பக்கங்கள்

ஞாயிறு, பிப்ரவரி 16, 2025


விசுவானந்ததேவன்

வ.அழகலிங்கம்‌





உண்மையில் தோழர் அழகலிங்கம் அவர்களை எனக்குப் பிடிக்கும். காரணம் முகத்துக்கு நேரே விமர்சனங்களை வைக்கும் நேருக்கு நேரான பேச்சு.
அவருடைய எழுத்துக்கள் கோபி அண்ணானின் ஆபிரிக்கக் கிராமத்துப் பழமொழிகளுடன் கூடிய பேச்சுக்களைப்போல கிராமத்தின் எளிய மரபுத்தொடர்களும் பழமொழிகளும் உவமைகளும் நிறைந்தவை.

இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றை தொடக்கத்திலிருந்து இன்றுவரை துல்லியமாகக் கூறக்கூடிய வல்லமையாளர்கள் சிலரில் அவரும் ஒருவர். அண்மையில் அவரது கட்டுரை ஒன்று படிக்கக் கிடைத்தது. தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT) பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியைச் (PLFT) சேர்ந்த தோழர்‌ விசுவானந்ததேவன்‌ (1952-1986) அவர்களது நினைவாக வெளிக்கொணரப்பட்ட „தோழர்‌ விசுவானந்ததேவன்‌ நினைவு நூல்“ என்ற‌ மலரில் இந்த நீண்ட கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது.
வரலாற்றை அறிய விரும்பியவர்களுக்கு இக் கட்டுரை முக்கியமான ஒன்றாக எனக்குப் படுகின்றது.
தோழர்களுக்கு மிக்க நன்றியுடன் இக் கட்டுரையை அங்கிருந்து எடுத்துகொண்டோம்.

பழுத்த ரொட்ஸ்கிய வாதியான(trotskyist)தோழர் அழகலிங்கம் அவர்கள் லியோன் ரொட்ஸ்கியின் எழுத்துக்களிலும் ரொட்ஸ்கியின் வரலாற்றை எழுதிய ஐசாக் டொய்ச்சர் (Isaac Deutscher) போன்று ரொட்ஸ்கி பற்றிய எழுத்துக்களிலும் தோய்ந்து கிடப்பவர்.




விசுவானந்ததேவனும்‌ நானும்‌ 14 வருடங்கள்‌ சேர்ந்து வாழ்ந்தோம்‌. வாழ்ந்தோம்‌ என்று சொல்வதிலும்‌ பார்க்க, கொம்யூனிச விரோதத்திற்கு எதிராகக்‌ களத்தில்‌ நின்றோம்‌ என்பதுதான்‌ உண்மை. விசுவானந்ததேவன்‌ இலங்கையிலே மார்க்சியப்‌ பதாகையை உயர்த்திப்‌ பிடித்த மனிதன்‌. எங்கு பார்த்தாலும்‌ கொம்யூனிச விரோதச் சூறாவளியும்‌ சுனாமியும்‌ காட்டாறும்‌ கனமழையும்‌ எரிமலைக்‌ குழம்பும்‌ எயிட்ஸ்சும்‌ ஒருசெக்கன்கூட ஒயவிடாது மொய்த்துப்‌ பிடித்த வேளையில்‌, செங்குத்தாகத்‌ தான்‌ உயர்த்திப்பிடித்த அந்தப்‌ பதாகையை ஒரு பாகை கூடச்‌ சரியவிடாமல்‌ போராடி அதற்காகவே கொலை செய்யப்பட்டவர்‌.

உலக சோசலிசம்‌ என்ற சாசுவதசமுத்திரத்தில்‌ கலக்கும்‌ நதிகளின்‌ சிற்றோடையொன்றில்‌ சறுக்கிவிழும்‌ அதியற்புதமான தற்செயல்‌ வாய்ப்பதென்பது ஒருசில மனிதர்களுக்கே கிடைக்கும்‌. தினமும்‌ அந்தக்‌ கொம்யூனிசச் சிற்றோடையில்‌ குளித்து முழுகுவது பரவசம்‌. பேரானந்தம்‌, கொம்யூனிசம்‌ எவ்வளவு பெரிய பொக்கிசம்‌. அதற்கு உலக ஒட்டுமொத்த உற்பத்தியான 57 ட்றில்லியன்‌ டாலர்‌ ஈடாகுமோ? அதைத் தன்னகத்தே சேகரித்த விசுவானந்ததேவனின்‌ பெறுமதி அது. ஈடு இணையற்றது. நிழலின்‌ அருமை வெய்யிலிலே தெரியுமென்பார்கள்‌. தொழிலாளர்‌ தலைவர்களான அண்ணாமலை, விஜயானந்தன்‌ போன்றவர்களைக்‌ கொன்றதால்‌ கந்தக பூமியாகிப்‌ போன யாழ்ப்பாணத்தில்‌ கொம்யூனிசக்‌ குளிர்நிழலின்‌ அருமை கோடையிலே வீசுகின்ற கொம்யூனிச மந்தமாருதத்தின்‌ அருமை தெரியும்‌ நாள்‌ எந்நாளோ? எல்லாமே மாறும்‌. கண்ணை மூடி முழிப்பதற்குள்‌ காட்சி வேறாகிவிடும்‌. இன்று இருப்பது என்றோ ஒரு நாள்‌ நேர்‌ எதிராகி விடும்‌ என்பது நிஜம்‌. நிராகரிக்க முடியாத நியதி. அந்த நம்பிக்கையே எம்மை எந்நாளும்‌ சுதாகரிக்க உதவி புரிந்தும்‌ நித்தியமும்‌ நிரந்தரமாகவும்‌ வரும்‌ நித்திரையில்லாத இரவுகளைத்‌ தற்கொலைக்கு அழைத்துச்‌ செல்லாமல்‌ தடுத்துவிடும்‌. வாழ்வு பிறப்பில்‌ வரும்‌. வளங்கள்‌ பிறகு வரும்‌. தாழ்வு செயலில்‌ வரும்‌, தாண்டுவதற்குள்‌ மரணம்‌ வரும்‌ என்பார்கள்‌.

அதீத தனிமைப்படுத்தலின்‌ உக்கிரத்தில்‌ இருந்து தப்புவதற்காகச்‌ சந்தர்ப்பவாதிகளோடு ஏற்படுத்திய ஒவ்வொரு தற்காலிகக்‌ கூட்டும்‌ எண்ணிய இலக்கை அடையமுன்னரே வெடித்துச்‌ சிதறிவிடும்‌.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்‌
திண்ணியர்‌ ஆகப்‌ பெறின்‌'
என்பார்கள்‌.
விசுவானந்ததேவனின்‌ மனத்திண்ணம்‌ கொஞ்ச நஞ்சமில்லை வந்து போன சோதனைகள்‌, அம்மிகளைப்‌ பறக்க வைத்த ஆடிக்காற்றுக்கள்‌, கழுகுகளின்‌ சிறகொடித்த சூறாவளிகள்‌. சின்னக்‌ குடைகளின்‌ கம்பிகளை ஒடித்த சீற்றப்‌ புயல்கள்‌. ஒல்லித்‌ தேங்காயின்‌ துணைகொண்டு சமுத்திரத்தைக்‌ கடக்க முற்பட்டவர்கள்‌. முன்‌ வந்த சுனாமிகள்‌, சுக்கான்கள்‌ சுழல்‌ மூழ்கும்‌ சிக்கல்கள்‌. அழவில்லை. சிரிக்கவில்லை. பரமசிவன்‌ வரத்திற்குப்‌ பிரார்த்திக்கவில்லை. விளங்க முயற்சிப்பதற்கு முற்றுப்‌ புள்ளி வைக்கவில்லை. வேறு வழி இருக்கவில்லை. புரட்சிவாதிகள்‌ பொறுமைசாலிகளாக இருப்பது முன்நிபந்தனையாகும்‌. அராஜகவாதிகளிலிருந்து அவர்களை அது ஒன்றுதான்‌ வேறுபடுத்திக்‌ காட்டும்‌.

முதற்சந்திப்பு

நான்‌ 1965 இல்‌ வல்வெட்டித்துறை சிதம்பராக்‌ கல்லூரியிலிருந்து உடுப்பிட்டி அமெரிக்கன்‌ மிஷன்‌ கல்லூரிக்கு உயர்தர வகுப்புக்கு வந்து சேர்ந்தேன்‌. அப்பொழுது விசுவானந்ததேவன்‌ சாதாரண வகுப்பு. நான்‌ இலக்கிய மன்றத்தில்‌ பேசி அல்லது பட்டிமன்றத்தில்‌ கலந்து கொண்டதன்‌ பின்பு, அதை வழக்கமாக வெளியில்‌ நின்று பார்க்கும்‌ விசுவானந்ததேவன்‌ வந்து என்னோடு கலந்துரையாடுவார்‌. அப்பொழுது எனது தமிழ்‌ ஆர்வமே விசுவானந்ததேவனோடு உறவை ஏற்படுத்தியது. அப்பொழுது எனது அவா பாரதி போன்றோ, சொல்லின்‌ செல்வர்‌ ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோ, அறிஞர்‌ அண்ணாத்துரை போன்றோ அன்றேல்‌ கிருபானந்தவாரியார்‌ போன்றோ தமிழிற்‌ புலமை பெறவேண்டும்‌ என்பதே. திட்டிலும்‌ தமிழ்த்‌ திட்டு. அதுவே எனக்குத்‌ தேவகானம்‌. அது பேரின்பம்‌ தரும்‌ என்பார்‌ அருணகிரிநாதர்‌. எங்களூர்‌ படிக்கும்‌ வட்டங்கள்‌ அண்ணாத்துரை வாதிகளாகவும்‌ சேதுப்பிள்ளை வாதிகளாகவும்‌ பிரிந்து வாதவிவாதங்களில்‌ ஈடுபடுவது நாளாந்த நிகழ்ச்சிகள்‌. விசுவானந்ததேவன்‌ தமிழ்ப்‌ பேச்சுப்‌ போட்டிகளில்‌ பங்குகொண்டு பரிசில்கள்‌ எடுப்பார்‌. விசுவானந்ததேவன்‌ சிறுவகுப்பில்‌ பச்சைக்கிளி பற்றிப்‌ பேசி முதற்பரிசு எடுத்ததால்‌, அவரைப்‌ ’பச்சைகிளி விசுவானந்ததேவன்‌' என்றே அழைப்பார்கள்‌. இன்றைக்கும்‌ அந்த அடைமொழியை அவரை அடையாளப்‌ படுத்தப்‌ பாவிப்பதைக்‌ கேட்டிருக்கிறேன்‌.

நான்‌ 1956 இல்‌ இருந்தே என்னைக்‌ கொம்யூனிஸ்டாக அடையாளப்படுத்தினேன்‌. அது அக்காலத்தைய வடமராட்சியின்‌ மோஸ்தர்‌. 1956 தேர்தலிற்‌ பொன்‌.கந்தையா கேட்டபொழுது பொன்‌ கந்தையா சார்பு நோட்டீஸ்‌ ஒட்டுபவர்களுக்கு பிறகால்‌ நானும்‌ அள்ளுப்‌படுவேன்‌. அப்பொழுது கொம்யூனிசம்‌ வெறும்‌ கர்ண பரம்பரைக்‌ கதையும்‌ வாய்மொழிப்‌ பாடமும்தான்‌. ஒரு கொம்யூனிச செவ்விலக்கியப்‌ புத்தகத்தையாவது கண்ணாற்‌ கூடக்‌ கண்டது கிடையாது. நான்‌ கேள்விப்பட்ட அற்ப விடயங்களை விசுவானந்ததேவன்‌ கதைக்க வரும்பொழுது மீட்டுருப்‌ போடுவேன்‌. அப்பொழுதெல்லாம்‌ விசுவானந்ததேவன்‌ கொம்யூனிசம்‌ பற்றி எனக்கோ எம்முடன்‌ சேரும்‌ நண்பர்களுக்கோ ஏதும்‌ கதைப்பது கிடையாது. ஏறத்தாள ஒரு வருடத்திற்கு மேலான பிறகு ஒரு குண்டு போட்டது போல, ’குருஷேவின்‌ போலிக்‌ கொம்யூனிசம்’‌ என்ற புத்தகத்தைத்‌ தந்து வாசிக்கும்படி கேட்டுக்‌ கொண்டார்‌. அதுவரை ஊரே மொஸ்கோ கொம்யூனிசம்‌, பீக்கிங்‌ கொம்யூனிசம்‌ என்று பிரிந்து கோடை இடிபோன்ற குதர்க்கங்களில்‌ ஈடுபட்டதைப்‌ பலமுறை நான்‌ சந்தித்த போதும்‌, அது எனக்கு ஒரு பொருட்டாகத்‌ தெரியவில்லை. இதன்‌ பின்பு விவாதங்களிலே சமர்ப்பிக்கப்படும்‌ ஆதாரங்களையும்‌ நியாங்களையும்‌ கூர்ந்து கேட்க முயன்றேன்‌. சில வருடங்களுக்குப்‌ பிறகு கல்லூரியில்‌ நாங்கள்‌ கொம்யூனிஸ்டுகளாக அடையாளப்படுத்தப்பட்டு, விசுவானந்ததேவன்‌ அடிக்கடி காரசார விவாதங்களில்‌ ஈடுபட்டு அதிபரால்‌ தண்டிக்கப்பட்ட பிறகு, விசுவின்‌ தந்தையாருக்குச்‌ செய்தியெட்டியது. நான்தான்‌ விசுவைக்‌ கெடுத்ததாகவும்‌, என்னுடன்‌ விசு கூடக்‌ கூடாதென்று அவரால்‌ கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எந்தவித உண்மையோ ஆதரமோ இல்லாத இந்தச்‌ செய்தியைப்‌ பற்றிச்‌ சிறிது கூறுவது பொருத்தமாகும்‌.

ஒரு தனிமனிதனை இன்னொரு தனிமனிதன்‌ கெடுக்கவோ மாற்றவோ முடியாது. அப்படிச்‌ செய்யக்‌ கூடியதாக இருந்தால்‌ இலங்கையில்‌ எப்பவோ சோசலிசப்‌ புரட்சி வந்திருக்க வேண்டும்‌. நாமெல்லாம்‌ அந்தக்‌ காலத்தினதும்‌ சூழலினதும்‌ நிர்ப்பந்தத்தின்‌ விளைபொருட்கள்‌. அப்பொழுது வடமராட்சி கொம்யூனிஸ்டுகளின்‌ கைகளிலிருந்தது. உடுப்பிட்டிக்‌ கிராமசபைத்‌ தலைவர்‌ ஆர்‌.ஆர்‌. தர்மரத்தினம்‌ என்ற சமசமாஜத்‌ தலைவர்‌. வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர்‌ திருப்பதி என்ற கொம்யூனிஸ்ட்‌. பருத்தித்துறை மாநகரத்‌ தலைவர்‌ சேனாதிராசா என்ற இன்னுமொரு கொம்யூனிஸ்ட்‌. நெல்லியடி நகரசபைத்தலைவர்‌ சிவகுருநாதன்‌ என்ற மற்றுமொரு கொம்யூனிஸ்ட்‌. வடமராட்சியிலே தமிழிசவாதிகள்‌ வேரூன்றுவதற்கு மிகக்‌ கஷ்டப்பட்டதோடு, கனகாலம்‌ எடுத்தது. 1977 ஆம்‌ ஆண்டு சிறுபான்மைத்‌ தமிழர்‌ ஒருவரைத்‌ தேர்தலிற்‌ போட்டியிட வைக்க வேண்டுமென்ற பிரச்சனை மேலெழுந்தபொழுது சிறுபான்மைத்‌ தமிழர்‌ எண்ணிக்கை அதிகமான கோப்பாய்‌ தொகுதியிற்‌ போட்டியிட வைக்க வேண்டும்‌ என்ற பல பிரேரணைகள்‌ வந்த பொழுது, படுகொலை செய்யப்பட்ட தமிழர்விடுதலைக்‌ கூட்டணித்தலைவர்‌ அ.அமிர்தலிங்கத்தின்‌ விவாதம்‌ நாம்‌ உடுப்பிட்டித்‌ தொகுதியிற்‌ கேட்டால்‌ மாத்திரம்தான்‌ வெல்வோம்‌. அது கொம்யூனிஸ்ட்‌ பொன்‌. கந்தையா வென்ற தொகுதியாகும்‌. அதன்பிரகாரமே ஒருகாலமும்‌ தமிழர்‌ விடுதலைக்‌ கூட்டணியில்‌ அங்கத்தவராக இருந்திராத இராசலிங்கம்‌ தேர்தலில்‌ நிறுத்தப்பட்டு வெற்றியீட்டப்பட்டார்‌. உடுப்பிட்டி அமெரிக்கன்‌ மிஷன்‌ கல்லூரியிலும்‌ நிறையக்‌ ' கொம்யூனிஸ்டுகள்‌ இருந்தார்கள்‌ சமசமாஜக்‌ கட்சியின்‌ இளைஞர்‌ அமைப்புச்‌ செயலாளர்‌ எமது வகுப்பு. கொம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ வடமாகாணப்‌ பேராளர்‌ ஒருவர்‌ மாணவராக இருந்தார்‌. சீனக்‌ கொம்பூனிசத்தை எமக்கு அறிமுகப்படுத்திய யோகேந்திரநாதன்‌ எமக்குச்‌ சீனியர்‌. பேரதேனியா (பேராதனை)இடதுசாரி மாணவர்‌ சங்கப்‌ பிரதிநிதிகளில்‌ ஒருவரான மார்க்கண்டு எமக்கு சீனியர்‌. நூற்றுக்‌ கணக்கான கொம்யூனிஸ்டுகள்‌ கல்லூரியில்‌ இருந்தனர்‌. கொப்பி அட்டைகளின்‌ பின்மட்டையில்‌ அரிவாள்‌ சுத்தியல்‌ சின்னத்தையும்‌ நட்சத்திரச்‌ சின்னத்தையும்‌ விதம்‌ விதமாகவும்‌ வினோதமாகவும்‌ மாணவர்கள்‌ வரைவதிலே போட்டி போடுவார்கள்‌.

பிலிப்‌ குணவர்த்தன தனக்கு நிரந்தரச்‌ செயலாளராகத்‌ தரவேண்டும்‌ என்று பண்டாரநாயக்காவை நிர்ப்பந்தித்துப்‌ பெற்ற நிரந்தரச்‌ செயலாளர்‌ ஆழ்வாப்பிள்ளை, வடமராட்சியைச்‌ சேர்ந்தவர்‌. அன்றைய தேர்தற்‌ கொமிசனராக இருந்தவர்‌ வடமராட்சியைச்‌ சேர்ந்த சமசமாஜிஸ்ட்‌. வடமாகாணம்‌ முழுவதும்‌ சுருட்டுத்தொழிற்சங்கம்‌ தொடக்கம்‌ முழுத்தொழிற்‌ சங்கங்கங்களையும்‌ அமைத்த தர்மகுலசிங்கம்‌, வடமராட்சி. பீட்டர்‌ கெனமனது வீட்டுப்பணி அமைச்சின்‌ கீழ்‌ இயங்கிய வீட்டுப்பணிக்‌ கூட்டுத்தாபனத்தொழிற்‌ சங்கத்தலைவர்‌. வடமராட்சி. 1964 இல்‌ சமசமாஜக்‌ கட்சி சிறிமா அரசாங்கத்தோடு கூட்டுக்குப்‌ போவதை ஆதரித்த ஒரேயொரு தமிழர்‌ தர்மரத்தினம்‌. வடமராட்சி. என்‌.எம்‌. பெரேரா நிதிமந்திரியாக இருந்த பொழுது வடமாகாண கிறீன்லேஸ்‌ பாங்க்‌ முகாமையாளர்‌ வடமாராட்சியைச்‌ சேர்ந்த சமசமாஜிஸ்ட்‌.

’விசுவானந்ததேவன்‌' என்ற நின்ற வெள்ளத்தை, வந்த வெள்ளம்‌ அள்ளிக்கொண்டு போனதேயொழிய, ஏதும்‌ வசியமந்திரம்‌ போடவில்லை. உண்மையிலே இது பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வுக்‌ கட்டுரைக்கான ஒரு விடயமாகும்‌.

வடமாகாணத்‌ தொழிலாளர்வர்க்க வரலாறும்‌ பொருளாதார வரலாறும்‌ இன்னும்‌ ஆய்வு செய்யப்படாத ஒன்றாகும்‌. தமிழ்த்‌ தொழிலாளர்‌ பிரதிநிதிகளான தர்மகுலசிங்கம்‌, பொன்‌ கந்தையா, காராளசிங்கம்‌, ஏ.வைத்திலிங்கம்‌, பாலா தம்பு, வி.பொன்னம்பலம்‌, சண்முகதாசன்‌ போன்றவர்களில்‌ தத்துவரீதியில்‌ பலம்வாய்ந்தவர்‌ காராளசிங்கமாகும்‌. தர்மகுலசிங்கமும்‌ பொன்‌. கந்தையாவும்‌ உதாரண நடைமுறைக்‌ கொம்யூனிசத்‌ தலைவர்களாகும்‌. பொன்‌. கந்தையா ஸ்டாலின்வாதி என்ற கறை உள்ளவர்‌. ஆனால்‌ தர்மகுலசிங்கம்‌ அப்பழுக்கற்ற தொழிலாளர்‌ தலைவர்‌. அவரது வரலாற்றைத்‌ தமிழிசவாதிகள்‌ மண்போட்டு மூடி அவரைப்‌ பற்றி அறிய விடாது செய்து விட்டார்கள்‌. பல வருடங்களுக்கு முன்னர்‌ பெர்லின்‌ தமிழரசன்‌ அவரைப்‌ பற்றிய அகழ்வாராச்சியில்‌ ஈடுபட்டுச்‌ சிறிது வெற்றியையும்‌ பெற்றிருந்தார்‌. டென்மார்க்‌ கரவைதாசன்‌ அவரைப்பற்றி அந்நாள்‌ பிரதேச வாதிகள்‌ பெருமையோடு இயற்றிப்‌ பாடிய பாடலொன்றை வைத்திருந்தார்‌. அவரோடு வாழ்ந்த பரம்பரையில்‌ கடைசியாகத் தமிழ்‌ ரைம்ஸ்‌ இராசநாயகம்‌ இலண்டனில்‌ வாழ்கிறார்‌.(Ed.: Tamil Times Editor P.Rajanayagam was born in 1936 in Sri Lanka and passed away on June 17, 2022 in UK) கால தாமதமின்றி எதையும்‌ அறிய முற்பட வேண்டும்‌. தர்மகுலசிங்கம்‌ சமசமாஜக்‌ கட்சி சிறிமாவோடு கூட்டுச்‌ சேருமளவுக்கு உருக்குலைய முன்னர்‌ மரணித்துவிட்டார்‌. அவர்‌ அரசியல்‌ நீதியிற்‌ தவறு செய்வதற்கு வாய்ப்பேதும்‌ இருக்கவில்லை. இந்தப்‌ பிரதேசத்தின்‌ இன்னொரு சிறப்பு, முதன்முதல்‌ விண்வெளிக்குச்‌ சென்ற வானியல்‌ விஞ்ஞானி யூரி ககாரின்‌ இப்பிரதேசத்திற்கு வந்திருந்தார்‌. கொம்யூனிசத்‌ தலைவர்களான என்‌.எம்‌.பெரேரா, கொல்வின்‌ ஆர்‌ டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தனா, விவியன்‌ குணவர்த்தனா, டாக்டர்‌ எஸ்‌.ஏ.விக்கிரமசிங்கா, பீற்றர்‌ கெனமன்‌, பி.வை.துடாவை என்று ஒரு கொள்ளைப்பேர்‌ இப்பிரதேசத்திற்குப்‌ பலதடவை வந்து உரை நிகழ்த்திய அடிச்சுவடு ஆழப்‌ பதிந்த பிரதேசம்‌. யூரி ககாரின்‌ கம்பர்மலைக்கு வந்த நேரத்தில்‌, கம்பர்மலைக்கு மின்‌ இணைப்புக்‌ கிடையாது. தொலைபேசித்‌ தொடர்பு கிடையாது. தபாற்‌ கந்தோர்‌ கிடையாது. சந்தை கிடையாது. பாடசாலை கிடையாது. கார்‌ கிடையாது, றேடியோ கிடையாது. மேசைக்காரர்‌ கிடையாது.

'மேசைக்காரர்‌' என்ற பதம்‌ எமது பரம்பரைக்கே தெரியாது. மேசையில்‌ இருந்து சாப்பிடும்‌ வசதி படைத்த வர்க்கத்தைக்‌ குறிப்பிடும்‌ சொல்‌. அதிகமாகக்‌ கிறிஸ்தவக்‌ குடும்பங்களும்‌ மலாயன்‌ பென்சனியர்‌ வீடுகளுமே மேசையில்‌ இருந்தது சாப்பிடும்‌ வர்க்கம்‌. இவர்கள்‌ குத்தகை வாங்க, வட்டிக்காசு வாங்க பட்ட கடனை இறுக்க. அறுவடை நெல்லின்‌ வாரப்பங்கை இறுக்கவென்றுதான்‌ செருப்போடும்‌ குடையோடும்‌ எழுந்தருளுவார்கள்‌. விவசாயத்தில்‌ விஞ்ஞானம்‌, 1956 க்குப்‌ பின்புதான்‌ புகுந்தது. அதுவரை அத்தமுறைச்‌ சமூக உற்பத்தி முறை. உபரி உற்பத்தியைப்‌ பெரிதாக உணர முடியாது. உபரி உற்பத்தி இல்லையென்றால்‌ பண்டம்‌ இல்லை. பண்டம்‌ இல்லையென்றால்‌ முதலாளித்துவம்‌ இல்லை. எழுபதுவரைக்கும்‌ எந்தவொரு வங்கியும்‌ இல்லாததால்‌ மூலதனம்‌ விவசாய உற்பத்தியில்‌ புகவில்லை. முதலாளித்துவம்‌ வட்டுக்‌ கத்தரிக்காய்‌ ஆய்வதற்குக்‌ கொக்கத்தடி கட்டும்‌ நிலையிலும்தான்‌ இருந்தது. முதலாளித்துவம்‌ அல்லாத வர்க்கம்‌ விஞ்சிய வலிமை கொண்டதாக இருந்தது.


”பீலிபெய் சாகாடும்‌ அச்சிறும்‌; அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்” -குறள்‌
மயில்‌ இறகைக்‌ கூட வண்டியில்‌ அதிகமாக ஏற்றினால்‌ வண்டியின்‌ அச்சாணியை உடைத்து விடும்‌. ”அடம்பன்‌ கொடியும்‌ திரண்டால்‌ மிடுக்கு”. பலவீன எதிரிகளும்‌ எண்ணிக்கையில்‌ அதிகரித்து விட்டால்‌ எந்தப்‌ பெரிய பலவானையும்‌ தோற்கடித்து விடுவார்கள்‌. தொழிற்துறைப்‌ பாட்டாளிகள்‌ இல்லாவிட்டாலும்‌ சமுதாயம்‌ துருவப்படுத்தப்பட்டே இருந்தது. விசுவானந்ததேவனோ அன்றி, மற்றைய தொழிலாளி வர்க்கப்‌ பிரதிநிதிகளோ தற்செயலின்‌ பிரசவமல்ல. கால வெளிச் சமுதாயப்‌ புறநிலையின்‌ வார்ப்படங்கள்‌.

All our lives we fought against exalting the individual, against the elevation of the single person, and long ago we were over and done with the business of a hero, and here it comes up again: the glorification of one personality. This is not good at all. I am just like everybody else.
-Vladimir Ilyich Lenin

அனைத்து நம்‌ வாழ்வில்‌ நாம்‌ தனிப்பட்ட மனிதர்களை உயர்த்திக்‌ கொள்வதற்கு எதிராகப்‌ போராடினோம்‌. வெறுமனே தனிப்பட்ட நபர்‌ ஒருவரை உயர்த்துவதற்கு எதிராகப்‌ போராடினோம்‌. கனகாலங்களுக்கு முன்பே நாங்கள்‌ ஒரு தனிமனிதரை ஹீரோ ஆக்கும்‌ வணிகவேலைகளுக்கு எதிராக மிக அதிகமாகவே செய்தோம்‌. மற்றும்‌ ஒருவரின்‌ ஆளுமையைப்‌ பெருமைப்படுத்துவது மீண்டும்‌ மீண்டும்‌ வரும்‌. இது நல்லதே அல்ல. நான்‌ மற்ற எல்லோரையும்‌ போன்ற ஒரு மனிதனே.

-விளாடிமீர்‌ இலிச்‌ லெனின்‌



பெரதேனியா

1969 பிற்பகுதியில்‌ நானும்‌, 1970 இன்‌ பிற்பகுதியில்‌ விசுவானந்ததேவனும்‌ பெரதேனியா பல்கலைக்கழகத்தில்‌ புகுமுகமானோம்‌. அந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ புவியியலும்‌ சமூகவியலும்‌ அற்புதமானவை. அதன்‌ சூழல்‌ அழகும்‌ அதற்குக்‌ கிடைத்த அந்தஸ்தும்‌ மெச்சத்‌ தக்கவை. அது சுற்றிவரத்‌ தோட்டத்‌ தொழிலாளர்‌ என்ற புரட்சிச்‌ சமுத்திரத்தால்‌ சுற்றிச்‌ சூழப்பட்டு இலங்கையின்‌ வடிகட்டின புத்திசாலிகள்‌ செறிந்த ஒரு தீவு. ஏறத்தாள முப்பதினாயிரம்‌ பேர்‌ விடுதிகளில்‌ வாழ்ந்து அது சதுர கிலோமீட்டருக்கு எவ்வளவு பேர்‌ என்று கணக்குப்‌ பார்த்தால்‌ அது உலகின்‌ அதிகூடிய சன அடர்த்திப்‌ பிரதேசமாகி விடும்‌. உலகின்‌ மற்றைய சன அடர்த்திப்‌ பிரதேசங்களோ வாழ்வின்‌ அத்தனை வர்க்கத்‌ தட்டுகளால்‌ ஆனது. பேராதனையோ மாணவர்‌ சமூகமும்‌ பேராசிரியர்‌ சமூகமும்‌ மாத்திரம்‌ செறிந்து வாழ்ந்த பிரதேசம்‌. இன்னும்‌ கறாராகச்‌ சொன்னால்‌ எதிர்கால நாட்டின்‌ ஆளுனர்களும்‌ தலைவர்களும்‌ நிர்வாகிகளும்‌ நீதவான்களும்‌ படைத்‌ தலைவர்களும்‌ வங்கி முகாமையாளர்களும்‌ விஞ்ஞானத்தின்‌ அத்தனை பிரிவினரும்‌ தாறுக்கும்‌ மாறுக்கும்‌ கலக்கும்‌ வாழ்வு.

