வியாழன், ஏப்ரல் 30, 2015

நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:

மொழிபெயர்புக் கட்டுரை, மூலம்: ஆங்கிலம் 

  ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: 

இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ 
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 
ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) 


 இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங்கவேண்டியிருக்கின்றது. மனதை உறுத்தும் அதிர்ச்சியும் வெறுப்புமான உணர்வுகளின் ஆக்கிரமிப்பும், விட்டு விலகித் தப்பிக்க முடியாதபடிக்கு மனத்தளவிலாவது தூரவிலகி ஓடிவிடவேண்டும் என்ற விருப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. மனிதர்களின் ஆண்குறிகளுக்குள் கூரிய ஊசி செலுத்தப்படுகின்றது என்று அறிந்து கொள்ளுகின்ற போது அறங்கள் நோயில் இருப்பதையும் நோயில் இருப்பவற்றவற்றின் மீது அளவற்ற வெறுப்பும் தவிர்ப்பும் மேலோங்கி அழகியலின் மீதும் நமக்கு வெறுப்பே உருவாகின்றது.

ஒருவரின் வாக்கு மூலம் இப்படி இருக்கின்றது: ”சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன. [...]வெளிநாட்டிற்கு வந்த பின்னரே இந்தக் குண்டுமணிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு மருத்துவர்களால் அகற்றப்பட்டன. (பக்கம்4) யோகலிங்கம் விஜிதா என்ற 27 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கடினமான, கூம்புவடிவ வாழைப் பொத்திகள் பெண்குறிக்குள் திணிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். (பக்கம்19) 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த முருகேசபிள்ளை கோணேஸ்வரி என்பவர் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கும்பலாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலைசெய்து அவரது பெண்குறியில் வெடிகுண்டை வெடிக்கவைத்து கும்பல் வன்புணர்வு செய்யப்பட்ட எல்லாவகைத் தடயங்களையும் அழித்துவிட்டனர். (அதே பக்கம்)

 “சுப்பிரமணியம் கண்ணன் என்ற வவுனியாவைச் சேர்ந்த […] நபரது மலவாசலூடாக முள்ளுக்கம்பி செலுத்தப்பட்டது” (பக். 21) மிகவும் கூரூரமானதும் மிக கொடூரமானதுமான இந்த நிகழ்வுகளின் விபரத்தை நான் இங்கே எடுத்துக்காட்டுவதற்கு வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் இவற்றை சர்வ உலகத்திற்கும் வெளிப்படுத்தி, அவர்களின் தார்மீக ஆதரவையும் அதன்மூலம் இவற்றுக்கு எதிராகச் ஏதாவது செய்யப்படவேண்டுமென்ற அவாவையும் பெறவேண்டுமானால் இவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டுத்தான் ஆகவேண்டும். அதுவே மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினரின் (Human Rights Watch) இந்த அறிக்கையின் நோக்கமுமாகும். வாசிப்பதை நிறுத்தி, இந்த ஆவணத்தை மூடிவிட்டு, கண்ணில் படாமலும் மனதை உறுத்தாமலும் எங்கேயாவது தூர எறிந்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்படலாம் என்பதும் ஜதார்த்தமானதும், புரிந்துகொள்ளக்கூடியதும்தான். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த மனித ஜீவிகள் தொடர்ந்தும் தங்களுக்கு நேர்ந்த பயங்கரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளுடனும் மனப்பலவீனங்களுடனும் எங்களுக்கு மத்தியில் வாழவேண்டுமே. இந்த ஆவணத்தை நாம் தூர வீசிவிட நினைப்பது போல் பாதிக்கபட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த இரத்தமும் சதையுமாக அனுபவப்பட்ட இவ்வகைப் பயங்கரங்களை தூரவீசிவிட ஒருபோதும் முடியாது. இயலவே இயலாது. சித்திரவதைக்குள்ளனவர்கள், அவ்வாறு பயங்கரக் கொடூரங்களை அனுபவித்தவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை. இவ்வகை அனுபவங்களுக்கு முன்னர் இருந்த நான் என்ற தானை அவர்கள் ஒருபோதும் மீட்டெடுக்கமுடியாது. அவர்கள் இனி என்றென்றைக்கும் சித்திரவதை செய்யப்பட்டவர்களாக, வன்புணர்வு செய்யப்பட்டவர்களாகவே எஞ்சியிருப்பார்கள். நடந்துவிட்ட ஒரு தனித்த நிகழ்வு என்பது உண்மையில் வாழ்நாள் முழுவதற்குமான நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தி விடுகின்றது. 

 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, டில்லி பஸ் ஒன்றில் வைத்து இருபத்தி மூன்று வயதான ஜோதி சிங் பாண்டே என்ற யுவதி கும்பல் வன்புணர்வுக்கு ஆளானதும் அதனால் ஏற்பட்ட காயங்களில் அவர் பின்னர் இறந்து போனதுமான கொடுஞ்செயல் தேசிய அளவிலும் உலக அளவிலும் நீதிகோரி நின்றதற்கு பலவேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு காரணம் அவர், தான், தன் பெற்றோர், தன் வீடு என்ற வாழ்ந்த தனிநபராக அவர் எங்களுக்குத் தெரிவதுமாகும். அவருக்கு நடந்த கொடூரத்தை, வாழ்ந்துகொண்டிருந்த மனிதஜீவனுக்கு ஏற்பட்ட துயரமாக நாமும் அதில் நம்மை இணைத்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த ஆவணப் பதிவில் வருகின்ற நபர்கள் இலங்கையில் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் கட்டவிழ்த்து விடக்கூடிய ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் பயந்து முன்னெச்சரிக்கையாக முகமற்றுப்போனவர்கள், பெயரற்றுப்போனவர்கள். இந்த அறிக்கையின் நோக்கம் உண்மைகளைப் பேசுவதே. எனவே உண்மைகள் திட்டமிட்டவாறு ஈவிரக்கம், அலங்காரங்கள் எதுவுமற்றுப் பதிவாகியிருக்கின்றன. மனிதர்கள் இதற்குக் கொடுக்கும் விலை பற்றி வாசகர்கள் உணர்ந்துகொள்ளவதுடன் அறச்சீற்றம், அனுதாபம் மற்றும் எதிர்ப்புணர்வு போன்றவற்றையும் அவர்களிடத்தில் வேண்டி நிற்கின்றது. ”அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தமும் மனக்குழப்பமும்” என்ற சொற்தொடர் மருத்துவம் மற்றும் மன அமைதி தேவை என்பதைச் சுட்டி நிற்பினும் அது வாழ்வில் பட்ட அனுபவப் பாடுகளைச் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைத்தே விடுகின்றது. 

 இந்த ஆவணத்தின் அறிமுகத்தில், இதில் வாக்குமூலம் கொடுப்பவர்கள் யாவரும் இலங்கையின் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்து இப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். சுமார் 12 மாத காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும், அதாவது அவுஸ்திரேலியா, பெரிய பிரித்தானியா, இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களே இவை. இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவும் 2006 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றவை. இவற்றில் 75 பாலியல் வல்லுறவுகள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன. அதில் 31 ஆண்கள் மீதும், 41 பெண்கள் மீதும், மற்றும் 3 இளம்பராயத்தினர் மீதும் நடத்தப்பட்டவை.(பக்கம்2). இவற்றில் 67 விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன் சுதந்திரமான வைத்திய சாட்சியங்களும் அத்தாட்சிகளும் பெறப்பட்டிருக்கின்றன. 

