வெள்ளி, ஜூன் 11, 2021

சிறுகதை : சாணைக் கூறை

சாணைக் கூறை

அ.ஸ.அப்துஸ் ஸமது (1929-2001)


சிறுகதை : சாணைக் கூறை
எழுதியவர்: அ.ஸ.அப்துஸ் ஸமது (1929-2001)

’இலக்கிய மாமணி’ அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் எழுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். எழுபதுகளில் வெளிவந்த அவரது சிறுகதைத்தொகுப்பு “என் வயது பதின்மூன்று” இப்பொழுது கிடைதற்கரிதாகிவிட்டது. அவரது “அந்தக் கிழவன்”, ”மன வடிவு” போன்ற கதைகள் விமர்சகர்களால் சிலாகிக்கப் பெற்றன. ஆனால் அவை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கவில்லை. ”சாணைக் கூறை” என்ற இக் கதை, ‘இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்- இரண்டாம் தொகுதி ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற தொகுதியில் இருந்து எடுக்கப் பட்டது. ’ஒரு பிடிச் சோறு’, ’எனக்கு வயது பதின்மூன்று’ போன்ற கதைகள் ஏற்கனவே எமது முகநூல் பக்கங்களில் கிடைக்கின்றன.


இருபுறமும் இடியப்பத் தட்டுக்களை அடுக்கினாற்போல, இரு காதுகள் நிறைய பத்துச்சோடி அல்லுக்குத்துகளும் அசைந்தாட ஹாஜறா உம்மா சொன்னாள், “ஒண்டி என்ர வயித்தில பொறந்த புள்ள இப்ப இஞ்சினியர் ஆயிற்றான்; என்ர ஆசை தீர அவனுக்கு ஒரு கலியாணம் முடிச்சிற்றனெண்டா, மத்த நாள் கண்ண மூடினாலும் கவல இல்லடி பாத்தும்மா”.

"எனக்குத் தெரியாதா ராத்தா, நீ பட்ட பாடும் உன் மகனுக்குக் கட்டின காசும்! எப்படியோ காரியத்தில வெத்தி எடுத்திற்றாய், இண்டக்கி வைரம் அள்ளிக் குடுத்து எடுக்கிற மாப்பிள்ளை உன் மகன்” - இப்படிப் பதில் கூறினாள் பக்கத்து வீட்டுப் பாத்துமா.

”ஓமோம், இருபத்தைந்தேக்கர் காணி, இருபத்தைந்தாயியாரம் காசு, பெரீய கல் வீடு, இவ்வளவும் இலாம இந்த ஹாஜாருகிட்ட யாரும் வந்து அணுகமுடியாது; மாப்பிள்ளை கேட்டு ஆட்கள் வந்தா ஊட்டுக்கு முன்னால பத்துக் கார் கெடக்கவேணாமா? இவ்வளவெல்லாம் அந்தஸ்து இல்லாதவங்களோட நமக்கென்ன சம்பந்தம்?”

”நம்முட ஊருல இவ்வளவு குடுத்து ஆர்ராத்தா, இந்த மாப்புளய எடுக்கப் போறாங்க? எங்க பார்த்தாலும் உப்புத் தண்ணியில இறால் வௌஞ்ச மாதிரி குமர்க்கூட்டம். சுத்தி உடுத்த புடவையும் பின்னிவிட்ட கொண்டையும் தான் மிச்சம். இவளெல்லாம் இந்த மாப்பிளையைக் கனவும் காண முடியாது. நீ ஒன்றும் யோசியாத; காரில காசும் கட்டிக்கி ஆள்வரும். நான் போகிற்றுவாறன் ராத்தா” என்று கூறிக்கொண்டு பாத்துமா நகர்ந்தாள். இவ்வளவெல்லாம் அந்தஸ்து இல்லதவங்களோட நமக்கென்ன சம்பந்தம்?”

ஹாஜறாவுக்கு முதல் பிறந்தது நான்கும் பெண்கள். ஐந்தாவதுதான் இந்த எஞ்சினியர் ஸவாஹிர். மகனின் இந்த உயர் நிலையைக் கண்டு சந்தோஷப்பட அவள் கணவர் முஹாந்திரம் முஹிதீன் போடி கொடுத்துவைக்கவில்லை. பதினைந்து வருஷங்களின்முன்னே அவரை இஸ்றாயில் அழைத்துக்கொண்டார். கொஜ்ன்சம் நிலபுலன்கள் கிடந்ததால் ஹாஜரு அவற்றையெல்லாம் விற்று மகன் மேல் படிப்புக்கு விட்டாள்.

இந்த ஊரில் பெரிய படிப்புப் படித்துப் பட்டம் பெற்றவன் ஸவாஹிர் தான். கை நிறையச் சம்பளம் வாங்குகிறான். இவன்ர தகுதிக்கேற்ற சீதனமும் சீர்வரிசைகளும் வாங்கிக்கொண்டு தானே விவாகம் ஆகணும் என்பது ஹாஜறாவின் தணியாத தாகம். ஒரு நாள் அவளுடைய ஆசையும் நிறைவேறத்தான் செய்தது.

பையனோ எஞ்சினியர்; தங்கை என்றும் குடும்பம் என்றும் அல்லுத்தொல்லை இல்லாதவன் என்றால் பெண் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா? பக்கத்து ஊர் நெய்ந்தக் கண்டு வட்டாவிதானை, ஹாஜறாவின் நிபந்தனைகளூக்கெல்லாம் கட்டுப்பட்டு, அவளது கனவை நனவாக்க முன்வந்தார்.

மாப்பிள்ளையோ, உம்மாவின் விருப்பங்களை அனுசரித்தும், மனிதகோடிகள் அனைவருக்குமே உள்ள பொருளாசை வசப்பட்டும், தன் மோதிரவிரலை மாமனாரிடம் நீட்டி விட்டான். அதாவது தனது சம்மதத்தை தெரிவித்து மோதிரத்தை ஏற்றுக்கொண்டான். நிச்சயார்த்தம் ஆயிற்று.

ஹாஜறா உம்மாவுக்குப் பூமி மலர்மெத்தையாயிற்று. எண்ணமெல்லாம் இன்பக் கிளுகிளுப்பு. மாப்பிள்ளை கேட்டு வந்தவர்கள் கொண்டுவந்த துதல், மஸ்கத், வாழைப் பழம் இத்தியாதியை, வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற வித்தியாசம் இன்றி ஊரெல்லாம் பகிர்ந்தாள். ஏன் தெரியுமா? கொழுத்த சீதனத்துடன், மகனுக்கு அயலூரிலிருந்து மாப்பிள்ளை கேட்டுவந்த செய்தி எல்லோருக்கும் தெரியவேண்டாமா? அதற்காகத்தான். பக்கத்துவீட்டுப் பாத்துமாவுக்கு இப்பவே கலியாண வேலை தொடங்கிற்று. இந்த அலுவல்களிலெல்லாம் ஹாஜறாவுக்கு ஒத்தாசையாக இருப்பவள் அவள்தானே.

மறு நாள் பின்னேரம் எஞ்சினியர் ஸவாஹிர் திண்ணையில் கிடந்த சாய்மணையில் சாய்ந்தபடி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பத்து வயதுச் சிறுமியொருத்தி ஓடிவந்து, சிறு பொட்டலம் ஒன்றை அவனிடம் நீட்டினாள். அந்தப் பிள்ளையை அவன் இதற்கு முன் கண்டிருக்கிறான். ஆனால் யாரென்று தெரியாது. கைநீட்டிப் பொட்டலத்தை வாங்கியபடி, ''நீ யாரும்மா?'' என்று கேட்டான். எந்தப் பதிலுமில்லாமல் சிறுமி சிட்டாய்ப் பறந்துவிட்டாள். ஒன்றும் புரியாதவனாக பொட்டலத்தை அவிழ்த்தான் ஸவாஹிர். அந்தப் பொட்டலத்துள் சிறு குழந்தைக்கான இரு பட்டுச்சட்டைகளும், கடிதமொன்றும் இருந்தன. சட்டைகள் மிகப் பழையவை. பாதுகாத்து வைக்கப்பட்டவை. கடிதத்தை விரித்துப் படித்தான் ஸவாஹிர்.

அன்புள்ள மச்சான்!

உங்கள் மாமி மகள் சுபைதாவை, இந்தவேளையில் உங்களுக்கு நினைவிருக்க நியாயம் இல்லை. அந்தப் படுபோக்கிரிதான் இதை எழுதுகிறேன். உங்களுக்கு பெண் நிச்சயார்த்தம் ஆயிற்று என்று கேள்விப்பட்டேன். என் வாழ்த்துக்கள் ! இந்த மங்களகரமான நேரத்தில் உங்களுடைய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் குலைக்க நான் வரவில்லை. எனினும் இந்தக் கல்யாண விஷயமாக எனது உம்மாவுக்கும், உங்களது உம்மாவுக்கும் ஒரு ஆகிறத்துக்குக் கடன் உண்டு, அந்தக் கடனை நாமிருவரும் ஒத்து அழித்துவிடுவது சௌஜன்யமானது என்று கருதி இதை எழுதுகிறேன்.

ஆமாம் நான் தன்னறிவு பெற்றுத் தாய்முகத்தைப் பார்க்குமுன்னமேயே அவள் இவ்வுலகைத் துறந்துவிட்டாள். நான் இம்மண்ணுலகில் மனிதப் பிறவி எடுத்த ஏழாம் நாள், உங்கள் தாயார் என் தாயாரிடம் ஒரு சங்கற்பம் செய்து கொண்டார். அதன் சான்றுதான் இத்துடன் வரும் சட்டைகள். ஆம்! நாமிருவரும் விவாகப் பக்குவத்தை அடைந்ததும் என்னைத் தன் மருமகளாக ஏற்பதாகச் சங்கப்பித்து இந்தச் சட்டைகளை உங்கள் சார்பாக சாணைக் கூறையாய் வழங்கினார் உங்கள் அன்னை. சாணைக்கூறையாக வழங்கியவற்றை, விவாகக்கூறை வரும்வரை பாதுகாக்க வேண்டுமாம் என்று என் மூத்தம்மா, என் உம்மா மவுத்தான பின்பும் இதனைக் கருத்தோடு பௌத்திரப்படுத்தினாள். அனுபவ அறிவும், சம்பிரதாயங்களில் உள்ள நம்பிக்கையும் எவ்வளவு அர்த்தபுஷ்டியானவை! நீலம், பச்சை வர்ணத்தில் அமைந்த இவ்விரண்டு சட்டைகளையும் பாருங்கள், பதினெட்டு ஆண்டுகள் கழிந்தும் அதன் அழகும் ஜொலிப்பும் சற்றேனும் மங்கிவிடவில்லையே. ஏனெனில் இது அசல் சீனாப்பட்டு. பூச்சி சில்க் சீலையொன்றின் வண்ணமும் அழகும் இத்தனை ஆண்டாகியும் இன்னும் மாறவில்லை. மனிதனுடைய சொற்களும், நிலைமைகளும் எவ்வளவு மாறிவிட்டன பாருங்கள். சாணைக்கூறை என்ற இச்சம்பிரதாயம்; நம்பிக்கை நிறைந்தது. இதில் வாக்குறுதி மீறப்பட்டால் மறுமையில் இறைவன் முன் வழக்காடல் நிகழும் என்பார்கள். இது உண்மையாயின் மறுமையில் என் உம்மா உங்கள் உம்மாவுடன் வழக்காட நாமிருவரும் சாட்சிகளாக இருப்போமல்லவா? உங்கள் தாய் வாக்குறுதி மீறினார். நீங்கள் அதற்கு அனுசரணையாக இருந்தீர்கள் என்ற இவ் வழக்கு எவ்வளவு சுவாரஸ்யமானது.

சாணைக்கூறை போட்டவன் தான் சந்தூக்குக்கூறையும் போடவேண்டும் என்பது மற்றோர் ஐதிகம். அதாவது ஒரு பெண் இறந்ததும் அவளுடைய பாடையை மூட விவாகக் கூறையைப் பயன்படுத்துவது நம் வழக்கம். பெண்ணுக்கு சாணைக்கூறை போடிருந்தவர்தானே சந்தூக்குக் கூறையும் வாங்கி இருப்பார்.
மச்சான்! சாணைக் கூறையை நீங்கள் போட, விவாகக் கூறையை இன்னொருவர் கொண்டுவர சந்தூக்குக் கூறையை மற்றொருவர் கொண்டுவரும்படியான துரதிஷ்டம் என் வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டால், இந்த முதற் கூறையோடு என் வாழ்வுக் கதையும், முற்றுப் பெற்றுவிடுவது எவ்வளவு சௌகரியம். பதினெட்டு வருடங்கள் என் மனதில் நாற்பது திரியிட்ட குத்துவிளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒருவரை ஒரு நாள் திடீரென இழப்பது இதயம் தாங்கமுடியாத ஒரு சோதனை தான். மறப்பதும் மன்னிப்பதும் மனிதமனங்களின் இயல்பான தொழிலல்ல. காரணங்களை வருவித்து அவற்றை நாம் செயற்கையாகச் செயற்கிறோம் அவ்வளவுதான்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதாக எண்ணுவீர்கள். கூழுக்கு வழியில்லாத ஒருவன் பாற்சோறு உண்ணக் கனவு காண்பது எவ்வாறு? நீங்கள் இந்தப் பெரிய படிப்புப் படித்திராவிட்டால், அல்லது நான் இந்த ஏழ்மை நிலைமை எய்தி இராவிட்டால், உங்களுடைய விவாகக் கூறை எனக்குரியதுதானே. அதுவே எனது சந்துக்க்கு மூடவும் ஆகி இருக்குமல்லவா?
எனது முற்றத்தில் மலர்ந்த கொடி மல்லிகைப் பூக்கள், மற்றொருத்தியின் கொண்டையில் சரமாகச் சூடி இருப்பதைப் பார்ப்பது துயரமே. வறுமை காரணமாக, அம்மலரை நான் சூடும் திராணியற்று, அதனை மற்றொருத்திக்கு விற்றுவிட்ட எனக்கு, பொறாமை ஏன்? ஆசை ஏன்? இதோ சாணைக்கூறையான இரு சட்டைகளையும் என் இதயத்தைப் பெயர்த்தளிப்பது போல, உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன். இதனை நானே விரும்பிச் செய்தபடியால் மறுமையில் என் தாயும் உங்கள் தாயும் வழக்காட நியாயமில்லை அல்லவா?

இனி உள்ளது, உங்கள் உம்மா என் உம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிதான். நெல்லைக் குத்தி அரிசியைக் கண்டால் உமியைப் புடைத்துத் தள்ளிவிடுவதுதானே. உங்கள் உம்மா உங்களை அரிசியாகக் கண்டபோது நான் உமியாகிவிட்டேன் உமி இப்பொழுது குப்பையில் கிடக்கிறது. நான் உமியான காரணத்தினால் உங்கள் உம்மா கொடுத்த வாக்குறுதியும் உமியாயிற்றா? நெய்ந்தக்கண்டு வட்ட விதானையிடம் கொடுத்த வாக்குறுதி மட்டும் வைர மானதா? இந் நிலையில் உங்கள் பெற்ற தாயை எவ்வாறு விடுவிக்கப் போகிறீர்கள்?
என் உம்மா மவுத்தானதும்,என் வாப்பா விவாகம் செய்ய விரும்பாமல் எனக்காகத் தன் வாழ்வைப் பரித்தியாகம் செய்தார். என்னை எஸ்.எஸ்.ஸி. வரை படிப்பித்தார். எனக்காக ஒரு அழகிய வீட்டைக் கட்டினார். நான் கண்கலங்காமல் ஆதரித்தார். அவரால் முடிந்தது இவ்வளவே. இதற்காக அவர் செய்த தியாகங்கள் அதிகம். இந்த அந்தஸ்தில் ஒரு எஞ்சினியரை நான் எப்படிக் கனவு காணமுடியும்?... அந்தக் கூட்டுக் கலவியிலே கவிதை கொண்டுவர வேண்டும்.... என்ற பாரதி பாடலைப்போல நான் கவிதை தருவேன். காசுதர என்னால் முடியாது! காணிதர என்னால் இயலாது மச்சான்! இந்தப் பிச்சைக் காரிக்கு இனி ஆண் துணையே தேவை இல்லை. ஏனெனில் உங்களை மந்தில் வைத்துக்கோண்டு மற்றொருவரை மஞ்சத்தில் வைத்துக் கொஞ்சி விளையாடும் வித்தை எனக்குத் தெரியாது! ஆதலால் உங்களுடைய தாயின் இரண்டாவது வார்த்தையை நிறைவேற்றி இன்பமாக வாழுங்கள்!

அன்பின் சுபைதா.


இரவு கலியாண முற்றாய்ப்புக்காக, பெண் வீட்டிலிருந்து வந்த இனிப்பு வகைகளை ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ”இதத் திண்டுபார் மகன்!'' என்று கூறியபடி ஸவாஹிரிடம் வந்த ஹாஜறா, மகனின் நிலையைக் கண்டாள். கண்கள் கலங்கியபடி எதையோ இழந்துவிட்டவனைப் போல உட்கார்ந்திருந்தான் ஸவாஹிர். முன்னால் இருந்த ரீபோவில் இரு சட்டைகளும் கடிதமும் கிடந்தன.

”அடியே பாத்தும்மா, இஞ்சப்பாத்தாய, புதினத்த, இந்த முகாந்திரம் போடியிர பெண்டாட்டி அசைகிறவளா?'' என்று பிரலாபிக்கத் தொடங்கினாள். விஷயம் பாத்தும்மாவுக்கும் தெரிந்ததுதான். எனவே அவளுக்கும் எல்லாம் விளங்கிவிட்டது. ”என்ன தம்பி இது? கழிஞ்சிபோன கண்ணறாவிய கழுத்தில சுத்திக்கி அழுகிறதா? உட்டு வீசிற்று மத்த அலுவலைப் பாருங்க!” என்று அவளும் பதிலுக்குப் பாடினாள். ஸவாஹிர் பொங்கிவரும் வேதனையைக் தாழமுடியாதவனாக பாத்திமாவைப் பார்த்து-

“என்ன ராத்தா! கதக்கிறயள். பதினெட்டு வருஷமா ஒரு பெண் வச்சிக்கிருந்த நம்பிக்கையை நீங்களுல்லாம் சேர்ந்து நாசம் பண்ணிற்றீங்க! நானும் அதுக்கு உடன்பட்டவனாயிற்றான். இதுபோக, என் மாமியிடம் என் உம்மா ஒரு சங்கற்ப வாக்குறுதி அளித்திருக்கா, அதையாவது நான் காப்பாற்ற வேண்டாமா?“

”என்ன தம்பி சங்கற்பம்! எல்லாம் சந்தர்ப்பம் தானே! நீகூட நேத்திராவு உன்ர மாமனாரிடம் விரலை நீட்டி மோதிரத்தை வாங்கிக் கொண்டாய்! ஒரு சபையில நாலு பெரியவங்க முன்னால, நீ செய்த சங்கற்பத்தை இப்ப மாத்தப் போறாயா? நீ ஒரு படிச்சபுள்ள - நான் ஒரு மடச்சி பேசுறன். யோசிச்சுப்பாரு...” பாத்திமா இப்படிக் கூறினாள்.

"ராத்தா! நான் படிச்சவன், பெரிய சம்பளம் எடுக்கிறவன். அதனால் தானே என் உம்மா, மாமியிடம் கொடுத்த வாக்குறுதியை அழிக்கிறேன். என் மாமி மகளின் நம்பிக்கையை மோசம் செய்கிறேன். நான் கற்றதன் விளக்கம் இதுதானா? சுபைதா போன்ற பணம் மட்டும் இல்லாத ஒரு பெண் ஒரு எஞ்சினியரைக் கணவனாகப் பெறும் தகுதி அற்றவள் என்று என் தாய் முடிவு செய்த காரணம் என்ன? அவதான் இதே சுபைதாவுக்கு சங்கற்பம் செய்து சாணைக்கூறை போட்டா! இந்தச் சம்பிரதாயத்தையும் அது வளர்த்த நம்பிக்கையையும் மீற நான் தயார் இல்லை ராத்தா!” ஏன் தம்பி! நீ நேத்திராவு கையை நீட்டி மோதிரத்தை வாங்கிக்கொண்டாயே அதுவும் சம்பிரதாயந்தானே! இதனால இன்னொரு பெண்ணின் மனத்தில் ஒரு ஆசைக் கனலை வளர்த்துவிட்டு , தப்பப் பார்க்கிறாய்?”

“என்ர அல்லாவே! என்ர புள்ளக்கி என்மோ தூள் போட்டுட்டாளுகள். மகுறம் நடந்து போச்சு. யா முஹ்ஹிதீன் ஆண்டவரே! கப்பலைக் கரைசேர்த்த நீங்கள் தான் புள்ளயயும் காப்பாத்தவேணும்!” இவ்வாறு கூறி பிரலாபித்தாள் ஹாஜறா.

ஸவாஹிறின் தலை சுழன்றது. உலகம் முழுவதுமே அவனை நோக்கிக் கேள்வி கேட்பது போன்றிருந்தது. கல், மண், கட்டிடக் கலையில் நிபுணத்துவம் பெற்ற அவன், பொன், மண், பெண் எனும் மூன்றையும் அறியாதவனகவே நின்றான். ஒரு நிமிஷத்தில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். கையில் கிடந்த மோதிரத்தைக் களற்றி உம்மாவின் கையில் கொடுத்தான். அவன் கால்கள் நடந்தன். ஆம்! சுபைதாவின் வீட்டை நோக்கி அவன் கால்கள் நடந்தன.

(1971)

கருத்துகள் இல்லை: