வியாழன், ஜூலை 02, 2020

சோகம் தான்! சொல்வதில் சுகம் இருக்கிறது!

 ”மனிதக் கரம்பட்டு மடிந்தன-அந்தத்
தொட்டாவாடியின் துருத்திய இலைகள்”
-ஒரு பஞ்சாப் பழமொழியின் பூடகமான வரிகள்

அந்தப் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எங்கு செல்வதென்று தெரியவில்லை. மாலை நேரத் தனியார் கல்லூரியில் எனக்கு விலங்கியல் கற்பிக்கும் ஆசிரியர் தனபாலசிங்கம் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். தான் கற்பிக்கும் அரச பள்ளிக்கு வந்துவிடு என்று அவர் சொன்னார். நான் நெஞ்சுரத்தோடு ”மன்னவனும் நீயோ…” என்று கேட்டுவிடும் மனோநிலையில் என்னை வெளியேற்றிய பள்ளியின் அதிபர் முன் வந்து நின்றேன்.
ஓர்மம் நீளக்கிடக்கும் எதிர்காலத்தில் நாம் மீளமுடியாதபடி அதலபாதாளத்தில் விழுந்து விடுவதற்கான சரிவுப்பொறி.
எனது பாடசாலை விடுகைப் பத்திரத்தினைத் (leaving certificate) தரும்படி கோரினேன். வாழ் நாள் முழுவதும் மக்கள் சேவைக்கென்றே தன்னை அர்ப்பணிக்க இருக்கும் ஒரு நல்ல வைத்தியனை உருவாக்கும் அரிய சந்தர்ப்பத்தினை இந்தப் பாடசாலை இழந்து விடுகிறதே என்று அன்று நான் நினைத்திருக்கக்கூடும். நினைவுதானே நம்மைக் கெடுப்பது! இந்தமாதிரி எண்ணம்தான் உயிரியல் விஞ்ஞானம் படிக்கப்புகும் ஒவ்வொரு உயர்வகுப்பு மாணவனுக்கும் இருந்திருக்கக்கூடும்.
அறிவு சிறிது, அறிந்துகொண்ட உலகம் சிறிது, அதனால் உலகப் பார்வையும் சிறிதே. எண்ணத்திற்கு மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை.
இப்போது இந்தப் புதிய பாடசாலைக்கு வந்து சேர்ந்தாயிற்று. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இந்தப் பாடசாலை எங்கிருக்கின்றது எப்படிச் செல்வதென்று கண்டாகிவிட்டது. என்னைப் பின்தொடரவும் அல்லது எனக்கு முன்னேசெல்லவும் ஒருவன் இருந்தான். எனது கெட்டகாலம், அந்தப் புதிய பாடசாலையின் அதிபர் அப்பொழுதுதான் முழுநேர ஆளுங்கட்சி அரசியல்வாதியாகி விட்டிருந்தார்.
எனக்கும் அரசியல் பிடிக்கும். ஆனால் எங்கள் தீவுத்தொகுதி பாராளுமன்ற . உறுப்பினர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களைப் பிடிக்காது. அவரது பிரசாரக் கூட்டமொன்றில் பொலிசார் என் தந்தை மீது நடத்திய தாக்குதலே காரணம். அந்த முறையும் என் அப்பா இறந்துவிடவில்லை. என் அப்பா வீட்டை விட்டு வெளியே சென்றால் உயிருடன் திரும்பும் ஒவ்வொருமுறையும் என் அம்மா சந்தோஷப்பட்டபடிதான் அவளது வாழ்க்கையும் நகர்ந்தது.