போஸ்ற்காட்டிலே இரண்டு வரி எழுதினால்‌ வீட்டிலிருந்து காசு கதறிக்‌ கொண்டு வந்துவிடும்‌. வரவில்லாமல்‌ செலவுகள்‌ செய்து மகிழும்‌ கூட்டம்‌. நடுத்தரவர்க்க வாழ்க்கையின்‌ திமிர்‌ அத்தனையும்‌ மண்டிக்‌ கிடக்கும்‌. உருவிலிகள்‌ எவருமே இல்லாத ஊர்வசிகளே குப்பை குப்பையாய்க்‌ குவிந்த பூமி. பார்க்குமிடமெல்லாம்‌ அழகு சிரிக்கும்‌.

1997 இல்‌ விதானபத்திரான என்ற பல்கலைக்‌ கழக சகமாணவரோடு தொடர்பு கொள்ளக்‌ கூடியதாக இருந்தது. அவர்‌ சொன்னார்‌ அந்தக்‌ காலத்தில்‌ எங்களோடு அரசியல்‌ செய்த அனைத்துக்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்கள்‌ ஐம்பத்தொருபேர்‌ பாராளுமன்றத்தில்‌ இருக்கிறார்கள்‌ என்று. இன்னும்‌ ஒரு மிக எளிதானதும்‌ திட்டவட்டமானதுமான ஓர்‌ உதாரணத்தைச்‌ சொன்னால்‌ விளங்கிவிடும்‌. 1976 இல்‌ நான்‌ இலங்கை கடவுச்‌ சீட்டுக்கு விண்ணப்பிக்கச்‌ சென்றிருந்தேன்‌. சராசரி சாமுத்திரிகா லட்சணம்‌ நிறைந்த ஓர்‌ உருவம்‌ திடீரென்று கை குலுக்கி, வா கன்ரினுக்கப்‌ போவோமென்றார்‌. அவர்‌ எனக்கு ஒரு வருடம்‌ சீனியராகப்‌ படித்தவர்‌. அபயகுணவர்த்தனா என்ற குருநாகலையைச்‌ சேர்ந்தவர்‌. தேநீர்‌ அருந்திக்‌ கொண்டிருக்கையில்‌ அங்கு வந்த ஒருவரிடம்‌ முனவீரா என்பவரை வரச்‌ சொன்னார்‌. முனவீரா பதுளையைச்‌ சேர்ந்த சகமாணவர்‌. முனவீராவை என்னோடு கதைக்கும்படி சொல்லிவிட்டு, அபயகுணவர்த்தனா என்னுடைய ஆவணங்கள்‌ காசு மற்றவை எல்லாவற்றையும்‌ வாங்கிக்‌ கொண்டு சென்றார்‌. எங்கள்‌ இருவரது குசலம்‌ விசாரிப்பு மற்றும்‌ பழங்கதைகள்‌ முடிய முன்னரே எனது பாஸ்போட்டோடு அவர்‌ திரும்பி வந்தார்‌. இதை ஏன்‌ சொல்கிறேன்‌. அந்தக்காலத்துப்‌ பேராதனை வளாக மாணவ சமுதாய உறவு அவ்வளவு அன்னியோன்னியம்‌ நிறைந்தது. வாழ்க்கையின்‌ முழுமையையும்‌ தந்தது. இனவாதம்‌ முதலில்‌ இந்த அன்னியோன்னியத்திற்குத்தான்‌ ஆப்பு வைத்தது. அறிவரசர்‌ எங்கே இருந்தாலும்‌ அவர்களோடு நேசம்‌ ஒன்றாயிருக்கும்‌ என்ற குமரேச சதகப்‌ பாடல்தான்‌ ஞாபகத்திற்கு வருகிறது. பேராதனைப்‌ பல்கலைக்கழகம்‌ அறிவரசர்‌ வாழ்ந்த இடம்‌. ஒத்துப்போக, கூடி வாழப்‌ பழக்கப்படுத்திய, பண்படுத்திய விடுதி வாழ்க்கையைத்‌ தந்தது.

பேராதனைப்‌ பல்கலைக்கழகத்து முதலாவது உபவேந்தர்‌ டொறிக்‌ மடு சொய்சா. இவர்‌ 1557 இல்‌ கோவாவைப்‌ போர்த்துகேயர்‌ பிடித்தபொழுது மதம்மாறிய பரம்பரையைச்‌ சேர்ந்தவர்‌. ஒக்ஸ்போர்ட்டில்‌ ஆங்கில இலக்கியத்தில்‌ கலாநிதிப்‌ பட்டம்‌ பெற்றவர்‌. சமசமாஜக்‌ கட்சியின்‌ மத்திய குழு உறுப்பினர்‌. இவர்‌ உபவேந்தராக இருந்த காலத்தில்‌ ஜப்பான்‌ இலங்கையில்‌ யுத்தகாலத்தில்‌ குண்டு போட்டதற்கான நட்டஈடு கட்ட பிரித்தானியாவால்‌ நிர்ப்பந்திக்கப்பட்டது. யுத்தத்தை அடுத்த ஐக்கிய நாடுகள்‌ சபைக்‌ கூட்டத்தில்‌ இலங்கைப்‌ பிரதிநிதி ஜப்பானை பழிவாங்கக்‌ கூடாது என்பதை வற்புறுத்திப்‌ பேசினார்‌. அந்த நன்றிக்‌ கடனுக்காக. ஜப்பான்‌ நட்டாட்டை வெறும்‌ காசாகத்தராமல்‌ பேராதனைப்‌ பல்கலைக்கழகத்தை ஒரு முழுநிறை பல்கலைக்‌ கழகமாகக்‌ கட்டித்தருவதைத்‌ தானே பிரேரித்துக்‌ கட்டியும்‌ தந்தது. உலக அங்கீகரம்பெற்ற பேராதனைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உபவேந்தரான டொறிக்‌ டி சொய்சா சமசமாஜக்‌ கட்சியின்‌ மத்திய குழு உறுப்பினர்‌. டொறிக்‌ டி சொய்சா அன்றைய நூலகப்பொறுப்பாளர்‌ தம்பையாவுடனும்‌ தமிழ்துறையுடனும்‌ சேர்ந்து அந்தக்‌ காலத்தில்‌ கிடைக்கக்‌ கூடிய எல்லாத்‌ தமிழ்‌ புத்தகத்தையும்‌ பேராதனைப்‌ பல்கலைக்கழக நூலகத்திற்குப்‌ பெற்றுத்‌ தந்தார்‌. அங்கே குவிந்து கிடந்த தமிழ்‌ இலக்கியங்களைப்‌ படுத்து முடிப்பதற்கு ஒரு பிறவி போதாது. ஆங்கில இலக்கியங்களைப்‌ பற்றிச்‌ சொல்லவே தேவையில்லை. நூலகத்துள்‌ நுழைய முற்படும்‌ பொழுதே ஐந்தடி உயரமான ரவிந்திரநாத்‌ தாகூரின்‌ ஓவியமொன்று கைகூப்பி வரவேற்கும்‌. மகான்களின்‌ போதனைகளால்‌ போதையூட்டாமல்‌, கலைக்குள்‌ இலக்கியத்துள்‌ முக்குழிக்க விடாமல்‌, எதிர்கால சமுதாயத்தைப்‌ பண்படுத்தவே முடியாது என்பதை டொறிக்‌ டி சொய்சா நன்றாகவே அறிந்திருந்தார்‌. நல்ல நினைப்புகளால்‌ நிறைத்து நாட்களிலே ஆருயிர்களை நன்றாக அரவணைக்க ஆதரிக்க அது மன்றாடியது.

நூலகத்தைச்‌ சுற்றி மகாவலி ஜீவநதி அரைவட்டமாக வளைந்தோடும்‌. அதிலே நீண்டு நெடிதாக இருக்கும்‌ மூங்கில்களிலே இராட்சத வெளவால்கள்‌ தலைகீழாகத்‌ தூங்கித்‌ தவம்‌ செய்யும்‌. அதன்‌ பாரம்‌ தாங்காமல்‌ வளைந்த மூங்கில்‌ மன்மதன்‌, தனது ஆயிரம்‌ விரல்களால்‌ மகாவலி மங்கையின்‌ அலைக்கேசத்தைக்‌ கோதும்‌. நதியில்‌ விளையாடிக்‌ கொடுயில்‌ தலை சீவி நடந்த இளந்தென்றலே' என்ற சிலப்திகார அடிகளை கண்ணதாசன்‌ எளிமையாக உருவாக்கியது ஞாபகத்திற்கு வந்து “கொம்பு தழுவாக்கொடுகள்‌ ஏதுமுண்டோ கூடிவாழ உயிர்கள்‌ தானுமுண்டோ' என்று சொல்லி கீதம்பாடும்‌. நூலகத்திற்கும்‌ மகாவலிக்கும்‌ இடையேயுள்ள 'லவ்வேர்ஸ்‌ கோணறி'ல்‌ மானிட மன்மதர்களின்‌ கைவிரல்கள்‌ கொள்ளை அழகுக்‌ குமரிகளில்‌ ஸ்பரிசப்‌ பரிசோதனைகள்‌ அத்தனையையும்‌ செய்து, உணர்வுசார்‌ நுண்ணறிவை உருவாக்கி, நுண்மாண்‌ நுழைபுலம்‌ மிக்கோர்‌ ஆக்குவர்‌. நூலகத்திற்கு முன்னுக்கு ஆட்ஸ்‌ தியேட்டர்‌. அதிலிருந்து நூறு மீட்டர்‌ தூரத்தில்‌ திறந்தவெளி அரங்கு. அது கிரேக்கக்‌ கட்டிடக்‌ கலையின்‌ உச்சப்படைப்பான அம்பி தியேட்டரின்‌ (amphitheater) நகல்‌. இருக்கைகள்‌ ஆரநீளம்‌ மாறுபடும்‌ பொது மையத்தையுடைய அரைவட்ட வடிவில்‌ அமைந்து, ஆரநீளத்திற்கு விகிதாசாரத்தில்‌ உயர்ந்து கொண்டே போய்‌ பார்வையாளர்களின்‌ நோக்கைப்‌ பறப்புப்‌ புள்ளியில்‌ (flight point இல்‌) குவிய வைக்கும்‌ அற்புதக்‌ கலைப்‌ படைப்பு. ஆசியாவிலேயே அதுதான்‌ முதன்முதலாகப்‌ படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப்‌ பல்கலைக்‌ கழகம்‌ யாழ்பாணப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உபவேந்தராகச்‌ சு.வித்தியானந்தன்‌ 1979 ஜனவரியில்‌ வந்தார்‌. யார்‌ இந்த சு.வித்தியானந்தன்‌? இவர்‌ 1965 இல்‌ பேராதனை விஜயவர்த்தனா விடுதியின்‌ வார்டனாக இருந்தார்‌. இவர்‌ விடுதியின்‌ அரிசி மூட்டையைக்‌ களவாகக்‌ காரில்‌ கடத்திச்‌ சென்றார்‌. கடத்திச்‌ சென்ற அரிசி மூட்டை ஒன்றில்‌ ஓட்டை இருந்ததால்‌, அரிசி வழிக்கு வழி கொட்டுப்‌ பட்டுக்‌ கிடக்கவே, விடுதி மாணவர்கள்‌ 'ரோச்லைற்றைப்‌ பிடித்துக்‌ கொண்டு அரிசியைத்‌ தொடர்ந்தனர்‌. அது வார்டனான வித்தியானந்தன்‌ வீட்டிற்குச்‌ சென்றது. இரவோடு இரவாக மாணவர்‌ சங்கத்தைக்‌ கூட்டி அரிசிக்‌ கள்ளன்‌ வித்தியானந்தனை 'வார்டன்‌' பதவியிலிருந்து விலக்கினார்கள்‌. இந்தச்‌ செய்தி அக்காலத்தில்‌ படித்த‌ மற்றும்‌ பிந்திப்‌ படித்தவர்களுக்கும்‌ தெரியும்‌. அரசன்‌ எவ்வழி, குடிகள்‌ அவ்வழி. இது பேராதனைப்‌ பல்கலைக்கழகத்தையும்‌ யாழ்‌ பல்கலைக்கழகத்தையும்‌ ஒப்பு நோக்குவதற்காக மாத்திரமே எழுதப்பட்டது.

பேராதனைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ விசுவானந்ததேவன்‌ காலடியெடுத்து வைத்த முதற்கணத்திலேயே அவர்‌ போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்‌. பதிவின்‌ பிரகாரம்‌ அவருக்கு ’அக்பர்‌ நெல்‌' விடுதி மண்டபம்‌ கிடைத்தது. அவர்‌ நிர்வாகச்‌ சம்பிரதாயங்களை முடித்துக்‌ கொண்டு அறைத்திறப்பை வாங்கிக்‌ கொண்டு அறை எண்‌ 15 வந்து அறையைத்‌ திறக்க எத்தனிக்கும்‌ பொழுதே அறைக்‌ கதவில்‌ திரிசூலம்‌ கீறப்பட்டிருந்ததைக்‌ கண்டார்‌. சீனியர்கள்‌ றாக்கிங்‌ சம்பிரதாயத்தை (பகிடி வதை) சாட்டாக வைத்துக்கொண்டு சூலத்தை விழுந்து கும்பிடும்‌ படியும்‌, காது இரண்டையும்‌ கையாற்‌ பிடித்துத்‌ தோப்புக்‌ கரணம்‌ போடும்படியும்‌ எல்லாப்‌ பக்கத்தாலும்‌ அவரை மிரட்டத்‌ தொடங்கினார்கள்‌. விசுவானந்ததேவன்‌ உருவத்தால்‌ சிறிய மனிதர்‌. உள்ளமோ அதற்கு நேர்மாறு விகிதாசாரத்தில்‌ அமைந்திருந்தது. விசு சிரிப்பதும்‌ அழுவதுமாக நீண்ட நேரம்‌ அமைதிகாத்துவிட்டுக்‌ கதைக்கத்‌ தொடங்கினார்‌. “இலங்கைக்கு இன்னமும்‌ சுதந்திரம்‌ கிடைக்கவில்லையோ? கிறீஸ்தவப்‌ பாதிரிகள்‌ ஒரு கையில்‌ பைபிளும்‌ மறுகையில்‌ துவக்கும்‌ வைத்துக்கொண்டு சுவிஷேசம்‌ சொன்ன வரலாற்றிலிருந்து இப்போதான்‌ நாம்‌ தப்பிப்‌ பிழைத்தோம்‌. மறுசமயம்‌ மாளப்‌ போதகம்‌ பாடித்‌ தமிழர்களை எரித்த திருஞானசம்பந்தரும்‌ திருநாவுக்கரசரும்‌ உங்களின்‌ பூட்டனாரோ? நான்‌ மார்க்சியவாதி. அப்படி நான்‌ என்னை எண்ணும்பொழுதே, மரணசாசனத்தை எழுதிப்போட்டுத்தான்‌ எண்ணினேன்‌. நான்‌ சாகலாம்‌. எனக்கு பிறகாலும்‌ முடநாற்றம்‌ வீசும்‌ மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப்‌ போராட ஆட்கள்‌ இருக்கிறார்கள்‌. நல்ல நினைப்பகன்ற நாட்களிலே ஆருயிரைக்‌ கொல்லக்‌ கனாக்‌ காணும்‌ பக்தர்கட்குப்‌ பஞ்சமேயில்லை. கடவுளை ஏமாற்றி முடிஞ்சுது. ஏமாற்றுவதற்கு ஆட்கள்‌ அருகிப்‌ போய்விட்டதோ… எங்கும்‌ நிறைந்த எல்லாம்‌ வல்ல எல்லாம்‌ அறிந்த பெர்பெக்‌ட் கடவுளுக்கு நான்‌ கடவுளை ஏமாற்றவில்லையென்று கட்டாயம்‌ தெரிந்திருக்கும்‌...”

பிற்காலத்தில்‌ ஏழாம்‌ மாடியிலும்‌ வன்னி பங்கரிலும்‌ நித்திரை கொள்ள விடாமல்‌ சித்திரவதை செய்தது போல விசுவின்‌ முதலிரவு கழிந்து கொண்டிருந்தது. நாலு மணிக்கே கதவு தட்டப்பட்டது. விசு எழும்பிக்‌ கதவைத்‌ திறக்கும்பொழுது, குளிர்‌ தண்ணீர்‌ வாளியிலிருந்து அவரின்‌ மூஞ்சைக்குப்‌ பறந்தது. றாக்கிங்‌ காலத்தில்‌ அது வழமையாக நடக்கும்‌ ஒன்று. உடனே போய்‌ குளித்திட்டு வாவென்று கட்டளை பிறந்தது. விசு குளித்திட்டு வரவே, ஒரு வேட்டியைக்‌ கொடுத்து 'உடனே உடு, கோயிலுக்கு போக வேணும்‌' பல தடவை மிரட்டியும்‌ விசு அசையவில்லை. திடீரென்று, ”நாத்திகம்‌ பேசி நாத்தழும்பேறிய நாயே வேட்டியை உடு என்று சொல்லுவது விளங்கவில்லையா? பூசை நேரம்‌ முடியப்‌ போகுது. கோயிலுக்குப்‌ போக வேணும்‌ வெளிக்கிடு” என்று கத்தினான்‌ ஒருவன்‌. ”இயமகிங்கிரரும்‌ சித்திரபுத்திரனும்‌ சூழ எருமைமாட்டிலே இயமன்‌ பாசக்‌ கயிறோடு வந்தமாதிரி நாடகத்தை ஆடுகிறீர்கள்‌. ஏன்‌ என்‌ பாதத்துளிபட்டுக்‌ கோயிலின்‌ பாவம்‌ தீரவேணுமோ?” என்று கேட்டுக்‌ கொண்டே அழத்தொடங்கினார்‌ விசு…

யாழ்ப்பாணியள்‌ ஒரு நாளும்‌ உண்மையைச்‌ சொல்லிக்‌ கொம்யூனிஸ்டுகளைத்‌ தோற்கடித்தது கிடையாது. இவைகள்‌ நடந்து ஏறத்தாள நாற்பது வருடங்களுக்குப்‌ பின்பு, போன வருடம்‌ கூட ஸ்ருட்காட்‌ ஜேர்மனியில்‌ கிருஷ்ணா என்று பிற்போக்குவாதிகளின்‌ ஏஜண்டு, பேராதனைக்‌ குறிஞ்சிக்‌ குமரன்‌ கோயில்‌ ஐயரின்‌ குடும்பியைக்‌ கொம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்‌ அறுத்தோம்‌ என்று பொய்‌ பரப்பிக்‌ கொண்டு திறியிறார்‌. கொம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான ”விட்டசனி தொட்டசனி” தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சம்பவங்களுக்கு மத்தியிலே, நீர்‌ கொழும்பைச்‌ சேர்ந்த பீரிஸ்‌ என்ற சீனியர்‌ மாணவர்‌ அதன்‌ வழியே போகும்‌ பொழுது விசு அழுவதையும்‌ கதவிலே திரிசூலம்‌ கீறப்பட்டுள்ளதையும்‌ கண்டு விட்டார்‌. அவர்‌ ஒரு கத்தோலிக்கர்‌. தமிழும்‌ சிங்களமும்‌ ஆங்கிலமும்‌ சரளமாகப்‌ பேச வல்லவர்‌. அவரது மூளையில்‌ இந்தக்‌ காட்சி கிறிஸ்தவனொருவனை இந்துவாகக் கட்டாய ஞானஸ்னானம்‌ செய்வது போலத்தோன்றியது. ஆங்கிலத்தில்‌ “இந்துவாக ஞானஸ்நானம்‌ செய்கிறீர்களோ?” என்று அவர்‌ கேட்டார்‌. அவர்‌ அங்கு நின்ற சிறிது நேரத்தில்‌, விசு நாத்திகன்‌ மாத்திரமல்ல, ஓரு மாவோவாதி என்பதையும்‌ அறிந்து விட்டார்‌. இந்தப்‌ பகைப்புலத்திலே நாடகத்தின்‌ திருப்புமுனை வந்து விட்டது. அவர்‌ விசு ஒரு மாவோவாதி என்பதை மாவோவாதிகளுக்குச்‌ சொல்லி விட்டார்‌. எப்படி மைல்‌ கணக்கான அலைநீளமுள்ள சுனாமி நீர்‌ தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமோ அதேபோல விசுவின்‌ அறையை நோக்கி தமிழ்‌, சிங்கள மாவோவாதிகள்‌, விரிவுரையாளர்கள்‌ உட்பட வந்து கொண்டே இருந்தார்கள்‌. இனவாதமில்லாத யாழ்ப்பாண மாணவர்‌ ஒருவரைக்‌ கண்ட புளகாங்கிதம்‌. வனவாசம்‌ நீங்கி நிடத நாட்டுக்கு நளன்‌ திரும்பிய காட்சி,

கார்பேற்ற தோகைபோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயற்ந்த நிறைபலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன்‌ வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைபன்‌ எதிர்.

‌கருமேகத்தைக்‌ கண்ட மயில்கள்‌ எப்படிச்‌ சந்தோசப்படும்‌. வாடின பயிர்‌ மழையைக்‌ கண்டால்‌ எவ்வளவு சந்தோசப்படும்‌. பிறவியிலே கண்பார்வையோடு பிறந்த ஒருவன்‌ இடையிலே சூருடனாகிவிட்டு மீண்டும்‌ பார்வையைப்‌ பெற்றால்‌ எவ்வளவு இன்பம்‌.

இனவாதம்‌ சற்றேனும்‌ மறந்தும்‌ நாதடுமாறிக்‌ கூட வருவது கிடையாது விசுவானந்ததேவனுக்கு. அப்படியான ஒரு தமிழ்‌ மாணவனை இனவாதமில்லாத சிங்கள மார்க்சியவாதிக்கு தேசத்தை மீட்பதற்குக்‌ கிடைத்த நம்பிக்கை நட்சத்திரம்‌. விசுவின்‌ கொலைத்‌ துன்பமும்‌ அப்படித்தான்‌. புகழேந்தியின்‌ மறுதலையாகக்‌ கம்பன்‌. பிறவியிலே குருடனாகப்‌ பிறந்த ஒருவன்‌. இடையிலே கண்பார்வை வரப்பெற்று, மீண்டும்‌ குருடனாகி விட்டால்‌ எவ்வளவு துன்பம்‌, அந்தத்‌ துன்பத்திற்கு எல்லை இருக்கிறதா? விசுவானந்ததேவனுக்கு உயிர்வாழ உரிமை இல்லாத தமிழ்‌ ஈழம்‌ கிடைத்து என்ன பயன்‌?

“செய்தவர்‌ மனம்‌ நோகச்‌ செய்வினைப்‌ பயன்‌ குன்றும்”‌ என்பார்கள்‌. விசுவானந்ததேவனின்‌ கொலை தமிழ்‌ ஈழத்தின்‌ சாவு மணியைக்‌ கட்டியம்‌ கூறியது. இதனை விளங்குவது மிக இலகுவானது. சோசலிசம்‌ பலப்படாவிட்டால்‌ ஜனநாயகம்‌ பலப்பட மாட்டாது. 1977 இல்‌ சோசலிசவாதிகள்‌ ஒருவருமே பாராளுமன்றம்‌ செல்லவில்லை. ஏகாதிபத்தியங்கள்‌ உசார்‌ அடைந்தன. தேசிய விடுதலை என்பது ஜனநாயகப்‌ புரட்சியின்‌ கடமைகளில்‌ ஒன்று. இலங்கையில்‌ உள்நாட்டு யுத்தத்தை மேற்கு ஏகாதிபத்தியங்கள்‌ ஊக்குவித்ததற்கான முதற்காரணம்‌, இந்தச்‌ சந்தர்ப்பம்‌ காலதாமதமாகி விட்டால்‌ தனிச்சொத்துடமையை மீண்டும்‌ கொண்டுவருவதற்கான வாய்ப்பு தப்பிப்‌ போய்விடும்‌. இலங்கை அரசியலில்‌ பாராளுமன்றத்தில்‌ சோசலிசத்தின்‌ பிரதிநிதித்துவம்‌ முற்றாகத்‌ துடைத்தெறியப்பட்டதோடு, உலக பொருளாதாரத்தில்‌ அரச தலையீட்டைக்‌ கோரும்‌ கெயின்வாதம்‌ தோற்கடிக்கப்பட்டு, எல்லாம்‌ தனிச்சொத்துடமை மயமாக வேண்டும்‌ என்ற மில்டன்‌ பீறிட்மன்னின்‌ நிதியில்வாதம்‌ பிரயோகத்திற்கு வந்தது. முதலிற்‌ சிலியிலும்‌ இரண்டாவது இலங்கையிலும்‌ பரிசோதனை தொடங்கப்பட்டது. அரசாங்கம்‌ எதிலுமே தலையிடக்‌ கூடாது, எல்லாமே தனியார்‌ மயமாக வேண்டும்‌. சுதந்திர வர்த்தக வலயம்‌ தொடங்கப்பட்டது. வேலை நிறுத்தம்‌ செய்த தொழிலாளர்கள்‌ அத்தனை பேரும்‌ வேலை நீக்கம்‌ செய்யப்பட்டனர்‌. றேகனும்‌ தட்சரும்‌ ஆட்சிக்கு வந்து தராளமயமாக்கல்‌ பற்றிப்‌ புழுகித்திரிந்த காலம்‌. 2007 செப்டம்பரில்‌ வோல்-ஸ்றீற்‌ பொறியும்‌ வரை தமிழ்‌ சோசலிச விரோதிகளின்‌ அட்டகாசம்‌ சகிக்கவொண்ணாதது. அரச உதவி பெறாத மக்களை, அரசாங்கத்தில்‌ தங்கியிராத மக்களை, அரசாங்கம்‌ கட்டுப்படுத்துவது இயலாதது என்பதன்‌ வெளிப்பாடே இலங்கை உள்நாட்டு யுத்தம்‌.

மீண்டும்‌ விசுவானந்ததேவனுக்குத்‌ திரும்புவோம்‌. விசுவானந்ததேவனது இரண்டு நாள்‌ உணர்ச்சி நரம்புகளை அரிவது நிறுத்தப்பட்டது. நரகம்போய்‌ சொர்க்கம்‌ பிறந்து. பல்கலைக்கழகம்‌ முழுவதும்‌ விசுவானந்ததேவனை “மாவோ என்றே அழைக்கத்‌ தொடங்கினர்‌. பாரதி என்றால்‌ சுப்பிரமணிய பாரதியாரையே அர்த்தப்‌ படுத்தும்‌. அதேபோல்‌ 'மாவோ' என்றால்‌ விசுவானந்ததேவனையே அர்த்தப்படுத்தும்‌. எல்லா அரசியற்‌ கட்சிக்காரர்களும்‌ அவரோடு கலந்துரையாடத்‌ தொடங்கினர்‌. தமிழரசுக்‌ கட்சிக்காரர்களைத்‌ தவிர. அப்பொழுதுதான்‌ ஜே.வி.பி வளரத்‌ தொடங்கியது. அப்பொழுது அவர்கள்‌ 'சேக்குவேரா' என்றே அழைக்கப்‌ பட்டார்கள்‌.


எங்களோடு பல்கலைக்‌ கழகத்திற்குப்‌ புகுந்த நீல்‌ என்ற மாணவர்‌ எனது விடுதி அறைக்குப்‌ பக்கத்து அறையில்‌ இருந்தவர்‌. வேதியலையும்‌ கணிதத்தையும்‌ பாடமாக எடுத்தவர்‌. அதிபர்‌ இரத்தினசபாபதி மாத்தளை மத்தியகல்லூரியில்‌ இருந்த காலத்தில்‌ அவரிடம்‌ படித்தவர்‌. யாழ்ப்பாணக்‌ குடாநாட்டைப்‌ பற்றி அக்கு வேறு ஆணி வேறாகக்‌ கற்றிருந்தார்‌. வடமராட்சியின்‌ மனிதப்‌ பண்பியல்‌ தொடக்கம்‌, அங்குள்ள முக்கிய அரசியல்வாதிகள்‌ அத்தனைபேரினதும்‌ சுயசரிதையைத்‌ தெரிந்து வைத்திருந்தார்‌. யாழ்ப்பாண மக்களினப்‌ புள்ளிவிபரங்களை நுனிநாக்கில்‌ வைத்திருந்தார்‌. கேட்பதற்கே எங்களுக்கு வெட்கமாக இருந்தது.

நீல்‌ சேக்குவேரா அனுதாபியாக இருந்தார்‌. விவாதம்‌ இதுதான்‌: றோகண விஜயவீராவோ சண்முகதாசனோ உண்மையான மார்க்சியவாதி. சண்முகதாசன்‌ தேர்தலில்‌ போட்டியிட்டார்‌. றோகண விஜயவீரா ஒருநாளும்‌ தேர்தலில்‌ நின்றதுமில்லை. தேர்தலைப்‌ பகிஸ்கரிக்கும்படி சொல்வதில்‌ ஓய்ந்ததுமில்லை. சண்முகதாசன்‌ பாராளுமன்றவாதப்‌ பிரமையிலிருந்து நீங்காதவர்‌. அவர்‌ மாவோவாதி அல்ல.

இரண்டாவது அவர்‌ ஒரு 'சேக்குவேரா' பேப்பரிலிருந்து ஜோன்‌ றீட்‌ சொல்லியதை வாசித்துக்‌ காட்டி அதாவது அமெரிக்கக்‌ கறுப்பு இன மக்கள்‌ தங்களை நீக்ரோ அமைப்பென்று சொல்வதோ அல்லது தங்களைத்‌ தொழிலாளர்‌ என்று சொல்வதோ பலம்‌. அமெரிக்காவின்‌ தென்பகுதியில்‌ ஒரு நீக்ரோ தேசத்தை அமைக்கும்‌ கொள்கையையும்‌ ஆபிரிக்காவுக்குத்‌ திரும்பிப்‌ போகும்‌ கொள்கையையும்‌ விட்டுவிட்டு, அவர்கள்‌ தங்களைத்‌ தொழிலாளிகள்‌ என்று சொல்லி தொழிற்சங்கங்களிலும்‌ தொழிலாளி வர்க்கக்‌ கட்சிகளிலும்‌ சேர்ந்து விட்டனர்‌. அதுவே சரியான நிலைப்பாடு என்று மிலிற்றன்‌ பத்திரிகையில்‌ ஜோன்‌ றீட்‌ சொன்னது வந்திருந்தது. சண்முதாசனது சாதி விடுதலையை முன்னணியில்‌ வைக்கும்‌ போராட்டம்‌ தவறானது. சாதியால்‌ ஒடுக்கப்பட்ட தமிழர்கள்‌ அமெரிக்கக்‌ கறுப்பு இன மக்களின்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றித்‌ தங்களைத்‌ தொழிலாளர்கள்‌ என்று சொன்னால்‌, முழுத்தொழிலாளர்களின்‌ ஆதரவும்‌ அவர்களுக்குக்‌ கிட்டும்‌. ஆலயப்‌ பிரவேசப்‌ போராட்டமும்‌ தீண்டாமைக்‌ கொள்கையும்‌ யாழ்பாணத்துள்‌ மட்டுப்பட்டுச்‌ செல்லுபடியாகலாம்‌. சிங்களப்‌ பிரதேசங்களில்‌ ஆயிரத்தி ஐநூறு இந்துக்‌ தேவலாயங்கள்‌ உள்ளன. அங்கு போக எவர்க்கும்‌ தடையில்லை. திருகோணமலை மட்டக்களப்பில்‌ எந்தக்‌ கோயிலுக்குள்ளும்‌ எவரும்‌ போகலாம்‌. இப்பிரதேசங்களில்‌ தீண்டாமையுங்‌ கிடையாது. புள்ளிவிபரப்படி திருகோணமலையிற்தான்‌ அதிகூடிய கலப்புத்‌ திருமணமும்‌ அதிகூடிய போக வாழ்க்கையும்‌ வாழ்பவர்கள்‌. இலங்கையில்‌ அதிகுறைந்த போகு வாழ்க்கையை வாழ்பவர்கள்‌ யாழ்பாணத்தவர்‌. போகக்‌ குறிகாட்டியின்படியும்‌, வருவாய்‌ விகிதாசார நுகர்வின்படியும்‌, வாழ்க்கைத்தரக்‌ குறியீட்டின்படியும்‌, யாழ்ப்பாணமே குறைந்த போக வாழ்க்கையை அனுபவிப்பவர்களாகும்‌. ஆதலால்‌ சண்முகதாசன்‌ யாழ்ப்பாணப்‌ பிரதேசத்துக்குள்‌ மட்டுப்படுத்தப்பட்டதை, இலங்கை முழுவதும்‌ பொதுமைப்படுத்துவது அரசியல்‌ நீதியிற்‌ தவறானது. றோகண விஜயவீராவில்‌ என்ன பிழை கண்டாய்‌? விசுவானந்ததேவன்‌ உடுப்பிட்டியிற்‌ கதைத்த குருஷேவின்‌ போலிக்‌ கொம்யூனிசமும்‌ சோவியத்‌ சமூக ஏகாதிபத்தியம்‌ பற்றியதும்‌ இரண்டு மாவோவாத கன்னைகளுக்குள்‌ பொருத்தமற்றதாக இருந்தது.

அதற்கிடையில்‌ கினக்கல்லைத்‌ தோட்டத்தில்‌ இரண்டு தோட்டத்‌ தொழிலாளர்களை வேலைநிறுத்தப்‌ போராட்டத்தின்‌ போது கொன்றுவிட்டு குப்பை லொறியில்‌ ஏற்றிகொண்டுபோன சம்பவம்‌ நடைபெற்றது. கினக்கெல்லைக்கு மற்றைய மாவோவாதிகளோடு சேர்ந்து இடதுசாரி ஜக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை விசுவானந்ததேவன்‌ முன்னணியில்‌ நின்று நடாத்தினார்‌. உடுப்பிட்டி அமெரிக்கமிஷன்‌ கல்லூரியில்‌ விட்ட கையெழுத்தப்‌ பிரதிகள்‌ போலப்‌ பல்கலைக்கழகத்திலும்‌ தொடர்ந்து வெளியிட்டார்‌.

மக்கள்‌ சீனப்‌ பிரசுரப்‌ புத்தகசாலை கம்பளையில்தான்‌ இருந்தது. ஓவ்வொரு சனி காலையிலும்‌ காலைப்போசனம்‌ முடிந்தபின்‌, இருவரும்‌ பேரூந்தில்‌ போவோம்‌. இரண்டு பேரும்‌ 'பீக்கிங்‌ றிவியூ'வின்‌ சந்தாதாரானோம்‌. மாவோவின்‌ மேற்கோள்கள்‌ கலண்டருக்குள்‌ அக்குப்பன்சர்‌ புத்தகங்கள்‌, லின்பியாவோன்‌ படங்கள்‌, கவிதைப்‌ புத்தகங்கள்‌ என்று ஒரு கொள்ளை வாங்கி வருவோம்‌. நான்‌ மார்க்ஸ்‌, ஏங்கல்‌, லெனின்‌ மற்றும்‌ புரட்சி வரலாறு பற்றிய புத்தகங்களையே வாங்குவேன்‌. அடுத்து ஜென்னிங்ஸ்‌ என்ற ஒரு வருடம்‌ மூத்த மாணவரோடு விசுவானந்ததேவனுக்கு நடந்த விவாதம்‌. அவர்‌ ஹற்றனைச்‌ சேர்ந்தவர்‌. அவரது நண்பர்களும்‌ உறவினர்களும்‌ செங்கொடிச்‌ சங்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌. அவர்‌ அழகாக ஆங்கிலம்‌ பேசுவார்‌. மிகுந்த பொறுமைசாலி. எவ்வளவு நேரமானாலும்‌ மிகப்‌ பொறுமையோடு கிரகிப்பார்‌. எந்தத்‌ தமிழரும்‌ அவரோடு தர்க்கித்து வென்றதை நான்‌ காணவில்லை. அவ்வளவு பெரிய தர்க்கத்‌ திறமை வாய்ந்தவர்‌.

விவாதம்‌: வரலாற்றுப்‌ பொருள்‌ முதல்‌ வாதம்‌. மார்க்ஸ்‌ ஏங்கல்ஸ்‌ லெனினுடனான வரலாற்றுத்‌ தொடர்ச்சியைப்‌ பேணுவதும்‌, முதலாம்‌ இரண்டாம்‌ முன்றாமகிலத்தின்‌ லெனின்‌ கலந்துகொண்ட காங்கிரஸ்‌ சம்பிரதாயத்தின்‌ கீழ்‌ உட்கட்சிப்‌ பிரச்சனைகளைத்‌ தீர்ப்பதும்‌.

கேள்வி: நீங்கள்‌ மூன்றாமகிலத்தை ஏற்கிறீர்களா? மூன்றாமகிலத்தை ஏற்காதவர்களுக்கு எவ்வாறு லெனினோடு வரலாற்றுத்‌ தொடர்ச்சியிருக்கும்‌? லெனினோடு வரலாற்றுத்‌ தொடர்ச்சி அற்றவர்களுக்கு, எவ்வாறு மார்க்ஸ்சோடும்‌ ஏங்கல்ஸ்சோடும்‌ வரலாற்றுத்‌ தொடர்ச்சியிருக்கும்‌? மே 15, 1943இல்‌ ஸ்டாலின்‌ மூன்றாமகிலத்தைக்‌ கலைத்துவிட்டார்‌. கவுட்ஸ்கி இரண்டாமகிலத்தைக்‌ காட்டிக்‌ கொடுத்த பொழுது, லெனின்‌ மூன்றாமகிலத்தைக்‌ கட்டினார்‌. ஏன்‌ மூன்றாமகிலம்‌ நீடு வாழ்கவென்றா? அல்லது மாக்ஸ்சோடும்‌ ஏங்கல்ஸ்சோடும்‌ உள்ள வரலாற்றுத்‌ தொடர்ச்சியைப்‌ பேணுவதற்காகவா. அப்பொழுது மூன்றாமகிலத்திற்கு வெளியில்‌ எந்த மார்க்ஸ்சிய இயக்கமும்‌ இருக்கவில்லை. ஆம்ஸ்ரடாமில்‌ கூடிய இரண்டரையாம்‌ அகிலத்தை லெனின்‌ ஏற்கவில்லை. அதிலிருந்த எவரையும்‌ மார்க்சியவாதியாகக்‌ கூட ஏற்கவில்லை. ஏன்‌ ஸ்ராலின்‌ மூன்றாமகிலத்தைக்‌ கலைக்கும்பொழுது மாவோ தடுக்கவில்லை? உலகம்‌ முழுவதும்‌ மாவோவாதக்‌ கட்சிகள்‌ இருக்கின்றன, ஏன்‌ உலக காங்கிரசைக்‌ கூட்டவில்லை? றோகண விஜயவீராபோல போறவன்‌, வாறவன்‌ எல்லாம்‌ தங்களை மார்க்சியவாதிகள்‌ என்றால்‌, மார்க்சியத்தின்‌ பாரம்பரிய உரிமை யாருக்கு? லெனின்‌ எழுதிய மூன்றாமகிலத்தின்‌ சட்டதிட்டப்படி ஒரு நாட்டில்‌ ஒரேயொரு கட்சியைத்தான்‌ மூன்றாமகிலம்‌ அங்கீகரிக்கும்‌. மற்றவையெல்லாம்‌ மார்க்சியக்‌ கட்சிகள்‌ இல்லை. இலங்கையிலே வானவில்லின்‌ வர்ண ஜாலத்தில்‌ மார்க்சியக்‌ கட்சிகள்‌ இருக்கின்றன. அதில்‌ ஒரேயொரு கட்சிக்குத்தான்‌ மார்க்ஸ்‌, ஏங்கல்ஸ்‌, லெனினின்‌ பாரம்பரிய உரிமை உண்டு. இதை ஏற்காதவர்கள்‌ எல்லாம்‌ தொழிலாளர்களை வியாகூலப்‌ படுத்துபவர்கள்‌. மார்க்சியம்‌ ஒரு நுட்பமான விஞ்ஞானம்‌.

சில நாட்கள்‌ கழிய விஞ்ஞான பீட முன்றலால்‌ நான்‌ நடந்துகொண்டு வந்தேன்‌. ஜென்னிங்ஸ்‌ எதிர்ப்பட்டு 'எங்கே போகிறாய்‌?” என்று கேட்டார்‌. நான்‌, 'ஒஸ்மன்‌ ஜெயரத்தினாவின்‌ கூட்டத்திற்குப்‌ போகிறேன்‌' என்றேன்‌. ஒஸ்மன்‌ ஜெயரத்தின எனது பெளதிக விரிவுரையாளர்‌. சமசமாஜக்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்‌. ஜென்னிங்ஸ்‌ சொன்னார்‌: ”ஒஸ்மன்‌ ஜெயரத்தினாவுக்கு மார்க்சியத்தின்‌ ஏ.பி.சி தெரியாது” என்‌.எம்‌.பெரேராவும்‌ கொல்வின்‌ ஆர்‌.டி சில்வாவும்‌ சொல்லிறதெல்லாம்‌ மார்க்சியமல்ல. என்ன மார்க்ஸ்‌ சொன்னாரோ, அதுதான்‌ மார்க்சியம்‌. என்ன லெனின்‌ சொன்னாரோ. அதுதான்‌ லெனினிசம்‌. Behave like a peradeniya undergraduate. Drink the water in the fountin“ என்று கூறி என்னைப் பேராதனை நூல்‌ நிலையத்திலே படிக்கும்படி கூறினான்‌.

பேராதனை நூல்‌ நிலயத்தின்‌ மூன்றாமாடியில்‌ மார்க்சியப்‌ பகுதி இருந்தது. மார்க்ஸ்‌, ஏங்கல்ஸ்‌, லெனின்‌, ஸ்டாலின்‌ போன்றவர்களின்‌ மொத்தப்‌ படைப்புகளும்‌ ரொட்ஸ்கி, மாவோ போன்றோரின்‌ அனேக பாகங்களும்‌, இன்னும்‌ எண்ணுக்கணக்கற்ற அரசியல்‌ இலக்கியங்களும்‌ இருந்தன. அதிலே சில முக்கிய பாகங்களை முதலிற்படிக்கும்‌ படி காட்டிவிட்டு, சஞ்சிகைப்‌ பகுதிக்குக்‌ கூட்டிச்சென்று சமகால மார்க்சிய சஞ்சிகைளைக்‌ காட்டினார்‌. No news is better than bad news. சமுதாயத்திற்கு உண்மையைத்தான்‌ சொல்ல வேண்டும்‌. உண்மையை மாத்திரம்தான்‌ சொல்ல வேண்டும்‌. உண்மையைத்‌ தவிர வேறொன்றையும்‌ சொல்லக்கூடாது. வர்க்க எதிரிக்கு என்ன வேண்டுமானாலும்‌ சொல்லலாம்‌. எங்களை விசுவாசிப்பவர்களுக்கு விசுவாசமாக நடப்பது கட்டாய கடமையாகும்‌. மாவோ சொல்கின்ற ”நூறு பூ மலரட்டும்‌” என்பது றபிஸ்‌, அதிலே தொண்ணூற்றொன்பது பூ கருத்துவாதமாக இருக்கும்‌. இயங்கியற்‌ சடவாதத்திற்கும்‌ கருத்துவாதத்திற்கும்‌ ஒரு மயிரிடையே வித்தியாசம்‌. மார்க்சியம்‌ ஒரு நுட்பமான விஞ்ஞானம்‌. அதைக்‌ கஷ்டப்பட்டுக்‌ கற்று வரலாறு சாதகமாக வருமளவும்‌ பொறுமையோடு காத்திருக்க வேண்டும்‌. ஒட்டுமொத்த சமுதாயத்தின்‌ கமையை என்னையோ உன்னையோ பிரதியிடுவது சாகஸவாதம்‌. வரலாற்றுக்குக்‌ குறுக்கு வழி கிடையாது. சிக்காலான பிரச்சினைக்கு இலகுவான தீர்வு இருக்குமென்றால்‌ நாம்‌ ஏன்‌ சர்வகலாசாலைக்கு வரவேண்டும்‌?

