வியாழன், மார்ச் 31, 2005

மேலங்கி- The Overcoat
மேலங்கி என்ற இந்த நாவலை எழுதியவர் 19ம் நூற்றாண்டின் ருஷியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நிகொலை கோகோல்-Nikolai Gogol (1809-1852) என்பவர்.
"நாங்கள் எல்லோருமே நிகொலை கோகோலின் மேலங்கிக்குள் இருந்து வந்தவர்களே" என்று தன் நண்பனுக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகின்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. இந்தக் கூற்றில் இருந்து நிகொலை கோகோலின் மேலங்கி என்ற குறுநாவலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. மேலங்கி என்ற இந்த நாவல் 1842 இல் வெளியாகி ரூஷ்யாவின் யதார்த்தவியலுக்கு அடியெடுத்துக்கொடுத்தது. இந்த நாவலில் குறியீடாக வருகின்ற மனிதன் 19ம் நூற்றாண்டின் புதிய கதாபாத்திரமாகத் தொடங்கிய சாதாரண மனிதன். இந்த மனிதனின் பாத்திர வளர்ர்சியினைத் தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள் " நாவலில் காண்கிறோம். 19ம் நூற்றாண்டின் யதார்த்தவத இலக்கியக் கோட்பாடின் ருஷ்ய பிரதிநிதிகளாக தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கன்யெவ் போன்றவர்கள் கொள்ளப்படுகின்றனர்.

கதைச் சுருக்கம்
பீற்றஸ்பர்கில் இருக்கும் ஒரு சாதாரண எழுதுவிஞைஞன் பெயர் அகாகி அகாகிஜெவிற்ச். தன் அலுவலகத்தில் கோவைகளைப் படியெடுப்பதையே தொழிலாகக் கொண்டவன் அகாகி அகாகிஜெவிற்ச். நாளாந்த வாழ்வில் எந்த ஆரவாரமோ அங்கலாய்ப்போ இல்லாத, யாருடனும் எந்தச் சோலிசுரட்டுக்கும் போகாத ஒண்டிக்குடித்தனம் நடத்தும் அந்த எழுதுவிஞைஞனின் வாழ்வு அவனளவில் சந்தோசமாகவே கழிகிறது.

நாளடைவில் அவனது ஆடைகள் தேய்து கந்தலாகிக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் சக தொழிலாளர்கள் அவனது ஆடைகளைப் பற்றியும் அவனது சுரணையற்ற போக்கினையும் முடிந்தவரை கேலிபேசியும்விட்டனர். அதுவெல்லாம் அவனுக்கு ஒருபோதும் உறைத்ததில்லை. பல காலங்களின் பின் ஒரு நாள் அவனது ஓவர்கோட்டையும் மீறி கடும் பனிக்காலக் குளிர்வாட்டத் தொடங்கியது. பல இடங்களில் பொத்தல் விழுந்த அந்த ஓவர்கோட்டை சரிப்படுத்தாமல் அவன் வெளியே வரமுடியாதென்றாக்கி விடுகிறது குளிர். அந்த ஓவர்கோட்டை எப்படியாவது சரிப்படுத்துவதற்காக ஒரு தையற்காரனைத் தேடிச் செல்கிறான். தையற்காரனோ "இது இனிமேல் எந்த விதத்திலும் பத்துப்போடவே முடியாத நிலையில் இருக்கிறது. புதியதொன்று தைத்துக் கொடுப்பதற்கு சுமார் 150 ரூபிள்வரை ஆகாலாம்"என்று சொல்லிவிடுகிறான். அகாகி அகாகிஜெவிற்ச் தையற்காரனிடம் பலவாறு பேரம் பேசி ஒருவாறு 80 ரூபிளுக்கு அவனை உடன்பட வைத்துவிடுகிறான்.

வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி அந்தப் பணத்தையும் சேமித்துவிடுகிறான். மதுவில் மிதக்கும் தையற்காரனிடமிருந்து அதனைத் தைத்துப் பெறுவதற்குள் வரப்போகும் ஓவர்கோட் பற்றியே இரவும்பகலும் அவனது எண்ணமெல்லாம். ஒருவாறு ஓவர்கோட் கைக்கு வந்தது. அன்று ஆசையோடும் பெருமிதத்தோடும் அந்தக் கோட்டை அலுவலகத்திற்கு அணிந்து செல்கிறான் அகாகி அகாகிஜெவிற்ச். அலுவலகம் அன்று அமளிதுமளிப்பட்டது. "இதனை நாங்கள் நிச்சயம் கொண்டாடியே தீரவேண்டும்" என்று அவனது அலுவலகச் சக தொழிலாளர்கள் தற்செயலாக அன்றைய இரவு தம்மில் ஒருவன் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு அகாகி அகாகிஜெவிற்சையும் அழைக்கின்றனர். அவனும் செல்கிறான். ஆனால் அவனுக்கு அங்கே நீண்ட நேரம் கழிப்பதற்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளியே வந்துவிடுகிறான்.

வீடுசெல்லும் வழியில் நன்றாக இருட்டி விடுகிறது. அந்தக் கும்மிருட்டில் திருடர்கள் அவனை நையப்புடைத்து அவனது அந்தப் புத்தம்புதுக் கோட்டையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர். ஒருசிலரின் ஆலோசனையின் பெயரில் அவன் ஒரு பெரிய மனிதனிடம்; எப்படியாவது அந்த ஓவர்கோட்டைக் கண்டுபிடித்துத் தந்துவிடுவார் என்று மற்றவர்கள் நம்பிக்கைதந்த ஒரு பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிடச் செல்கிறான். ஆனால் அந்த அதிகாரியோ கோட்டைத் தொலைத்தே மிகப்பாரிய குற்றம்போல் இவனைக் கேவலமாக நடத்துகிறான். வேதனையோடு வீடுசெல்லும் அகாகி அகாகிஜெவிற்ச் நோயாளியாகிப் படுத்துவிடுகிறான். சில நாட்களிலேயே இறந்தும் விடுகிறான். அகாகி அகாகிஜெவிற்சின் ஆத்மா அமைதியின்றி இப்போது பீற்றஸ்பர்க்கை ஆட்டி அலைக்கிறது. வருவோர் போவோரிடம் ஓவர்கோட்டைப் பிடுங்கிவிடுகிறது. உயர் பொலிஸ் அதிகாரியைப் பழிவாங்கச் செல்லும் போது அந்த அதிகாரியோ முற்றிலும் பயந்தவனாக மாறிவிடுகிறான், தன் அதிகாரப் போக்கினைமுற்றிலுமாகத் தளர்த்தியும் விடுகிறான். இதில் திருப்தியடைந்த அகாகி அகாகிஜெவிற்சின் ஆன்மா சாந்தியடைந்து பீற்றஸ்பர்க்கை விட்டு நீங்கிவிடுகிறது.

குறிப்பு
ருஷ்ய வாழ்வின் புதிய நம்பிக்கையை உருக்கியது இந்த மேலங்கி. புதிய மேலங்கி ஒன்றின் சொந்தக்காரனாகியவுடன் முற்றிலும் புதிய மனிதனாகவே மாறிப் போகிறான் அகாகி அகாகிஜெவிற்ச். அவனது வாழ்வில் புதிய திருப்பங்கள் அடியெடுத்து வைக்கின்றன. ஆனாலும் அவனது மகிழ்ச்சி ஒரு நாளுக்கு மேல் நீடிக்கவில்லை. கதையில் உயர் அலுவலகங்களினதும் உயர் அதிகாரிகளினதும் கொடுங்கோன்மையில் சாதாரண மனிதன் வெந்து போவது சொல்லப்படுகிறது. நான் என்ற கதைசொல்லி சொல்லப்படவேண்டியவைகளைச் சொல்வதும் மறந்து பட்டவைகளுக்கு மன்னிப்புக் கேட்பதுமாய் கதை நகர்ந்து செல்கிறது. ஒரு நளின பாஷையில் கதை சொல்லப்பட்டு நகைச்சுவை முழுக்கதைநீளம் இழையோடி இருந்தாலும் பாத்திரங்களின் வறுமை, துன்பம், வாழ்வின் நிற்பந்தங்கள் மீது வாசகரும் சேர்ந்து வருத்தப்படவே வைக்கிறது இந் நாவல்.

(புகழ்பெற்ற ருஷ்ய நாவல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந் நாவல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. மேலதிக விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.)
"எளிய சொற்களில் இனிய குறுந்தொகை"
சங்க இலக்கியத்தில் தொகுப்பு நூல்கள்(Anthologies) எட்டு. அவையே "எட்டுத் தொகை" என்று வழங்கப்படுகின்றன. குறுந்தொகை என்ற பாடல்களின் தொகுப்பு நூல் இருநூற்றைந்து கவிஞர்களின் தேர்ந்தெடுத்த நானூறு(கடவுள் வாழ்த்து நீங்கலாக) பாடல்களைக் கொண்டது. நான்கு அடிப் பாடல்கள் தொடக்கம் எட்டு அடிப் பாடல்கள் (இரண்டு பாடல்கள் விதிவிலக்காக ஒன்பது அடிகளில் அமைந்துள்ளன.) வரை உள்ள இந்தத் தொகுப்பினைச் செய்தவர் பூரிக்கோ என்ற புலவர். தமிழ் இலக்கண மரபு என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் என்ற ஆறுபிரிவுகளைக் கொண்டது. இவற்றில் பொருள் இலக்கணத்தை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பிரிப்பார்கள். இதில் அகப்பொருள் காதலைப் பேசுவது.
அகப்பொருள் நூலான குறுந்தொகையின் எழுபத்தைந்து பாடல்கள் கீழ்வரும் நூலில் நவீன கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன.

நூல்: "எளிய சொற்களில் இனிய குறுந்தொகை"
ஆசிரியர்: மு.ரா. பெருமாள் முதலியார்
வெளியீடு: 1985, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
குறுந்தொகை
அந்தக் கடற்கரையின் மெல்லிய காற்றில் ஆடுவதற்கு ஒன்றுமில்லை. அவள் செவிகளுக்கு மட்டும் கேட்கும்படியாக அவள் மனம் மட்டும் ஆடியது. மாரிகாலத்தின் தூறல் மழையிலும் மணல் படு நிலத்தை மெல்லெனத் தழுவும் ஆசை அலைகளின் மெது வருடலிலும் பூமி நனைந்திருந்தது. அன்றைய புலவர்களால் ஆம்பல் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட அல்லித் தாமரையின் வெள்ளை மலர்கள் அவள் நினைவுக்குள் வந்து குவிந்தன. ஒற்றைக் கால் ஊன்றி ஒய்யாரமாக, ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்கின்ற கொக்குகளைக் கண்ட மாத்திரத்தில் அந்த மலர்கள் அவள் நினைவில் வந்து குவிந்தன. ஆனால்
 
"எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து
வட்டக் குடை பிடித்து வழக்கமாக வருகின்ற நண்டுகளை இன்று அந்தப் பொறுமையுடன் பார்க்க முடியவில்லை.தத்தமது அடிச்சுவடுகளை மட்டும் அந்த ஈர மண்ணில் அடையாளமாக விட்டு விட்டு ஓடிவிடுகின்றன நண்டுகள்.

நண்டுகளுக்கு எமனல்லவா அந்தக் ஒற்றைகாற் கொக்குகள். கட்டறுந்த காளையொன்றின் ஜல்லிக்கட்டு வேகத்தில் அவை ஓடி ஒளிகின்றன. தாழை மர வேர்களுக்குள் ஓடிப் பதுங்கி மறைகின்றன அந்த நண்டுகள். இந்த முனையில் அன்றைய நிலவில் "நான் விரைவில், சில நாட்களில் வந்துவிடுவேன்" என்று சொல்லிவிட்டுப் போனானே அந்த நெய்தல்நாடன். அவன் இன்றும் வரவில்லை. சரி, வராமலேயே இருந்துவிடட்டும். இளைத்துப் போகும் எனது கைகளுக்கு வளையல்கள் விற்கும் வியாபாரி ஒருவன் இல்லாமலா போய்விடுவான் என்று சலித்துக் கொண்டாள் அவள்.
          
குறுந்தொகை எமது காதல் இலக்கியத்தின் நிறைமுடி. அதன் குறுகிய வடிவமும் பொருள் விரிந்து செல்லும் காட்சிப் படிமங்களும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவை. ஆனால் அவை முற்காலத் தமிழில் இருப்பதால் அவற்றை ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அவற்றின் சுவையும் குன்றாமல் அதேவேளை அதில் வரும் சொற்களைக்கொண்டே இன்றைய கவிதை வடிவில் சொல்லிவிட முயன்றிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆங்கிலத்தில் இவ்வாறு தான் "Canterbury Tales" நவீன ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாம். குறுந்தொகையின் 117 வது பாடலின் மூல வடிவமும் அதனை மீளுரைத்த ஒரு மு.ரா. பெருமாள் முதலியார் அவர்களின் நவீன வடிவமும் கீழே எழுதுகின்றேன். அந்தப் பாடலின் காட்சியைத் தான் என் எழுத்தில் நீங்கள் மேலே காண்பது.
 
மூல வடிவம்:
 
மாரியாம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்நெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி எருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர் கை வளையே.
       
நவீன வடிவம்:
 
மாரி காலத்து ஆம்பல் மலர் நிற
கூரிய பார்வைக் கொக்குக்கு அஞ்சி
கயிறு அறுத்து ஓடும் காளையின் விரைந்து
தாழையின் வேரைச் சார்ந்த வளைக்குள்
பாய்ந்து மறைந்து பதுங்கும் நண்டு
செறிந்த கழிக்கரைச் சேர்ப்பன்*இன்றும்
வாராதிருப்பினும் வருந்தோம் நாமே
இளைத்த கைகளுக்கு ஏற்ற சிறிய
வளையலும் விற்கும் வணிகர் உளரே.


* சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்

புதன், மார்ச் 30, 2005

என் உறவுக் குழந்தைகள் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்பார்கள். சும்மா இருத்தல் என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது அவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது. நான் ஒரு எழுத்தாளர் என்று அவர்கள் பெற்றோர் அவர்களுக்குச் சொல்லியிருக்கவுங்கூடும். ஆனால் அது என்ன என்று அவர்களுக்கு விளங்கவில்லை. சித்திரை வருஷம் தமிழ்ப்புத்தாண்டு வரப்போகிறது; நாங்கள் பாடுவதற்கு பாட்டெழுதித் தாருங்கள் என்று கேட்டார்கள். உடனே எழுதி அவர்களிடத்தில் என் சும்மா இருத்தலின் இருப்புக்குப் பெருமை சேர்த்துவிட்டேன்.உங்கள் நகைப்பை நான் பொருட்டாக எடுப்பேன் என்று நினைத்தீர்களோ!
இதோ என் அந்தப் பாட்டு! மெட்டுப் போட வேண்டியது நீங்கள்.


புத்தாண்டை வாழ்த்திப் புது வரவு பாடுவோம்

"வருக புத்தாண்டே வருக புத்தாண்டே
வண்ணத்துப் பூச்சிகள் மலர்களைப் பாட
மண்ணக மானிடர் மகிழ்வினில் ஆட
அறுவடைப் பொலிவு ஆனந்தப் பெருக்கம்
சித்திரை மாதச் சிறப்பினில் மலர்ந்து
வருக புத்தாண்டே வருக புத்தாண்டே

வருக புத்தாண்டே வருக புத்தாண்டே
இத்தரை மீது எழில் நிறப் பூக்கள்
புற்தரை வாவி பூம்பனி மலைகள்
நெல்வயல் காடு நீள் நெடும் பூமி
அத்தனையும் சுடர் ஒளியினில் மின்னும்
கோடி அழகினைக் கொண்டுநீ வாயே
வருக புத்தாண்டே வருக புத்தாண்டே

வருக புத்தாண்டே வருக புத்தாண்டே
ஆழி நீரலை ஊழிச் சுனாமியின்
பேரிடர் நீங்கிப் பெருமையில் வையகம்
வாழிடம் வேலை வனப்பு நின்மதி சூழ்
நாளெலாம் காண ஓடி வா நீயே
வருக புத்தாண்டே வருக புத்தாண்டே

வருக புத்தாண்டே வருக புத்தாண்டே
வெண்பனி நீங்கி விடியலின் சூரியன்
தண்ணொளி பட்டு மரங்கள் துளிர்க்கவும்
ஜீவராசிகள் தம்மிசை பாடவும்
அமைதியில் மானிடர் ஆடிக்களிக்கவும்
மழலைச் சிறுவர் மனங்களில் கற்பனை
பெருகப் பெருக்கப் பிறந்த நல் ஆண்டே
உருகநாம் பாடுவோம் உவகையே காணுவோம்
வருக புத்தாண்டே வருக புத்தாண்டே

"வாஸ்து": இது வாஸ்து சாஸ்திரம் அல்ல!!


தமிழில் " கதே வாஸ்து " என்ற நூலை புது தில்லி சாகித்திய அக்காதெமி நிறுவனத்தினர் 1963 இல் வெளியிட்டிருக்கின்றனர். வாஸ்து (முதல்பாகம்) எனும் இந் நூலினை அ. துரைசாமி பிள்ளை என்பவர் தமிழாக்கம் செய்துள்ளார். இந்தப் புத்தகம் இப்போது கிடைப்பது அரிது. ஆனால் பழைய புஸ்தகக் கடைகளில் என் தீவிர வாசக நண்பர்கள் பலர் இந்நூலைக் கண்ட ஞாபகம் வைத்திருக்கின்றனர். இது ஒர் "வாஸ்து சாஸ்திரப் புத்தம்" என்று நினைத்துக் கடலைக் கொட்டைக் காரனுக்குத் தாரை வார்த்து விட்டிருக்கின்றனர். உலகத்தில் நீண்ட நாட்கள் எழுதப் பட்ட (சுமார் 60 வருஷங்கள் ) உலகப் புகழ் பெற்ற காவியம் இது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையில் இந்த நூல் Goethe (கோதே) என்ற ஜெர்மானியக் கவிஞரின் Faust (பௌஸ்ட்) என்ற காவியத்தின் மிகச் சிறந்த தமிழாக்கமாகும். இரண்டு பாகங்கள் கொண்ட இந்த நூலின் முதலாவது பாகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைவிட இந்தக் காவியத்தின் உரைநடை அறிமுகம் ஒன்று தமிழில் 1950 களில் தாராபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரால் சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த நூலின் பிரதி ஒன்று பிரித்தானிய நூதன சாலை நூலகத்தில் இருக்கின்றது.