ஞாயிறு, செப்டம்பர் 25, 2005

கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை

கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார். இன்று அவரது இறுதிக் கிரிகைகள் இலண்டனில் நடைபெற்றது. நீண்ட நாட்களாகவே சிறுநீரகக் கோளாறினால் அவதிபட்டு சில நாட்களாக நினைவிழந்த நிலையில், அவரது மகள் மாதவி சிவலீலன் அவர்களது தயவில் இருந்தார்.
60 , 70 களில் ஈழத்தின் பல கவியரங்குகளில் கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மரபு வழிக் கவிதைகளைப் பலர் கேட்டிருப்பீர்கள். „ஈழத்து இசை நாடக வரலாறு“, „வட இலங்கை நாட்டார் அரங்கு“, „மலையகக் கூத்து மரபு“ போன்றவை அவரது அண்மைய நூல்கள்.

Neela Padmanabhan


நீல பத்மநாபன்/Neela Padmanabhan, திருவனந்தபுரம்

சில தொடுப்புக்கள்:

1."தமிழ் இலக்கிய வானில் ஓர் ஒளிரும் தாரகை" -நீல பத்மநாபன் பற்றி சாஷா ஏபலிங் அவர்கள் (ஜெர்மன் மொழியில்) எழுதியது. (Herr Sascha Ebeling über Herrn Neela Padmanabhan)

2."Pearls and Pebbles": A Collection of Essays by Neela Padmanabhan

3.Foundation of SAARC writers and Literature/சார்க் நாடுகளின் எழுத்தாளர் மற்றும் இலக்கிய அறக்கட்டளை

சனி, செப்டம்பர் 24, 2005

பழமுதிர் சோலை

மதுரையில் இருந்து வடகிழக்கில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அழகர் கோவில் இருக்கிறது. சரித்திரப் பிரியர்களுக்கு இந்த அழகர் கோவில் ஒரு பெரிய பொக்கிஷம். மேலதிக தகவல்களுக்கு பேராசிரியர் தொ. பரமசிவனிடம் கேளுங்கள். அழகர் கோவில் தாண்டி அதற்கும் கொஞ்சம் மேலே போனால் பழமுதிர்சோலை. பழமுதிர்ச்சோலைக்குச் செல்லும் வழியில் வழிப்பறிக்கென்றே விசேட பயிற்சி பெற்ற வானரங்களை அங்கே காணலாம்.இந்தியா முழுவதும் நான் கண்ட குரங்குகளில் பழமுதிர்சோலைவாழ் அந்த வழிப்பறி வீரர்கள்-வீராங்கனைகளுக்கு முதல் பரிசு கொடுக்கலாம். பக்தர்களிடம் பொரி பறித்து கீழ்த்தாடைகளுக்குள் தேக்கிவைத்துக் கொள்வதால் அல்லது தொடர்ந்து ஒரே வகை உணவினால் ஏற்பட்டிருக்கும் ஒரு வகை நோயோ தெரியவில்லை.அனேக குரங்குகளின் கீழ்த் தாடையின் இரண்டு புறமும் பருத்துக் கிடக்கின்றன. தேக்கிய பொரியை இரைமீட்க முடியுமோ தெரியவில்லை.


பழம் உதிர் சோலையில் ஒரு பக்த மனோபலம்!!!

திங்கள், செப்டம்பர் 19, 2005

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல!
நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு வழக்கு. வழக்காளியான தமிழர் சொல்கிறார் இது என் குழந்தை என்று. இந்த வழக்கின் எதிரியான குழந்தையின் வெள்ளைக்காரத் தாய் சொல்கிறார்: „ கனம் கோட்டார் அவர்களே! இக் குழந்தை சட்டரீதியாக இவர் குழந்தையாயினும் உயிரியல் ரீதியாக இது இவர் குழந்தை இல்லை; இது எனது ஆபிரிக்கக் கணவருக்கும் எனக்கும் பிறந்த பிள்ளை. குழந்தையின் தலைமுடி, மூக்கு, உதடு கள் மற்றும் உடற் தோற்றத்தைப் பாருங்கள்...“
ஆனால் தமிழர் விடவில்லை. அப்படிப் பெரிய வேறுபாடு எங்களுக்கும் ஆபிரிக்கருக்கும் இல்லை. எங்கள் குடும்பத்திலேயே என் குழந்தை போன்றவர்கள் இருக்கின்றனர்.... எங்கள் ஊரில் இருக்கின்றனர், நாட்டில் இருக்கின்றனர். DNA சோதனைக்கு நான் உடன்படப் போவதில்லை. இது என் குழந்தை தான்...என் குழந்தையே தான்.“ வழக்கின் மீதான தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2005

ஒரு மாதக் குறிப்பு

அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தின் மியாமியில் இருக்கும் குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் சுமார் 8 மாதங்களுக்கு மேலாகச் சிறையிருக்கும் எனது உறவினர் ஒருவர் வாசிக்கத் தமிழ் நூல்கள் கேட்டிருந்தார்.
ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் மட்டுமே அவர் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தின் இருபுற அட்டைகளும் கிழிக்கப்பட்ட பின்னர்தான் (அவை முகாமுக்கு உள்ளே ஆயுதமாகப் பாவிக்கப்படக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாக) புத்தகம் கையளிக்கப்படும். இதனால் பெரிய புத்தகங்கள் அனுப்புவதே நல்லது என்று தீர்மானித்து சுந்தரராமசாமியின் “காகங்கள்” சிறுகதைத் தொகுப்பு முதலிலும், பின்னர் “ஆண்கள் , பெண்கள், குழந்தைகள்” என்ற நாவலும் அனுப்பப்பட்டது. அனுப்பும் போதே அட்டையக் கிழித்து விட்டு அனுப்பினால் அஞ்சல் செலவாது குறையும் என்று இரண்டாவது நூல் அனுப்பும் போது அட்டைகளை அகற்றி விட்டேன். மனம் கொஞ்சம் பதைக்கத்தான் செய்தது.

இப்போது கல்கியின் “பொன்னியின் செல்வன்” மற்றும் சாண்டில்யன் எழுதிய சரித்திரப் பாணி நாவல்கள் வேண்டுமாம். அதுமட்டுமல்ல தடியருக்கு பெரியாரின் சிந்தனைகளும் வேண்டுமாம். ஐயையோ அவை பாகங்களாக வந்தவை என்றதும்...உள்ளிருக்கும் சகவாசிகளின் ஐந்து பெயர்களைத் தந்துள்ளார். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒரே மாதத்தில் அனுப்பும் படி. இனும் 1 வருடமாத் இருப்பார் போலும். உள்ளிருக்கும் போது சிறு சிறு வேலைகள் செய்யலாம்...(துப்புரவு செய்தல், கண்டீன் உதவியாள்...இப்படியாக) நாளொன்றுக்கு 1 டாலர் கிடைக்கிறது...தொலைபேசிச் செலவுக்குச் சரியாகிவிடுகிறது என்கிறார்.

ஜக்கடையா-Yakkadaya

இலங்கையில் „யக்கடையா“ ; „மறுசீறா“(„சீனா“) போன்ற தனிமனிதர்களின் காரணப் பெயர்களும் இடுகுறிப் பெயர்களூம் அவர்களது வரலாறு காரணமாக முழு இலங்கையிலும் கொடூரமான நபர்களைச் சுட்டுவதற்கு ஆகுபெயராகிப் போயின. „யக்கடையா„ என்பது „இரும்பு மனிதன்“ என்ற பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. சந்தனக் கட்டை வீரப்பன்; மான் சிங்; பூலாந்தேவி போன்ற பெயர்களுடன் இந்த „ஜக்கடையா“ என்ற பெயரையும் ஒப்பிடலாம். அண்மையில் இந்த யக்கடையாவின் சரிதை இலங்கை ஆங்கிலத் தினசரி ஒன்றில் வெளியாகியிருந்தது. யக்கடையாவுக்கு இப்போது 103 வயது. இலங்கையின் ஜனாதிபதியை ஒரு முறை சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலில் கொழும்புக்கு வந்துள்ளதாக அவனது கதையை எழுதும் பத்திரிகையாளர் குறிப்பிடுகின்றார். தன் கிராமத்துச் சமகாலப் பள்ளிமாணவி ஒருத்தி, இரண்டாம் உலகயுத்த காலத்தின் போது இலங்கையில் நிலைகொண்டிருந்த சில ஆபிரிக்கச் சிப்பாயிகளினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், ஆத்திரமடைந்த ஜக்கடையா 96 ஆபிரிக்காவைச் சேர்ந்த சிப்பாய்களையும் ஒரு ஆங்கில அதிகாரியையும் கொலை செய்திருக்கின்றான். இதைவிட ஒரு தமிழ் அஞ்சல் அதிபரையும் கொன்றிருக்கின்றான். இந்தியாவில் பலகாலம் மறைவாக இருந்துவிட்டு இப்போ இலங்கையில் வசித்து வருகின்றானாம். ஆங்கிலக் காலனித்துவதுகுட்பட்ட ஆபிரிக்காவைச் சேர்ந்த நாடுகளின் சிப்பாய்கள் 1930களின் இறுதியில் இலங்கையின் வடபகுதியில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிறையவே இருந்தனர் என்று முதியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பத்மநாப ஐயர்

புத்தகமே சாலத் தொகு...பொருள்தெரியும்!

பத்மநாப ஐயரை எண்பதுகளுக்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவரது இலக்கிய சேவையென்பது அறுபதுகளிலேயே அறியப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. எண்பதுகளுக்கு முன்னான இருபது வருட ஈழத்து இலக்கியக் காலம் என்பதே பல வகைகளில் ஆர்வத்திற்கும் ஆராய்விற்கும் உரியதாகும்.
சுதந்திர இலங்கையின் ஆரம்ப கால இலக்கியங்களின் கணிசமான பகுதி பாரதீயம், திராவிடவியம், காந்தீயம் என்பவற்றின் சாயல்களாகவும் இருக்கின்றன. பின்னர் ஐம்பதுகளில் ஏற்பட்ட திடீர் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாகவும் அதன் செல்திசையினைத் தீர்மானிக்கும் காரணிகளையும் கொண்டிருந்தன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கமும் அதன் செல்வாக்கின் ஆரம்பமும் , S.W.R.D.பண்டார நாயக்காவின் புதிய கட்சியின் தோற்றமும், S.J.V.செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபிதமும் இலங்கையின் படித்த மேல்தட்டு வர்க்க, நடுத்தட்டு வர்க்க மக்களுக்கிடையில் நிலவிய இலக்கியநுகர்வு இலக்கியவாக்கம் என்பன முற்போக்கு பிற்போக்கு கன்னைகள் என்ற புதிய வகைப்படுத்தல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாது „தேசிய இலக்கியம்“ என்ற பிரக்ஞையின் தோற்றமும் அதன் அரசியற் பலமும் „தென்னிந்திய எழுத்துக்களே உன்னதமானவை“ என்ற ஒரு கருத்துருவை சந்தேகிக்க வைத்தது. திடீரென நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய இலக்கியங்களின் இறக்குமதித் தடையினால் தரமான தமிழ் இலக்கிய சஞ்சிகைகள், சிறுபத்திரிகைகள் இலங்கையில் கிடைப்பது மிக அரிதாகியது. இதுவரை இருந்து வந்த இலக்கிய ஒருவழிப்பாதை அப்போது தடைபட்டுப் போனது.
இந்தக்காலத்தில் தான் பத்மநாப ஐயர் போன்றவர்களின் இலக்கியப் பிரவேசமும் இன்றியமையாத அவர்களது சேவையும் பெரிதெனெக் கொள்ளப்படுகின்றன. தடைபட்ட ஒருவழிப்பாதை என்பது பத்மநாப ஐயர் போன்றவர்களால் இலக்கியப் பாலமாக ஈடு செய்யப்பட்டு இலங்கை இந்தியத் தமிழ் இலக்கியப் பரிவர்த்தனையை எள்ளுப்பொரி அளவிலேனும் நிவர்த்தி செய்தது. பத்மநாபஅய்யர் அவர்கள் புகழ்பெற்ற தரமான தெனிந்திய இலக்கிய சஞ்சிகைகளின் (மாத்தளை என்ற மத்திய இலங்கை நகரமொன்றில்) சந்தாதாரராக இருந்தாரென்பதும் அவற்றில் ஒரு பிரதி மட்டும் என்றில்லாது பல பிரதிகளை தருவித்து அவற்றை இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள நண்பர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இலவசமாகச் சேர்ப்பிப்பாரென்றும் , தரமான நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றைக் கண்டவுடன் (முன்பின் யோசிக்காது) பல பிரதிகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்குவாரென்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இலங்கையில் வெளியாகிய நூல்களை இந்தியாவிற்குக் காவிச் செல்வதும் பின்னர் அங்கிருந்து பல நல்ல நூல்களை இலங்கைக்கு எடுத்து வந்து நண்பர்களுக்கு மத்தியில் பெரும்பாலும் இலவசமாக விநியோகிப்பதும் பத்மநாப அய்யரவர்கள் அடிக்கடி செய்தவையாம்.
„நல்லன எழுதுவதல்ல, அவற்றை மக்களிடம் கொண்டுசென்று கொடுப்பதுவே மகத்தான இலக்கிய சேவை“ என்ற பொருள்பட விபுலானந்த அடிகள் ஒரு கட்டுரையில் எழுதுகின்றார். இவ்வாறான சிறுதுளிச் சேவைகள் மூலம் இலங்கையின் பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்களது ஆக்கங்கள் இந்தியாவில் இருக்கின்ற சமகாலப் படைப்பாளிகளுக்கு அறிமுகமாயின, தெரியவந்தன. அவர்கள் எழுத்துக்களைத் தேடிப்படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாசிப்பின் தேர்வு மற்றும் தரம் பற்றிய பிரேமையும் இந்திய தமிழ் எழுத்தார்களுக்கிடையில் உருவாகியது. இப்படியாக இன்னும் பல்வேறு வகைகளில் ஒரு இலக்கிய நிலையமாக அறியப்பட்ட பத்மநாப அய்யரை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த அண்டையும் எனக்குக் கிடைக்கவில்லை. அவரது பெயரரையும் அறிய வாய்ப்பிருக்கவில்லை. அதற்கும் காரணமுண்டு. அப்பொழுதெல்லாம் கிராமங்கள் , அதற்குப் பின்னான பொழுதுகளைப் போல் ஒரு கடுகதியில் நகரப்போலி மயமாக்கப் படவில்லை. தமிழ் இலக்கியம் இலங்கையின் பண்டிதர்கள், தமிழாசிரியர்களிடமிருந்து அரசாங்க எழுதுவிஞைஞர்களிடமும் முற்போக்கு இளைஞர்களுக்கும் கைமாறிக் கொண்டிருந்து. அத்தோடு இதனை இப்படிப் பொதுமைப் படுத்தமுடியாதபடி பெரிய கல்லூரிகளும் அக் கல்லூரிகள் சார்ந்து புகழடைந்த நகரங்களும் தான் இலக்கிய வரலாற்றின் தரவுகளாக இருந்திருக்கின்றன. நகரமையச் சமாச்சாரம் தான் இலக்கியமாகவும் காணப்பட்டது. குக்கிராமங்களுக்குள் இந்த இலக்கிய வாடைகள் சென்றடையவில்லை. ஈழநாடு என்ற தினசரி வடமாகாணத்தில் கணிசமான அளவிலும், வீரகேசரி, தினகரன் போன்றவை முழு இலங்கையளவிலும் விற்பனையாகியது. நான் வாழ்ந்த கிராமத்திலும் மூன்று அல்லது நான்கு பேர் தினசரி பத்திரிகைச் சந்தாதாரராக இருந்திருக்கின்றனர். சுதந்திரன் என்ற தமிழரசுக் கட்சியின் பத்திரிகை வாரந்தோறும் அஞ்சல் மூலம் இரண்டொருவருக்குக் கிடைத்ததையும் அறிவேன். மேலும் கிராமப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு இந்த இலக்கிய விடயமெல்லாம் தெரியாத விசயமாக இருந்திருக்கிறது. நாங்கள் பலகாலம் வரை பன்னிரு திருமுறைகள், கம்பராமாயணம்-சுந்தரகாண்டம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் இலக்கியவழி போன்றவற்றைக்க் கற்றுக்கொண்டிருந்தோம். இலக்கியத்தின் புதிய வரவுகள்; புதிய பெயர்கள் எங்களை அணுகவில்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் பாடநூல்கள் பழந் தமிழ் இலக்கியத்தையும் புதிய இலக்கியங்களையும் சம அளவில் கொண்டிருந்தன. மகாகவி; மாயகோவ்ஸ்கி போன்ற பெயர்கள் பள்ளிச் சிறுவருக்கும் தெரியவந்தது.
பத்மநாப ஐயர் மத்திய இலங்கையின் மாத்தளையில் இருந்து பின் வட இலங்கை யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் குடும்பத்துடன் வசித்திருந்திருக்கின்றார். அப்போதெல்லாம் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ; இலக்கிய ஆக்கதாரர்கள் பலர் இவருக்கு அயலவர்களாக இருந்திருக்கின்றனர். என்ன அவசரத்திற்கு வந்திருக்கின்றோம்…மனைவி என்ன அலுவல் சொல்லி விட்டாள்’ என்பதெல்லாம் மறந்து கலை இலக்கியக் காரரின் வீடுகளில் பலமணி நேரம் இலக்கிய „வாய் பார்த்திருந்த“ இந்த பத்மநாபன் பற்றி நண்பர்கள் கூறும் போது பத்மநாபஅய்யர் மீதும் அவரது துணைவி, காலஞ்சென்ற சொர்ணவல்லி அவர்கள் மீதும் பரிதாபம் தோன்றும். தொண்ணூறுகளில் பத்மநாபஅய்யர் இங்கிலாந்து வந்து விட்டார். இலண்டனில் நான் அவரைச் சந்தித்த போது ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களில் நூற்றுக்கும் அதிகமாகத் தேட்டித் திரட்டி யாருக்குக் கொடுக்கலாம் என்று வாடியபடி காத்திருந்தார். அவருடைய அரசியல் சார்புநிலையில் உடன்படாத போதும் அவரது நட்புப் பெரியது.