வெள்ளி, ஏப்ரல் 23, 2021

ஈழத்தின் நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் கே. டானியல் ஒரு திறனாய்வு நோக்கு****************பேராசிரியர் நா. சுப்பிரமணியன்*****************

[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்மன்றம் 23.03.1994 அன்று நிகழ்த்திய எழுத்தாளர் கே.டானியல் நினைவு அரங்கில்நிகழ்த்தப்பட்ட உரை. மல்லிகையின் இரண்டு இதழ்களில் (மே 1994, ஜூலை 1994)வெளியானவை இங்கே மீளப் பதிவாகின்றது. ]

கணேசலிங்கனின் நாவல்கள் 50-70 காலகட்ட சமுதாயவரலாற்றுப் போக்கைச் சித்திரிப்பன. பஞ்சமர் வரிசை நாவல்கள் மேற்படி காலப்பகுதியை உள்ளடக்கி, அதற்கும் முன்னாக ஏறத்தாழ இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய லரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக அடிமைகள் நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது. 'கானல்’, ’தண்ணீர்’ நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் இந்த நூற்றாண்டு தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று, நான்கு தலைமுறைகளின் வரலாறுகள் இவற்றில் விரிகின்றன.

கணேசலிங்கனின் படைப்புக்களிலிருந்து டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களை வேறுபடுத்தி நிற்கும் மற்றொரு முக்கிய கூறு இவரது சமூக அனுபவ நிலைகள் ஆகும். கணேசலிங்கனுக்கு அடக்குமுறைக் கொடுமை என்பது வாழ்வியல் அனுபவம் அல்ல. அது அவரது பொதுவுடைமைப் பார்வையினூடாகப் புலப்படும் ஒரு காட்சி மட்டுமே. கண்டும் கேட்டும் உணர்ந்ததைக் கருத்து நிலைப்படுத்தி கதை அமைத்து அவர் நாவல் புனைந்தார். ஆனால் டானியலுக்குப் பஞ்சமர் பிரச்சினை என்பது வாழ்க்கையின் அநுபவ தரிசனம் ஆகும். தான் பிறந்த சமூக நிலையாலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களின் அடிநிலை மாந்தரின் வாழ்க்கை நிலைகளோடும் கொண்ட நேரடித் தொடர்புகளாலும் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டத்தில் பங்கு கொண்டமையாலும் அவர் பெற்றிருந்த அனுபவத்தெளிவு அது.


“…இந்தப் பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கின்றேன். அறிவறிந்த பருவம் முதல் இன்றுவரை இந்த மக்கட் கூட்டத்தினரின் பிரச்சினைகளிற் பங்கு கொண்டு, இவர்கள் துன்பப்பட்டுக் கண்ணீர் விட்டபோதெல்லாம் சேர்ந்து கண்ணீர்விட்டு, சிறு சிறு வெற்றிகள் கண்டு மகிழ்ந்தபோதெல்லாம்சேர்ந்து மகிழ்ந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களோ எண்ணிக்கை யற்றவை,…”
என அவர் கூறியுள்ளவை ('பஞ்சமர் உள்ளே நுழைவதற்கு முன்...') இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியன. டானியல் அவர்களுக்கு இருந்த இந்த அனுபவத் தெளிவு பஞ்சமர் வரிசை நாவல்களுக்குத் தனியான கன பரிமாணத்தைத் தந்துள்ளமையை உய்த்துணரமுடிகின்றது. இந்நாவல்களின் சம்பவங்களில் இருந்து கதையம்சத்தை உருவாக்குவதில் திட்டப்பாங்கான அமைப்புக்கு அதிக இடம் இல்லை. ஆசிரியரின் கற்பனைத் தொழிற்பாட்டிற்கு அதிக அவசியம் இருக்கவில்லை. சமூக வரலாற்றுப் போக்கில் பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களைப் பொருத்தமுற இணைப்பதன் மூலம் - அவற்றினூடாகப் புலப்படும் சமூக அசைவு இயக்கத்தை உணர்த்துவதன் மூலம் இந்நாவல்களுக்கான கதையம்சத்தை டானியல் அவர்களால் புலப்படுத்திவிட முடிகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிஜமான சமூக மாந்தரைப் பெயர் மாற்றங்களுடன் நடமாட வைப்பதன் மூலமும் பல்வேறு கிராமப்புறங்களின் நடைமுறை வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், உணவுமுறை, பொழுது போக்குகள், சடங்கு-சம்பிரதாயங்கள் முதலியவற்றை இயற்பண்புடன் சித்திரிப்பதன் மூலமும் ஒரு, உயிரோட்டமான - நிஜமான -- சமூக வரலாற்றை டானியல் அவர்களால் காட்சிப்படுத்திவிட முடிகின்றது. வாழ்க்கையிலிருந்து கலை உருவாகின்றது என்ற நிலைக்குப் புறம்பாக வாழ்க்கையே கலையாகிவிடும் நிலையை பஞ்சமர் வரிசை நாவல்களில் தரிசிக்க முடிகின்றது.

"…வாழ்க்கை - கலை இவற்றின் எல்லைக் கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலைநிறைத்துள்ளன…" எனப் பேராசிரியர் க. கைலாசபதி பஞ்சமர்-முதற்பாகம் தொடர்பாக முன்வைத்துள்ள கணிப்பு. (தினகரன் வாரமஞ்சரி, 1972.10.22; பக். 10) பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்திற்குமே பொருந்தக்கூடிய கணிப்பாகும். பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தைப் பின்வரும் இரு கூறுகளுக்குன் அடக்கிவிடலாம்.

(அ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீதுநிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக் கொடுமைகளின் விவரணம்
(ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனிதநேயம்கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம்.

முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியாகவே கதையம்சமாக விரிகின்றன. உயர் சாதியினர் எனப்படுவோரில் சாதித்திமிர், அதனால் அவர்கள் புரியும் அட்டூழியங்கள் என்பன தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பவற்றையும் தாழ்த்தப்பட்டோரின் வர்க்க ரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்டமாக விவரித்துச் செல்கிறது. “கோவிந்தன்'' நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றது. பஞ்சமரின் எழுச்சிக்குமுன் சாதித்திமிர் நிலை' தளர்ந்து போவதாகக் காட்டுவது இந்நாவலின் அகநிலையான கதையம்சம். ஆனால் புறநிலையிலே "சாதி மீறிய காதல் - பாலியல் உறவு'' என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது. "அடிமைகள்” நாவலும் கோவிந்தனைப் போலவே வேளாளகுலக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம், புலம்,சொத்து, அதிகாரம், அடிமை-குடிமை என்பவற்றுடன் ராசவாழ்வு நடத்திய அக் குடும்பம் கேளிக்கைகள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது. “கானல்'' நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியிற் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிப்பிரச்சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைந்ததா? என்ற வினா எழுப்பி விடைகாணும் நோக்கில் - விமர்சிக்கும் நோக்கில்-இது அமைகின்றது.

சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையில், குடி தண்ணீர் பெறுவதில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்திக் கதைப்பொருள் கொண்ட மைந்தது ”தண்ணீர்” நாவல். தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற்றுடன் தமிழரின் இனவிடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்க சூழலை இணைத்துப் புனையப்பட்ட நாவல் ”பஞ்சகோணங்கள்”. தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மேற்படி சூழலில் எத்தகு பாதிப்புக்களை எய்திற்று என்பதை இந்நாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது. மேற்குறித்தவாறான பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன. குறிப்பாக பஞ்சமர் நாவலின் கதை நந்தாவில், வட்டுக்கோட்டை முதலிய கிராமங்களில் நிகழ்ந்தது.

'கோவிந்தன்' நாவலின் முக்கிய களம் சுதுமலை. ’அடிமைகள்' நாவல் மந்துவில், புத்தூர், சுட்டிபுரம் ஆகிய கிராமங்களில் நிகழ்கின்றது. 'கானல்' தாவடி, சின்னக்கலட்டி, திருநெல்வேலி ஆகிய கிராமங்களைக் களமாகக் கொண்ட ‘தண்ணீர்' வட மராட்சிப் பகுதியை-குறிப்பாகக் கரவெட்டியை மையப்படுத்தியது. 'பஞ்சகோணங்களின்' கதை நிகழ் களங்களாக புன்னாலைக்கட்டுவன், கட்டுவன்,உரும்பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நாவல்களின் கதை நிகழ் களங்களைப் போலவே நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும் பஞ்சமர் நாவல் நிகழ்வுகள் 1956-1969 காலப்பகுதிக்குரியன. இக்காலப் பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவான காலம் வரையான ஆண்டுகளில் ஏறத்தாழ 1970-1980 களில் -பஞ்சகோணங்கள் கதை நிகழ்கின்றது என்பது அந்நாவலின் முன்னுரையால் உய்த்துணரப்படுவது. ஏனைய நான்கும் இந்த நூற்றாண்டின் முற்பகுதி சார்ந்தனவாகும். குறிப்பாக கோவிந்தன்1920-1965 காலப்பகுதியையும், அடிமைகள் 1890-1956 காலப்பகுதியையும் கதை நிகழ்காலமாகக் கொண்டவையாகும். இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப்பிரச்சினையை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்களின் வரலாற்றில் கதையம்சப் பரப்பு, பிரதேசப் பரப்பு, காலப் பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் வரிசை நாவல்கள் முன்னைய ஆக்கங்களைவிட மிக விரிவானவையாக தனிக் கவனத்திற்குரிய கனபரிமாணங்கள் கொண்டவையாகத் திகழ்கின்றமை தெளிவாகும்.

    திறனாய்வு நோக்கில் பஞ்சமர் வரிசை நாவல்கள்


திறனாய்வு நோக்கு என்ற வகையில் இந்நாவல்களின் தொனிப்பொருள், கட்டமைப்பு, கதைமாந்தர் சித்திரிப்பு என்பன தொடர்பான சில சிந்தனைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இந்நாவல்கள் அனைத்தும் அடிநிலை மக்களான பஞ்சமரின் விடுதலை வேட்கையை அடிநாதமாகக்கொண்டவை தெளிவு. யாழ்ப்பாணச் சமூகத்தில் பல்வேறுபட்ட அடக்குமுறைகட்கும் உட்பட்டிருந்த மக்கள் சமூகத்தினர் அறிவும் உணர்வும் பெற்றுக் , கட்டம் கட்டமாகத் தங்களைப் பிணித்திருந்த தளைகளை அறுத்தெறிந்து வந்த வரலாற்றின் பக்கங்களாகவே - வரலாற்றுக் காட்சிப் படிமங்களாகவே - இந்நாவல்களின் கதையம்சங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறுகாட்சிப்படுத்தும் நிலையில் தொடக்கத்தில் தமது சமகால நிகழ்வுகளை மையப்படுத்தி பஞ்சமர் 1ம், 2ம் பாகங்களை எழுதிய டானியல் அவர்கள் பின்னர் வரலாற்றில் பின்னோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. பஞ்சமர் நாவல் 1956 - 69 காலப்பகுதி நிகழ்வுகளைக் கூற, கோவிந்தன், அடிமைகள், கானல் தண்ணீர் என்பன இந்த நூற்றாண்டின் முற்பகுதிக்கும் அதற்கும் அப்பால் கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கும் எம்மை அழைத்துச் செல்கின்றமை மேலே நோக்கப்பட்டது.

பஞ்சகோணங்கள் மட்டுமே பஞ்சமருக்குப் பிற்பட்ட நிகழ்வுகளுக்கு எம்மை இட்டுச்செல்கிறது. எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை என்ற மையச் சரட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால சமூக வரலாற்றுப்போக்கை இலக்கியமாகப் பதிவு செய்வது டானியல் அவர்களது நோக்கம் என்பது புலனாகின்றது. அதேபோல அடிநிலை மாந்தரின் விடுதலையுணர்வை முன்னெடுக்கும் நோக்கிற்கு வலுவூட்டத்தக்கவகையில் எதிர்மறையாக உயர்சாதியினர் எனப்படுவோரின் அகநிலைக் குறைபாடுகள் எனத் தான் அறிந்தவற்றை விவரிக்கும் ஆர்வமும் அவருக்கு இருந்ததை இந்நாவல்கள் உணர்த்துகின்றன. குறிப்பாகக் கோவிந்தன், அடிமைகள் என்பவற்றின் முக்கிய கதையம்சங்களில் இதனைத் தெளிவாக அவதானிக்கலாம். எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை வேட்கை, உயர்சாதியினர் எனப்படுவோரின் உள்ளார்ந்த குறைபாடுகள் என அறியப்பட்டவற்றை விவரிக்கும் ஆர்வம் ஆகிய இரண்டும் பின்னிப் பிணைந்த ஒரு உணர்வுந்துதலின் இலக்கிய வெளிப்பாடுகளாகவே 'பஞ்சமர்’ வரிசை நாவல்கள் அமைகின்றன என்பது நமது சிந்தனைக்குரியதாகும்.
மேற்சுட்டிய பொதுவான உணர்வுந்துதலின் ஊடாக டானியல் அவர்களால் விமர்சிக்கப்படும் விடயங்கள் இங்கு நமது கவனத்துக்குரியன. எல்லா நாவல்களிலும் பொதுவான விமர்சனத்துக்குள்ளானது சாதியமைப்பும் அதனோடு தொடர்புடையதாகக் கொள்ளப்படும் வர்க்க அமைப்பும் என்பது தெளிவு. கானல், பஞ்சகோணங்கள் ஆகிய நாவல்களில் சிறப்பாக முறையே கிறிஸ்துமத மாற்ற முயற்சிகள், தமிழின உணர்வினடிப்படையிலான இயக்க -- எழுச்சிகள் ஆகியனவும் விமர்சனத்துக்குள்ளாகின்றன.

சமயசாதியமைப்பைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பிரதேச சமூகக் கட்டமைப்புக்கு அடிப்படையான நம்பிக்கையாகச் சைவசமயம் திகழ்ந்து வந்திருப்பது வெளிப்படை. எனவே சாதியமைப்பின் பாதிப்பிலிருந்து விடுபட விளைபவர்களுக்கு ஐரோப்பியர் ஆட்சியில் இங்கு அறிமுகமான கிறிஸ்தவ சமயம் ஒரு விடி வெள்ளியாக -- நம்பிக்க நட்சத்திரமாகத் தோன்றியது என்பது வரலாற்றில் உய்த்துணரப்படுவது. ஆனால் அந்த நம்பிக்கை ஒரு 'கானல் நீர்' தான் என்பது கானல் மூலம் டானியல் முன்வைக்கும் விமர்சனம். இதிலே கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் சரி என்றோ அல்லது தவறு என்றோ டானியல் அவர்கள் வாதிக்க முற்படவில்லை. அவர் உணர்த்த விழைந்த செய்தி ஒன்று தான். அதாவது மனிதனில் அடிப்படையான மனமாற்றம் நிகழாமல் மதமாற்றத்தால் மட்டும் எதையும் செய்துவிட முடியாது என்பதே அந்தச் செய்தி. கிறிஸ்தவ தேவாலயத்திலும் சாதி வேறுபாடு காட்டப்படும் சமூக யதார்த்தமும் 'படகினி'' எனச் சிங்களத்தில் சுட்டப்படும் ’வயிற்று நெருப்பு' க்கு -வறுமைக்கு- மதமாற்றம் தீர்வாகவில்லை என்பதும் நாவலின் மேற்படி செய்திக்கு ஆதாரமாக அமைகின்றன. ஐரோப்பியர் இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போதும் அவர்களால் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பின் அடிப்படை எவ்வகைமாற்றத்தையும் எய்தவில்லை என சமூகவியலறிஞர்கள் பொதுவாகத் தெரிவிக்கும் ஒரு கருத்தாகும். (பார்க்க: பேராசிரியர் கா. சிவத்தம்பி. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனக் கருத்தரங்கு உரை 17.03.1994, பக்.3-4).

சமூகவியலறிஞர்களின் ஆய்வு பூர்வமான இக்கருத்துக்கு எவை அடிப்படையோ அவையே டானியல் அவர்களது மேற்படி நாவலின் தொனிப்பொருளுக்கும் அடிப்படைகளாகின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக ஈழத்தமிழர் தம் உரிமைகளை மீட்கும் நோக்கில் ஆயுதம் தாங்க முற்பட்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகின்றன. இவ்வகையில் உருவான இயக்க நிலைப்பட்ட எழுச்சியானது தமிழர் தமக்குள் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நிலையைப் பேணிக் கொண்டு ஒற்றுமைப் பட்டுச் செயற்படும் நிலையிலேயே நிறைவான பயனைத்தரும். விடுதலை என்ற சொல்லும் அர்த்தமுடையதாகும். டானியல் அவர்கள் பஞ்சகோணங்கள் நாவல் மூலம் உணர்த்த விழைந்த கருத்து இது என்பது எனது ஊகம். ஆனால் இன உணர்வடிப்படையிலான இயக்கங்களின் எழுச்சி அடி நிலை மக்களின் விடுதலை வேட்கையை உரிமைக் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் முயற்சியாக, தாமதப்படுத்தும் முயற்சியாக, திசைதிருப்பும் செயற்பாடாகத் தோற்றம் தருகின்றது என்பது இந்நாவலின் கதைப்போக்கில் புலப்பட்டு நிற்கும் செய்தி.

ஏறத்தாழ பதினைந்தாண்டுகட்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு இயக்கங்கள் உருவாகிக் கொண்டிருந்த சூழலில், அடிநிலை மக்களின் சமத்துவம் சார்ந்த உரிமைக் கோரிக்கைகளும் இயக்கங்களின் இனவிடுதலை உணர்வுகளும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பங்களைப் பொருத்திக்காட்டி அவற்றில் இன உணர்வெழுச்சி முனைவதைத் தாமதப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முனைவதாக உணர்த்திக் கதை வளர்த்துச் செல்லப்படுகின்றது. இதன் சமூக யதார்த்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு 1980 க்கு முன் பின்னான ஆண்டுகளின் இயக்கங்கள் பலவும் உருவான சூழலின் சமூகச் செய்தி நுனித்து நோக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இவ்வுரையில் வாய்ப்பில்லை (தனியானதொரு ஆய்வில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம் அது.) ஆனால் இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் 1984 இல் இந்நாவல் எழுதப்பட்டபோது இதனை எழுதுவதற்கு அடிப்படை டானியல் அவர்கள் கொண்டிருந்த உணர்வு நிலையாகும். இதனை அவரது முன்னுரை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. சாதிப்பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து எழுதிவரும் தன்னை நோக்கி, இனப்பிரச்சினை பற்றி ஏன் எழுதவில்லை?என்ற வினா எழுந்துள்ளதாகக் குறிப்பிடும் அவர், இவ்வினாவை எழுப்புபவர்கள் தன்னை,

”…தாழ்ந்தவர்களின் வஞ்சிக்கப்பட்டவர்களின் அன்றாடங் காய்ச்சிகளின் அடிமைப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்றுக்காக ஆலாய்ப்பறப்பவர்களின் பக்கம் நின்று எழுதுவதிலிருந்து…” தடுத்துவிடும் நோக்கமுடையவர்கள் என்றும்,

”…இன்றைய தமிழர் இயக்கங்களுக்குக் கணிசமான அளவு ஒரு பிரிவு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரண காரியங்களை உண்மை நிகழ்வுடன் சித்திரிப்பது எனது கடமையாகப்பட்டது…” என்றும் தனது உணர்வு நிலையை முன்னுரையில் உணர்த்துகின்றார். (பக்.5-6). இவற்றிலே இரண்டாவது கூற்று தொடர்பான சமூக யதார்த்தம் மேற்சுட்டியதைப் போல 1980 களுக்கு முன்பின்னான காலகட்டத்தின் சமூகச் செய்திகள் ஊடாக நோக்கித் தெளியப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் முதலாவது கூற்றுத் தரும் கருத்து விவாதத்துக்குரியதாகும். ”டானியல் கதைமாந்தரில் சமூக மெய்ம்மை'' என்ற தலைப்பில் இந்த உயர் நிலை ஆய்வு நிகழ்த்தப்படலாம். இத்தொடர்பில் எனது இப்போதைய அறிவுத் தளத்திலான விமர்சனக் குறிப்பொன்றை இங்கு முன்வைக்க விழைகின்றேன். குறித்த ஒரு மேற்படிக் கதை மாந்தர் பண்பு அமைந்தால் அதற்கான அடிப்படை சமூகத்தில் உள்ளது தான் என வாதிடலாம். ஆனால் பல்வேறு படைப்புக்களிலும் அவ்வாறான கதை மாந்தர் பண்பு மீண்டும் மீண்டும் காட்சிக்கு வரும்போது அப்பண்பு அச் சமூகத்தில் தவிர்க்க முடியாதவாறு உள்ளுறைந்துள்ள – சுட்டிக் காட்டப்படவேண்டிய முக்கியத்துவம் உடைய ஒரு கூறாக இருக்க வேண்டும். இது அவ்வாறு உள்ளதா? அன்றேல் டானியல் அவர்கள் பார்வை இவ்வாறான பண்புள்ளவர்களில் மட்டுமே பதிகின்றதா? இவையே எம்முன் நிற்கும் லிவாதம்.

"…என்னுடைய பஞ்சமரில் வந்த கமலாம்பிகை அம்மாளும், மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பிறந்து விட்டதற்காக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறீர்கள்? நான் பஞ்சமரைப் படைத்தது சகல வசதிகளும் கொண்ட கமலாம்பிகை அம்மாளினதும் மாம்பழத்தியினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெரும் சுகபோக ஏகபோகத்தை அம்பலப்படுத்துவதற்கேயன்றி...”

என டானியல் அவர்கள் ' என்கதை' நூலில் தந்துள்ள தன்னிலை விளக்கம். அவருக்கு கமலாம்பிகை. மாம்பழத்தி முதலியவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அவற்றுக்கான காரணிகளையும் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் இருந்தமையைத் தெளிவுறுத்தும். பஞ்சமர் தவிர்ந்த ஏனைய நாவல்களின் கதைமாந்தருக்கும் இது பொருந்தும் என்பது உய்த்துணரப்படத்தக்கது. எனவே டானியல் அவர்கள் சமூகத்திலிருந்து இயல்பான - சமூக யதார்த்தத்தை இயல்பாக எடுத்துக்காட்ட வல்ல - கதைமாந்தரைக் காட்ட முற்படவில்லை என்பதும் தாம் தரிசித்த ஒரு வகைமாதிரியான கதைமாந்தரையே காட்ட முற்பட்டுள்ளார் என்பதும் தெளிவாகின்றன. இதனை விளக்குவதானால் யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின் ஒரு பக்கத்தை டானியல் அவர்களின் உணர்வுகளைப் பாதித்து நின்ற பக்கத்தை தாம் காண்கிறோம் எனலாம். அக் காட்சியில் கமலாம்பிகை, மாம்பழத்தி போன்றோரே தெரிகிறார்கள். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் உயர்சாதியினர் எனப்படுவோரின் யதார்த்தமான பெண் சமூகம் டானியல் அவர்களால் எமக்குக் காட்சிப்படுத்தப்பட வில்லை. கண்ணம்மா நீங்கலாக. கண்ணம்மா பாத்திரம் டானியல் அவர்களின் பார்வையில் விதிவிலக்கான கோணம் எனத் தெரிகிறது. உயர்சாதி எனப்பட்டோரின் சமூகத்தின் பெண்மையில் இயல்பாகவே நிகழ்ந்துவரும் ஒரு மாற்றத்தைக் கண்ணம்மா காட்டி நிற்கிறாள் எனக் கொள்ளலாமா? இது தொடர்பாக திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் தந்துள்ள ஒரு கணிப்பு இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

"கந்தனைக் கந்தன்மாமா வாக்கியதால் கண்ணம்மா பாத்திரப் பண்புகளை மாற்றுகிற புதுமையைச் செய்ததாக யாரும் எண்ண இடமில்லை. மரபு மரபாகக் கையாளப்பட்டு வந்த ஆழமான அன்பு நிலையின் உறைவிடமான பெண்மையையே டானியலும் வெளிப்படுத்தியுள்ளார்.

டானியலின் கதைமாந்தர் பற்றி நிகழக்கூடிய ஒரு நுண்ணாய்வின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய கணிப்பு இது. பஞ்சமர் வரிசை நாவல்களின் கட்டமைப்பிலே நம் கவனத்திற்கு வரும் ஒரு முக்கியகூறு அது காட்டும் பண்பாட்டுக் கோலம் ஆகும். யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின் பல்வகைப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உணவு முறைகள், பொழுது போக்குகள், சமயச் சடங்குகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைமைகள், பழமொழிகள், பேச்சு வழக்கு, மொழிநடைப் பாங்குகள் முதலிய பல்வேறு கூறுகளையும் நாவல்களின் உருவாக்கத்திலே அவர் திட்டமிட்டுப் பயன்படுத்தியுள்ளமை தெரிகிறது. பஞ்சமர் நாவலிலே கடதாசி விளையாட்டு, திருவிழா. வானவிளையாட்டு, மேளக்கச்சேரி, மரணச்சடங்கு முதலியவற்றின் விவரணங்களை அவதானிக்கலாம். கோவிந்தன் நாவலிலே நாய் வளர்க்கும் முறை, வேட்டை, ஏராக்கள் குடித்து தாய்மை எய்தும் வாய்ப்பு என்பன தொடர்பான விவரணங்கள் உள. நாட்டு வைத்தியம், பேயோட்டும் முறைமை , பங்கம் எனப்படும் தேங்காய் உடைப்புப் போட்டி, கோழிச்சண்டை என்பது அடிமைகளில் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றில் இறுதி இரண்டும் பற்றிய நுணுக்க விவரங்களை டானியல் அவர்கள் திட்டமிட்டுப்பதிவு செய்து உள்ளமை தெரிகின்றது. சமயத் தொடர்பு நாவலாக 'கானலில்' சைவம், கிறீஸ்தவம் என்பன தொடர்பான கிரியை விபரங்களையும் காட்சிப்படுத்த டானியல் முற்பட்டுள்ளார். கிறிஸ்தவம் தொடர்பான வழிபாட்டு முறைகளை அருகில் நின்று பார்ப்பது போலக் காட்டும் அவர் சைவம் தொடர்பான அத்தகு முறைமைகளை ஒரு தொலைப் பார்வையாகவே புலப்படுத்துகிறார்.

பிள்ளை வயிற்றோடு ஒரு பெண் இறக்க நேரிட்டால் அவளை அவ்வயிற்றுடனே புதைப்பது பிள்ளையின் தந்தைக்கு சடுதியில் மரணத்தை விளைவிக்கும் என்பது ஒரு நம்பிக்கை. தண்ணீர் நாவலின் கதையின் முற்பகுதியில் இந்த நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் புத்தூர் கிராமத்தில் நிலவிய நாய் பழக்கி வேட்டையாடும் முறைமை, தாழ்த்தப்பட்டோரின் திருமண நடைமுறைகள் என்பனவும் இந்நாவலில் விவரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும் போது டானியல் என்ற நாவலாசிரியனுக்குள் உள் நின்று இயங்கும் ஒரு நாட்டார் வழக்காற்றியல் பதிவாளனை நாம் தரிசிக்கின்றோம். சமகாலச் செய்திகளைக் கூறும் பஞ்சமர். பஞ்சகோணங்கள் தவிர்ந்த ஏனைய நான்கும் இவ்வாறான நாட்டார் வழக்காற்றியல் களஞ்சியங்களாகக் காட்சி தருகின்றன என்பது சுட்டிக் காட்டத்தக்க ஒன்றாகும். சமூகத்தின் முன்னைய தலைமுறைகளின் வரலாற்றைப் படிப்படியாக எடுத்துக் கூற முற்படும்போது இவ்வாறான பண்பாட்டுக் கூறுகளை கட்டமைப்பு நோக்கில் பயன்படுத்திக் கொள்ள முற்படுவது கலைப்படைப்பாக்க உத்திகளிலொன்றாகும். இதனை டானியல் அவர்கள் சிறப்புறவே செயற்படுத்தியுள்ளார் என்பது எனது கணிப்பு.

டானியல் அவர்கள் பண்பாட்டுக் கோலங்களைச் சித்திரிந்துள்ள திறன் அவரை இலக்கியவாதிகள் பண்பாட்டாய்வாளர் ஆகியோர் மத்தியில் தனிக் கவனத்திற்கு உரியவராகியுள்ளது; பிறமொழிசார் ஆய்வாளர்களும் அவரது படைப்புக்களை ஆய்வுக்கவனத்தில் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.

பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் டானியல் அவர்களை "ஈழத்தின் தலைசிறந்த பண்பாட்டு நாவலாசிரியர்' என்று குறிப்பிடுவார். (மல்லிகை,ஆகஸ்ட் 1986, ப. 52). புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் டானியலை பண்பாட்டுப் பாட்டனாராக'' மதிக்கிறார் (மல்லிகை, மே 1987, ப. 2-45). யப்பானியப் பேராசிரியர் 'யசமசசெக்கின' அவர்கள் தனது ’யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் துடக்கும் சாதியமைப்பும்' என்ற தலைப்பில் எழுதிய முதுகலை மாணிப் பட்ட ஆய்வேட்டில் டானியல் அவர்களின் நூல்களில் இருந்து தரவுகள் பெற்றுள்ளார். ஹோம்ஸ் என்னும் அமெரிக்க ஆய்வாளர் “யாழ்ப்பாணம் 1980' என்ற தலைப்பில் எழுதியநூலிலே டானியல் தொடர்பான குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் அ . சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், யப்பானிய பேராசிரியர் சுசுமு ஒவோ ஆகியோர் இணைந்து எழுதிய யப்பானிய -- தமிழரிடையே உலக நோக்கும் கிரியைகளும் என்ற தலைப்பிலான நூலிலே டானியலின் பஞ்சமர் நாவலிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. (தகவல்: மல்லிகை, ஆகஸ்ட் 1986, ப. 54). இவை டானியல் அவர்கள் தம்படைப்புக்களில் புலப்படுத்தியுள்ள பண்பாட்டுக் கோலங்கள் எய்தியுள்ள சமகால வரலாற்றுக் கணிப்பை உணர்த்தும் சான்றுகளாகும்.    டானியல் ஒரு சகாப்தம்


இதுவரை நோக்கியவற்றினின்று வந்தடைந்த முடிபுகள் சிலபற்றை முன்வைத்து இவ்வுரையை நிறைவு செய்ய முனைகிறேன்:

(அ) ஈழத்தின் நவீன படைப்பிலக்கிய வரலாற்றிலே சாதிப்பிரச்சினை என்ற சமூக யதார்த்தத்தின் பல்வேறுபரிமாணஙகளைக் காட்டிய தனிப்பெரும் படைப்பாளி என்ற நிலையில் டானியல் தனியொருவராகத் தெரிகிறார். (அவருக்குஅருகிலே இன்னொருவரை நிறுத்த முடியுமா என்ற வினாவுக்கு இன்றுவரை விடையில்லை. ஏனைய சிலபடைப்பாளிகள் சற்றுத் தொலைவிலேயே நிற்கின்றனர்)

(ஆ) கடந்த ஏறத்தாழ சில நூற்றாண்டு யாழ்ப்பாணப் பிரதேசசமூக பண்பாட்டுக் கோலங்களையும் நாட்டார் வழக்காற்றியற் கூறுகளையும் இலக்கியமாகப் பதிவு செய்த வகையிலும் இவர் முதன்மைக் கவனிப்புக்த உரியவராகிறார்.

(இ) இவரது சமூகப் பார்வை இவர் சார்ந்திருந்த அடிநிலை மக்கள் சார்பான ஒருபக்கப் பார்வைதான். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல கந்தபுராண கலாசாரத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் பார்வைதான் இப்பார்வை. பார்க்க வேண்டியதையும் காட்டுகிறது: பார்க்க வேண்டாதவற்றைக் கூடக் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதுவே அவரது கதை மாந்தர் சித்திரிப்புத் தொடர்பான விமர்சனங்களுக்கு அடிப்படையாகின்றது. 'பஞ்சமர் வரிசை நாவல்கள்' புலப்படுத்தி நிற்கும் டானியல் அவர்களின் ஆளுமை மேற்படி விமர்சனங்களால் மட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் விரிந்து பரந்ததாகும். இவ்விலக்கிய வரிசை ஈழத்து படைப்புலகில் நிகழ்த்தக் கூடியதாக்கம் மிகப் பெரிதாக இருக்கும் என்பது எனது ஊகம். டானியல் அவர்களின் கல்லறையில் இருந்து புதிய பஞ்சமர் இலக்கியங்கள் பல பூக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

(உ) ஈழம் என்ற எல்லைக்கு வெளியே தமிழகத்தையும் உள்ளடக்கிய தமிழ் கூறும் நல்லுலகிலும் 'பஞ்சமர் வரிசை நாவல்கள்' தனிக்கணிப்பைப் பெற்றுள்ளன. இவற்றுட் பல தமிழகத்தின் திறனாய்வாளர்களது கணிப்புக்குட்பட்டு நூலுருப் பெற்றவை என்பதும் அத்திறனாய்வாளர் சிலரே இவற்றுட் சிலவற்றைப் பதிப்பிப்பதில் முன்னின்றுள்ளனர் என்பதும் (உ-ம்: பஞ்சகோணங்கள், அ. மார்க்ஸ்) இங்கு கவனத்திற்கு உரியது. இவை அனைத்தையும் தொகுத்துச் சிந்திக்கும்போது ”ஈழத்து நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் கே. டானியல் ஒரு சகாப்தம்” என்பது புலனாகின்றது. நூல்களிற் கற்ற தத்துவங்களைப் பேசிக்கொண்டு உத்தியோகங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் வாழ்க்கை முறைகளின் ஊடாகவும் அநுபவங்கள் ஊடாகவும் தத்துவத்தெளிவு பெற முனைந்தவர் கே. டானியல். ஐந்தாம் வகுப்பு மட்டுமே பள்ளிக் கல்வி பெற்ற டானியல் அவர்கள் தந்துள்ள படைப்பிலக்கியங்களின் பரப்பை நோக்கும் போது அவரது சாதனையின் பேரெல்லை புலனாகும். இவ்வகையில் இன்றைய இலக்கியவாதிகள் அனைவரும் தலைவணங்கத்தக்க பெருமைக்குரியவராக அவர் திகழ்கிறார்.


டானியல் அவர்களது சாதனைகளை நினைவுகூரும் இவ்வேளையில் தமிழகத்தில் தற்பொழுது முனைப்புப் பெற்றுவரும் 'தலித்' இலக்கியச் சிந்தனை கவனத்துக்குரியதாகின்றது. 'தலித்' என்ற பெயர் இடாமலே பஞ்சமர் என்ற தலைப்பில் அவ்வகை இலக்கியம் படைத்தவர் டானியல். இவ்வகையில் தமிழில் இவ்வாறான இன்றைய முனைப்புற்ற அப்போக்கிற்கு முன்னோடியாக அமைந்தவர்களில் ஒருவர் என்ற கணிப்பும் டானியல் அவர்களுக்கு உரியது.

டானியல் அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் அவருடைய இலக்கியப் பணிக்குத் துணை நின்றோர் பலர். அவர் இயற்கை எய்திய பின்னரும் அவரது இலக்கிய ஆக்கங்களைக் கையெழுத்து நிலையில் பேணி வைத்திருந்து பின் நூல் வடிவம் தந்து நிலைபெறச் செய்தவர்கள் சிலர், அவற்றை உரியவாறு விமர்சித்து அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தியோர் சிலர். அவரது வரலாற்றை அவர் வாழ்ந்த காலத்தே பதிவு செய்துவைப்பதில் பங்கு பற்றியோர் சிலர். இவ் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வே . மு பொதியவெற்பன், கோ. கேசவன், அ. மார்க்ஸ் ஈழத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், திருமதி மனோன் மணிசண்முகதாஸ், திரு வி. ரி. இளங்கேவன், திரு. வீ.சின்னத்தம்பி முதலியவர்களின் பங்களிப்புக்கள் வரலாற்று முக்கியத்துவமுடையன. பிரகாஷ், தோழமை. வராவொல்லை, விடியல் ஆகிய பதிப்பக - வெளியீட்டக முயற்சிகளும் நன்றியுணர்வுடன் சுட்டிக் காட்டத்தக்கன.

டானியல் அவர்களின் படைப்புக்களை உயர்கல்விக்கான நூல்களாக ஆக்கியதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அவருக்கு தனது உயர்நிலைக் கணிப்பை வழங்கியுள்ளது.
டானியல் என்ற வரலாற்று மனிதனை உரியவாறு இனங்காண வகைசெய்து நிற்கும் மேற்குறித்த அறிஞர்கள், நிறுவனத்தினர் அனைவர்க்கும் டானியலை எழுத்தெண்ணிப் பயிலும் ஆய்வாளன் என்ற வகையிலும் டானியலின் மனித நேயத்தை மதிக்கும் சக மனிதன் என்ற வகையிலும் என் உளமார்ந்த நன்றியுணர்வைத் தெரிவித்து இவ்வுரையை நிறைவு செய்கின்றேன். இந் நினைவுரையை ஆற்ற வாய்ப்பளித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்மன்றத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2021

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

நேருக்கு நேர்:

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

-பூமணிமைந்தன்


தொழில் வாய்ப்புகளும், வேலைப் பளுக்களும் நிரம்ப உள்ள போதும் தாங்கள் எழுத்துலகில் பிரவேசித்ததற்கான காரணம்?

இதற்கான காரணத்தை நான் தேடிப்பிடிக்க முயற்சிக்கவில்லை. ஒழிவு மறைவின்றிக் கூறுவதானால் எனது காதலி ஆனவளுக்கு மனதைத் திறந்து காட்டுவதற்காகவே எழுதத்தொடங்கினேன் என்று சில வார்த்தைகளில் கூறிவிடலாம். இதில் வெட்கம் என்ன இருக்கிறது? நான் ஒருத்தியைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். அதனாலேயே சோதனையின் கொடுமை அல்லது பழிக்குப்பழி" என்ற முதலாவது சிறுகதை பிறந்தது.

எழுத்துலக ஆரம்பம் அப்படி இருந்தபோதிலும் உங்களால் எழுதப்பட்ட நாவல், சிறுகதைகளைப் படிக்கும்போது ஆழமான கருப்பொருளைக் கொண்டனவாகக் காணமுடிகிறதே.... அது எப்படி?

ஏறக்குறைய இருபத்துரெண்டு, இருபத்துமூன்றாவது வயதுக் காலகட்டத்தில் அரசியலில் கால் வைத்தேன். என்னை ஆகர்சித்த அரசியலுக்காக மக்களுடைய பிரச்சனைகளுடன் கலக்க வேண்டியதாயிற்று. அதனால் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அப்போதைக்கப்போது வெளிக்கொண்டு வருவதற்காக எழுத்தைப் பயன்படுத்தினேன். என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு படைப்புக்குமான கருப்பொருள், பேச்சு,மொழி, களம், சம்பவத் தொடர்புகள்சகலதையும் மக்கள் மத்தியிலிருந்தே பெற்றுக்கொள்வதனால் படைப்புகள் கனதி பெறுவது இயல்பாயிற்று.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள நாவல்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?

முதலில் வீரகேசரி' தின இதழில் “நெடுந்தூரம்'' என்ற தொடர் நாவலை எழுதினேன். அதை விமர்சித்து எழுதியவர்கள் 'டானியலுக்கும் நாவலுக்கும் நெடுந்தூரம்' எனக் குறிப்பிட்டார்கள். நான் சோர்வடையவில்லை; 'பஞ்சமர்' நாவலின் முதற்பாகத்தை எழுதினேன். அதில் இடம்பெற்ற சம்பவங்களில் நானும் பங்கு வெற்றியும் கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'போராளிகள் காத்திருக்கின்றனர்நாவலை எழுதினேன். அதற்கு யாழ்ப்பாணக் கடற்பிரதேசத்து மக்கள் தந்த வரவேற்பு 'பஞ்சமரி'ன் மறு பாகத்தையும் எழுதத் தூண்டியது.'கோவிந்தன்'நாவலை எழுதினேன். அதற்கு இரட்டிப்பு வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'அடிமைகள்'' கானல்" ஆகிய நாவல்களையும் எழுதிமுடித்து பதிப்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தவேளை 'ஈழநாடு' வார இதழ் கேட்டுக்கொண்டதற்காக 'மையக்குறி' நாவலையும், 'தினகரன்'வார இதழுக்காக 'முருங்கையிலைக் கஞ்சி'யையும் எழுதிக்கொடுத்தேன். இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இலக்கியம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள்?

வஞ்சிக்கப்பட்ட சகல மக்களும் தங்கள் பலத்தை உணர்ந்து, தன் நம்பிக்கையுடன் எழுந்து நின்று இன்றைய நடைமுறைச் சமூக அமைப்பை உடைத்தெறியும் துணிவினை ஏற்படுத்துவதாகவும்; சகல சீரழிவுகளுக்கும் காரணமான சமூகத்தை மாற்ற முற்படும் பெரும் சக்தியாம் மக்கள்சக்திக்கு உறுதுணை புரியும் பாதிப்பை வருவிப்பதாகவும் இருக்கவேண்டும்.

சமுதாய மாற்றத்தை பேனா முனையால் ஏற்படுத்திவிடலாம் என்று சொல்லப்படுவதுபற்றி...?

இது மிகவும் பிழையான ஒரு கருத்தாகும். சமுதாயத்தை மாற்றும் பிற சக்திகளுக்கு பேனா ஒத்தா சையாக இருக்கமுடியுமே தவிர தனித்து அதனால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியவே முடியாது.

உங்களுடைய படைப்புகளில் வழக்கொழிந்துபோன சொற்களும், அருகிவரும் சொற்களும் இடம்பெறுகின்றனவே!இவற்றை எப்படித் தேடிக்கொள்கிறீர்கள்?

அதற்காக நான் ஒன்றும் சிரமப்படுவதில்லை. கிராமப்புற வயதானவர்களைச் சந்தித்து அவர்களின் வாயிலாக அனுபவங்களைக் கேட்கும் போது சொற்கள் தானாகவே கிடைத்து விடுகின்றன. நீங்கள் நினைப்பது போல் அவை வழக்கொழிந்துபோகவில்லை. அவைகள் கிராமப்புறங்களில் இன்றும் வாழ்கின்றன. இப்போதாவது ஆவணமாக்காவிட்டால் காலக்கிரமத்தில் அவை அழிந்தும் போகலாம்.

தமிழர் பிரச்சனையை விட்டு. சாதியை வைத்துத்தான் உங்களால் இலக்கியம்செய்யமுடியும் என்று பொதுவில் பேசப்படுகிறது. இதுபற்றி ......

சாதியைத் தொடாமல் என்னால் சிருட்டிக்கப்பட்டவைகளை சரியாக இவர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அத்தகைய ”போராளிகள் காத்திருக்கின்றனர்'' என்ற நாவலைப் படிக்கக் கிடைக்காதவர்கள் இப்பொழுது 'தினகரன்' வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் "முருங்கையிலைக் கஞ்சி'' என்னும் யாழ்ப்பாண விவசாய மண்ணின் கதையைப் படித்துப் பார்க்கட்டும். இவர்கள் சொல்வதுபோல, நான் எழுதும் சாதியை, தமிழர் பிரச்சனை என்று ஒப்புக்கொள்வதற்கு ஏன் மறுக்கின்றனர்? எதை இழந்தாலும் சாதிக் கௌரவத்தை இழக்கமுடியாதிருக்கும் தமிழர் வாழ்க்கையை இவர்கள் தமிழர் பிரக்சனையாகக் கருதவில்லையா? தெரிந்துகொண்டுதான் என் மீது பழிசுமத்துகிறார்கள் என்றால் அது பெரும் அயோக்கியத்தனமாகும். மனதார இவர்கள் இந்த அயோக்கியத்தனத்தை விடும்வரை யாருமே தமிழர்களின் சரியான பிரச்சனைகளை உணர்ந்தவர்களாக மாட்டார்கள்.

உங்களுடைய இலக்கிய நோக்கங்கள் என்றாவது நிறைவேறும் என்று நம்புகிறீர்களா?

அந்த நம்பிக்கையை இழந்துவிடும் அளவுக்கு என் சிந்தனைகள் இன்னும் வக்கரித்துவிடவில்லை. ”இது நிறைவேற முடியாதது" என்று நானே சொல்வேனாகில் எனது மூளையில் பழுது ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் நம்பலாம். மனித வரலாறு ஒரு தொடர்ச்சியான போர். அதற்கு இலக்கியமும் விதிவிலக்கானதல்ல. நான் இல்லாவிட்டால் எனக்குப்பின் இன்னொருவன்; அவனுக்குப்பின் வேறொருவன் இப்படியே உலகின் சுகபோகங்களைத் தனித்தனியே தன்னது, ஆக்கிக்கொண்டிருக்கும் வர்க்கத்தை அழித்தொழித்து எல்லாம் எல்லாருக்கும் என்ற எல்லைவரை இந்தப் போரை நடத்தி வெற்றிபெறுவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்நாள் இப்பொழுதே என் கண்களுக்கும் தெரிகின்றது.

உங்கள் படைப்புகளில் தாழ்த்தப்பட்ட பாத்திரங்களாக வரும் செல்லனின் மனைவி 'செல்லி'யாகவும் எல்லிப்போலையின் மனைவி 'இத்தினி' யாகவும் காரணப்பெயர்ப் பொருத்தம் பெறுவதற்கான ஞாயங்கள் என்ன?

கிராமப்புறத்தில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு 'மாதன்' பெயர் இருந்தால் அவர்களைக் குடிமைகளாக வைத்திருப்பவர்கள் அவனது மனைவியை 'மாதன் பெண்டில்' என்றழைக்கத் தொடங்கி கடைசியில் 'மாதி' ஆக்கிவிடுகின்றனர். நாளடைவில் அதுவே அவளின் இயற் பெயராகியும் விடுகிறது. இதுபோலவே செல்லனின் மனைவி 'செல்லியாகவும், எல்லிப்போலையின் மனைவி ‘இத்தினி' என்றும் ஆகின்றனர். இது இன்றுவரை யாழ்ப்பாணக் கிராம மண்ணுடன் ஒட்டிப்போயே இருக்கிறது. அந்த மண்ணின் வாசனை வெளிப்படுகிறதே அன்றி வேறல்ல.

நீங்கள் இலக்கண நூல்கள் ஒன்றையும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்கிறார்களே இது பற்றி…

எனது மாணவ காலத்தில் 5ம் வகுப்புக்கு இலக்கண நூல் வரவில்லை; அதுவரை வகுப்பாசிரியர் பேசிய வார்த்தைகள் தான் இலக்கணப் பாடமாகும். வாழ்க்கையில் பின்தள்ளப்பட்ட மக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்கும் அவர்கள் பேசும்விதத்திலேயே விசயங்களை இலகு படுத்திக் கூறுவதற்கும், எழுதுவதற்கும் எனக்கு இலக்கணம் தெரியும். இலக்கணம் என்பது மனித ஜீவன் உதயமான பின்னர் வந்த ஒன்றே தவிர அதற்கு முற்பட்டதல்ல. அதனால் மனிதன் எப்படிப் பிறந்தான், எப்படி இருக்கிறான், எப்படி வாழவேண்டும் என்பதற்குப் பின் தான் இலக்கணம் என்ற ஒன்று இருக்கமுடியும்.

எழுத்தாளர்களை எந்தெந்த அளவுகோல்களால் வரிசைப்படுத்துகிறீர்கள்?

பழைய சமூகப் பழக்கவழக்கங்களுக்கும்; அந்த அமைப்புகளுக்கும் உட்பட்டு எழுதுபவர்கள். அந்தக் கட்டுக்கோப்புகளைக் கடந்து எழுதுபவர்கள். அக்கட்டுக்கோப்புகள், வரம்புகள் சகலதையும் அழித்துப் புதிய ஒரு சமூகக் கட்டுக்கோப்பை உருவாக்க எழுதுபவர்கள் என்ற வரிசைகளில் .!

குறிப்பிடத்தக்க சிறுகதையாளராக விளங்கிய நீங்கள் எழுபதுகளில் தான் நாவலாசிரியராகப் பரிணமித்தீர்கள்; இந்த இரண்டு இலக்கிய வடிவங்களிலும், சமூகத்திற்கு தங்களால் சொல்ல நினைக்கும் விடயத்தை இலகுவாகப் பதிய வைப்பதற்கு உகந்ததென்று எதனைக் கருதுகிறீர்கள்?

குறிப்பிடக்கூடிய ஆணி அடித்தாற் போன்று பட்டென்று புரியக்கூடியதான கருப்பொருளைச் சிறுகதைக்கூடாகவும்; ஒரு விசயத்தை விஸ்தாரமாக்கி, அதனோடுணைவுள்ள உபவிசயங்களையும் விளக்கிக் கூறவேண்டும் என்ற அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதை நாவலுக்கூடாகவும் கொண்டுவருகிறேன். இவை இரண்டில் எதை முதன்மைப் படுத்துவதென்ற கேள்விக்கு இடமே இல்லை. இலக்கியத்தின் இலக்கில் இரட்டைத் தன்மை இருக்கும்போது தான் வடிவங்களை ஆளுமைப்படுத்துவதிலும் வெவ்வேறு மச்சோரம் ஏற்படுமே தவிர மற்றப்படி அப்படி ஏற்படநியாயம் இல்லை.

உங்களை இலக்கியக்காரனாக உருவாக்குவதற்கு யார் யார் உறுதுணையாக நின்றனர் என்பதை குறிப்பிடுவீர்களா?

யாரையும் யாரும் உருவாக்குவதில்லை என்பது எனது கருத்து. அந்தந்தக் காலத்தின் தேவைகள் தான் எதையும் உருவாக்குகின்றன. அதற்கு இலக்கியக்காரனும் உட்பட்டவனே! 'நான் அவனை உருவாக்கினேன்' என்பதெல்லாம் அகம்பாவத்தின் வெளிப்பாடே! நான் எழுத்துலகில் பிரவேசித்த காலத்தில் எனது எழுத்துக்களைத் திருத்தங்கள் செய்தும் அச்சுவாகனம் ஏறுவதற்கான ஒத்தாசைகள் புரிந்தவர்கள் திருவாளர்கள் எஸ். பொன்னுத்துரை,என். கே. ரகுநாதன் ஆகியோர். இதைச் சொல்வதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

எஸ். பொ. வின் இலக்கிய ஆளுமையைப் பற்றிய உங்கள் கருத்து?

ஆளுமை என்ற வரையில் எஸ்.பொ.மிகவும் உன்னதமானவர். ஆனால் அதுமட்டும் ஒரு சிருஷ்டி கர்த்தாவுக்குப் போதுமானதல்ல. எப்போது -- எதற்காக ஆளுமையைப் பயன்படுத்துவதென்பதில் தான் ஆளுமையின் பரிபூரண வெற்றி தங்கி இருக்கிறது. மழை எல்லாராலும் வேண்டப்படுவதொன்று. அம் மழை கடலில் பெய்யுமானால் அதனால் யாருக்குப் பயன் கிடைக்கப்போகிறது? மனித இனத்தின் முதன்மையான தேவைகளை மையப்படுத்தாமல் பிறப்பெடுக்கும் கருவூலங்களை வெறும் ஆளுமையால் மட்டும் மேன்மைப் படுத்த நினைப்பது சரியானதென்று நான் கருதவில்லை.

இலக்கியத்தில் பாலியல் பற்றி உங்கள் அபிப்பிராயம்?

இலக்கியத்தில் பாலியல் கூடாதென்று கொள்ளலாகாது. அப்படி எழுதக்கூடாதெனக் கட்டளை இடுவது வேறோர் வகையில் 'உயிருள்ள எதைப்பற்றியும் எழுதாதே!' என்று கூறுவதற்கே ஒப்பானதாகும். மனித வாழ்க்கை முழுவதும் பாலியல் மயமானதோ, அன்றி அதிலே தங்கி நிற்பதோ அல்ல. அதேபோன்று இலக்கியம் பாலியலை முதன்மைப்படுத்தும் விதத்திலோ அன்றி அதில் தங்கிநிற்கும் முறையிலோ அமைவது இயல்புக்கு மாறானதும், தேவைகளுக்குப் புறம்பானதுமாகும். சந்தர்ப்பத்தால் பாலியல் வியாபாரத்தை நடத்தும் ஒருவள், முழுமனித சமூகத்துக்கும் எதிரியான ஒருவனை அல்லது ஒரு வர்க்கத்தை அழிக்க பாலியலையே ஆயுதமாக உபயோகித்து செயல்படுவதாக சிருஷ்டி அமையுமெனில் அக்கருவூலத்தை எவரும் 'பாலியல்' என்பதற்குள் அடக்கிவிடமுடியாது.

இறுதியாக ஒரு கேள்வி எதுவும் விளங்கிக்கொள்ள முடியாதவாறு எழுதுபவர்கள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆதியும் அந்தமுமில்லாத – தொட்டோ உணர்ந்தோ கொள்ளமுடியாத 'கடவுள்என்ற ஒரே ஒரு வாசகனுக்காக மட்டும் எழுதுபவர்கள் என்றுதான் கூறுவேன்.

இதுவரை 'தாரகை' வாசகர்கள் சார்பாகவும், ஏனைய இலக்கிய நெஞ்சங்களுக்காகவும் நான் தொடுத்த கேள்விகளுக்கு பொறுமையுடன் மிகவும் அருமையான பதில்களைத் தந்துதவினீர்கள் அதற்காக அவர்கள் சார்பில் வணக்கத்தையும்; நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே என்னிடம் இருந்து இந்தப் பேட்டியை எடுத்து வெளியிடும் 'தாரகை' வெளியீட்டாளர்களுக்கும் எனதுமார்ந்த நன்றி உடையதாகும்.