நான் AirCeylon வானூர்தி மூலம் சென்னைக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் விசா, பயணச்சீட்டு தடைகள் கிடையாது.ஆனால் வெளிநாடு செல்லும் இலங்கையர் அக்காலத்தில் வழக்கிலிருந்த தமது அரிசிக் கூப்பனை உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்துப் பெற்ற ரசீதைக் காட்டியே பயணச்சீட்டு பெறமுடியும். எனது அரிசிக்கூப்பன் அப்போது கையில் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் அப்போது சிறுபான்மையோர் இயக்கத் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய, எழுத்தாளர் எஸ்.பொ.வின் மைத்துனர் திரு சுப்பிரமணியம் ஆவார். அவர் தனது தந்தையாரான திரு ஐயம்பிள்ளையின் அரிசிக்கூப்பனைக் கொடுத்து உதவினார். அதனை நான் பயன்படுத்திப் பயணித்தேன்.

சென்னையில், மவுண்ட் ரோட்டில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டடத்தில் முற்போக்கு இலக்கிய நூல் விற்பனை நிலையம் அமைந்திருந்தது. அங்கு,பிற்காலத்தில் சரஸ்வதி இதழ் நடத்திய கோவை எஸ். விஜயபாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டின்படி சென்னை மரினா கடற்கரையில் ராஜஸ்தானிக் கல்லூரிக்கு எதிரே காந்தி சிலைக்கு அருகாமையில் நான்அருகாமையில் நான் தினமணி இதழை கையில் அடையாளமாக வைத்தபடி அமர்ந்திருந்தேன்.

காக்கி 'ஜோர்னா'ப்பையுடன் ஒருவர் வந்து என்னுடன் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி, வந்தவர் என்னை அடையாளம் கண்டு குழுக்குறியைக் கூறியவுடன் ஏற்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்படி வல்வெட்டித்துறையில் இருந்து ஜீவானந்தம் புறப்பட்டு நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய மூன்று இறங்குதுறைகளில்ஏதாவது ஒன்றில் வந்து இறங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கரையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் வந்து இறங்குவது என்பதை தந்திமூலம் குழுக்குறியாக தெரிவிக்கவேண்டும்.அதாவது அப்பொழுது இராஜப்பேட்டையில் பொலிஸ் ஸ்ரேசன் பின்புறத்திலே அமைந்த கட்டிடமொன்றில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த குயிலன், தமிழ் ஒளி ராஜகோபால் ஆகியவர்களுக்கு இங்குள்ள ஏஜெண்ட் தந்தி அனுப்புவது போல குழுக்குறியாக செய்தி அனுப்பவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறங்கு துறைகளுக்கு ஒவ்வொரு எண் குழூக்குறியாக வைத்துக்கொண்டோம். நாகப்பட்டினம் இறங்குதுறைக்கு 50 எனவும், காரைக்கால் இறங்குதுறைக்கு 100 எனவும், சிதம்பரம் இறங்குதுறைக்கு 150 எனவும் எண்ணிக்கையைக் குழுக்குறியாக அமைத்துக்கொண்டோம்.நான் ஏற்பாடுகளை முடித்து இலங்கை திரும்பி வந்ததும் 1948இல் ஒருதினம் ஜீவானந்தத்துடன் அக்கரைக்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது.முன் ஏற்பாட்டின்படி, பத்திரிகை ஏஜெண்ட் தந்தி கொடுப்பதுபோல, "இத்தனையாவது இதழில் 50 பிரதிகள் கூடுதலாக அனுப்பவும்” எனத் தந்தி கொடுத்து,அக்கரையில் உள்ளவர்களுக்கு நாம் புறப்படும் திகதியையும், கரைசேரும் இறங்கு துறையையும் தெரிவித்துப் புறப்பட்டோம்.

