வியாழன், நவம்பர் 26, 2020

முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

யுத்தகால நினைவுகளுடன் பெர்லின் பாராளுமன்றத்தில் ….டொமினிக் ஜீவா


பெர்லின் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தோம் நானும் சுசீந்திரனும். வெளியே மகள் பிரேமாவுடன் கணவரும், பேரன் வினோத்தும் வந்திருந்தனர். சுசீந்திரனின் மனைவியும் அவர்களுடன் வந்திருந்தார். அன்று கிறிஸமஸ் தினம். தன்னைத் தேடித் தனது அழைப்பை ஏற்று பெர்லின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததில் மகளுக்கும் மருமகனுக்கும் பெரிய புளுகம். என்னைக் கண்டதும் மகள் கட்டிப் பிடித்துக் கொண்டார். கண் கலங்கினாள். நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கிறோம். பேரன் வளர்ந்திருந்தான். என்னை விசித்திரமாக ஓர் அந்நியனைப் போலப் பார்த்தான்.

அவனது தோளின் மீது கைகளைப் போட்டு அணைத்த வண்ணம் காரில் வீடு நோக்கிப் புறப்பட்டேன். இறங்கும் போது ''தம்பி.....! தாத்தா கவனம்! வழியில் பனி சறுக்கும். விழுந்து போகாமல் இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு வா" என மகனிடம் சொன்னாள் என் மகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து நான் கொழும்பிற்குக் குடி பெயர்ந்ததும் எனது இன்னொரு மகள் தொலைபேசியில் மகன் திலீபனுக்குச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 'தம்பி அப்பா கவனம். கொழும்பிலை அவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்... கவனம்..கவனம்..!" என ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் மகனுக்குச் சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

அன்று கிறிஸ்மஸ் தினமானபடியாலும், நான் இன்று வீட்டிற்கு வர இருப்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த காரணத்தாலும், இனசன சொந்தக்காரர்களும் மற்றும் என்னை முன்னரே கேள்விப்பட்டிருந்த இலக்கிய அபிமானிகளும் மகள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். எல்லோரையும் சுகநலம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். எனக்கோ தொடர் பிரயாண அலுப்பு. ஆனால் மகள் தூங்கக் கூட விடவில்லை. ஒரே கதைதான்.

“உங்களைப் பற்றி அந்தக் காலத்திலை எங்கட சொந்தக்காரர்களைப்போல ரொம்பக் குறைவாகத்தான் நினைச்சிக் கொண்டிருந்தேன். ஆனா உங்களுக்கு இப்ப இப்படிப் புகழ் என்றதைப் பார்க்கிற போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருமே உங்களைப் பற்றித்தான் விசாரிச்ச வண்ணம் இருக்கினம். ஜீவாவின் மகள் நீங்கள் தான் எண்டு ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லி வைக்கேல்லை? இந்த நாட்டிலை இருந்தல்ல, சுவீஸ், நோர்வே, டென்மார்க்கிலை இருந்தெல்லாம் டெலிபோன் போட்டுக் கேட்ட வண்ணமே இருக்கினம். சுவீசிலை இருந்து ரஞ்சி என்பவர் எப்படியாகிலும் உங்களை சுவீசுக்கு எடுத்துவிட வேண்டுமெனக் கேட்ட வண்ணமே இருக்கிறார். இங்கையெல்லாம் உங்களுக்கு இப்படிப்பட்ட புகழ் இருக்குதெண்டு நான் கனவிலை கூட நினைச்சுப் பார்த்ததில்லை!' என ஒரே புராணமாக இருந்தது, இரவு நெடுநேரம் வரை.


அடுத்த நாள் சாயங்காலம் தான் கூட்டம். மல்லிகை மாலை என்ற பெயரில் அந்த இலக்கியச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலையில் காரில் மகள் குடும்பத்தினருடன் பெர்லின் மாநகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். ஒரே பனி, மூடு பனி, வீதியெங்கும் பனி படர்ந்திருந்தது. தெருவில் பனியை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் பனியை அகற்றப் பாதைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தன. முதலில் பெர்லின் சுவரைப் பார்க்கப் புறப்பட்டோம். அந்தப் பிரபலம் வாய்ந்த சுவர் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்தாலும் அதன் எச்சங்களைப் பார்க்க முடிந்தது. அதன் ஞாபகார்த்தமாக நானும் எனது பேரனும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பெர்லின் மாநகர் ரஷ்ய, அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களுக்கு ஆட்பட்டிருந்ததைச் சாட்சியம் கூறும் சில காட்சிகளையும் அவதானித்து மனதில் பதிய வைத்துக் கொண்டேன். ஒரே குளிர். நடுநடுங்க வைத்தது. அப்படியே பாராளுமன்றத்திற்குப் போனோம். கிறிஸ்மஸ் காலமானபடியால் பார்வையாளர்களால் நிரம்மி வழிந்தது மண்டபம். இரண்டாம் யுத்த காலத்தை நினைத்துப் பார்த்தேன்.

ஹிட்லர் என்ற பெயரைக் கேட்டதும் உலகமே பயத்தால் நடுங்கியதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். பாராளுமன்றத்திற்கு வெளியே பரந்த உயர்ந்த கருங்கல் மேடையிருந்தது. அந்த மேடையில் நின்று தான் ஜெர்மனியச் சர்வாதிகாரி ஹிட்லர் தனது படைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுவானாம். கொயபல்ஸ், கொயலிங், ரோமல் என்ற பெயர்கள் என் நினைவில் வந்து போயின. V1-V2 என்ற யுத்த விமானங்களின் இரைச்சல் என் காதுகளில் கேட்பது மாதிரியான ஓசையை உணர்ந்தேன்.

ஹிட்லர் அன்று படையினருக்குச் சலூட் அடித்த அந்தக் கல் மேடையில் அதே இடத்தில் நின்று நான் புகைப்படமெடுத்துக் கொண்டேன். இப்படி இந்தப் பெர்லின் மாநகருக்கு வந்து ஹிட்லர் நின்ற அதே இடத்தில் நின்று படமெடுத்துக் கொள்வேன் என யாராவது சோதிடம் சொல்லியிருந்தால் கூட நான் நம்பியிருக்க மாட்டேன்.

சொண்டுக்குள் சிரித்து வைத்திருந்தேன். வழியில் ஒரு மாதா கோயிலைப் பார்த்தோம். அக்கோயில் யுத்த காலத்தில் எதிரிகளின் விமானத்தாக்குதல்களால் கோபுரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் காட்சி தந்தபடி இருக்கிறது.

இரண்டாவது யுத்த ஞாபகச் சின்னமாக அதைப் புதுப்பிக்காமல் அப்படியே வைத்துள்ளனர். அந்தக் கோயிலின் மாதிரிச் சின்னத்தை பக்கத்தேயுள்ள வியாபாரக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்தனர். தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு எனது பேத்தி வினித் அந்தப் பொருளைத் தனது ஞாபகமாகப் பேரம் பேசி வாங்கித் தந்தாள்.

இப்படியான எமது புதுத் தலைமுறையினர் தாங்கள் வாழும் நாட்டின் மொழியை வெகு சரளமாகப் பேசுவதைக் கண்டபோது எனக்குப் பெருவியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெர்லின் மாநகரை வலம் வந்தோம். ஐரோப்பாவின் நட்டநடு மையம் என்றொரு இடம் குறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நீரினால் இயங்கும் ஒரு சர்வதேச மணிக்கூடு வைக்கப்பட்டுள்ளது. பல ஐரோப்பியச் சுற்றுலாப் பிரயாணிகள் சுற்றி வரக் குழுமியிருந்து கடைகளில் வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்களை மெல்ல மெல்லச் சுவைத்துக் கொண்டிருந்தனர். பல வகை உடைகள். பலவகை முகங்கள். பல வகையான உருவ அமைப்புக்கள் கொண்ட மனிதர்கள்..... எனக்கு மக்களின் முகங்களைப் பார்ப்பதிலேயே அலாதியான ஆசை. பார்த்து ரசித்தேன்.
'உயிர் நிழல்' லக்ஷ்மியுடன் லண்டனுக்குப் போகும் கப்பலில்.


பாராளுமன்றத்திற்கு அண்மையில் மிகப் பிரமாண்டமான மியூசியம் போன்ற காட்சிச்சாலை இருந்தது. ஹிட்லர் காலத்து மிக முக்கியமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அக்காட்சிச்சாலையிலுள்ள புகைப்படங்களைப் பார்த்து முடிக்கவே நீண்ட நேரமெடுத்தது. சாயங்காலம் இலக்கியச் சந்திப்பு வேறு இருந்தது. எனவே மதிய உணவின் பின் ஓய்வெடுத்தால் தான் பின்னேரக் கூட்டத்தில் பரபரப்பில்லாமல் உரை நிகழ்த்தலாமென்ற முன் யோசனையுடன் நாங்கள் அனைவவரும் வீட்டை நோக்கிய பயணமானோம்.

மீண்டும் பாரிஸ் நோக்கி…மகளுடைய வீட்டுக்கு அண்மையில் தான் கூட்டம் நடக்கும் மண்டபம் அமைந்திருந்தது. நடந்து போகும் தூரம். மாதா கோயிலுக்குச் சொந்தமான அந்த அழகான மண்டபம் சகல வசதிகளுடனும் விளங்கியது. மாதா கோயில் குருவானவர் இலக்கிய ஆர்வமிக்கவர். அதிலும் தமிழர்களின் தொன்மையான கலாசார பண்பாடுகளை மதிப்பவர். கௌரவித்துப் போற்றுபவர். இந்த இலக்கியமாலைப் பொழுது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தார். இறுதி நேரத்தில் ஏற்பட்ட அவசர வேலை காரணமாக அவர் இவ் விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது.

இந்த இலக்கிய மாலை விழாவின் போது மண்டபம் பார்வையாளர்களினால் நிறைந்து காணப்பட்டது. பெர்லினிலிருந்து தமிழ் ஆர்வலர்கள், கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ள வந்திருந்தனர். என்னைப் பாரிஸிலிருந்து அழைத்து வந்த நண்பர் சுசீந்திரன் தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். பாரிஸில் நடந்த 27வது இலக்கியச் சந்திப்பில் நடந்த சுவையான இலக்கியத் தகவல்களை நகைச்சுவை கலந்து பேசிச் சபையோரை உற்சாகப்படுத்தினார் சுசீந்திரன். 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் எனது அநுபவங்கள்' என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நான் உரையாற்றினேன். மாலை சுமார் நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்த மல்லிகை மாலை இலக்கியக் கூட்டம் முடிவடையும் போது இரவு எட்டரை மணியாகி விட்டது.

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிறந்த மூன்று மாசப் பச்சிளம் குழந்தையைத் தோளில் அணைத்துப் பிடித்த வண்ணம் ஒரு தமிழ்ச் சகோதரி எனது பேச்சை வெகு உன்னிப்பாக அவதானித்துக் கிரகித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சகோதரி பாரம்பரிய இலக்கியக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, படித்துப் பின்னர் ஜெர்மனியில் வாழ்க்கைப்பட்டவர் எனப் பின்னர் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்தது போலவே, இங்கும் என்னுடைய நூல்களை வாங்கப் பலர் போட்டி போட்டு முன்வந்தனர். இப்படிப் போட்டி போட்டுப் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தவர்களில் சிலர் என்னிடம் ஈழத்து இலக்கியங்களின் இன்றைய நோக்குப் போக்குகள் பற்றியும் விரிவாக விசாரித்து அறிந்து கொண்டனர்.

அடுத்த நாள் 'பிராங்பெட்' நகரத்தில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். இதுவும் ஜெர்மனியில் பிரபலம் பெற்ற நகரங்களில் ஒன்று. அந்தப் பிராங்பெட் நகரத்திலிருந்து தான் நான் திரும்பவும் பாரிஸ் செல்ல வேண்டும். விமான டிக்கட் பிராங்பெட் பாரிஸ் என எடுத்திருந்தனர். சூழ்நிலையும் பனிப் பொழிவும் பிராங்பெட் கூட்டத்தில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்கவில்லை. எனவே தொலைபேசி மூலம் பிராங்பெட் சந்திப்பை ரத்துச் செய்துவிட நண்பர் சுசீந்திரனுக்கு ஆலோசனை கூறினேன். அவரும் அப்படியே செய்தார்.

பாரிஸிலிருந்து என்னைப் பெர்லினுக்கு அழைத்து வந்து சிறப்பான ஓர் இலக்கியக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த நண்பர் சுசீந்திரனின் பெருமையை நான் அந்த நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களினது வாய் வார்த்தைகளில் கேட்டறிந்து பெருமைப்பட்டேன்.

"இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒரு கிழமைகூட என்னோட தங்காமல் இப்பிடிக் கெதியாய்ப் போகிறீங்களே!" என மகள் பிரேமா ஆதங்கப்பட்டாள். பலர் வீட்டுக்கு அழைத்தார்கள். பலர் 'உங்களுடன் ஆறுதலாகக் கதைக்க வேண்டும்,' எனச் சொன்னார்கள். நான் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டேயிருந்தேன். காரணம் எனக்குப் பிரான்ஸில் தங்கியிருக்கத் தந்த விசா எட்டே எட்டு நாட்கள். எனவே திரும்பிப் பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த நாள் நான் லண்டன் மாநகருக்குச் சென்றுவிடவேண்டும்.

லண்டனில் தங்கியிருக்க எனக்கு ஆறு மாத விசா இருந்தது. அன்று இரவுக் கூட்டம் முடிந்ததும் நான் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். சிலரிடம் எனது இயலாமையையும் விளங்கப்படுத்திச் சொன்னேன்.

அடுத்த நாள் காலை பெர்லினில் இருந்து ரயிலில் பிரயாணப்பட்டுப் பிராங்பெட் நகர் வந்து சேர்ந்தேன். அந்த ரயில் நிலையத்தில் பாரிஸில் இலக்கிய விழாவில் சந்தித்த நண்பர்களான கிருஷ்ணாவும் பாரதியும் வந்திருந்தனர். இந்தப் பாரதி என்பவர் கவிஞர் ஜெயபாலனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெயில் நிலையத்தில் என்னைச் சந்தித்த இந்த இரண்டு நண்பர்களும் விமான நிலையத்திற்கு நேரே போகும் ரெயிலைப் பிடித்து என்னை பிராங்பெட் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து விமானமேற்றி விட்டனர்.
( டொமினிக் ஜீவா, ‘முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்’, மல்லிகைப் பந்தல், கொழும்பு, 2001, பக்கங்கள்: 43-49)

கருத்துகள் இல்லை: