புதன், ஜூலை 27, 2005

கொங்கர் புளியங்குளம்

மதுரையில் இருந்து மேற்கு நோக்கி தேனிக்குச் செல்லும் வழியில் தெக்கானூர் என்ற ஊர் கழிந்தவுடன் சிறிதளவு தூரத்தில் ஒரு பெரிய எரிபொருள் நிரப்பும் நிலயமொன்று(பெற்றோல் பாங்கு) இப்போது புதிதாகத் திறந்து வைத்திருக்கிறார்கள்.
வீதியின் எதிர்ப்புறத்தே இருக்கும் மரத்தடியில் புத்தம் புதிதாக விநாயகர்சிலை ஒன்று முளைத்திருக்கின்றது. வாகனங்களின் வேகத்தைக் குறைக்கவும் வாடிக்கையாளர்களைக் கூட்டவும் பக்தர்கள் வசதிக்கும் ஏற்ப இது நல்ல ஏற்பாடுதான். இப்படியாக சித்தன் ஒண்ணுக்கிருக்க அந்த வீதியில் ஒதுங்கிய வேளை நட்டகல் ஒன்று நானிருக்கிறேன் என்று பேசியது. கொங்கர் புளியங்குளம் என்ற அந்தக் கிராமத்தின் வீதியில் ஒருமுறை திருமலை நாயக்கர் உலாப்போனாராம்.நிரந்தர நிலமற்ற அந்த ஊர் மக்கள் அட்டாங்கமாகத் தடாலென விழுந்து திருமலை நாயக்கரை வணங்கினராம். நாயக்கரும் மகிழ்ந்து வீதியின் ஒரு மருங்கை மேலைத்தெருவாகவும், மறு மருங்கைக் கீழைத்தெருவாகவும் மக்களுக்கே பகிர்ந்தளித்தாராம். நானூறு வருடங்களுக்கு முந்திய அந்தச் சரிதை சொல்லும் கற்சிலையே இப்போது நாய்கள் ஒண்ணுக்கிருக்க, பார்ப்பாரும் எடுப்பாரும் அற்று அய்தான செடிக்களுக்கிடையில் மறைந்து கிடக்கிறது. அந்தக் கற்சிலைதான் நீங்கள் அருகே பார்ப்பது.

கொங்கர் புளியங்குளத்தின் கீழைதெருவுக்கு அப்பால் ஒரு மலை நீண்டு கிடக்கிறது. அந்த மலையின் நடுவில் இருக்கும் குகைவெட்டில் அய்ம்பதுக்கும் அதிகமான சமணப் படுக்கைகள் இருக்கின்றன. வெளியே கொழுத்தும் வெயிலில் அந்தக் குகைக்குள் புகுந்த போதுதான் புரிந்தது ஏன் சமணர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தனர் என்று. உள்ளிருக்கும் போது அவ்வளவு இதமாக இருக்கிறது. சமணப் பள்ளிகள் இருக்கும் இடத்தின் வரவேற்பு மலையில் எப்போதும் மகாவீரர் செதுக்கப்பட்டிருப்பார்.
உள்ளே போனால் பெரிய கல் ஒன்று நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கும். மருந்து அரைப்பதற்கோ அல்லது அதில் குரு ஏறியிருந்து பிரசங்கம் பண்ணுவதற்கோ பயன் பட்டிருக்கலாம். இந்தக் கொங்கர்புளியங்குளத்தில் இருந்து கோட்டையூர் என்ற ஒரு குக்கிராமத்துக்குப் போய் கருப்பணசாமி கோயில் பார்த்தேன்.

சனி, ஜூலை 23, 2005

பிரமிள் கவிதைகள்: "பிய்த்து எடுத்தவை-1"

பிரமிள் கவிதைகளில் பிய்த்து எடுத்தவை:

விடிவு:
„...இருளின் சிறகைத் தின்னும் கிருமி...“
லௌகீகம்:
„...குடி தண்ணீர்
வாளி வீச்சில்
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல் தான்
அள்ளமுடியுமா?“


ஒளிக்கு ஓர் இரவு:


„...லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்
தாவிக்குதிக்கும்
காரியப் படகுகள்...“


காவியம்:
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

இரும்பின் இசை:
„கண்ணுக்குள் விரிகிறது கடல்...“

“...புரியாது கழிந்த பொய் நாட்கள் எல்லாம் உடைந்து குவிந்து பழங்கதையாக் கிடந்தன பார்...“
(இன்னும் வரமுடியும்)

மெட்டி ஒலி

மெட்டி ஒலி பற்றி தமிழ் உலகம் அதிகம் பேசிக்கொள்கிறது.நான் மெட்டி ஒலியின் எந்தத் தொடரும் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் எங்காவது விருந்தாகச் சென்ற வேளைகளில் அந்தத் தொடரின் ஆரம்பம் ஒரு நடன விளம்பரத்துடன் தொடங்குமல்லவா. அந்த நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. அந்த நாட்டிய தாரகையின் பெயர் தெரியவில்லை. மெட்டி ஒலியின் தொடக்கமும் முடிவும் எனக்கு அதுவே.

வெள்ளி, ஜூலை 22, 2005

கீழக் குயில்குடி


ஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும் 1876 ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப் பட்டது. பின்னர் 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கீழக் குயில்குடி என்ற அந்தச் சிற்றூர் மதுரையின் வடகீழ்திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது. அதிகமாக பிரான்மலைக் கள்ளர் இனத்தவர்கள் வாழும் இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். எந்த்க் குற்றச் செயல் நடந்தாலும் இந்தக் கீழக்குயில் குடி மக்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பெற்றோரிடமிருந்த் பிரித்தெடுக்கப் பட்டனர். குழந்தைகளுக்குக்கான கட்டாயப் பாடசாலை பிரசன்னம், அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காகவல்ல, மாறாக கண்காணிப்புக்கு மிக உகந்ததாக இருந்தது. கணக்கெடுப்புக்கு மிக உதவியளித்தது.

அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்து தம்மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிழம்பி மரணித்தவர்களை, தமது முன்னோர்களின் அவ்வகை எதிர்க்கும் பண்பினை இன்றும் கீழக்குடி மக்கள் நினைவு கூருகின்றனர். அவர்களது பெயர்களை மனங்களில் வைத்துப் பூசிக்கின்றனர். திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் புகுந்து வெற்றிகரமாகத் திருடிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற இறுமாப்பு அவர்களிடம் இன்றும் உண்டு.
திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறைத் திருட்டு ஒரு பெரிய அத்தியாயம் அதை நான் பின் எப்போதாவது எழுதலாம். ஆதி மதுரையின் முக்கிய காவல் துறையாகச் செயற்பட்ட இந்த மக்கள் காலனித்துவ ஆட்சியில் அந்தப் பரம்பரைப் பணி அற்றுப் போனது. அதனால் எழுந்த சமூகப் பிரச்சினைகள் பலகாலம் தொடந்தது சமுகவியல் வரலாறு. பலத்த காவலுக்கு மத்தியிலும் ஒரு சவாலுக்காக திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் திருடுவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்பதையே நிரூபணமாக்க முயன்றதன் விழைவுதான் இத் திருட்டு. திருடியவனைப் பிடிக்க முடியவில்லை. பகிரங்க மன்னிப்பு வழங்கப்படும், சரணடையுமாறு அறிவித்து, அதனால் சரணடைந்தவனை பின்னர் சிரச்சேதம் செய்தனராம். அந்தமான் தீவுக்குக் கடத்தப் பட்டுச் சிறைவைக்கப் பட்டபோதும் தப்பி வந்த கிழவர் இன்றும் உயிருடன் அங்கே வாழ்கிறார் கீழக்குயில் குடியில். இப்படியாக இந்த ஊரினதும் ஊரின் புதல்வர்களினதும் பெருமைசால் வரலாறுகளை எழுதிவைக்க நிறையவே உண்டு. நிற்க.

அந்தக் காலத்தில் வளரி அல்லது வளரித்தடி(Bumerang/Boomerang) என்ற ஆயுதமே அவர்களது பிரதான ஆயுமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக் கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு செய்யும் ஆயுத பூசையில் இந்த வளரி காணிக்கையாக்கப்படுகின்றது.
அவர்கள் இரகசியமாகப் பூஜிக்கும் ஒரு நிலவறை ஒன்றுக்குச் சென்ற நண்பர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் இன்று வரை தமது முன்னோருக்குக் காணிக்கை செலுத்திய இந்த வளரிகள் பெருங்குவியலாகக் கிடப்பதனையும்; இன்று இந்த ஆயுதம் வழக்கொழிந்து போனதால் அதன் செய்கையில் ஏற்பட்ட உரு மாற்றங்களையும் விபரித்தார்.

கீழக்குயில் குடியைச் சேர்ந்த புலவர் அரிச்சந்திரன். அவர் ஒரு அரிய பொக்கிஷம். ஒரு அற்புதமான கதை சொல்லி..சமண மலையின் பாறைகளில் சொக்கிக் கிடந்தபோது அந்தக் குன்றின் உச்சியில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகின்ற காட்சிகளின் விளிம்புநிலைச் சரிதைகளை விலாவாரியாகச் சொல்வதுமட்டுமல்ல அதன் அரசியலோடு சொல்லும் திறன் பெற்றவர் அவர். கீழக்குடி மக்களின் சமூகஎழுச்சி நாள் இன்றும் அங்கே கொண்டாடப் பெறுகின்றது. சமண மலையின் ஒரு புறத்தில் சமணர் குகை இருக்கின்றது. அதன் வாசலில் மகாவீரர் செதுக்கப்பட்டிருக்கின்றார். மேலே ஏறிச் சென்றால் அங்கே சமணப் பள்ளி இருந்ததற்கான தடயங்கள்; ஒரு கோவில் இருந்தற்கான அடையாளங்கள், மற்றும் நிறைய பாறையிற் செதுக்கிய சமண சிற்பங்கள் இருக்கின்றன. காற்றிலும் மழையிலும் பலநூற்றாண்டுகளாகச் சிதைந்தபடி.

சனி, ஜூலை 16, 2005

Race & Class ஏ. சிவானந்தனை உங்களுக்குத் தெரியுமா?


நான் விரும்பும் நிறவாதத்திற்கு எதிரான ஒரு போராளி, Race & Class சஞ்சிகையின் ஆசிரியர் A.சிவானந்தன் அவர்கள். சிவானந்தனின் பலவேறு பரிமாணங்களை, அவருடனான செவ்வியினூடாக தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பதிவுகள் சஞ்சிகையில் நண்பர் ஜமுனா ராஜேந்திரன் அவர்கள். அறுபதுகளில் இருந்து நிறவாத, இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் A. சிவானந்தன் லண்டனில் Institute of Race Relations இயக்குனராகவும் அதன் வெளியீடான Race & Class சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருப்பவர். நிறவாதம், இனவாதம், இங்கிலாந்தில் நிறவாத எதிர்ப்புப் போராட்டங்கள் போன்ற விடயங்களில் பல நல்ல நூல்களை எழுதியுள்ளார்.
"நினைவுகள் சாகும் வேளை..." (When memory dies)என்ற அவரது நாவல் சிவானந்தன் என்ற மனிதனுக்குள் இருந்த மகத்தனா படைப்பாளி, கதைசொல்லி ஒருவனை காலந்தாழ்த்தி இனங்காட்டியது.
இங்கிலாந்திலும் மற்றும் உலகநாடுகள் பலவற்றிலும் நிறவாத எதிர்ப்பு ஊர்வலங்களில், மகாநாடுகளில் A. சிவானந்தனின் குரல் சண்டமாருதமாக ஒலிக்கும். உலகமயமாக்கம், ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கும் நிறவாதம், இனவாதம் மற்றும் பல சமூகங்களின் இன்றைய இடப்பெயர்வு போன்றவற்றுகிடையிலான தொடர்புகள் பற்றிய அவரது பல கட்டுரைகள் முக்கியமானவை. இங்கிலாந்தை "land of thiefs" என்று குறிப்பிடுவார். ஐரோப்பிய நிறவாதத்திற்கெதிராக ஓங்கி ஒலிக்கின்ற இறுதிக்குரல் A. சிவானந்தன் என்று சொல்வார்கள்.மேலும் அறிய விரும்புவோருக்கு கீழே சில தொடுப்புக்கள்:
http://www.irr.org.uk/2004/october/ha000024.html

