வியாழன், ஜூலை 15, 2021

நீலாவணன் கவிதைகள் --- எம். ஏ. நுஃமான்

நீலாவணனின் கவிதைகள் ”ஒத்திகை” என்ற தலைப்பில் 2001 இல் கொழும்பு நன்னூல் பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது.
இந் நூல் வெளிவந்து ஒரு வருட காலத்திலேயே அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக அறியமுடிவது மகிழ்ச்சி தரும் செய்தி.
நீலாவணனின் இக் கவிதை நூலுக்கு எம்.ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரை எமது இலக்கிய வரலாற்றில் நீலாவணனின் இடத்தினை நிர்ணயம் செய்யவும், செய்தும் எழுதப்பட்டிருகின்றது.
”ஒத்திகை” என்ற இக் கவிதை நூலினை அச்சிட்ட நீலாவணனின் மகன் எஸ். எழில்வேந்தன் அவர்களுக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களும் நன்றி சொல்லி இம் முன்னுரையை இங்கே மீளப் பதிவாக்குகின்றோம்.

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண்விடுக்காத பூனைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்
நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண்ணெதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...


நீலாவணன் இறந்தபோது அவர் நினைவாக நான் எழுதிய கவிதை இவ்வாறுதான் தொடங்குகின்றது. நீலாவணனுக்கும் எனக்குமிடையே நிலவிய உறவு இரண்டு கவிஞர்களுக்கிடையே இருந்த வெறும் இலக்கிய உறவுமட்டுமல்ல. அண்ணன் தம்பி உறவாகவும், குருசிஷ்ய உறவாகவும் கூட இது இருந்தது. நீலாவணனின் உறவு கிடைத்திருக்காவிட்டால் உண்மையில் நான் ஒரு கவிஞனாக, இலக்கியகாரனாக உருவாகியிருக்க முடியாது என்றே நம்புகின்றேன்.

நான் முதல்முதல் நீலாவணனைச் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. 1960ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். கல்முனையில் க.பொ.த. வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.

அந்நாட்களில் இலக்கியம் - கவிதை போன்ற சங்கதிகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பத்திரிகைகளில் வரும் எழுத்துக்களை வாசிப்பதுண்டு. கவிதை, சதை என அவ்வப்போது ஏதோ கிறுக்கியதும் உண்டு. எனது இலக்கிய ஈடுபாடு அவ்வளவுதான். இதற்கு மேல் ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயம் எதுவும் இல்லை. எனது வகுப்பறை நண்பன் சத்திய நாதனுக்கும் என்போல் எழுத்தில் ஈடுபாடு இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்துவதற்குத் தீர்மானித்தோம். ஒரு நூறு ரூபா போல் பணமும் சேர்த்தோம்.அதுதான் எங்களது கைமுதல் . அதை வைத்துக்கொண்டுதான் ஒருபத்திரிகையை அச்சிட்டு வெளியிடத் துணிந்தோம். அதை எங்கள் அறியாமையின் துணிச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு நாள் சத்தியன் என்னிடம் சொன்னான். “நீலாவணன் என்றுஒரு கவிஞர் இருக்கிறார். நல்ல ஆள் போலத் தெரியுது. நேற்று தபாற்கந்தோரடியில் கண்டு பத்திரிகை அடிக்கிறது சம்பந்தமாகக் கதைத்தேன். ஒரு நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். நாம் போய்ச் சந்திப்போம்,”என்று.
நீலாவணனின் கவிதைகள் எவற்றையும் அப்போது படித்திருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அன்று பின்னேரமோ, மறுநாளோ நாங்கள் இருவரும் நீலாவணனை சந்திக்கச் சென்றோம். நீலாவணன் கோயிலடியில் இருப்பதாகச் செய்திகிடைத்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நாங்கள் கோயில் வளவுக்குச் சென்றோம். ஒரு கறுத்து மெலிந்த மனிதர் தன்னந்தனியாக, கோயிலைச் சுற்றி வளர்ந்து கிடந்த பற்றைகளை வெட்டிக் கொத்தித் துப்பரவு செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் நீலாவணன் என்று சத்தியன் சொன்னான். எங்களைக் கண்டதும் மடித்துக்கட்டியிருந்த சாறனை அவிழ்த்துவிட்டபடி அவர் எங்களை நோக்கிவந்தார். கோயில் திண்ணையில் அமர்ந்து நாங்கள் கதைத்தோம். இந்தக் கோயிலை யாரும் கவனிப்பதில்லை என்று அவர் குறைப்பட்டுக்கொண்டார். எங்கள் முதல் சந்திப்பிலேயே நீலாவணனின் தனித்துவமான ஆளுமையை அவரின் நல்லியல்பை நான் கண்டேன்.

மற்றவர்களைக் குறைகூறுவதோடு நில்லாது, தானே அதைச் சரிப்படுத்த முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. தனது ஊர் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்ற நியாயமான அக்கறை அவரது மனதில் எப்போதும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுதிய ‘பாவம் வாத்தியார்' கவிதை இதன் வெளிப்பாடுதான். அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகளை முதலில் வாசித்தபோது நீலாவணனை முதல்முதல் கோயிலடியில் சந்தித்த காட்சியே எனக்கு ஞாபகம் வந்தது.

“ஏழேழ் தலைமுறைக்கும் எம்மூரின் கோயில்
மதிலாய் உயர்ந்து நிற்கும் மாபெரிய காடு
அதிலே உமக்கென்ன அக்கறையோ?. பள்ளிச்
சிறுவரை விட்டுச் சிரைத்து நிலவேர்
அறுத்துப் பிடுங்கி, அகற்றி, அம்மன் வீதியினை
வெட்டை வெளியாக்கி வெள்ளை மணல் கொட்டி வைத்தீர்
புற்றுடைத்துப் பாம்புகளும் போக விடை கொடுத்தீர்.”

கோயிலடிச் சந்திப்புக்குப் பிறகு நாங்கள் பத்திரிகை வெளியிடாவிட்டாலும் (அதுவே பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாடும் மீனாக வெளிவந்தது.) நீலாவணனின் வீடே எங்கள் இலக்கியப் பயிற்சிக் களமாக மாறியது. உண்மையில் நீலாவணனின் தொடர்பின் மூலம் நான் ஒரு புதிய உலகுள் பிரவேசித்தேன். என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த, அதுவரை நான் காணாத பரந்த இலக்கிய உலகத்தை அவரது உறவின் மூலம் நான் தரிசித்தேன்.
மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மு.சடாட்சரன், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், கனக சூரியம் போன்ற எமது பிரதேசக் கவிஞர்கள் எனது நண்பர்கள் ஆனார்கள். மஹாகவி, எஸ்.பொன்னுத்துரை, எம். ஏ. ரஹ்மான் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

பாரதி, பாரதிதாசன், ச.து.சு.யோகியார், புதுமைப் பித்தன், அழகிரிசாமி போன்றோரின் படைப்புகள் எனக்குப் பரிச்சயமாகின. சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம் எனப் பரந்த பழந்தமிழ் இலக்கியம் என் ரசனை எல்லையை விரிவுப்படுத்தியது. டால்ஸ்டாய், செக்கோவ், கார்க்கி, மாப்பசான், ஹெமிங்வே, செல்மா லாகர்லாவ் உலகின் சிறந்த படைப்பாளிகள் தமிழ் மொழி மூலம் எனக்கு அறிமுகமானார்கள். இப் பரந்த இலக்கிய உலகின் ஜன்னல்களை எனக்குத் திறந்துவிட்டவர் நீலாவணன்தான்.நீலாவணனுக்கு ஒரு ஆரோக்கியமான இலக்கியப் பசி இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கும் அவர் அதைத் தொற்ற வைத்தார்.

II


நீலாவணன் ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் முக்கியமான இடம்பெறுபவர். ஈழத்து நவீன கவிதை பற்றிப் பேசும்போது மஹாகவி, முருகையன், நீலாவணன் மூவரையும் குறிப்பிடாமல் வேறு யாரையும் குறிப்பிட முடியாது. மூவரும் தனித் தன்மைகளும் பொதுப் பண்புகளும் உடைய மும்மூர்த்திகள். ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இவர்களது செல்வாக்கு மிக ஆழமானது. முன்னவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தவர். நீலாவணன் கிழக்கின் பிரதிநிதி. கிழக்கிலங்கையின் தனிப்பெரும் கவித்துவ ஆளுமையாக அவர் திகழ்ந்தார். அவரது சமகாலத்தவர்களான புரட்சிக்கமால், அண்ணல் ஆகிய இருவரும் அளவாலும், தரத்தாலும் அவருக்கு அடுத்த இடத்தில் தான் வருவார்கள். கிழக்கிலங்கையில் கல்முனைப் பிரதேசம் தமிழ்க் கவிதையின் தலைநகராகக் கருதத்தக்கது. பல முக்கியமான கவிஞர்கள் இப்பிரதேசத்தில் உருவானதில் நீலாவணனின் செல்வாக்கு கணிசமானது.

நீலாவணன் 31.05.1931 ஆம் ஆண்டு பிறந்து 11.01.1975ல் திடீரெனத் தாக்கிய இதய நோயினால் காலமானார். சரியாக 44 ஆண்டுகளே வாழ்ந்தார்.பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மஹாகவி போல் அதிக சாதனைகள் செய்து அற்ப ஆயுளில் மறைந்தவர் அவர். தன் ஆயுளில் அரைவாசிக் காலம்,சுமார் இரண்டு தசாப்தங்கள், இலக்கிய உலகில் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரது முதல் கவிதை 1953ல் பிரசுரமானது. இறுதிவரை அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்தார். கவிதை, சிறுகதை, நாடகம், உருவகக்கதை , நடைச் சித்திரம், கட்டுரை என அவரது இலக்கிய அக்கறை விசாலமானது. எனினும் கவிதையையே அவர் தன் பிரதான இலக்கிய வடிவமாகக் கொண்டார்.

சுமார் இருபது ஆண்டுகால அவரது இலக்கிய வாழ்வில் சில நூற்றுக்கணக்கான கவிதைகளும், வேளாண்மை என்ற குறுங்காவியமும், மூன்று பாநாடகங்களும் அவரது கவித்துவ அறுவடையாக உள்ளன. புனை கதைகளும், கட்டுரைகளுமாகப் பல உள்ளன. எனினும் அவரது வாழ்நாளில் தன் கவிதைத் தொகுதி ஒன்றையேனும் வெளிக்கொண்டுவர அவரால் முடியவில்லை. மரணத்தின் பின்பே அவரது கைப்படத் தொகுத்திருந்த 56 கவிதைகளைக் கொண்ட அவரது முதலாவது கவிதைத் தொகுதி ’வழி’ என்ற பெயரில் 1976ல் வெளிவந்தது. சில ஆண்டுகளின்பின் 1982ல் அவரது ’வேளாண்மை’ காவியம் வ.அ. இராசரத்தினத்தின் முயற்சியால் நூலுருவாகியது.
நீலாவணன் மறைந்த கால் நூற்றாண்டு காலத்தில் அவரது படைப்புகள் என்று இவ்விரு நூல்கள் மட்டுமே வெளிவந்தன. மஹாகவி இறந்தபிறகு எனது முயற்சியால் அவரது நூல்கள் சில வெளிவந்தன. அதுபோல் நீலாவணனின் நூல்கள் ஒன்றிரண்டையாவது வெளிக்கொண்டுவர முடியவில்லையே என்ற மனக்குறையும் குற்ற உணர்வும் எனக்கு நிறைய உண்டு. ’வழி’யை அச்சுருவாக்கும் பொறுப்பை நானே ஏற்றுச் செய்தேன் என்ற திருப்தி இதற்கு ஒரு நிவாரணம் ஆகாது. இப்போது நீலாவணன் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படைப்புகள் அனைத்தையும் நூலுருவாக்க அவரது துணைவியார் என் மரியாதைக்குரிய அழகேஸ்வரி அக்கா அவர்களும், மகன் எழில் வேந்தனும் முன்வந்துள்ளனர். இவர்களது முயற்சியால் இப்போது இத்தொகுப்பு வெளிவருகின்றது. இத்தொகுப்பு முயற்சியில் பங்குகொள்வதற்கும், இதற்கு ஒரு முன்னுரை எழுதுவதற்கும் கிடைத்த வாய்ப்பை ஒரு பிராயச்சித்தமாகவே கருதுகிறேன்.

III


இதுவரை நூல் உருப் பெறாத நீலாவணனின் 80 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 1953 முதல் 1974 வரையுள்ள இருபதுஆண்டு காலத்தில் அவர் எழுதிய கவிதைகளுள் சில இவை. ஏற்கனவே வெளிவந்த ’வழி’யில் இடம்பெற்ற கவிதைகள் எவையும் இதில் இல்லை. நீலாவணனின் கவித்துவ ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புவர்கள் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளோடு, வழி, வேளாண்மை ஆகியவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
நூலுருப்பெற வேண்டிய அவரது கவிதைகள் இன்னும் அநேகம் உள்ளன. அவரது பரிமாணத்தை அறிந்துகொள்வதற்கு அவையும் அவசியமானவை. இந்த முன்னுரை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கு மட்டுமன்றி நீலாவணனின் முழுக்கவிதைகளுக்கும் ஒரு அறிமுகமாகவே அமைகின்றது.

நீலாவணன் எத்தகைய கவிஞன்?. தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் அவரும் ஒருவர் என இவ்வினாவுக்கு நாம் ஒரு வசனத்தில் விடை கூறலாம். ஆனால், இந்த முக்கியத்துவம் அவருக்கு எவ்வாறு வருகின்றது?. இதற்கு நாம் ஒற்றை வரியில் பதில் கூறுவது சிரமமானது. இதற்குரிய விடை கவிதை பற்றிய நமது பார்வையைப் பொறுத்து வேறுபடக்கூடும். கவிதை பற்றிய நமது பார்வை ஒற்றைப் பரிமாணம் உடையதெனின் நீலாவணனுடைய முக்கியத்துவத்தையும் நாம் அவ்வகையிலேயே நிறுவமுனைவோம்.
வாழ்வின் பன்முகத்தன்மையையும் கவிதையின் பன்முகத்தன்மையையும் நமது பார்வை உள்ளடக்குமாயின் நீலாவணனின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீட்டிலும் நாம் இப்பன்முகத் தன்மையை வலியுறுத்துவோம்,இதை ஒரு உதாரணத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

நண்பர் மு.பொன்னம்பலம் சில ஆண்டுகளுக்கு முன் 'யதார்த்தமும்ஆத்மார்த்தமும்' என்று ஒரு கட்டுரை எழுதினார். இதே தலைப்பிலான அவருடைய கட்டுரைத் தொகுதியில் (1991) இது இடம் பெற்றுள்ளது.
யதார்த்தத்தை நிராகரித்து ஆர்மார்த்தத்தை இனிவரும் யுகத்தின் கலைப் பார்வையாக மேன்மைப்படுத்த முயலும் ஒரு பலவீனமான கட்டுரை அது. அக்கட்டுரையில் மஹாகவியையும் நீலாவணனையும் ஒப்பிட்டு வேறுபடுத்த முனைகிறார் மு.பொ. ஒரு வகையான பட்டிமன்ற விவாத முறையைப் பயன்படுத்தி, மஹாகவியை ஒரு சாதாரண யதார்த்த வாதியாகக் கீழ் இறக்கும் நண்பர், நீலாவணனை ஒரு ஆத்மார்த்தியாக மேல் உயர்த்துகிறார். என்றாலும், நீலாவணனின் ஆத்மார்த்தம் கூட ஊனமுடையது என்றும் மு.பொன்னம்பலம், சு.விஸ்வரத்தினம், மு.தளையசிங்கம் ஆகியோரே பூரண ஆத்மார்த்திகள் என்றும் இவர்களே இனிவரும் யுகத்தின் கலைஞர்கள் என்றும் கூறுகிறார்.
இவ்வகையில் மஹாகவியைவிட நீலாவணன் மேலானவர். நீலாவணனைவிட மு.பொ. மேலானவர் என நிறுவ முனைகிறார்.

இந்தப் பார்வை கலை இலக்கியம் பற்றிய ஒற்றைப் பரிமாணப் பார்வை என்பது வெளிப்படை. இப் பார்வையின் அடிப்படையில் “நீலாவணனின் தீ, ஓ வண்டிக்காரா, போகிறேன் என்றோ சொன்னாய் ஆகிய இந்த மூன்று கவிதைகளே அவருக்கு இலக்கிய உலகில் நிரந்தர இடத்தைத் தரக் கூடியன" என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய பார்வையை முருகையன் 'வெளி ஒதுக்கற் கொள்கை” என்று சொல்வார். அதாவது, தனக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரித்தல். இப்பார்வை முற்றிலும் அகநிலைச் சார்பானது. மஹாகவியை நிராகரிப்பதற்கும், நீலாவணனை ஓர் அளவுக்கேனும் உயர்த்துவதற்கும் மு.பொ. இந்த அகநிலைச் சார்பையே அடிப்படையான பிரமாணமாகக் கொள்கிறார்.
மு.பொ.வின் இந்தப் பார்வை நீலாவணனின் சமூகசார்பான சமூக விமர்சனப்பாங்கான கவிதைகளையெல்லாம் புறமொதுக்கி, தனது குறுகிய ஆர்மார்த்தக் கூண்டுக்குள் நீலாவணனை அடைத்துவிட அவருக்கு வாய்ப்பளிக்கிறது. தும்பிக்கையையே யானையாகக் காணும் ஒரு பார்வைக் கோளாறுதான் இது. நீலாவணனின் பன்முகத் தன்மையைக் காணமறுத்து தனக்குப் பிடித்த முகமே அவரது முகம் எனச் சாதிக்க முனையும் இப்பார்வை நீலாவணனுக்குப் பெருமை சேர்க்காததோடு அவரின் முக்கியத் துவத்தையும் வரையறுத்துவிடுகின்றது.

பிற எல்லாச் சிறந்த கலைஞர்களையும் போல் நீலாவணன் என்ற கவிஞனும் தான் வாழ்ந்த காலத்தினதும், தான் வந்த பாரம்பரியத்தினதும் தனது சொந்த ஆளுமையினதும் உருவாக்கம் தான். இவற்றின் கூட்டுக் கலவைதான் அவரது கவிதைகள், ஆனால், வேறு பலமுக்கிய படைப்பாளிகளைப் போல்வாழ்க்கை பற்றிய தீவிரமான தத்துவப் பார்வை எதையும் நீலாவணன் வரித்துக்கொள்ளவில்லை. வாழ்க்கையின் தேவைகளுக்கும் சவால்களுக்கும் தன் சொந்த ஆளுமையின் தூண்டுதல்களுக்கேற்ப அவர் எதிர்வினையாற்றினார். புறநிலையான சமூக யதார்த்தத்துக்கும், பாரம்பரியமான ஆன்மீகத் தேடலுக்கும், இலக்கிய மரபுக்கும் அவர் ஒரே சமயத்தில் முகம் கொடுத்தார். இதனால் ஒரேசமயத்தில் இவரிடம் பல்வேறுபட்ட போக்குகளை நாம் அடையாளம் காணமுடிகிறது. அவ்வகையில் நீலாவணனை பல போக்குகளின், பலவிதமான உணர்வுகளின் கூட்டுக்கலவை எனக் கூறுவது தவறாகாது.

நண்பர் மௌனகுரு அவர்கள் நீலாவணன் பற்றி எழுதிய கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் (1994) என்ற தனது நூலில் நீலாவணனின் கவிதைப் போக்கின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாக வேறுபடுத்திப் பார்க்கிறார். இது ஒரு வகையில் மிகை எளிமைப்படுத்தப்பட்ட வேறுபாடு என்றே எனக்குத் தோன்றுகின்றது.
நீலாவணன், பாவம் வாத்தியார், உறவு முதலிய சமூகவிமர்சனக் கவிதைகளை எழுதிய அதே காலப் பகுதியில் தான் பயண காவியம், பனிப்பாலை, தீ போன்ற ஆன்மீகத் தேடல் என்று விளக்கக் கூடிய கவிதைகளையும் எழுதினார். தயவுசெய்து சிரியாதே, ஓவியம் ஒன்று, மங்களநாயகன் போன்ற அழகிய காதல் கவிதைகளையும் அவர் இதே காலப்பகுதியில்தான் எழுதினார்.

கால ஓட்டத்தினூடு அவரது கவித்துவ முதிர்ச்சியைக் காணமுடிகிறது. அதேவேளை ஒரே கால கட்டத்தில் அவரிடம் பல போக்குகளையும் காணமுடிகிறது. அவ்வவ்போதைய வெவ்வேறுபட்ட உணர்வுத் தூண்டல்களுக்குத் தன் மரபு நிலைப்பட்டும், ஆளுமை சார்ந்தும் அவர் துலங்கினார். இது அவரது கவிதைகளுக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றது. இவ்வகையில், மொழி உணர்வு, காதல், சமூக விமர்சனம்,ஆன்மீகத் தேடல் என்பன அவரது கவிதையின் பலமுகங்கள் எனலாம். இவற்றுள் ஒன்றை உயர்த்தி மற்றவற்றை நிராகரிப்பது நீலாவணனைச் சரியாக மதிப்பிடுவதாக அமையாது.

IV


நீலாவணன் எழுத்துத்துறையில் பிரவேசித்த காலம் (1950கள்)இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். இலங்கையில் இடதுசாரி இயக்கம் மட்டுமன்றி, இனத்துவ முரண்பாடும், இனவாத அரசியலும் கூர்மை பெறத்தொடங்கியதும் இக்கால கட்டத்திலேயே. சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற சிங்கள தேசிய வாதத்தின் நிலைப்பாடு தமிழ் உணர்ச்சியையும், தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசியவாதத்தையம் கிளர்ந்தெழச் செய்தது. 1955 முதல் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இது தீவிரமாக வெளிப்பட்டது. உண்மையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இக்கால கட்டத்தை அரசியல் எதிர்ப்புக் கவிதையின் (PROTEST POETRY)தொடக்ககாலம் எனலாம். இலங்கையின் அன்றைய முன்னணிக் கவிஞர்கள் பலரும் தமிழ் உரிமைப் போராட்டத்தை ஊக்கப்படுத்திக் கவிதை எழுதினர். மாபாடி என்ற புனை பெயரில் மஹாகவி இத்தகைய ஒன்பது கவிதைகள்எழுதியிருக்கிறார். முருகையன் இதைவிட அதிக கவிதைகள் எழுதினார். நீலாவணனின் மொழி உரிமைப் போராட்டக் கவிதைகள் கணிசமானவை. வீறார்ந்த உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதைகளாக இவை அமைந்தன. சங்ககால வீரயுக மரபில் இருந்தும் இக்கவிதைகள் ஊட்டம் பெற்றன. மொழிஉரிமைப் போராட்டத்தில் தான் இறக்க நேர்ந்தால் தன்மகன் எழில் வேந்தனை தகப்பன் சென்ற பாதையில் போருக்கு அனுப்பவேண்டும் என ஒருபாடலில் நீலாவணன் தன் மனைவியை வேண்டுகிறார். எழில் வேந்தன் அப்போது குழந்தைப் பருவத்தில் இருந்தான். முருகையன், மஹாகவி போலன்றி நீலாவணன் தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளிலும் நேரடியாகத் தோன்றியவர். கட்சிக் கொள்கைப் பிரச்சாரம் சார்ந்த சில கவிதைகளும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இத்தகைய தமிழ் இயக்கப் பாடல்கள் 1958க்குப் பிறகு பெரும்பாலும் முடிவுக்கு வந்தன. 1958இன் இனக் கலவரமும், அது கவிஞர்களுக்கு ஏற்படுத்திய ஒரு தார்மீக அதிர்ச்சியும் இதற்குக் காரணம் எனலாம். 1960க்குப் பிறகு வேறுபல கவிஞர்களைப் போல் நீலாவணனும் தமிழ் அரசியல் இயக்கத்திலிருந்து பெரிதும் ஒதுங்கி இருந்தார்.

இக்காலத்தில் தோன்றிய தமிழ் இயக்கக் கவிதைகள் அவற்றுக்கே உரிய அழகியல் அம்சங்களையும் இலக்கிய வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தன. எனினும், நீலாவணனோ, மஹாகவி, முருகையன் ஆகியோரோ இக்கவிதைகளைத் தங்கள் தொகுதிகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கருதியிருக்கவில்லை. இவற்றுக்கான உரிமையை இவர்கள் மெளனமாக மறுதலித்தார்கள் என்றும் கூறலாம். எனினும். இவை நமது சமகாலக் கவிதை வரலாற்றின் ஓர் அங்கமாக உள்ளன என்பதை மறுக்கமுடியாது. இவற்றின் அழகியல் தனியாக ஆராயப்படவேண்டியது. நீலாவணனின் இத்தகைய கவிதைகளுள் ஒன்று மட்டும் -தமிழே எழுவாய்- இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அடுத்துவரும் தொகுதிகளில் ஏனையவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகம் அவரது காதல் கவிதைகளாகும். அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பாலும் இறுதிக் கட்டம் வரை காதல் அவரது முக்கிய கருப்பொருளாக இருந்திருக்கிறது. நீலாவணனின் காதல் கவிதைகளில் இரு வகைகளை நாம் காணலாம். ஒன்று, உடல் சார்ந்த விரக உணர்வின் வெளிப்பாடாக அமைபவை. அவரது ஆரம்பகாலக் காதல் கவிதைகள் பெரும்பாலும் இத்தகையன. இத்தகைய கவிதைகளுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து இது தொடங்குகின்றது. திராவிட இயக்கக் கவிஞர்கள் இதனை அதன் உச்சத்துக்குக் கொண்டு சென்றனர்.
பாலியல் கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பெண் உடல் வனப்பையும், உடல் உறவு நடத்தைகளையும் இவர்கள் நுணுக்கமாகச் சித்தரித்தனர். கருணாநிதி முதல் கண்ணதாசன் வரை நாம் இதனைக் காணலாம். சங்க இலக்கியக் காட்சிகள் சிலவற்றுக்கு இவர்கள் கொடுத்த கவிதை விபரணம் காமியம் செறிந்தது.

1950, 60களில் தமிழ்க் கவிதையில் இது ஒரு மரபாக நிலைகொண்டது. நீலாவணனின் முதல் கவிதையான 'ஓடிவருவதென்னேரமோ” இம்மரபின் வெளிப்பாடுதான். 1959ல் அவர் கலித்தொகைப் பாடல் ஒன்றை(கயமலர் உண் கண்ணாய் - குறிஞ்சிக்கலி) தழுவி எழுதிய 'இனிக்கும்அன்பு' இம்மரபின் தொடர்ச்சியாக அமைகின்றது. வழியிலும் இத்தொகுதியிலும் இத்தகைய கவிதைகள் சில இடம்பெற்றுள்ளன. நீலாவணனின் சொல்லாட்சி,கற்பனைத் திறன் ஆகியவற்றை நாம் இவற்றில் காணமுடிகிறது.

நீலாவணனின் இரண்டாவது வகையான காதல் கவிதைகள் வெறும் உடல்சார் விரகத்தைத் தாண்டிய, சூழ்ந்த உள்ளக் கிளர்ச்சிதரும் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை. போகவிடு, ஓவியம் ஒன்று, போகின்றேன் என்றோ சொன்னாய், மங்கள நாயகன், வேடன், சீவனைத்தான் வேண்டுமடி போன்றவை இத்தகையன.
இவற்றிலும் உடல்சார் பாலியல் பொதிந்திருப்பினும் உள்ளக் கிளர்ச்சி அனுபவமே இவற்றின் அடிப்படைத் தொனியாகும். இவற்றில் தமிழ்ப் பக்தி மரபின் செல்வாக்கையும் நாம் காணலாம். இத்தகைய கவிதைகள் நீலாவணனின் தனித்துவத்தை நிலைநாட்டுவன என்பதில் ஐயமில்லை. பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா போன்ற தமிழின் அழிவற்ற காதல் கவிதைகளுள் இவையும் இடம்பெறும் என்றே நம்புகிறேன்.

நீலாவணனின் சமூக விமர்சனம் சார்ந்த கவிதைகள் அவரது கவித்துவ ஆளுமையின் இன்னுமொரு முகமாகும். தன் ஆரம்ப காலத்திலிருந்தே சமூகயதார்த்தத்தில் காலூன்றி நின்றவர் நீலாவணன். சமுதாய உணர்வு மிக்கவராக வாழ்ந்தவர் அவர். சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள்,ஊழல்கள், வறுமை, சாதிப்பாகுபாடு, சீதன முறை, நிறவெறி போன்றவற்றுக்கு எதிரான தன் உணர்வுகளைக் கவிதையில் வெளிப்படுத்தினார். அவ்வகையில் அவரது கவிதைகள் பலவற்றில் சமூக சார்பு முனைப்பாகத் தெரிகிறது. ‘பாவம்வாத்தியார்' இவ்வகையில் அவரது உச்ச சாதனை எனலாம். உறவு, போதியோ பொன்னியம்மா, வெளுத்துக்கட்டு போன்றவையும் அவரது முக்கியமான படைப்புகள். அவருடைய வேளாண்மை ஒரு விவரணச் சித்திரம் எனலாம்.
கிழக்கிலங்கையின் பண்பாட்டு ஆவணமாகவே நீலாவணன் அதனை உருவாக்கினார். ஒரு காவியத்துக்குரிய வலுவான மையம் அதில் இல்லை.எனினும் மானிடவியல் சார்ந்த இலக்கிய முக்கியத்துவம் அதற்கு உண்டு. யதார்த்தத்தைப் புறந்தள்ளும் ஆத்மார்த்திகள் இத்தகைய கவிதைகளை ஒதுக்கிவிடுவது விசனத்துக்குரியது.

மறைஞானப் பாங்கான அல்லது ஆன்மீகத் தேடல்களாக அமையும் கவிதைகள் நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகமாகும். நீலாவணன் ஒரு மறைஞானியாக (MYSTIC) வாழ்ந்தவர் அல்ல. பாரம்பரியமான சமய நம்பிக்கையின் வழிவந்தவர் அவர். சமய மெய்ஞானத்தில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. 1960 களில் நடுப் பகுதியிலிருந்து அவரது கவிதைகளில் இதன் செல்வாக்கைக் காணலாம். 1964ல் இவர் எழுதிய துயில் மரணத்தில் நிறைவு காணும் பக்குவம் பற்றிப் பேசுகிறது. பனிப்பாலை, தீ, பயணகாவியம், போகவிடு , ஓ வண்டிக்காரா ,ஒத்திகை , விளக்கு முதலிய கவிதைகள் இவரது ஆன்மிகத் தேடல்சார்ந்த கவிதைகளாகக் கருதப்படலாம். இவற்றில் கையாளப்பட்டுள்ள மொழி குறியீடு அல்லது உருவகப் பாங்கானது. அதனால் பலதளப் பொருண்மை உடையது. இவற்றுட் சில கவிதைகள் (பனிப்பாலை, போகவிடு) பாலியல் படிமங்களால் பின்னப்பட்டவை. இவை பாலியல் கவிதைகளாக அல்லது ஆன்மிகக்கவிதைகளாக விளக்கத்தக்கன.

சாதாரண சம்பவங்களையும் குறியீட்டுப் பாங்கில் கையாண்டு அவற்றில் ஓர் ஆன்மீக உட்பொருள் காணும் வகையிலும் இவருடைய சில கவிதைகள் அமைந்துள்ளன. சுமை, புற்று, விடை தாருங்கள், அஞ்சலோட்டம், பலூன்,பட்டம், முத்தக்காச்சு போன்றவை இத்தகையன. உண்மை, சத்தியம்,பற்றறுத்தல், தீவினை களைதல் போன்ற அரூபமான எண்ணங்கள் இக்கவிதைகளில் அழுத்தப்படுகின்றன. உண்மையைக் காதலிப்பவர் இறப்பதில்லை என்ற கருத்தும் இவரது கவிதை ஒன்றில் வெளிப்படுகிறது.

“உண்மை என்கிற சாந்தி இடத்திலே
உயிரை வைத்திங்கு வந்தவர் நாமெலாம்
என்னவோய் இறப்பென்று மொழிகிறீர்?
இல்லை நாம் இறவாதவர்..."

இதுவரை நோக்கியதில் இருந்து நீலாவணனின் பன்முகத் தன்மையை நாம் இனங்காணலாம். இப்பன்முகத் தன்மையே நீலாவணனின் பலம் என்றுகூற வேண்டும். வாழ்க்கையின் பன்முகத்தன்மைக்கு இயல்பாக முகம் கொடுக்கும் எந்த ஒரு படைப்பாளியிடத்திலும் நாம் இந்தப் பன்முகத்தன்மையைக் காணலாம். விமர்சகன் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தனக்குப் பிடித்ததை மட்டும் படைப்பாளியிடம் தேடுதலும், அது கிடைக்கும்போது அவனை உயர்த்துதலும்,அது கிடைக்காதபோது அவனைத் தாழ்த்துதலும் நேரிய விமர்சனத்தின் பாற்பட்டதல்ல. ஒரு நேரிய விமர்சகன் தன்விமர்சனச் சட்டத்தை ஒரு கூண்டாக அமைத்துக்கொண்டு தன்னை அதற்குள் சிறைவைத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையின் பன்முகத் தன்மைக்கும் இலக்கியத்தின் பன்முகத் தன்மைக்கும் அவன் முகம் கொடுத்தே ஆக வேண்டும். இது மாக்சிய விமர்சகனுக்கும் பொருந்தும். ஆத்மார்த்த விமர்சகனுக்கும் பொருந்தும்.

V


நீலாவணன் கவிதைகளை முழுமையாகப் படிப்போர் அவரிடம் மரபுவழிச் சிந்தனையும் புதுமை நாட்டமும் ஒருமித்து இருப்பதை அவதானிக்கலாம். இன்னும் ஒரு வகையில் சொல்வதானால் சமூக மாற்றத்தை வேண்டிநிற்கும் புத்துலக நோக்கும் பாரம்பரியமான ஆன்மிக விழுமியங்களும் ஒன்று கலந்த ஒரு கலவையாக நாம் அவரைக் காணலாம் ஆயினும், கவிதையின் வடிவத்தை,அதன் ஊடகத்தைப் பொறுத்தவரை அவர் முற்றிலும் மரபுவழிச் சிந்தனையின் வயப்பட்டவராகவே இருந்தார். அதாவது, யாப்பே கவிதையின் ஊடகமாக அமைய வேண்டும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. இது மஹாகவி, முருகையன் உட்பட இலங்கையின் நவீன முன்னோடிக்கவிஞர்கள் அனைவரிடமும் இருந்த ஒரு இறுக்கமான நம்பிக்கைதான். கொள்கை ரீதியாக இவர்கள் புதுக்கவிதை அல்லது வசனக் கவிதைக்கு எதிராக இருந்தார்கள்.
கவிதை பழைமையில் காலூன்றி நிற்கவேண்டும் என்பதே நீலாவணனின் கருத்தாக இருந்தது. பழைமையின் வழியிலேயே புதுமை முகிழ்க்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார்.

கவிதை பற்றிய நீலாவணனின் கவிதை ஒன்று பின்வருமாறு:
பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.

இளமைக் கயிற்றில் கனவைத் தொடுக்கும்' கவிதை பழைமையின் அடித்தளத்திலேயே பயிராகின்றது என்பதை இக்கவிதை கூறுகின்றது. “வழியின்பழமை அறியாது இருளில் நுழையின் வருமோ நவமே" என்று நீலாவணன் தன் வழிக் கவிதையில் கேள்வி எழுப்புகிறார். தமிழ்க் கவிதையின் மரபுத்தொடர்ச்சியை இனங்காட்டும் ஒரு கவிதை முயற்சியே அவரது வழி, யாப்புமரபை வலியுறுத்தி யாப்பை மீறிய புதுக்கவிதை மரபைச் சாடும் இக்கவிதையில்'யாப்பும் முந்தைய வழியும் தேர்ந்த மொழியறி புலவர்" களே போற்றப்படுகின்றனர். இவர்களே அறவழிப்புலவர். யாப்பை மீறும் ‘புதுமைவாணர்கள்' 'தமிழின் கவிதைக் கலையின் மகிமை' அறியாதவர்களாய், அதன் அமிர்தப் பொருளைக் கொலை செய்பவர்களாய்ச் சித்தரிக்கப்படுகின்றனர். நீலாவணன் உட்பட நமது முன்னோடிக் கவிஞர்களைப் பொறுத்தவரை யாப்பு ஒரு புனிதப் பொருளாகவே அமைந்தது.

1960 களின் நடுப்பகுதி வரையுள்ள ஈழத்துக் கவிதையை அவதானித்தால் யாப்போசை அதில் முனைப்பாக இருப்பதை நாம் காணலாம். யாப்போசையைப் பேணும் வகையில் கவிதைகள் சாபிரித்து எழுதவும் அச்சிடவும் பட்டன. ஆயினும், 60 களின் நடுப்பகுதியிலிருந்து நாம் இதில் பெரிய மாற்றத்தைக் - காண்கின்றோம். யாப்பின் வரம்புக்குள் நின்று கொண்டே யாப்போசையைத் தளர்த்தி, அதன் இடத்தில் பேச்சோசையைப் புகுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சீர், தளைக்கேற்ப சொற்களைப் பிரிக்காமை, செய்யுளின் அடி அமைப்பைப் புறக்கணித்து பொருள் அமைப்புக் கேற்ற வரிஅமைத்தல், சிறு வாக்கிய அமைப்பைப் பேணுதல், ஓசை நிரப்பியாக இடம்பெறும் அசைச் சொற்களைத் தவிர்த்தல் போன்ற உத்திகள் இதன் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. கவிப்பொருளில் ஏற்பட்ட மாற்றமும், வளர்ச்சியடைந்து வந்த புதுக் கவிதை இயக்கத்தின் செல்வாக்கும் இதற்குக் காரணம் எனலாம்.
1960களில் யாப்பு மரபுக்குள் பேச்சோசையை அறிமுகப்படுத்தியதில் மஹாகவியின் பங்கு தலையாயது. முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் இதில் முக்கிய பங்காற்றினர். நீலாவணனின் பங்கும் இதில் கணிசமானது. அவரது பல கவிதைகளில் நாம் இதனைக் காணலாம். பாவம் வாத்தியார், உறவு, வேளாண்மை போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம், இத்தொகுப்பில் உள்ள பட்டம், நெருப்பே வா,புதிர், பள்ளங்கள், எட்டாதிரு முதலியவை புதுக்கவிதையோ என்ற மயக்கத்தைத்தருவன. ஆயின் இவை சுத்தமான யாப்பில் அமைந்தவை. வரியமைப்புமாற்றம் இவற்றுக்குப் புதுக்கவிதையின் தோற்றத்தைத் தருகிறது.

நீலாவணனிடம் லாவகமான செய்யுள் ஆற்றல் இருந்தது. இலங்கையில் தமிழ்ச் செய்யுள் நடையைச் செழுமைப்படுத்திய முன்னோடிகளுள் நீலாவணனும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. பொதுவாக இலங்கையின் பிறபாகங்களைவிட, கல்முனைப் பிரதேசக் கவிஞர்கள் செழுமையான செய்யுள்நடை வல்லவர்களாக இருப்பதற்கு நீலாவணனின் உடனிருப்பும் செல்வாக்கும் ஒரு முக்கிய காரணம் என்றே கருதுகிறேன்.
நீலாவணன் அலாதியான முறையில் தன் கவிதைகளை வாசித்துக்காட்டுவார். கவி அரங்குகளில் அவரது கவிதைகள் எடுபட்டமைக்கு அதுவும் ஒரு காரணம் கவிதைகளை இனிமையாகப் பாடும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. மாலை வேளைகளில் நீலாவணைக் கடற்கரையில் மணலில் படுத்தவாறே அவர் பாடுவதைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்ததுண்டு. போகிறேன் என்றோ சொன்னாய், ஓ வண்டிக்காரா ஆகிய பாடல்களை அவர் பாடக்கேட்ட அனுபவம் அற்புதமானது.
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கப்பாடலை அவர் உணர்வோடு பாடக் கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நீலாவணன் மென் உணர்வுமிக்கவர். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .இதனால் தன் உண்மையான தோழர்கள் பலரின் நட்பையும் அவர் துண்டித்துக் கொண்டதுண்டு. எஸ்.பொன்னுத்துரை நீலாவணன் நினைவுகள் என்ற தன்நூலில் (1994) இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். நீலாவணனின் கடைசி ஆண்டுகளில் அவரை விட்டு விலகி இருக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கும் நேர்ந்தது. மஹாகவியோடும் அவர் தன் உறவைத் துண்டித்திருந்தார். நீலாவணன் தன் நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதே இதற்குக் காரணம் என்று தோன்றுகின்றது. அதுபோல் நீலாவணனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

எரித்த தீபம் அணைந்திடில் மீண்டும் இங்கு
ஏற்றிவைத்துத் தொழுவதற்காக நாம்
அறிந்திராத புதியர் அபூர்வமாய்
ஆண்டு தோறும் அவனியில் தோன்றினும்
புரிந்துகொள்ளப்படாமலும் போகலாம்
போற்றவும் படலாம் சில வேளையில்........

என வேட்கை என்ற தன் கவிதையில் நீலாவணன் எழுதினார். நீலாவணனைச் சரியாகப் புரிந்துகொள்வதும், ஈழத்துக் கவிதையில் அவருக்குரிய இடத்தை உறுதிப்படுத்துவதும் நமது கடமையாகும். இதற்கு ஒரு முன் தேவையாக அவரது படைப்புகள் அனைத்தும் நூல் உருப் பெறவேண்டும். அதேவேளையில் அவரது கவித்துவ ஆளுமையின் பன்முகத் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றும் வெளிவரவேண்டும். தமிழின் மிகச் சிறந்த கவிதைகள் சிலவற்றையேனும் நீலாவணன் எழுதியுள்ளார் என்பதை அப்போது வெளிஉலகம் அறிந்துகொள்ளும்.

எம். ஏ. நுஃமான்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்லைக்கழகம்

வெள்ளி, ஜூலை 02, 2021

இலங்கையர்கோன் அவர்களின் சிறுகதை:

மச்சாள்

என் எட்டு வயதின் ஆச்சர்யத்தால் அகன்ற கண்களுடன் பார்க்கும் பொழுது இருபது வயது கடந்த என் மைத்துனியைப் போல அழகான பெண் இந்த வையகத்தில் இருக்க முடியாது என்றே தோன்றிற்று.

ஹெலன், சீதை, கிளியோப்பாற்றா முதலிய உலகப்பிரசித்தி பெற்ற அழகிகளைப்பற்றியெல்லாம் அந்த வயதிலேயே கேள்வியுற்றிருந்தேன். அவர்கள் எல்லாம் என் மைத்துனியிடம் பிச்சை வாங்க வேண்டும்; அல்லது அவர்கள் எல்லாருடைய அழகையும் வேடிக்கை பார்க்கும் உரு விதி சேர்த்து சமைத்து விட்ட ரூபமோ அவள்! பளிங்குக் கன்னங்களின் மேல் பதறிச் சிறகடிக்கும் கருங்கண் இமைகள். அவைகளின் மேல் குவளையின் கருமையைச் சாறாக்கி வடித்து யாரோ ஒரு அழகுக் கலைஞன் மெல்லியதாக வளைந்து வரைந்து விட்டது போன்ற புருவங்கள். அவைகளின் மேல் வெண்பிறை நுதல் ....

நான் மெய் மறந்து அவளையே கண் கொட்டாமல் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். அவள் தன் நீண்டகருங் கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள். சீப்பின் பற்கள் சிதறிவிடும்படி அத்தனை அடர்த்தியாகவும் இருந்தது அவளுடைய கூந்தல்.

“என்னடா , அப்படிப் பார்க்கிறாய்?”

நான் மாங்காய் திருடுகையில் கையுங் களவுமாய்ப் பிடிபட்ட சிறுவன் போல் அலறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றேன். என் சேப்பில் இருந்த கண்ணாடி'மாபிள்’ கள் அலங்கோலமாகச் சிமெண்ட் நிலத்தில் விழுந்து சிதறின. அத்துடன் என் கனவும் கலக்கமும் கலைந்தன.

''ஒண்டும் இல்லை."

"பின்னை ஏன் அப்பிடி என்னை விழுங்கிற மாதிரிப்பார்த்துக் கொண்டிருந்தாய்?"

" உம்மை எப்ப நான் பார்த்தனான்? அந்தச் சுவரிலை இருக்கிற பல்லியை அல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்."

“இல்லை, என்னைத்தான் நீ பார்த்தாய் !"

“உம்மிலை என்ன கிடக்குது பார்க்கிறதுக்கு ! ஓகோ,அப்பிடியோ உமக்கு யோசனை?"

”ஏன்டா,நான் வடிவில்லையே?”

சிறுவனாகிய என்னுடன் எதுவும் பேசலாம் என்ற எண்ணம் போலும் அவளுக்கு; தான் அழகானவள் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. அத்துடன் அதைக் குறித்து இறுமாப்பும்......

"சொல்லேன்டா, நான் வடிவில்லையே?"

“எனக்கு அதெல்லாம் தெரியுமே?"

”இந்த வயதிலை சினிமாப்படம் எல்லாம் பார்க்கிறாய். நாவல்ஸ் புத்தகம் எல்லாம் படிக்கிறாய். இது மட்டும் தெரியாமல் கிடக்கே உனக்கு? சொல்லு மச்சான்." என்று குழைந்தாள். அவள் என்னைத் திடுக்கிட வைத்ததற்காக அவள் மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.

”அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்? மச்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார்; அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு அவர் நல்லாய்ச் சொல்லுவார்."

"போடா! குரங்கு, சனியன் ! இனி அடிதான் வாங்கப் போறாய் என்னட்டை!"

அவள் கன்னங்கள் சிவந்தன. நாணம், கோபம், மகிழ்ச்சி எதுவோ நான் அறிந்தேனோ? அவள் தலை சீவிக் கொண்டை போட்டு விட்டபடியால், கண்ணாடியை நகர்த்தி விட்டு மான் போல் துடித்தெழுந்து நின்றாள். அவள் கையிலே நீளமான தடித்த சீப்பு இருந்தது. நான் சிறிது தூரத்தில் போய் விலகி நின்று கொண்டேன். சிறுவர்களுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி, அவள் மனத்தை மேலும் கிளறிவிட முனைந்தேன்.

“சும்மா கணக்கு விடாதையும், மச்சாள் ! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக்கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ?"

அவள் திடீரென்று சிரித்து விட்டாள்.

”அட குரங்குக் குட்டி! உனக்கு இதெல்லாம் எப்பிடியடா தெரியும்? சரி வா, இவ்வளவு நேரமும் மாபிள் அடிச்சுக் களைச்சுப் போனாய், இனி கால் முகம் கழுவிப் போட்டு வந்து சோத்தைத் தின்!" அவள் பேச்சை மாற்ற முயன்றாலும் நான் விடவில்லை.

“அதுகும் தெரியும், இன்னும் ஒரு மாதத்தையால், என்ரை அண்ணன் உம்மைக் கலியாணம் முடிக்கப் போறார் எண்டதும் தெரியும்!''

“அட குரங்கே........!"

அவளுடைய குரலில் கோபம் இல்லை. எல்லை இல்லாத ஒரு குதூகலம்தான் தொனித்தது. தனிக் கறுப்பு வளையல் அணிந்த தன் வெண்ணிறக் கை ஒன்றை மணிக்கட்டுடன் மடித்து தன் துடி இடையில் வைத்துக்கொண்டு என்னைத் தன் அகன்ற கருவிழிகளால் உற்று நெடு நோக்கு நோக்கினாள்.

உண்மையில் என்னைத்தான் நோக்கினாளோ அல்லது தன் மனக் கண்களால் என் முகச் சாயல் கொண்டிருந்த...... ?

அவள் நோக்கு எனக்குச் சங்கடமாக இருந்தது. என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

"மச்சாள், எனக்குப் பசிக்குது. இப்ப சோறு தாறீரா அல்லது.....”.

அவள் மோனம் கலைந்தது.

“வா” என்றாள் அன்புகனிய, “முட்டைப் பொரியலும் சோறும் தாறன்......”

அவள் பெயர் கர்ணகை ; என் பெயர்...? அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.

என் அண்ணாவின் பெயர் சண்முகதாஸன். சுருக்கமாக எஸ்.தாஸன் என்று வைத்துக் கொண்டிருந்தார். அவர் பீ. ஏ. பாஸ் பண்ணிவிட்டு அடுத்த ஊரில் ஒரு கலாசாலையில் உபாத்திமைத் தொழில் செய்து கொண்டிருந்தார்.

கர்ணகை சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட கன்னி; தந்தையின் கண்ணுட் கருமணி. அவளுக்காக அவர் மறு விவாகமே வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் என்னுடைய அம்மாவின் ஒரே தமையன். அவர் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். அதிற் கிடைத்த வேதனம் அவர்கள் இருவருக்கும் போதுமானது. தன் மகளுக்கென அதில் மீதம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணமாக வங்கியில் போட்டு வைத்திருந்தார். அத்துடன் வீடும் வளவும் சிறிது வயல் நிலமும் அவருக்குச் சொந்தம்.

எல்லாம் தன் மகளுக்கு என்றே வைத்திருந்தார். எங்கள் வீட்டில் என் அம்மா வைத்தது தான் சட்டம். என் தந்தை காசு தேடும் யந்திரம்...அவ்வளவு தான். என் தாய் எங்கள் வீட்டை ஒரு சிற்றரசி போல ஆட்சி செய்த படியால் சிறு வயதில் எனக்கு என் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை.

அவர் எனக்கு என்றும் தூரத்துப் பச்சை...... ஏதோ காற்சட்டை, கோட், டை, சப்பாத்து, தொப்பி முதலியன காலையில் அணிவார். பிறகு மாலையில் வந்து அவைகளைக் களைந்து வைத்துவிட்டு ஒரு மலிந்த எட்டு முழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு பத்திரிகை பார்ப்பார். சம்பள நாளன்று தம் கையிற் கிடைத்த பணத்தை என் தாய் கையில் வைத்துவிட்டு, வீட்டு விவகாரம் எதிலும் சிரத்தை இல்லாமலே இருந்து விடுவார்.

எங்களில் எல்லாமாக எட்டுச் சகோதரர்கள், பெண்கள் அறுவர், ஆண்கள் இருவர். அண்ணன் தான் எல்லாரிலும் மூத்தவர். நான் கடைக்குட்டி. இடையில் ஆறு பெண்கள். என் அக்காமார் என் காதுகளைப் பிய்த்து எடுத்து என்னைத் தங்களுடைய சேவகனாக நடத்தினார்கள். நூற்பந்து வாங்கி வா, ஊசி வாங்கி வா, சட்டைத் துணிவாங்கி வா, அது வாங்கி வா, இது வாங்கி வா என்று எல்லாம் ஏவி என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார்கள்…..

அதனால் நான் என் கர்ணகை மச்சாளிடம் போய் அண்டுவேன். என்னுடைய அண்ணனுக்கும் கர்ணகை மச்சாளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறதே, அதன் பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடப் போகிறாளே என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டதும் என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் துள்ளி , என் அக்காமாருக்கு இதனால் ஒரு பாடம் படிப்பிக்கலாம் என்று எத்தனையோ குழந்தைக் கனவுகள் எல்லாம் கண்டுவிட்டேன். அதற்கிடையில் என்னுடைய அண்ணன் உபாத்திமைத் தொழிலில் இருந்து ஏதோ ஒரு சோதனை பாஸ்பண்ணி ஓர் அதிகாரப் பதவிக்குப் போய்விட்டார். அன்றும் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று அலுத்துப் போய் வந்த மாமாவுக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். நான் அவளருகிற் போய் அமர்ந்து கொண்டேன்.

“குடிடா மச்சான், தேத்தண்ணி!''

"மச்சாள், உமக்கு ஒரு புதினம் தெரியுமா?”

”அட குடிச்சுப் போட்டு கதையன். இன்னொரு ரஷ்யாக்காரன் சந்திர மண்டலத்திற் போய் சேர்ந்திட்டானோ அல்லது, அல்லது...... என்ன இவ்வளவு அவதிப்படுகிறாய்! குடியடா தேத்தண்ணியை!”

”மச்சாள், இந்தப் புதினம் கேள்விப்பட்டீரோ? தெரியாது போலக் கதைக்கிறீர். என்ரை அண்ணன் பெரிய சோதனை பாஸ் பண்ணிப் போட்டார். அவருக்கு இனிமேல் மாமாவைப் போல வாத்தி வேலை இல்லை; இனிப் பெரிய கவுண்மேந்து உத்தியோகம்."

”என்னடா சொல்லுகிறாய், குரங்கா!"

“இனிமேல் உம்மடை தேத்தண்ணி குடிக்கமாட்டேன். பெரியண்ணன் வந்து உம்மைக் கலியாணம் முடிச்சு எங்கடை வீட்டை கொண்டுவந்த அதன் பிறகு உம்மடை கையாலை ஒரு தேத்தண்ணி தந்தால் குடிப்பன். இப்ப அதெல்லாம் ஏலாது.”

”போடா சனி, போடா குரங்.., போடா மூதே! இதிலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலை வாங்கப்போறாய் என்னட்டை!”

“என்ன மச்சாள், உமக்குச் சந்தோஷமில்லையா?"

“போடா?”

அவளுடைய மென்மையான கன்னங்கள் மறுபடி திடிரென்று சிவந்தன. அவள் குங்குமம் அணிந்திராவிட்டாலும் பிறைமதி யொத்த அந்த நெற்றி குங்குமம் போலச் சிவந்துவிட்டது. அவள் உடனே எழுந்து என் மாமாவான தன் தந்தைக்குத் தேநீரும் பலகாரமும் கொண்டு சென்றாள். வெட்கம் என்னையும் பிய்த்துத் தின்றது. நான் ஓடிவிட்டேன்.

ஆனால் அந்த மணம் நடக்கவில்லை. என் தந்தைக்கு வாய் இல்லை. என் தாய்க்குப் பணமோகம். என் அண்ணாவுக்கு ஆங்கில மோகம். இரக்கமற்ற என் ஆறு அக்காமாருக்கும் அண்ணனுடைய பதவிக்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற ஒரு மூட எண்ணம். ஆங்கிலப் படிப்பு, பவிசு...

ஒரு நாள் என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவிடம் வாதாடினார். பேசினார். எல்லாம் முதன் முறையாகத்தான், நான் அறிந்தமட்டில்! அவர் அழுதார். என் குடும்பத்தவர் எல்லோருமாகச் சேர்ந்து அவர் வாயை அடக்கிவிட்டனர். ஏழு பெண்கள் சேர்ந்து பேசும்பொழுது வயோதிபராகிய ஒரு ஆண் எம்மாத்திரம்?

அன்று என் தந்தைக்காக இரங்கினேன், உடனே கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று குங்குமம் அணிந்திருந்தாள். தன் நீண்ட கூந்தலை வாரிமுடித்து அதிலே மணம் கமழும் மல்லிகையும் அணிந்திருந்தாள். - அது ஒரு தனி அழகு. எட்டு வயதுச் சிறுவனாகிய எனக்குக்கூட அந்த அழகு புலப்பட்டது. நான் ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டேன்.

யானைத் தந்தத்தால் படைக்கப்பட்ட பதுமைபோல அவள் வீட்டு வாசலிலே நின்றாள் ; அந்த வீட்டை ஆளும் திருமகள் போல நின்றாள்.

ஏதோ கூறவென்று ஓடிப்போன நான் மலைத்து நின்றுவிட்டேன்.

அவள் அதிகாரமாகவே பேசினாள்.

”என்னடா!”

“ஒண்டுமில்லை மச்சாள்.”

”என்ன என்னவோ கிளிச்சுக் கொட்டுகிறது போலை ஓடிவாறாய்! மாமி மச்சாள்மார் எல்லாரும் நல்லாயிருக்கினமோ?”

“ஓம் மச்சாள்!"

“என்னடா என்னவோ செத்த வீட்டுக்குச் சொல்ல வந்தவன் போலை ஒரு மாதிரிக் கதைக்கிறாய்.பொறு மச்சான்; இப்ப ஐயா வந்திடுவர். நீயும் அவரோடை இருந்து கொழுக்கட்டையும் வடையும் தின்னன்.”

”ஓம் மச்சாள்.”

ஆனால் நான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்லுவேன்? என் நா எழவில்லை. என் குழந்தை மனம் இடிந்து விட்டது.

“எனக்கு வீட்டிலை வேலை கிடக்குது மச்சாள்” என்று அழாக்குறையாகச் சொல்லிவிட்டு எடுத்தேன் ஓட்டம். என்னுடைய அண்ணனுக்கு எங்கோ ஓரிடத்தில் கலியாணம் பேசி முடித்து வைத்துவிட்டாள் அம்மா.

என்னுடைய பிறவூர் மச்சாள் வந்தாள். என்னுடைய குழந்தை மனத்திற்கு அசிங்கத்தின் சின்னமாகவே அவள் தோன்றினாள். கன்னம் கரேலன்று கொழுத்திருந்த முகத்திலே கறுத்தத் தோலை வெள்ளத் தோலாக்க முயலும் பவுடர்ப் பூச்சு, கையிலே விலை உயர்ந்த ஒரு கைக்கடிகாரம். கழுத்திலே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, அதிலே தான் தாலியும் கோத்துக் கிடந்தது. பின்னி முடிந்த கூந்தலிலே வைத்துத் தொடுத்த முடிமயிர் புறம்பாகத் தெரிந்தது. அவளுடைய இடையிலே மெலிவோ மென்மையோ இல்லை. உடலிலே அழகில்லை. குரலிலே இனிமை இல்லை. மனத்திலே அன்பில்லை..

எனக்கு உடனே வீட்டைவிட்டு ஓடி விடவேண்டும் போலத் தோன்றியது.

எங்கே ஓடுவேன் நான்?

என் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் என்றும் போலச் சந்தோஷமாகவே இருந்தாள்.

யாரோ ஒரு தெய்வச் சிற்பி தன் வல்லமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அடுக்கிவிட்ட முத்து வரிசையை வளைத்து மாணிக்கக்கரை கட்டிவிட்டது போன்று இருந்தது அவள் புன்னகை.

எதற்கும் கலங்காத வீரத்தமிழ் மகள் போல் என்னைக் கண்டவுடன் அவள் கண்கள் சிரித்தன.

"வாடா மச்சான், இஞ்சை வந்து கொஞ்சம் கலியாணவீட்டுப் பலகாரம் சாப்பிடேன்!”

“என்ன மச்சாள், எனக்கெண்டே வச்சிருக்கிறீர் எங்கடை கலியாண வீட்டுப் பலகாரம் எல்லாம்…..” என் குரல் தடைப்பட்டு விம்மி நின்றது.

எனக்கு அழுகை.

“அதிலை என்னடா மச்சான்? நீ எண்டாலும் என்னைக் கலியாணம் முடிக்க மாட்டியோ?"

பகலெல்லாம் தண்ணொளியை நல்கிவிட்டு மேல்வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்று பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெருவெள்ளம் கொண்டு பாய்வது போல அவளுடைய அழகிய கருங் கண்ணிமைகள் அறுந்து சிதறும்படி கண்ணீர் ஊற்றுப் பாய்ந்து புரண்டு வழிந்தது....... ஆ! அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள்!

எடுத்தேன் ஓட்டம்! என் கண்களிலும் கண்ணீராறு! ரத்த ஆறு நெருப்பாறு!

என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசினாள். .அப்பொழுது எனக்குப் பத்து வயதாகி விட்டது.

”ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லையாம்?" ”ஆர் சொன்னது?”

“உன்ரை கொண்ணன் தான் சொல்லுறான்.”

“எந்த மச்சாள்?”

"அதென்ன கேள்வி? ஏன் கொண்ணன்ரை பெண்சாதிதான். அல்லது வேறேயும் உமக்கொரு மச்சாள் இருக்கோ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக்கேல்லை!”

”ஓ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன்பாட்டுக்கு மூத்தக்காவோடை இங்கிலீசையும் பேசிக்கொண்டு திரியிறா. இல்லை, கேக்கிறன் நீங்கள் எண்டாலும் யோசிச்சியளோ அம்மா, எனக்குக் கொஞ்ச இங்கிலீசு படிப்பிச்சு வைக்க வேணும் எண்டு. அது எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித் தெருவழிய திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன?அக்காமாருக்கு என்ன? என்ரை அண்ணன்ரை பெண்சாதியோடை பேசேல்லை எண்டதுதான் உங்களுக்குக் குறையாய்ப் போச்சு!”

”ஏன் அவ என்ன உம்மடை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ, அல்லது கொப்பற்றை பவீசுக்குக் குறைஞ்சு போச்சோ! அதுதான் நீங்கள் இரண்டு பேரும் அவவோடை பேசிறயில்லை!”

அம்மா, எனக்கு அப்பிடி இங்கிலீசு பேசத் தெரியாது. சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி என்னட்டை கதைக்கிறியள்? என்னை என் பாட்டிற்கு விட்டிட்டால் படிச்சுச் கிடிச்சு ஒரு மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விருப்பமில்லை யெண்டால் இப்ப சொல்லி விடுங்கோ நான் போறன்.”

“எங்கேயோ போகப் போறாராம்!”

“ஏன் போகப்படாது?”

அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது.அவள் அலறினாள். குளறினாள். என் தந்தையைக்கூட ஏசினாள், இப்படி என்னை ஒரு தாய் சொல்லை மதிக்காத மகனாக வளர்த்து விட்டார் என்று! என்னுடைய தாய் மீண்டும் பேசினாள்.

“டேய் ! பார்த்தியா, உன்ரை மச்சாள் கொண்டு வந்த சீதனத்தை! அவளின்ரை நகைப் பெட்டியை நீ எப்பவெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய்!''

“இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்லுறியள்.அம்மா?”

“நீயும் அப்பிடி ஒரு பொம்பிளையை முடிக்க வேணுமெண்டது தான் உன்ரை காலத்திலை.''

“அம்மா நான் சொல்லுறன் எண்டு கோபிக்க வேண்டாம். உங்களுக்குக் காசு தானே தேவை? ஆனால் என்ரை மச்சாளின்ரை முகத்திலை இருக்கிற வயிரங்களை - வைடூரியங்களை - மாணிக்கங்களை எந்த நகைப் பெட்டியிலை காணலாம்? அல்லது அவவின்ரை கையிலை இருக்கிற கறுத்த வளையலுக்குப் போதுமோ இந்த நகையெல்லாம்….?”

”என்னடா உளறுகிறாய்?"

“அம்மா, நான் உளறவில்லை. நீங்கள் எங்கடை அண்ணன் கர்ணகை மச்சாளை முடிக்கிறது எண்ட சம்மதத்தோடை இருந்து போட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக்கும் காணிக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வடிவும் அன்பும் இல்லாத ஒரு பொம்பிளையை வீட்டிலை கொண்டு வந்துசேர்த்தியளே!"

எனக்கு மறுபடி அழுகை!

விம்மி விம்பி அழுதேன். என் கர்ணகை மச்சாளின் இயற்கை லக்ஷ்மீகரமும் அழகும் என் அண்ணனுக்கும் இந்த வீட்டிற்கும் கிட்டாமல் செய்து விட்டாளே என் தாய் என்று. அதன் பிறகு என் தாய் இரக்கமற்ற ஒரு தாடகையாகி விட்டாள்.

“ஓகோ அப்படியா விஷயம்? நீரும் உம்மடை அப்பரோடை சேர்த்தியோ? அப்படி எண்டால் அந்த கர்ணகிப் பத்தினியை ஓண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடுச்சுக் கொண்டு வந்து இந்த வீட்டிலே வைச்சுக் கும்பிடுங்கோ! அவள் என்ரை அண்ணற்றை மேள்! ஆனால் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கனவிலையும் எண்ணயில்லை !”

அரக்கி!

எனக்குக் கண்ணீர் மாலைகள் ......

"என்ன அழுகிறீர்? ஹூ! உம்முடைய மூக்கிலை சளிவடியுது! அதைப் போய் துடையடா! அதின் பிறகு முகத்தைக் கழுவிப்போட்டு இன்னும் பாக்காத சினிமாப்படம் இருந்தால் அதையும் போய்ப் பார்!''

அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ணனுடையது.

அம்மா தன் மார்புச் சேலையைச் சரி செய்து கொண்டு அவசரமாகத் தன் தலைமயிரையும் சரி செய்து கொண்டாள் ........

,அதன் பிறகு என் அண்ணன் உள்ளே வந்து,"என்ன கூட்டாளி அழுகிறியோ?" என்றார்.

"ஒண்டுமில்லை.''

“என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?"

"வேண்டாம்.”

“இனி. நீ கிறிக்கற் விளையாடிப் பழகவேணும், காருக்குள்ளை இருக்குது 'பாட்', 'விக்கட்', 'பந்து' எல்லாம்"

அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்துவிட்டாள். அம்மா அவளை வினயமாகப் பற்களைக் காட்டி வரவேற்றாள். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் பற்களை மட்டும் காட்டத் தெரியும்…..

அண்ணன் என் தலையைத் தடவினார் அன்பாக! அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை.

தமிழ் தெரிந்திருந்தால் தானே, அந்த இழுமென் மொழியைப் பேசுவதற்கு!

அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினாள். எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது.

"யார் மூக்குச் சிந்தி அசிங்கமாக நிற்கும் இந்தப் பையன்?"

அண்ணன் மௌனம்!

யார்? உங்கள் வீட்டு வேலைக்காரப் பையனா? ஏய் போய்!”

அதற்குள் என் மூத்த அக்கா குறுக்கிட்டு விட்டாள் ஆங்கிலத்தில்!

அது எங்கள் தம்பி ஆக இளையவன் மச்சாள், வாருங்கோ உள்ளே.

"அம்மா தன் பற்களைக் காட்டிக் கொண்டு பின்தொடர எல்லோரும் உள்ளே போய்விட்டார்கள்.

அண்ணனுடைய கார்ச் சாரதி ஏதோ ஒரு பார்சலைக் கொண்டுவந்து என் கையில் வைத்தான்! இது ஐயாவின் தம்பிக்கு! உடனே அவரிடம் கொடுக்க வேண்டும்!

நான் உடனே அதை மூலைக்குள் எறிந்துவிட்டேன். என் மனம் வேதனைப்பட்டது.

உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஓடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது; ஓடினேன்.

அவள் ஏதோ கண்ணீருக்கள் மூழ்கித் தலைவிரி கோலமாகக் கிடந்து புலம்பிக்கொண்டிருப்பாள் என்ற மனப் பதற்றத்துடன் ஓடினேன். என் கற்பனையினால் என் கண்களில் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு…..

ஆனால்….ஆனால்......!

அரசகுமாரிகள் அழுவதில்லை. அது அவர்கள் அழகிற்கும். மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக்குப் போலும்!

அவளுடைய கண்ணுக்கு மை. கன்னத்திற்கு றூஜ். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை ஏதோ இறுமாப்பில இவை எல்லாம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்று முதலில் யோசித்தேன்.

அருகில் சென்று பார்த்தேன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னால் பதறி நின்றேன்.

அவள் சிரித்தாள்.

அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக்குறுகி நாணும்படி என் சேட்டைப் பிடித்து இழுத்து விட்டாள்.

“என்னடா மச்சான், அழுகிறாய்?"

“ஒண்டும் இல்லை!”

“இஞ்சை வா ! கொஞ்சம், ‘சொக்கிலேட்டு’த் தின்; வாடா!”

என்னை அணைத்துக் கொண்டு உள்ளே சென்று என் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள்.

இப்பவே எல்லாம் திண்டு முடிக்க வேணும் என்று பணித்தாள். தின்றேன்....... இவ்வளவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ணனும் எங்கள் வீடும் இழந்து விட நேரிட்டு விட்டதே என்று எண்ணினேன்.

சுவைத்து விழுங்கிய 'சொக்கலேட்டு' தொண்டையில் சிக்கிக்கொண்டது. அவள் என் தலையில் தட்டினாள், நெஞ்சையும் முதுகையும் தடவினாள்.......அவள் அன்பு......

மீண்டும் என் கண்களில் முத்துமாலை........

“என்னடா மச்சான், இப்ப மாபிள் அடிக்கிறதை விட்டு கிறிக்கட் அடிக்கத் துவங்கி விட்டியாம்?''

அதற்குள் என் கண்ணீரைச் சமாளித்து விட்டேன்.

“உமக்கு ஆர் இதெல்லாம் சொன்ளது?”

தனிக் கருவளைக்கவின் தந்த தன் வெள்ளை மணிக்கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள்.

“ஒருத்தரும் இல்லை!"

ஆனால் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்து கொண்டு விடுவார்கள் என்ற உலக அனுபவம் அந்தச் சிறுவயதில் எனக்கில்லை......

என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒருநாள் மாலை நான் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் தனியே வந்து பேசினாள்.

”என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபுவுக்கு?"

"என்ன அம்மா?”

“மச்சாளுக்குக் கலியாணமாம்.”

“எந்த மச்சாள்?”

“ஏன் உன்ரை மச்சாளுக்குத்தான்!”

”எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்; முதலில் அண்ணன் பெண்சாதி…."

“வாயைப் பார். வாயை! என்னட்டை அடி வாங்கப் போறாய், கண்டியோ?”

”எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான் தான் எப்பவோ வீட்டை விட்டுப் போறன் எண்டு சொல்லிப் போட்டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் என்ன?”

என் கண்களில் கண்ணீர் உப்பாகிக் கரிந்து நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டினேன்.

அம்மா, என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என் தோள் மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரை மயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்கமடைந்தவள் போல மெதுவாகக் கண்ணீர் கலந்த குரலுடன் பேசினாள்.

“நீ கோவிக்கிறது சரியடா மேனே! உன்ரை கர்ணகை மச்சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்க வேணும்; அந்தநேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந்திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி...”

நான் பொங்கித் துளித்த கண்ணீரை அடக்க முயன்றபடி புத்தகத்தின் பக்கங்களை ஓரு பைத்தியகாரன் போலப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

சிறிது அன்பு எத்தனை கண்ணீரை வருவித்து விடும் என்று வியந்தேன்…..

“இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில் கலியாணமாம்!"

எனக்குச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது.ஆனால், அழுகைதான் வந்தது. புத்தகங்களைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினேன்.

மங்கிய வானத்திலே மதி, மங்கித் தவழ்ந்தது. தென்னை மரங்களின் தலைகளிலே காற்றின் ஓலம்!

தொலைவிலே இரட்டைக் கூகைகளின் குரல்…மேளவாத்யம் “ஜாம் ஜாம்'' என்று ஒலிக்க எங்களுடைய மாமாகூட எழுந்து நடமாடித் திரிகிறார். தன் பொங்கும் வயிற்றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக் கொண்டு! என்னுடைய அண்ணனும் அவருடைய மனைவியும் அவருடைய புது மோட்டார் வண்டியிலே வந்தார்கள்.

என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தான். புண்ணியத்தின் அருகில் பாவம் இருப்பது போல. அத்துடன் என்னுடைய அண்ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும்படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதய சூரியனின் புறத்தே கார்முகில் நிற்பது போல. அம்மாவும் நின்றிருந்தாள் தன் நரிப்பார்வையோடு….

எனக்கு எங்காவது சென்று அழவேண்டும் போல இருந்தது.......

மறுநாள் மணப்பெண்ணாகிய என் மச்சாள் ஒரு அறையில் தனியே இருந்தாள். இணைக் கூறையும் அணிந்துகொண்டு.......!

அவள் அழுதுகொண்டிருப்பாள் என்று அஞ்சி நான் வெளியே நின்றேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என்னைக் கண்டவுடன், ”ஏய் மச்சான்” என்று ஏதோ காணாததைக் கண்டுவிட்டது போலக் குரல் கொடுத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.

அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங்கள் உண்ணத் தந்தாள். என்னோடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அந்த நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக்குற்றது. ஓடிவிடலாம் என்று எழுந்தேன்.

அவள் விடவில்லை. என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படியே தன் முன்னால் அமர்த்திக் கொண்டாள்.

“ஒரு இடமும் போகயில்லை மச்சாள்! சும்மா வெளியாலை போய் விளையாடப் போறன்!”

“இரடா மச்சான்! நல்லாய் வயிறு முட்டத் தின்னன்ரா!”

அவளைக் கேலி செய்யவேண்டும் என்று எண்ணினேன்.

“என்ன மச்சாள், ராத்திரி மணவறையிலை கூறைச்சீலையும் உடுத்து நகை எல்லாம் போட்டுத் தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்தீரே! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கைபோச்சுது?”

“போடா குரங்கே, சனியன், மூதேசி!”

அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்து விட்ட மரகதங்கள் போல் மின்னின...... கண்ணீர்…?

ஆனால் அரசிகள் அழுவதில்லையே!