வியாழன், மே 29, 2008

உத்தப்புரம்: 16 உடைகற்களும், 1600 போலீசாரும்

சு.வெங்கடேசன்


இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, வாங்கிக்கொண்டு சட்டைக் காலரை தூக்கிவிட்டபடி அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள். கைவசம் 10 லட்சம் ரூபாயும், 30 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களும் இருப்பதை மறைத்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் கலர் புகைப்படம் ஒன்று நாளைய பத்திரிகையில் வெளிவரும்.

ஆனால் தலித் மக்களோ சுற்றிலும் நிகழும் பதற்றம் காரணமாக ஊரைவிட்டு வெளியேற முடியாமல் ஊருக்குள்ளே இருந்தபடி தோழர்களையும் கட்சி அலுவலகத்தையும் தொடர்புகொண்டு சதா பேசி தங்களுக்கான நம்பிக்கையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய போராட்டக் களத்தில் கடைசி வரிசையில் நிற்கிற ஒருவனாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கான வாய்ப்போ மனநிலையோ ஏற்படுவதில்லை. ஆனால் ஊடகங்கள் மலையடிவாரவாசிகளுக்காக வடிக்கின்ற கண்ணீரும், அரங்கேற்றுகிற வஞ்சகமும் பொறுக்கமுடியாமல் எப்படியாவது இதை உடனடியாக எழுதவேண்டும் என்ற முடிவோடு எழுதுகிறேன்.

உத்தப்புரம், அங்குள்ள தலித்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, அதற்கெதிரான போராட்டம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதிலிருந்து அவர்கள் பெற்ற படிப்பினை. இன்று புதுநம்பிக்கையோடு மீண்டும் எழுச்சிபெற்று அவர்கள் நடத்தும் போராட்டம் என அனைத்தையும் பற்றிய சிறு குறிப்பே இக்கட்டுரை.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராம ஊராட்சி உத்தப்புரம். இங்கு வாழும் சமூகத்தினுடைய குடும்பங்களின் எண்ணிக்கை: கொடிக்கால் பிள்ளைமார்-450, பள்ளர்-650, கவுண்டர்-150, பறையர்-25, மூப்பர்-75, அருந்ததியர்-30, பிரமலைக்கள்ளர்-5, நாயக்கர்-30, ஆசாரி-3, வண்ணார்-20, மருத்துவர்-6, செட்டியார்-5, சைவப்பிள்ளைமார்-1. பிரதான அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக, புதிய தமிழகம், பாரதீய ஜனதாக்கட்சி.

இக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அதன் பொருட்டு நிகழும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அந்த வாய்ப்பை சாதிக்கலவரமாக மாற்றும் ஆதிக்க சாதிகள் என பல்லாண்டுகளாக பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தபடி இருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் தலித்மக்கள் மீது நடந்த தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து நடந்த மோதல்கள் பற்றிய விபரங்களும் என் கைவசம் இல்லை. மக்களின் நினைவுப் பகுதியிலிருந்து மட்டுமே அதன் தன்மையை உணர முடிகிறது. ஆனால் 1989ல் நடந்ததைப் பற்றி விரிவாக எழுத முடியும்.

1

உத்தப்புரம் தலித் மக்கள் கும்பிடும் சாமி கருப்பசாமி. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பிடும் சாமி முத்தாலம்மன். தலித்துகள் தங்களது சாமியான கருப்பசாமியை கும்பிடும் முன் தங்களின் முன்னோர்கள் நட்டு வைத்த அரசமரத்தைக் கும்பிட்டு மூன்று முறை சுற்றி வந்து பின்னர்தான் கருப்பசாமியை வணங்கச் செல்வது வழக்கம். அந்த அரசமரம் பிள்ளைமார்களின் கோவிலான முத்தாலம்மன் கோவிலுக்கு நேர் எதிரே சில பத்தடி தூரத்தில் உள்ளது. தலித் மக்கள் தங்களின் கோவிலுக்கு முன்னால் வந்து சாமி கும்பிட்டு, சாமியாடி கொட்டு கொட்டிச் செல்வதைப் பொறுக்கமுடியாமல், இந்த அரசமரத்திற்கு நீங்கள் வரக்கூடாது, வந்தால் அடி உதைதான் கிடைக்கும் என பிள்ளைமார்கள் களத்தில் இறங்கினர்.

தலித் மக்கள் தங்களின் வழி வழி வந்த உரிமைக்காகப் போராடினர். போராட்டத்தின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமானது. இறுதியில் 1989ம் ஆண்டின் துவக்கத்தில் அது மோதலாக உருமாறியது. இந்த மோதலின் காரணமாக காவல்துறையால் 131 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானவர்கள் தலித்களே. ஆனால் மோதலுக்குப் பின் பிரச்சனைகளில் தலையிட்டு நியாயம் வழங்கவேண்டிய அரசு நிர்வாகம் சாதியை ஆடையாகவும் ஆன்மாகவும் கொண்டு செயல்பட்டதால், தலித்களின் உரிமைக்கான இந்த சிறு எதிர்ப்பை பொறுக்க முடியாமல் சுத்துப்பட்டு கிராமத்தில் இருந்த ஆதிக்கசாதிகளெல்லாம் தோள்தட்டிக்கொண்டு களத்திலே இறங்கின. தலித்களில் முக்கியமானவர்கள் எல்லாம் கைதான பின்னணியில் அதிகாரிகளும் ஆதிக்க சாதியினரும் சேர்ந்து தயாரித்த ஒப்பந்தம்தான் இன்றைக்கு “மகத்தான சாசனமாக” சாதி இந்துக்களாலும் சில அதிகாரிகளாலும் கொண்டாடப்படும் 1989ம் ஆண்டு ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்த ஷரத்துகள் சொல்லும் உண்மை

1. பரம்பரை பரம்பரையாக தலித்கள் சாமி கும்பிட்டு வந்த அரசமரத்தடியில் அவர்கள் பிரவேசிக்க எந்த பாத்தியதையும் இல்லையென அறிவித்தது. அதாவது எங்களது சாமிக்கு முன் நீயோ உனது சாமியோ வரவோ நிற்கவோ கூடாது என்ற சாதித் திமிர் சட்டமானது.

2. தலித்களின் கோவிலான கருப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து அரசமரத்தை உள்ளடக்கி தலித்கள் பிரவேசிக்க முடியாதவண்ணம் சுவர் எழுப்பப்பட்டது. அதுவரை தலித்கள் தங்கள் குலதெய்வத்தை வணங்கச் சென்று கொண்டிருந்த பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.

3. பிள்ளைமார் தரப்பில் யாராவது இறந்தால் சுடுகாட்டிற்குச் செல்ல வேறுபாதை இருந்தும் தலித் பகுதி வழியாக வந்து அந்த பாதையின் உரிமையை நிலைநாட்டி, நீ சாமி கும்பிட தோரணங்கள் கட்டியிருந்தாலும், எங்கள் சவம் வரும்பொழுது அதை எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் எங்களது சவம் தீட்டாகிவிடும் என்று தங்கள் சவத்தின் புணிதத்தை நிலைநாட்டியது.

ஏறக்குறைய கிராமத்தின் பொதுப்பயன்பாட்டில் தலித்களுக்கு இருந்த அனைத்து பொது உரிமைகளையும் நிராகரித்து எழுதப்பட்ட ஒப்பந்தமானது முழுக்க முழுக்க ஆதிக்க சாதிகளின் கட்டப்பஞ்சாயத்து மூலமே உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தலித்கள் சார்பில் கையெழுத்திட்ட 5 பேரில் மூவர் இறந்துவிட்டனர். ஒருவர் மிகவும் வயோதிக நிலையில் உள்ளார். மீதமிருக்கும் ஒருவர்தான் இப்பொழுது தலித் மக்களின் ஊர்ப்பெரியவராக இருக்கிற கே.பொன்னையா. இவரிடம் ஒப்பந்தம் பற்றி கேட்டபொழுது “எங்கள் ஐந்துபேரையும் தூக்கிக்கொண்டு போய் சினிமா தியேட்டர்ல வெச்சு, கையெழுத்து போடாவிட்டால் இங்கிருந்து உயிரோடு போகமுடியாது என மிரட்டி கையெழுத்து வாங்கினர். சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்கள் எல்லாம் கூடியிருந்த சபையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார்.


(இடிக்கப்படாத உத்தபுரம் சுவர் முன்பு சு.வெங்கடேசன், பிரகாஷ் காரத், என்.வரதராஜன், உ.ரா.வரதராஜன்)
இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்தார்கள் என்று 23 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அதில் 22 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும்தான் தலித் (எண்:15 இளையசாமி S/o சமையன், மல்லப்புரம்). இவர் காங்கிரஸ் கட்சியின் அந்தப் பகுதியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் தலைவர். அவர்களுடனேயே எப்போதும் அனுசரணையாக இருப்பவர். எனவே அவர் அந்த கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பஞ்சாயத்தார்களிடம் இதைத் தவிர தலித்களுக்கு வேறென்ன தீர்ப்பு கிடைத்திருக்கும்? தங்களது சாதி ஆதிக்கத்தையே தீர்ப்பென எழுதி தலித்களிடம் அவர்கள் கையெழுத்தைப் பெற்றனர்.

தீர்ப்புரையின் கடைசியில் “இந்த ஒப்பந்தத்தின் நகல்களை இரு தரப்பினரும் வைத்துக் கொள்வதென்றும், மூலப்பத்திரம் போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்” எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதை உருவாக்கியதில் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் பங்கு என்ன? என்று விசாரித்தபொழுது உண்மையான முடிச்சு அவிழ்ந்தது. மாவட்டத்தின் உயர் அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் இந்த ஒப்பந்த ஷரத்துகள் உருவாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர்தான் தியேட்டரில் நாட்டுக்கூட்டம் போட்டு தலித்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும், இந்த முழு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இன்று பணி ஒய்வில் இருக்கிற அரசு ஊழியர் ஒருவர் தனது சங்க உணர்வின் மிச்சமிருக்கும் கடமைகளில் ஒன்றெனக் கருதி இப்பொழுது சொல்லித் தொலைத்தார்.தலித்களின் பயன்பாட்டு உரிமைகள் அனைத்தையும் மறுத்து உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தலித்கள் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவரை அரசமரத்தை ஒட்டி பஸ் நிறுத்தம் இருந்தது. அது அங்கேயே இருக்குமானால் பஸ்சை விட்டும் இறங்கும் தலித்கள் அரசமரப் பகுதிக்கு வர நேரிடும். இது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்பதால் அரசமரத்து பஸ் நிறுத்தம் ஒரு பர்லாங் தூரத்திற்கு தள்ளிக் கொண்டு போகப்பட்டது. இந்நிலையில் 2.8.89ம் ஆண்டு புது பஸ் டிரைவர் ஒருவர் பழைய இடத்தில் பஸ்சை நிறுத்தியதும் உள்ளே இருந்த தலித் ஒருவர் இறங்கி நடக்க அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைமார்கள் அந்த தலித்தின் மீது கல்வீசி தாக்குதலைத் தொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மோதல் உருவானது. இத்தோடு இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று சுத்துப்பட்டு கிராமத்தின் ஆதிக்க சக்திகள் எல்லாம் உத்தப்புரம் தலித்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். பெரும் மோதலில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்கள் கொல்லப்பட்டனர். மூன்று தலித் பெண்கள் படுகாயமடைந்தனர். பெரும் அழிவும் தீ வைப்பும் நடந்து முடிந்தது. தங்களது உரிமையை மறுத்துப் போடப்பட்ட ஒப்பந்தம், அதை மீற முயன்றால் பெரும் பொருட்சேதம் என தலித்கள் துயரத்தின் பாதளத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் தலித்களின் அரசமர வழிபாட்டு உரிமையையும் கோவிலுக்கு செல்லும் பாதையையும் மறித்து சுவர் எழுப்பியவர்கள் இப்பொழுது தலித்கள் நடந்து செல்லும் மூன்று பொதுப் பாதைகளை அடைத்து சுமார் 600 மீட்டருக்கு பெரும் தடுப்புச் சுவரை எழுப்பினர். எங்கள் பகுதியில் உன் காலடி கூட படக்கூடாது என தலித்களை துண்டாக்கினர். அவர்களின் கருத்தை அப்படியே ஏற்ற அரசு, பொதுத்தண்ணீர் தொட்டியிலிருந்து பிரித்து தலித்களுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்தது. ஊர்ப் பொது பள்ளிக்கூடத்திலிருந்து தலித் மாணவர்களுக்கென்று தனியாக பிரித்து ஒரு தலித் பள்ளிக்கூடத்தை அமைத்தது. பால்வாடியை தனியாக்கியது. ரேசன்கடையைப் பிரித்தது. இவைகளை எல்லாம் ஏற்க முடியாது என்று சொல்லவோ, புகார் செய்யவோ தலித்களுக்கு நாதியில்லை. ஏனென்றால் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பிள்ளைமார் ஒருவரின் வீட்டிலே இருந்தது. அந்தத் தெருவில் தலித்கள் அதுவரை நடந்ததே இல்லை.

இந்தப் பெரும் கலவரம், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இந்த கலவரத்தைத் தொடர்ந்து அரசு அப்பட்டமாக எடுத்த சாதி இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, இவையனைத்தும் தலித்களை மீடேற முடியா நிலைக்குத் தள்ளியது. வழிபாட்டு உரிமையை 89ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பெயரைச் சொல்லி உருவாக்கப்பட்ட சுவர் அடைத்து நின்றது. பொதுப்பாதையை 4 தலித்களைப் பலியெடுத்த வெற்றியின் பெயரால் ஆதிக்கசாதிகளால் கட்டியெழுப்பப்பட்ட நெடுஞ்சுவர் மறைத்து நின்றது. தலித்களின் குழந்தைகள் மட்டுமே படிக்க பள்ளி உருவாக்கப்பட்டு விட்டது. பிற சாதிக்காரனுக்கு பக்கத்தில் உட்காராமல், அவனைத் தொடாமல், அவனோடு பேசாமல், அவனோடு உணவையோ, உணர்வையோ பகிர்ந்து கொள்ளாமலே உத்தப்புரம் தலித் குழந்தைகள் கடந்த 19 ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து சாதீயத்தின் அருவருப்பு மிக்க துண்டாடலை பள்ளிக்கூடத்தின் வழியிலேயே அனுபவித்து வெளியேறுகின்றனர்.

2

மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 பிப்ரவரி 9ம் தேதியன்று 47 மையங்களில் கள ஆய்வு நடத்தியது. எந்தெந்த வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிப்.22ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஆய்வின் விவரங்கள் வெளியிடப்பட்டது. மார்ச் 25ம் தேதி பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக வெளியுலகின் பார்வைக்கு தெரியாமல் இருந்த உத்தப்புரம் “தீண்டாமைச்சுவர்” இந்த கள ஆய்வில் தான் தெரியவந்தது. அதன்பின் ஓரிரு ஊடகங்கள் அதன்மீது கவனம் கொள்ளத் துவங்கின. ஏப்.17ம் தேதி அந்த சுவற்றின் மீது மின்சார வேலி அமைக்கப்பட்டதாக இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. அன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். உடனே மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அந்த மின்வேலியை ஒரு பர்லாங் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

அது ஏதோ, வயரிங் சம்பந்தப்பட்ட பிரச்சனைபோல அரசு சட்டமன்றத்தில் பதில் சொன்னது. அந்த மின்வேலி அமைக்கப்பட்டது உண்மையா? அப்படியென்றால் யாரால், ஏன் அமைக்கப்பட்டது? அப்படியொரு தடுப்புச்சுவர் எதனால் இருக்கிறது? அதை ஏன் தாண்ட வேண்டுமென்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். தாண்டவே விடக்கூடாது என்று ஒரு பகுதியினர் ஏன் துடிக்கின்றனர் என்பதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேலியைத் தூக்கி வெளியில் போடு என்பதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கியது. மறுநாள் ஏப்.19 அன்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக சுவர் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் பலனேதும் இல்லை. ஏப்.29ம் தேதி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாயிரம் பேர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உடனடியாக சுவரை இடி.. அல்லது நாங்கள் இடிப்போம் என்று முழங்கியது. அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் காதிலே விழவில்லை. பின்னர் தீண்டாமைச் சுவரை பார்த்து காறி உமிழ மே 7ம் தேதி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் வருகிறார் என ஏப்.30ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு சென்னையிலே இருக்கிற தலைமைச் செயலகத்திற்கு கேட்டதன் விளைவு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் காதிலும் விழுந்தது. வேறு வழியேயில்லாமல் மே 2ம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதாவது பிரச்சனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு 67 நாட்களுக்குப் பிறகுதான் அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை மே 2 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே நடந்தது. அதுவும் கோட்டாட்சியர்தான் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அதில் உட்காரவில்லை. அவருக்கு “நிறைய்ய்ய......” பணிகள் இருந்தன.

இறுதியாக பிரகாஷ்காரத் வருவதற்கு முன் “ஏதாவது செய்” என்ற மேலிட உத்தரவிற்குப் பணிந்து மே 5ம் தேதி உத்தப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் எழுந்தருளினார். கையில் பலவகையான வரைபடத்தை வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி சுற்றி வந்தார். ஊர் இரண்டாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதை சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டுமென்று நடுவீதியில் நின்று தீவிரமாக யோசித்தார். பல போஸில் அவரது புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியானது. இறுதியில் மே 6 அன்று காலை சுமார் 7.45 மணியளவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பஞ்சாத்தார்களால் முடிவு செய்யப்பட்டு, சாதிவெறியர்களால் சட்டத்திற்கு எதிராக கட்டப்பட்ட 600 மீட்டர் சுவரில் 4 மீட்டர் அகலம் கொண்ட ஒரு இடத்தைத் தேர்வுசெய்து (அவர்கள் தேர்வு செய்த இடத்தில் சுவரின் உயரம் 3 அடி மட்டும்தான். மீத உயரம் சில ஆண்டுகளுக்கு முன் தானாகவே இடிந்துவிட்டது.)

(எழுச்சியுடன் உத்தப்புரம் தலித் மக்கள்)

சுமார் 1600 போலீசார் பாதுகாத்து நிற்க அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் சின்னஞ்சிறு சுவற்றின் 16 உடை கற்களை பெயர்த்து எடுத்தது அரசு. ஒரு கல்லுக்கு 100 போலீசார் வீதம் 1600 போலீசாரும் சாலையெங்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சுவற்றின் ஒருபுறம் பிள்ளைமார்களின் பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் சாலை, சுவற்றின் மறுபுறம் தலித்கள் குடியிருக்கும் பகுதி - இரண்டையும் இணைத்து 50 மீட்டர் நீளத்திற்கு செம்மண் கொட்டி சாலையமைக்கப்பட்டது.

மறுநாள் பிரகாஷ்காரத் வந்தது உத்தப்புரத்து தீண்டாமைக் கொடுமையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் உலகறியச் செய்தது. இந்தச் சின்னஞ்சிறிய சுவர் உடைப்புக்கு எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என பேசியவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்ததைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். எடுக்கப்பட்ட 16 கற்களின் வலிமை அதன்பின் தான் உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.

302 ரேசன் கார்டுகளை தூக்கியெறிந்துவிட்டு “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...” என்று கத்திக் கொண்டே ஊரைவிட்டு வெளியேறி தாழையூத்து மலையடிவாரத்திற்கு ஓடின 200 குடும்பங்கள். வடக்குத்தெரு மொத்தமும் காலியானது. அவர்களின் கதறல் ஒரே நாளில் எட்டுத்திக்கும் கேட்டது. 19 ஆண்டுகளாக தொண்டை கிழிய, நரம்பு விடைக்க கத்தியும் யார் காதுக்கும் கேட்காமலிருக்க இது அடக்கப்பட்ட சாதியின் குரலல்ல. இது ஆதிக்கசாதியின் குரல். அதற்கேயுரிய வலிமையோடு அது எதிரொலித்தது.

எங்கெங்கிருந்தெல்லாமோ ஆதரவு சக்திகள் திரண்டுவந்தனர். ஆதரிக்க வேண்டிய தலித் தலைவர்களே எதிர்த்து அறிக்கைவிட இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆண்டப் பரம்பரைகளின் குரல். எனவே எட்டுத்திக்கும் ஆதரவு பெருகி வந்தது. ஆட்சியர் அலுவலகம் கிடுகிடுத்தது. காரை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டார் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு தேசிய நெடுஞ்சாலையில், அங்கிருந்து உத்தப்புரத்திற்கு வழிநெடுக நிறுத்தப்பட்ட போலீசின் நடுவே, மாவட்ட மற்றும் ஊரக நெடுஞ்சாலையில், அங்கிருந்து மெட்டல் சாலை கூட இல்லாத மோசமான குண்டும் குழியுமான பகுதியில் ஒரு கிலோமீட்டர், பின் அங்கிருந்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையென நடந்தே ஒன்றரை கிலோமீட்டர் வியர்த்து விறுவிறுக்க மலையடிவாரம் வந்துநின்றார்.

67 நாள் காட்டுக்கத்து கத்தியும் வராமலிருக்க இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆதிக்கசாதியின் குரல். எனவே அவரே வந்தார். 6 மணி நேரத்திற்குள் வந்தார். காடு மலை கடந்து நடந்தே வந்தார். அவர்கள் இருக்குமிடம் தேடிவந்தார். யார் வந்தாலும் அவர்கள் கத்துவதை நிறுத்தவில்லை. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...”என்று கத்திக்கொண்டேயிருந்தனர். 16 உடைகற்களை எடுத்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மைதான் என்ன? என்று கேட்க முதுகெலும்புள்ள யாரும் அங்கு செல்லாததால் அவர்கள் கத்திக்கொண்டேயிருந்தனர்.

ஊடகப்புலிகள் கேமிராக்களை தூக்கிக்கொண்டு ஓடியபடியே இருந்தனர். மூன்று குழந்தைக்கு அம்மை விளையாண்டு விட்டது. இரண்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கானது. பொது சுகாதாரம் கெட்டுப்போய் கிடக்கிறது என்று ஆளாளுக்கு நீலிக்கண்ணீர் வடித்தனர். ஊரின் மொத்த சாக்கடை தலித்களின் வீடுகளுக்கு நடுவேதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த சாக்கடைக்கு மூடிபோடு என்று கோரிக்கை வைத்துப் போராடும் தலித்களைப் பற்றி 7ம் தேதிக்குப்பின் ஒரு பத்திரிகைகூட படத்தையோ, செய்தியையோ (தீக்கதிர் தவிர) வெளியிடவில்லை. ஆனால் மலையடிவார விரும்பிகளின் ஒரு நூறு புகைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கிறது. ஊடகங்களின் சாதி மற்றும் சனநாயகப்பற்றுக்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு தேவையில்லை.

19 ஆண்டுகளுக்குப்பின் 16 கற்களை எடுத்ததால் ஏற்பட்ட பதற்றம் தணிக்க அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறது. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...”என்று கத்தியவர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை திட்டமிட்டுச் செய்தார்கள்.

மே 7 அன்று காரத் வந்து சென்றபின் மே 8ம் தேதி பக்கத்து கிராமமான கோடாங்கி நாயக்கன்பட்டியிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை விஷமிகள் அவமரியாதை செய்தனர். அதிகாலையிலேயே செய்தி பரவத் தொடங்கி பதற்றம் உருவானது. உசிலம்பட்டி பகுதியெங்கும் பஸ்கள் ஓடவில்லை. கடையடைப்பு, கல்வீச்சு, மறியல் என சொல்லிவைத்த சூத்திரத்தை சம்பந்தப்பட்டவர்கள் அரங்கேற்றி முடித்தனர். பிள்ளைமார்களுக்கு எதிராக தலித்கள், தேவர்களுக்கு எதிராக தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் என்றுகாட்ட ஒரே நேரத்தில் எல்லாக் காய்களும் நகர்ந்தன. உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவான போராட்டமும், தேவர் சிலை அவமதிப்புக்கு எதிரான போராட்டமும் தினமும் ஒவ்வொரு பக்கமாக மாறி மாறி சங்கிலித் தொடர்போல் பின்னியபடி நடத்தப்பட்டது.

மதவெறியர்களும் சாதிவெறியர்களும் ஒன்று சேர்ந்தனர். 89 கலவரத்தில் உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கோடாங்கிநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, ராஜக்காபட்டி, மானூத்து ஆகிய கிராமங்களில் உள்ள ஆதிக்க சக்திகள் இப்பொழுது மீண்டும் களத்திலே இறங்கியுள்ளன. பசும்பொன் தேவரின் சிலை அவமதிக்கப்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டியில் வசிக்கும் தலித் குடும்பத்தின் எண்ணிக்கை-1, தேவர் குடும்பத்தின் எண்ணிக்கை-200. இந்த ஒரு புள்ளிவிபரம் போதும் உண்மையை விளக்க. இதற்குமேல் எத்தனை பக்கம் எழுதினாலும் அது உபரித்தகவல்தான்.

அன்றிரவு தேவர்சிலைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது என்ன நடவடிக்கை? காலையில் விஷயம் தெரிந்ததும் வெறிபிடித்தது போல் பஸ்சை உடை, மறியல் செய் என்று போலீசார் கத்தவேண்டிய காரணமென்ன? சிலையை மோப்பம் பிடிக்க போலீசின் மோப்பநாய் வருகிறது எனத் தெரிந்தவுடன் அவசர அவசரமாக சிலையை கழுவிய இரண்டுபேரின் பெயரைச் சொல்லியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்? அவர்கள் ஒரு கட்சியின் தலைவர்கள் என்பதாலா? எதிரிக்கு சாதகமாகி விடக்கூடாது என்று சொல்பவர்களின் பதிலை நாம் மௌனமாகக் கேட்கிறோம். இதில் யார் எதிரிகள் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.

சாதக பாதக கணக்குகளை போட்டபடி சில அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. மலையடிவார விரும்பிகளுக்கு தேவையான பொருளும் ஆதரவும் வந்த குவிந்தபடி இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் வளைந்து, குழைந்து, பணிந்து என்ன வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து மிகக்கடினமான வனவாசத்தை விட்டிறங்கி நீங்கள் கட்டிய வீட்டில் நீங்களே வந்து குடியேறி எங்கள் ஆட்சிக்கு பெருமை சேருங்கள் எனத் தவமாய் தவமிருக்கிறது. அவர்கள் மலையின் மீதிருந்து பேச ஆரம்பித்தார்கள். ஜனநாயகம், சமத்துவம், சட்டம் அனைத்தையும் புதைத்த புதைகுழியின் மீது நின்று அரசும் அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மே 6ம் தேதி திறக்கப்பட்ட பாதையின் வழியே தலித்கள் நடக்கலாம். ஆனால் ‘பிணங்களைத் தூக்கி வரக்கூடாதென்று’ நடந்தே தங்கள் இருப்பிடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கலெக்டரிடம் முதல்நாள் கோரிக்கை வைத்தவர்கள், மூன்றாம் நாள் ‘திறக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்களை கேட்டு எடுக்கிற முடிவை தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்க வேண்டும்’ என்ற அளவிற்குப் போயுள்ளனர். தலித்களின் வழிபாட்டு உரிமையை மறுத்துக் கட்டப்பட்ட சுவரை அகற்றாமல் அது உள்ளிட்ட தங்களது கோவில் பகுதி முழுவதுக்கும் பட்டா வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இவையனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எவ்வித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுக்கிறது. “சட்டத்தின் ஆட்சி” என்று சொல்வதை விட அயோக்கியத்தனமான வார்த்தை வேறெதுவும் இருக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

3

உத்தப்புரம் தலித்களுக்கு எதிரான அனைத்துக் கொடுமைகளும் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடியே இருப்பதற்கு பிரதான குற்றவாளியாக பொறுப்பேற்க வேண்டியது மாநில அரசே.

அ. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அரசு அதற்கு நேர் எதிராக கட்டப்பஞ்சாயத்து மூலம் 1989ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதம் என்று பார்க்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை உருவாக்க அதுவே காரணமாக இருந்தது. ஒப்பந்தத்தின் மூலப்பத்திரத்தை போலீஸ் ஸ்டேசனில் வைத்து 19ஆண்டுகளாக அதுவே பாதுகாத்து வந்துள்ளது.

இப்பொழுது கூட அது சட்ட விரோதமான ஒப்பந்தம் என்று சொல்வதற்கு அரசு தயாராக இல்லை. பேச்சுவார்த்தையின் பொழுது “உங்க அப்பங்கெ போட்ட கையெழுத்துக்கு நீங்கதான் பொறுப்பு” என்று வெளிப்படையாக அரசு அதிகாரிகள் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஊர் மந்தையில் சாதித் திமிரோடு உட்கார்ந்து பேசுகிறவனுக்கும் இவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் கூடுதலாக அதிகாரி என்ற திமிரும் சேர்ந்திருப்பது மட்டும்தான்.

ஆ. 1989 ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு பின் பிள்ளைமார் நெடுஞ்சுவர் எழுப்பி தலித்களைத் துண்டாக்கி, தாழ்த்தப்பட்டவர்களின் பாதச்சுவடு கூட படாத புனிதபூமியாக தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டார்கள். அதன்பின் அரசும் புனிதத்திற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டி, ரேசன்கடை, பால்வாடி என அனைத்தையும் பிரித்தது. இறுதியில் பள்ளிக்கூடத்தையும் பிரித்தது. உத்தப்புரம் அரசுப்பள்ளி 1, அரசுப்பள்ளி 2 என்றானது.

“உத்தப்புரம் அரசு நடுநிலைப்பள்ளி 1”-ல் இந்த ஆண்டு 250 மாணவர்கள் படிக்கின்றனர். 1989க்குப் பின் இந்த ஆண்டு வரை ஒரு தலித் மாணவன் கூட இந்தப் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. சுமார் 19 ஆண்டுகளாக தலித் மாணவர்களோடு சேர்ந்து உட்காராத, பேசாத, பழகாத, நாமெல்லாம் பேசிப் பழக எந்தத் தகுதியுமற்ற இழி பிறவிகள் இந்த சுவற்றுக்கு அப்பால் இருக்கிறார்கள் என்ற அருவருக்கத்தக்க மனப்பதிவைத்தான் இந்தப் பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனிப்பந்தி வைப்பதை ஏற்க முடியாது எனப்போராடி அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த தந்தை பெரியாரின் வாரிசுகள் அதற்குப்பின் முக்கால் நூற்றாண்டு கழித்து தங்களது ஆட்சியில் அரசாங்கச் செலவில் பள்ளிக்கூடம் கட்டி, ஆசிரியருக்கு சம்பளம் கொடுத்து தலித் மாணவர்களுக்கு தனிப்பந்தியல்ல, தனிப்பள்ளிக்கூடத்தையே நடத்தி வருகின்றனர்.

இ. அன்றிலிருந்து இன்றுவரை உத்தப்புரம் தலித்கள் மீது பிள்ளைமார் சமூகத்தினர் நடத்திவரும் தாக்குதல்களும், உளரீதியான வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில.

1) பஞ்சாயத்து தலைவர் பதவி கடந்த பத்தாண்டுகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை பொதுப் பிரிவானது. அப்படி மாறிய பின்பும் தலித்களை கும்பிட்டு ஓட்டுக் கேட்க வேண்டுமென்பதற்காக பிள்ளைமார் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை.

2) கடந்த காலத்தில் பிள்ளைமார்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து நாற்காலியில் உட்கார்ந்து பேசியதில்லை.

3) கடந்த 15 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் தலித்கள் யாரும் இதுவரை பிள்ளைமார் தெருவில் நுழைந்து ஓட்டுக் கேட்க அனுமதிக்கப்பட்டதில்லை. ஊர் முக்கிலிருந்து கும்பிட்டு ஓட்டு கேட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

4) இப்போது வார்டு உறுப்பினராக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்கு வரும்போது டீயோ, காபியோ குடிப்பதில்லை.

5) இப்போது பஞ்சாயத்து கிளார்க்காக இருக்கிற தலித் வரி வாங்கக்கூட அவர்கள் பக்கம் போக முடியவில்லை. ஆனால் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் கலெக்டரை விட அதிகாரத்துடன் இருப்பதாக எல்லோரும் சொல்கின்றனர்.

6) இவ்வளவு ஏன், இப்பொழுது மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள் முடிந்துள்ளது. அதில் ஒருவர் கூட பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அங்கு இருப்பவர்கள் கூலி வேலை செய்ய தேவையே இல்லாத அளவு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் இல்லை. பாதிப்பேருக்கு மேல் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. அப்படியிருந்தும் பெயரை யாரும் கொடுக்கவில்லை. காரணம் தலித் வெட்டிப்போடும் மண்ணை தான் சுமப்பதா? தான் வெட்டியெடுக்கும் மண்ணை தலித் தொடுவதா? அவனும் நானும் சேர்ந்து வேலை பார்ப்பதா? என்ற தீண்டாமையின் உச்ச வெளிப்பாடுதான் இந்த புள்ளி விபரம்.

இன்னும் வண்டி வண்டியாக சொல்லிக் கொண்டே போகலாம். இன்று இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அனுபவித்த கொடுமையை கேட்கக்கூட அருகதையற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுத முடியாமல் செய்கிறது. இவ்வளவையும் எழுதுவதற்குக் காரணம் அரசு எந்திரம் நாளையே மனம் திருந்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அல்ல. இப்போது இதையெல்லாம் சொல்லாமல் எப்பொழுதுதான் கேட்க வேண்டிய காதுகளுக்கு இந்தத் துயரத்தின் வலி கேட்கும் என்ற நம்பிக்கைதான்.

4

“இதையெல்லாம் எழுதினாயே, நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காமல் இருக்க நியாயம் இல்லை. எனவே அவர்களின் செயல்களைப் பற்றி எழுதுகிறேன் சுருக்கமாகச் சொல்லப் போனால் ‘எப்பொழும் போல் நடந்து கொண்டார்கள்.’

விரிவாகச் சொல்வதாக இருந்தால், உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் தோழர்.நன்மாறன் எழுப்பிய பொழுது படு வேகமாக பதில் சொன்ன சேடப்பட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் துரைராஜ், அம்மாவின் கட்டளைக்கிணங்க அன்றே களமிறங்கினார். பிள்ளைமார்களின் பிரச்சனையை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த பிரச்சனையாக மாற்றிய சூத்திரதாரியாக அவர் செயல்பட்டார். அவர் எதிர்பார்த்தது போல தலித்களுக்கு எதிரான கூட்டு வெகு சீக்கிரமே கைகூடியது.

பேரையூரில் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையேற்று நடத்திய போராட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் அணிவகுத்து நின்றனர். சாதிக்கு முன்னால் திமுகவாவது, அதிமுகவாவது எல்லாவற்றையும் கழற்றி எறி என்று நாலு திக்கும் எறிந்தனர். கோபாலபுரத்திலும், போயஸ் தோட்டத்திலும் கழன்ற துணிகள் போய் விழுந்தன. அவர்களுக்கும் இது ஒன்றும் புதிதல்ல.

அதிமுகவுக்கு அடுத்தபடியாக இந்துப் போர்வை போர்த்தி நடித்துக் கொண்டிருந்த பாரதீய ஜனதா தாழையூத்து மலையடிவாரத்தில் தலித்களுக்கு எதிரான கோரப்பற்களோடு இரத்த வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறது. “சாதி இருக்கிறது என்பதை விட ராணுவம் வருகிறது என்பது அவமானமல்ல” என்று சட்டமன்றத்தில் திமுக தலைவர் கம்பீரமாக அறிவித்த இரண்டாம் நாள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சாதி இருக்கிறது என்ற மகத்தான உண்மை வானத்துக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றது. அதன் மெய்க்கீர்த்தியை வணங்கி, அதன் ரூப வடிவமான மலையடிவார விரும்பிகளை சமாதானப்படுத்தி அழைத்துவர தனது பிள்ளைமார் அணியை அனுப்பி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

மதுரை மேயரின் கணவர் கோபிநாதன் தலைமையில் பெரும்படை காடு நோக்கி புறப்பட்டது. “நம்ம சாதிக்காரங்களா...” என்று அலறியபடி அவர்கள் காட்டுக்குள் ஓடினர். சாதிப் பெருமைகளையும், கலைஞரின் பிள்ளைமார் கரிசனங்களைப் பற்றி மணிக்கணக்கில் எடுத்துக் கூறினர். அவர்களோ மசிவதாக இல்லை. ஆனாலும் அணி அணியாக அடலேறுகள் போய்க் கொண்டேயிருக்கின்றன.

இத்தனை ஆண்டுகாலம் எத்தனை வடிவங்களில் தீண்டாமை உண்டோ அத்தனை வடிவங்களிலும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிற உத்தப்புரத்தில் உண்மையில் தீண்டாமை இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உண்மையறியும் குழுவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியிருக்கிறதாம். இந்த உண்மையை அறிய இன்னும் எத்தனை காலம் எடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை. நேற்றைய தினம் மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசவந்த தோழர் தா.பாண்டியன். உத்தப்புரத்திற்கு ஒரு எட்டு போய் வந்திருக்கலாம் உண்மையை கண்டறிய அல்லது அவரது சொந்த ஊரான வெள்ளமலைப்பட்டியில் குடியிருக்கும் ஒரு தலித்திடமோ அல்லது ஒரு பிரமலைக்கள்ளரிடமோ போன் போட்டு இரண்டு நிமிடம் பேசியிருக்கலாம். அவருக்குத் தேவையான உண்மை கிடைத்திருக்கும். சரி எப்படியோ அவர்கள் உண்மையை கண்டறிந்து வரட்டும். இடதுசாரி ஒற்றுமைக்காக நாம் காத்திருப்போம்.

இப்படியாக சோகக் காட்சியும் காமெடிக் காட்சியும் மாறி மாறி வந்துபோக கடைசியில் தலித் கட்சிகளின் தலைவர்கள் கிளைமாக்ஸ் காட்சிக்காக வந்து நின்றார்கள். தோழர் நன்மாறன் உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் கிளப்பிய பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை “அரசியல் லாபத்திற்காக ஒரு கட்சி இந்தப் பிரச்சனையை எடுக்கிறது” என்றார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறியிருப்பதுபோல, “பொருளாதார லாபத்திற்காக என்றால் அவர் ஆதரித்திருப்பாரோ என்னவோ”.

அடுத்த ஒரு வாரத்தில் பிரச்சனை பெரிதாகி பிரகாஷ்காரத் வருவது வரை நீண்டு சென்றவுடன் மே 6ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரத் வருவதற்கு முதல்நாள் சுவர் இடிக்கப்பட்டவுடன் மே 7ம் தேதி மாலை மற்றும் 8,9 ஆகிய மூன்று தேதிகளிலும் பேரையூர், எழுமலை இரு நகரங்களிலும் கதவடைப்பு, மறியல், காவல்நிலைய முற்றுகை என தினமும் நடந்து வந்தது. மறு நாள் 10ம் தேதி பேரையூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “சமூக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இப்பகுதிக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்” (மறு நாள் மே 11 பேரையூரில் முழு அடைப்பைத்தான் முன்கூட்டியே பேசினாரோ என்னவோ?) என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, நானோ எனது கட்சியோ ஒரு போதும் சாதிக் கலவரத்தை தூண்டியதில்லை எனச்சொல்லி சுமார் ஒரு மணிநேரம் விளக்கவுரையாற்றினார். ஆனால் உத்தப்புரம் பிரச்சனையை பற்றி அவர் வாயே திறக்கவில்லை. அதுவெல்லாம் சாதிக்கலவரத்தை தூண்டுபவர்களின் செயல் என்று ஆதிக்க சாதிகள் சொல்லும் அதே வார்த்தையை அவரும் சொல்லிவிட்டுச் சென்றார்.

கூட்டத்திற்கு ஒருவரை அனுப்பி செல்போனை ஆன் செய்ய வைத்து உத்தப்புரத்திலிருந்து அவரது முழுப்பேச்சையும் கேட்டுக் கொண்டேயிருந்த இளைஞர்கள் அவர் பேசிமுடித்ததும் சொன்ன வார்த்தையை எழுத முடியாவிட்டாலும் அவரால் எளிதில் யூகிக்க முடியும்..

“தென் தமிழகத்தில் சாதீய மோதல்களை உருவாக்கவும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களை பலிகடா ஆக்கவும் தொடர்ந்து சாதிய சகதிக்குள் சிக்க வைக்கவும் அதன் மூலம் நிரந்தரமாக அவர்களை தனிமைப்படுத்தவும், சில சுயநல அரசியல் சக்திகள் செய்யும் சதியாகும்” என்று உத்தப்புரம் பிரச்சனையைப் பற்றி கோபத்தோடு அறிக்கை விட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி. பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது இயக்கத்தின் மதுரை மாவட்டத் தளமாக விளங்கிய உத்தப்புரத்தில் அவரது கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதால் கோபப்பட்டு இப்படி அறிக்கை விட்டுள்ளார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கொடியை பிடுங்கியது உத்தப்புரம் தலித்துகள் அல்ல, அவர்தான் என்பதை அவரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நமக்குத் தெரியவில்லை.

இறுதியாக உத்தப்புரம் தலித்கள் 89ம் ஆண்டு உரிமைக்காக குரல் கொடுத்தபோது பிள்ளைமார்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்திலே இறங்கியது கோடாங்கி நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, மானூத்து, ராஜக்காபட்டி ஆகிய கிராமங்கள். இப்போதும் அதே ஐந்து கிராமங்கள் களத்திலே இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் மறியலும் போராட்டமும் நடத்துகின்றன. இந்த கிராமங்களில் தேவர்கள், பிள்ளைமார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவினரோ, திமுகவினரோ, காங்கிரஸ்காரரோ யாருமில்லை.

ஆனால் இந்த ஐந்து கிராமங்களிலும் தலித்களுக்கு ஆதரவாக, தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டதன் நியாயத்தை விளக்கி, வருகிற தாக்குதல்களை சந்தித்து கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி. சிகப்புத்துண்டை தோளில் போட்டபடி ஐந்து ஊர் சாவடியிலும் ஒருவன் உட்கார்ந்து மொத்த ஊருக்கும் எதிராக பொழுதெல்லாம் பேசி, தவித்து, தொண்டை அடைத்தபடி இருக்கிறான். அவனுக்குப்பின்னால், “அம்பேத்கர் பிறந்த தின விழா” என்ற பேனர் எதுவும் கட்டப்படவில்லை. அது அவனுக்குப் பொருட்டுமல்ல. இது 89 அல்ல என்று உலகுக்குச் சொல்லும் ஒரே சாட்சி அவன்தான். அந்த சாட்சி போதும், உத்தப்புரத்து தலித்துகளின் ஆதார நம்பிக்கை விண்முட்ட எழ. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வர்க்க உரமேறிய போராட்டத்தை முன்னிலும் வேகமாக நடத்த.

5

கட்டுரையை முடிக்கும் முன் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.

1. 1964 கலவரத்தில் பெரும் சேதமும் உயிர்ப்பலியும் தலித்துகளுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் தளர்ந்து விடவில்லை. மீண்டு எழுந்தார்கள். மீண்டும் 1989ல் பெரும் சேதமும் நான்கு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சித்தார்கள். இப்போது 2008ல் புதிய பரிணாமத்தோடு களத்திலே இறங்கி நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதீய அவமானத்தை துடைத்தெறிய கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இழப்புகளை சந்தித்த வண்ணம் போராடிக் கொண்டேயிருக்கும் உத்தப்புரத்து மக்களின் ஆணிவேர் எதுவென்று கேட்டால் அடுத்தவனை அண்டிப்பிழைக்க அவசியமில்லாத அவர்களது வாழ்நிலை. அங்கே இருக்கும் தலித்கள் பெரும்பான்மையோருக்கு சொந்தநிலம் இருக்கிறது. அவற்றை மையப்படுத்தி வாழ வழி இருக்கிறது. அதன்மேல் நின்று சுயமரியாதைக்கான போராட்டத்தை அவர்கள் விடாமல் நடத்தி வருகின்றனர்.

அதே உத்தப்புரம் பஞ்சாயத்தின் துணை கிராமமான பொட்டல்பட்டியில் உள்ள தலித்துகள் இன்றுவரை வாய்திறக்க முடியவில்லை. கைக்கு எட்டும் தூரத்தில் தனது சகோதரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக முணுமுணுக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் மறுநாள் காலை ஆதிக்கசக்திகளின் நிலத்தில்தான் அவர்கள் வேலைக்குப் போயாக வேண்டும். வயிறும் வாழ்வும் குடும்பமும் அவர்களை நம்பித்தான். நிலம் வாழ்வுக்கும் வயிற்றுக்கும் அடிப்படை. சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் அடிப்படை. தலித் விடுதலைக்கான மூல முழக்கம் நிலம்... நிலம்... நிலம்...

2. மே 6ம் தேதி காலை 7.45 மணியளவில் தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டு தலித் பகுதியில் பாதை உருவாக்க முயற்சி செய்யப்பட்டபோது நடுவில் பெரும் கிணறு ஒன்று இருந்தது. இந்தக் கிணற்றை மூடினால் தான் பாதைபோட முடியும். அது தனியார் பட்டா நிலத்தில் உள்ள கிணறு. எனவே என்ன செய்வது என்று அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது, தோழர்கள் கே.பொன்னையா, கே.முத்து இருளன் இருவரும் அந்த இடத்தில், இந்த கணத்திலே “பொதுப்பாதைக்காக எங்கள் கிணற்றை அரசுக்கு ஒப்படைக்கிறோம்” என்று மாவட்ட கோட்டாட்சியருக்கு எழுதிக் கொடுத்தனர். அதன்பின் தான் கிணற்றை நிரப்பி பாதை போடப்பட்டது.

ஆனால் பாதை அமைக்கப்பட்டவுடன் அவமானம் தாளாமல் பிள்ளைமார்கள் ஊரையேக் காலி செய்து மலையடிவாரத்திற்கு ஓடிவிட்டனர். தங்களின் உரிமைக்காக எதையும் இழக்கத் துணிகிற தலித்துகள் ஒருபக்கம். எதை இழந்தாலும் சாதியை இழக்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற சாதீயர்கள் ஒருபக்கம். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது ‘உத்தப்புரம்’, ‘தமிழகம்’, ‘இந்தியா’

நன்றி: கீற்று

A Journey towards Peace in Sri Lanka..............Open Letters to Sri Lankan President Mahinda Rajapaksa and LTTE Leader V. Pirapaharan

From North America ...Europe ….Asia…And to end in Sri Lanka.
By
Meditating & Fasting for 10 Hours
From 8.00 A.M to 6.00 P.M

மீராபாரதி (தொடர்புகளுக்கு:awareness@rogers.com)

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தவும் அதிலிருந்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான ஆரோக்கியமான உரையாடல் களத்தை உருவாக்கவும் அதற்கான சூழலை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட அமைதிக்கான ஒரு பயணம் இது.

இன்றைய போர்ச் சூழல், இலங்கையின் இனப் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் என்பதற்கான எந்தவிதமான நம்பிக்கையையும் தருவதாக இல்லை. மாறாக அழிவையும் ஆரோக்கியமற்ற சூழலையும் பகைமை உணர்வையும் ஆழமான வடுக்களையும் வன்மத்தையுமே விளைவாகத் தருகின்றது. மேலும் நிகழ்கால, எதிர்கால சந்ததியினரை வன்முறையாளர்களாக ஆயுதபாணிகளாக உருவாக்குவதுடன் அவர்களை உடல், உளவியல் அடிப்படையில் நோயாளிகளாகவும் மாற்றுகின்றது. இந்தப் போக்கானது இம் மனிதர்களிடமிருந்து இவற்றை அகற்றமுடியாதவாறு ஆழமான உடல் உள பாதிப்பை நீண்டகாலத்திற்கு ஏற்படுத்தக் கூடியது. மேலும் இயற்கை வளங்களும் பயன்படுத்த முடியாதவாறு மாசடைவதுடன் அழிவுக்கும் உள்ளாகின்றது. இது மனித வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதல்ல. மேலும் எதிர் காலம் தொடர்பான எந்தவிதமான நம்பிக்கையையும் இந்த அழிவுகள் தரவில்லை. ஆகவே தற்பொழுது நடைபெறும் போரும் ஆயுத வழிப் போரட்டமும் வன்முறை நடைவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கவேண்டும்.

அமைதியான ஒரு சூழலிலையே பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆரோக்கியமான முடிவுகளையும் தீர்வுகளையும் இனங் காணவோ முன்வைக்கவோ முடியும். ஆகவே, ஆமைதியான சமாதான சூழலை இலங்கையில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நான்கு முனைகளிலும் தளங்களிலும் கோரிக்கைகளை முன்வைத்து நமது செயற்பாடுகளையும் பயணத்தையும் ஆரம்பிக்கவேண்டும். அதாவது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் மற்றும் சிங்கள கட்சிகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கும், இலங்கையுடன் தொடர்புடைய பிற நாடுகளின் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும். மற்றும் கஸ்டப்பட்டு ஆனால் பாதுகாப்பாக புலம் பெயர்ந்து வாழும் இலங்கை மக்களையும் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைதிக்கான பயணம் நடைபெறுகின்றது.

1. இலங்கை அரசிடம் மற்றும் சிறி லங்காவின் அனைத்து கட்சிகளிடமும் போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைப்பது.
2. மேலும் இலங்கை அரசிடம் இனப் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் படியும் வேண்டுகோள் விடுவது.
3. விடுதலைப் புலிகளிடமும் மற்றும் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களிடமும் வன்முறை பாதையைக் கைவிட்டு தமது உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிமுறைகளில் ஆரோக்கியமான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுவது.
4. அமெரிக்க ஆசிய ஐரோப்பிய நாட்டு தலைவர்களிடமும் சர்வதே சமூகத்திடமும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை இன முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆதரவை அளிக்கும்படி கோருவது.
5. மேலும் இலங்கை அரசு போரை நிறுத்துவதற்கும் விடுதலைப் புலிகளையும் பிற தமிழ் ஆயுதக் குழுக்களையும் வன்முறையற்ற பாதைக்கு கொண்டு வருவதற்கும் நிர்ப்பந்திக்கக் கோருவது.
6. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை (தமிழ் சிங்கள மொழி பேசும்) மக்களை வன்முறைப் பாதைக்கு ஆதரவளிக்காது அமைதிக்கும் சமாதானத்திற்கும் ஆதரவளிக்கக் கோருவதுடன் தாம் வாழும் நாடுகளிலுள்ள அரசிடம் இலங்கை இனப் பிரச்சனை முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தொடர்ச்சியான அழுத்தங் கொடுக்க வேண்டுகோள் விடுவது.
7. மேலும் இந் நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் முன்னால் அமைதியான முறையில் தொடர்ச்சியாக செயற்பாடுகளை போரை நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தும் சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவதற்கும் தீர்வு ஒன்றினை முன்வைக்கவும் வலியுறுத்துவது.
இந்த நோக்கங்களுடன் உடன்பாடு உள்ளவர்களும் இலங்கையில் அமைதியை உருவாக்கி சமாதானத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் இன பிரச்சனைக்கான முரண்பாடுகளுக்குத் தீர்வைக் காண ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம் என நம்பிக்கை உள்ளவர்களும் இணைந்து செயற்படுவதற்கான அழைப்புபிதழ் இது.

நண்பர்களே! இப் பயணம் எதிர்வரும் 20ம் திகதி மே மாதம் டொரோன்டோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் ஆரம்பமாகி பின் 22ம் திகதி குயின்ஸ் பாக்கிலுள்ள ஒன்டாறியோ பாராளுமன்றத்திற்கு முன்பும் 25ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஸ்காபுரோவிலுள்ள உலகத் தமிழர் இயக்க காரியாலயத்திற்கு முன்பாகவும் மற்றும் ஒட்டோவாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாகவும், கனேடிய பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் அடுத்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

இதில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் தியானம் மற்றும், உண்ணாவிரதம் என்பன அனுஸ்ட்டிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இச் செயற்பாட்டிற்கு அனைவரினதும் ஆதரவு கிடைக்குமாயின் இப் பயணத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கும் பின்பு ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே மற்றும் ஆசிய நாடுகளான யப்பான் சீனா போன்ற நாடுகளின் தலைநகரங்களிலுள்ள இலங்கை தூதரகங்களிற்கு முன்பாகவும் அந் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு முன்பாகவும் மற்றும் இந்திய நாட்டில் டெல்லியிலும் சென்னையிலும் இறுதியாக இலங்கையின் பிரதான நகரங்களிலும் “போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கான தீர்வைக் காணுமாறு” கோரி அமைதிக்கான சமாதானத்திற்கான செயற்பாட்டை நோக்கமாகக் கொண்டு இப் பயணத்தை முன்னெடுக்கலாம்.
இச் சந்தர்ப்பங்களில் பின்வரும் கடிதங்களை இலங்கை தூதர்களிடமும் அந் நாடுகளின் தலைவர்களிடமும் ஒப்படைக்கப்படும். இக் கடிதங்களில் உங்களது கருத்துக்களும் இடம் பெறவேண்டுமாயின் தொடர்பு கொள்க.

நன்றி
மீராபாரதி

மதிப்புக்குரிய இலங்கை ஐனாதிபதி அவர்களுக்கு!

இலங்கை ஒரு அழகான நாடு. பல்வேறு வளங்களையும் தன்னகத்தே கொண்ட சிறந்த நாடு. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெறும் போரும் வன்முறையும் இந்த அழாகான நாட்டையும் அதன் வளங்களையும் அழிக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே. இந்த அழிவை நிறுத்தவும் இதன் வளங்களை பாதுகாக்கவும் மக்களின் ஆதரவுடன் தங்களால் நடைமுறைபடுத்த முடியும். ஆனால்; அவ்வாறு செய்யாது நீங்களும் இந்த போரை முன்னெடுப்பது கவலைக்கிடமானது. கடந்த கால இலங்கை தலைவர்களும் உங்களைப்போல இனப் பிரச்சனைக்கான தீர்வாக போரையே முன்மொழிந்து வழி நடாத்தி தோல்வியையே தழுவினர் என்பது நாம் அனைவரும் அறிந்த யதார்த்தமான ஒரு உண்மை. இதுவரை நடந்த போரில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நடபெற்ற அல்லது நடைபெறுகின்ற ஒன்று. ஆனால் பிரச்சனைக்கான தீர்வு மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக மக்களுக்குத் துன்பமும் துயரமுமே கிடைத்தன. உயிர்கள் எந்தவிதமான மதிப்புமின்றி அழிக்கப்பட்டன. இந்த அழிவுகளிலிருந்தும் எந்தவிதமான முடிவுகளும் இனப் பிரச்சனைக்கு கிடைக்கவில்லை. ஆனால் அழிவு மட்டும் இரு பகுதிகளிலும் தொடர்கின்றது. நீங்கள் பிற இலங்கை தலைவர்களிலிருந்து வேறுபட்டவர். காரணம் மக்களின் பிரச்சனைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர். மக்களுடன் மக்களாக இருந்து செயற்பட்டு நாட்டின் தலைவரானவர். ஆகவே மக்களின் பிரச்சனைகளை வேதனைகளை உங்களுக்கு விபரிக்கத் தேவையில்லை. ஏனெனில் உங்களால் அவற்றை உணர முடியும். புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் தெற்குப் பகுதி மக்கள் எதிர்நோக்கும் அதே பிரச்சனைகளையே வடக்கு கிழக்கு மக்களும் எதிர் கொள்கின்றனர். மேலும் தெற்குப் பகுதி மக்களைவிட வடக்கு கிழக்கு மக்கள் இன அடிப்படையில் இதுவரை காலமும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர் என்பது கடந்தகால நிகழ்கால வரலாறு. இந்த வரலாறு தொடராது நிறுத்தப்படவேண்டிய பொறுப்பு நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களுடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் நீங்களும் தொடர்ந்தும் போரை முன்னெடுத்துச் செல்வதால் இங்கு மீண்டும் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இன்று இரு பகுதி மக்களும் ஒருவர் மீது மற்றவர்கள் நம்பிக்கை அற்று சந்தேகப் பார்வை கொண்டு வாழ்கின்றனர். இந்த சந்தேகப் பார்வையை அகற்றி மக்களுக்கிடையில் மீண்டும் நம்பிக்கையை வளரச்செய்யவேண்டியது நாட்டின் தலைவர் என்ற அடிப்டையில் உங்களின் பொறுப்பு. இதுவே இலங்கையில் அமைதியும் சமாதானமும் நிலவுவதற்கு வழிவகுக்கும். பல்வேறு நாடுகளின் நடைபெற்ற உள் நாட்டு போராக இருந்தால் என்ன நாடுகளுக்கு இடையிலான போராக இருந்தால் என்ன அனைத்தும் இறுதியாக பேச்சுவார்த்தைகள் மூலமும் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமுமே தீர்க்கப்பட்டன. போரினாலும் வன்முறையினாலும் தீர்வு காணப்பட்ட நாடுகளில் தொடர்ந்தும் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பதிலாக பதட்டமும் அமைதியின்மையுமே காணப்படுகின்றன. ஆகவே நீங்களும் இந்த இனப் பிரச்சனைக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வைக் காண போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்கி ஆரோக்கியமான திறந்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு நியாயமான தீர்வை முன்வைத்து சிறந்த இலங்கை தலைவர் என்ற பெயரை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நீங்கள் போரை வன்முறை பாதையை முன்னெடுப்பதானது நீங்கள் பின்பற்றும் புத்தரின் போதனைகளுக்கு எதிரானது என்பது நீங்கள் அறிந்ததே. புத்தரின் போதனைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கு போரை நிறுத்தி அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதே புத்தருக்கு செய்யும் மரியாதை மட்டுமல்ல அவரை புரிந்து கொண்டதற்கும் அடையாளமாகும். முற்றாகப் போரை முன்னெடுப்பது புத்தருக்கு செய்யும் துரோகம் என்றால் மிகையல்ல. மனித வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்கு அவரது வழிகாட்டலின் படி வாழ்வதும் செயற்படுவதுமே சிறந்த வழி. இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் தங்களுடைய கடந்த கால தவறுகளை மன்னித்து உங்கைள சிறந்த தலைவராக போற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. போரை நிறுத்துக்கள்! பிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வையுங்கள்! அமைதியை உருவாக்கி சமாதானத்தைக் கட்டி எழுப்புங்கள்.

நம்பிக்கையுடன்
அமைதியையும் சமாதானத்தையும் நேசிப்பவர்கள் சார்பாக,
******************

மதிப்புக்குரிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு,

தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயுத வழி போரட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடாத்தி செல்கின்றீர்கள். உங்களது உறுதியில் திறமையில் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பெருமையும் கொள்கின்றனர். மேலும் சர்வதேசமும் உங்களைப் பார்த்து வியக்கின்றது. இது காலவரையான ஆயுத வழி வன்முறைப் போரட்ட வழி முறைகளால் சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களின் மீதான சிறிலங்கா அரசின் அடக்கு முறைகளையும் உரிமைகள் மறுக்கப்பட்டதையும் தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. இன்று சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக கவனம் கொள்கின்றது. இந்த நிலை உருவாகுவதற்கு உங்களின் முக்கியமான பங்கு உண்டு என்பது மறுக்கப்பட முடியாதது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதிலும் இன முரண்பாட்டை தீர்ப்பதிலும் ஆயுதப் போரட்ட வழி ஊடாக இதுவரை வந்துள்ளீர்கள் எவற்றை பெற்றுள்ளீர்கள் என திரும்பிப் பார்க்கும் பொழுது நம்பிக்கையின்மையே தோன்றுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


மேலும் கடந்த கால வன்முறை போரட்ட வழி முறைகளில் ஏற்பட்ட தவறுகளான ஜனநாயகமின்மையும், முக்கியமான அரசியல் தலைவர்களைக் கொலை செய்ததும் மற்றும் சகோதரப் படுகொலைகளும் விடுதலைப் போராட்டத்தை சிதையடையவே செய்துள்ளமை அனைவரும் அறிந்த ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை. இதனால் தவறுகளே செய்யாது செயற்பட முடியும் என யாரும் நம்பவில்லை. ஆனால் ஒரு தவறை மீள மீள செய்வது தவறானதே. இது முன்னேற்றகரமானதல்ல. இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்காது போகுமாயின் ஆயுதப்போராட்டத்திற்காக இதுவரை அர்ப்பணிக்கப்பட்ட அர்ப்பணிக்கப்படும் மனித வளங்களும் செலவு செய்யப்படும் பொருட்களும் பணமும் இறுதியில் அர்த்தமின்றி சென்றுவிடலாம். ஏனெனில் இந்த வன்முறைப் பாதையால் பெரும் பயன் அடைபவர்கள் ஆயுத வியாபாரிகளும் இடைத் தரகர்களுமே. இவர்களுக்கு இலங்கையின் இன பிரச்சனை மட்டுமல்ல பிற நாடுகளில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளும் ஆயுத போராட்ட வழிமுறைகளும் ஒரு முடிவுக்கு வருவதில் அல்லது தீர்வு ஒன்றை நோக்கிச் செல்வதில் ஆர்வமோ அக்கறையோ இல்லாதவர்கள். அவர்களது ஒரே நோக்கம் இந்த சூழலைப் பயன்படுத்தி பணம் உழைப்பதே. இது நீங்கள் உட்பட நாம் அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இதனால் தொடர்ந்தும் விடுதலைக்காக உரிமைகளுக்காக ஆயுத வழி போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக சிந்திக்கவேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம் என்றால் மிகையல்ல. ஏனனில் ஆயுத வழி போரட்ட முறைமைகள் புதிய மிலேனியத்தில் தடம் மாறி செல்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஆகவே உரிமைகளுக்கான விடுதலைக்கான போராட்ட பாதைகள் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ் விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல சர்வதேசமும் நிற்கின்றது. இதுவரை நீங்கள் பார்க்கத் தவறிய ஒரு பாதை உண்டு. அதாவது தமிழ் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பலவீனம் மக்களின் பங்களிப்பின்மையும் அரசில் மயப்படுத்தப்படாமையுமே என்றால் மிகையல்ல. வன்முறையற்ற ஒரு புதிய பாதையில் மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி செல்வதே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கும் விடுதலையடைவதற்கும் வழிவகுக்கும். இதேவேளை சிங்கள மக்களின் ஆதரவு இன்றி பிரச்சனை நியாயமான வழியில் தீர்க்க முடியாது. ஆகவே சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் கவனம் செலுத்தவேண்டி உள்ளது. வன்முறை பாதைக்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களின் மீது நம்பிக்கை வைத்து வன்முறையற்ற பாதையில் போராட்டத்தை முன்னெடுப்பீர்களாயின் கடந்த கால தவறுகள் எவ்வளவு பெரிதாயினும் தமிழ் மக்களும் சர்வதேசமும் உங்களைப் புரிந்து மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. தமிழ் மக்களினது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சர்வதேச மக்களினதும் மதிப்பை பெற்ற ஒரு முன்மாதிரியான தலைவராக உங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயுதப் போராட்ட வழிமுறையை நிறுத்துங்கள். திறந்த பேச்சு வார்த்தையை முன்னெடுங்கள். பேச்சு வார்ததைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் பேச்சு வார்த்தையே!! வன்முறையல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்துங்கள். அமைதியை சமாதானத்தை கட்டி எழுப்புவதன் மூலம் பிரச்சனைக்கான முரண்பாடுகளுக்கான தீர்வுகளைக் காண தங்களது ஆற்றல்களைப் பயன்படுத்த முன்வாருங்கள். மக்களை ஒன்றினைத்து ஐனநாயக வழியில் தலைமை தாங்கிச் செல்லுங்கள். இதனால் அனைத்து மக்களும் உரிமைகள் பெற்று சுதந்திரமாக வாழும் அதேவேளை தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் சிறந்த காலம் ஒன்று நிச்சயமாக உருவாகும். இதற்கான புதிய விதையை விதைக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.

நம்பிக்கையுடன்
அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் மனிதர்கள் சார்பாக
**********************

புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் மனிதர்களே!

இலங்கையில் நடைபெறும் போரிலிருந்து தப்பி வந்து போரைப் பயன்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்த நாடுகளில் கடந்த கால வடுக்களுடனும் ரணங்களுடனும் ஆனால் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் வாழ்கின்றோம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. நமது குழந்தைகள் தொடர்பான கவலையின்றி வாழ்கின்றோம். ஏனெனில் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கல்வியையும் வாழ்க்கையையும் புலம் பெயர்ந்ததன் மூலம் வழங்கியிருக்கின்றோம் என்ற பெருமையும் நம்பிக்கையும் நமக்கு உண்டு. இந்த நிலைமை இலங்கையில் வாழும் மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களுடையது என்றால் மிகையல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த புலம் பெயர் நாடுகளிலிருந்து கொண்டு வன்முறை அல்லது போருக்கு ஆதரவு அளிப்பது மனசாட்சி இல்லாத ஒரு செயற்பாடு. ஏனனில் இந்த வன்முறைப் பாதையும் போரும் இந்த மனிதர்களின் உரிமைகளையும் சுநத்திரத்தையும் மேலும் மேலும் மறுக்கின்றமையும் மற்றும் குழந்தைகள் உடல் உள நோய்க்கு உள்ளாவதையுமே விளைவாக கிடைக்கின்ற யாதார்த்தமான ஒரு உண்மை. ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் வன்முறைக்கோ போருக்கோ ஆதரவளிக்காது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதன் மூலம் இன பிரச்சனைக்கு தீர்வு ஒன்றினைக் காண உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படமுடியும். புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை அதற்காக போராடும் உரிமைகளை குறைந்தளவிலாவது அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி அதன் வரையறைகளுக்குள் இருந்து நமது சமாதானத்தை அமைதியை தீர்வை நோக்கிய செயற்பாடுகளை முன்னேடுக்கலாம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழும் மனிதர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமது வாழ்வின் மீதான பொறுப்புக்களை குறைந்த அளவிலாவது நிறைவேற்றலாம். இதற்கு மாறாக வன்முறை பாதைக்கும் போருக்கும் ஆதரவு அளிப்பது நமது குற்ற உணர்வுகளும் பழி தீர்க்கும் செயற்பாடுளுமே. இது ஆரோக்கியமான வாழ்வல்ல. இவ்வாறன வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து சுய பிரக்ஞையில் சுயமாக செயற்படுவதன் மூலம் நமக்கும் இலங்கை வாழ் மனிதர்களுக்கும் வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வழி காட்டலாம். நமது இன சாதிய மொழி மற்றும் இயக்க சார்புகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒன்றினைந்து இலங்கையில் போரையும் வன்முறையையும் நிறுத்துவதற்கும் அங்கு வாழும் மனிதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அமைதியான ஆனந்தமான வாழ்வுக்கும் நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்படுவற்கான அழைப்பிதழ் இது.

நன்றி
இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் சமாதானத்தை அமைதியை விரும்பும் மனிதர்கள் சார்பாக
**************************
A Journey towards Peace in Sri Lanka
From North America ...Europe ….Asia…And to end in Sri Lanka.
By
Meditating & Fasting for 10 Hours
From 8.00 A.M to 6.00 P.M

Our slogans...,

v Stop the war in Sri Lanka by Sri Lankan state!
v Stop all kinds of violence in Sri Lanka by Tamil armed movements!
v Implement the ceasefire immediately!
v Government should put forward a solution for the conflict!
v Negotiate for a solution for the conflict!
v International community should persuade all parties in Sri Lanka to implement ceasefire and work for peace in Sri Lanka!
v Peace in Sri Lanka! Peace in Earth!

Holding the demonstration in front of…
Ø Consulate General of Sri Lanka, 40, St.Clair Avenue West, Toronto, on May 20th, Tuesday
Ø Ontario provincial parliament, Queens Park, on May 22nd, Thursday.
Ø World Tamil Movement, 39 Cosentino Drive, Scarborough, on May 25th, Sunday,
Ø Sri Lankan High Commission, 333 Laurier Avenue, Ottawa, Ontario, TBA
Ø House of Commons in Ottawa, TBA.
Ø The same way we can organize in other countries like USA, England, Germany, France, Swiss, Norway, Japan, China and Delhi and Chennai in India and....hopefully from there we can move towards Sri Lanka by carrying our message for peace.
Need Your Support and Help!
Welcome and Join the movement to work for Peace in Sri Lanka
awareness@rogers.com awakeningawareness.org
This is an individual demonstration!
As an individual, everyone can come and participate each day by sitting there silently with their placards for one or more hours.
If you like to meditate,
you can close your eyes and watch your breath as long as you like.

I feel that it is my responsibility to work for peace,
If you feel, it is your responsibility too,
You are most welcome.

This is an invitation for all individuals,
who like to work for peace,
to participate in this journey as an individual by presence in the demonstration, invite other friends and support for fundraising until
we bring peace in Sri Lanka.

Please forward this message to your friends.
Need your support to bring peace in Sri Lanka by implementing ceasefire.
There is a small break after every three hours.
by osho...
Meditation is not a solution of any problem in particular;
it solves nothing.
It simply helps you to get rid of the mind, the problem-creator.
It simply helps you to slip out of the mind like a snake slips out of the old skin.
Once you know you are not the mind the great transcendence has happened.
Suddenly all problems become insignificant; slowly, slowly they evaporate.
You are left with a profound peace;
a great silence prevails.
This silence is the solution.
This peace is the answer,
the answer of all answers.

with love
meerabharathy
meerabharathy.com
awakeningawareness.org
647 505 (OSHO)6746

contact: "meerabharathy vks osho"

புதன், மே 28, 2008

Child soldier turned author HITS OUT

A former LTTE child soldier turned revolutionary writer is urging the Tamils to revolt against both the Tigers and the Sri Lankan state, saying the intention of each was to oppress people.
Shobasakthi, the 40 year-old author of Gorilla - a fascinating and ground-breaking novel - now lives as an exile in France, filling supermarket shelves. In an exclusive interview with LAKBIMAnEWS last week, he said he had no objection to the exile literary movement naming the Tigers as their number one enemy as they were a curse upon the Tamil people.
“But the murders and human rights violations being committed by EPDP, TMVP and PLOTE... how can they tolerate them?” he asks. “Just because one is opposed to the Tigers, does that make you a democrat, and does that alone make any movement a movement of the people?”
The outspoken leftist author - whose real name is Yesuthasan Anthonythasan - has drawn heavily upon experiences in his own life in writing Gorilla. Critics have called the book ‘auto fiction’ where real and fictive incidents are woven together to produce a documentary effect.

LTTE dream

“I was born in a poverty stricken village in Jaffna,” he recounts in his interview. “One might say that my family lived so way below the poverty line that we could see it hovering above us. My father took no responsibility for the family and was a local thug. Half the time, he would be in the police station or in the hospital with my mother living a life of permanent strife, depression, and hunger.”
Shobasakthi’s first school books were the free ones the government gave him when he was in Grade 7. He studied up to Grade 10 before the 1983 July riots against the Tamils happened. He was deeply affected by the murder of Tamil political prisoners and the return of Tamil refugees in ships.
“From August 1983, I tried my best to join the Tiger movement,” he said. “With the greatest difficulty I managed to obtain contact with a Tiger activist and began to work for the Tiger movement, putting up posters and distributing leaflets. I began to pester the Tiger movement to enlist me as a full time member and send me for military training. I realised my dream in early 1984.”
After training, Shobasakthi was assigned responsibility over three villages. His tasks were to recruit members, collect funds and gold, and arrange propaganda meetings.
“Militarily, my contribution to the movement was very little,” he said. “I have only participated in a couple of attacks in the island, and also in a couple of self defensive operations.”
The LTTE carried out propaganda against the Thimpu talks. Shobasakthi participated in the campaign by taking on a role in a street theatre play called Viduthalai Kali or Liberation Goddess. Sometimes, it was staged more than ten times a day.

Disillusionment

The Thimpu talks signalled the first death knell to Shobasakthi’s dreams about their struggle. “I felt cheated when the LTTE participated in the Thimpu talks,” he admits. I really lost all heart when I heard that we were going to get provincial councils instead of a Socialist Tamil Eelam. For the first time, a slight shadow of doubt fell across my unassailable faith in the movement. After that, when TELO was attacked and even though I also participated in it, I was in a very disturbed state of mind about where we were going.”
He recalls being in turmoil and not knowing what to do. At the time, Shobasakthi was a member of Gnanam Amman’s team. “To this day, I consider him a respected comrade,” he said. “He left the movement in mid 1986. In a few days, when the Tigers tried to arrest him, he took cyanide and died.”
Gnanam’s death was a severe blow to Shobasakthi. “Even then, I did not contemplate leaving the movement,” he said. “I thought that the Tamil people had no one else to turn to even though there were problems within the Tiger movement.”
After Gnanam, two authoritarian men took over the running of his unit. Ordinary cadres like Shobasakthi were treated like unpaid coolies. “I was already in great turmoil and was naturally rebellious,” he said. “I could not, for the life of me, function as an enslaved liberation fighter.”
The Tiger movement had rigid hierarchies. “There was no opportunity to complain about my leaders in my unit to people above,” Shobasakthi said. “The dissatisfaction I had with the movement then began to grow fast.”

Tortured

“After I left them, the movement detained me and my close friend Uruthiran (at that time ex PLOTE cadre) on the false charge that we had dug out the claymore mine that they had planted for the army,” he related. “We were kidnapped and kept in the Tiger dungeon and tortured. It is still a wonder to me...it defies rational explanation... that after 10 days we were released. My close friend Uruthiran died last year in India. One of the dogs that tortured me is living in London now and the other dog lives in Canada.”
The Indian Peace Keeping Forces tried to detain him twice over his past involvement with the LTTE. They jumped his house twice and he fled to Colombo. In 1990, the government sent him to the Mahara prison. A month later, a friend from the hill country bribed an MP and had him released. He fled to Thailand where he spent three years as a refugee. “For a short time, I was a slave to a Tamil mafia boss called Denmark Vikki for basics like food and drink,” he said. “I lost one of my kidneys when I was stabbed in a street fight in Bangkok.” He escaped from Thailand in 1993 and came to France.

Racism in exile

“There is safety for me in exile,” he says today, of his life in France. “I have money to spend on food and drink. This alone is a great luxury for me. When the white man shows me his racism, I never hesitate to show off my black arrogance even for a minute. Apart from that, I have no longing for my land... or for my so called ‘motherland’. This is because I have no happy memories of my ‘motherland’.”
“I still do not own a French passport,” Shobasakthi reveals. “I have thought about obtaining one, many times, but have not set off to do it. I feel that it is not just laziness that has prevented me acquiring French nationality which would be a huge convenience in Europe. Coming to Europe as refugees sometimes could be as risky as trying to escape from the army or the LTTE in Sri Lanka.”
“On their way into France, many refugees have died caught in snowdrifts or drowned in the Atlantic Ocean,” he narrated. “France has thousands of refugees, called ‘Sans Papiers’ who are living like thieves in daily terror of the police. They have no rights and those who get arrested by the police are sent back to the death fields by the French government in the name of deportation.”
“Once you get here, you face French racism everywhere, on the streets, in the shops in the places you work. Sometimes it is subtle; at other times it is very direct. I have worked as a dishwasher, waiter, chef’s assistant in restaurants. I now work filling supermarket shelves.”
“These are the jobs available to us, refugees and immigrants, particularly if we are black. I live in a poor suburb of Paris, where, at night, one hears the constant sound of police sirens, hunting Algerian and African youth.”
“And when I was being interviewed for this paper, from my window I could see a burning car, and the police arriving with screaming sirens trying to chase some of these youths around. Sometimes, they even come in helicopters. The 2005 Paris riots started right under my flat. This is the reality of life in a black suburb of Paris.”

வியாழன், மே 15, 2008

சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று! : சி.ராஜேஸ்குமார்


மகேஸ்வரி வேலாயுதம்
(1953- 2008)

அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பது போல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய, மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர் புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் அவர் துரோகியென்று!

1983 இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கங்களுக்கு ஓடிப்போன காலத்தில் ஒரு வீட்டில் கலந்தாலோசனை நடக்கிறது. அது மகேஸ்வரி அக்காவின் வீடு. மகேஸ்வரி அக்காவின் தாயும் பிள்ளைகளுமாக அனைவரும் தமது குடும்பத்திலிருந்து யாரை இயக்கத்துக்கு அனுப்புவதென்று விவாதிக்கிறார்கள். கடைசியாக மகேஸ்வரியக்காவின் தம்பி கணேஸை இயக்கத்துக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட கணேஸ் TELOவில் இணைகிறார். இதுதான் அந்த குடும்பத்தின் அரசியல் வரலாறு. நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

அதே 1983 காலபகுதியில் மகேஸக்காவும் அவரின் இன்னொரு சகோதரர் கம்பனும் கணேசை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவைசெய்ய தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இது இயக்கங்கள் அதிகாரமயமாக்கப்படாத காலகட்டம், வியாபார ஸ்தாபனக்களாக்கப்படாத காலகட்டம், சரியோ பிழையோ அனைவரும் விடுதலை என்பதை நம்பி இயக்கங்களில் இணைந்த காலகட்டம். அவர்களின் வீடு இயக்க உறுப்பினர்கள் வந்து போக விருந்து படைத்தது. இந்த வரலாறுகள் துப்பாக்கிதாரிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம் ‘துரோகம்’. அதற்குப் பரிசு மரணம். நீஙகள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேசக்கா ஒட்டுக் குழுவைச் சேர்ந்தவரென்று!

வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை அய்ரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் தஞ்சம் கோர அனுப்ப, இராமேஸ்வரமும் மதுரையும் திருச்சியும் நாதியற்றவர்களின் தஞ்ச மடங்களாயின. மகேசக்கா நாதியற்ற அகதிகளின் நல்வாழ்வுக்காகத் தனது பணியை இந்தியாவில் தொடர்ந்தார். இலங்கை அகதிகள் புனர்வாழ்வு அமைப்புக்கூடாக செயற்பட்டு, பின்னர் தனியான அமைப்பொன்றை ஆரம்பித்து தன்னாலான அகதிகள் நலன் காக்கும் பணிகளைத் தொடர்ந்தார். நாதியற்றவர்களின் நலனுக்காக உழைத்த அவருக்கு நீஙகள் கொடுக்கும் வரைவிலக்கணம் ‘தேசத்துரோகி’!

1990களில் ஆயிரக்கணக்கான வாலிபர்களும் யுவதிகளும் அரசபடையினரால் காணாமல் ஆக்கப்பட்டபோது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டபோது மகேசக்கா வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நிற்காமல் களத்திலிறங்கிக் கருமமாற்றினார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமிழ் சட்டதரணிகள் பலர் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் சூழலில் பணம் பற்றிய சிந்தனையற்று விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களை விடுதலை செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுக்கத் தவறவில்லை. சிறைப்பட்டு இருந்தவர்கள் எந்த அமைப்பு யாருக்கு வேண்டியவர்கள் என அவர் பாகுபாடு காட்டவில்லை. சிறைப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் அரசியற் பேதங்களைக் கடந்த ஒரு சமூக சேவகி. நீங்கள் வாய் கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு கைக்கூலி!

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைச் சங்கங்களுக்கு எடுத்துரைத்தவர் மகேசக்கா. தனக்கென்று எதையும் அவர் சேர்த்து வைக்கவுமில்லை. ஐரோப்பாவிலும் கனடாவிலும் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த தமிழர்கள் பலருக்கு ‘அவர்கள் நாடு திரும்பினால் ஆபத்து’ எனக் கூறி தனது கைப்பட கடிதங்களை எழுதி அனுப்பியவர் அவர். அவரது அமைப்ப்பான மனித கௌரவத்துக்கான அமைப்பின் இக்கடிதங்கள் எத்தனையெத்தனை தஞ்ச வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்! நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு அரசாங்க எடுபிடி’!

மகேஸ்வரி அரசாங்கத்தோடு நின்றவர் EPDPக்கு ஆதரவாக நின்றவர் என்று என்னெனவோ எல்லாம் சாக்கு போக்குச் சொல்லி நீங்கள் கொலையை நியாயப்படுத்துங்கள். பிரேமதாஸ அரசுடன் சேர்ந்து நின்று மாற்று இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுட்டு கொல்ல ஒருபோதும் மகேஸ்வரி அக்கா துணை போகவில்லை. ‘சமாதான’ காலகட்டத்தில் நோர்வேயும் ரணில் விக்கிரமிசிங்க அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாற்று அமைப்புகளிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுங்கி குடும்பம் குட்டிகளுடன் இருந்து தம் வாழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட நிராயுதபாணிகள் பலரை மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே குற்றத்திற்காக கொலை செய்வதற்கு உடந்தையாக மகேசக்கா ஒருபோதும் இருக்கவில்லை.

ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்த பரிசு நான்கு துப்பாக்கி சன்னங்கள்! மகேசக்கா அடிக்கடி சொல்வாராம்: “என்னை ஏன் சுடப்போகினம் எனக்கு யாருடனும் பிரச்சனை இல்லை” என்று. அவர் அதீத கடவுள் நம்பிக்கை உடையவர். கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என அவர் முழுமையாக நம்பியவர். தனது தாய் நீண்ட நாள் சுகமில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது தான் தனது தாய்க்கு முன்பே போகப் போகிறேன் என்று தெரியாமல் தான் அவர் தனது சொந்தக் கிராமத்துக்குத் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். எந்தச் சமூகத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்து பணிபுரிந்தாரோ அதே சமூகத்திலிருந்து வந்த இரும்பு வைத்திருந்த ஒரு இரும்பு மனத்தினன் ஒரு செக்கனுக்குள் உத்தரவை நிறைவேற்றினான். அவன் ஒரு இனந் தெரியாதவனாம். இனந் தெரியாதவர்களெல்லாம் இனப் போராட்டம் புரியும் காலமிது. நீங்கள் கொலை நிகழ்ந்த இடம், காலம், மகேசக்காவின் அரசியல் பின்னணி அனைத்தையும் துப்புத்துலக்கி உடனடியாக அச்சில் ஏற்றுகிறீர்கள்… ஒருவிடயத்தை தவிர - அது இனந்தெரியாத ஆயுததாரி!

மகேசக்கா உங்களைப்போல் எத்தனையோ பேர் துரோகப் பட்டத்துடன் எம்மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நீங்களும் இப்பட்டியலில் இவ்வளவு சீக்கிரம் வருவீர்களென நீங்கள் எதிர்பார்க்கவில்லை.. நாங்களும் தான். உங்களைக் கொலை செய்தவனை விடக் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கூட்டத்தின் மேல் நாம் காறியுமிழ்கிறோம் உங்கள் ஞாபகமாக. இதுவே உங்களுக்கு எமது இறுதி அஞ்சலி.
நன்றியுடன் மீள் பிரசுரம்: http://thesamnet.co.uk
போட்டோ: http://www.epdpnews.com

செவ்வாய், மே 06, 2008

Conference on international diaspora respond to Sri lankan
Current situation


"In recognition of the multi – ethnic and multi religious nature of the Sri Lankan society, International Network of Sri Lankan Diaspora commits itself to contribute to achieving a just solution to the current conflict in the island, based on recognition of equal rights, assurance of security and dignity of its people and, fulfilment of their aspirations.
The prolonged conflict has caused tens of thousand of deaths and led to internal and external displacement of tens of thousand of people. Not only there has been erosion of democracy, social justice and, law and order but also the economy and the living
standards have been ruined. The current conflict cannot be resolved by military means.
It can be resolved only by means of:
1.Establishment of peace and democracy through open and transparent negotiations 2.Ending all forms of human and democratic rights violations
3.Ending all form of discriminations and
3. Assuring security and dignity of all its people."


Organised by
INSD (German) and Frimedia (Norway)
Contacts:
Mail: ­frimedianorway@gmail.com
http://www.insdnorway.com/


Conference on international diaspora respond to Sri lankan Current situation

23.05.08-24.05.08, OSLO, NORWAY
The Meeting Language will be English and translation facilities will try to provide.

Please send your registrations before 19th Mai 2008
frimedianorway@gmail.com

'இடி அல்லது இடிப்போம்...'! - - ஆதவன் தீட்சண்யா -'இடி அல்லது இடிப்போம்...'! - - ஆதவன் தீட்சண்யா -

நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.>


'மதுரைக்குப் போகாதீங்க! அங்கே..'
நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க்
இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து
கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள்
பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு
வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட
காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக்
கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும்
நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு
மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான்
வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால்,
தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக
ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த
சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக்
கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள்
குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை
வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில்
தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு
தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும்
மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து
மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார்
சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008
பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை
என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த
ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார
தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக
வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட
காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில்
நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு
முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை
அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு
உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித்
குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல்
பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு
சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே
மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

நன்றிகள்>>>>> கீற்று<<<<
editor@keetru.com
>>>>> பதிவுகள்<<<<< editor@pathivukal.com
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
(புகைப்படம் கே.கணேசன்,நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)

சனி, மே 03, 2008

இலக்கியச் சந்திப்பின் 35வது தொடர்

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்பின் 35வது தொடர் எதிர்வரும் யூன் மாதம் 14ம் 15ம் திகதிகளில் ஜேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடத்தின் விலாசம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தருகிறோம்.

35வது இலக்கியச் சந்திப்புக் குழு
27.04.2008

3 ஆம் ஆண்டு

கலைசெல்வன் நினைவு ஒன்று கூடல்

08.06.2008, ஞாயிற்றுக்கிழமை

144-146 Av. du Président Wilson
93210 La Plaine Saint-Denis
France

தொடர்புகளுக்கு: 0033-1-49978983, 0033-609249699, 0033-661839796
ஒழுங்கமைப்பு: உயிர்நிழல்