வெள்ளி, நவம்பர் 10, 2006

Nadarajah Raviraj

கொலையில் கண்விழிக்கும் எங்கள் தேசம்!

செங்கள்ளுச் சித்தன்
இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி பாராளுமன்ற அங்கத்தவர் நடராசா ரவிராஜ் அவர்கள் இன்று,10.11.2006 அதிகாலை அவரது வதிவிடத்துக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். இன்றுகாலை தொலைக்காட்சி ஒன்றுக்குச் செவ்வி வழங்கியபின் நாரஹென்பிட்டியில் இருக்கும் தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவேளை முற்பகல் சுமார் 9:30 மணியளவில் நாரஹென்பிட்டி மன்னிங்நகரத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வழக்கறிஞரான என். ரவிராஜ் ஆரம்ப காலங்களில் மனித உரிமைக்கான அமைப்புக்களில் செயலாற்றியவர். தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாண மாநகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டபோது உயிருடன் விட்டுவைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேயராக நடராசா ரவிராஜ் அவர்கள் கடமையாற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அதன் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களை யாப்பிற்கு அப்பாலான வகையில் புறந்தள்ளுவதற்கு ரவிராஜ் அவர்களே காரணமாக இருந்தார் என்று கூறப்படுகின்றது. பாரளுமன்ற அங்கதவராகத் தெரிவு செய்யப்பட்டபின் ரவிராஜ் அவர்கள் சிங்களத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றி தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மொழியில் சொல்பவராக அறியப்பட்டிருந்தார். அண்மையில் இலங்கையில் கொழும்பு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் மிக மோசமாக நடைபெறும் ஆட்கடத்தல், காணாமற்போகச்செய்தல், கொலைகள் , கடத்திச் சென்று பெருந்தொகைப் பணம் பறித்தல் போன்றவை மூலம் தமிழர்கள் மீதான கொடுமைகள் கேட்பாரற்றுத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு எதிரான, பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயுமான போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் ரவிராஜ் அவர்கள்.இவ்வாறான ஜனநாயக முறையிலான போராளிகளை, அறிவுஜீவிகளை, அரசியலாளர்களை, சமாதான முயற்சியாளர்களை , பிற கருத்துடையோரை, பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொல்வதென்பது இலங்கையில் ஏட்டிக்குப் போட்டியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜே. ஆர். ஜெயவர்தன, பிரேமதாசா காலப் பதினேழு வருட ஆட்சியில் அரசியல் எதிரிகள் வேட்டையாடப்பட்டபோது தன்னை ஒரு மனித உரிமைப் போராளியாக இனங்காட்டிக் கொண்ட ரவிராஜ் அவர்கள் தனது துணிச்சலை வளர்த்துக் கொண்டவராகவே காணப்பட்டார். கொல்பவர்கள் ஓய்வதாகவில்லை. பிணந்தின்னும் பேயரசுகள் மக்களைத் தேடி அழிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகான குண்டுவீச்சு, வாகரை கதிராவெளிக் கொலைகள் என்று தொடர்கிறது அரசின் வெளிப்படையான பயங்கரவாதம். பாரளுமன்ற அங்கத்தவரான ரவிராஜ் அவர்கள் கொல்லப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.
„differences must be determined by the ballots not by the bullets.”