ஜீவானந்தம் உயரமானவர்,ஸ்டாலின் மீசை உடையவர், காது மந்தமுடையவர். இந்த அடையாளங்களைமாற்றுவதற்கு மீசையை மழித்து முஸ்லிம்போன்று சாரம் உடுத்து மாறுவேடத்தில் அழைத்துச் சென்றோம்.

தி.ஞா.: வல்வெட்டித்துறையிலிருந்து அக்கரைக்குச் செல்லும்உங்களது பயணம் எப்படி அமைந்தது?

கே.கணேஷ்:அக்காலத்தில் கிராம முக்கியஸ்தராக இருந்த திரு திருப்பதி அவர்களுடன் மகாலிங்கம் மாஸ்ரர் தொடர்பு கொண்டு எமது பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி அவர் ஓரிரவில் கார்த்திகேசு மாஸ்டர் வீட்டிலிருந்த என்னையும் துரைசிங்கம் வீட்டிலிருந்த ப.ஜீவானந்தத்தையும் காரில் அழைத்துச்சென்று, கடற்கரையில் சுங்கப்பகுதி காரியாலயத்தின் அருகே இருந்து புறப்பட்ட விசைப்படகு ஒன்றில் எம்மை ஏற்றி விட்டார்கள்.அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன ராடர் கருவிகளும் இருந்தன. அதனை வல்வெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகுகள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது.
அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரியைக் கேட்பதற்கும், புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள்.நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகன ைவேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள்.

அக்கரை செல்லும் வழியில் பல படகுகள் எதிரே வந்தன.அவர்கள் கிராமபோன் குழாய் போன்ற அமைப்புள்ள குழாயை வாயில் பொருத்தி பலத்த சத்தத்தில் பரிபாஷையில் வள்ளங்களுக்கிடையே ஏதோபேசிக் கொண்டார்கள். எதிரே சுங்கப் பகுதியினரின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறிச்சென்றார்கள்.நாங்கள் சென்ற படகு அதிகாலை நேரத்தில் நாகப்பட்டின கடற்கரையிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டது. சுங்கப்பகுதியினரின் கண்ணோட்டத்திற்கு அகப்படாத முறையில் நாங்கள் கரையேற வேண்டியிருந்தது. அக்கரையில் இருந்து பாதுகாப்பான நேரம் என்பதை அறிவிக்க ஒளிவிளக்குச் சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருந்தோம்.
கடலில் நங்கூரம் இடப்பட்டு பகல் முழுவதும் கடலில் தங்கியிருந்து மறுநாள் இரவு ஒளிவிளக்கு சமிக்ஞை கிடைத்ததும் புறப்பட்டோம். அங்கிருந்து 'நாகூர்தர்கா' (பள்ளிவாசல்) தெரிந்தது. விசைப்படகில் இருந்து இறக்கப்பட்டு சிறுவள்ளங்களில் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் காரைக்கால் அருகில் உள்ள அதிராமப் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இறக்கப்பட்டோம்.அங்கிருந்து ஒரு கோஷ்டியினர் வந்து மோட்டார் காரில் எம்மை அழைத்துச் சென்று காரைக்கால் பாக்கு வியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பரின் கடையில் எங்களைச் சேர்த்தனர்.

நாங்கள் திட்டமிட்டபடி போய்ச் சேரவேண்டிய இறங்கு துறையில் இறக்கப்படவில்லை. காரைக்கால் அப்போது ஆங்கில ஆட்சியில் இருக்கவில்லை; பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்திலிருந்தது. அதனாலேயே அங்கு சென்று இறங்குவது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. காரைக்காலைச் சேர்ந்த 'கல்கி பீடி' வள்ளங்கள் இறங்குதுறையில் எம்மை வரவேற்க வேண்டியவர்கள் காந்திருந்தனர். அதனால் ஜீவானந்தத்தை அந்த முஸ்லிம் அன்பரின் கடையில் விட்டுவிட்டு நான்மட்டும் சென்று அவர்களைக் கண்டு அடையாளம் அறிந்து அவர்களிடம் ஜீவானந்தம் அவர்களைச் சேர்த்தேன்.ஜீவானந்தம் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்று சிலகாலம் அங்கு தலைமறைவாக இருக்கும்போது கைது செய்யப்பட்டார்.

தி.ஞா.: நீங்கள் எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளீர்கள்?

கே.கணேஷ்:மத்திய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளான சோவியத்ரஷ்யா, ருமேனியா, பல்கேரியா, உக்கிரேன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு நடந்த எழுத்தாளர் மாநாடுகளில் பங்கு பற்றினேன். பல்கேரியதேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், உக்கிரேன் எழுத்தாளர்களின்படைப்புகளையும் மொழி பெயர்த்ததன் காரணமாக அந்த நாடுகளில்நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளில் பற்குபற்ற அழைக்கப்பட்டேன்.

தி.ஞா.: மலையக தொழிற்சங்க முன்னோடி தேசபக்தன் கோ.நடேசைய்யர் அவர்களுடன் தங்களுக்குத் தொடர்புகள் ஏதும் இருந்ததா?

கே.கணேஷ்:மலையகத்தின் மூத்த எழுத்தாளரான அவருடன் எனக்குநேரடித் தொடர்புகள் இருக்கவில்லை. தேசபக்தன் நடத்தியபொழுது சந்தா சேர்ப்பதற்காக வீடுவந்து செல்வார். நான் அக்காலத்தில் சிறுவனாக இருந்தேன்.அவருடைய பத்திரிகை வாசகனாகவும் அவரது எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தேன். திரு டி.ராமானுஜம் அவர்களின் மூத்த சகோதரர் டி.சாரநாதன் என்ற பிரசித்த பத்திரிகையாளர், கோ.நடேசைய்யார் மீனாட்சி அம்மை தம்பதிகளின் புதல்வியை மணந்த மருமகனாவார். இதனாலும் கோ.நடேசைய்யர் அவர்களது தொண்டும் எழுத்துக்களும் எனக்கு மிக நெருக்கமாயிருந்தன.

தி.ஞா. : இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பு பற்றிக் கூறுங்கள்.

கே.கணேஷ்:ஜவர்ஹர்லால் நேரு இலங்கைக்கு வந்தபோது, இலங்கைவாழ் இந்தியர்களின் உதிரிச் சங்கங்கள் ஒன்றுசேர்ந்து ஒரே அமைப்பாகதனியொரு நிறுவனமாக செயல்பட வேண்டுமென அறிவுரை கூறினார். அதன்படிகொழும்பு கொள்ளுப்பெட்டியில் இந்தியன் கிளப் கூட்டத்தில் 1939ல் இலங்கைஇந்தியன் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்டது. அதுவே பின்னர் 'இலங்கைதொழிலாளர் காங்கிரஸ்' என வழங்கியது. அதனின்று பிரிந்து 'ஜனநாயக46காங்கிரஸ்' அமைப்பு தோன்றியது.முதற் கூட்டத்திற்கு சென்றவர்களில் அம்பிட்டிய, தலாத்து ஓயாஇந்தியர் சங்கமும் போஸ் சங்கமும் கண்டிப் பகுதியின் பிரதிநிதிகளாகச்சென்றனர். பங்குபற்றியவர்களில் டி.ராமானுஜம், ராமையா ராஜப்பிரியர்,கே.ராஜலிங்கம் சோமசுந்தரம், தெல்தோட்டை பழனிசாமி, கே.கணேஷ்ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தி.ஞா . : நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையிலேயே அதிக ஈடுபாடு காட்டியுள்ளீர்கள். இதுவரை 22 மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். இதற்கான உந்துதல் ஆரம்பத்தில் எப்படி ஏற்பட்டது?

கே.கணேஷ்:'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில்இயற்றல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் கட்டளையை நிறைவேற்றும்முகமாகத்தான், மற்றத் துறைகளில் அதிகம் ஈடுபடாது மொழியாக்கத் துறையில்அதிக கவனம் செலுத்த நேர்ந்தது. அரச குடியேற்ற நாடாக - Crown Colonyஎன்ற பிரிட்டிஷ் அரசின் சலுகை பெற்ற பெரும் நாடாக இலங்கை அவர்கள்ஆட்சிக்காலத்தில் நிலவியது. பரந்த பாரதத்தினைவிட இத்தீவில் பேச்சு,எழுத்து, கல்வி உரிமைகளும் வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. அங்கு தடைசெய்யப்பட்ட நூல்கள் இங்கு சர்வ சாதாரணமாகப் பரவியிருந்தன.
உதாரணமாக சுபாஷ் சந்திரபோஸின் ‘Indian Struggle' (இந்தியப் போராட்டம் )என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பினும் இங்கு இறக்குமதியாகி,தலைப்புகளை மாற்றி இந்தியாவுக்குக் கடத்தப்பட்டன. இந்தியாவில்வெளிவந்தவுடன் விறுவிறுப்பாக இலங்கையை வந்தடையும் நூல்கள், பின்னர்அக்கரையில் தடைசெய்யப்பட்டு அபூர்வமாக அமைபவை, இங்கு பரவலாகக்கிடைத்தன. தவிரவும், ஐரோப்பிய இலக்கியங்கள் இங்கு சரளமாகப் புளங்கின.

இந்த நிலையில், இந்திய எழுத்தாளரும் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமானமுல்க்ராஜ் ஆனந்த் வெளியிட்ட Untouchables போன்ற நூல்கள் இந்நாட்டில் பரவியதைப்போல இந்தியாவில் அறியப்படவில்லை.பெங்குவின் வெளியீட்டினர் தொடங்கிய New Writing என்ற புதுமை இலக்கிய வரிசை இதழில், முல்க்ராஜ் ஆனந்த், இக்பால் அலி, ராஜாராவ்போன்றோரின் படைப்புகள் வெளியாகின. ஒரு இதழில் முல்க்ராஜ் ஆனந்தின் Barber's Trade Union (நாவிதர் சங்கம்) என்ற சிறுகதை வெளியாகியது.அதன் உணர்வும், உணர்த்திய புது உலக எண்ண உதய வெளிப்பாடும் என்னை ஈர்த்தன.
இரண்டாம் போர்க் காலத்தில் லண்டனில் தங்கியிருந்த முல்க்ராஜ் ஆனந்த், அப்போது பொதுமக்கள் எண்ண வெளிப்பாடுகளை உணர்த்தும் பேட்டி காண்பவராக இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, அவரது அனுமதி பெற்று அக்கதையை மொழிபெயர்த்து ‘சக்தி' இதழுக்கு அனுப்பினேன்.தி.ஜ.ர. அவர்கள் அதனைப் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பல மொழிபெயர்ப்புகளை வெளியிடும்படி தூண்டிக் கடிதம் எழுதினார். இவ்வகையில், அவர் ஆசிரியராக அமைந்த, 'மஞ்சரி', 'ஹனுமான்', 'ஹிந்துஸ்தான்', ஆகிய இதழ்களுக்கும் சிறுகதைகளை மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கினேன்.பஞ்சாபி எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் அவர்களின் சிறந்த சிறுகதைகளை, இலங்கையனான நான், தமிழகத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.

இப்போது போலல்லாது, அக்காலத்தில்ஆங்கிலக்கல்வி தமிழகத்தைவிட இலங்கையில் உயர்நிலையில் இருந்தமையும்,ஆங்கில ஆர்வமும் பயிற்சியும் மெத்தனமாக இருந்தமையும் எனது முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. அத்துறையில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது.மொழியாக்கத்திற்கு ஆங்கில மொழியே துணையாக அமைந்தது.அம்மொழியில் மொழியாக்கப்பட்டதை, என்னால் தமிழ் நாட்டுச் சூழலுக்கும்பண்பாட்டுக்கும் ஏற்ப தமிழாக்கப்பட்டன. இதற்கென மொழிபெயர்க்கப்படும்பிறநாட்டு வரலாறுகள், பண்பாடுகள், மக்களது வாழ்க்கை நெறிகள், சமயக்கோட்பாடுகள் இவற்றுடன் மரபு, குறியீடுகள், பழக்க வழக்கங்கள், சகுனங்கள்,சமய வழிபாடுகள் இவற்றை ஆய்வு செய்வதில் காலங்கழிந்தது; கழிகின்றது.

தி. ஞா : :ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு எத்தகைய தகுதிகள் இருக்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

கே.கணேஷ்:மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கும். மொழி பெயர்க்கப்படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும்நாட்டு மொழிமரபுகள்; வரலாறு சமூக அமைப்பு இயல் அனைத்திலும்ஓரளவேனும் அறிமுகமானவனாக இருத்தல் வேண்டும். இவற்றைப்பெற பலநூற்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும்பெற்றிருக்க வேண்டும்.தி.ஞா : தமிழில் மொழிபெயர்ப்புத்துறை வளர்ச்சி பெறுவதற்கு ஆரம்பகாலமுயற்சிகள் எந்த அளவிற்குப் பங்களிப்புச் செய்தன?கே.கணேஷ் : பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் பிறநாட்டுநல் ஞர் சாத்திரங்கள் தமிழில் வரத் தலைப்பட்டன.
சில சமயங்களில்மேலை நாட்டு உடைமாறி உள்நாட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு.புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும், அகதா கிறிஸ்டியையும்உருமாற்றினர். ஷொவாக் ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின்'அட்டிகை' சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்திற்குள் புகுந்தது. ஜெரோம்கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும், பி. எஸ்.ராமையாசிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப் பம்மாத்துக்கள் மாறி, பலவெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்த்து தோன்றியது. புதுமைப் பித்தன, புரசு பாலகிருஷ்ணன், தி.ஜ.ர., அ.கி. ஜெயராமன், கு அழகிரிசாமி, த.நா. குமாரசுவாமி,ப. ராமசாமி போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் முன்னணியில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்யஇலக்கியங்களையும் கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார்.

இதேபோல பன்மொழி வழங்கும் இந்திய நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மலையாளம், போன்ற மொழிகளில் தோன்றியபடைப்புக்களும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் அவ்வவ் மொழிகளில் பெயர்க்கப்படவும் ஆங்கில மொழி கருவியாக இருந்தது.திருக்குறள் திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையை,ஜி.யு. போப் மொழிபெயர்த்து, வெளிநாட்டவர் புகழ்ந்த பின்னரே தமிழர்களின் கண்களும் திறக்கத் தொடங்கின.
அயர்லாந்துக் கவிஞரான W.B.Yeats ஈட்ஸ் தாகூரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத் தந்த பின்னரே வங்காளிகளும் அவரைப் புகழத் தொடங்கினர்.

ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி,பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத் துறையில் முன்னின்றசார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் டூமாஸ், விக்டர் ஹ்யூகோ , ருஷ்ய மேதை லியோதோல்ஸ்தோய்,அன்டன் செக்கோவ், தொஸ்தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளின் ஆங்கிலமொழிபெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.

தி.ஞா : மொழிபெயர்ப்பின்போது எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் யாது?