 பாலியல் ரீதியான வன்முறைகள் பொதுவாகவே பாலியல் ரீதியான மானபங்கப் படுத்தல்களுடன் தொடங்குகின்றன. பலாத்காரமாக நிர்வாணப்படுத்துதல், வெருட்டியும், மிரட்டியும், ஏசியும் அச்சங்கொள்ளவைத்தல், கேலி செய்தல், பெண்கள் குளிக்கும் போதோ அல்லது மலசலகூடம் செல்லும் போதோ அவர்களது அந்தரங்க சுதந்திரத்திற்கு இடையூறாக இருத்தல் போன்றவையே அவை. இவற்றின் உள்நோக்கம் மோசமாக இழிநிலைப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். நாங்கள் உனக்கு ஒரு பாடம் புகட்டுவோம் (புகட்டுவோம் என்ற வார்த்தை இங்கே வதைப்பதும் தண்டனை வழங்குவதும்: பாதிக்கப்படுபவரை இவ்வாறு கொடுமைப் படுத்துவதே சரியானதும் சட்டரீதியானதும் என்பவற்றைச் சுட்டிநிற்கின்றது. அவ்வாறெனில் வஞ்சம் தீர்க்கும் இனமோக நீதியை நிறைவேறும் வெறுங் கருவிகளாகவே வதைப்பவர்கள் தம்மை வரித்துக்கொண்டு, தாம் உள்ளூர மகிழ்ச்சியடைவதற்கும் பாதிக்கப்படுபவரை அதிர்ச்சிதரும் காட்டுமிராண்டித் தனமான கொடூரச் சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தி, பாலியல் வல்லுறவு செய்யும் தமது கொடுஞ்செயல்களையிட்டுப் பெருமிதமுங் கொள்ளலாம். வதைப்பவர்களல்ல, மாறாக பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் என்று சுட்டப்படவேண்டியவர்கள்.) பாலியல் துன்புறுத்தல்கள் “அடிக்கடி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால், பலதரப்பட்ட பார்வையார்கள் முன்னிலையில் இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்கும் பெண் சிப்பாய்களும் பார்த்திருக்க நடத்தப்படுகின்றன”.(பக்.33) சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவும் அப்பாவிகளை வாழ்க்கையில் ஒரு போதுமே கண்டிராதவர்களையும் அறிந்திராதவர்களையும்கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள் என்று அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றன. ஆனாலும் அவ்வாறு அடையாளங் காட்டுதலும் ஒப்புதலளிப்பதும் கூட அவர்களை கொடுஞ் சித்திரவதைகளிலிருந்தும் பாலியல் வல்லுறவிலிருந்தும் காப்பாற்றிவிடுவதில்லை. சில நேரங்களில் பாதிக்கப்படுபவரின் குடும்பத்தினர் காசு கொடுத்தால் மட்டுமே பாதிக்கப்படுபவர் ”தப்பிச்” சென்றுவிட அனுமதிக்கப்படுவார். 

இலங்கை நாட்டில் பொலிஸ் படைப்பிரிவும் கூட மிகுந்த இராணுவமயப்பட்டிருக்கின்றது. அதுபோலவே இராணுவத்தினர் பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இலகுவாகத் தம் கைகளில் எடுத்துச் செயற்படுகின்றனர். இரண்டு படைத்தரப்பினரும் சட்டம், நீதி போன்ற எவ்வித கட்டுப்பாடுகளுமற்று முழுச் சுதந்திரமாக, சட்டப் பாதுகாப்புடன் பாதுகாப்பற்ற அப்பாவி வெகுஜனங்கள் மீது அதிகாரஞ் செலுத்துகின்றனர். தமக்கேற்படும் பிரச்சினைகளை இவர்களிடம் சென்று முறையிட்டால் தம் மீது மேலும் அடக்குமுறைகளும் அநீதியும் கட்டவிழ்த்து விடப்படும் என்ற பயப்பீதியோடுதான் மக்கள் வாழ்கின்றனர். இது நரிகளினதும் ஓநாய்களினதும் குற்றச் செயல்களை வேறு வழியின்றி அவற்றிடமே சென்று முறையிட்டுக்கொள்ளும் ஆடுகளின் தலைவிதியையொத்தது. கைதாகும் ஒருவர் பெருந்தொகைப் பணம் கொடுக்கும் வசதிகளுடன் அல்லது மேலிடத்தில் அலுவல் பார்க்கத் தெரிந்த செல்வாக்குள்ள சிங்களவர்களைத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது போனால் கைது செய்யப்படும் தமிழர்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. (பக். 36) தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்று ஒவ்வொரு தமிழரும் உணர்ந்துகொள்ளும்படியாகத்தான் ”பாதுகாப்புப் படையினர்” என்று சொல்லப்படுபவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 

 பாலியல் வன்முறையின் பிரயோகம் என்பது ஒரு ”குறித்த பொருட்டற்ற நிகழ்வென்றோ அல்லது அயோக்கியச் சிப்பாய் ஒருவனின் ஒழுங்குமீறல்” என்றோ ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இவ்வகைக் குற்றச் செயலுக்காக ஒரு உயர் அதிகாரிதானும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதில்லை. மறுபக்கத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களினாலும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றியும் பாலியல் வல்லுறவு பற்றியும் வெளிப்படையாகப் பேசுவதற்கு தயக்கம் காட்டப்படுகின்றது. ”ஆண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வல்லுறவும் ஆண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலகளும் வெளிக்கொண்டுவரப்படுவதுமில்லை அது பற்றிப் பேசப்படுவதுமில்லை.” இவை பாதிக்கப்பட்டவர்களாலும் வெளியே சொல்லப்படுவதில்லை அவற்றின் சூத்திர தாரிகளாலும் மறைக்கப்பட்டுவிடுகின்றன. மேலும் இவை வெளியே பேசப்படக்கூடாத மூடுபொருளாகவே இருந்துவிடுகின்றன. (பக். 45) 

இறுதியாக, இவற்றைப் பற்றிப் பக்கச் சார்பற்ற சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது இலங்கை அரச தரப்பு முட்டுக்கட்டைகள் போடுகின்றது. இங்கே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை சமுத்திரத்தின் அதலபாதாளம்வரை பரந்திருக்கும் பனிப்பாறையின் வெளித்தெரியும் சிறு நுனிபோன்றவைதான்: அனேகமானவை இன்னமும் சுவர்க்கத்தீவின் மூடிய எல்லைகளுக்குள் மௌனத்தில் புதைந்து அழுந்துகின்றன. இன்னமும் சிறையில் வதைபடும் மனிதர்களை எண்ணிப்பார்க்கும் போது நடுங்குகின்றது. அவர்கள் முகமற்றவர்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளித்தெரிவதில்லை. அவர்களைச் சூழ நிற்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் அவர்களது முனகல்களும் ஓலங்களும் வேறொருவர் செவிகளுக்கும் எட்டுவதில்லை. ஒரு கொஞ்சம் பேர் தாம் பட்ட பாடுகளை இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தும் போது இருவகை உணர்வுகளுக்குள் தள்ளப்படுகின்றனர். ஒன்று அவர்கள் வெளிநாடொன்றில் இருப்பதால் உருவாகும் பாதுகாப்பு உணர்வு மற்றையது அவர்களது அனுபவத்தை விபரிக்கும் போது ஏற்படும் அதே பயங்கரத்தை மீண்டும் பெறும் உணர்வு. “முறைசார்ந்த மற்றும் முறை சாரா புனர்வாழ்வு முகாம்களில் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. (பக். 29, அழுத்தமாக) “பாதுகாப்புப் படையினர் நடாத்தும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசு முரட்டுத் திமிர்தனத்துடன் மறுத்தே வருகின்றது. (பக். 43) 


குடிநீர், உணவு, மற்றும் மருந்துகளுக்கு மிகவும் பற்றாக்குறை நிலைவிய, போர் உக்கிரமாக நடைப்பெற்ற பகுதிகளில் 2009 ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களைத் கட்டாயமாகத் தடுத்து வைத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற முயற்சித்தபோது அவர்கள் மீது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பலமக்கள் கொல்லபட்டிருக்கின்றனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவர்கள் மீது குற்றஞ் சுமத்துகின்றது.(பக்13) மேலும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கையின் நடுநிலை பற்றி ஒருசிலர் கேள்வி எழுப்பக்கூடும். இவ்வறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவிக்கும் விபரங்கள் யாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்குலகத்தவர்களுக்கு தெரிவிக்கும் பொய்த் தகவல்களின் அடிப்படையில் எழுந்தவை என்று நிராகரித்து விடவும் கூடும். ஜார்ஜ் ஆர்வெல் என்ற எழுத்தாளர் “எழுத்தாளர்களும் கடற்பூதமும்” என்ற கட்டுரையில் “ஒரு பிரதியினை நாம் வாசிக்கும் போது ஏற்படும் எமது உணர்வுகளை அப் பிரதியோடு தொடர்பற்ற நாம் வரித்துக்கொண்டிருக்கும் விசுவாசங்களே தீர்மானிக்கின்றன” என்று எழுதியுள்ளார். நடைபெற்றதும் தொடர்ந்து நடைபெறுவதுமான இக் கொடுஞ்செயல்கள் பற்றி அனேக சிங்கள மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் இந்த ஆவணம் அவர்களின் கவனத்தை ஈர்த்து, இக் கொடுஞ்செயல்களுக்கு எதிராக அவர்கள் செயற்பாடில் இறங்குவார்கள் என்பதும், அதன்போது அவர்களின் சுலோகம் “எங்களின் பெயரால் இந்த அநியாங்களை அனுமதிக்கமாட்டோம்” என்றிருக்கும் என்பதும் எமது நம்பிக்கை.

 “இவ்வளவு அறிந்த பின்னரும் என்ன மன்னிப்பு?”
(“After such knowledge, what forgiveness?”)
 -டி.எஸ்.எலியட், முதிர்வு (Grontion)என்ற கவிதையில் 


 (தமிழில்: ந.சுசீந்திரன்) 
South Asia Analysis Group: Paper No. 5904. 2 April 2015
 Colombo Telegraph: 3 April 2015