சனி, நவம்பர் 14, 2020

அம்மாய்யா‘ என்றுதான் நான் இவரை அழைப்பேன். என் அம்மாவின் சீனி-அய்யா. ஒன்றுமில்லாமலே என் மீது அப்படிப் பிரியம். சொந்தப் பேரப்பிள்ளைகளே அவருடன் சண்டையிடும்படிக்கு, என்னைப் புகழ்ந்து அவர்களைக் கடுப்பேத்துவார். நல்லவேளை அவரது பேரப்பிள்ளைகள் என்னை வெறுக்கவில்லை. பேப்பர் படிப்பது, அரசியல் தலைவர்களின் சாகசங்கள் பேசுவது, வெட்டொன்று துண்டு இரண்டாகக் கதைசொல்வது இவர் பழக்கம்.
அந்தக் காலத்தில், இவர் பெரிய திமுக ஆதரவாளராக இருந்திருக்க வேண்டும். 1967 இல் அவர்களது வீட்டின் உள் அறைகளுக்குச் செல்லும் முகப்பு வாசலின் மேலே பெரிய பிறேம் போட்ட படம் ஒன்று தொங்கியது. முதலமைச்சர் அண்ணாத்துரை அவர்களின் படம் பெரியதாக நடுவிலும் அவரைச் சுற்றி அவரது முதலாவது அமைச்சரவையும் காணப்பட்டது. அந்தப் பெயர்கள் எல்லாம் இவருக்கு அத்துபடி. 1950 களில் மல்லாவி, துணுக்காய் போன்ற குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எங்கள் சீனி அம்மாய்யா குடும்பத்தினரும் ஊரைவிட்டுப்போய் மல்லாவியில் குடியேறினர். பாலி ஆற்றின் இக்கரையில் இவர்களது நெல்வயல்கள் இருந்தன.
பாலி ஆற்றின் மறு கரையில் இருக்கும் ஒட்டன்குளம் பகுதியில் எங்கள் உறவினர்கள் பலரும் 1963-1964 காலப்பகுதியில் காணிகளைப் பெற்றுக்கொண்டனர். எனது அப்பாவிற்கும் ஒரு காணி கிடைத்தது. முதலில் சிலவருடங்கள், ஆண்கள் மட்டும் நெற்செய்கையின் பொருட்டு குடியேற்றத்திட்டங்களுக்குச் செல்வர். ஒரு ஆறு மாதங்களின் பின்னர் அறுவடைமுடிந்து, நெல்லு விற்ற காசுடன் வீடு திரும்புவர். இந்த உறவினர்கள் எல்லாம் தற்காலிகமாகப் பலவருடங்கள் தங்கியது இந்தச் சீனி அம்மம்மா- சீனி அம்மாய்யா வீட்டில் தான். அவர்கள் அங்கே கழித்த பொழுது சாயும் காலங்களும் முன்னிரவுகளும் எப்பொழுதும் திருவிழாப் போன்றிருக்கும். அதிமுதுமையின் பின்னாட்களில் போருக்குள் அகப்பட்ட பீதி வாழ்வு, ஆயினும் தன் 99 ஆவது வயதில் ஸ்கந்தபுரத்தில் அம்மாய்யா ஐயம்பிள்ளை. ஊரில் பாடசாலை விடுமுறைக் காலத்தில் மல்லாவிக்குச் கூட்டிச் செல்லமாட்டார்களா என்ற கனவுடன் நான் ஆறு மாதங்களைக் கழித்திருப்பேன். எப்படியோ இரண்டொருமுறை கூட்டிச் சென்றார் அப்பா. இந்தச் சீனி அம்மம்மா- சீனி அம்மாய்யாவின் வீட்டின் பின்புறம் அகன்ற வரப்பொன்றின் நீண்டு செல்லும். வேலியினைத் தாண்டினால் பள்ளம் அதில் விழுந்து ஏறினால் அழகான மண்வீதி. அந்த வீதியின் எதிர் மருங்கில் நீண்டு வளர்ந்த, பரந்த இலைகளைக் கொண்ட காட்டாமணங்கஞ் செடிகள், எருக்கிலைச் செடிகள். இந்த அற்புதங்களின் தரிசனங்களை இப்பொழுதும் ஒருவர் பெறக்கூடுமோ தெரியவில்லை. ஆம், மழை நனைத்த இருண்ட கார்கால இரவுக்கு பல்லாயிரம் மின்மினிப் பூச்சிகள் அந்த வீதியின் சாரல்களில் விளக்கேற்றி நிற்கும். அதை கண்டபடி அந்த வீதியில் நடந்தால் பரவசம் தலைக்கேறும். இப்பொழுது எண்ணிப் பார்க்கின்றேன். இன்னும் இறங்கவில்லை. ”கன்னல் எனும் சிறுகுருவி ககனமழைக் காற்றாமல் மின்னல் எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம் மன்னவனாம் தென்மதுரை மாவலி வாணனைப் பிரிந்திங்கு என்ன பிழைப்பு என்னநகைப்பு என்ன இருப்பு இன்னமுமே.” இந்த விடுமுறைக் காலத்தின் ஒர் இரவு அருகில் இருந்த ஏதோவொரு கோயில் திருவிழாவிற்கு சின்ராசு மாமா கூட்டிப்போயிருந்தார். அவருக்கு இறைத்த நிறைய தேநீர் எனக்குள்ளும் பாய்ந்தது. இரவு பாயில் பெருவெள்ளமாய் மூத்திரமடித்துவிட்டேன். மெழுகிய தரை முழுவதும் ஈரம். இந்தச் சமாச்சாரம் ஏற்படாதிருக்க எல்லா வைத்தியமும் செய்து பார்த்தேன். கோவிலில் இருக்கும் பலிபீடத்தில் வைக்கப்படும் புக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்றாகள் சாப்பிட்டேன். எதற்கும் கேட்கவிலை அது. 13ஆவது வயதுவரை அது என்னுடன் தான் வாழ்ந்தது. வாழ்வு எப்பொழுதும் அவமானங்களின் மூலம் ஆக்கபடுவதா..என்ன!

கருத்துகள் இல்லை: