ஞாயிறு, பிப்ரவரி 10, 2008

லண்டன் தலித் மாநாடு

லண்டன் தலித் மாநாடு

த ஜெயபாலன்

பெப்ரவரி 16ம் 17ம் திகதிகளில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலித் மாநாடு லண்டனில் இடம்பெற உள்ளது. சென்ற ஆண்டு ஒக்ரோபரில் தலித் மேம்பாட்டு முன்னணியினரால் பரிஸில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின் தொடர்ச்சியாக லண்டன் தலித் மாநாடு இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டுவரும் செயற்பாட்டாளர்களும் கல்வியியலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கை சாதிய எதிர்ப்பு அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்ற நடேசன் இரவீந்திரன், இந்திய சாதிய எதிர்ப்பு அரசியலில் மிகவும் அறியப்பட்ட ஆ மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் பரிஸில் இருந்து இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாஸ், அதன் மற்றுமொரு உறுப்பினர் அசுரா மற்றும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்பி வரும் புஸ்பராணி அ+கியோரும் பேச்சாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இனப்பிரச்சினை என்பது 60 ஆண்டுகளே பழமையானது என்றும் சாதிய ஒடுக்குமுறை நூற்றாண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்டுள்ள மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் தலித் மக்களின் பிரச்சினையும் ஆராயப்பட வேண்டும் எனத் தெரிவித்து உள்ளனர். தலித் மக்களுடைய அரசியல் ஜனநாயக பொருளாதார உரிமைகள், தமிழ் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லாதது வெட்கத்திற்குரியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருநாள் இடம்பெறும் இந்நிகழ்வில் முதல்நாள் ஆ மார்க்ஸ் - ‘தலித்தியம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்’, புஸ்பராணி - ‘சாதியமும் பெண்களும்’, நடேசன் இரவீந்திரன் - ‘வடக்கு கிழக்கு சாதியமைப்பு ஒரு சமகாலப் பார்வை’, ஆதவன் தீட்சண்யா - ‘தலித்தியமும் இலக்கியமும்’, மறுநாள் தேவதாஸ் - ‘இலங்கை தலித் சமூக அரசியலும் அதன் எதிர்காலமும்’ ஆகிய தலைப்புகளில் உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற உள்ளது. மூன்று அமர்வுகளாக நிகழும் இம்மாநாட்டிற்கு தேவதாஸ், ச வேலு, அசுரா ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

மாநாட்டின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

2 nd Dalit Coference - London

16th Feb 2008 - 10:00 am - 17:00 pm & 17th Feb 2008 - 15:00 pm - 20:00 pm
Quackers House Bush Road, Wanstead, London, E11 3AU
(Nearest Tube: Leytonstone - Central Line (5 min walk)
Buses : 257, W19, 145, 66 (Greenman Roundabout)

source: http://thesamnet.co.uk