The Guardian Profile: Ambalavaner Sivanandan

வியாழன், ஜூலை 14, 2005

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும்

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும்

நடனப் பயிலகச் சிறுவர்களின் ஆண்டு விழா ஒன்றுக்கு என்னை ஒரு கௌரவ விருந்தினராக அழைத்துச் சிறப்புரையாற்றுமாறு கேட்டிருந்தார்கள். இப்படிச் சொல்வதால் நான் நாட்டியக்கலை பற்றி அறிந்தவனென்றோ அல்லது ஒரு நல்ல பேச்சாளர் என்றோ நினைத்துவிடாதீர்கள். அந்த நடனப் பள்ளி இயங்குவதற்கு வாடகை மண்டபம் ஒன்று பிடித்துக் கொடுத்ததுவே என்னை அவர்களின் அவ்வருடச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக்கியது. நடனமாடியவர்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளாகவே இருந்தார்கள். மண்பம் நிறைந்த கூட்டம். ஒரு முந்நூறு தொடக்கம் நானூறு பேர்கள், அனேகமாப் பெற்றோர்கள். இடம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவை ஏற்படாதிருக்க பெற்றோரின் அணுகுமுறை பற்றியும் இந்த சந்தர்ப்பத்தில் பேசலாமென்று திட்டமிட்டிருந்தேன்.
எனது பேச்சின் தொடக்கம் „கலீல் கிப்ரான்“ (Khalil Gibran) அவர்களின் புகழ்பெற்ற “ ...உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல...” ( “...Your children are not your children. They are the sons and daughters of Life's longing for itself. They come through you but not from you...” ) என்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு : ‘ என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள்’ என்பதே என்று பேச்சின் இடையில் சபையினர் சிரிக்கவேண்டுமே என்பதற்காக இப்படிச் சிலவற்றையும் எடுத்து விட்டிருந்தேன். என் பேச்சில் எனக்குத் திருப்திதான். ஆனால் தொடர்ந்து மேடையில் இருக்க முடியவில்லை. வீடியோ படப்பிடிப்புக்குப் பூட்டியிருந்த வெளிச்சப் போறணைகளால் நான் பாதி வெந்திருந்தேன். என் பேச்சு முடிய நான் கீழே இறங்கிவிட்டேன். கீழே இறங்கி வந்ததும் ஒரு வாட்டசாட்டமான கௌரவ மனிதர் ஒருவர் என் கைகளைப் பற்றி “ நான் உம்மோடு பேச வேண்டும்...வாரும் வெளியே போவோம்” என்றார். என்னைப் பாராட்டவே போகிறார் என்று நினைத்தபடி, சிரித்த முகத்துடன் சென்றேன். இல்லை அவர் என்னை இழுத்துச் சென்றிருக்க வேண்டும். மண்டபத்திற்கு வெளியேயும் ஆண்களின் கணிசமான கூட்டம். வெளியே வந்ததும் தூஷண வார்தைகளால் என்னை வையத் தொடங்கிவிட்டார். “ எங்க பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவர்கள்...?” என்று ஆரம்பித்து இலங்கையில் சிங்களவன் தமிழ்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறான் என்றெல்லாம் உரத்துக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் எங்கள் இருவரையும் சூழ பெருங்கூட்டம் கூடிவிட்டது. எனக்குத் தெரிந்தவர்களாய் யாரும் இல்லை. என் பக்கத்து நியாயத்தைப் பேசவும் பயந்தேன். எல்லோரும் எனக்கு அடிக்கத் தயாராகி விட்டார்கள். என்னை இழுத்து வந்தவர் சொல்வதின் நியாயம் தங்களுக்குப் புரிகின்றதாக எல்லோரும் வழிமொழிந்து நின்றனர். அவர் ஒரு கை வைத்துத் தொடக்கிவிட்டால் போதும், மிகுதி இருபது கைகளும் என்னைப் பதம் பார்க்கத் தயார். அந்த வேளையில் நாட்டியப் பயிலக ஆசிரியையின் கணவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து. “ இவரை நாங்கள் கூப்பிடாமலேயே தானாக வந்து மேடைஏறிவிட்டார் ” என்றும் சொல்லிவிட்டார். எனது நம்பிக்கைகள் சிதறின. எந்த வசைச் சொல்லும் எனக்குக் கோபமூட்டவில்லை. என் ரோச நரம்புகள் யாவும் செத்துக்கிடந்தன. என்னை அவர்கள் விடுவதாயும் இல்லை. ஓடவும் முடியாது. கூட்டத்தில் நின்ற ஒரு நியாயவாதி இப்படிக் கூறினனார்: “ எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பைத்தியக் காரர்கள் தான். ஆனால் இவருக்கு சற்று மிகை” என்ற கருத்துப்பட என்னைச் சுட்டிக் கூறினார். அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒருவர் சற்று தூரத்தே எம்மைக் கடந்து செல்லும் போது என்னை அடையாளங் கண்டவராய் “ என்ன பிரச்சினை ? “என்றார். இந்த நகரத்தின் ஒரு அறியப்பட்ட தமிழ்ப் புத்திஜீவி என்னை காப்பாற்றி விட்டார் என்றே நினைத்துக் கொண்டேன். அப்பாடா! என்னால் மூச்சு விட முடிந்தது.
“ நா ன் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றை மேடையில் சொன்னேன்...” என்று சொல்லி முடிக்கவில்லை. அந்தப் புத்திஜீவி என்னிடம் திருப்பிக் கேட்டார்:
“ உனக்கேன் தேவையற்ற வேலை....முஸ்லிம் பிரச்சினையை இங்கே எதற்குப் பேசினாய்?”

செவ்வாய், ஜூலை 12, 2005

ஊர்க்கட்டுப்பாடு: "தலித்துக்கள் செருப்பணியக்கூடாது!"

ஊர்க்கட்டுப்பாடு: "தலித்துக்கள் செருப்பணியக்கூடாது..."

சு.வெங்கடேசன் ........

மதுரைப்பகுதியில் சாதிய அரசியலுக்கு முக்கிய இடமாக உசிலம்பட்டியிருப்பது போல உசிலம்பட்டிக்கு தலைமை தாங்குபவர்கள் அதன் 24 ஆவது வார்டான கவணம்பட்டியை சேர்ந்த சிலர் தான். இங்கு இது நாள்வரை தலித்கள் செருப்பணிந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத கொடுமை ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 4-ம் தேதி சுரேஷ் என்ற இளைஞர் நிச்சயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி சிறிது தூரம் செருப்பு அணிந்து வந்ததாகச் சொல்லி சாதி வெறியர்களால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தன் பேரில் ஜனவரி 7-ம் தேதி உசிலை வட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் கிராமப் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு நடப்பது என்று இரு தரப்பும் சம்மதித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜனவரி 9ம் தேதி ஊர்க்கூட்டம் போடப்பட்டு காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தது தவறு, அதற்காக ஊர்க்காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க வேண்டும். அதுவரை தலித் மக்களின் வீடுகளைச் சுற்றி அவர்கள் மலம் கழிக்கும் இடங்களுக்குச் செல்லவிடாமல் முள்வேளி போட்டுத் தடுப்பது; தலித் மக்களுக்கு விவசாய வேலைகள் கொடுக்கக்கூடாது; ஏற்கனவே அவர்கள் குத்தகை விவசாயம் செய்த நிலங்களை எடுத்துக் கொள்வது; தலித் மக்களுக்கு சொசைட்டி பால் கொண்டு போய் விற்பனை செய்யக்கூடாது என்று பல முடிவுகள் எடுக்கப்பட்டு அன்று இரவே அனைத்தும் அமுல்படுத்தப்பட்டது. உசிலையில் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருந்த தலித் மாணவர்களை „உங்கள் ஊர்ப் பிரச்சினை முடிந்த பின் நீங்கள் பள்ளிக்கூடம் வந்தால் போதும்“ என்று பள்ளிக்கூட நிர்வாகமே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
மறுநாள் பிரச்சனை மார்க்சிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக நேரில் ஆய்வு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் குழு ஒன்று (கட்டுரையாளர் உள்பட) அங்கே சென்றது. நிலைமையை கண்டறிந்து வெளியேறும் பொழுது கிராமத்துக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு நீண்ட சர்சைகளுக்குப் பின் வெளியேறி வந்தோம். அதற்குப்பின் பிரச்சனையை வெளி உலகுக்கு கொண்டு வந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களே நேரடியாக பேசினர். உடனடியாக பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும்; வட்டாட்சியர் முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்; ஊர் கட்டுப்பாடு விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி உசிலை வட்டாட்சியர் அலுவலுகத்தின் முன் கட்சி போராட்டத்தை அறிவித்தது.
உசிலையின் முக்கிய பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு - சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பகுதி முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்கு அடுத்த நாள் மார்க்சிஸ்ட் கட்சி சாதி மோதலை தூண்டுகிறது எனச்சொல்லிப் பல அமைப்புகளின் பெயரில் உசிலை எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பதட்டமான நிலைமையை தணிக்க காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் பேசிய பொழுது, பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் போராட்டங்களை வாபஸ் பெற முடியாது என்ற நிலையெடுத்தோம். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தப்பகுதி தலைவர்களுக்கு வந்த நிர்பந்தங்களும் அச்சுறுத்தல்களும் மற்றும் மிகத் தரக்குறைவான பேச்சுக்களை அவர்கள் பொது இடங்களில் எப்படி சந்திக்க நேர்ந்தது என்பதையும் உசிலம்பட்டியைப் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான தலையீட்டால் ஜனவரி15ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. புதிய ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதில் கவணம்பட்டி கிராமத்தில் தலித் மக்கள் செருப்பு அணிந்து செல்வது, விவசாய கூலிகளுக்கு வேலை தருவது, நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குத்தகை விவசாயிகளிடம் மீண்டும் நிலத்தை வழங்குவது உள்ளிட்ட சரத்துக்களைக் கொண்ட புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
உசிலம்பட்டியின் சமூக வரலாற்றில் இந்த ஒப்பந்தம் ஒரு புதிய மைற்கல். நகராட்சி வார்டு பகுதியிலே செருப்பணிந்து செல்ல முடியாத கொடுமை நிலைநிறுத்தப்பட்டிருந்ததென்பது. கிராமப்பகுதிக் கொடுமைகளைப் பற்றி பேசமுடியாத அரணாக அவர்களுக்கு இருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் சாதி வெறியர்களின் தலையில் அடித்த ஆணிபோல அவர்களைத் துடிக்க வைத்தது. அந்த மொத்த எதிர்ப்பையும் மார்க்சிஸ்ட் கட்சி சந்தித்தது. அது மட்டுமல்ல இந்த ஒப்பந்தத்தில் பிற சரத்துக்களை அமுல்படுத்த அரசு முயற்சிக்காதபொழுது அதை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்தது. அதில் சில முன்னேற்றங்களை அடைய முடிந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்களை மார்க்சிஸ்ட் கட்சி வழங்கியது. பின்னர் மக்கள் கண்காணிப்பகம் வழங்கிய பொருட்களை ஊருக்குள் கொண்டு செல்ல காவல்துறை அனுமதி மறுத்தபொழுது அதையும் பிரித்து வழங்கும் பொறுப்பை ஏற்று மார்க்சிஸ்ட் கட்சியே செய்து முடித்தது.
கவணம்பட்டி பிரச்சனையில் மிக முக்கிய பங்காற்றியவர் தோழர் தர்மர். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கவணம்பட்டி ஊர்காரர். ஆனால் இப்பொழுது குடியிருப்பது மதுரை நகரத்தில். இவரது தோட்டத்தை தலித் ஒருவர் குத்தகைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊர் கட்டுப்பாட்டின் படி அந்த தலித்தை வெளியேற்ற வேண்டுமென்று கிராமத்தார் இவரிடம் வந்து பேசியதையொட்டியே கட்சியின் கவனத்திற்கு விசயம் முழுமையாக வந்தது. இந்த பிரச்சனையில் நிலத்திலிருந்து அவரை வெளியேற்ற முடியாது என்ற உறுதியான நிலையெடுத்தார். அதன்படி தலித் ஒருவரை நிலத்திருந்து வெளியேற்றாத ஒரே நபர் தோழர் தர்மர் மட்டும்தான். அதனால் ஊர்க் கட்டுப்பாட்டை மீறியதற்கான அபராதம் மற்றும் ஊர் தள்ளிவைப்பு என்பன செய்யப்பட்டதாக உறவினர்கள் மூலம் அறிவிக்கப்பட்டதுடன் அவருக்கு தொடர் நெருக்கடி, ஊருக்குள் வந்தால் தாக்கப்படுவார் என்ற மிரட்டல்கள் வன்தன. அவற்றறயெல்லாம் எதிர்கொள்ளத் தயார் எனச்சொல்லி கடைசிவரை தனது தோட்டத்தில் பாதிக்கப்பட்ட தலித்துக்கள் குளிக்கவும், காலைக்கடன் கழிக்கவும் அனுமதித்து மொத்த ஊரையும் எதிர்த்து உறுதியுடன் நின்றார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இதற்கு சில வாரத்திற்கு பின் தான் கீரிப்பட்டியில் தேர்தல் நடைபெற்றது. கவணப்பட்டி பிரச்சனையை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் கீரிப்பட்டியில் டி.பி.ஐ.வேட்பாளருக்கு வாக்களித்தவர்களை ஊர் விலக்கம் செய்தனர். செய்தி அறிந்தவுடன் தோழர் நன்மாறன் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியின் குழு கீரிப்பட்டிக்கு நேரடியாகச் சென்று நிலைமையை கண்டறிந்து, மாவட்ட அரசு நிர்வாகத்துடன் உடனடியான தலையீடு செய்தது. பிரச்சனை வெளி உலகில் கடுமையாகப் பலராலும் கண்டனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கம் போல் வட்டாட்சியர் ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தத்தில் முழுத்தன்மையும் நிறைவேற்ற தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் மார்க்சிஸ்ட் கட்சியர் சார்பில் தோழர்.ஜே.ஹேமச்சந்திரன் தலைமையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் திரண்ட ஆர்ப்பாட்டம் உசிலம்பட்டியில் நடத்தப்பட்டது. கவணம்பட்டி தலித்துக்கள் திரளாக இதில் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின் மார்க்சிஸ்ட் கட்சியை கண்டித்து ஒரு சாதிய அமைப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கட்சி தலைவர்களை எந்த வரைமுறைகளும் இல்லாமல் பேசியது, மார்க்சிஸ்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைத்தது.
தோழர்.செல்லக்கண்ணு, இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்; மதுரை புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர். இவர் கீரிப்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர். அங்கு நடைபெற்று வரும் தலித் மக்களின் மீதான கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர், கடந்த ஆண்டு மூன்று பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடத்தி தலித்தை பஞ்சாயத்துத் தலைவராக்கக் கோரி உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தது. அந்த உண்ணாவிரதத்தில் பங்கெடுத்து பேசினார் என்ற காரணத்திற்காக கீரிப்பட்டி கிராம ஊர்ப் பஞ்சாயத்து கூட்டத்திற்கு வந்து விளக்கம் கொடுக்கும்படி செல்லக்கண்ணுவுக்கு தாக்கீது அனுப்பினர். ஆனால் ஊர் பஞ்சாயத்திற்குப் போவதில்லை, அவர்கள் எடுக்கிற எந்த முடிவையும் சந்திப்பது என்ற கட்சியின் முடிவை துணிச்சலாக அமுல்படுத்திக் கொண்டு சகலவிதமான எதிர்ப்புகளையும் சவால்களையும் களத்தில் நின்று சந்தித்துக் கொண்டிருப்பவர் தோழர் செல்லக்கண்ணு.
அதே போன்று உசிலை ஒன்றியச் செயலாளர் ரமேஷ், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் இந்தப்பிரச்சனையில் இவர்கள் தொடர்ச்சியாக காட்டி வரும் உறுதியும் இவர்களது தொடர் அரசியல் நடவடிக்கையும் ஜாதி வெறியர்களுக்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணவே செய்கிறது. எனவே தான் இவர்களை நேரடியாகவும், குடும்பம் மற்றும் கிராமத்தின் மூலமும் சகல நெருக்கடிகளும் கொடுத்து வருகின்றனர். சொந்தக் கட்டிடமின்றி வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் காலி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றன. மறைமுகமான நெருக்கடிகளும், நேரடியான அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.
கீரிப்பட்டிப் பிரச்சனையைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் உள்ள இ.பெருமாள் பட்டியில் தலித்துகள் செருப்பணிந்து செல்லக்கூடாது என்ற விதியை, கேரளாவில் இருந்து ஊர் திருவிழாவுக்கு வந்த ஒரு தலித் மீறிவிட்டார் எனச் சொல்லித் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஊர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தலித்துகள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். பிரச்சனை மார்க்சிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்துடன் உசிலை ஒன்றியச் செயலர் தோழர் ரமேஷ் மற்றும் செல்லக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று பார்த்து வந்தனர். பத்திரிக்கைகளுக்கு செய்தி தரப்பட்டு, போராட்டத்தை கட்சி அறிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன், மாவட்ட செயலாளர் வெ.சுந்தரம் (மற்றும் கட்டுரையாளர்) உள்ளிட்ட ஒரு குழு நேரில் சென்று நிலைமையைப் பார்த்து வந்தது, அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தலித்துகள் செருப்பணிந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல சரத்துக்களைக்கொண்ட ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் புதிய தமிழகம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றினர். வழக்கம் போல் ஒப்பந்தத்தின் இதர சரத்துக்களை அமுல்படுத்தக் கோரி ஜூன் 6ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மேற்கண்ட பிரச்சனைகளில் எல்லாம் மதுரை நாடாளுமன்ற உறுப்பிநர் தோழர் பி.மோகனின் தலையீடு முக்கியமானது.
உசிலம்பட்டி பகுதியில் தத்களுக்கு எதிரான பிரச்சனைகளை கையிலெடுப்பது, போராடுவது, போன்றவற்றிலும் தத்களுக்கு எதிரான பிரச்சனையில் மிகமிகச்சிறிய அளவிலான வெற்றிகளையாவது பெறுவதிலும் மார்க்சிஸ்ட் கட்சி முக்கிய பங்காற்றிவருகிறது. வேறு எந்த ஒரு அமைப்பின் செயலுக்கும் இது குறைந்ததல்ல, அது மட்டுமல்ல, பிரச்சனையை மதுரையிலோ, சென்னையிலோ இருந்து கொண்டு பேசுவது எளிதானது. அந்த பிரச்சனைக்குரிய களமான உசிலையில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது, போராடுவது, இயக்கங்களை நடத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இன்றைக்கு வரை இந்தப்பணியை செய்து கொண்டிருக்கிற ஒரே அரசியல் அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான் என்பதை இங்கு அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறேன். இதன் பொருட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்கள் எத்தனையோ முறை வெட்டப்பட்டது என்பதும் கட்சி ஊழியர்கள் இன்றைக்கு வரை அச்சுறுத்தலுக்கும், தரக்குறைவான பேச்சுக்களுக்கும் உறவு ரீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பதும் முக்கியமானது.
ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி செய்துள்ள பணிகள், அதற்கு கிடைத்த பலன்கள் எல்லாம் மிகமிக சிறியவைகளே. கடினமான பாதையில், கண்பார்வைக்கு அப்பால் இருக்கிறதே சென்று சேரவேண்டிய இலக்கு. இந்த இலக்கினை அடைய, தலித் மக்களின் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து அமைப்புகளும், இயக்கங்களும் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது. சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை உக்கிரமாக நடத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே அதற்கு எதிரான போராட்ட சக்திகள் கொள்கை அடிப்படையில் பலப்படுத்தப்படுவதும், ஒன்றுபடுத்தப்படுவதும் மிக அவசியம்.

II
இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உமைகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் ஆதி தொட்டு இன்று வரை ஒரு தலித்தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர். கருமாத்தூர் கடசா நல்லகுரும்பன் கோயில் அய்யம் பிடுக்கி ஒரு தலித். மீனாட்சிபட்டி மதீச்சிய கருப்பு கோயில் பூசாரி தலித். வகூரணி பள்ளக்கருப்புப் கோயில் கொப்புற பூசாயும், கிடாவெட்டியும் கள்ளர்கள், கோடாங்கியும் உள் பூசாரியும் தலித்கள், இது தலித்தும் கள்ளரும் இணைந்து கும்பிடும் கோயில். கள்ளபட்டி வெண்டி கருப்புக்கோயில் பூசாரி தலித், கோடங்கி கள்ளர். புத்தூர் பூங்கொடி ஐய்யனார் கோயில் ஐய்யனார் தலித் மற்றும் கள்ளர்களின் குலதெய்வமாகும். எனவே இருவரும் பங்காளிகள் என்று இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. உடமையற்றவர்களாகிய இரண்டு சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளங்களே இவைகள்.
கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவு தொழினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்துமயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இதுமட்டுமல்ல இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகமுள்ள ஒரு இனக்குழுவாகவும் இதுவுள்ளது. இஸ்லாமியர்களுக்கே உரிய ஒரு பழக்கமான சுன்னத் செய்யும் பழக்கம். இப்பொழுது வரை கள்ளர் இனத்தில் நடைமுறையில் உள்ளது. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர வைத்து முகத்தை மூடி அழைத்துவரும் பழக்கம் சமீபகாலம் வரை இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இஸ்லாமியப் பெண்களைப் போலவே காதில் கொப்பு, குருத்தட்டு, முருக்குச்சி, கழுத்தில் தாக்குப் பதில் கருப்புபாசி (பொட்டுமணி) ஆகியவற்றை கள்ளர் இனப் பெண்கள் அணிகின்றனர். இதுமட்டுமின்றி பெண்ணுரிமைப் பார்வையில் முற்போக்கான பண்புகளை இந்த இனக்குழு இன்று வரை கொண்டுள்ளது. விவகாரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு, எந்தப் பெண்ணும் விவகாரத்துப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் மிக எளியது. அதுமட்டுமின்றி விவகாரத்திற்கான நஷ்ட ஈடும் உண்டு என்று, கள்ள நாட்டு சட்டங்களில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும் அறிய முடிகிறது. இதுமட்டுமின்றி, விவகாரத்து செய்து கொண்டவர்கள் மற்றும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இவ்வாறாக இந்து மதத்தின் சாயல்கள் பெரிய அளவு விழுந்து விடாத ஒரு இனக்குழுவாக போன நூற்றாண்டு வரை பிரமலைக் கள்ளர் இனக்குழு இருந்து வந்துள்ளது. இந்தக் காரணங்களால் தான் இந்தப்பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற கத்தோக கிருத்துவமதமானது தனது தேவாலயத்தில் ஒரு கிறித்துவ ஆணோ, பெண்ணோ, பிரமலைக் கள்ளர் இனத்தைச் சார்ந்த ஒரு ஆணையோ, பெண்ணையோ, திருமணம் முடித்துக் கொள்ள எந்த தடையும் விதிக்காமல் அனுமதி அளித்தது. அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
பிரிட்டிஸ் அரசு 19ஆம் நூற்றாண்டில் தனது நவீன காவல் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது ஏற்கனவே காவல் பணியில் இருந்த கள்ளர்களுக்கு எதிரான செயல்பாடாக அது அமைந்தது. கிராம காவல், குடிக்காவலை சட்ட விரோதமென அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடு ஏதுவுமில்லாமல் கள்ளர்கள் நிர்கதியாக்கப்பட்டனர். இந்நிலையில் மறைமுகமாக காவல் மற்றும் துப்புக்கூ முறை உருவானது. இதனை தடுக்க நெடுங்காலம் வரை பிட்டிஸாரால் முடியவில்லை. எனவே கள்ளர்களுக்கு எதிராக பிற விவசாய சாதியினை மோத விடுவதில் அரசு முக்கிய பங்காற்றியது. இதன் விளைவு தான் 1895ல் திண்டுக்கல் பகுதியில் நடந்த பண்டுக் கலவரம். பிரிட்டிஸாரின் ஆட்சி காலத்தில் மிக நீண்ட காலம் நடைபெற்ற கலவரம் இது. அதற்கு காரணம் அரசின் மறைமுக ஆதரவு இந்த கலவரத்தை நடத்தியவர்களுக்கு இருந்தது. இதன் மூலம் திண்டுக்கல் சமவெளிப் பகுதி முழுவதிலும் கள்ளர்கள் தங்களின் காவலை இழக்க நேட்டது.
இந்த கொள்கையின் தொடர்ச்சிதான் 1914ல் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம். ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்தாலே அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்ற கொடூரமான சட்டம். 12 வயது முதல் அவன் அரசின் குற்றவாளி பட்டியல் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருப்பான். கட்டாயக் காவல் முகாம்களில் குடியேற்றப்படுவான். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அனுப்பப்படுவான். கட்டாய இராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவான். எந்த நிமிடமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவான். இந்தியாவெங்கும் இந்த கொடூரமா ன அடக்குமுறைச்சட்டத்தில் சுமார் தொண்ணூறாயிரம் பேர் பதியப்பட்டார்கள் என்றால் அதில் பிரமலைக்கள்ளர்கள் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் ஆவர். அப்படி என்றால் இந்த அடக்குமுறையின் கொடுமை இந்தப்பகுதியில் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக ஜார்ஜ் ஜோசப், சுப்புராயன், ஜானகி அம்மாள், பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் இதில் முத்துராமலிங்கத் தேவர் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்தி பிட்டிஸாருக்கு எதிரான இயக்கங்களை நடத்தினார். நாட்டு விடுதலைக்குப்பின் , குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டபின் அவர் அரசியல் கட்சியான பார்வர்டு பிளாக்கை இந்த இனமக்கள் முழுமையாக தழுவினார். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை இடதுசாரி இயக்கம் செய்த போதிலும் அதில் தொடர் கவனம் செலுத்தவில்லை. துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி சட்டத்தை எதிர்த்துப் போராடினாலும் 1939ல் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபின் இச்சட்டத்தை நீக்க முடியாது என்று காங்கிரஸ் வெளிப்படையாக சொன்னபின் இந்த பகுதிக்குள் அந்த இயக்கத்தால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தேசிய இயக்கத்தின் தாக்கமோ, இடதுசாரி இயக்கத்தின் தாக்கமோ, திராவிட இயக்கத்தின் தாக்கமோ இல்லாத பகுதியாக இதுமாறியது. இந்தக் குறிப்பிட்ட இனமக்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குள் இருக்கும் நிலை உருவானது.
ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் இருக்குமோ, அந்த வடிவத்தில் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் அமையும். எனவே தான் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பயன்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அந்த குறிப்பிட்ட சாதியின் அடிப்படையிலான ஒற்றுமை உருவானது. இந்த ஒற்றமையானது, சட்டம் வாபஸ் பெற்றபின், அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய அரசியல் கட்சியின் அடித்தளமாக மாறியது. அந்த அரசியல் கட்சியானது 1950களுக்குப் பின் மேற்கொண்ட சாதிய பகைமையின் அடிப்படையிலான செயல்பாடு. இந்தப்பகுதியில் சாதீய மனோபாவத்தை, பெருமிதத்தை, வெறியை விஷம் போல ஏற்ற வாய்ப்பாக அமைந்தது. அப்படி ஏற்றப்பட்டதன் முற்றிய வடிவங்கள் தான் இன்று நாம் காணுகிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம்.
இதற்கான பொருளியல் காரணிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக 1950களில் கட்டப்பட்ட வைகை அணையால் இந்த பகுதியில் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் செல்லப்பட்டி ஒன்றியத்தில் கணிசமான பிரமலைக் கள்ளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். நிரந்தர வருமானம், தொழில் என்று எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறைமாறி உடமையாளர்களாக பரிமாணம் அடைந்தனர்.
அதுவரை விவசாயத் தொழிலை பார்த்திராத ஒரு சமூகம், அரசால் விவசாயத்திற்குள் புகுத்தி விடும் பொழுது இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. இதனை மேலூர் கள்ளர்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது, உசிலம்பட்டிப் பிரமலைக் கள்ளர்களின் வாழ்விம் பார்க்க முடிகிறது.
அதுவரை அரசுக்கு வரிகட்டாத, சட்ட ஒழுங்கைக் கடைபிடிக்காத, நில அளவைக்குக் கூட அனுமதி அளிக்காத பகுதியாக இருந்த மேலூரில் பெரியார் அணை கட்டப்பட்ட தண்ணீர் வந்தவுடன், ஒவ்வொரு ஊராக அரசுக்கு கட்டுப்படுவோம், சட்ட ஒழுங்கை மதிப்போம் வரிகட்டுவோம், என்று எழுதி வாங்கி தண்ணீர் கொடுத்தது பிரிட்டிஸ் அரசு. இதன் விளைவாக பத்தே ஆண்டுகளில் விவசாய சாதியினராக மேலூர் கள்ளர்கள் மாறினர். போலீஸ்துறை சாதிக்காததை பொதுப்பணித்துறை சாதித்தது என பிரிட்டிசார் புகழ்ந்தனர். இதனால் தான் குற்றப்பரம்பரை சட்டம் இங்கு அமுல்படுத்தப்படவில்லை. இது இரண்டு விளைவுகளை உருவாக்கியது. ஒன்று நில உடமையாளனாக மாறி அதை காப்பாற்ற அரசின் மேலதிகாரத்தை ஏற்று முறையாக வரி செலுத்தி சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டது. இரண்டு, உடமையாளராக மாறியவுடன் தான் சமூகத்தின் மேல் சாதி என்ற மனோநிலையும், பெருமிதமும் தனக்கு கீழ் உள்ளவர்களின் மீதான கட்டுப்பாடற்ற தீண்டாமையை நிலை நிறுத்துவது. இதற்கான உதாரணங்கள் தான். அம்பேத்கார் நடத்திய பத்திரிக்கையில் 1940 களில் மேலூர் பகுதி பற்றி வந்த எண்ணற்ற கடிதங்கள் முதல் மேலவளவு வரை. இதே அனுபவம் தான் 1950களுக்குப்பின் இன்றுவரை உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. உடமையற்ற வர்க்கமாக இருந்தபொழுது கள்ளர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் நிலவிய சமூக உறவுகள், கள்ளர் சமூகம் உடமைவர்க்கமாக மாறியபின் தலைகீழானது.
கடந்த காலங்களில் நடந்துள்ள இந்த சமூக அரசியல், பொருளியல் காரணங்கள் இந்தப்பகுதியில் சாதீயக் கருத்துக்கள் கெட்டிப்படவும் விஷம் போல் உச்சத்திற்கு ஏறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் கொடூரத்தை த்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

III

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் 17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக முடியாததற்கான முக்கிய காரணம் அரசின் கண்ணோட்டமே. இங்கு தலைவித்தாடும் அப்பட்டமான சாதி வெறியையும், தீண்டாமையையும் சட்டத்தின் துணை கொண்டு ஒடுக்கும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அரசோ, தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவி விலகலை ஏற்பது என்கிற எந்திரகதியான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டத்தின் தலையீட்டால் தலித்துகள் அதிகாரத்தை பெறுவதற்கு துணை நிற்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது. இங்கு பஞ்சாயத்துத் தலைவர் பதிவு நிரப்பப்படாமல் இருப்பதென்பது வெறுமனே அக்கிராமங்களின் பிரச்சனையல்ல. பரஸ்பரம் மதித்து இணங்கி வாழும் நாகரீக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், ஜனநாயகத்தையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் சாதி வெறிக்கு கீழ்படுத்தும் போக்காகும். இந்த போக்கிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணம் துளி கூட அரசுக்குக் கிடையாது.
அதற்கு காரணம், இந்த பிரச்சனையில் கை வைத்தால் தமது பிற்படுத்தப்பட்டோன் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என்பதனால் இருபெரும் திராவிடக்கட்சிகளும் இதில் தலையீடு செய்ய மறுக்கின்றன. இவர்களின் கையில் அரசு இருக்கும் காலங்களில் அரசின் நடவடிக்கை மொண்ணையாக்கப்படுகிறது. இந்த மூன்று பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கான பிரதான குற்றவாளியாக மாநில அரசே இருக்கிறது.
இந்த பஞ்சாயத்துக்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் இந்த தேர்தலை நடத்தவிடாமல் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். வழக்கம் போல் மௌன சாட்சிகளாக உறைந்து கிடப்பவர்களும் உள்ளனர். சாதிவெறி, அதனடிப்படையிலான அரசியல் லாபம், பதவி காண்டிராக்ட் போன்ற பல காரணங்களுக்காக இவர்கள் தலித் தலைவராக்கப்படுவதற்கு எதிராக உள்ளனர். அரசின் நோக்கம் இவர்களின் நோக்கத்துடன் அடிப்படையில் ஒன்றாக இருப்பதால் இவர்களால் எதையும் துணிந்து செய்ய முடிகிறது. முறையாக தேர்தல் நடைபெற்ற பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட சராசரி நிதியை விட இந்த மூன்று பஞ்சாயத்துகளுக்கும் கூடுதல் நிதியைப் பெற முடிகிறது. இந்த மூன்று பஞ்சாயத்துகளில் இருந்து வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கும் தலித்துக்களையெல்லாம், தொடர்ச்சியாக கண்காணித்து வாக்காளர்பட்டியல் இருந்து நீக்க முடிகிறது. பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒரு தலித்தை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து இராஜிநாமா செய்ய வைக்க முடிகிறது. அவ்வாறு இராஜிநாமா செய்யும்பொழுது „இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கியது தவறு. அவ்வாறு ஒதுக்கி சமூக அமைதியை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று“, அவரை வைத்தே ‚அபிடவிட்டு' தாக்கல் செய்ய முடிகிறது.
இவ்வாறு தலித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாமல் தடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் இந்தப் பகுதியை சேர்ந்த ஒரு அமைப்பு மதுரையின் மையப்பகுதியில் இயங்கும் ஒரு அந்நிய நிறுவன அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது. அந்த நிறுவனத்துடன் பல தன்னார்வக் குழுக்களும் சில தலித் அமைப்புகளும் தொடர்பு வைத்துள்ளன. அவர்களுக்கு எல்லாமே ‚புராஜெக்ட்' தான். பிரச்சனைகள் கலவரமாக்கப்படுகின்றன. கலவரங்கள் ஆவணமாக்கப்படுகின்றன. ஆவணங்கள் காசாக்கப்படுகின்றன. பெரியாரியத்தையும், மார்க்சீயத்தையும் மட்டைக்கு இரண்டு கீற்றாகப் பிரித்துப் பேசும் சில குத்தகை அறிவுஜீவிகள் இதுபற்றி மட்டும் வாய் திறப்பதேயில்லை. இங்கு உழைக்கும் வர்க்கத்தை சாதியைக் கொண்டு நிரந்தரமாக பிரிக்கும் சதிக்கு, சாதியைக் கடந்த ஒற்றுமையுடன் செயல்படும் தேசத் துரோகிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்திற்குப் பின்னால் சாதி வெறியும், மேலாதிக்கத் திமிரும் இருக்கிறது. அதே சாதீய பார்வையுடன் செயல்படும் அரசு நிறுவனம் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கிகளின் அடிப்படையிலான அரசியல் இருக்கிறது. அந்நிய நிறுவனங்களின் கைகளும் இருக்கிறது.
இந்த மொத்த உண்மைகளையும் கணக்கில் கொண்டுதான். இந்த பிரச்சனைக்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். இவைகளின் மையப்புள்ளியாக இருக்கிற சாதி வெறிக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும் எதிரான கருத்துப்பிரச்சாரம் இந்தப் பகுதியில் வலிமையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அதே நேரத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டு சக்கரங்களின் மேலேறி தான் ஜனநாயகத் தேர் இந்த பகுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இன்று இந்த இரண்டு பணிகளும் மிகமிக குறைவாகவே நடக்கிறது. தாங்கள் தான் தலித்துகளுக்கு ‚அத்தாரட்டி' என்று ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தினால் அதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான பங்களிப்பாக இருக்கும்.
இந்த பிரச்சனையையொட்டி ‚உசிலம்பட்டி வட்டாரத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்' என்று ஒரு சில தலித் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியும், பேசியும் வருகின்றன.
இந்த அணுகுமுறை எதிகளை வலுப்படுத்தவே கூடுதல் வாய்ப்பினை அளிக்கும். பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துக்கள் இருக்கும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, பொட்டுலுபட்டி என்ற இரண்டு பஞ்சாயத்திலும் தத் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் பிரமலைக்கள்ளர்கள் தான். அதே போல தத்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலும் நடைபெற்றுள்ளது. அதே போன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோதில் நாயக்கனூர் பஞ்சாயத்தில் தலித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தத்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலும் நடைபெற்றுள்ளது.
இந்த உண்மைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த பகுதி மக்கள் மத்தியில் ஜனநாயக எண்ணத்தையும், சாதி வெறிக்கு எதிரான பிரச்சாரத்தையும், தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களையும் தொடர்ச்சியாக கொண்டு செல்வதை விட்டுவிட்டு உசிலம்பட்டி வட்டாரத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று சொல்வது என்பது. இந்தப் பகுதியில் இயங்கும் சாதி அமைப்புகளுக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் அதிர்ஷ்டத்தையே அளிக்கும். அவர்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மிண்டும் சாதி ரீதியாக ஒருமைப்படுத்திக் கொள்வதற்கு இதைவிட அவர்களுக்கு பயன்படப்போவது எதுவுமில்லை. எனவே இந்த கோக்கையானது தீண்டாமை கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட கோக்கையல்ல. மாறாக தங்களின் வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்ட கோக்கையாகும். தங்களின் வாக்கு வங்கியை சாதீ ரீதியாக ஸ்திரப்படுத்த நினைப்பவர்கள். அதன் இன்னொரு பகுதியாக எதியின் வாக்கு வங்கியையும் சாதிய ரீதியாக ஸ்திரப்படுத்துகிறார்கள் இது தங்களின் நலனுக்கான அரசியலே தவிர, ஒடுக்கப்பட்டோன் நலனுக்கான அரசியல் அல்ல.
இந்தப்பகுதியில் சாதிய அரசியில் நடத்தி வந்தவர்களை குறி வைத்துப் பிடித்துள்ளனர் இந்துத்துவா வாதிகள். அப்படிப்பட்டவர்களை கொண்டு புதியதொரு பார்வட்பிளாக் அமைப்பையே உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தான். கடந்த ஆண்டு மதுரையில் ஷதிசூல் தீக்ஷா' வை இந்துத்துவா வாதிகள் நடத்தினர். அதில் வந்து பங்கேற்ற பிரவீன் தொகாடியா கோப்பாளையம் என்ற பெயரை தேவர்பாளையம் என்று மாற்ற வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் இறங்குவோம் என்று அறிவித்தார். தொடர்ச்சியாக இந்த அமைப்புக்கு நீதி ஆதாரங்கள் கணக்கின்றி வருவதை இதன் செயல்பாடுகளில் இருந்து பார்க்க முடிகிறது. கவணம்பட்டி தீண்டாமை பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்ட பொழுது இந்த அமைப்பின் சார்பில் தான் மார்க்சிஸ்ட் கட்சியையும் பி.மோகன்,எம்.பி.யையும் தாக்கி மதுரை நகரமெங்கும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஒரு பக்கம் சாதிய அமைப்புகளின் புகலிடமாக உள்ள பகுதியில், இப்பொழுது மதவெறியர்கள் குறிவைத்து உள்ளே நுழைகின்றனர். பிரச்சனைகள் வெவ்வேறு கோணங்களில் மேலும் மேலும் தீவிரமடைகிறது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது போலவே, சமீபத்தில் மதுரை - திருவேடகம் கல்லூரியில் இந்துத்துவா வாதிகள் பயிற்சி முகாம் என்ற பெயரில் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியை கொடுத்துள்ளனர். இவர்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. ஆனால் ஆயுத தடைச்சட்டத்தின் படியோ, குண்டர் சட்டத்தின் படியோ நடவடிக்கை எடுக்க வேண்டிய இவர்கள் மீது இன்று வரை எந்த சட்டத்தின் படியும் நடவடிக்கை இல்லை, எந்தவித விசாரணையும் இல்லை. அரசு சாதி விசயத்திலும், மத விசயத்திலும் பெரும்பான்மை வாதத்தை தான் கடைபிடிக்கிறது. எனவே சாதீயம், மதவாதம், இவற்றை நிலைநிறுத்தி குளிர்காய்கிற அரசு அதிகாரம் ஆகியவற்றிக்கு எதிரான போராட்டங்களை சகலமுனைகளிலும் கட்டவிழ்ந்து விடுவதே இன்றைய நமது தேவை.
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடுகிற அதே நேரத்தில் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. வர்க்க ஒடுக்குமுறையும் சாதீய ஒடுக்குமுறையும் இணைந்து நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய சமூகத்தில் இரண்டுக்கும் எதிரான போராட்டமே மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தும். ஒன்றைவிடுத்து ஒன்றை எதிர்ப்பதென்பது, எதியை புந்து கொள்ளாத பலஹீனத்தின் வெளிப்பாடாகவே முடியும். எனவே உண்மையான மக்கள் விடுதலையை நோக்கி சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அதனால்தான் பொருளியல் கோக்கைக்காக சகலபகுதி மக்களையும் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அதே நேரத்தில் கள்ளர் சீரமைப்பு துறையை மூடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டபொழுதும், கள்ளர் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் கொண்டுவர அரசு முயற்சி எடுத்த பொழுதும் அதற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதி வெறியர்களை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த அடிப்படை நிலைபாட்டை புந்து கொள்ôத தத் அமைப்புகளை சேர்ந்த சிலர் தங்களுடைய ஒருபக்க நிலைப்பாட்டை மட்டுமே அளவுகோலாக வைத்து மார்க்சிஸ்டுகளை அளக்க நினைக்கிறார்கள். அதனடிப்படையிலே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அளவுகோலையை குறையுடையதாக வைத்தக்கொண்டு அளப்பது அறடிவார்ந்த செயலல்ல என்பதை மட்டும் நாம் சொல்வைப்போம்.
தீண்டாமைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும், சாதீயத்துக்கு எதிரான கருத்துப்பிரச்சாரத்தையும் தீவிரமாக்கும் அதே நேரத்தில் நிலம் சார்ந்த கோரிக்கை தான் தலித் மக்களின் விடுதலைக்கான திறவுகோல். எனவே நிலத்தை பகிர்ந்தளிக்கக் கோரும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைகிற பொழுதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் முழு அர்த்தம் பெறும். மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திபுராவிலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் தீண்டாமைக்கு எதிரான பாய்சல் வேக சமூக முன்னேற்றத்தை இடது சாகளால் இந்திய மண்ணில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்ட நடவடிக்கைகளின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப முடிந்திருக்கிறது. இந்த அரசியல் பாதையே சாதீய சக்திகளை வீழ்த்தும், சுயநல சக்திகளை பின்னுக்குத் தள்ளும், தீண்டாமைக்கு எதிரான முழுமையான வெற்றியை நோக்கி சமூகத்தை கொண்டு செல்லும்.

நன்றி:புதுவிசை, கலாசாரக் காலாண்டிதழ், ஆசிரியர்: ஆதவன்