கே.கணேஷ்:மேல் நாட்டு மரபுச்சொற்களை மரபு வழியறியாது நேரடியாகமொழிபெயர்க்கும்போது, அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடுவதுமுண்டு. Go to Hell என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் 'நரகத்துக்குப் போ' என்று தமிழ்ப்படுத்தியிருந்தார். 'தொலைந்து போ, 'நாசமாய்ப் போ' என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி, தந்தை வழி உறவினர்களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும்நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன் பிறந்தவரின் மகனை அதாவதுசிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும்பொழுது சில தாயைக்குறிக்கும் வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்பாளர் குறிப்பிடுகிறார். உண்மையில் மாமன் அப்படிக் கூறான். அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி, நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யாது, இடம் பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டிவரும்.

இதேபோன்று சமூகவியல், வரலாறு போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்திருக்கவேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, சீனநாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்ததுபோல் சடை போட்டிருந்தனர். கொண்டை கர்நாடகமாகக் கருதப்பட்டது போல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழமை வாதிகளாகக் கருதப்பட்டனர். 1911இல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்டனர். முடியாட்சியை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் Pig Tail என்று வழங்கப்பட்டது. இதை பன்றி வால் என மொழிபெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழிபெயர்ப்பாளன் தன் வாசகர்களுக்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல்வேண்டும்.

மேல்நாட்டவர்களுக்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தனது ‘தீண்டாதான்' நூலில், பல அடி நீளமிக்க துணியை இத்தனை புரிமடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார்.நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும் போது, தலைப்பாகை அணிந்திருந்தான் என்றால் போதுமானதல்லவா? இவ்விதம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கபடும் சொற்கள் நேரடிமொழி பெயர்ப்புகள், தமிழ்மரபில், 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதுபோல்' ஆகிவிடுவதுமுண்டு.

பழந்தமிழ்ச் சங்ககாலம் முதல்வழிவழியாக வழங்கும் 'அருவி' என்ற அழகிய சொல் இருக்க, Water Fallsஎன்பதன் நேர்மொழிபெயர்ப்பான ‘நீர் வீழ்ச்சி' என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம்பிடித்துக் கொண்டதை நோக்கலாம்.
இங்ஙனம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உருமாறி உடைமாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலைமாறாது காப்பாற்றவேண்டிய கடமையுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்கவேண்டும். மொத்தத்தில் இக் கூடுவிட்டு கூடுபாயும் பணியில், யாருக்காகஇலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்து கொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங் கடமையாகும்.

தி.ஞா.: நீங்கள் மலையக எழுத்தாளராக இருந்தபோதிலும் மலையகத் தொழிலாளர்கள் பற்றி இலக்கியம் படைக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறதே?

கே.கணேஷ்: நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத்தோட்டம் தொலை நோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறிய முடிந்தது.தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றியோ, தேயிலைப் பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்குப் பெரிதும் வாய்க்கவில்லை. இலங்கை, தமிழகப் பள்ளிப் படிப்பு முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலை நாட்டுப் பகுதியில் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க்கை முறைகளையும், சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும் ஏடுகள், நூல்கள் வாயிலாகவே அறிய முடிந்தது.எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில் மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகள், கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஓட்டம் பார்த்து வந்து அவர்களது உள்ளாத்மாவையே உணர்ந்து விட்டதாகப் பம்மாத்துப் புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தைக் குறித்து நான் கவனம் செலுத்த முடியாமையின் காரணமாகும்.

சமூகத்தின் பொருளாதாரச் சீர்கேடுகள், மேடுபள்ளங்கள் சரிசமன் ஆக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவர்களும் மேல் நிலையில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எய்தவேண்டும் என்ற சமதர்மக் கொள்கையில் எனக்குக் ஈடுபாடு இருந்தது. சாதி, வகுப்பு, இனபேதம் போன்றவற்றில் ஈடுபாடுகள் இத்தகைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்குமேயன்றி அதற்குத் துணையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அதனால் மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவ நிலை ஏற்படும் பொழுது பெருவெள்ளம் வந்து சிறு குப்பை கூழங்களை அழித்துச் சமநிலையாக்கி விடும் என்று நினைத்தேன்.