புதிய பாடசாலையின் அதிபர் அப்பொழுதுதான் முழுநேர ஆளுங்கட்சி அரசியல்வாதி யாகி விட்டிருந்தார் என்று மேலே சொன்னேன் அல்லவா. நான் என் வாழ்வில் அவரை ஒரே ஒருமுறைதான், அதுவும் பாடசாலைக்குச் சற்றே தொலைவில் எதிர்ப்புறத்தில் இருந்த பழைய காலனித்துவகால அஞ்சல் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பிய வெளிநாடொன்றுக்கு அனுப்பப்பட்ட அவரது மகன் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தத் தொலைபேசி எடுப்பதற்கு அவர் அங்கே வந்திருந்தார் என்பதை அவரைச் சூழக் காணப்பட்ட களேபரக் கதைகளில் கசிந்த செய்தியினூடாக அறிந்துகொண்டேன். அஞ்சலகத்தில் எனக்கென்ன வேலை?; நான் ஏன் அங்கு போனேன் என்பவையெல்லாம் இப்போது மறந்துபட்டன. ஒருவேளை அவரைச் சந்திப்பதற்காக இருக்கலாம் என்று ஊகித்துக் கொள்வோம்.
சரி, ஒருவாறாக புதியபாடசாலை உப-அதிபரின் தயவில் எனது பெயர், மாணவர் இடாப்பில் (Record) பதியப்படலாம் என்றாயிற்று. ஆனால் அந்தப் பாடசாலையில் மாணவர்-விடுதி இல்லை என்றதும் திடீரென எனக்கு உலகம் புரியவில்லை. விடுதி என்ற அப்படி ஒரு சமாச்சாரம் அல்லது அப்படி ஒரு ஏற்பாடு உலகத்தில் இருப்பதாக அங்கு எவருக்கும் தெரிந்திருக்கவுமில்லை.
இதுவரை நான் மாணவர் விடுதியிலேயே வாழ்ந்தவன். எனக்கு எல்லாமே அதுதான். ஆயிரத்திநூறுக்கும் அதிகமான எனது நாட்களை நான் அங்கே தான் வாழ்ந்திருந்தேன். பதின்நான்கு வயதில் ஒரு றங்குப் பெட்டியோடு அரச பேருந்து நடத்துனராக( Conductor) இருந்த ஒரு உறவினருடன், படுக்கையில் மூத்திரம் அடித்துவிடக்கூடாது என்ற ஆயிரம் தொன் எடையுள்ள எண்ணத்தை ஆயிரம் தடவை மூளையில் எழுதியபடியும் உளி வைத்துச் செதுக்கியபடியும் அந்தப்பாடசாலை விடுதிக்கு, வந்த தினத்தில் இருந்து, நானே ராசா நானே மந்திரி யாக மாறும் வரை அல்லவா அங்கேஇருந்தேன்.
அங்கே எனக்கு அரச புலைமைப் பரிசில் மாணவனென்பதால் முற்றிலும் இலவசம். இப்பொழுது சூனியத்தில் விழுந்துபட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.
எனது பெற்றோர் தங்கள் பின்தங்கிய, உவர்நீர் ஊற்றுவரும் முருகைக்கல் தீவினை விட்டு இடம்பெயர்ந்து, அவர்களுக்குக் கிடைத்த இரண்டு ஏக்கர் குடியிருக்கவும் மூன்று ஏக்கர் நெல் விளைவிக்கவும் என வழங்கப்பட்டகாட்டினைப் பெற்றுக் கொண்டு துணுக்காய் என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒட்டன்குளம் எனும் காட்டுக்குள் குடியேறிவிட்டனர். அதனால் எனக்குப் பின் பிறந்த என் சகோதர்களின் கல்வி பாழ்பட்டுப்போனது.
நான் இலகுவில் பஸ்ஸோ, ரெயிலோ ஏறி வீட்டுக்கோ அல்லது நான் பிறந்து, வளர்ந்த ஊருக்கோ வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எங்கோ அவர்களுக்கே தெரியாத தொலைவில் இருக்கும் ஓர் நகரத்தில் என்னைகொட்டிவிட்டனர். நமக்கு விருப்பம் இல்லாத, சுமையாகிப் போய்விட்ட நாய், பூனைகளை நாம் அப்படிக் கொண்டுபோய் விட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கலாம்.
திரும்பி வந்தால் ஒரு வைத்தியனாய்த் திரும்பட்டும் என்று நினைத்திருப்பார்கள். பாடசாலை விடுமுறைக்கும் வீடு செல்ல முடியாது. ஏனெனில் விடுமுறைக் காலத்தில் ஊருக்குப்போக, பஸ்ஸுக்கு, புகைவண்டிக்கு பிரயாணச் சீட்டு வாங்கப் பணம் சேமித்து வைக்க வேண்டும் என்ற மூளை எனக்கு அப்பொழுதெல்லாம் இருந்ததில்லை. விடுமுறைக் காலங்களில் சிலவேளைகளில் விடுதியில் தங்கியிருக்கவும் அனுமதி கிடைத்தது. அல்லது எப்படியோ விடுதிக்கு வெளியே காலப்போக்கில் எனக்கு ஏற்பட்ட அறிமுகங்களால், சில அன்பான மனிதர்களின், சில ஏழைக் குடும்பங்களின் தயவிலும் பரிவிலும் விடுமுறைகள் கழிந்துவிடும்.
விடுதியில் இருக்கும்போது நான் பல்துலக்க ஒருபோதும் பற்பொடி வாங்கிய ஞாபகம் இல்லை. சீப்பு, சோப்பு, ஸம்பூ, எண்ணை, பௌடர் போன்ற அலங்காரப் பொருட்களுக்கும் நான் உரிமையாளனாக ஒருபோதும்இருந்தில்லை. விடுதியில் கால்வைத்த தொடக்கத்தில் தான் அவை அந்த றங்குப் பெட்டிக்குள் என்னிடம் இருந்திருக்கலாம்.
என்னைப்போலவே மலையத்தின் றாகல என்ற இடத்தினைச் சேர்ந்த என் சகவகுப்பு நண்பனும். விடுமுறைக்கு நாங்கள் பாடசாலை விடுதியில் அல்லது பாடசாலை இருக்கும் நகரைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் ஒன்றில் தங்கிவிடுவோம். அவனிடம் கண்கவர் அழகான புதிய காற்சட்டை ஒன்று இருந்தது. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் கிணற்றில் தண்ணீர் முகரும் எம் வயதொத்த- இல்லை இரண்டொரு வயதில் இளைய- பெண்ணொருத்தியைப் பார்ப்பதற்கு நாங்கள் நான்குபேர் அவனது அந்தக் காற்சட்டையைத்தான் அணிந்துகொண்டோம்.
நான்கு பேரும் அந்த ஒருத்தியைத்தான் ஒருமுனையாகக் காதலித்தோம். அங்கே வேறொரு பெண்ணை நாங்கள் கண்டதில்லை. அவளும் எங்களை அசட்டை செய்யாத நல்ல பெண். எங்கள் இருப்பை அவள் தெரிந்துகொண்டாள்; கணக்கில் எடுத்துக்கொண்டாள் என்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்வடைந்தோம். நான் ஒருமுறை சுற்றுலா சென்றபோது அந்தக் காற்சட்டையை நண்பன் அருண்மொழிவர்மனிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டேன். கண்டியிலுள்ள புனித திருத்துவக் கல்லூரியில் (Holy trinity Collage) அந்தக் காற்சட்டையைக் கைகளில் எடுத்தபோது அது மச்சுப்போயிருந்து. தோய்த்துக் காயமுன்பே ஈரத்துடன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியதால் நேர்ந்தது அது. வீசுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. மாற்றிப்போட மார்க்கமுமில்லை. நண்பனுக்கு இன்னும், இன்றுவரை நான் அதனைஈடு செய்யவுமில்லை.
புதிய பாடசாலையில், சில வகுப்புக்களில், முக்கியமாக விலங்கியல் பாடத்தில் அன்று எனக்கு விருப்பமான முளையவியல் (embryology) வகுப்பில் இருந்துவிட்டு சித்தக்கேணி, அராலி, நாவாந்துறை என்று ஊர்களின் ஊடாக நடந்து ஒருவாறு இரவு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். அந்தக் காலத்தில் எனக்கு நடந்து செல்வது பிரச்சினையாக இருந்ததில்லை. காலஞ்சென்ற டேவிட் ஐயா போல பல நூறு மைல்களை நடந்தே பழி வாங்கி யிருக்கின்றேன். நடைப்போட்டியில் நான் பரிசு பெற்றதும் உண்டு.
அக்காலத்தில் அவசியமாகப்பட்ட ஆனால் நிறைவேறாத அனேக ஆசைகளில் இரண்டு விடயங்கள் கிட்டத்தட்ட என் கால் நூற்றாண்டுவரை எனக்குக் கைகூடியதில்லை. ஒன்று, சொந்தமாக ஒரு பைசிக்கிள் வைத்திருப்பது, இரண்டாவது, அமர்ந்திருந்து படிப்பதற்கு ஒரு மேசை.
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். இரவினையும் கொன்று கழித்துவிட்டேன். காலையில் பஸ்ஸில் செல்வதற்கு காசு இல்லை. புதிய பாடசாலை செல்வதைக் என்றென்றைக்குமாகக் கைவிட்டேன். இனிப் பகல் முழுவதையும்ஒருவாறு கழிப்பதற்கு நான் கண்டடைந்த அற்புத நீழல், ஆறுதல் பொழியும் அன்னையின் மடி அது யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்.
யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் 70களில் மிகப் பிரபலமாயிருந்து. நூல்கள் அங்கு வைத்தே நாள் முழுக்க அங்கே இருந்தபடி வாசித்தபடி இருக்கத் தாராளமான தனி மேசையும் இருக்கைகளும் இருந்தன. மிகப் பெருங்கூட்டம் இந்தக் கூடத்தினை நன்கு பயன்படுத்தினர். மற்றொரு கூடம் தளத்தில் இருந்த கேட்போர் கூடம். தினசரிப் பத்திரிகை களைக் கையில் வைத்துக் கொண்டு வாசிப்பதான பாவனையில் மணிக்கணக்கில் தொந்தரவுகள் அற்றுத் தூங்கிக் களிக்கலாம். நூலகத்தில் பின்னால் இருந்த கழிவுகூடம் அந்தக்காலத்தில், நான் அறிந்தவரை உலகின் மிகச் சுத்தமான, நவீன கழிவுகூடம். உள்ளேயே தண்ணீர் ஏந்தலாம். தண்ணீர் ஏந்தும் சிறிய தூக்குடன் கூடிய பெயின்ற் வாழியை வருடங்களாகியும் யாரும் திருடவுமில்லை, அப்புறப்படுத்தவுமில்லை.
இலங்கையின் அப்போதைய பிரதமர் யாழ்ப்பாணம் வந்தபோது நூலகம் வந்து கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுவிட்டாலும் என்ற முன்னேற்பாட்டில் இது நிர்மாணிக்கப் பட்டதாக அறிந்தேன். திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கேட்டாரோ இல்லையே, அந்தக் கழிவறையை ஆனந்தமாக அதிகம் பயன்படுத்தியது நானே தான். அது பொன்னால் ஆனதா என்பதும் இப்போது நினைவில் இல்லை. அதற்கு முன்னால் இருந்த மேலதிக குழாயில் வேண்டிய மட்டும் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். அவசியமானால் விரைவாகக் குளித்தும் விடலாம். சில வாரங்கள் நான் உண்டு, கழித்து, உறங்கிக் கிடந்த சரணாயலம் அது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடைநிலை ஊழியராக வேலை செய்யும் ஒருவரைக் கண்டு, என் தகமைச் சான்றிதழ்களை அவரிடம் கையளித்தபின், அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று மூன்று நான்கு நாட்களாக ஆசை வளர்த்தேன். இந்துக் கல்லூரியின் அதிபரின் முன்னால் என் நடுக்கத்தைக் காட்டிலும் அந்தப் பணியாள் நடுங்கியது ஓர் மீஅடிமையின் அல்லது அதியடிமையின் பணிவும் குனிவும். அந்த அதிபர் என்னை பார்க்கவுமில்லை, எதுவும் கேட்கவுமில்லை….அவமானங்களையும் நிராகரிப்புக்களயும் நான் சேகரிக்கத் தொடங்கினேன்.

கருத்துகள் இல்லை: