புதன், ஏப்ரல் 17, 2013

இலக்கியச்சந்திப்பில் என் அனுபவங்கள்

இலக்கியச் சந்திப்பில் என் அனுபவங்கள்

- நடராசா சுசீந்திரன்


இலண்டனில் ஏப்றில் 6ஆம் 7ஆம் தேதிகளில் நடைபெற்ற 40 ஆவது இலக்கியச் சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். இலக்கியச் சந்திப்பு என்பது உண்மையில் புகலிட சிவில் சமூகத்தின் ஓர் வெகுஜன அமைப்பு. அது இதுகால வரை எந்த மரபு சார் நிர்வாக அமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன் சட்டரீதியாக எங்கும் பதிவுசெய்யப்படவுமில்லை. சமூகம், இலக்கியம், அரசியல் போன்ற விடயங்களில் ஆர்வமுடைய தனி நபர்களின் சந்திப்பாக இது நகர்ந்து கொண்டிருக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சிறுபத்திரிகை ஆசிரியர்கள், ஆக்கதாரகள், வாசகர்கள் போன்றோர் ஒன்றாகச் சந்தித்து, காத்திரமான பல விடயங்களைக் கலந்துரையாடும் ஓர் அரங்காகவே இது தோற்றம் பெற்றது என்பதயும் நாம் மனங்கொள்ளவேண்டும்.

இன்று இலக்கியச் சந்திப்பு எதிர் நோக்கியுள்ள பிரச்சினை


சமூகம், இலக்கியம், அரசியல் போன்ற விடயங்களில் ஆர்வமுடையவர்கள் தவிர்க்க முடியாதபடி மனித உரிமை மீறல்கள், மாற்றுக் கருத்தின் மீதான அச்சுறுத்தல்கள், புலம்பெயர்ந்த பின்பும் தொடரும் சமூக பிற்போக்குத் தனங்கள், கலாசாரக் காவல் என்ற தொனியின் பெயரால் நடைபெறும் அடக்குமுறைகள், ஆயுத கலாசாரத்தின் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக் கெதிராகவும் பேசவும், செயற்படவும் தொடங்கினார்கள்., முள்ளிவாய்க்கால் துயருக்குப்பின் இலக்கியச் சந்திப்பில் இயங்கிய சிலர் இந்தச் சந்திப்பை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவேண்டும் என்று விரும்புகின்றனர். சிலர் இதனை இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை முன்னிறுத்தி எதிர்க்கின்றனர். இச் சந்திப்பின் தொடரை இலங்கையில் நடத்தவேண்டும் என்று கோருபவர்களில் ஒரு சிலர் பாரிஸில் இயங்கும் தலித் மேம்பட்டு முன்ணணியினைச் சேர்ந்தவர்கள், இதனால் அதை ஏற்பவர்கள் , எதிர்ப்பவர்கள் என்பதனை தலித்துக்கள் எதிர் வெள்ளாளர்கள் என்றவாறு இரு கன்னை அரசியல், இலக்கியச் சந்திப்புக்கு வெளியிலும் பொதுப்பரப்பிலும் பரப்பப்படுகின்றது. இலங்கையில் நடாத்த வேண்டுமென்று விரும்பியவர்கள் இதுவரை காலமும் இலக்கியச் சந்திப்பு கடைப்பிடித்துவரும் நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமலும் நாடிழந்து வாழும் புகலிடத்து மனிதர்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்லாமலும் மிகவும் ஏதேச்சையாகவும், யாரும் கேள்வியழுப்பாதபடிக்கும் ஆயத்தங்களையும் பிரச்சாரங்களையும் அறிக்கைகளையும் தயார் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பலவேறு வழிகளிலும், மிகக் குறிப்பாக தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை முன்னிறுத்தி வஞ்சம் தீர்த்துக் கொண்டிருகின்றனர். இதுவே இன்று நாம் எதிர்நோகியுள்ள பிரச்சினை.

நடந்து முடிந்த இலண்டன் இலக்கியச் சந்திப்பில், அதன் சுமூக ஓட்டத்தைக் குழப்பி, இரண்டாவது நாள், அடுத்த இலக்கியச் சந்திப்பு எங்கே நடாத்துவது என்ற முடிவெடுக்கின்ற தருணம் பார்த்து அந் நிகழ்வுக்குத் தலைமைவகுத்து, இலக்கியச் சந்திப்பின் நீண்ட 25 வருட வரலாற்றில் இதுநாள்வரை எவ்வித சம்பந்தமுமேயில்லாத பார்வையாளர்களை திட்டமிட்டுக் கொண்டுவந்து கையுயர்த்தக் கோரி, இனிமேலும் பொருத்த முடியாதபடி இலக்கியச் சந்திப்பினை உடைத்து, உற்சாகமாக இயங்கும் பலரது அரசியல் சமூக அக்கறைகளைத் தகர்த்தெறிந்து மகிழ்கின்றவர்களாக சிலரைக் காணமுடிகிறது. இந்த முனைப்பும் மகிழ்ச்சியும் அடகுமுறையை எதிர்கொள்ளும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு மிக ஆபத்தைத் தரக்கூடிய உட்கூறுகளைக் கொண்டிருகின்றது.
வஞ்சகத் தனமாகவும், அநாகரிகமாகவும் இலக்கியச் சந்திப்பு அபகரிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 வருட கால இலக்கியச் சந்திப்பின் போக்கில் இடம்பெறாத பலவற்றை நாம் நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற 37வது தொடரில் இருந்து இனங் காண்பதன் மூலம் எவ்வாறு ஒரு அபகரிப்பு கருதுகோளில் இருந்து செயலூக்கம் பெறுகின்றது என்று கண்டு கொள்ளலாம். பெருமளவிலான சந்தர்ப்பங்களில் இலங்கையரசைக் கேள்விக்குட்படுத்த விரும்பாத தலித் மேம்பட்டு முன்னணியின் அங்கத்தவர்களே தொடர்ந்த இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டுகுழு உறுப்பினர்களாகவும், இலக்கியச் சந்திப்பினை அடுத்தடுத்து நடத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்களிடமிருந்தே இலங்கைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற விடாப்பிடியான போக்கும், அதனை மறுபரிசீலனை செய்ய எந்தத் தயார் நிலையுமற்ற போக்கும் கடைப்பிடிக்கப்பட்டதுடன். சர்ச்சைகள் எழுந்தவுடன் அதனை இன்னும் மூர்க்கமாகத் தடாலடி அறிக்கைகளும், எதேச்சையான ஆயத்தங்களும் செய்து, மறு கருத்துக் கொண்டவர்கள் மீது பொறுப்பற்ற அவதூறுகளும், பொய்யான குற்றச் சாட்டுக்களும் பொது வெளியெங்கும் விதைக்கப்படுகின்றன.

இலங்கையில் நடத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர்களின் ஒருபகுதியினர் இலங்கையில் நடத்தவிருக்கின்ற இலக்கியச் சந்திப்பு, இயக்கம்-, அமைப்பு-, நிறுவனம்-, கட்சி- என்பவற்றின் தலையீடற்ற, அவை சார்பான உள்நோக்கற்ற, அவற்றுக்கும் அப்பால் தனி மனிதர்களின் வெறும் அப்பாவிதனமான கோரிக்கை என்று பாசங்கு செய்கின்ற அதேவேளை, அக்குழுவின் இன்னொரு தொகுதி அங்கத்தவர்கள் குறிப்பாக யோகரத்தினம், முரளி, தமயந்தி, பானுபாரதி போன்றவர்கள் அதன் மறைமுக உள்நோக்கத்தைப் போட்டுடைக்கின்றனர். இந்த அபகரிப்பைப் புத்திசாதுரியமாக மேற்கொள்ள வேண்டுமென்கிற கபடத்தனமாக நீண்டகால நோக்குக்கொண்டிருந்த ஷோபாசக்தி போன்றவர்கள் மேற்கொள்கின்றனர்.

'இலக்கியச் சந்திப்பு தொடர்ந்தும் புகலிட நாடுகளிலேயே நடைபெற வேண்டும்' என்ற எமது விண்ணப்பம் இரு வகைக் காரணங்களில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒன்று, சுமார் இருபத்து நான்கு வருடங்கள் வரை நடந்த இலக்கியச் சந்திப்பின் ஒரு 37 தொடர்களில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலானது. புகலிட வரலாற்றில் அதன் இடம் ஊறுபடுத்தப்படாதிருக்கவேண்டும் என்ற அக்கறையின்பாற்பட்டது. சிலவேளைகளில் புகலிடத்தில் எமது அகதியாகிப்போன தனிப்பட்ட வாழ்வுகூட அர்த்தமற்றுப் போய்விடலாம். ஆனால் நமது சுமார் 30 வருட கால புகலிட சமூக வாழ்வு என்பதற்கு ஒரு அர்த்தம் இருகின்றது. புகலிடத்தில் முதலாவது தலைமுறை, புகலிட வாழ்வு, எதிர்ப்பு இலக்கியம், எதிர்ப்பு இயக்கம் என்பவை இலக்கியச் சந்திப்புடன் தவிர்க்கமுடியாத கூறுகளாய்ப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இவற்றின் தாற்பரியம் உணரப்படாது, மக்கள்விரோத அரசியலின் பாற்பட்டும் வெறும் மலினமான கேளிக்கை மனப்பாங்கிலும் இலக்கியச் சந்திப்பினை இடமாற்றஞ் செய்து அதன் எதிர்ப்பிலக்கியப் பண்புகளையும் வரலாற்றில் அதன் பாத்திரத்தையும் கேலிக்குரியதாக்கிவிட முடியாது. ஆனால் இன்று அது நடந்துவிட்டதோ என்ற அச்சம் பெரும்பன்மையான் புகலிடச் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு, இலங்கையின் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய ராஜபக்ஷ குடும்ப அரசியற் சூழலும் மற்றும் வடக்குக் கிழக்கில் நிலவும் ஜனநாயக மறுப்பும் மற்றும் தென்னிலங்கையில் அரசால் திட்டமிட்டு வளர்க்கப்படும் முஸ்ஸிம் மக்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதம், சிங்கள கலைஞர்கள், மனித உரிமை வாதிகள், பத்திரிகையாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் கொலை அச்சுறுத்தல்கள், இடப்பெயர்வுகள் இன்னும் கூறவேண்டுமானால் குறிப்பாக வடக்கில் இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்க்கை நடத்தும் துர்ப்பாக்கிய மக்களின் நிலை, பத்திரிகைக் காரியாலயம், அச்சகம் எரிப்பு போன்ற இன்னபிறவான, இலங்கை மீதான ஒரு விரிந்த பார்வையில், அங்கே இலக்கியச் சந்திப்னை நடாத்துவதற்கான அமைவான சூழல் இல்லையென்பதும் நாம் அகதிகளாக வாழுகின்ற நாடுகள் பல இலங்கையில் நடைபெறப் போகும் சர்வதேச மகாநாடுகளையே பகிஸ்கரிக்கக் கோரும் இந்த சந்தர்ப்பத்தில், இலக்கியச் சந்திப்பை அங்கு நடாத்துவது இலங்கை அரசின் இன்றைய போக்குக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்றும் நாம் சொல்லிவருகின்றோம்.

உண்மையில் எமது இந்த விண்ணப்பம் நீண்டகாலம் பங்குகொள்பவர்கள்; அதிக இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியவர்கள்; அதிக சந்திப்புக்களில் கலந்து கொண்டவர்கள் என்கின்ற தார்மீக அடிப்படையிலான உணர்வினாலேயே முன்வைக்கப்படுகின்றது, இலக்கியச் சந்திப்பு எங்கள் உடமை, உரிமை என்ற வகையிற் கோரப்படவில்லை.

இலங்கையில் நடைபெறும் இன்றைய நிலைமைகளை எதிர்த்து இயங்குவதற்கு சிறு வெளிகள் இருக்கின்றன என்பதை அரசியல் அவதானிகளும் மற்றும் சிவில் சமூகச் செயற்பட்டார்களும் குறிப்பிடுகின்றனர்."காலி இலக்கிய விழா- 2012" காலியில்- இலங்கையில் இடம்பெற்ற நாட்களில் பிரகீத் எக்னாலிகொட(அரச படையினரால் கடத்திக் கொலைசெய்யபட்ட கலைஞன், காட்டூனிஸ்ட்) அவர்களின் மனைவி சந்தியா எக்னாலிகொட போன்றவர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்ய முடிந்துள்ளது. ஆனால் இன்று இதே "காலி இலக்கிய விழா-2013" என்ற நிகழ்வு அடுத்த வருடம் வரை பின்போடப்பட்டுள்ளது. எதிர்த்து இயங்குவதற்கு உருவாகிவரும் சிறு வெளிகளை உரியமுறையில் சிவில் சமூகத்தினர் பயன்படுத்தவேண்டும் என்பதும் அதற்கு நாங்கள் அவர்களுடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமே எனினும், அந்த இடைவெளியை புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இலங்கை அரசை ஆதரித்த் நிலைப்பாட்டை எடுப்பவர்கள், ஆக்கிரமித்துவிடக் கூடாது. புகலிடத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயிரம் செயற்பாடுகள் இன்னமும் நிலுவையில் தான் இருக்கின்றன. இங்கிருந்து இயங்குவது அங்கிருப்பவர்களுக்கும் மேலும் பலம் கொடுக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எனவே அங்கே கிடைக்கப்பெறும் சிறு அரசியற் குறுவெளியில் இயங்குவது அங்குள்ள உள்ளகக் குழுக்களுக்கானதே தவிர, வெளியில் இருந்து வலிந்து சென்று பயன்படுத்துவதற்காகவல்ல. அப்படிக் கதையளப்பது மிக மோசடியானது.

எமக்கு மத்தியில் தோன்றிய ஆயுதக்குழுக்கள், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் உலகெங்கும் வெகுஜன அமைப்புக்களைக் கைப்பற்றிவந்தமை நாம் பெற்ற உயிர்கொல்லி அனுபவங்களில் ஒன்று. பின்னர் புலிகள் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டபோது அதற்கெதிராகத் தன்னிச்சையாகக் குரல் கொடுக்க சாதாரண வெகுஜனப் பொது அமைப்புக்கள் இருக்கவில்லை. அவற்றுக்கும் இலக்கியச் சந்திப்பினை அபகரித்த இன்றைய செயற்பட்டிற்கும் வேறுபாடும் அதிகம் இல்லை. மேலும் தலித் மேம்பட்டு முன்னணியினரும் மற்றும் இக்குழுவில் இடம்பெறும் பலரும் இலங்கையரசின் ஆதரவாளர்கள் என்பதும் ஒன்றும் இரகசியமான விடயமுமல்ல. அதன் பல அங்கத்தவர்களின் தொலைக்காட்சி, ரேடியோ நேர்காணல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
இலக்கியச் சந்திப்பு அனைத்து அதிகாரங்களையும் போரினையும் எதிர்த்தே வந்திருகின்றது. ஆனால் காலத்திற்கு காலம் ஒரு சிலர் தங்களது அரசியல் நலன்களை முன்னிறுத்தி இலக்கியச் சந்திப்புக்கு வேறு முகங்களைக் காட்ட முயற்சித்து வந்திருக்கின்றனர்.

ஒரு குறித்த காலவரைக்கும் ஒரு நிரந்தர நிர்வாகமே இல்லாத, எந்த அரசியற் குழுவினதும் அணி வலுத்துவிடாது (அணிகள் சாராது), மனிதர்களை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்கின்ற, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளபோது அது மோதும் களமாகவும் அதன் பின்னர் அது நட்பின் தளமாகவும் இது காலவரை செயற்பட்டு வந்த இந்த இலக்கியச் சந்திப்பு, இந்த 40 ஆவது இலக்கியச் சந்திப்பில், அந்தத் தடயங்களுக்கே இடம் வைக்காது முடிந்து போனது மிக அவலமானது. 40 ஆவது இலக்கியச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுவிடக்கூடாது என்ற பழிவாங்கும் போக்குக்கு ஏற்ப திட்டமிட்ட சூழ்ச்சிகள் பின்னணியினரால் மேற்கொள்ளப்பட்டதை இலக்கியச் சந்திப்பு நடந்த இரண்டு நாட்களிலும் மிக வெளிப்படையாக அவதானிக்க முடிந்தது. இந் நிலைமைகளை அவதானித்தவர்களுக்கு நடந்தவைகளும் நடத்தப்பட்டவைகளும் வெட்ட வெளிச்சமானவையே. இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை எடுத்துச் செலும் சர்ச்சை கிளம்பிய நாளில் இருந்து இறுதி நிமிடங்கள் வரை இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டிருந்த திரு ராகவன் அவர்கள் நடந்து கொண்ட விதம் விகாரமானது; விசனத்துக்குரியது; இலக்கியச் சந்திப்பு தன்னளவிலேனும் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களை அவை கேலிக்குள்ளாக்கியது. இந்தளவு ஜனநாயக விரோதமாக இதுவரை இலக்கியச் சந்திப்பில் யாருமே நடந்துகொண்டதில்லை என்று சொல்வது மிகையானதல்ல.

இவர்களின் இந்தப் பொறுப்பற்ற, அடாவாடித்தனமான நடத்தைகளினால், சுயாதீனமாக முன்வந்து ஒன்றை நடத்துவதற்குப் பின்னால் உள்ள தனி மனிதர்களின் கடும் உழைப்பும், பொருட்செலவும் மலினப்படுத்தப்பட்டதுடன், இன்னும் மோசமாக அவர்களைச் சர்வதேச அளவில் குற்றவாளிகளாக்கிய மோசடியான செயலும் நடாத்திக்காட்டப்பட்டது. உண்மையில் இன்று இலக்கியச் சந்திப்பின் மீதும், அதனோடு தொடர்புடையவர்கள்மீதும் மிக மலினமான வார்தைப்பிரயோகங்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கும் பானுபாரதி என்பவர் ஒரேயொரு இலக்கியச் சந்திப்ப்பில் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். அதுவும் நோர்வேயில் பேர்கன் என்ற இடத்தில் நடந்த சந்திப்பில் மட்டுமே. ஆனால் வெகு அனாசயமாக அவர் சுட்டும் வீம்புச் சொற்கள் மனிதர்களை ஆத்திரமூட்டுவன.

நடந்து முடிந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பில் அடுத்த இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் முழுக்க முழுக்க அநியாயமானது. எந்த ஜனநாயகக் கோட்பாட்டின் பெயராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நடுநிலையாளன் என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் குறித்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தலைவரின் முதல் வசனமே 'இறுதிவெற்றி எமக்கே' என்று, தான் சார்ந்த அணியினரை பிரதிநிதித்துவம் செய்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பினை அதிரடி நடவடிக்கைகளின் மூலம் குலைத்துவிட முயற்சிப்பதாகவே இருந்தது குறித்த அணியினரின் நடவடிக்கைகள். இது இலக்கியச் சந்திப்பின் சுமூகமான சுழலை அச்சுறுத்துவதாகவும், மிகுந்த அசௌகரியங்களைக் கலந்து கொண்டோருக்கு ஏற்படுத்துவதுமாகவே அமைந்திருந்திருந்தன. இறுதியில் எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிந்த இலக்கியச் சந்திப்பின் நிர்வாக பலவீனங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெற்றி தோல்வி மனப்போக்கிலேயே யாவும் நடந்தேறியது. இறுதி நிகழ்வுக்கு திடீரென மண்டபம் நிறைந்த மக்கள் வந்துசேர்ந்தது தற்செயலானது என்று கொள்வதற்கில்லை. இறுக்கமான நிர்வாக சபையினைக் கொண்டிருந்த பொது அமைப்புக்கள், கோவில்கள், தமிழ் மொழிப் பாடசாலைகள் போன்றவற்றை கையகப்படுத்தும் போது எவ்வாறு சர்வதேசமெங்கும் புலிகள் செயற்பட்டார்களோ அச்சொட்டாக அப்படியே அமைந்திருதது இந்த நகைப்புக்கிடமான வாக்கெடுப்பு நாடகம்.

இலக்கியச் சந்திப்பில் உற்சாகமாக இயங்கியவர்கள் பலர் இன்று இறந்து விட்டார்கள், சபாலிங்கம் சுடப்பட்டார். புலிகள் இலக்கியச் சந்திப்பின் மீது மிகுந்த வன்மத்துடன் இருந்தார்கள். (கிளிநொச்சி நந்த வனத்தில் எனக்கும் என் மனைவிக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது) கலைஞர்கள், எழுத்தாளர்கள் பலர் தங்கள் அரசியற் சார்பு நிலைகளினால் இலக்கியச் சந்திப்பினைப் புறக்கணித்தார்கள். கவிஞர்கள் அ. யேசுராசா, சு.வில்வரத்தினம் போன்றோர் அழைக்கப்பட்டபோது இலக்கியச் சந்திப்பு இப்போது புலிகளுடன் அய்க்கியமாகிவிட்டது என்று ஒரு சாராரும், இது மார்க்ஸிய விரோதக் கும்பல் என்று இன்னொரு சாராரும். ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் துணைப்படைகளின் சங்கமம் என்று வேறொரு சாராரும் காலத்திற்கு காலம் வெளியில் இருந்தபடி இலக்கியச் சந்திப்புக்குப் பெயர்கள் சூட்டினர்.
இலக்கியச் சந்திப்பின் வரலாறு நெடுக ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்தவர்கள் பலர் அவர்கள் மனம் நொந்து, சோர்வடைந்து ஒதுங்கிச் செல்லும் வரை விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளை இலக்கியச் சந்திப்பில் அக்கறை கொண்டவர்கள் தொடர்ந்தும் எதிர்த்து வந்திருக்கின்றோம். சமூகச் சிக்கல்கள், அது எவ்வளவு பெரியதாயினும் சிறியதாயினும் அதற்கு நாம் மதிப்பளித்துச் செயற்பட்டோம். எந்த மனிதர்களையும் தள்ளிவைத்து, ஒரே கருத்துடையவர்கள் மட்டுமே சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் முதுகுசொறியும் ஒரு கூட்டத்தின் மட்டதிற்கு நாம் இந்த இலக்கியச் சந்திப்பினைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதுவும் எமது அக்கறைகளில் முதன்மையானது.

இலக்கியச் சந்திப்பு இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே என்றும் செயற்பட்டுள்ளது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டபோது அதனை எதிர்த்தும், இலங்கையில் முஸ்ஸிம் மக்கள் புலிகளின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோது அதனை எதிர்த்தும் ஆயுதக் குழுக்களினால் அபகரிக்கப்பட்ட மனித ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுக்கவும் சிறிய அளவிலேனும் இலக்கியச் சந்திப்பு முயற்சித்திருகின்றது. நிறவாத எதிர்ப்பு, தலித்திலக்கியம், மலையக இலக்கியம், முஸ்லிம்கள், பெண்ணியம் போன்றவை இந்த இருபத்தைந்து வருடகால இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களில் அதிகம் இடம்பிடித்துக் கொண்டவை. உண்மையில் இன்றைய எங்கள் பொது அடையாளம் வெறும் இனம் சார்ந்ததல்ல மாறாக நாம் அகதிகள் என்பதும் எமது அடையாளங்களில் ஒன்றே. மற்றும் இலக்கியச் சந்திப்பு என்பது இலங்கைத் தமிழ் இலக்கியச் சந்திப்பு அல்ல. அவ்வாறு அதனைக் குறுக்கும் எண்ணங்களுக்கு இடமளிக்காமல் இலக்கியச் சந்திப்பினை புகலிட சிவில் சமூகத்தின் பரந்து பட்ட பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான, ஆரோக்கியமான குரலாக வளர்த்துச் செல்லவேண்டும் என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும்.
Facebook entry-I
Facebook entry-II