வெள்ளி, நவம்பர் 27, 2015

இன்னமும் முடிவுறாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசத் திட்டம், லண்டன், ஜூலை 2015

ஆங்கில மூலம்:https://www.colombotelegraph.com/index.php/sri-lankas-survivors-of-torture-sexual-violence/

ஆங்கில மூலம்:பேரா. சார்ள்ஸ் பொன்னுத்துரை சர்வன்
தமிழில்: நடராசா சுசீந்திரன்”சித்திரவதைக்குள்ளாகி வலியின் அதிஉச்சியிலும் அதன் கொலைக் கரங்களின் பிடியிலும் இருந்து உயிருடன் தப்பிப்பிழைத்தவர்கள், தமக்கு ஏற்பட்ட இக்கதிபோல் இனியும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையில் எங்கள் மீது தாராளமாக நம்பிக்கை வைத்துத் தமக்கு ஏற்பட்ட மிகக்கொடூரமான அனுபவங்களை எம்முடன் பகிந்து கொண்ட மனிதர்களுக்கு சமர்ப்பணம்” என்று மேலே சொல்லப்பட்ட இவ்வாய்வறிக்கை காணிக்கை யாக்கப்படிருகின்றது. வெளிநாடுகளில் வாழும் முகமறியாத பலர் பாதிப்புக்களுக்கு உள்ளான இந்த மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்துள்ளனர். உணவாதாரம் வழங்கியும், குழந்தைகளைப் பொறுப்பெடுத்தும், மொழிபெயர்த்தும், தடுப்புமுகாம்களில் இருந்தபோது வந்து பார்த்தும், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றோரைத் தேடித்தந்தும் மானம் மறைக்கவும் குளிரைப் போக்கவும் ஆடைகள் தந்தும் இன்னும் சொல்லப் போனால் வெறுமையின் எல்லையில் சூனியத்தின் குழப்பத்தில் இவர்கள் தவித்தபோது தொலைபேசி அழைப்பின் மறுமுனையில் இருந்து தேற்றியும் (பக்கம் 8) என்று பலவாறு உதவிகள் புரிந்தோரை இவ்வாய்வறிக்கை இனங்காட்டுகின்றது. இந்த ஆய்வறிக்கை ஏற்கனவே வெளியாகிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடான ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ என்ற அறிக்கையினை பெருமளவில் ஒத்திருக்கின்றது.

அடுத்தடுத்த கொடிய இச் சம்பவங்களை வாசிப்பதில் ஏற்படும் சிக்கல் என்னவென்றால் இச் சம்பவங்கள் ஒத்திசைவான சொல்லமைவுகளைக் கொண்டே விளக்க வேண்டியிருப்பதுதான். கைது, சித்திரவதை, பயங்கரமான பாலியல் கொடுமைகள், விடுவிக்கக் கோரப்படும் கப்பம், இலஞ்சம் போன்ற ஒத்திசைவான இவ்வகைச் சொல்லமைவுகள் இலங்கையரசின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் யாவும் பலவாறு திட்டங்கள் தீட்டி நடைபெறுகின்றன என்பதையும் இந் நடவடிக்கைகள் பலத்த நிறுவனங்களாகத் தொழிற்படுகின்றன என்பதையும் காட்டும் அறிகுறிகள் என்பதோடு தடுத்துச் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு மத்தியில் கொடூரமான பயங்கரங்களை விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உள்நோக்கமும் கொண்டவை என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. (பக்கம் 16). சகிக்க முடியாத வெறுப்பும் கொதிப்பும், தவிர்த்துவிட வேண்டும் என்ற உணர்வும் இவற்றை வாசிக்கும் போது ஏற்படும் மற்றும் சில அகவுணர்ர்சிகள். உண்மையில் இந்த உணர்ச்சிகளின் பாதிப்பில் நாம் சோர்வடைந்து விடுவோம்.
இவ்வாய்வறிக்கையினை வாசிப்பதென்பதும் அதில் வருகின்ற சம்பவங்களைச் சகிப்புடன் ஜீரணித்துக்கொள்வதென்பதும் என்னால் முடியாத காரியம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சிலவேளை நான் இலகுவில் உணர்வுகளால் பாதிக்கப்படும் எழுபது வயதைத் தாண்டியவன் என்பதும் இதன் காரணமாக இருக்கலாம். நானே இதனை வாசிக்காது, வாசிப்பதில் அக்கறை அற்று இருப்பின், இச் சம்பவங்களின் கொடுமைகளை நேரடியாக, இரத்தமும் தசையுமாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன். சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்களைச் சகித்தே ஆக வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்ட்டார்கள் அல்லவா! நேரடிச் சாட்சிகளையும் அவர்தம் உற்றார் உறவினர்களையும் இந்தச் “சொர்க்கபுரித் தீவில்” பாதுகாத்துக்கொள்வதற்காக இவர்களை இலகுவில் அடையாளங் காணக்கூடியவாறான தகவல்கள் இவ்வறிக்கையிற் தவிர்க்கப்பட்டு உள்ளன. (அடிக்கடி சித்திரவதைக்குள்ளான பலருக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்பட்டோம், எங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தோம் என்ற எந்தத் தகவல்களும் தெரியாது. கொண்டு வரப்படும்போதும் அல்லது அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்போதும் இவர்களது கண்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டே இருந்திருக்கின்றன.) ஆளடையாளங்கள் இவ்வாறு தவிர்க்கப்பட்டதனால் இந்த ஆய்வறிக்கை மிகவும் நுண்மையானதாகவும் அதேவேளை கண்டிப்பாக மறைக்க வேண்டியவற்றை மறைத்தும் எழுதப்பட்டிருகின்றது.
போருக்குப் பிந்திய சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட 180 பேரது நேரடிப் பாதிப்புக்களை ”மிகுந்த அக்கறையுடனும் பாரிய அவதானத்துடனும் மற்றும் பல குறுக்காய்வுகள்” மூலமும் ஆராய்ந்ததன் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது(பக்கம் 6). இந்த அறிக்கையில் சாட்சியமளிக்கின்ற பாதிக்கப்படவர்கள் சர்வதேச போர்க்குற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விசாரணைகளில் பரந்த அனுபவம் மிக்க நிபுணர்களால் நேரடியாக விசாரிக்கப்பட்டார்கள் என்றும் இவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது. இந் நிபுணர்கள் பாதிக்கப்படவர்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களாகக் கேட்டறிந்துள்ளனர். அத்தோடு சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்ட சர்வதேசப்பரப்பில் அறியப்பட்ட உலக மருத்துவர்கள் மற்றும் உளநல நிபுணர்களின் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகள் இந்த நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன (பக்கம் 12). மிக அண்மையில், ஜூலை 2015 இல் நடந்த சம்பவம் ஒன்றும் இங்கே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதில் விபரிக்கப்படுகின்ற பாலியல் வன்புணர்வு மிகக் கொடுமையான வலிதருவது. (முள்ளுக் கம்பியை குழாய் ஒன்றுக்குள் விட்டு அக்குழாயினை மலவாசலுக்குள் திணித்தபின், முள்ளுக் கம்பியை உள்ளிருக்க விட்டு, அக்குழாயினை வெளியே இழுத்து விடுத்தல்) இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவரது நேரடிச் சாட்சியத்தை, அவரைப் பரிசீலித்தபின் வழங்கப்பட்டிருக்கும் மருத்துவ நிபுணத்துவ அறிக்கையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. (பக்கம் 32).

”அவர்கள் கால் இஞ்சி தடிப்பான கூரான முனைகொண்ட வயர் ஒன்றை எனது ஆண்குறிக்குள் செலுத்தினார்கள். நான் வலியால் அலறித்துடித்தேன்”(பக்கம் 98). விபரிக்கவே முடியாத வலியும் வேதனையும் பாதிக்கப்பட்டவரை உண்மையில் முற்றிலுமாகச் சிதைத்துவிடுகின்றது: ”நான் பேரவமானத்தில் எனது தலையக் குனிந்தபடி திரும்பிச் சென்றுகொண்டிருக்கும்போது இராணுவத்தினரும் ஏனையவர்களும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டும் இழிவாக, மோசமாகக் கேலியடித்துக்கொண்டும் நின்றனர். வலியில் துடித்தபடி நான் மண்டபத்திற்கு திரும்பி நடந்தபோது எனது நகர்வு நீண்டுகொண்டே சென்றது. எனது மேற்சட்டையின் இரண்டு பொத்தான்களை மட்டுமே என்னால் ஒருவாறு பூட்டிக்கொள்ள முடிந்தது…எனது பாவாடை முற்றிலும் இரத்தத்தில் ஊறியிருந்தது.” (பக்கம் 31).
இவ்வகை உபாதைகள் ஒருபோதும் கடந்த காலத்தில் நடப்பதில்லை என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். பாதிப்புக்குள்ளானவர்கள் ஒருபோதும் முழுமையாகக் குணமடைவதில்லை என்றும் பாதிப்பின் உபாதைகள் அவர்களது வாழ்வின் எஞ்சிய இறுதிவரை தொடர்ந்து வருவது என்றும் உளவியல் நிபுணர்களும் சமூக-சேவையாளர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். படையினரால் நடத்தப்படும் வன்புணர்வுகள் அதற்குப் பலியாக்கப்படுவரை மிகப்பெரிய விகாரமான வக்கிரங்களினூடு சிறுமைப்படுத்தியும் இழிவு செய்து அவமானப்படுத்தியும் நடைபெறுவது எதற்காக? பலியாக்கப்படுபவர் அவமதிக்கப்படுவதென்பது அவரது மரணதிற்கு அப்பாலும் தொடர்வது. யூலிய சீசர் நாடகத்தின் இரண்டாவது அங்கத்தின் முதற் காட்சியில் வருகின்ற “ஆத்திரத்தில் கொன்று பழிதீர்த்து (வன்மம்) தீர் அதன் பின்னர்” என்ற வாசகங்கள் மனதில் வருகின்றன.

“இறந்த உடலங்களை அவர்கள் உதைத்தார்கள், ஏறி உழக்கி அவற்றின் மீது நடந்தார்கள்[…] நிர்வாணமாகக் கிடந்த ஒருபெண்பிள்ளையின் பெண்குறிக்குள் தடியொன்று ஏற்றப்பட்டிருப்பதைக்கண்டேன். சிப்பாய் ஒருவன் அத்தடியினை ஆட்டி வெளியே இழுத்து மீண்டும் அத் தடியினை அப் பெண்ணின் பெண்குறிக்குள் ஏற்றினான்”. (பக்கம் 49). “இறந்து கிடக்கும் உடல்களை சிறு தடிகளினால் சிதைத்தும், கற்களைச் சிறிய கத்திகளைக் கொண்டு உடல்களின் பெண்குறிக்குள் அவர்கள் திணித்தும் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்” (பக்கம் 50). கோர்டன் வைஸ் அவர்கள் எழுதிய “கூண்டு” என்ற நூலைப் பற்றி சண்டே லீடர் பத்திரிகையின் 2011 ஜூன் 12 ஆம் திகதி வெளியீட்டில் நான் எழுதிய விமர்சனத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தேன். அதில் ற்றெப்பிளிங்கா என்ற இடத்தில் இருந்த நாசிகளின் வதைமுகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரான்ஸ் ஸ்டங்கல் என்ற நாசி ஒருவன் சொல்வதைப் பார்க்கலாம். அவன் விளக்குகின்றான்: (Gitta Sereny அவர்களின் “Into that Darkness” என்ற நூலைப் பார்க்கவும்) ”சிறுமைப்படுத்துவதும் இழிவு செய்து அவமானப்படுத்துவதும் மிகவும் இன்றியமையாத செயற்கூறுகள். “இல்லாவிடின் அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களும் அதற்காக மிகமோசமான காட்டுமிராண்டித் தனங்களை, கொடூரங்களை நிறைவேற்றுபவர்களும் மனிதவிரோத ஈனச்செயல்களைச் செய்வதில் பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்வார்கள்” (சர்வன்)

சக மனித உயிரொன்றின் மனிதத்துவத்தையும் மனித மதிப்பினையும் தன்னிடத்தில் இருந்து அழித்துத்துடைத்துக் கொள்ளாத ஒருவனால் இவ்வாறான மிகக் கொடுமையான காட்டுமிராண்டித்தனங்களை நிறைவேற்றமுடியாது. இழிநிலைக்குச் சிறுமைப்படுத்திவிடுவதால் மனித இறைமை பற்றிய பொதுப்புத்தியில் பகிரப்பட்ட எல்லாவகை அறங்களும் அகற்றப்பட்டு விடுவதோடு மிருகவெறியாட்டம் அனுமதி பெற்றதாகி விடுவதுமல்லாமல் இன்னும் அது பாராட்டப் பெறுவதுமாகி விடுகின்றது.
சக மனிதர்களோடு வாழவேண்டுமானால், அதற்குமுன் அவனோ அவளோ தன்னுடன் தானே வாழ்ந்தாக வேண்டும், தான் வார்த்த தன் சுய-விம்பத்துடன் தான் வாழ்ந்தாக வேண்டும், எப்படியோ தனிமனிதனொருவன் தன் செயல்களின்/நடத்தைகளின் நியாயம் பற்றித் தன்னகத்தே ஏதோவொரு சமாதானம் செய்துகொள்ளத்தான் வேண்டும், தன்னால் கட்டவிழ்த்து விடப்பட்ட, விடப்படுகின்ற கொடூரங்களைச் சரியென நியாயப்படுத்த வேண்டும். எனவே இழிவு செய்வதாலும் சிறுமைப்படுத்துவதாலும் அந்த நியாயப்பாடு அவனுக்குக் கிடைத்து விடுகின்றது. இழிவு செய்வதும் சிறுமைப்படுத்துவதும் தருகின்ற பெறுபேறு அது. இன்னும் சொல்லப்போனால் பரிதாபத்துக்குரிய, கையறுநிலையில் தவிக்கின்ற, மரண பயத்தாலும் மற்றும் வலியாலும் ஓலமிடும் தனிமனிதர்களின் எல்லாவகை மனித இறைமைகளும் தடயங்கள் எதுவுமற்று தூக்கிவீசப்பட்டு, இழிவின் அதிஎல்லையில் அம்மனிதம் விடப்படுகின்றபோது அவன் தன் கொடுஞ்செயலுக்கான காரணத்தை, நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறான். இது ஒரு பயங்கரச் சுழற்சி வட்டம். செயல்களின் விளைவுகளை நியாயப்படுத்துகின்ற சுழற்சி வட்டம். நியாயம் என்பது மீண்டும் செயல்களை, செயல்களின் விளைவுகளை ஊக்குவிக்கின்றது. இவ்வாறான மிருகத்தனங்கள் செய்வது வேறும் சில, அரசியல்சார் பரிமாணங்களையும் கொண்டிருக்கின்றது. “எப்படி உன்னைச் சித்திரவதை செய்தோம் என்று உன் இனத்திற்கு நீ போய்ச் சொல், அப்பொழுது தான் அவர்களில் எவருக்கும் விடுதலைப் புலியாய் இருக்கும் எண்ணம் ஒருபோதும் கனவிலும்கூட வரமாட்டாது.” (பக்கம் 84) என்கிற இறுமாப்பும் மறுபுறத்தில் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் சொல்லிவிடக்கூடாது என்று பாதிப்படைந்த இதே நபர் அவர்களால் எச்சரிக்கப்படுவதும் நடைபெறுகின்றது. ”தமிழ்ப் பெண்களுக்கு நான் ஒன்றே ஒன்றைத் தான் சொல்லவிரும்புகின்றேன். நீங்கள் போராட்டம் என்று ஒருபோதும் எழுந்து விடாதீர்கள் என்பதே அது என்று அவள் கூறினாள்” (அதே பக்கம்)

இத்தனை கொடிய பேயாட்டத்தின் மொத்த வடிவமாக இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்ஷ அவர்களையே சரியோ பிழையோ இனங்கண்டுள்ளது. சித்திரவதை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை ஊக்குவித்து இக்கொடுமைகளைப் புரிகின்ற கொடியவர்களுக்கு சட்ட விலக்களித்துப் பாதுகாப்பு வழங்கி வந்தது இவன் என்றே குற்றஞ்சாட்டுகின்றது. ”தங்களால் கொடுமைப்படுத்தப்படுபவர்களுக்கு முன்னால் தங்களது தோற்றத்தை, அடையாளங்களை மறைக்க வேண்டிய தேவை இந்தச் சூத்திதாரிகளுக்கு ஏற்பட்டதில்லை.” (பக்கம் 40) ”நாங்கள் ஒருபோதும் எங்கள் முகத்தை மறைக்கவில்லை. எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. எங்களை அடையாளம் காட்டினாலோ அல்லது எதிர்காலத்தில் எங்கள் செயல்களுக்கு நீதிமன்றம் செல்லவேண்டும் என்ற பயமோ எங்களுக்கு இல்லை.” ( பக்கம் 63)
தனியாகப் படைதரப்பினர் மட்டுமே சித்திரவதைகளையும், பாலியல் வன்கொடுமைகளையும் திமிருடன் பயமின்றிச் செய்யமுடியும். ஆனால் அவற்றுக்கும் அப்பால் அதாவது பாலியல் மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பணவேட்கையும் இலஞ்சம் கறக்கும் மூர்க்கமும் மிக முக்கியமாக இருக்கின்றது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இராணுவம், கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆட்கடத்தல் பேர்வழிகளோடு கூட்டுச் சேர்ந்து இயங்குகின்றனர் என்றும், இவர்கள் பாதிக்கப்பட்ட ஒருவரை நாட்டை விட்டு வெளியேற விடுவதற்கு உறவினர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை பணயப் தொகையாகவும், இலஞ்சமாகவும் பெறுகின்றனர் (பக்கம் 46) என்றும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது.

அதிகாரம் என்பது இறுதி இலக்கினை அடைவதற்கான ஒரு வழிமுறை என்பது சிலவேளைகளில் நல்லதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் இந்த அறிக்கையில் வருகின்ற குற்றச்செயல்களின் அடிப்படையாக இருப்பது எதுவென்று பார்த்தால், அதிகாரமே கருவியாகவும் அதுவே இலக்காகவும் இருவாறாகவும் தொழிற்படுகின்றது. அதிகாரத்தின் நிமித்தமே அதிகாரம்! பலவீனமானவர்களை அடித்து நொருக்கவும் அதிகாரம், இழிவுபடுத்தவும் அதிகாரம், சித்திரவதை செய்யவும் அதிகாரம், வண்புணர்ச்சி செய்யவும் அதிகாரம், பணம் சூறையாடவும் அதிகாரம்.

போரின் முடிவினைப் பற்றிய பாரபட்சமற்ற விசாரணை நடைபெறாதன் விளைவாகச் சமாதானம் நிலவுகின்ற (என்று சொல்லப்படுகின்ற) காலத்திலும் மனித உரிமை மீறல்கள் சம்பவித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றினையே இவ்வறிக்கையும் பரிந்துரை செய்கின்றது. போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கு சட்டப்பாதுகாப்பும் குற்றஞ்சுமத்தாத விலக்களிப்பும்(immunity) பாதுகாப்புப் படையினர் ”மனிதவிரோதக் கொடுங் குற்றச்செயல்களைத் தொடர்ந்து புரிவதை ஊக்குவிக்கின்றது” (பக்கம் 9). 8ம்திகதி ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ய்ப்பட்டுள்ளார். ஆனால் துயரம் என்னவென்றால் திட்டமிட்ட ஒழுங்கமைவிலும் பரந்தளவிலும் நடைபெறும் மனிதவிரோதக் குற்றங்கள் மட்டும் நிற்கவில்லை (அதே பக்கம்). சித்திரவதையும் பாலியல் வன்கொடுமைகளும் குறைவில்லாமலும் எவ்வித தங்குதடையுமின்றியும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அரசால் வழங்கப்படுகின்ற சட்டப்பாதுகாப்பும் குற்றஞ் சுமத்தாத விலக்களிப்பும்(immunity) தமது செயல்களுக்கான நிறை அங்கீகாரமாகவே பாதுகாப்புப் படையினர் புரிந்துகொள்கின்றனர். நீண்டகால அரசியல் வாதிகளையும், இராணுவ உயர் அதிகாரிகளையும் விசாரணைக்கு இழுத்துவிடும் என்பதாலோ என்னவோ இவற்றுக்கெதிராக நியாயம் கோரிய போராட்டங்களைத் தென்னிலங்கையிலும் காணமுடியவில்லை (பக்கம்11).

மார்ச் 2014 இல் எமது அறிக்கையில் காணப்பட்ட கண்டுபிடிப்புக்களும் மற்றும் சர்வதேசச் சுயாதீன அமைப்புக்கள், நபர்களின் அறிக்கைகளில் கண்ட மேலும் பல கண்டுபிடிப்புக்களும் மற்றும் ஆதாரங்களும் வெளிக்கொண்டு வரப்பட்ட போதுங்கூட விசாரணை நாடாத்த, மனித உரிமை மீறல்களைத் தடுக்க, தண்டனை வழங்க அல்லது தமிழர்கள் மீது திட்டமிட்ட ஒழுங்கமைவிலும் பரந்தளவிலும் நடைபெறும் சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த ராஜபக்ஷ அரசாங்கமோ அன்றி சிறிசேன அரசாங்கமோ எதுவித முன்னேற்றகரமான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை (பக்கம் 22). பாதுகாப்புப் படையினரால் அரசின் அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களும், கடத்தல்களும், சித்திரவதைகளும், அச்சுறுத்திப் பணம் கறக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்துவிட்டன. (பக்கம் 25)

தமிழர் ஒருவரின் குடும்பத்தில் அவரது தந்தையார் மட்டுமே இலங்கையில் கடைசியாக எஞ்சியிருந்தார். ஆனால் அத் தமிழர் வெளிநாடுகளின் பல வெகுஜன ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததன் காரணமாக அவரது தந்தையார் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டார். அத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் அவர் மரணமாகி விட்டார் (பக்கம் 23). சர்வதேச அளவில் சாட்சிகளை மௌனமாக்கிவிடுவதன் மூலம் இழைப்படுகின்ற குற்றச்செயல்கள் மறைக்கப்படுகின்றன. அதேவேளை சட்டப்பாதுகாப்பும் குற்றஞ்சுமத்தாத விலக்களிப்பும் (immunity) இவர்களைப் பாதுகாப்பதுடன் மேலும் சித்திரவதைகள் செய்வதற்கும், பாலியல் வன்புணர்வுகள் புரிவதற்கும், அச்சுறுத்தியோ கடத்தியோ கப்பம் பெறுவதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு அனுமதிச் சீட்டினை வழங்கி நிற்கின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல் முறைகளும் உலகளாவிய ரீதியில் சாட்சிகளை, பாதிப்புற்றவர்களை மௌனமாக்கிவிடுவதில் நிறைந்த பலன்தரும் உத்திகளாகும். இதன்மூலம் தொடர்ந்தும் இழைப்படுகின்ற குற்றச்செயல்கள் மறைக்கப்படுகின்றன. அதேவேளை மிக நீண்டகாலமாக நிலவிவரும் குற்றஞ்செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி வரும் கலாசாரமும் இலங்கையில் தங்குதடையின்றிப் தொடந்தும் வளர்ந்துவருகின்றது (பக்கம் 26). அக்டொன் பிரபு (1834-1902)அவர்களின் கூற்று ஒன்று உள்ளது. அதிகாரத்தினைக் கையகப்படுத்தி அதனைத் தம் சகலவற்றுக்குமான கருவியாக்குபவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”அதிகாரம் ஊழல்கள் புரிவதற்கு வழிவகுக்கும். அதிகார உச்சம் அதாவது எதேச்சாதிகாரம் ஒட்டுமொத்த ஊழலையே கொண்டுவந்துவிடும்” என்பார்.

இந்த அறிக்கையினை வாசிக்கின்றபோது பாதிப்புக்குள்ளான தமிழர்கள்- பெண்கள், ஆண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது தெளிவாகத் தெரியவருகின்றது. எல்லாவகைப் பொது அறங்களும் மற்றும் மனிதத்துவமும் அற்றுப்போன பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது பிரயோகிக்கும் முற்றுமுழுதான அதிகாரத் திமிரை இந்த அறிக்கையினை வாசிக்கின்றபோது என்னால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அவர்கள் தங்களையிட்டு வெட்கப்படவேண்டியவர்கள். உண்மையில் தாம் சார்ந்து, தாம் உரிமை பாராட்டும் தம் மதம் சார்ந்து, இவர்களுக்குத்தான் நாம் சேவையாற்றுகின்றோம் என்ற தம் மக்கள் சார்ந்து, தங்களைப் பெருமையுடன் அடையாளப்படுத்தும் தம் கலாசாரம் சார்ந்து இவர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டியவர்கள்.
ஆர்ச் பிஷப் டெஸ்முண்ட் டூட்டூ அவர்கள் சொல்வார்கள்: ”அடக்குமுறை நிகழ்கின்றபோது நாம் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிடின், விளைவு நாம் அடக்குமுறையாளர்களின் பக்கமே சார்ந்துவிடுகின்றோம்”. இதனையே ஊழல் போன்றவற்றுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எவரொருவர் ஊழல்மலிந்த நிலைகளில் இருந்து ஆகக் குறைந்தது, தன்னை விடுவித்துக் கொள்ளவில்லையோ அல்லது மௌனியாக இருக்கின்றாரோ, அவரும் அதே ஊழல் நிலையின் அங்கத்தினர் ஆகிவிடுவார். உண்மையில் இவ்வகை ஊழல் நிலைமைகளின் போது நாம் அதில் இருந்து விலகியிருப்பதும் நாமும் அதுவாகிவிடாமலிருப்பதும் மிகக் கடினமானது அல்லது சாத்தியமே அற்றது. தப்பிப்பிழைத்திருத்தல் என்பது வாழ்வின் வெற்றி என்றோ அன்றி முன்னேற்றம் என்றோ சொல்லிவிடமுடியாது. மாறாக ஊழல் நிலைமைகளில் சில மட்டங்களில் அந் நிலைமைக்கு ஏற்ப பங்காளியாகிவிடுவதற்குத் தான் மக்களும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஒருவகையிற் கையறு நிலையில், நம்பிக்கையிழந்து வாழ்வதுமட்டுமில்லாமல், பலவழிகளில் அவர்களும் ஊழல்மலிந்தவர்களாக மாறிவிடும் ஆபத்திலுமிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக: தமிழர்களின் பெரிய வலைப்பின்னல் ஒன்று பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் தரும் அமைப்பாகச் செயற்படுகின்றது(பக்கம் 48). யாழ்ப்பாணத்தில் இவ்வாறான தகவலாளி ஒருவர் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் (பக்கம் 106). ”இயக்கத்திற்கு இளைஞர்களைத் திரட்டி அவர்களைப் போராட்டக் களத்திற்கு அனுப்பி, அவர்களைக் குண்டுகளுக்கு இரையாகிப்போக வைத்துவிட்டு, எம்மை அழித்துவரும் பாதுகாப்புப்படையினருடன் இன்று வெறும் காசுக்காக இணைந்து செயற்படுவது மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகவே நான் பார்க்கிறேன்” ( அதே பக்கம்).
அறமிழந்து நிற்கும் மக்களிடம் மரபார்ந்த அறங்களை எதிர்பார்ப்பது கடினமானது தான். முற்று முழுதாகக் குவிந்திருக்கும் அதிகாரம், அது சட்டம், நீதிபரிபாலனம் என்பவற்றுக்கும் அப்பாலான அதிகாரம், ஓர் பேயரச அதிகாரம். மனித விழுமியங்களற்ற காடுமிராண்டித்தனமான அதிகாரம், அந்த எதேச்சாதிகாரம் எவ்வாறு தொழிற்படுமெனில், அதனைக் கையகப்படுதி வைத்திருப்பவர்களை மட்டுமல்ல அதிகாரமே முற்றிலும் அற்ற அதனால் நசுக்கப்படுகின்றவர்களையுங்கூட அது அடிமையாக்கிவிடும். அதன் சீரழிவில் அவர்களையும் தள்ளி இணைத்துவிடும்.
முடிவாக, இந்த அறிக்கையின் 44 ஆவது பக்கதில் காணப்படுகின்ற வாசகங்கள்: போய் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் சாட்சிகள் இன்னமும் இலங்கையில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் பஞ்சத்திலும் பசியிலும் அனுபவப்பட்டவர்கள், குண்டுவீச்சிலும், செல்லடியிலும் மரணத்துள் வாழ்ந்து உயிர்களைத் தக்கவைத்துக் கொண்டவர்கள், தொடர்ந்த இடப்பெயர்வுகளில் வாழ்வைத் தொலைத்தவர்கள், உடல், உளம் காயமடைந்தவர்கள், தங்கள் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள், எல்லாப் பொருண்மையும் இழந்த ஏதிலிகள், 2009 இல் போரின் இறுதி நாட்களில் எண்ணிப்பார்க்கவே முடியாத கொடிய பேரதிர்ச்சிகளைக் கண்டு மனம் பேதலித்தவர்கள், மேலும் போருக்குப்பின்னர் காரணமற்றுப் புனர்வாழ்வு முகாம்களில் பலவருடங்களாக அடைக்கப்பட்டுக் கிடந்தவர்கள், மிகக்கொடூரமான சித்திரவதைகள் பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், குடும்ப அங்கத்தவர் ஒருவருக்காகத் தண்டனைகளை அனுபவித்தவர்கள். இப்படியாக. இவர்கள் அனுபவித்துவரும் நீண்ட கால இன்னல்கள் எ|ண்ணிப்பார்க்கவே முடியாதவை. இன்னும் எல்லாவகை இன்னல்களுக்கும் அப்பால் அவர்கள் தமக்கு நடந்தனவற்றைத் துணிவுடன் எழுந்து சாட்சியமளிப்பது கைகூப்பி வரவேற்கப்படவேண்டியது. இலங்கையில் வாழும் தமது குடும்பத்தினருக்கும் மற்றும் மிக நெருங்கியவர்களுக்கும் இன்னும் பாதுகாப்பு எதுவுமே இல்லாத தமக்கும் ஆபத்துக்கள் வந்து உயிரை மாய்க்கலாம் என்று தெரிந்தும் இவர்கள் சாட்சியமளித்திருக்கின்றனர் என்பதை நாம் எப்போதும் நம் மனதிருத்தவேண்டும்.
இந்த அறிக்கைக்கு “நிறுத்து” என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. காரணமின்றி எதேச்சையாகக் கைது செய்வதையும், சித்திரவதைகளையும் வன்புணர்வுகளையும் நிறுத்தி, மனிதநேயத்தையும், மானுடத்தையும் நோக்கிய விண்ணப்பமாகவும் நான் இதனை நோக்குகின்றேன். நிறுத்துவது மட்டுமல்லாது கவனக் குவிப்பினையும் வேண்டி நிற்கின்றது இந்த அறிக்கை.
”இந்தப் பாதையில் நடந்து போகின்ற அனைத்து வெகு ஜனங்களே , இவை குறித்து உங்களுக்கு கவலை உண்டாகவில்லையா? (புலம்பல் 1:12)

புதன், செப்டம்பர் 16, 2015

ஐ.நா அறிக்கை பற்றிய பத்திரிகைச் சுருக்கம்

ஐ.நா அறிக்கை பற்றிய பத்திரிகைச் சுருக்கம்:


ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்.

ஜெனீவா (16 செப்டெம்பர் 2015)
இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை, நீதியை அடைந்து கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமென்று பரிந்துரை செய்துள்ளது. “எமது விசாரணை, இலங்கையில் நடைபெற்ற குரூராமான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள், அதாவது பாகுபாடற்ற எறிகணைத்தாக்குதல் (ஷெல் தாக்குதல்), நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமலாக்கப்படல், மனிதாபிமானமற்ற சித்தரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், சிறுவர் ஆட்சேர்ப்பு மற்றும் வேறு பாரதூரமான குற்றங்களை வெளிக்கொணர்ந்துள்ளது” என உயர்ஸ்த்தானிகர் சையிட் கூறியுள்ளார். முக்கியமாக, “இவ்வறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்டுள்ள மீறல்கள் முழுச் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை “நம்பகத்தன்மையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய இந்த வரலாற்றுச் சிறப்புடைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்” எனவும் கூறினார். இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களாவன:
1) சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்: 2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயத குழுக்களால் செய்யப்பட்டன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர் என அடையாளம் காணப்பட்டோருள் தமிழ் அரசியல்வாதிகள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதரண பொது மக்கள் உள்ளடங்குவர். நீதிக்கு புறம்பாக இழைக்கப்பட்ட கொலைகள் இனங்காணப்படக்கூடிய வடிவங்களிலேளேயே நடைப்பெற்றுள்ளன. உதாரணமாக, இக்கொலைகள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடி, மற்றும் படைத்தளங்களுக்கு அருகாமையில் நடைப்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டோர், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தோர், மற்றும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டோர் உள்ளடங்குவர். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களப் பொதுமக்களைப் பாரபட்சமற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு உட்படுத்தியதுடன், கல்விமான்கள் மற்றும் மாற்றுக்கருத்துள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை குறிவைத்துக் கொலை செய்துள்ளனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2) பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறை: பாதுகாப்புப் படைத்தரப்பினரால் தடுத்துவைக்கப்பட்டோர் மீது குரூரமான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், இவ்வாறான பாலியல் வன்முறைகள் அதிகளவில் பிரயோகிகப்பட்டன எனும் அதிர்ச்சிகரமான விடயத்தை இவ்விசாரணை வெளிகொணர்ந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்குவர். பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட முப்பது பேரிடம் பதிவு செய்யப்பட்ட துன்பகரமான சாட்சியங்களின் அடிப்படையில் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகளல்ல, அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாகின்றது. பாலியல் வன்முறைகளின் வடிவங்களை நோக்கும் போது, பாலியல் சித்திரவதைகள் விசாரணைகளின் போதும், பாலியல் வல்லுறவுகள் அனேகமாக விசாரணை இல்லாத வேறு சந்தரப்பங்களிலும் நடைப்பெற்றன என்பதை இவ்வறிக்கை விபரிக்கின்றது. பாலியல் சித்திரவதைகள் வெவ்வேறு விதமான தடுப்பு நிலையங்களிலும், பலவிதமான பாதுகாப்பு தரப்பினராலும், யுத்தத்தின் போதும் அதன் பின்பும் இழைக்கப்பட்டுள்ளன. பாலியல் வன்முறைகளை இழைத்தவர்களில் ஒருவர் கூட இன்று வரை சட்டத்தினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை. 3) காணாமலாக்கப்பட்டோர்: காணாமலாக்கப்படல் என்பது பல்லாயிரக்கணக்கான இலங்கையரைப் பல தாசாப்தங்களாக பாதித்துள்ளது. இப்பாதிப்பானது பாதுகாப்புப் படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற 26 வருட யுத்தகாலத்தையும் உள்ளடக்கும். காணாமலாக்கப்படல் என்பது பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரந்த மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்க கூடும் என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த பலர் காணாமலாக்கப்பட்டார்கள் என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவர்களது இருப்பு இன்று வரை கண்டறியப்படவில்லை. பலர், யுத்தத்தோடு நேரடியாக தொடர்பில்லாதவர்களும், பொதுவாக வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, அதன்பின் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். 4) சித்திரவதைகள் மற்றும் வேறு விதமான கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடத்துகைகள்: விசாரணக்குட்படுத்தப்பட்ட தசாப்தத்தில் இலங்கை பாதுகாப்பு படையினர் பரந்தளவில், குரூரமான சித்திரவதைகளை, முக்கியமாக யுத்தம் முடிவடைந்த காலத்தில், இழைத்துள்ளனர். குறிப்பிட்ட சில தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட முறையில் பிரயோகிக்கப்பட்டது என்பதனை வெளிப்படுத்துகின்றது. இவ்வறைகளில் அடிப்பதற்கான இரும்புத் தடிகளும், பொல்லுகளும், நீரில் அமிழ்த்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதற்காகத் தண்ணீர்ப் பீப்பாய்களும், மற்றும் தடுப்பிலுள்ளோரை தொங்கவிடுவதற்கான உழண்டிகளும் காணப்பட்டன. இவ்விசாரணையின் போது சாட்சியமளித்த, பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை விபரிக்கும் போது குறித்த அறைகளின் சுவர்களிலும், நிலத்திலும் இரத்தக் கறைகளைக் கண்டதாகக் கூறினார்கள். 5) சிறுவர் ஆட்சேர்ப்பு, மற்றும் யுத்தத்தில் பாவித்தல், வயது வந்தோர் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு: கிடைத்த தகவலின் அடிப்படையில் யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வயது வந்தோரைக் கடத்தி, வலுகட்டாய ஆட்சேர்ப்பிற்குட்படுத்தினர் எனும் விடயம் தெரியவந்தது. முக்கியமாக, யுத்தத்தின் இறுதிப்பகுதியில் வலுகட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புத் தீவிரமடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும், 2004 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசுடன் செயற்பட்ட கருணா குழுவினரும், பரந்தளவில் சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்து அவர்களை யுத்தத்தில் பாவித்துள்ளனர் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள், வீடுகள், பாடசாலைகள், கோவில்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களில் இருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, அடிமட்டப் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர். யுத்தத்தின் இறுதி மாதங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் 15 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்தனர் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இச்செயற்பாடுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவை போர்க் குற்றங்களாகக் கருதப்படும். 6) பொதுமக்கள் மற்றும் பொது உடமைகள் மீதான தாக்குதல்கள்: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப, அதாவது போரை நடத்துவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப அமையவில்லை. முக்கியமாக, இராணுவ உடமைகளுக்கும் பொது உடமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை மதிக்க வேண்டும் என்று கூறும் கோட்பாடு மீறப்பட்டது என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. மக்கள் செறிவாகக் காணப்பட்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில், அரசாங்கம் உருவாக்கிய யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனைகள், மனிதாபிமான உதவி வழங்கும் நிலையங்கள் ஆகிய இடங்களின் மீது அரச படைகள் எறிகணைத்தாக்குதல்களை நடத்தியதை இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. பொது உடமைகள் மற்றும் யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றாத பொது மக்கள் மீது நேரடித் தாக்குதல்களை நடத்துவது பாரதூரமான சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலாகும். இது ஒரு போர் குற்றமாகக் கருதப்படலாம். யுத்ததில் நேரடியாகப் பங்குபற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பெரும்பாலும் பொது மக்கள் இருக்கும் இடங்களில் இருந்து செயற்பட்டதுடன், இவ்விடங்களுக்கு அருகாமையிலிருந்து தாக்குதல்களை தொடுத்தது, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தகாலத்தில் வலுக்கட்டாயமாக பொது மக்களைத் தடுத்து வைத்திருந்தமையும், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலாகக் கூடும். ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இச்செயற்பாடுகளைக் காரணம் காட்டி, அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அதன் பொறுப்புக்களை தட்டிக் கழித்திருக்க முடியாது. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மதிக்கும் கடமை மற்றைய தரப்பினரின் நடத்தையிலோ, பிரதிகிருதியிலோ தங்கியில்லை. 7) மனிதாபிமான உதவிகள் தடுக்கப்படல்: அரசாங்கம் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், அவர்களின் செயற்பாடுகள், மற்றும் நடமாடும் சுதந்திரத்தின் மீது கணிசமான தடைகளை விதித்து, வேண்டுமென்றே வடமாகாணத்தில் வன்னி பிரதேசத்திற்கு உணவு உதவி, மற்றும் மருத்துவப் பொருட்கள் சென்றடைவதைத் தடுத்திருக்கலாம். இச்செயலானது, பொதுமக்களைப் பட்டினி போடுவதை ஒரு யுத்தமுறைமையாகப் பிரயோகித்திருக்கலாம் என்பதை வெளிக்காட்டுகின்றது. பொதுமக்களைப் பட்டினி போடுவது ஒரு யுத்தமுறைமையாகப் பிரயோகிக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அது போர் குற்றமாகக் கருதப்படலாம். 8) வெளியில் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு, நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டடிருந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை பொது மக்களில் இருந்து வேறுபடுத்தி பிரிப்பதற்காக பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் சர்வதேச விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாது, அம்மக்கள் துஸ்பிரயோகங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. ஏறத்தாழ மூன்று லட்சம் இடம்பெயர்ந்தோரின் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு மேலாக பறிக்கப்பட்டது. மேலும், இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என்பதால், அவர்கள் சந்தேகநபர்களாக நடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இந் நடைமுறையானது, தமிழ் மக்கள் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டார்கள் என்றும், மனிதநேயத்திற்கு எதிரான குற்றமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும் கருதப்பட இடமளிக்கின்றது. இவ்வறிக்கை பல வருடங்களாக நடைபெற்ற உண்மைகளை மறுத்தல், மூடி மறைத்தல், உடனடி விசாரணைகளை நடத்தாமல் விடல், விசாரணைகளை இடைநிறுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், நீதிக்காக அழுத்தங்கள் கொடுத்துச் செயற்படுவோருக்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட்ட மீறல்களை ஆவணப்படுத்துகின்றது. மேலும், இவ்வறிக்கை பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ச்சியாகக் கண்ட தோல்வியின் காரணத்தால் பாதிக்கப்பட்டோர் கோபம், ஐயுறவு மற்றும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை அவதானிக்கின்றது. காரணம், “குற்றங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் காரணமான கட்டமைப்புகள் எவ்வித சீர்திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படாது அதே நிலையில் காணப்படுகின்றன.” குற்றங்கள் இராணுவத்தினராலும், பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்படும் போது அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க இயலாமல் இருப்பது கட்டமைப்புகளின் பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது. “மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எத்தனிக்கும் சட்டவியளாலர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட்ட உரிமை மீறல்கள்” ஆகியவற்றை இவ்வறிக்கை விபரிக்கின்றது. “பொறுப்புக்கூறலை ஒரு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் கையாள்வதாக இப்புதிய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாராட்டத்தக்கது. ஆனாலும், துரதிஸ்டவசமான உண்மை என்னவெனில், இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறை இதைச் செயற்படுத்துவதற்குத் திறனற்றதாக உள்ளது” எனவும் இவ்வறிக்கை கூறுகின்றது. “முதன்மையான விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியங்களுக்கும் பாதுகாப்பு வழங்க, நம்பகத்தன்மையுடைய பாதுகாப்புப் பொறிமுறை இன்றுவரை ஸ்தாபிக்கப்படவில்லை. இரண்டாவது, இலங்கையின் உள்நாட்டு சட்டக் கட்டமைப்பானது பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொள்திறன் இல்லாதுள்ளது. மூன்றாவது சவால் என்னவெனில், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டம், யுத்தம் மற்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பியமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத் துறையும், நீதித்துறையும் சிதைவடைந்துள்ளன.” இவ்வாண்டு தை மாதம் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ள அதேநேரம், “இலங்கை முன்னோக்கி பயணிப்பதற்குத் தசாப்தங்களாக நடைபெற்ற உரிமை மீறல்களின் காரணமாக ஆழமாக வேரூன்றியுள்ள அடக்குமுறை கட்டமைப்புகள், மற்றும் நிறுவன கலாச்சாரங்களை அகற்ற வேண்டும்” என்று கூறினார். “இது ஒரே நாளில் நடைபெறுவதற்குச் சாத்தியமில்லாததால் எவரும் இப்பணியின் கடினத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது” எனக் கூறியுள்ளார். இலங்கையின் வரலாற்றில் அரசாங்கங்கள் காணாமலாக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உறுதி மொழி கொடுத்திருந்தாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமை, மற்றும் இம்மாதிரியான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்த கட்டமைப்புகளில் உள்ள பிரச்சினைகளை வேரோடு அகற்றாமையினால், வெள்ளை வான்கள் தேவையான தருணத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வரசாங்கம் இத்தனித்துவமான வாய்ப்பைக் கைப்பற்றி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதனை இல்லாதொழிக்க வேண்டும், அரச நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் செயற்படும் விதங்களில் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.” கடந்த முப்பதாண்டு காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும், இம்மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்று உத்தரவாதமளிப்பதற்கும் ஒரு முழுமையான இடைக்கால நீதிக் கொள்கையை உருவாக்குமாறு இவ்வறிக்கை பரிந்துரை செய்கின்றது. “உண்மையை மறுக்குமொரு நிலையிலிருந்து, உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்து, ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு” இவ்வறிக்கையை ஒரு வாய்ப்பாக நோக்கும்படி புலம்பெயர் வாழ் மக்கள் உட்பட, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார். “பல வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித உரிமை மீறல்களினாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெறாது தப்பிப்பது சாதாரண மயமாக்கப்பட்டமையினாலும், இருதரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களின் மனவடுக்கள் சீழ் கூட்டி ஆழமாக பதியப்பட்டுள்ளன” என்று சையிட் கூறினார். “அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்து இக்காயங்களை ஆற்றாவிட்டால், இவர்களின் தொடரும் வேதனையானது சமூகங்களுக்கிடையில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி, நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாக அமைவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் புதிய முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.” “அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் மீது பலதரப்பினருக்கும் இருக்கும் அவநம்பிக்கையினை குறைத்து எடைபோடலாகாது” என உயர்ஸ்தானிர் கூறினார். “இக்காரணத்தினால் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமாகும். ஒரு தனித்த உள்நாட்டு நீதிமன்ற செயல்முறை பல தசாப்த காலங்களாக நடைபெற்ற உரிமை மீறல்கள், முறைகேடுகள் மற்றும் உடைத்தெறியப்பட்ட வாக்குறுதிகளால் உருவாக்கப்பட்ட நியாயமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மாட்டாது”. “மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக உள்நாட்டு குற்றவியல் நீதிக்கட்டமைப்பு, சீர்திருத்தப்பட்டு வலுவாக்கப்பட வேண்டும். ஆனால், இச்செயல்முறையைப் பூர்த்தி செய்வதற்கு பல்லாண்டு காலம் தேவைப்படும். ஆகையால், இச்சீர்திருத்தம் சிறப்புக் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு இணைவாகச் செயற்படுத்தபட வேண்டுமேயன்றி அதற்குப் பதிலாக அல்ல. இவ்வகையான கலப்பு நீதிமன்றம், தேவையான சீர்திருதங்களை ஊக்குவித்து, பொது மக்களின் நம்பிக்கையையும் பெற்று, இலங்கையை நீதியான ஒரு புதிய பாதையில் இட்டுச்செல்லலாம். ” ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு (OHCHR) 2014ம் ஆண்டு மனித உரிமைப் பேரவை, இலங்கையில் இருதரப்பினராலும் 2002ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை இழைக்கப்பட்ட பாரிய மீறல்கள், மனித உரிமை துஸ்பிரயோகங்கள், மற்றும் அதைச் சார்ந்த குற்றங்களை விரிவாக விசாரணை செய்யும் பொறுப்பைக் கொடுத்தது. இந்த விசாரணையின் அறிக்கை, நேரடிச்சாட்சியங்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட்ட நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப்புகைப்படங்கள் (இவற்றில் பல பொதுமக்களின் பார்வைக்கு/பயன்பாட்டிற்கு எட்டாதவகையிலுள்ளன), ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து (இவற்றில் மூவாயிரம் வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புகள் மற்றும் வெளியிடப்படாத அறிக்கைளும் உள்ளடங்கும்) இவ்விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. OHCHR விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மேலாக, முன்னைய அரசாங்கம் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் கண்காணிப்புகளால் இவ்விசாரணையுடன் மக்கள், முக்கியமாக வடக்கிலிருப்போர், ஒத்துழைப்பதைத் தடை செய்தமை, ஒரு சவாலக அமைந்தது. இவ்வறிக்கை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது : 1) ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகள் அறிக்கை (A/HRC/30/61) 2) அதனுடன், OHCHR இன் இலங்கை விசாரணை அறிக்கை (A/HRC/30/CRP.2) இரண்டு பாகங்கள், தகவல் தாள்கள், மற்றும் விசாரணை தொடர்பான ஏனைய ஆவணங்களை இங்கு பெறலாம் : http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

வியாழன், ஏப்ரல் 30, 2015

நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:

மொழிபெயர்புக் கட்டுரை, மூலம்: ஆங்கிலம் 

  ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: 

இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ 
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 
ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) 


 இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங்கவேண்டியிருக்கின்றது. மனதை உறுத்தும் அதிர்ச்சியும் வெறுப்புமான உணர்வுகளின் ஆக்கிரமிப்பும், விட்டு விலகித் தப்பிக்க முடியாதபடிக்கு மனத்தளவிலாவது தூரவிலகி ஓடிவிடவேண்டும் என்ற விருப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. மனிதர்களின் ஆண்குறிகளுக்குள் கூரிய ஊசி செலுத்தப்படுகின்றது என்று அறிந்து கொள்ளுகின்ற போது அறங்கள் நோயில் இருப்பதையும் நோயில் இருப்பவற்றவற்றின் மீது அளவற்ற வெறுப்பும் தவிர்ப்பும் மேலோங்கி அழகியலின் மீதும் நமக்கு வெறுப்பே உருவாகின்றது.

ஒருவரின் வாக்கு மூலம் இப்படி இருக்கின்றது: ”சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன. [...]வெளிநாட்டிற்கு வந்த பின்னரே இந்தக் குண்டுமணிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு மருத்துவர்களால் அகற்றப்பட்டன. (பக்கம்4) யோகலிங்கம் விஜிதா என்ற 27 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கடினமான, கூம்புவடிவ வாழைப் பொத்திகள் பெண்குறிக்குள் திணிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். (பக்கம்19) 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த முருகேசபிள்ளை கோணேஸ்வரி என்பவர் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கும்பலாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலைசெய்து அவரது பெண்குறியில் வெடிகுண்டை வெடிக்கவைத்து கும்பல் வன்புணர்வு செய்யப்பட்ட எல்லாவகைத் தடயங்களையும் அழித்துவிட்டனர். (அதே பக்கம்)

 “சுப்பிரமணியம் கண்ணன் என்ற வவுனியாவைச் சேர்ந்த […] நபரது மலவாசலூடாக முள்ளுக்கம்பி செலுத்தப்பட்டது” (பக். 21) மிகவும் கூரூரமானதும் மிக கொடூரமானதுமான இந்த நிகழ்வுகளின் விபரத்தை நான் இங்கே எடுத்துக்காட்டுவதற்கு வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் இவற்றை சர்வ உலகத்திற்கும் வெளிப்படுத்தி, அவர்களின் தார்மீக ஆதரவையும் அதன்மூலம் இவற்றுக்கு எதிராகச் ஏதாவது செய்யப்படவேண்டுமென்ற அவாவையும் பெறவேண்டுமானால் இவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டுத்தான் ஆகவேண்டும். அதுவே மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினரின் (Human Rights Watch) இந்த அறிக்கையின் நோக்கமுமாகும். வாசிப்பதை நிறுத்தி, இந்த ஆவணத்தை மூடிவிட்டு, கண்ணில் படாமலும் மனதை உறுத்தாமலும் எங்கேயாவது தூர எறிந்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்படலாம் என்பதும் ஜதார்த்தமானதும், புரிந்துகொள்ளக்கூடியதும்தான். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த மனித ஜீவிகள் தொடர்ந்தும் தங்களுக்கு நேர்ந்த பயங்கரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளுடனும் மனப்பலவீனங்களுடனும் எங்களுக்கு மத்தியில் வாழவேண்டுமே. இந்த ஆவணத்தை நாம் தூர வீசிவிட நினைப்பது போல் பாதிக்கபட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த இரத்தமும் சதையுமாக அனுபவப்பட்ட இவ்வகைப் பயங்கரங்களை தூரவீசிவிட ஒருபோதும் முடியாது. இயலவே இயலாது. சித்திரவதைக்குள்ளனவர்கள், அவ்வாறு பயங்கரக் கொடூரங்களை அனுபவித்தவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை. இவ்வகை அனுபவங்களுக்கு முன்னர் இருந்த நான் என்ற தானை அவர்கள் ஒருபோதும் மீட்டெடுக்கமுடியாது. அவர்கள் இனி என்றென்றைக்கும் சித்திரவதை செய்யப்பட்டவர்களாக, வன்புணர்வு செய்யப்பட்டவர்களாகவே எஞ்சியிருப்பார்கள். நடந்துவிட்ட ஒரு தனித்த நிகழ்வு என்பது உண்மையில் வாழ்நாள் முழுவதற்குமான நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தி விடுகின்றது. 

 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, டில்லி பஸ் ஒன்றில் வைத்து இருபத்தி மூன்று வயதான ஜோதி சிங் பாண்டே என்ற யுவதி கும்பல் வன்புணர்வுக்கு ஆளானதும் அதனால் ஏற்பட்ட காயங்களில் அவர் பின்னர் இறந்து போனதுமான கொடுஞ்செயல் தேசிய அளவிலும் உலக அளவிலும் நீதிகோரி நின்றதற்கு பலவேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு காரணம் அவர், தான், தன் பெற்றோர், தன் வீடு என்ற வாழ்ந்த தனிநபராக அவர் எங்களுக்குத் தெரிவதுமாகும். அவருக்கு நடந்த கொடூரத்தை, வாழ்ந்துகொண்டிருந்த மனிதஜீவனுக்கு ஏற்பட்ட துயரமாக நாமும் அதில் நம்மை இணைத்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த ஆவணப் பதிவில் வருகின்ற நபர்கள் இலங்கையில் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் கட்டவிழ்த்து விடக்கூடிய ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் பயந்து முன்னெச்சரிக்கையாக முகமற்றுப்போனவர்கள், பெயரற்றுப்போனவர்கள். இந்த அறிக்கையின் நோக்கம் உண்மைகளைப் பேசுவதே. எனவே உண்மைகள் திட்டமிட்டவாறு ஈவிரக்கம், அலங்காரங்கள் எதுவுமற்றுப் பதிவாகியிருக்கின்றன. மனிதர்கள் இதற்குக் கொடுக்கும் விலை பற்றி வாசகர்கள் உணர்ந்துகொள்ளவதுடன் அறச்சீற்றம், அனுதாபம் மற்றும் எதிர்ப்புணர்வு போன்றவற்றையும் அவர்களிடத்தில் வேண்டி நிற்கின்றது. ”அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தமும் மனக்குழப்பமும்” என்ற சொற்தொடர் மருத்துவம் மற்றும் மன அமைதி தேவை என்பதைச் சுட்டி நிற்பினும் அது வாழ்வில் பட்ட அனுபவப் பாடுகளைச் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைத்தே விடுகின்றது. 

 இந்த ஆவணத்தின் அறிமுகத்தில், இதில் வாக்குமூலம் கொடுப்பவர்கள் யாவரும் இலங்கையின் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்து இப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். சுமார் 12 மாத காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும், அதாவது அவுஸ்திரேலியா, பெரிய பிரித்தானியா, இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களே இவை. இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவும் 2006 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றவை. இவற்றில் 75 பாலியல் வல்லுறவுகள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன. அதில் 31 ஆண்கள் மீதும், 41 பெண்கள் மீதும், மற்றும் 3 இளம்பராயத்தினர் மீதும் நடத்தப்பட்டவை.(பக்கம்2). இவற்றில் 67 விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன் சுதந்திரமான வைத்திய சாட்சியங்களும் அத்தாட்சிகளும் பெறப்பட்டிருக்கின்றன. 

 பாலியல் ரீதியான வன்முறைகள் பொதுவாகவே பாலியல் ரீதியான மானபங்கப் படுத்தல்களுடன் தொடங்குகின்றன. பலாத்காரமாக நிர்வாணப்படுத்துதல், வெருட்டியும், மிரட்டியும், ஏசியும் அச்சங்கொள்ளவைத்தல், கேலி செய்தல், பெண்கள் குளிக்கும் போதோ அல்லது மலசலகூடம் செல்லும் போதோ அவர்களது அந்தரங்க சுதந்திரத்திற்கு இடையூறாக இருத்தல் போன்றவையே அவை. இவற்றின் உள்நோக்கம் மோசமாக இழிநிலைப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். நாங்கள் உனக்கு ஒரு பாடம் புகட்டுவோம் (புகட்டுவோம் என்ற வார்த்தை இங்கே வதைப்பதும் தண்டனை வழங்குவதும்: பாதிக்கப்படுபவரை இவ்வாறு கொடுமைப் படுத்துவதே சரியானதும் சட்டரீதியானதும் என்பவற்றைச் சுட்டிநிற்கின்றது. அவ்வாறெனில் வஞ்சம் தீர்க்கும் இனமோக நீதியை நிறைவேறும் வெறுங் கருவிகளாகவே வதைப்பவர்கள் தம்மை வரித்துக்கொண்டு, தாம் உள்ளூர மகிழ்ச்சியடைவதற்கும் பாதிக்கப்படுபவரை அதிர்ச்சிதரும் காட்டுமிராண்டித் தனமான கொடூரச் சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தி, பாலியல் வல்லுறவு செய்யும் தமது கொடுஞ்செயல்களையிட்டுப் பெருமிதமுங் கொள்ளலாம். வதைப்பவர்களல்ல, மாறாக பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் என்று சுட்டப்படவேண்டியவர்கள்.) பாலியல் துன்புறுத்தல்கள் “அடிக்கடி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால், பலதரப்பட்ட பார்வையார்கள் முன்னிலையில் இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்கும் பெண் சிப்பாய்களும் பார்த்திருக்க நடத்தப்படுகின்றன”.(பக்.33) சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவும் அப்பாவிகளை வாழ்க்கையில் ஒரு போதுமே கண்டிராதவர்களையும் அறிந்திராதவர்களையும்கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள் என்று அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றன. ஆனாலும் அவ்வாறு அடையாளங் காட்டுதலும் ஒப்புதலளிப்பதும் கூட அவர்களை கொடுஞ் சித்திரவதைகளிலிருந்தும் பாலியல் வல்லுறவிலிருந்தும் காப்பாற்றிவிடுவதில்லை. சில நேரங்களில் பாதிக்கப்படுபவரின் குடும்பத்தினர் காசு கொடுத்தால் மட்டுமே பாதிக்கப்படுபவர் ”தப்பிச்” சென்றுவிட அனுமதிக்கப்படுவார். 

இலங்கை நாட்டில் பொலிஸ் படைப்பிரிவும் கூட மிகுந்த இராணுவமயப்பட்டிருக்கின்றது. அதுபோலவே இராணுவத்தினர் பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இலகுவாகத் தம் கைகளில் எடுத்துச் செயற்படுகின்றனர். இரண்டு படைத்தரப்பினரும் சட்டம், நீதி போன்ற எவ்வித கட்டுப்பாடுகளுமற்று முழுச் சுதந்திரமாக, சட்டப் பாதுகாப்புடன் பாதுகாப்பற்ற அப்பாவி வெகுஜனங்கள் மீது அதிகாரஞ் செலுத்துகின்றனர். தமக்கேற்படும் பிரச்சினைகளை இவர்களிடம் சென்று முறையிட்டால் தம் மீது மேலும் அடக்குமுறைகளும் அநீதியும் கட்டவிழ்த்து விடப்படும் என்ற பயப்பீதியோடுதான் மக்கள் வாழ்கின்றனர். இது நரிகளினதும் ஓநாய்களினதும் குற்றச் செயல்களை வேறு வழியின்றி அவற்றிடமே சென்று முறையிட்டுக்கொள்ளும் ஆடுகளின் தலைவிதியையொத்தது. கைதாகும் ஒருவர் பெருந்தொகைப் பணம் கொடுக்கும் வசதிகளுடன் அல்லது மேலிடத்தில் அலுவல் பார்க்கத் தெரிந்த செல்வாக்குள்ள சிங்களவர்களைத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது போனால் கைது செய்யப்படும் தமிழர்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. (பக். 36) தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்று ஒவ்வொரு தமிழரும் உணர்ந்துகொள்ளும்படியாகத்தான் ”பாதுகாப்புப் படையினர்” என்று சொல்லப்படுபவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 

 பாலியல் வன்முறையின் பிரயோகம் என்பது ஒரு ”குறித்த பொருட்டற்ற நிகழ்வென்றோ அல்லது அயோக்கியச் சிப்பாய் ஒருவனின் ஒழுங்குமீறல்” என்றோ ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இவ்வகைக் குற்றச் செயலுக்காக ஒரு உயர் அதிகாரிதானும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதில்லை. மறுபக்கத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களினாலும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றியும் பாலியல் வல்லுறவு பற்றியும் வெளிப்படையாகப் பேசுவதற்கு தயக்கம் காட்டப்படுகின்றது. ”ஆண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வல்லுறவும் ஆண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலகளும் வெளிக்கொண்டுவரப்படுவதுமில்லை அது பற்றிப் பேசப்படுவதுமில்லை.” இவை பாதிக்கப்பட்டவர்களாலும் வெளியே சொல்லப்படுவதில்லை அவற்றின் சூத்திர தாரிகளாலும் மறைக்கப்பட்டுவிடுகின்றன. மேலும் இவை வெளியே பேசப்படக்கூடாத மூடுபொருளாகவே இருந்துவிடுகின்றன. (பக். 45) 

இறுதியாக, இவற்றைப் பற்றிப் பக்கச் சார்பற்ற சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது இலங்கை அரச தரப்பு முட்டுக்கட்டைகள் போடுகின்றது. இங்கே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை சமுத்திரத்தின் அதலபாதாளம்வரை பரந்திருக்கும் பனிப்பாறையின் வெளித்தெரியும் சிறு நுனிபோன்றவைதான்: அனேகமானவை இன்னமும் சுவர்க்கத்தீவின் மூடிய எல்லைகளுக்குள் மௌனத்தில் புதைந்து அழுந்துகின்றன. இன்னமும் சிறையில் வதைபடும் மனிதர்களை எண்ணிப்பார்க்கும் போது நடுங்குகின்றது. அவர்கள் முகமற்றவர்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளித்தெரிவதில்லை. அவர்களைச் சூழ நிற்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் அவர்களது முனகல்களும் ஓலங்களும் வேறொருவர் செவிகளுக்கும் எட்டுவதில்லை. ஒரு கொஞ்சம் பேர் தாம் பட்ட பாடுகளை இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தும் போது இருவகை உணர்வுகளுக்குள் தள்ளப்படுகின்றனர். ஒன்று அவர்கள் வெளிநாடொன்றில் இருப்பதால் உருவாகும் பாதுகாப்பு உணர்வு மற்றையது அவர்களது அனுபவத்தை விபரிக்கும் போது ஏற்படும் அதே பயங்கரத்தை மீண்டும் பெறும் உணர்வு. “முறைசார்ந்த மற்றும் முறை சாரா புனர்வாழ்வு முகாம்களில் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. (பக். 29, அழுத்தமாக) “பாதுகாப்புப் படையினர் நடாத்தும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசு முரட்டுத் திமிர்தனத்துடன் மறுத்தே வருகின்றது. (பக். 43) 


குடிநீர், உணவு, மற்றும் மருந்துகளுக்கு மிகவும் பற்றாக்குறை நிலைவிய, போர் உக்கிரமாக நடைப்பெற்ற பகுதிகளில் 2009 ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களைத் கட்டாயமாகத் தடுத்து வைத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற முயற்சித்தபோது அவர்கள் மீது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பலமக்கள் கொல்லபட்டிருக்கின்றனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவர்கள் மீது குற்றஞ் சுமத்துகின்றது.(பக்13) மேலும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கையின் நடுநிலை பற்றி ஒருசிலர் கேள்வி எழுப்பக்கூடும். இவ்வறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவிக்கும் விபரங்கள் யாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்குலகத்தவர்களுக்கு தெரிவிக்கும் பொய்த் தகவல்களின் அடிப்படையில் எழுந்தவை என்று நிராகரித்து விடவும் கூடும். ஜார்ஜ் ஆர்வெல் என்ற எழுத்தாளர் “எழுத்தாளர்களும் கடற்பூதமும்” என்ற கட்டுரையில் “ஒரு பிரதியினை நாம் வாசிக்கும் போது ஏற்படும் எமது உணர்வுகளை அப் பிரதியோடு தொடர்பற்ற நாம் வரித்துக்கொண்டிருக்கும் விசுவாசங்களே தீர்மானிக்கின்றன” என்று எழுதியுள்ளார். நடைபெற்றதும் தொடர்ந்து நடைபெறுவதுமான இக் கொடுஞ்செயல்கள் பற்றி அனேக சிங்கள மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் இந்த ஆவணம் அவர்களின் கவனத்தை ஈர்த்து, இக் கொடுஞ்செயல்களுக்கு எதிராக அவர்கள் செயற்பாடில் இறங்குவார்கள் என்பதும், அதன்போது அவர்களின் சுலோகம் “எங்களின் பெயரால் இந்த அநியாங்களை அனுமதிக்கமாட்டோம்” என்றிருக்கும் என்பதும் எமது நம்பிக்கை.

 “இவ்வளவு அறிந்த பின்னரும் என்ன மன்னிப்பு?”
(“After such knowledge, what forgiveness?”)
 -டி.எஸ்.எலியட், முதிர்வு (Grontion)என்ற கவிதையில் 


 (தமிழில்: ந.சுசீந்திரன்) 
South Asia Analysis Group: Paper No. 5904. 2 April 2015
 Colombo Telegraph: 3 April 2015