(இக் கட்டுரை இலங்கை அலை (இதழ்-17, சித்திரை -ஆனி 1981) சஞ்சிகையில் வெளியாகியது.)
இந்தியத்தமிழர்களும் வாக்குரிமையும்”ஏனென்று கேட்க நாங்கள் யார்?நாங்கள் உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள்”
(களுத்துறை தோட்டத்தில் ஒரு தொழிலாளியின் கல்லறையில்பொறிக்கப்பட்டுள்ள வரிகள்)
மு.நித்தியானந்தன்
இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் (1931-1981) நிறைவுற்று பொன்விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியத் தமிழர்கள் மத்தியில் இதன் முக்கியத்துவம் என்ன என்று ஆராய்வது பொருத்தமுடையதாகும். ஒன்றரை நூற்றாண்டிற்கு மேலாக இந்த மண்ணில் ரத்தம்சிந்தி உழைத்த இந்தியத் தமிழர் தொழிலாளர் வர்க்கமாகவும் தேசியச் சிறுபான்மையினமாகவும் அரசியல் ரீதியில் நசுக்கப்படுவதற்கு வாக்குரிமையானது எவ்வாறு ஆள்வோரால் பிரயோகிக்கப்பட்டது என்பதை நோக்குகையில் இளைய தலைமுறையினர் சினங்கொள்ள நேர்ந்தால் அதில் வியப்படைய எதுவுமில்லை.
இலங்கையில் சர்வசன வாக்குரிமை வழங்கப்படுவது பற்றி அரசாங்க சபையில், அரசியல்மேடைகளில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம் யாருக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதைவிட யாருக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்பதைப் பற்றியே வாதங்கள் சம்பவித்துள்ளன. இந்தியத் தோட்டக்கூலிகளுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று அரசாங்க சபை ஹன்சார்டுகளின் இருநூற்றுக்கணக்கான பக்கங்களில் சிங்கள அரசியல்வாதிகள் கக்கியிருக்கும் விஷமத்தனமான கருத்துகள் மிலேச்சத்தனத்தின் எதிரொலிகளாகும். ஜோன் கொத்தலாவலை கூறுவதுபோல 1928ற்கும் 1947க்கும் இடையில் இந்தியர் பிரச்சினை விவாதிக்கப்பட்டபோது அது முழுவதுமாக வாக்குரிமை பற்றிய பிரச்சினையாகவே கருதப்பட்டது.
இலங்கை இந்தியர் பிரச்சினை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சிருஷ்டியே இதில் தங்களுக்கு எந்தப்பங்குமில்லை என்று இலங்கையின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. லுடோவைக் கூறுவதுபோல் இப்பிரச்சினையை உருவாக்கியவர்களே அதனைத் தமது காலத்தில் தீர்த்துவைப்பதில் பெரும்பங்கினை வகித்திருக்கவேண்டும். பிரித்தாளும் கலையில் வல்ல பிரித்தானியர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் இலங்கையில் நிலைபெறவேண்டுமானால் இலங்கையும் இந்தியாவும் எதிர்முகாம்களில் நிறுத்தப்படவேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் உணர்ந்திருக்கிறது.
சிங்கள அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தாவிட்டால் தங்களின் சிபார்சுகளை அவர்கள் பூரணமாக நிராகரித்து விடுவர் என்றஞ்சிய டொனமூர் ஆணைக்குழுவினர் இந்தியர்களின் வாக்குரிமை கட்டுப்படுத்தப் படுவதனை தமது அறிக்கையில் ஆதரித்திருக்கின்றனர்.
"முதலாவதாக, இந்நாட்டில் ஐந்துவருடம் வாழ்ந்த தகுதி இருத்தல்வேண்டும்.நாட்டில் நிலையான அக்கறை கொண்டவருக்கோ,நிலையாகக் குடியிருப்போருக்கோ மட்டுமே வாக்குரிமை அளிப்பதே இதன் நோக்கம். இந்த விதியானது இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பாக சிறப்பான முக்கியத்துவம் பெறுவதை நாம் பின்னர் காண்போம்" என்று டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது.
டொனமூர் ஆணைக்குழுவின் இந்த விஷவித்துத்தான் லட்சோப லட்சக்கணக்கான இந்தியத் தமிழர்கள் வாக்குரிமையற்றவர்களாக்கப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. மறுபுறம், இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை கட்டுப்படுத்தப்படுவதன் மூலமே டொனமூர் குழுவினரது சிபார்சுகளின் சாராம்சத்தைக் காப்பாற்ற முடியும் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் வாதாடினர்.
இந்தியர்களின் வாக்குரிமைபற்றி வாதங்கள் எழுந்தபோதெல்லாம் அவர்கள் இந்நாட்டில் நிலையாகக் குடியிருக்கும் அக்கறை கொண்டவர்கள் அல்லர் என்ற காரணமே பெரும்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையைவிட இங்கிலாந்தில் உள்ள தனது காரீயச் சுரங்கங்களை மேற்பார்வை செய்ததில் அதிக நாட்களைச் செலவிட்ட இலங்கையின் முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை போன்றோர் கூட இம்மாதிரி வாதிட்டதுதான் கேலிகிடமானது.
1928-ல் டொனமூர் ஆணைக்குழுவினர் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களில் 40 தொடக்கம் 50 வீதத்தினர் வரை இலங்கையில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதாக மதிப்பிட்டனர்.
1938-ல் ஜாக்ஸன் அறிக்கையில் இந்தியர்களில் 60 வீதமானோர் இலங்கையில் நிரந்தரமாகக் குடியிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் தோட்டத்துரைமார் சங்கம் இந்தியத் தொழிலாளர்களில் 70-80 வீதமானோர் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாகக் கூறியது.
சோல்பரி ஆணைக்குழுவின் அறிக்கை 80வீதமான இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக மதிப்பிட்டது.
இலங்கை பிரஜாவுரிமை பெற்றவர்கள்கூட இந்தியாவில்தான் அக்கறை காட்டுகிறார்களே தவிர இலங்கையில் அவர்கள் நிலையான அக்கறை கொண்டவர்கள் அல்ல என்றும் மறுமுனையில் வாதிக்கப்பட்டது. “பூரண இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட இந்தியர்கள்கூட இந்தியாவைத்தான் தமது தாயகமாக நோக்குகிறார்கள்; அவர்கள் இந்தியக் கொடியைத்தான் ஏற்றுகிறார்கள்; இலங்கைத் தேசியக் கொடியைஅல்ல" என்று ஏ.ரட்னாயக்கா பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.
எல்லாளனின் சமாதியில் துட்டகெமுனுவின் அஸ்தியைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்களின் முன்னோடிகளுக்கு இந்தியத் தமிழர்களின் நிலைமையை விளங்கிக்கொள்வதில் கஷ்டம் இருந்திருக்கவே வேண்டும்.
பிரிட்டிஷ் பிரஜைகள் என்றும் கருந்தோட்டம், இந்தியாவின் சேய்மை, தோட்டங்களில் வேலை இல்லாதபோது இந்தியாவிற்குத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பிய தன்மை, கண்டியரின் மனோபாவம், உள்ளூர்வாசிகளுடன் இந்தியத்தமிழர்கள் கலந்துவிடாதிருப்பதற்காக அவர்கள் தனிக்கூறாக்கப்பட்மை, இனத்துவேஷம், வர்க்கச்சுரண்டல், குறுகியகால வரலாறு போன்ற பல்வேறு அம்சங்களின் பின்னணியிலேயே இந்தியத்தமிழர்களின் நிரந்தரக் குடியமர்வு பற்றிய பிரச்சினைகள் பரிசீலிக்கப்படவேண்டும்.
இந்தியத் தமிழர்களிலும் தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு வாக்குரிமை வழங்கப்படுவதனையே சிங்களத் தேசியத் தலைவர்கள் மூர்க்கமாக எதிர்த்தனர்.
"கொழும்பு இந்தியருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். தோட்டங்களில் வாழும் இந்தியக் கூலிகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதனையே நான் திட்டவட்டமாக எதிர்க்கிறேன்'' என்று திரு.வி.எஸ்.டி.எஸ். விக்ரமநாயக்கா அரசாங்க சபையில் வாதாடும்போதுதான் வர்க்கரீதியாக இந்தியத் தொழிலாளருக்கு எதிரான இவர்களின் விஷமத்தனம் பளிச்சிடுகிறது.
“பெருந்தொகையான இந்திய வாக்காளர்களை வெளியே தள்ளும் நோக்கத்துடன்தான் எனது தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகின்றது. இந்த விஷயத்தில் எதனையும் மழுப்பிப் பேசுவதில் பயனில்லை. ஆம்,அது உண்மைதான் என்று திட்டவட்டமாக ஏற்றுக்கொள்கிறேன்'' என்று இலங்கை தேசியகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு.ஏ.எப். மொல்முரே நிர்வாணமாக வெளியே வருகிறார்.
"இந்தியத் தொளிலாளர்கள் பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, இங்கு அடிமைநிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையில், கிராமங்களிலிருந்து தூரத்தே தனிமைப்படுத்தப்பட்டு, இந்நாட்டு மக்களுடன் உறவாடமுடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று நாங்கள் கேட்பது நியாயம்தானே?" என்ற வாதத்தில் மிலேச்சத்தனத்தின் கடூரத்தை நாம் கேட்கநேர்கிறது என்றால் இந்த வாதங்களை உதிர்ப்பவர் வேறுயாருமில்லை; இலங்கைக்கு இலவசக்கல்வி வழங்கிய தேசபிதா அதிகௌரவ சி. டபிள்யு. டபிள்யு கன்னங்கரா அவர்கள்
இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுமானால் சிங்கள இனம் விழுங்கப்பட்டுவிடும் என்ற பூதாகரமான பொய்யை நிறுவுவதில் கோபல்ஸும் கோபினோவும் மொலமுரேக்களிடமும் கன்னங்கராக்களிடமும் தோற்றுப் போயிருப்பார்கள்.
”இங்கிலிஷ்காரர்களின் கைகளிலிருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை'' என்று டி. எஸ். சேனநாயக்கா தொடர்ச்சியாக வாதாடியிருக்கிறார்.இலங்கை சுதந்திரம் அடைந்து அதன்முதல் ஆண்டு நிறைவுப்பரிசாக திரு.டி.எஸ்.சேனநாயக்கா இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினை அமுலாக்கினார். எட்டு லட்சம் இந்தியர்களால் இலங்கையர் விழுங்கப்பட்டு விடுவார்கள் என்று சுதந்திர தேசபிதா பெரிதும் அச்சம் தெரிவித்தது, "எட்டுலட்சம் இந்தியர்கள் அறுபதுலட்சம் இலங்கையரை விழுங்கிவிடுவார்கள் என்பது சுத்தக் கோழைத்தனமானது'' என்று என். எம். பெரேரா இதனை எதிர்த்து வாதிட்டார்.
"இலங்கை பிரஜாவுரிமை மசோதாவானது இனவாதக் கொள்கையினையும் ஒரு சிலருக்கு விசேஷ சலுகை வழங்குவதனையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, நாங்கள் அந்தக்கட்டத்தை எப்போதோ கடந்துவிட்டோம் என்றுதான் நான் நினைத்திருந்தேன்; ஹவுஸ்டன் செம்பர்லின், அடொல்ஃப் ஹிட்லர், ஆகியோருடன் அத்தகைய இனவாதம் முடிந்துபோய்விட்டது என்றுதான் நினைத்திருந்தேன். அது தவறு, இலங்கைப் பிரதமரான (திரு. டி. எஸ். சேனநாயக்கா) | எனது நல்ல நண்பர் இந்த உலகின் கடைசி இனவாதி தானே என்ற உருத்தினை மிகத்தெளிவாகக்கோருகிறார்” என்ற திரு. என். எம். பெரேராவின் கூற்று நிலையைத் தெளிவாக்குகிறது.
அரசியல் உரிமைகள் இல்லாதவரை இந்தியத் தமிழர்கள் புராதனகால அடிமைச் சமூகமாய் இந்த நாட்டிற்கு உழைத்து உடலம்நோவதில் - இலங்கையில் வாழ்வதில் இலங்கையின் சுதந்திர சிற்பியான திரு டி.எஸ்.சேனநாயகாவிற்கு ஆட்சேபனையில்லை. அவருடைய ஐந்தொகைக் கணக்கில் இந்தியத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் சொத்தாகவும் (Assets) அரசியல் ரீதியில் பொறுப்பாகவும் (Liabilities) மதிப்பிடப்பட்டனர். வெள்ளையனின் கால்களை நக்கி ஆட்சி அதிகாரமேறியவர்கள் இதைவிட வேறுமா திரி யோசித்திருந்தால்தான் ஆச்சரியப்படமுடியும்.
1930களில் இந்தியத் தமிழர்களால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்று சிங்கள இனவாதிகள் கருத்துக் கொண்டிருந்ததைப்போலவே இலங்கைத் தமிழர்களின் மேல்மட்டப் பிரதிநிதிகளும் கருதினர்.
டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில்(1931) காணும் புள்ளி விபரங்களிலிருந்து பின்வரும் விபரத்தைப் பெறலாம். இலங்கைத் தமிழர்கள் - 540,000 இந்தியத் தமிழர்கள்-700,000
இலங்கைத் தமிழர்களின் கற்ற பிரதிநிதிகள் கல்வித்தகுதி, வருமானத்தகுதி என்பனவற்றைக் கொண்டுதான் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக ஆதரித்தனர். இது இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் என்பதை அவர்கள் உணராமல் இருந்ததைக் காட்டும் என்பதை நாம் நம்பத் தேவையில்லை. இந்தியர்களின் இலங்கை வரத்தினைத்தடை செய்வதில் இலங்கைத் தமிழர்கள் காட்டிய ஆர்வமும் அவர்கள்முன் வைத்த வாதங்களும் இதனை ஊர்ஜிதம் செய்கின்றன.
இந்தியர்களின் இலங்கை வரத்தினைத்தடைசெய்வது தொடர்பாக 1937 பெப்ரவரி 14-ம் திகதி யாழ் சங்கத்தின் விசேட கூட்டமொன்று சங்கத்தலைவர் டாக்டர். ஐசக் தம்பையா அவர்களது இல்லத்தில் நடைபெற்றபோது திரு.எஸ். எச். பேரின்பநாயகம் பின்வருமாறு பேசியிருக்கிறார்.
"இந்தியர்களை எல்லையின்றி இலங்கைக்குள்வர அனுமதித்தால் அவர்களுடைய உதவியைக்கொண்டு சிங்களவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றிவிடலாமெனச் சிலர் (இலங்கைத் தமிழர்களிற் சிலர்) நினைக்கின்றார்கள். இது,தவறான அபிப்பிராயமாகும். சிங்களவர்களை வெளியேற்றுவதன் முன்னர் இந்தியர்களால் நாமே வெளியேற்றப்பட்டு விடுவோமென்பதை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.”
மொலமுரேயும் கன்னங்கராவும் பேரின்பநாயகத்தின் குரலிலே வெளிப்படுவதை இங்குகாண்கிறோம். அதே கூட்டத்தில் கரகோஷத்தின் மத்தியில் கு. நேசையா பேசுகையில் ''சமீபமாக ஹற்றன்-டிக்கோயா ஸிலோனீஸ் தோட்டக் கிளாக்குமார் சங்கத்தார் ஒரு அறிக்கையைவெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், இந்தியரின் போட்டியிலிருந்து தங்களைப் பாதுகாக்கவேண்டுமென அவர்கள் கோரியிருக்கிறார்கள். கண்டக்றர்கள், ரீமேக்கர்கள், லிகிதர்கள் முதலான உத்தியோகங்களை வகித்துவரும் இலங்கையர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்தியர்களால் வேலையை இழந்துவிடுகின்றார்கள். வியாபாரத்தலங்களில் உள்ள கணக்கப்பிள்ளைகள், வைத்தியர்கள், சிப்பந்திகள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் முதலான பதவிகளில் இந்தியரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எல்லாப் பதவிகளும் இந்தியர்களுக்குத் திறந்து விடப்படுமானால், எல்லாம் இந்தியர் மயமாகிவிடும்'' என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியர்கள் வெறும் தோட்டக் கூலிகளாய் – உரிமைகள் எதுவுமற்றவர்களாய் வேலை செய்வதில் இவர்களுக்கு ஆட்சேபனையில்லை. இந்தியர்கள் கூலிகளாக இருந்து உருவாக்கிய தோட்டங்களில் கண்டக்றர்கள், ரீமேக்கர்கள்,லிகிதர்களாகத் தாங்கள் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்ற இவர்களின் அக்கறைகளில் வர்க்கச்சார்பு பளிச்சிடுகிறது.
தங்கள் தலைவிதி நிர்ணயமாகிற ஒரு சரித்திர கட்டத்தில் சிங்களத் தேசியவாதிகளாலும் கற்றறிந்ததமிழ்ப் பிரதிநிதிகளாலும் வஞ்சிக்கப்பட்ட இந்தியத் தமிழர்களின் ஆத்மாவின் குரலை இந்தியப்பிரதிநிதிகளின் வாதங்களில்கூட அல்ல, ஜனாப். ரி. பி. ஜாயாவின் வாதங்களில்தான் நான் கேட்கிறேன்.
"இந்நாட்டு மக்களுக்கு சர்வசன வாக்குரிமை நன்மை அளிக்கக் கூடியது என்று நாம் நினைத்தால் – இந்நாட்டின் வெகுஜனங்களுக்கு ஒரு பெருங்கொடையை, ஆசீர்வாதத்தை வழங்குகின்றோம் என்று நாம் நினைப்போமேயானால் சரியாகவோ, பிழையாகவோ இந்நாட்டிற்குகொண்டுவரப்பட்ட – இந்நாட்டின் நிலையை உயர்த்தும் பணியில் நிச்சயமாக ஈடுபட்ட அந்த வறிய அப்பாவி இந்தியமகனுக்கு இப்பெருங்கொடையினை, ஆசீர்வாதத்தினை நாம் வழங்க மறுத்தோமெனில், நாம் மாபெரும் அநீதி இழைத்தவர்களாவோம்” -ஆம் அந்த வறிய இந்தியனுக்கு வரலாற்றில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது.
அந்த அநீதியின் முழுவடிவமாய் 1948-ம்ஆண்டின் பிரஜாவுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தபோது 1947-ம் ஆண்டுத் தேர்தலில் 7 ஆசங்களைப் பெற்ற இந்தியத் தமிழர்கள் ன மறுதேர்தலில் ஒரு ஆசனத்தையும் பெறமுடியாமல் போய்விட்து.
அதனைத் தொடர்ந்து "நாடற்றவர்கள்” எனப்பட்ட இந்தியத் தமிழர்களை வெளியேற்றும் கைங்கரியமும் சீராக மேற்கொள்ளப்பட்டன. • 1954-ல் நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் • 1964-ல் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் • 1974-ல் ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தம்
ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சீனிமூடை ஒப்பந்தம் மேற்கொள்வதுபோல இந்தியத் தமிழர்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நிர்க்கதியாக நிற்கும் ஒரு சமூக் கூட்டத்தின்மீது ஒரு அராஜ அரசு சாதிக்கக் கூடிய சகல அட்டூழியங்களும் தோட்டத்து மக்கள்மீது சம்பவித்துவிட்டன. இந்த மண்ணின் வளத்திற்காக தங்கள் வியர்வையை, உதிரத்தை, உயிரை அர்ப்பணித்த இந்தியத் தமிழர் கூட்டத்தின் கடைசி மகன் வாக்குரிமையற்றவனாக- பிரஜாவுரிமையற்றவனாக-நாடற்றவனாக இந்நாட்டில் உலவும்வரை உங்களின் சர்வசன வாக்குரிமைப் பொன் விழாக்களையும் தார்மீகங்களையும் காறிஉமிழக்கூட திராணியற்றுப் போய்விட்டால் மானுடம் தோற்றுவிட்டது என்று அர்த்தமாகிவிடும்.
மானுடம் தோற்பதில்லை! +++
(இக் கட்டுரை இலங்கை அலை (இதழ்-17, சித்திரை -ஆனி 1981) சஞ்சிகையில் வெளியாகியது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக