புதன், டிசம்பர் 02, 2020

நெடுந்தீவின் பனங்காணி முனையில் வைத்திலிங்கம் கல்!

நெடுந்தீவின் பனங்காணி முனையில் வைத்திலிங்கம் கல்!
இந்த நீண்ட தீவின் வடமேற்கு முனையினைப் பனங்காணி முனை என்பார்கள். அந்த முனையில் இருந்து கிழக்கு நோக்கி கடற்கரை நீளம் நடந்து வாருங்கள். மேடுகளில் பனங்கூடல், தாழ்வுகளில் கால்புதையும் வெள்ளை மணல்.
நீர்படு கடற்கரையும் வற்றுக் காலங்களில் வெளியே நீட்டும் கற்பாறைகளும் கழிந்துபோன, இத்தனை மில்லியன் வருடங்களில், அலை நீர்த் தழுவலில் அவற்றின் குட்டைகள், கூம்புகள், கூரிய நுனிகள் அழுத்தமாகியிருக்க வேண்டாமா! அந்தப் பாறைகளில் நாம் காலூன்றிக் காதல் செய்ய இன்னும் எத்தனையாயிரம் வருடங்கள் காத்திருப்பதாம்!
அதுதான் இல்லை. பாறைகள் தமது பற்களைக் கூராக்கிக் கொண்டன. ஊசிமுனைகளாகத் தம்மைத் தீட்டி நிற்கின்றன. கவனம்! கால் பிளந்துபடும்; கடலுக்குள் கால் வைக்காதீர்கள். வளர்ச்சி குன்றிக் கறாளையடித்து பொன்சாய் (BONSAI) மரங்களைப் போலப் பாவனை காட்டும் காட்டுப் பூவரசு, அவற்றில் படரும் முசுட்டைக் கொடி, நாகதாளிப் பற்றை, கற்றாளைப் பரம்பல், வேதாளம் குடியிருக்கும் எருக்கிலைச் செடிகள்; கீழே தனித்து விழுந்து உயிர்வாழ்தல் சாத்தியமில்லை என்பதால், அரைப்பனையில் வேரூன்றிப் பின் அதைச் சுற்றி வளர்ந்த பனையைத் தின்னி ஆலமரங்கள். இப்படியே திசையினை மாற்றாது கிழக்கு நோக்கியே நடந்து வந்தால்…மீண்டும் ஒரு வெண்மணல் விரிப்பில் வந்து நிற்பீர்கள். நீருக்குள் கொஞ்சம் உயரமான அடி சிறுத்து முடி பெருத்த ஒரு பிளவுண்ட பாறை தெரியும். அதற்குப் பெயர் வைத்திலிங்கம் கல்லு.

தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி-கொடநாட்டில் ரங்கசாமி மலை இருக்கிறது. அதன் உச்சிக்கு இதுவரை யாரும் சென்றதில்லை என்றே கூறுவர். ஆனால் மனைவியுடன் கோவித்துக்கொண்ட ரங்கசாமி அந்த மலை உச்சிக்கு சென்றதால் அது ரங்கசாமி மலை என்று ஒரு கதையும், அப்படியே இன்னும் பலகதைகளும் இருக்கின்றன. ரங்கசாமி கோவில் கூட இருக்கின்றது.
கேரளாவில் சின்னத்தம்பிக்கு வழிபாடிருக்கின்றது; சின்னத்தம்பி கோவில் இருக்கின்றது. சின்னத்தம்பி அவன் குலத்திற்காகக் கொல்லப்பட்ட ஒருவனாக இருக்கலாம். இலங்கையில் மல்லாவியில் மருமக்கள் புளியடி என்று ஒன்று இருக்கிறது. மாமனும் மருமக்களும் காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது கொடியமிருகம் ஒன்று எதிர்ப் படவும், மாமன் புளியமரத்தில் ஏறிவிட்டாராம், பாவம் மருமக்கள் பலியாகினராம். மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம்.ராமையாவின் கோவில் என்ற சிறுகதையின் பாத்திரம் சன்னாசி. உண்மையாகவே சன்னாசி மறைந்திருந்த குகை, இப்பொழுதும் சன்னாசி குகை என்றே சொல்லப்படுகிறதாம். இப்படி உலகில் எல்லா ஊர்களிலும் கல்லும் மலையும், மண்ணும் மரமும் எத்தனை எத்தனை கதைகளோடும், காரணப் பெயர்களோடு வாழ்கின்றன.

அடுத்து நான் சொல்லப்போவது இந்த ”வைத்திலிங்கம் கல்” பற்றி. சின்னத்தம்பி வைத்திலிங்கம் என்பவர் 16ம் திகதி பங்குனி மாதம் 1935 ஆம் ஆண்டு உறக்கத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் காலத்தில் வரகு சேமித்து வைக்கும் உமலில் (silo, made by palmera leaves) அவரது உடலைப் போட்டுக் கட்டி ஏர்க்காலில் அதனைக் கொழுவிச் சுமந்து பனங்காணிக் கடலுக்குக் கொண்டுபோய்க், கரையில் இருந்து கடலுக்குள் சற்றே தூரத்தில் இருக்கும் உடலை உமலில் இருந்து வெளியே எடுத்து உயர்ந்து நிற்கும் பாறையொன்றின் அடியில் உடலினைக் கட்டி அது மிதந்துவிடா வண்ணம் உடலின் இடுப்பின் இரண்டு பெரிய கற்களை இணைத்து நீரில் அமிழ்ந்த விட்டிருக்கின்றனர். நான்கு நாட்களுக்குப் பின்னர் இப் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டிருகின்றது. தனது தங்கையின் கணவரைக் கொன்றிருக்கின்றார் கொலையாளி. கொன்றது தொடக்கம் கடலில் போட்டது வரை இதனோடு தொடர்புடையவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் உறவினர்கள். எனதும் உறவினர்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இப்போது உயுருடன் இல்லை. ஆனால் இறந்தவரின் மூத்த சகோதரி விட்டுச் சென்ற ஒப்பாரி இன்னமும் மிகுந்த உணர்வுபூர்வமான கவிநயம் கொண்டதாக உறவினர்க்கிடையில் உலவுகின்றது.

இந்த பத்திரிகைச் செய்தியில் கிடைக்கின்ற தகவல்கள் ஓர் சமுகவியல் ஆய்வுக்குரியன. பல பொருட்கள் இன்று அடியோடு மறைந்துவிட்டன. வார்தைகள் வழக்கொழிந்துவிட்டன.


************************************************************************************************
யாழ்ப்பாணம் சுப்பிறீங்கோட்டு விசாரனை-3.

நெடுந்தீவுக் கொலை வழக்குபடுக்கையில் வெட்டி உமலில் பொதிந்து கடலில் கட்டிய வரலாறு.
எதிரிக்குத் தூக்குத் தண்டனை.


(நமது நிருபர்)

யாழ்ப்பாணம் 12.

யாழ்ப்பாணம் சுப்ரீம் கோட்டில் நீதியரசர் திரு. L. M. மாட்டினெஸ் முன்பாகவும், ஆங்கிலம் பேசும் ஜுரிக் கனவான்கள் முன்பாகவும், நெடுந்தீவு வாசியாகிய வைத்தியனாதர்-இராமனாதர் என்பவர் மீது சென்ற பங்குனி மாதம் 16-ந் திகதியளவில் அவ்வூர் வாசியாகிய சின்னத்தம்பி- வைத்திலிங்கம் என்பவரைக் கொடுவாக் கத்தியால் வெட்டி அவரது மரணத்தை வருவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. J.V.செல்லப்பா (தலைவர்),K.அம்பலவாணர், M.J.இராசையா, M.சிற்றம்பலம், K.முருகேசு S.மருதமுத்து, V.துரைசுவாமிப்பிள்ளை முதலியோர்கள் ஜுரிக் கனவான்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வழக்காளி சார்பாக முடிக்குரிய நியாயவாதி திரு. நிகால் குணசேகராவும், எதிரியின் சார்பாக துரந்தரர் திரு. T.C.இராசரத்தினத்தின் அநுசரணையின் பேரில் பிரபல நியாயவாதிகள் திரு. S. துரைசுவாமி தம்புவும், திரு. C. கனகரத்தினமும் திரு. H.கதிரவேலுவும் ஏற்பட்டனர். முடிக்குரிய நியாயவாதி நிகால்குணசேகரா அவர்கள் வழக்கின் சாராம்சத்தை ஜுரிக்கனவான்களுக்கு எடுத்துரைத்ததின் மேல் டாக்டர் V.தியாகராசா அவர்கள் சாட்சியங்கொடுத்தார். சாட்சியத்தின் சாராம்சம் வருமாறு:-

"நானே ஜுடிஷல் மெடிக்கல் ஆபீசராக நெடுந்தீவில் கடமைபார்த்து வருகிறேன். சென்ற பங்குனி மாதம் 20-ந் தேதியன்று மாலை 5மணியளவில் இறந்தவராகிய சி. வைத்தியலிங்கத்தின் பிரேதத்தைப் பரிசோதித்தேன். அப்பிரேதம் அவருடையது தானெனப் பெருமாள் ஐயம்பிள்ளையும், நெடுந்தீவு மேற்குப் பகுதிப் பொலிஸ் விதானை K. கந்தையாவும் அடையாளங் கண்டுபிடித்துக் கூறினர். பிரேதம் கடலில் 3 அடி ஆழமான இடத்தில் முகங்குப்புறக் கிடந்தது. இடது காலை மடித்து இடுப்புடன் சேர்த்து ஈர்வாணியாற் கட்டப்பட்டிருந்தது. இரு பாரிய கற்கள் அரையின் இருபுறங்களிலும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தையும் புயத்தையும் சேர்த்துக் கடலிலுள்ள கல்லுடன் கட்டப்பட்டிருந்தது. கீழ் அலகும் முகத்தின் மிருதுவான பாகங்களும் காணப்படவில்லை. பாதத்தினது தோலும் பிரிந்திருந்தது. பிரேதம் வெளிறி வெதும்பியிருந்ததுடன் அழுகல் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதனது கையில் 4- அங்குல நீளமும் 2- அங்குல அகலமுமான “சரஸ்வதி" பச்சை குத்தப்பட்டிருந்தது. கயிற்றின் தழும்புகள் கையிலும் தோழிலும் காணப்பட்டன. இறந்தவரது உயரம் 6-அடி 2- அங்குலம்.

காயங்கள். கழுத்தின் இடது பக்கத்தில் முடிச்சுக்கு கீழ் இரண்டு கூரிய கத்திக் காயங்கள் காணப்பட்டன. அவை இடது பக்கத்துப் பெரிய இரத்தோட்டு நரம்பையும் மிடறையும் இரைக்குழாயையும் மிடற்று நாம்பையும் மற்றும் தசை முதலியவற்றையும் துண்டாக அறுத்துக் காணப்பட்டன. பிடரியிலும் முன்னெற்றியிலும் எலும்புகளிலும் காயங்கள் காணப்பட்டன. ஆண் குறியின் நுனியும் வெட்டப்பட்டிருந்தது, காயங்களை உற்று நோக்கின் இரத்தப் பெருக்கின் காரணமாகவே மாணம் சம்பவித்திருக்குமென எண்ணுகிறேன். (காட்டப்பட்ட) இக் கத்திபோன்றதால் உண்டாகியிருக்கலாம். சரீரம் நாறத்தொடங்கியதால் வயிற்றில் மதுபானம் இருக்கிறதோ எனச் சொல்லவியலாது, மரணம் உடனேயே சம்பவித்திருக்கும். இறந்தவன் சத்தம் செய்திக்க முடியாது. கடலில் ஏறக்குறைய 90-மணித்தியாலம் வரையில் பிரேதம் கிடந்திருக்கும். அதன் மேல் நெடுந்தீவு வாசியான இராமநாதர் சின்னத்தம்பி என்பவன் சாட்சியங் கூறுகையில் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:- "கடந்த பங்குனி மாதம் 16-ந் தேதியன்று இரவு 9-மணியளவில் நான் எனது வீட்டில் சகோதரமுறை பூண்ட சின்னத்தம்பி என்பவருடன் அட்டாளையின் மீது படுத்திருந்தேன். எதிரி அங்குவந்து என்னைக் கூப்பிட நான் என்ன காரியம் எனக் கேட்டேன். சின்னத்தம்பியும் நித்திரையினின்று விளித்துக்கொண்டார். பின்னர் எதிரிதான் வைத்தியலிங்கத்தைக் கொலை செய்து விட்டதாகவும் அப்பிரேதத்தைக் கடலுள் போடுவதற்காக வரும்படியாகவும் கூறினார். நான் வரமுடி யாதெனக்கூற எதிரி என்னைப் பிடித்திழுத்தார். நான் கொலை நடந்த இடத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஒரு வாங்கின் மீது துணியால் மூடப்பட்டிருந்தது. துணிக்கு மேற்பக்கத்திலும் இரத்தக் கறைகள் காணப்பட்டன.

அங்கு இருந்த ஓர் உமலை எடுத்து அதனது வாயை விரித்துப் பிடிக்கும்படி கட்டளை பண்ணினார். உடனே நான் அப்படிச் செய்ய முடியாதெனத் தெரிவித்தேன். பின்னரும் எதிரி கட்டாயப்படுத்தியதால் உமலை விரித்துப் பிடித்தேன். எதிரி சவத்தைத் துணிகளுடன் அதற்குள் தூக்கிப்போட்டார். அதன்பின்னர் நாங்களிருவருமாகச் சண்முகத்தினுடைய வீட்டிற்குச் சென்று அவனையும் கூட்டி வந்து பிரேதம் பொதிந்த உமலை ஓர் ஏர்க்காலில் வண்டிக்கட்டாகக் கட்டிக் கடற்கரைக்குக் கொண்டு சென்றோம். எதிரியே பிரேதத்தைக் கடலினுட் கொண்டு சென்று உமலினுள் இருந்த பிரேதத்தை வெளியே எடுத்து ஒரு கற்பாறையுடன் சேர்த்துக் கட்டினார். பின்னர் நானும் சண்முகமும் குளித்து விட்டு எங்கள் எங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.

நான் எதிரியிடம் "வைத்தியலிங்கத்தை ஏன் இறக்கப்பண்ணினாய்" எனக் கேட்டபோது, வைத்தியலிங்கமென்னைக் கத்தியால் குத்த முயற்சித்தமையால் நான் அவரை வெட்டினேன்'' எனக் கூறினார். (பார்த்து) இக் கொடுவாக்கத்தி வாங்கின் கீழ்க் கிடந்தது. சாட்சி மீண்டும் குறுக்கு விசாரணையின் போது கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:-
”இறந்தவர் மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவர்க்கு அடித்தவர் என்பது உண்மைதான். ஓர்முறை நெடுந்தீவுக் கிராமச்சங்க அக்கிராசனரது மேடையில் தேங்காயை அடித்துடைத்து வீண் கலவரத்தை உண்டாக்கியவர். அத்துடன் அங்குள்ள கரையார் சிலரை முழந்தாட்படியிட்டு நிற்கச் செய்தவர்.”
பின்னர் பிரேதத்தைக் கடலுக்குக் கொண்டு சென்றவர்களுள் ஒருவராகிய நாகனாதர் - சண்முகம் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:- சம்பவம் நடை பெற்றவன்று இரவு எதிரி என்னைக்கூப்பிட்டார். நான் வெளியே வந்தேன். அப்போது சின்னத்தம்பியும் நின்றார். உடனே அவர் தன்னைப் பின்பற்றும்படி எம்மிடம் கூற நான் கூடிக்கொண்டு வைத்திலிங்கத்துடைய வீட்டிற்குச் சென்றேன். சென்றதின் மேல் எதிரி வீட்டினுட் சென்று சிறிதுநேரத்தின் பின் உள்ளே வரும்படி அழைத்தார். நான் உட்சென்றதும் எதிரி கத்தியால் வெட்டி வைத்திலிங்கத்தைக் கொன்றுவிட்டதாகக்கூற நான் ஏன் அப்படிச்செய்தாயெனக் கேட்டேன். அப்போது எதிரி 'தனக்குச் செய்த பிழைகளுக்காகவும் இறந்தவர் தன்னைக் குத்த வந்தபடியால் குத்தியதாகவுங் கூறினார். நானும் சேர்ந்தே பிரேதத்தைக் கடற்கரைக்குக் கொண்டுபோனோம். எதிரியே கடலினுள் பிரேதத்தைக் கொண்டுபோனார். பின்னர் எம்மையும் வரும்படி யழைக்க நாங்களுஞ் சென்று பிரேதத்தைக் கட்டினோம். பின்னர் நாங்கள் குளித்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டோம். அடுத்த நாள் எதிரி என்னைத் தோட்டத்தில் கண்டு வேலாயுதத்தைக் கூட்டிச் சென்று அங்கு கிடக்கும் உமலை எடுத்து வரும்படி கூறினார். சிறிது தூரத்திற்கு வேலாயுதம் சென்று நின்று விட்டார். அப்பால் உமல் எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

இச்சாட்சியைக் குறுக்குவிசாரணை செய்யப்பட்டதின் மேல் ஆறுமுகம் மாரிமுத்து என்பவரையும் இறந்தவரது மனைவியும் எதிரியினது சகோதரியுமாகிய வள்ளியம்மையையும் வைத்தியனாதர் - ஆறுமுகத்தையும், சுப்பிரமணியர் - கணபதிப்பிள்ளையையும் விசாரணை செய்யப்பட்டதின் மேல் நெடுந்தீவு மேற்கு பொலிஸ் விதானை கார்த்திகேசு -கந்தையா கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:-

"கடந்த 17-ந் திகதியன்று வை. ஆறுமுகம் என்பவர் என்னிடம் வந்து 16-ந் திகதியன்று இரவு என்னுடன் கூடவிருந்து இராச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு அடுத்தநாள் வருவதாக உறுதிகூறிச் சென்ற வைத்திலிங்கம் வரவில்லையெனக் கூறினார். நான் அதனைப் பதிவு செய்துள்ளேன். நான் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு அருகே சென்று வேறொருவனைப் பார்த்து வரும்படி அனுப்ப, அவன் திரும்பிவந்து அங்கு ஒருவருமில்லை யென்பதாகத் தெரிவித்தான். பின்னர் 10 மணியளவில் வைத்திலிங்கத்தின் மனைவியை அவளது தாயார் வீட்டில் சந்தித்துக் கேட்டபோது அவள் தான் சிலநாட்களாகத் தாயாருடன் வசித்து வருவதாகவும் 16- திகதியன்று தான் கணவனைச் சந்தித்த தாகவும், யாழ்ப்பாணம் போகவேணுமெனச் சொன்னதாகவும் கூறினாள். அடுத்தநாட் காலை நான் மணியகாரனுக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டு அன்று சாயங்காலம் வைத்திலிங்கத்தின் வீட்டைச் சோதனை செய்தேன். அப்போது அங்கு இரத்தக்கறைகள் படிந்திருந்தது. வாங்கு கழுவப்பட்டிருந்தது. நிலம் செதுக்கி மெழுகப்பட்டிருந்தது. 20-ந் திகதியன்று இறந்தவனுடைய சவத்தைத் தேடும்படி அனுப்பினேன். நான் அனுப்பிய ஆட்களுள் ஒருவராகிய கணபதிப்பிள்ளை பிரேதத்தைக் கண்டு பிடித்தார். 20-ந் திகதியன்று சாயங்காலம் நான் டாக்குத்தருடன் கடற் கரைக்குச் சென்றேன். நானே பிரேதத்தைக் குறிப்புக் காட்டினேன். எதிரி நல்நடத்தையுடையவன். இறந்தவன் அனேகமாகக் குடித்துவிட்டுத் திரிபவன்."

அதன்பின் மணியகாரன் முதலியோர் சாட்சியங் கூறினார்கள். அதன் பின்பு எதிரியாகிய வைத்தியநாதர் இராமநாதர் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:-

சம்பவம் நடைபெற்ற வன்று பகல் 2 மணியளவில் வைத்திலிங்கம் என்னைச் சந்தித்து வீட்டுக்கு வரும்படி கூற நான் பயமிகுதியினால் அவரது வீட்டிற்கு அன்றைய இரவு சென்றேன். என்னைக் கண்டதன் மேல் அவர் வில்லுக்கத்தியை விரித்து என்னைக் குத்தவந்தார். ''உங்கள் புகையிலைக் கன்றுகளை வெட்டியது போதாது. அதைவிட அனேக இடுக்கண்கள் செய்யப்போகிறேன். உங்கள் யாவருடைய வீடுகளையும் தீக்கிரையாக்கப் போகிறேன். நான் ஒருவன் தான். நான் போகத் தயாராயிருக்கிறேன். விளக்கை தூரடா'' எனச் சொன்னார். அவர் குத்தவர நான் குளறினேன், கும் பிட்டேன். அதனைக் கண்ட வைத்திலிங்கம் இந்த வில்லுக்கத்தியால் உன்னைக் கொல்ல முடியாது எனக் கூறிக் கூரையில் செருகியிருந்த கொடுவாக் கத்தியை எடுத்துத் தான் படுத்திருந்த வாங்கின் கீழ் வைத்து விட்டுப் படுத்தார். என்னையும் படுக்கச் சொல்ல நானும் படுத்தேன். பின்னர் அவர் தட்டியை நீக்கித் துப்பவே தகுந்த தருணம் என நினைத்துக் கீழே கிடந்த கொடுவாக் கத்தியை எடுத்து இரு கையினாலும் பிடித்து ஓங்கி வெட்டினேன். கழுத்தில் தான் வெட்டினேன். அத்தருணத்தில் என் மனங் குழப்பமடைந்திருந்தமையால் எத்தனை முறை வெட்டினேனெனவும் என்ன செய்தேனெனவும் தெரியாது. அதன் பின்னர் சின்னத்தம்பியை அழைத்து வந்து அவனது உதவியுடன் பிரேதத்தை உமலினுள் பொதிந்தேன். திரும்ப நாங்கள் இருவருமாகச் சென்று சண்முகத்தை அழைத்து வந்து மூவருமாகக் கடற்கரைக்குப் பிரேதத்தைத் தூக்கிச் சென்று கடலினுள் பிரேதத்தைக் கல்லுடன் கட்டினேன். பின்னர் எனது மாமனாகிய வேலாயுதரிடம் உமலை எடுத்து வரச் சொல்ல அவர்மறுக்க நானே அதனை எடுத்து வந்து எரித்தேன். ரத்தக்கறைகளை இல்லாது செய்தேன். இச் செய்கைகளைப் பயமிகுதியினால் ஒருவருக்கும் கூறாதிருந்தேன். காத்திராப்பிரகாரம் விதானையைக்ண்டு அவரிடம் கொடுவாக் கத்தியை எடுத்துக் கொடுத்து அவருடன் கூடிக்கொண்டு மணியகாரனிடஞ் சென்று எனது வாக்குமூலத்தைக் கொடுத்தேன்.''யாழ்ப்பாணம் 13.

இன்று கோடு கூடியதும் நியாயவாதி திரு. S. D.தம்பு அவர்கள் 50 நிமிஷ நேரமாக எதிரி தற்பாதுகாப்பிற்காகவே மேற்படி செயலைச் செய்ததாக அனேக முறையாக வாதாடி ஓர் சொற்பொழிவு செய்தார். அதன் மேல் நீதியரசர் தமது அபிப்பிராயத்தைக் கூறினார். பின்னர் ஜுரிக் கனவான்கள் நீண்டநேர ஆலோசனையின் மேல் "எதிரி கொலைக்குக் குற்றவாளியெனவும், எதிரி வாலிப வயதுடையவனாகையாலும் இச்செயலுக்கு முன் நன்னடத்தையுடையவனாதலாலும் எதிரியின் மீது இரக்கங்காட்டவேண்டுமென” வுங் கூறினார்கள். நீதியாசர் தீர்வையைக் குறிப்பிடு முன்னர் எதிரியாகிய இராமநாதர், "தான் வேண்டுமென்று கொலை செய்யவில்லை யெனவும், தன் மீது இரக்கங் காட்டும்படியும்" வேண்டிக்கொண்டான். ”வருகிற புரட்டாதி மீ. 16உ. திங்கட்கிழமையன்று கண்டியி லுள்ள போகம்பறைச் சிறைக்கூடத்தினுள் உன்னைத் தூக்கிலிடப்படும்” என நீதியாசர் தீர்ப்புக் கூறினர்.

கருத்துகள் இல்லை: