வியாழன், ஜூன் 24, 2021

அ.செ.முருகானந்தன் - வாழ்வும் பணியும்


எழுதியவர்: கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை (1921-1991)


1973 ஆம் ஆண்டு தை மாதம் அம்பனை, தெல்லிப்பழை ’கலைப்பெரு மன்றம்’ நடத்திய உழவர் விழாவில் அ.செ.முருகானந்தன் அவர்களுக்கு ’சிந்தனைச் செல்வர்’ என்ற கௌரவ விருது வழங்கி, அதனது உழவர்விழா மலரினை ’மறுலர்ச்சிக் காலம் – இலக்கியச் சிறப்பிதழாகவும் வெளியிட்டுள்ளது.
அதனைச் செயற்படுத்தியவர்களையும் அவர்களது கைங்கரியத்தையும் நன்றியுடன் நினைவிற்கொண்டு அம் மலரில் இருந்து இக் கட்டுரை எடுக்கப்படுகின்றது.


ஈழத்து இலக்கியத் துறையிலே தமக்கெனச் சிறப்பான ஓர் இடத்தை வகித்துக்கொண்டிருக்கும் அ. செ. முருகானந்தன் 1921ஆம் ஆண்டில் மாவிட்டபுரக் கிராமத்திலே பிறந்தார்கள்.
”நான் பிறந்து வளர்ந்த குடும்பம் ஓரளவு பெரியது. அக் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாரும் கலையார்வம் கொண்டவர்கள். இதனால் நான் இளமையைக் கழித்த அந்த மனை எந்த வேளையிலும் கலகலப்பாக இருக்கும். இசையும், ஓவியமும் அக் குடும்பத்தின் பரம்பரைச் சொத்துக்கள். என் பாட்டியாரும், அன்னையும் ஓய்வு நேரங்களிலே புராண இதிகாசக் கதைகளை வாசிப்பார்கள். கல்லூரிக் கல்வி பெற்றுக் கொண்டிருந்த அக்குடும்பத்து இளைஞர் ஒருவர் தாம் கற்று வந்த பாடத்திலுள்ள கதைகளை அழகாக எடுத்துக்கூறி என் போன்ற இளைஞர்களைக் களிப்பூட்டுவார். இத்தகைய சூழலிலே நான் வளர்ந்தேன். இதனால் என்னிடத்தே கதைகளைக் கற்பனையில் எழுதவேண்டுமென்ற ஆவல் முளை கொண்டுவிட்டது.''

இவ்வாறு தமது சிறுகதை எழுதும் முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைந்திருந்த காரணங்களை 'அ. செ. மு.’ ஒரு தினம் எனக்கு விளக்கிக் கூறினார்கள். அவர் விபரித்த அக் குடும்பம் பற்றிய செய்தியை நட்புத் தொடர்பினால் அறிந்திருந்தவனாதலாலே அவர் கூற்றில் அமைந்திருந்த உண்மையை யான் உணர்ந்தேன். இளமையில் ஏற்படும் மனப்பதிவுகள் பிற்காலத்திலே நலந்தரும் வகையில் விரிந்து மலருமென்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார் ’அ. செ. மு.’

முருகானந்தனது இளமைக் காலம் மாவிட்டபுரம், அளவெட்டி ஆகிய கிராமங்களில் மாறி மாறிக் கழிந்தது. அதனால் அவரது இளமைக் கல்வியும் மேற்கூறப்பட்ட கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் நிகழ்ந்தது. எனினும், சில நாட்களின் பின் அவர் அளவெட்டியையே தமது நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டார். அதனாலே தான் அவர் தமது பெயரின் முதலிலே ' அளவெட்டி' என்பதைக் குறிப்பிடும் 'அ' என்ற எழுத்தைச் சேர்த்திருக்கின்றார். பிரபல எழுத்தாளராய்ப் புகழ் நிறுவி மறைந்த அ. ந. கந்தசாமியின் பெயரின் முன்னமைந்துள்ள அகரமும் அளவெட்டியையே குறிக்கின்றது என்பதையும் இவ்விடத்தே சொல்லிவைக்க விரும்புகிறேன்.

முருகானந்தன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலே தமது கல்வியைத்தொடர்ந்தார். எழுத்துத் துறையில் அவர் ஈடுபடுவதற்கு மகாஜனக் கல்லூரியும் ஓரளவுக்குத் துணைபுரிந்ததென்றே கூறலாம். தமது தமிழார்வத்தைத் தூண்டியும், தாம் எழுதுங் கட்டுரைகளை வியந்தும் தமது தமிழ்ப்பாட ஆசிரியராக வாய்த்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்கள் தமது பிற்காலத் திறமைக்குப் பேராதரவாக இருந்தார் என்பது முருகானந்தன் அவர்களது நன்றிகலந்த கூற்றாகும்.

இவ்வாசிரியரேயன்றி திரு. செ. சின்னத்துரை ஆசிரியரும், அதிபர், திரு. கா. சின்னப்பா அவர்களும் தமது தமிழ்த் தேர்ச்சிக்கும் பூர்வமான படைப்புக்களுக்கும் பேருதவி புரிந்தார்களெனவும் அவர் கூறுகின்றார். இந்த நல்லாசிரியர்களின் பணியினாலே தான் அ. ந. கந்தசாமியும், 'மஹாகவி’ து. உருத்திரமூர்த்தியும் எழுத்துத்துறையிலே பிரபலம் எய்தினார்கள் எனவுந் துணிந்து கூறிவிடலாம். அ. செ. மு, அ. ந. க., மஹாகவி ஆகிய மூவரும் மகாஜனக் கல்லூரியின் மும்மணிகள் எனப் போற்றப்படுகின்றமையை நாடறியும். அ. செ. மு. கல்லூரியிற் படித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியப் பத்திரிகையாகிய ஆநந்த போதினியில் 'கண்டிக் கடைசி அரசன்' என்ற உரைச் சித்திரம் ஒன்றை எழுதியிருந்தார். இதுவே முதலிற் பிரசுரமான அவரது எழுத்து முயற்சியாகும். மிகச் சிறு வயதிலேயே இந்தத் தகுதி அவருக்குக் கிடைத்தமையைக் கொண்டு நாம் அவருடைய எழுத்தாற்றலின் வேகத்தைக் கணிக்கமுடியும். இக் காலத்திலேதான் அவர் தம்மொத்த இளைஞர்களோடு சேர்ந்து அளவெட்டியில் ஒரு வாசிகசாலையை நிறுவினார். அந்தச் சிறிய கொட்டிலிலே மறுமலர்ச்சி' என்ற கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு இலக்கிய உலகிலே ஒரு புதிய சஞ்சிகை உருவாதற்குத் காரணமான முதன் முளைகள் வளர்ச்சி பெற்றன. ஆம், 'அ. செ. மு.' வின் இலக்கிய நண்பர்களே பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திலே கூடிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் ஆவர்.

இந்த வாசிகசாலையிற் கூடிய இலக்கியநண்பர்கள் அக்காலத்தில் ஈழகேசரியில் அமைந்த 'கல்வி அநுபந்தம்' என்ற மாணவர் பகுதி மலருக்குக் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை அனுப்பி, பிரசுரத் தகுதியும் பெற்றனர். அந்தப் பத்திரிகை நடாத்திய பல போட்டிகளிற் பரிசுகளும் பெற்றனர். அப்பத்திரிகையை நடாத்திய அதிபர் திரு. நா. பொன்னையாவினதும், ஆசிரியர் திரு. சோ. சிவபாதசுந்தரத்தினதும் பெருமதிப்புக்கு அ. செ. மு. ஆளானார். கல்லூரியில் எட்டாவது வகுப்பிற் கற்றுக் கொண்டிருக்கும் காலத்திலேயே அ. செ. மு. பத்திரிகை வாசகர்களுக்கு நன்கு பரிச்சய எழுத்தாளராகி விட்டார்.

அவருக்கு இக்காலத்திலே கல்வியை மேலுந் தொடர முடியவில்லை. கணிதம் முதலிய பாடங்களிற் சித்தியடைய முடியாமையோடு உடல் நலக்குறைவும் பீடித்துக் கொள்ளவே அ. செ. மு. கற்பதை நிறுத்தி, பத்திரிகைத் தொழிலைப் பற்றிக் கொள்ளலாம் என்று விரும்பினார். இவரது திறமையை முன்னரே அறிந்து வைத்திருந்த ஈழகேசரி அதிபர் திரு. பொன்னையாஅவர்கள் 1941 இல் அ. செ. மு. வை விரும்பி ஏற்று ஆசிரியர் குழுவினருள் ஒருவராக்கினார். அன்று இராஜ. அரியரத்தினம் ஈழகேசரியின் ஆசிரியராக இருந்தார். அவர் அப் பதவியின் நீங்கியபின் ஆசிரியராக அமர்ந்த அ.செ.மு. வியக்கத்தக்க வகையிலே ஈழகேசரியை நடாத்தி வந்தார். அன்று தொடங்கிய பத்திரிகைத் தொடர்பு இன்று வரையும் நீங்காமல் இருக்கின்ற நிலையை அ.செ.மு. பேணி வருகின்றார். 1943 இல் கொழும்பிலே அன்பர் பூபதிதாசர் தொடங்க விரும்பிய ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகும் பொருட்டு அங்கு சென்ற முருகானந்தன் அந் நோக்கம் சித்தி பெறாமற்போக வீரகேசரிப் பத்திரிகையிலே எழுத்தாளராகச் சேர்ந்து கொண்டார். ஓராண்டின் பின்னர் யாழ்ப்பாணம் வந்த அவர் 1945 இல் மறுமலர்ச்சிச் சஞ்சிகையை வெளியிடும் முயற்சியில் ’வரதர்'அவர்களோடு சேர்ந்து அதன் ஆசிரியப் பதவியிலே தங்கினார். இந்தக் காலமே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை வடிவில் வெளிவந்து ஈழத்து இளம் எழுத்தாளர் பரம்பரையைத் தூண்டி வளர்த்த காலம் ஆகும். வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் பெற இயலாக் காரணத்தினாலே தொழில் ஏதும் தேட எண்ணித் திருகோணமலைக்குச் சென்றார் முருகானந்தன். அங்கு தொழில் கிடைக்கவில்லை. ஆனால் தாழையடி சபாரத்தினத்தின் நட்புக் கிடைத்தது. மீண்டும் எழுத்துத்துறையும், பத்திரிகைத் தொழிலும் அவரை வந்தடைந்தன. அங்கிருந்து சிறப்புப் பத்திரிகை பத்திரிகை நிருபராகக் கடமை பூண்டு வாழ்ந்தார். அக்காலத்திலே தான்'எரிமலை' என்ற ஒரு பத்திரிகையும் வெளியிட்டார். இஃது அவர் தனி முயற்சியேயாகும். அது ஐந்து இதழ்கள் வெளிவந்தபின் நின்றுவிட்டது.

1949 இல் மீண்டும் முருகானந்தன் கொழும்புக்குச் சென்றார். அங்கே 'சுதந்திரன்' பத்திரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராக அமர்ந்தார். செய்திப் பகுதி ஆசிரியராக இருந்த போதினும், தமது மிகத் திறமையான படைப்புக்களை அக்காலத்திலே தான் அவர் ஆக்கினார். இதன் பின் 1951இல் இருந்து ஐந்து ஆண்டுகள் 'வீரகேசரிப் பத்திரிகை' யின் ஆசிரியர் குழுவில் அமர்ந்து அரிய எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். இக்காலத்தில் இவரை வருத்திய 'ஆஸ்த்துமா' நோய் மிகவும் கருத்தாகத் தம் பணியைச் செய்வதற்கு இவரை அனுமதிக்கவில்லை. அதனால் வீரகேசரியில் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து ஈழகேசரியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். 1958இன் பின் வறுமையும், நோயும் நன்கு பற்றிக் கொள்ளவே அ.செ.மு. சிறிது காலம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டவர் போல அடங்கியிருந்து விட நேர்ந்தது. எனினும் வானொலி நாடகத்திற்குப் பரிசு கிடைத்தது இக் காலத்திலே தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கால ஓய்வின் பின் முருகானந்தன் 1963 இல் இருந்து இன்றுவரை ஈழநாடு பத்திரிகையில் தொடர்பு கொண்டு எழுத்துப் பணி செய்து வருகின்றார். சில காலம் அப்பத்திரிகையின் வாரமலருக்குப் பொறுப்பாளராக இவர் அமர்ந்திருந்தார். அக்காலத்தில் இவரதுவாழ்க்கை அநுபவங்களும், தொடர்பு பூண்ட மக்களின் இயல்பும் இவருடைய எழுத்துக்களில் இடம்பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை அடைந்த கட்டுரைகள் பலவாக வெளிவந்தன.

வாழ்வை எழுத்துத் துறைக்கே அர்ப்பணித்து. அந்தத் துறைக்கு வேண்டிய படைப்பாற்றல் மிகுதியும் பெற்றிருந்தும் அவற்றை நூல் வடிவமைப்பில் வெளியிடுதற்கியலாது நோயும் வசதிக்குறைவும் பெற்று மனமடிவுடன் வாழும் எழுத்தாளர் இவரன்றிப் பிறர் இருக்க முடியாது என்பது என் கருத்து. இன்று இந்தச் சிறந்த எழுத்தாளர் ஒரு சிறிய கொட்டிலிலே தமதுஅன்னையார் துணையோடு வாழ்ந்து வருகின்றார். எழுதுவதற்குரிய பேனா, காகித வசதிகள் தாமும் இவரிடம் இல்லாத நிலைமையைக் காணும்போது எம்மை அறியாமலே எமது கண் கலங்கும் நிலையைப் பெறுகின்றது. இங்ஙனமாயினும் தம்மைத் தேடிவரும் நண்பர்களை உபசரிப்பதில் முருகானந்தனும், அவரது அன்னையும் மிகுந்த கருத்துடன் இருக்கிறார்கள். தாம்பூலம், தேநீர் முதலிய உபசரிப்போடு இன்முகமும் அன்பு கனிந்த உரையும் தந்து மகிழ்வூட்டுகிறார்கள். எவ்வளவோ இலக்கியப் பணிகளை இவரிடமிருந்து பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் இவர் இவ்வாறு 'முடங்கிக்'கிடக்கும் நிலை நேர்ந்திருக்கிறதே என்றுதான் முருகானந்தனைச் சந்தித்து உரையாடி மீளும் இலக்கியப் பிரியர்கள் எண்ணிச் செல்கின்றார்கள்.

முருகானந்தனது படைப்புக்களில் நூல் வடிவம் பெற்றது ‘புகையில் தெரிந்த முகம்' என்ற ஒரு குறு நாவலாகும் மற்றையவை பத்திரிகையில் வெளிவந்தமையோடு அடங்கிவிட்டன. ஈழநாடு பத்திரிகையில் வெளியான ' யாத்திரிகன்' என்பது இவரது நாவலாகும். இதைத்தவிர ‘வசந்த மல்லிகை' என்ற ஒரு சிறு நாவலும் இவரால் எழுதப்பட்டுள்ளது. ’மனிதமாடு’ என்ற சிறுகதை தென்னிந்தியாவிலே தொகுக்கப்பட்ட 'கதைக் கோவை' ஒன்றில் இடம் பெற்று அங்குள்ள அறிஞர்களது ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. இவர் மிகச் சிறந்தனவான 30 சிறு கதைகளை எழுதியிருப்பதாக அடக்கமாகக் கூறுகிறார். ஆனால் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப்பல. சிறந்த சில நாடகங்களும் இவரது படைப்புக்களாக உள்ளன. "நீங்கள் எழுதிய சிறுகதைகளுள் உங்களுக்கு மிகப்பிடித்தமானது எது?'' என யான் கேட்டேன். சிறிது சிந்தித்து விட்டு "நான் மிக முயன்று ஓர் இலட்சியத்தை அமைத்து ஒரு கதை எழுதியுள்ளேன். அது சிங்கள நாட்டைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது. எனது சிந்தனையிலே தோன்றிய கற்பனை முழுமையாகத் திறம்பட அமைந்தது அக் கதை. அதுவே எனக்கு பிடித்தது என்றார். “எல்லாம் சொல்லிவிட்டீர்கள், கதையின் பெயரை மட்டும் கூறவில்லையே” என்றேன். ”ஒகோ”, என்று சிரித்துவிட்டு “அக் கதையின் பெயர் ‘மாணிக்கப் பொன் மயிலாள்’ என்பது. ஈழநாடு வாரமலரில் வெளிவந்தது” என்றார். யான் அதன்மேல் ஒன்றும் பேசவில்லை. ஏனெனில் அந்தக் கதையை நான் வாசிக்கவில்லை.

முப்பது ஆண்டுகளின் முன் பார்த்த அதே உருவத்தில் – அதனிலும் சிறிது மெலிந்த ஒல்லியான வடிவத்தில் - முருகானந்தன் இன்று காட்சி தருகிறார். விபூதியைப் பட்டையாகப் பரவிப் பூசிக் கொண்டு ஒரு சால்வையால் தம்மைப் போர்த்தபடி படுக்கையிற் சாய்ந்திருந்து கொண்டு மேல் நோக்கிச் சிந்தித்தபடியே அவர் இருப்பார். அவரைப் பற்றியிருக்கும் நீண்ட நாளைய நோய் இன்னும் அவரை விட்டு நீங்கிய பாடில்லை. அந்த நோய் இன்னும் அவரைப் பற்றி நிற்கிறது என்பதை அவரோடு உரையாடத் தொடங்கிய சிலநிமிடங்களுக்குள்ளேயே நாம் உணர்ந்துகொள்ள முடியும். இந்நிலையையும் அவரிடத்திலே அடங்கியிருக்கும் எழுத்தாற்றலையும் ஒரு சேர நோக்கி உன்னும் எவருக்கும் ஒரு தரமேனும் ஓர் ஏக்கப் பொருமல் எழாமற் போகாது. நாம் ஒன்று செய்யக் கடமைப்பட்டுள்ளோம். முருகானந்தனை இலக்கிய உலகு நினைவுகூர்தற்கு, என்றும் எண்ணி எண்ணிக் களிப்பதற்கு உரிய முயற்சி ஒன்று செய்தல் வேண்டும். அவர் வாழ் நாளிலேயே அவரது சிறந்த படைப்புக்கள் சிலவற்றையேனும் தொகுத்து நூல் வடிவு செய்து அதனையும், அதன் வருமானத்தையும் அவருக்குச் சமர்ப்பித்து அதனால் அவர் கொள்ளும் ஆத்ம திருப்தியைக் காண்பதே நாம் செய்ய வேண்டிய செயலாகும். இஃது என்று நிகழுமோ அன்றே முருகானந்தனைக் கௌரவித்தவர்களாவோம். அவரது பெருமையை உணர்ந்தவர்களாவோம்.


(கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை (1921-1991) அவர்களின் புகைப்படம் ஒன்றினைக் கேட்டவுடனேயே அனுப்பியுதவிய நண்பர் க.ஆதவன்(டென்மார்க்) அவர்களுக்கு மிக்க நன்றிகள்)

கருத்துகள் இல்லை: