பக்கங்கள்

வெள்ளி, டிசம்பர் 03, 2021

உயர்ந்த மொழி – தாழ்ந்த மொழி

சார்ல்ஸ் பொன்னுத்துரை சர்வன்



(இங்கிலாந்தின் லண்டனில் இருந்து வெளிவரும் Colombotelegraph.com என்ற இணைய சஞ்சிகையில் வெளியாகியுள்ள ”ஏகாதிபத்தியம், சித்தாந்தம், கலை” (Imperialism, Ideology & Art) என்ற மிக நீண்ட கட்டுரை ஒன்றின் சில பந்திகள் மட்டும் கீழே சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு: ந. சுசீந்திரன்)


போலந்து நாட்டைச் சேர்ந்த லுட்விக் லைய்சர் ட்சாமென்ஹொவ்(Ludwik Lejzer Zamenhof) என்பவர் 1887 ஆம் ஆண்டலவில் எஸ்பரன்டோ(Esparento) எனும் ஒரு மொழியினை உருவாக்கி, அது உலகில் எல்லோராலும் பேசப்படக்கூடிய ஒரு துணை மொழியாக; ஒரு மாற்று மொழியாக மாறும் என்று திடமாக நம்பினார். ’எஸ்பரன்டோ’ என்பதே "நம்பிக்கை கொண்ட நபர்” என்ற அர்த்தம் தரக்கூடியது. அந்த நம்பிக்கை வீண்போனது. அதனை உருவாக்கியவர் எதிர்பார்த்ததைப்போல போல எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், ஆங்கில மொழியில் ஏதோவொரு எஸ்பரன்டோ இன்று உருவாகி நம்மிடையே வாழுகின்றது. இப்பொழுதெல்லாம் தாய் மொழி என்றோ(mother tounge) அல்லது சொந்த மொழி (native language) என்றோ குறிப்பிடப்படுவதில்லை.

ஒரு தனி நபருக்கு அல்லது ஒரு குறித்த குழுவிற்கு 'முதல் மொழி' (first language)அல்லது இரண்டாவது மொழி(secound language) என்றே இப்பொழுது மொழிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இது பிறப்புரிமை சார்ந்தல்ல. மாறாக ஒருவர் அதி உச்சமாக எந்த மொழியில் தன்னை வெளிப்படுத்த முடிகிறதோ அதனையே முதன் மொழி என்கிறோம். சிலருக்கு இரண்டு மொழிகள் முதன் மொழிகளாக இருக்கக்கூடும். இவற்றை எம் மனசில் இருத்தி மேற்கொண்டு நோக்கினால், இன்று உலகின் பலபாகங்களில் உள்ள மனிதர்களுக்கு ஆங்கிலம் முதலாவது மொழியாகி நிற்கின்றது. கிறீஸ்த்தவ மதம் ஒரு உலக மதம் என்றாகிவிட்டது. அப்படிச் சொல்லும்போது, தனித்த ஒரு நாடோ, மக்கள் கூட்டமோ அல்லது குழுவோ அதற்கு உரிமை பாராட்டமுடியாதபடி ஆகிவிட்டது. நிலைமை எப்படிமாறினாலும் ஆங்கில மொழி அத்தகைய ஒரு நிலையை எய்தவில்லை. "ஆங்கிலம்" என்பது ஒரு கூட்டம் மக்களையும் அவர்கள் பேசும் மொழியையுமே இப்பொழுதும் குறித்து நிற்பதைப் பலவேளைகளில் காண்கிறோம். (இந்தியர்கள் என்ற மக்கள் இந்திய மொழி என அழைக்கப்படும் ஒரு மொழியைப் பேசுவதில்லை என்பதறிக.) நிற்க.

ஆங்கிலத்தினை 'சொந்த மொழி அல்லது தாய்மொழி பேசுபவர்கள்' என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் அதனைத் தாய்மொழித் திறத்துடன் பேசுகின்றனர் என்றும் சொல்வதற்கில்லை. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றும் இங்கிலாந்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தவன் என்ற வகையில், என் அனுபவத்தினையொட்டி இதனை உறுதியாகச் சொல்கிறேன்.

ஜேம்ஸ் ஜாய்ஸின் ’A Portrait of the Artist as a Young Man’ (’கலைஞன் இளைஞன் போல் ஒரு பிரதிமை’) என்ற நூலில், ஒரு பாத்திரம் சொல்லும்: “இன்று நான் பேசிக்கொண்டிருக்கும் மொழி நேற்று அவனுடையதாக இருந்தது.” ஆனால், நாம் பேசும் மொழி என்னுடையது என்பதற்கு முன் அவனுடையது” என்ற ஒருவகைப் பாதுகாப்பின்மையும் தாழ்வு மனப்பான்மையும் இப்போது பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறமுடியும். சினுவா ஆசபே(Chinua Achebe) தனது ஆபிரிக்க எழுத்தாளனும் ஆங்கில மொழியும் (‘The African Writer and the English Language’) என்ற கட்டுரையில், தான் ஆங்கிலத்தினை ஒரு தாய்மொழிக்காரைப் போல எழுத விரும்பவில்லை என்பதை வலியுறுத்தினார். அவர் ஒரு ஆப்பிரிக்கராக, ஒரு நைஜீரியராகவே எழுத விரும்பினார். "உலக மொழி என்ற அந்தஸ்தினை அது பெற விரும்பினால், பல வேறு மனிதர்களின் பலதரபட்ட பயன்பாட்டிற்குமானது என்ற விலையினைக் அம்மொழி கொடுத்துத்தான் ஆக வேண்டும்” என்றே மேற்சொன்ன இதே கட்டுரையில் சினுவா ஆசபே குறிப்பிடுகின்றார்.

'காலனித்துவ விமர்சனம்'(Colonial Critic) என்ற தலைப்பில் எழுதப்பட்ட மற்றொரு கட்டுரையில், ஆசெபே எழுதுகின்றார்: ”ஒவ்வொரு மக்களையும் தங்கள் முதுசங்கள், விழுமியங்கள், தொன்மங்கள், சீதனங்களை போன்றவற்றைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவற்றுள் மனிதம் என்பதே அதனது பலவகைக்கும் அதேவேளை ஒவ்வொரு தனித்துவத்திற்குமான விலைமதிப்பற்ற கொடையாகும்.

ஆங்கிலத்தினை முதன்மொழியாக் கொண்டிராதவர்களுக்கு மத்தியில் இப்பொழுதுங்கூட, சில வகை ஆங்கிலமே உயர்ந்தது என்று கருதும் மனத்தாழ்வு இருக்கின்றது. சினுவா ஆசபே சொல்வார்: ”நான் கடவுளாக இருந்தால், இவ்வகைத் தாழ்வுச் சிக்கல் கொண்டிருப்பதையே பாவச் செயல்களைல் மிக மோசமான பாவச் செயலாகப் பிரகடனப்படுத்துவேன்”. துருக்கிய நாட்டு எழுத்தாளர் சுல்பூ லிவானெலி (Zülfü Livaneli) அவர்கள் எழுதிய மனப்பயம் (Disquiet) என்ற புதினத்தில் கதைசொல்லியின் குரலாக இப்படிக் காணப்படும் : “படைத்தல் முதலான தொழில்களை செய்து சோர்வடைந்த கடவுள்கள் சற்றே ஓய்வெடுக்கச் சென்று விட்டனர். இந்த இடைக்காலத்தில் மனிதகுலத்தின் அவல ஓலங்களும், வலியின் முனகல்களும் பலப்பல நூற்றண்டுகளாக் கேட்கப்படவுமில்லை. கிரகிக்கப்படவுமில்லை!


பழங்காலத் தொன்மங்களிற் காணப்படுவது போல இப்பொழுதெல்லாம் அவதாரங்களும் ஆபத்பாந்தவர்களும் தோன்றி இந்த மனிதகுலத்தைக் காப்பாற்றப்போவதில்லை. மனிதரே தோண்டிய மரண குழிகள்தான் துன்பங்களும் துயரங்களும். அவற்றின் நிவாரணிகளும் நாமேதான். உலகு சிறக்கும் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. குணப்படுத்த முடியாதவை என்றால், குறைக்க வேண்டும்: பின்னடைவையும் தோல்வியையும் எதிர்கொண்டு இறுதிவரை போராடுவதில்தான் வாழ்வின் மகத்துவம் இருக்கிறது.

https://www.colombotelegraph.com/index.php/imperialism-ideology-art/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக