வெள்ளி, மே 13, 2005

கொல்லாமல் உறங்குவதில்லை என் நாட்டு மக்கள்

கொல்லாமல் உறங்குவதில்லை
என் நாட்டு மக்கள்
துரோகிகள் மலிந்ததாலும்
சமூக விரோதிகள் விளைந்ததாலும்
இனத்தை பழித்தலாலும்
நிலத்தைக் குலைத்தலாலும்
மொழியை மறத்தலாலும்
மதத்தை அழித்தலாலும்
கொல்லாமல் உறங்குவதில்லை
என் நாட்டு மக்கள்

மனித உயிரைத் தவிர
மற்றெல்லாவற்றுக்கும்
உயிரையும் கொடுப்பர்
என் நாட்டு மக்கள்

என் நாட்டில் கொல்லாமல்
இயக்கம் நடத்த முடிந்ததில்லை
இராஜாங்கம் நடத்த முடியவில்லை
கருத்துச் சொல்ல முடியவில்லை
கட்சி நடத்த முடியவில்லை
பத்திரிகை நடத்த முடியவில்லை
எதையும் பாதுகாக்க முடியவில்லை
அதனால் கொல்லாமல் உறங்குவதில்லை
என் நாட்டு மக்கள்

பாவம் மக்கள்
கொல்லாமல் விட்டால்
அவர்களுக்கு கவிதை வராது
செய்தி இராது; அமைதி வராது
தொலைக்காட்சி போம்
தொடர்புகள் நீளாது அதனால்
கொல்லாமல் உறங்குவதில்லை
என் நாட்டு மக்கள்

இனங்களைப் பிரிக்கவும் கொலையே மருந்து
இனங்களை இணைக்கவும் அதுவே மருந்து
தண்டனை என்பதும் கொலைதான்
எங்கள் சரித்திரம் என்பதும் கொலைதான்
இழப்பு என்பதும் கொலைதான் அதனை
இட்டு நிரப்பவும் கொலைதான்.

என் நாட்டில் கொலையின்றிக் குழந்தை பிறக்காது
மக்கள் குதூகலம் அற்றுப் போம்
எங்கும் கொடியேறாது அதனால்
கொல்லாமல் உறங்குவதில்லை
என் நாட்டு மக்கள்


நாளொரு கொலையில்
நம்பிக்கை வைத்து
போலிகள் ஒழிந்த
புரட்சியின் கதையில்
நின்மதியாகத் தூங்குவார் மக்கள்