ஜே.வி.பி அதீத வேகத்தில்‌ வளர்ந்துகொண்டிருந்தது. அவர்களது சுவரொட்டிக்கலை பிரமிப்பு நிறைந்தது. றோகண விஜயவீரா பேராதனை வளாகத்‌ திறந்தவெளியரங்கில்‌ உரைநிகழ்த்த வரவிருந்தார்‌. அதற்குவரும்படி நீல்‌ விசுவானந்ததேவனிடம்‌ சொல்லி என்னையும்‌ அழைத்துவரும்படி கூறியிருந்தார்‌. அப்பொழுது பேராதனையில்‌ மழைக்காலமாக இருந்தது ஞாபகம்‌. விசுவானந்ததேவனும்‌ நானும்‌ போனோம்‌. விசுவானந்ததேவன்‌ எந்தச்‌ சிங்கள, ஆங்கில அரசியற்‌ கலந்துரையாடலுக்கும்‌ போவார்‌. மொழிப்பலம்‌ இல்லாத அந்தக்காலத்திலும்‌ அங்குபோய்‌, மிக அடக்கமாகச்‌ செதுக்கி வைத்த சிலைபோல நின்று விடயங்களைக்‌ கிரகிக்க முயற்சிப்பார்‌. ஒருநாளும்‌ இடைநடுவில்‌ எழும்பி வரமாட்டார்‌. அதுவே அவரது மாபெரும்‌ பலத்தில்‌ ஒன்று. ஒருநாளும்‌ ஜே.வி.பி காரர்களைத்‌ தொழிலாளர்‌ பிரநிதிகள்‌ ஸ்தானத்திலிருந்து இறக்கி வைத்தது கிடையாது. அவர்களுக்கு உலகத்தொழிலாளரின்‌ பிரதிநிதிகள்‌ என்ற மாபெரும்‌ கெளரவத்தையும்‌ அந்தஸ்தையும்‌ கொடுத்துத்தான்‌ கலந்துரையாடல்கள்‌ நடைபெறும்‌. பிற்காலத்தைய புலம்பெயர்‌ “தமிழ்‌ ஐரோப்பிய இலக்கியச்‌ சந்திப்பு'க்காரர்கள்போல, எடுத்தெறிந்தும்‌ ஏளனம்‌ செய்தும்‌ ஏனோதானோ என்றும்‌ காட்டுக்‌ கூச்சல்‌ போட்டுக்‌ கதைக்க மாட்டார்‌. நாம்‌ இருவரும்‌ நீலைத்‌ தேடிப்‌ பார்த்தோம்‌. கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே சனக்‌ கூட்டம்‌. அரங்குக்கு போக முற்பட்டோம்‌. ஒருவர்‌ தடுத்து, அது அங்கத்தவர்களுக்கு மாத்திரமான கூட்டம்‌, வெளியாருக்கு அனுமதி கிடையாது என்றார்‌. சிறிது நேரம்‌ நீல்‌ வரக்‌ கூடும்‌ என்று காத்திருந்தோம்‌. வேறொருவர்‌ வந்து அது சிங்களத்தில்‌ நடக்கும்‌ கூட்டம்‌. உங்களுக்கு விளங்குவதற்குக்‌ கஷ்டமாகும்‌ என்றார்‌. நாம்‌ இங்கு வந்ததாக நீலுக்குத்‌ தயவுசெய்து சொல்லும்படி கூறிவிட்டு, அடிக்கடி எமக்காகக்‌ காத்திருக்கும்‌ ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டோம்‌.

ஜே.வி.பியின்‌ பேராதனை வளாகத்தலைவர்‌ கீரவெல்லை. பிற்காலத்தில்‌ அரசதரப்பு சாட்சியாக மாறி ஜே.வி.பியைக்‌ காட்டிக்‌ கொடுத்தவர்‌. மாவோ வாதத்தின்‌ இந்தியத்‌ தேச விஸ்தரிப்புக்‌ கொள்கைக்கு எதிரான போராட்டம்‌; அவரது விவாதம்‌, தோட்டத்தொழிலாளர்கள்‌ இந்தியத்‌ தேச விஸ்தரிப்புக்காகவே இங்கு வந்தவர்கள்‌. அவர்களது லய வீடுகளில்‌ காந்தி, நேரு மற்றும்‌ இந்தியத்‌ தேசவிடுதலைத்‌ தலைவர்களின்‌ படங்களே தூங்குகின்றன. அவர்கள்‌ தேசபக்தி இல்லாதவர்கள்‌. இலங்கை அரசியற்‌ தலைவர்களின்‌ ஒரு படத்தைக்‌ கூடக்‌ காண முடியாது. அதற்கெதிராக விசு ஏதும்‌ பெரிய விவாதத்தை வைத்தது என்‌ நினைவில்‌ இல்லை. நான்‌ சொன்னேன்‌, ”அவர்கள்‌ மக்கள்‌ சீனம்‌ பிறக்க முந்தியே ஒல்லாந்தர்களால்‌ பெருந்தோட்டப்‌ பயிர்ச்‌ செய்கைக்காக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்‌ அப்பொழுது இந்தியா என்ற சொல்லும்‌ பிறக்கவில்லை, சுதந்திரமென்ற என்ற சொல்லும்‌ பிறக்கவில்லை. இந்திய உபகண்டம்‌ 94 குறுநில மன்னர்களின்‌ ஆட்சியாக இருந்தது. அப்பொழுது ஒல்லாந்து பெரிய பணக்காரத்தேசம்‌. இங்கிலாந்தையும்‌ பிரான்சையும்‌ விடப்‌ பத்துமடங்கு பணக்கார நாடு. மேர்க்கண்டைலிசம்‌ என்ற கொள்ளை இலாப வர்த்தகத்தைக்‌ கண்டுபிடித்தவர்களே ஒல்லாந்து யூதர்கள்‌. மத்தியதரைக்‌ கடல்‌ வர்த்தகம்‌, ஆட்டிறியக்‌ கடலூடன வேனிஸ்‌ வர்த்தகம்‌, பால்டிக்‌ கடலூடான 'செயிண்ட்‌ பீட்டஸ்பேர்க்‌' வர்த்தகம்‌, கிழக்கிந்தியத்‌ தீவு வர்த்தகம்‌, அட்லாண்டிக்‌ வர்த்தகம்‌. எல்லாமே ஒல்லாந்தரின்‌ கையிலிருந்தது. அந்த வர்த்தக நடவடிக்கையின்‌ ஒரு பாகமாக இங்கு கொண்டு வரப்பட்டார்கள்‌. முதலாவது அடிமை வியாபாரமான ஜாவா அடிமைகளை ஜாவா மன்னனோடு சேர்ந்து செய்யும்பொழுது, அவர்களைச்‌ சிலேவ்‌ ஜலண்டில்‌ கொண்டு வந்து வைத்திருந்துவிட்டுத்தான்‌, அமெரிக்காவுக்குக்‌ கொண்டு போனார்கள்‌. தோட்டத்‌ தொழிலாளர்களைக் கங்காணி கூலிமுறை ஒப்பந்தத்தில்தால்தான்‌ கொண்டு வந்தார்கள்‌. அப்பொழுது அமெரிக்கப்‌ புரட்சியோ மாபெரும்‌ பிரெஞ்சப்‌ புரட்சியோ நடக்கவில்லை. சுதந்திரம்‌, சகோதரத்துவம்‌, ஜனநாயகம்‌ என்ற சொல்லே பிறக்கவில்லை. ஏன்‌, தேசங்களே பிறக்கவில்லை. தேசங்கள்‌ முதலாளித்துவ வளர்ச்சியின்‌ பின்பே உருவானவை. தேசிய அரசமைப்பு முறை, முதலாளித்துவத்தின்‌ கீழேயே வந்தது. தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ மேர்க்கண்டைலிசத்தின்‌ கீழ்‌ கொள்ளை இலாபக்‌ கொம்பனி வர்த்தகத்தின்‌ கீழ்‌ குடியேற்றப்‌ பட்டவர்கள்‌. அப்பொழுது அவர்களது வாழ்க்கைத்‌ தரமும்‌ சராசரி இந்திய உபகண்டப்‌ பிரஜைகளை விடப்‌ பெரியது. அல்லாவிடில்‌ அவர்கள்‌ இங்கே நின்று பிடித்திருக்கமாட்டார்கள்‌. தேசவிஸ்தரிப்புக்‌ கலைச்சொல்‌, விஞ்ஞான விரோதக்‌ கலைச்சொல்‌. இந்தியா என்ற சொல்லோ, மக்கள்‌ சீனம்‌ என்ற சொல்லோ இலக்கியத்திற்கு வராதகாலம்‌.

முதலாளித்துவமும்‌ தேசங்களும்‌ தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ இலங்கைக்கு வந்த பின்னர்தான்‌ உருவாக்கம்‌ பெற்றது. முதலாளித்துவம்‌, தொழிற்புரட்சிக்குப்‌ பிறகே உருவானது. தொழிற்புரட்சியின்‌ முதலாவது கண்டுபிடிப்பே, விசை மூலம்‌ இயங்கும்‌ கைத்தறியாகும்‌. முதலில்‌ அது நீருளைகள்‌ மூலமே இயக்கப்பட்டன. நீராவி இயந்திரமும்‌ தானியங்கித்‌ தொழில்நுட்பமும்‌ பின்பே புகுத்தப்பட்டன. விசைக்கைத்தறி அமெரிக்காவில்‌ உபரியாகப்‌ பருத்தி உற்பத்தி செய்ததன்‌ பின்னரே கண்டு பிடிக்கப்பட்டது. அதுவும்‌ அமெரிக்காவிற்காகத்தான்‌ கண்டுபிடிக்கப்பட்டது. பருத்தி உற்பத்தி நீக்ரோ அடிமை வர்த்தகத்தின்‌ உச்சக்‌ கட்டத்தில்தான்‌ ஏற்பட்டது. பருத்தி உற்பத்தியை ஒல்லாந்தர்‌ அமெரிக்காவுக்கு முன்னரும்‌, பெருந்தோட்டக்‌ கோப்பி பயிர்ச்‌ செய்கைக்கு முன்னரும்‌, இலங்கையில்‌ பரிசோதித்தனர்‌. பருத்தித்துறைத்‌ துறைமுகம்‌ என்ற பெயர்‌ அந்நாளிலேயே உருவானது. மற்றைய எஃகு உற்பத்தி நீராவிப்‌ பேரூந்து, இரும்புப்பாதை, பெருந்தூரப்‌ போக்குவரத்து, மோர்ஸ்‌ கோட்‌ தந்தி, மின்விசை, மின்‌ வேதியல்‌, உழவு இயந்திரம்‌ கோதுமைச்‌ செய்கை எல்லாமே பின்பு வந்தவை. முதலாளித்துவம்‌ என்பது எடிசன்‌, டன்லப்‌ அடம்‌ சிமித்‌ காலம்‌.

இந்தியா சுதந்திரம்‌ அடைந்த பின்‌ எவரும்‌ வரவில்லை. இலங்கை சுதந்திரம்‌ அடையும்‌ பொழுதே, பிரஜா உரிமைச்சட்டமும்‌ கள்ளத்தோணிச்‌ சட்டமும்‌ வந்தன. இந்திய - சீன யுத்தம்‌ பிரித்தானியச்‌ சதியால்‌ ஆத்திரமூட்டப்பட்டது. இந்தியாவைப்‌ பிரதிநிதித்துவப்‌ படுத்த மக்கள்‌ சீனத்தில்‌ எவரும்‌ இருக்கவில்லை, மக்கள்‌ சீன நலனைக்‌ காக்க, சீ.பி.ஐ மார்க்சிஸ்ட்‌ கொம்யூனிஸ்ட்‌ கட்சி இந்தியாவில்‌ இருந்தது. ஏன்‌ மக்கள்‌ சீனம்‌ இந்தியத்‌ தொழிலாளர்களுக்கு அறைகூவல்‌ விடவில்லை? ரஸ்சியப்‌ புரட்சியின்‌ பின்பு, 14 நாடுகள்‌ சோவியத்‌ யூனியனை ஆக்கிரமித்தன. ஆயுதத்‌ தளபாடங்களை நகர்த்த விடாமல்‌ காபர்‌ நெயில்‌ தொழிலாளர்கள்‌ வேலை நிறுத்தம்‌ செய்து தடுத்தார்கள்‌. ஒரு தொழிலாளி வர்க்க அரசு தொழிலாளி வர்க்கப்‌ போராட்டமுறைகளைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌. ஏன்‌ மார்க்சிஸ்ட்‌ கட்சி, மார்க்சிய சம்பிரதாயத்தைக்‌ கடைப்‌ பிடிக்கவில்லை? பிஸ்மார்க்‌ பிரான்சை ஆக்கிரமித்த பொழுது, பெபெல்‌ ஒரு மனிதனையோ ஒரு செப்புக்‌ காசையோ ஜேர்மன்‌ அரசுக்குக்‌ கொடுக்க வேண்டாமென்று அறைகூவிச்‌ சிறை சென்றார்‌. முதலாம்‌ உலக யுத்தத்தின்போதும்‌ கார்ல்ஸ்‌ லீப்னெக்ட்‌ அதே கோசத்தையே வைத்தார்‌. (அண்மையில்‌ ரஸ்சியப்‌ போர்‌ விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய பொழுது புட்டின்‌ உடனடியாகப்‌ போர்ப்‌ பிரகடனம்‌ செய்யவில்லை.) ஆத்திரமூட்டலைத்‌ தோற்கடிப்பது மார்க்சியத்தின்‌ பணியாகும்‌. ஏன்‌ ஒவ்வொரு மேதினத்திலும்‌ இராணுவ வாதத்திற்கு எதிரான சுலோகங்களைத்‌ தொழிலாளர்‌ வைக்க வேண்டும்‌ என்று லெனின்‌ பிரகடனப்படுத்தினார்‌? சோவியத்‌ யூனியன்‌ ஜேர்மன்‌ ஏகாதிபத்தியத்தோடு 1918 இல்‌ சமாதானப்‌ பேச்சுவார்த்தைக்குப்‌ போன பொழுது, றோசா லக்ஸ்சம்‌ பேர்க்‌ மனக்கிலேசமடைந்தார்‌. ஒன்று, உலக போல்சவிசத்தில்‌ ஜேர்மன்‌ தொழிலாளர்கள்‌ சந்தேகப்படுவர்‌. அடுத்தது, ஜேர்மன்‌ தொழிலாளி வர்க்கப்‌ பலத்தில்‌ லெனின்‌ நம்பிக்கை இழந்து போனாரோ என்ற சந்தேகம்‌. இந்திய முதலாளித்துவம்‌ எவ்வளவு கொடூரமாக மக்கள்‌ சீனத்தை அழித்தாலும்‌, இந்தியத்தொழிலாளி வர்க்கத்தில்‌ நம்பிக்கை இழந்தால்‌ அவர்கள்‌ மார்க்சியவாதிகள்‌ இல்லை. நடுத்தர வர்க்க றடிக்கல்‌ வாதிகள்‌. சிங்களப்‌ பிற்போக்குவாதிகள்‌ எவ்வளவு தமிழ்‌ அழிவைச்‌ செய்தாலும்‌, சிங்கள தொழிலாளிவர்க்கத்தின்‌ வர்க்கப்‌ பாரம்பரியத்தைச்‌ சந்தேகிப்போமானால்‌ நாம்‌ மார்க்சியவாதிகளாக ஒரு நாளும்‌ ஆக மாட்டோம்‌. இதுதான்‌ லெனினிசம்‌. கீரவல்லை சமூக விஞ்ஞான இளம்கலை மாணவன்‌. விசுவானந்ததேவன்‌ பொறியியல்‌ மாணவன்‌. நானோ கணித, பெளதிக மாணவன்‌. கீரவல்லைக்குத்‌ தொழிற்துறை வரலாறோ, பொருளாதார வரலாறோ வர்க்கப்‌ போராட்ட வரலாறோ, பெரிதாகத்‌ தெரிந்திருக்கவில்லை. சமூக விஞ்ஞானத்‌ துறையும்‌ புள்ளிவிபரத்துறையும்‌ அப்பொழுதுதான்‌ இலங்கைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. தகைமை வாய்ந்த விரிவுரையாளர்கள்‌ இருக்கவில்லை. விரிவான பாடவிதானமும்‌ இருக்கவில்லை. தமிழ்த்துறையில்‌, சிவராசா என்ற 'வெற்றுக்‌ கோம்பை'யே விரிவுரையாளர்‌. அவர்‌ முறமெடுத்துப்‌ புலி அடித்த பழங்கதை பேசும்‌ செக்கு மாடு. துன்பம்‌ என்னவென்றால்‌, இந்தியத்‌ தேச விஸ்தரிப்புக்‌ கொள்கையை விசுவானந்ததேவன்‌ நிராகரிக்கவில்லை. நானோ அதை அங்கீகரிக்கவில்லை மாத்திரமல்ல, முற்றாக நிராகரித்தேன்.‌ இதுவே இருவருக்குமிடையே தோன்றிய முதலாவது விரிசல்‌. அன்றிருந்தே நான்‌ மாவோவாதத்தை லெனினின்‌ கண்ணால்‌ மீளாய்வு செய்யத்‌ தொடங்கினேன்‌.

1971 ஆம்‌ ஆண்டு ஏப்பிரல்‌ 4 ந்‌ தேதி பேராதனைப்‌ பல்கலைக்கழக மார்ஸ்‌ ஹோலில்‌ குண்டு வெடித்தது. எஸ்‌.பி சண்முகன்‌ தலைமையில்‌ பேராதனைப்‌ பல்கலைக்கழகம்‌ வேட்டைக்‌ காடாக்கப்பட்டது. அவசரகாலச்‌ சட்டம்‌ பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு விடுதி அறையும்‌ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. விசுவை, எமது பாடசாலையில்‌ இருந்து வந்தவர்களே கிட்ட அணுக விடவில்லை. விசுவின்‌ அறை நிறைய மார்க்சிய இலக்கியங்கள்‌, கையெழுத்துப்‌ பிரதிகள்‌. மார்க்சியவாதிகளின்‌ விலாசங்கள்‌. என்னுடைய புத்தகங்கள்‌ கால்வாசிதான்‌ இருக்கும்‌, விசு விடுதியில்‌ வேலை செய்யும்‌ ஒரு தோழரின்‌ உதவியை நாடினார்‌. நான்‌ பேராதனைச்‌ சந்தியில்‌ ஒரு முஸ்லீம்‌ பேக்கரியில்‌ வேலை செய்யும்‌ வீரன்‌ என்ற தோழரின்‌ உதவியை நாடினேன்‌. எமக்குத்‌ தெரிந்த தோழர்கள்‌ அனேகர்‌ கைது செய்யப்பட்டு விட்டனர்‌. கட்சியின்‌ பாதுகாப்பு எமக்குக்‌ கிடையாதென்பது உசிதமானது. இருவரின்‌ புத்தகங்களும்‌ கிடங்கு கிண்டி விடுதிக்கு வெளியில்‌ உள்ள இடத்தில்‌ வீரன்‌ தாட்டு விட்டார்‌. பேராதனை வளாக மாணவர்‌ முழுப்பேரும்‌ பஸ்களில்‌ கொழும்புக்குக்‌ கொண்டு சென்று சிராபஸ்தியில்‌ அடைக்கப்பட்டோம்‌. இரண்டு நாட்கள்‌ சாப்பாடு கிடையாது. ரி.பி.இலங்கரத்தினா சிராபஸ்திக்கு வந்து பயங்கரவாதிகள்‌ அத்தனை பேரையும்‌ சுட்டு நாற விடுவோம்‌ என்று சூளுரைத்தார்‌. கொழும்பிலிருந்து யாழ்பாணத்திற்குப்‌ பேரூந்து இல்லை. இரத்மலானையிலிருந்து விமான மூலம்‌ பலாலிக்கு வந்து விட்டோம்‌. கொழும்பில்‌ இருந்த உறவினர்‌ ஒருவரிடம்‌ காசு கடன்‌ வாங்கினோம்‌. நாங்கள்‌ இருவரும்‌ தோட்டக்காரரின்‌ பிள்ளைகள்‌. ஆதலால்‌ வீட்டில்‌ உள்ள புத்தகங்களை அப்புறப்‌ படுத்துவது கடினமாக இருக்கவில்லை. பெற்றோருக்கு எமக்கு இருக்கும்‌ அபாயம்‌ அவ்வளவு தெரியவில்லை. இரண்டு மாதமாக இருவருக்கும்‌ தொடர்பில்லை. இரண்டு மாதத்திற்குப்‌ பிறகு விசு எனது சேமம்‌ விசாரிக்க ஒரு சிறுவனை அனுப்பினார்‌. தமிழர்கள்‌ ஜே.வி.பியில்‌ இராததால்‌, வடமராட்சியில்‌ ஊரடங்குச்‌ சட்டமேயொழியத்‌ தொல்லைகள்‌ இல்லை. ஒரேயொரு சம்பவம்‌: எம்‌ இருவரின்‌ நண்பரான சின்னச்சோதி, தொண்டமனாற்றுப்‌ பள்ளிக்கூடத்தில்‌ கைக்குண்டு செய்யும்பொழுது, குண்டு வெடுத்து யாழ்‌ பெரியாஸ்பத்திரியில்‌ அனுமதிக்கப்பட்டார்‌. பின்னாளில்‌ சின்னச்சோதி பாண்டிபஜார்‌ துப்பாக்கிச்‌ சூட்டை அடுத்துப்‌ பிரபாகரனோடு சிறை வைக்கப்பட்டவர்‌. அவரே துரையப்பா சூட்டுக்குப்‌ பிறகு இந்தியாவுக்குத்‌ தப்பியோடிய தமிழ்‌ இளைஞர்களைத்‌ தமிழ்‌ நாட்டில்‌ ஆதரித்தவர்‌. தமிழீழப்‌ போராட்டத்தின்‌ தொடக்க நபர்‌ சின்னச்சோதியென்றால்‌ கூட, அது மிகையாகாது.

நிலமை சிறிது மாமூலாகவே, இருவரும்‌ ஆண்டுக்கு ஒருக்கால்‌ ஆவணியில்‌ ஒருக்கால்‌ என்று சந்தித்தோம்‌. ஒரு தடவை எம்மூரில்‌ சந்திரன்‌ என்பவரோடு தற்செயலாகச்‌ சந்திக்கவும்‌, சிறிதளவு பேசவும்‌ சந்தர்ப்பம்‌ ஏற்பட்டது. அவர்‌ பொருளியலில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்றவர்‌. நான்‌ அவரோடு அதிகம்‌ கதைக்க விரும்பவில்லை. வயதுக்கு மூத்தவர்களோடு சரிக்குச்சரி இருந்தால்‌, 'கைம்பெண்டாடிச்சி வளர்த்த பிள்ளை' என்று சொல்லுவார்கள்‌ என்ற அம்மாவின்‌ சுப்பிரபாதம்‌ மனப்பலத்தைக்‌ குறைத்திருந்தது (traumatic effect). விசுவானந்ததேவனுக்கு அரசியல்‌ விவாதமென்றால்‌ செக்கென்ன சிவலிங்கமென்ன. சிறிது அளவளாவலின்‌ பின்னரே சந்திரன்‌ விசுவுக்குச்‌ சொன்னார்‌, கொம்யூனிஸ்ட்‌ கட்சிக்குள்ளே சாதிவெறிக்கு எதிராகப்‌ போராடாதவன்‌, வெளியில்‌ என்னென்று போராடப்‌ போகிறான்‌? சண்முகதாசன்‌ உட்கட்சிப்‌ போராட்டம்‌ நடாத்திய பின்னரா பிரிந்து போனார்‌? 1903 இல்‌ போல்ஸ்விக்‌ மென்சவிக்‌ பிரிந்த மாதிரியா நீங்கள்‌ பிரிந்தீர்கள்‌? அப்படியொரு மாநாடு நடந்ததா? அந்த மாநாட்டின்‌ அனுபவத்தை லெனின்‌, ஓரடி முன்னால்‌ ஈரடி பின்னால்‌ என்று வெளியிட்டது போல, சண்முகதாசன்‌ வெளியிட்டாரா? கொம்யூனிஸ்ட்‌ கட்சியைப்‌ பிளவுபடுத்தியது ஒரு சீனச்‌ சதி. 1964 சமசமாஜக்‌ கட்சி மகாநாடு நடாத்திப்‌ பிரிந்து போனமாதிரியா நீங்கள்‌ பிரிந்து போவீர்கள்‌?

சரி, கேள்வி: மாற்றம்‌. சாதியொழிப்பு சீர்திருத்தத்தால்‌ வருமா? புரட்சியால்‌ வருமா? விடை, புரட்சியால்‌. அப்படியென்றால்‌ புரட்சியை யார்‌ செய்வது? தொழிலாளி வர்க்கம்‌. தொழிலாளி வர்க்கம்‌ இப்பொழுது புரட்சி செய்யக்‌ கூடிய பலமான வர்க்கமாக இருக்கிறதா? இல்லைப்‌ பலவீனமாக இருக்கிறது. இந்தப்‌ பலவீனமான தொழிலாளி வர்க்கத்தின்‌ உணர்மையடைந்த பகுதிதானே கொம்யூனிஸ்ட்‌ கட்சி. கட்சியின்‌ உயர்ந்த பகுதிதானே தலைமைத்துவம்‌. வர்க்கம்‌, கட்சி, தலைமைத்துவம்‌ பற்றிய பரஸ்பர உறவுகளை சமுதாயத்‌ தாக்கத்தால்‌ ஏற்படும்‌ பரிணாம வளர்ச்சியை உற்பத்திச்‌ சக்திகளின்‌ வளர்ச்சியும்‌ அதனால்‌ ஏற்படும்‌ பொருளாதார அழுத்தங்களை உலகப்பொருளாதார அழுத்தங்களை உலக அரசியல்‌ அழுத்தங்களை காலனித்துவம்‌ விட்டுப்போன சுமைகளை கலாச்சாரத்தின்‌ சித்திரவதைகளைத்‌ தொகையிட்டுப்‌ பார்த்தா, கட்சியைப்‌ பிளக்கும்‌ முடிவுக்கு வந்தீர்கள்‌? இந்திய உபகண்டம்‌ ஜனநாயகத்திற்குப்‌ பக்குவப்பட்டு விட்டதா? இங்கே, 1512 இல்‌ மக்னகாட்டாவில்‌ வந்தது போல்‌ தனிச்‌ சொத்துரிமைச்‌ சட்டம்‌ வந்ததா? சேர, சோழ, பாண்டியன்கள்‌ ஆண்டாண்டு காலமாக தனிச்சொத்துரிமையையே விடவில்லை. ஓட்டொமானும்‌ விடவில்லை. சுல்த்தான்களும்‌ விடவில்லை. சொத்துரிமையெல்லாம்‌ அரசனுக்கும்‌ சத்திரியனுக்கும்‌ திருப்பதிக்கும்‌ சிதம்பரத்திற்கும்தான்‌ இருந்தது. எகிப்திலே யூதமும்‌ கிறிஸ்தவமும்‌ இஸ்லாமும்‌ மாறி மாறிச்‌ சாதியை ஒழித்தனர்‌. ஜனநாயகம்‌ வந்ததா? ஏன்‌ வரவில்லை? தனிச்சொத்துரிமை அங்கிருக்கவில்லை. தொழிற்‌ புரட்சியோ முதலாளித்துவமோ வளரவில்லை. புத்தமும்‌ ஜைனமும்‌ மாபெரும்‌ வெகுசன இயக்கமாகிச்‌ சாதியை ஓழித்தார்கள்‌. ஏன்‌ சாதி மீண்டும்‌ முளைத்தது? சாதி அறவே அகலக்கூடிய புறநிலைக்‌ காரணிகள்‌ கருப்பையில்‌ பரிணமிக்கவில்லை. புத்தமும்‌ ஜைனமும்‌ குறைப்‌ பிரசவங்கள்‌. மாவிட்டபுரமும்‌ குறைப்‌ பிரசவம்‌. யாழ்பாணத்துத்‌ தொழிலாளி வர்க்கம்‌ தொழிற்சங்க ரீதியில்‌ திரண்டு பெரிய தொழிலாளிவர்க்கப்‌ போராட்ட அனுபவங்களைப்‌ பெற்றுவிட்டார்களா? இங்கே நவீன சமுதாயத்திற்கேற்ப ஏதாவது தொழிற்துறை ஏற்பட்டு விட்டதா? நாம்‌ உலகச்‌ சந்தைக்கு இங்கிருந்து ஏதாவதை ஏற்றுமதி செய்கிறோமா? இலங்கை அரசாங்கமும்‌ உலக முதலாளித்துவமிடமிருந்து இறக்குமதி செய்வதை, தொழிற்துறைப்‌ பொருட்களை ஏற்றுமதி செய்து ஈடுகட்டுகிறதா? இறக்குமதி செய்த பண்டங்களை விற்றுக்‌ காசை எடுத்து கவர்ண்மென்ற்‌ நடத்துகிறார்கள்‌. முதலிற்‌ கட்டுக்‌ குளத்திலே நீந்திப்‌ பழகினாற்தான்‌ பாக்குத்தொடுவாயை நீந்திக்‌ கடக்கலாம்‌, கனவு காணுவதற்கு எல்லாருக்கும்‌ உரிமை இருக்கிறது. வரலாறு என்பது ஓட்டுமொத்த வெகுசனங்களின்‌ சிந்தனையைக்‌ கூட்டிக்கழித்துப்‌ பிரித்த சராசரிப்‌ பாதையிற்தான்‌ போகும்‌. எந்த விண்ணன்ரை பங்களிப்பும்‌ 'நதிங்‌! சண்முகதாசன்‌ ஒரு பன்னிரெண்டு 'வோல்ற்‌ பல்ப்‌. வரலாறு முன்னுரையை எழுதினாற்தான்‌, கட்சி முடிவுரையை எழுத முடியும்‌. எவரையும்‌ குறை சொல்லாதையுங்கோ. பேராதனையைப்‌ போலல்லாமல்‌, தோழமை குறைந்த உணர்ச்சி வெளிப்பாடாக அது இருந்தபோதும்‌, அது நாம்‌ கற்றுக்குட்டிகள்‌ என்பதை நிறுவிக்‌ காட்டியது. நாம்‌ போக வேண்டிய பாதை மிக நீனமானதும்‌, இலக்குக்கு அப்பாலுக்கு அப்பால்‌ இருப்பதும்‌ தெரிய வந்தது.

சில நாட்களுக்குப்‌ பிறகு டொமினிக்‌ ஜீவாவும்‌ ஊருக்கு வந்தார்‌. விசுவானந்ததேவனுக்குச்‌ செய்தி அனுப்பினேன்‌. அவர்‌ வரவில்லை. ஊரில்‌ இரவு நேரங்களில்‌ அவர்‌ வருவது குறைவு. டொமிக்‌ ஜீவாவின்‌ பேச்சின்‌ சாரம்‌ இதுதான்‌:

“சாதிச்‌ சங்கம்‌ அமைக்காதையுங்கோ, கொம்யூனிஸ்ட்‌ கட்சியில்‌ அங்கத்தவராக இருப்பதுதான்‌ எமக்குப்‌ பலம்‌, நாம்‌ ஒக்டோபர்‌ புரட்சியைச்‌ செய்தவர்களின்‌ வழிதோன்றல்‌ என்றே காட்ட வேண்டும்‌.”

1971 ஆண்டு உலக வரலாற்றில்‌ முக்கியமான வருடம்‌. அதிலும்‌ இந்திய உபகண்டத்திற்கு அதி முக்கிய வருடமாகும்‌. 1971 ஆகஸ்ட்‌ 15, அமெரிக்க ஜனாதிபதி நிக்சன்‌ தங்கத்துக்கும்‌ டொலருக்குமான மாற்று உறவை உடைத்த வருடம்‌. அமெரிக்க டொலரை உலக நாணயமாக ஏற்றதன்‌ படிக்கு, ஒவ்வொரு 15 டொலருக்கும்‌ ஓர்‌ அவுன்ஸ்‌ தங்கம்‌ அமெரிக்க அரசு தரும்‌ என்று கையெழுத்திட்ட, அமெரிக்க டொலரை உலகம்‌ சர்வதேச செலவாணி நாணயமாக ஏற்றது. இன்றைக்கு ஓர்‌ அவுன்ஸ்‌ தங்கம்‌ என்ன விலையென்று பார்த்தால்‌, அமெரிக்கா ஒவ்வொரு செக்கனும்‌ எவ்வளவைக்‌ கொள்ளையடிக்கிறது என்பதை மேலெழுந்தவாரியாகத்‌ தீர்மானிக்கலாம்‌. இதுவே இலங்கையில்‌ சேக்குவேரா யுத்தம்‌ வெடித்ததற்கும்‌ பங்காளதேஸ்‌ போராட்டம்‌ வெடித்ததற்குமான காரணமாகும்‌. ஓர்‌ அரசியல்‌ ஆய்வைப்‌ பொருளாதார ஆய்விலிருந்து அணுகினாற்தான்‌ சரியாக விளங்கிக்‌ கொள்ளலாம்‌ என்பதே, மார்க்சியத்தின்‌ முடிந்த முடிபான கருத்தாகும்‌.

பங்காளதேஸ்‌ விடுதலைப்‌ போராட்டம்‌ வெடித்த பொழுது, பேராதனைப்‌ பல்கலைக்கழகம்‌ காலவரையின்றி மூடப்பட்டதால்‌ நாம்‌ ஊரிலேயே இருந்தோம்‌. அது இந்திய - பாகிஸ்தான்‌ யுத்தமாக அபிவிருத்தியடைந்தது. இந்திய - பாகிஸ்தான்‌ யுத்தத்தை எதிர்க்காமல்‌, ஒருவர்‌ மார்க்சியவாதியாக இருக்க முடியாது. முதலில்‌ அது ஏகாதிபத்திய நாடு பிடிக்கும்‌ யுத்தமல்ல என்பதை இனங்காண வேண்டும்‌. இந்தியா ஓர்‌ ஏகாதிபத்திய நாடாக இருந்து, பாகிஸ்தானைக்‌ கூறு போட்டு நாடுபிடிக்கும்‌ யுத்தமென்றால்‌, மார்க்சியத்தின்‌ படிக்குப்‌ பிரச்சனை சுலபம்‌. புரட்சிகரத்‌ தோற்கடிப்பு வாதம்தான்‌ நிலைப்பாடு. நிபந்தனை இல்லாமற்‌ பாகிஸ்தானுக்கு ஆதரவு. இந்தியா தோற்க வேண்டும்‌. பாகிஸ்தான்‌ வெல்ல வேண்டும்‌. இந்தியத்‌ தொழிலாளிவர்கமும்‌ உலகத்தொழிலாளர்‌ முழுப்பேரும்‌ பாகிஸ்தான்‌ வெல்ல வேண்டும்‌ என்றே நிலைப்பாடு எடுக்க வேண்டும்‌. அப்படியென்றால்‌ பங்காளதேஸ்‌ தோன்றுவது ஒரு பிற்போக்கானது. பிரச்சனையை வரலாறு அவ்வளவு இலகுவாகவும்‌ வெளிப்படையாகவும்‌ எழுதவில்லை. பாகிஸ்தானின்‌ தோற்றத்தின்‌ போது பஞ்சாப்‌ என்ற ஆண்டாண்டு காலம்‌ ஒன்றாயிருந்த தேசம்‌ கூறு போடப்‌ பட்டது. ஆண்டாண்டு காலமாக ஒன்றாயிருந்த வங்காளம்‌ என்ற தேசமும்‌ செயற்கையாகக்‌ கூறு போடப்பட்டது. என்ன மாதிரி தமிழீழத்திற்கும்‌ சிங்கள சிறிலங்காவுக்குமிடையே மலைகளோ பள்ளத்தாக்குகளோ ஆறுகளோ குறுக்கே இருந்து புவியில்‌ நீதியிற்‌ கூறுபோடவில்லையோ, அப்படித்தான்‌ பஞ்சாப்பும்‌ வங்காளமும்‌. தமிழீழத்திற்கும்‌ சிங்கள சிறீலங்காவுக்குமிடையே மொழி வேறுபாடு கலாச்சார வேறுபாடாவது இருக்கிறது. ஆனால்‌ பிளக்கப்பட்ட பஞ்சாப்புக்கு அப்படியல்ல. பிளக்கப்பட்ட வங்களாத்திற்கும்‌ அந்த வேறுபாடு இல்லை.

சிறிது கற்பனை செய்துபாருங்கள்‌: ஒரு ஜம்பது வருடம்‌ ஜேர்மனியும்‌ பிரான்சும்‌ ஒற்றுமையாய்‌ இருப்பது போல, பாகிஸ்தானும்‌ இந்தியாவும்‌ சமரசமாக இருக்குமானால்‌ நிலமை என்னவாகும்‌? பாதுகாப்புக்குச்‌ செலவழிக்கும்‌ காசு முழுவதும்‌ அபிவிருத்திகளிலே முதலிடப்படும்‌. பாகிஸ்தானுக்கும்‌ இந்தியாவுக்குமிடையே சிறந்த வர்த்தகம்‌ உருவாகும்‌. இந்தியாவிலுள்ள மிகச்‌ சிறந்த கலைஞர்கள்‌ எல்லாம்‌ முஸ்லீம்கள்‌. ஈரும்‌ அருளாமல்‌, இலைக்‌ கொப்பும்‌ சாயாமல்‌, இந்திய உபகண்டம்‌ இரண்டறக்‌ கலந்து விடும்‌, இரண்டாமுலக யுத்த உச்சக்‌ கட்டத்திலே வின்சன்‌ சேர்ச்சில்‌ சொல்கிறார்‌. யுத்தம்‌ தோற்றாலும்‌ பரவாயில்லை, இந்தியா பிரித்தானியாவை விட்டுப்‌ போகக்‌ கூடாது. பிரித்தானிய சாம்ராச்சியத்தின்‌ கிரீடமே இந்தியாதான்‌. அவ்வளவு செல்வத்தைப்‌ பிரித்தானிய ஏகாதிபத்தியம்‌ இந்தியாவில்‌ கொள்ளையடித்துக்‌ கொண்டிருந்தது.

இங்கே இன்னுமொரு விடயத்தைச்‌ சொல்வது பொருத்தம்‌. மூன்றாமகிலத்தின்‌ இரண்டாவது காங்கிரசில்‌ லெனினுக்கும்‌ எம்‌.என்‌.றோயுக்கும்‌ இடையே நடந்த விவாதம்‌. காலனித்துவ நாடுகள்‌ சுரண்டப்படுவதை காலனித்துவத்‌ தொழிலாளி வர்க்கம்‌ நிறுத்தும்‌ வரை, ஐரோப்பிய முதலாளித்துவத்தைத்‌ தோற்கடிக்க முடியாது. காலனிகளைச்‌ சுரண்டிக்கொண்டு அந்தச்‌ சுரண்டலின்‌ அற்ப பொருக்குகளைத்‌ தொழிலாளர்களின்‌ உச்சியிலுள்ள தட்டினருக்‌ கொடுத்து, தொழிலாளர்‌ பிரபுக்களை உருவாக்கித்‌ தொழிலாளர்களைத்‌ திருப்திப்படுத்தியே, ஐரோப்பிய ஜனநாயக ஆட்சி நடாத்துகிறார்கள்‌. காலனிகளைச்‌ சுரண்டவில்லை என்றால்‌ ஐரோப்பிய ஜனநாயகம்‌ செத்துவிடும்‌. இரண்டாமுலக யுத்தத்திற்குப்‌ பிறகு சுமார்‌ 70 வருடமாக நேட்டோ நாடுகளிலே ஒரு யுத்தங்கூட வரவில்லை. எல்லாமே நேட்டோ நாடுகளுக்கு வெளியில்‌. நேட்டோ நாடுகளுக்கு வெளியில்‌ யுத்தமில்லாத காலங்களே கிடையாது. யுத்தத்தில்‌ ஈடுபடுத்தப்படும்‌ ஆயுதங்களும்‌ நேட்டோ நாடுகள்‌ உற்பத்தி செய்து விற்ற ஆயுதங்கள்தான்‌. இந்தக்‌ கூட்டுக்‌ கொள்ளையை எவ்வளவு இரகசியமாக நடாத்துகிறார்கள்‌ என்பதை விளங்கி விட்டால்‌, உலகமோ சொர்க்கமாகிவிடும்‌. கம்பன்‌ சொன்னமாதிரி போரொடுங்கும்‌, புகழ்‌ ஒடுங்காது. இதற்காகவே அவர்கள்‌ ஐக்கிய நாடுகள்‌ சபையை, சர்வதேச நாணய சபையை, உலக வங்கி அதனோடு தொடர்புபடுத்தப்பட்ட ஆயிரக்கான காளான்‌ அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்‌. அமெரிக்காவில்‌ ஒரு புதிய ஜனாதிபதி வந்தால்‌, இரண்டாயிரம்‌ பேரைச்‌ சர்வதேச இராஜதந்திரிகளாக நியமிக்கலாம்‌. அமெரிக்கா பாகிஸ்தானுக்கும்‌ ஆயுதங்களை விற்றது. அது இந்தியாவுக்கும்‌ ஆயுதங்களை விற்றது. அமெரிக்கப்‌ பொருளாதாரமென்பது நிரந்தர ஆயுதவிற்பனைப்‌ பொருளாதாரம்‌, அதற்கு எங்காவது யுத்தம்வேண்டும்‌.

முக்கிய விடயம்‌ என்னவென்றால்‌, மாவோ ஜெனரல்‌ ஜாயாகானுக்கு ஆயுதங்களைக்‌ கொடுத்தார்‌. மூர்க்கத்தனமாகப்‌ பாகிஸ்தானைப்‌ பாதுகாத்தார்‌. பாகிஸ்தான்‌ என்ன தொழிலாளி வர்க்க அரசா? ஒரு ஜனநாயக அரசா? அதனால்‌ பாகிஸ்தான்‌ தொழிலாளி வர்க்கத்திற்கு என்ன இலாபம்‌? சீனத்தொழிலாளர்களுக்கு என்னலாபம்‌? விசுவானந்ததேவன்‌ உட்பட முழு மாவோவாதிகளும்‌ முக்திபாகினியை இந்தியப்‌ படை நசுக்கியதைப்‌ பற்றியே முழக்கமிட்டார்கள்‌. 'வங்கம்‌ தந்த பாடம்‌! எழுதினார்கள்‌. பாகிஸ்தான்‌ என்ற தேச உருவாக்கத்தை வரலாற்று ரீதியாகப்‌ பார்க்காதவர்களுக்கு இது விளங்கப்போவதில்லை. பாகிஸ்தான்‌ முதலாளித்துவ அரசு விழும்‌ அன்றைக்கு, இந்திய முதலாளித்துவமும்‌ வீழ்ந்துவிடும்‌. இரண்டுமே ஒன்றுக்கொன்று அனுகூலச்‌ சத்துருக்கள்‌.

யுத்தம்‌ முடிந்தபின்பு நடந்த விடயங்கள்‌ இதைத்‌ துலாம்பரமாக்கும்‌. ஜாயாகான்‌, ஹென்றி கிஸ்சிங்கரை சூஎன்லாயிடம்‌ விமானத்தில்‌ ஏற்றிக்‌ கொண்டு போனார்‌. பின்பு நிக்ஸனை ஏற்றிக்‌ கொண்டு போனார்‌. மாவோ - நிக்ஸன்‌ ஒப்பந்தம்‌ கைச்சாத்தானது. அதுவும்‌ வியட்னாம்‌ போராட்டம்‌ உக்கிரமாக நடக்கும்பொழுது. பிறகு வியட்னாம்‌ - சீன யுத்தம்‌ நடந்தது. இயங்கியலிலே காரண காரிய சங்கிலித்தொடர்‌ என்ற வகையினம்‌ உண்டு. அதைப்‌ புறக்கணிப்பவர்‌ இயங்கியலைக்‌ கையாளத்‌ தெரியாதவர்கள்‌. அல்லாவிடில்‌ வியட்னாமிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம்‌ இலகுவில்‌ வெளியேறியிருக்க முடியாது. குருஷேவ்‌, கென்னடியைச்‌ சந்தித்ததைத்‌ தூக்கிப்‌ பிடித்தவர்கள்‌, போலிக்‌ கொம்யூனிசம்‌ எழுதியவர்கள்‌, சமூக ஏகாதிபத்தியம்‌ எழுதியவர்கள்‌. மாவோ - நிக்ஸன்‌ ஒப்பந்தம்பற்றி மூச்சுமில்லைப்‌ பேச்சுமில்லை. பாகிஸ்தான்‌, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்‌ ஆளுகைக்குக்‌ கீழ்ப்பட்ட நாடு. கடந்த வருடங்களில்‌ பிரேசில்‌, ரஸ்சியா, இந்தியா, சீனா, தென்‌ஆபிரிக்கக்‌ கூட்டும்‌, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஏற்பட்டும்‌ கூட, சீனத்தலைமை, பாகிஸ்தான்‌ - இந்திய முரண்பாட்டை முடிவுக்குக்‌ கொண்டுவர எந்த முயற்சியும்‌ எடுக்கவில்லை. இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சேர்ந்து ஆசிய மையவாதத்தில்‌ இணைந்து, மூன்றாம்‌ அணுகுண்டு யுத்தத்திற்குத்‌ தயாராகி விட்டது. மூன்றாமுலக யுத்தம்‌ என்பது சீனாவுக்கும்‌ இந்தியாவுக்குமிடையேயான அணுகுண்டு யுத்தமாகத்‌ திடீரென்று மாறும்‌. ஒரு நாளும்‌ அமெரிக்க - சீன யுத்தமாக வராது.

அரசியலிலே கொள்கைப்‌ பற்றுதியும்‌ மூலதர்மத்தோடும்‌ இறுக்கமாகவும்‌ இருந்தால்‌, எல்லாமே வெடித்துச்‌ சிதறும்‌. இளக்காரமும்‌ வளைந்துங்‌ கொடுத்து நடந்தால்‌, சந்தர்ப்பவாதச்‌ சேற்றில்‌ மீண்டெழ முடியாதபடி அமிழ்ந்து, ஈற்றில்‌ தொழிலாள வர்க்கத்தைக்‌ காட்டிக்கொடுத்து, முழுமானிடத்தையும்‌ அழிக்கத்‌ துணை போகவேண்டி வந்துவிடும்‌. உச்சிக்கு வந்த அரசியல்வாதி, அந்தத்‌ ஸ்தானத்திலே செத்தால்‌, அவமானமில்லாமல்‌ செத்துவிடுவர்‌. அன்றேல்‌ அவர்கள்‌ கீழே தூக்கியெறியப்பட்டு பிரதிநிதித்துவப்பட்ட சமூகத்தாலேயே காலால்‌ சாறாக மிதிக்கப்படுவர்‌.

மனிதாபிமானம்‌

1973, 1974 களில்‌ இலங்கையில்‌ பெரிய பஞ்சம்‌. பாணுக்கு விடியப்பறம்‌ எழும்பி கியூ வரிசையில்‌ நின்று வாங்க வேண்டும்‌. அந்தப்‌ பரிமாணத்தை விளங்க வேண்டுமானால்‌, 65 சதம்விற்ற ஓர்‌ இறாத்தல்‌ சீனி விலை, ரூபா 7 ஆக உயர்ந்தது. பேராதனைப்‌ பல்கலைக்கழக விடுதிகளில்‌ மாணவர்‌ போடும்‌ எச்சில்‌ மிச்சச்‌ சோற்றை எடுத்துக்‌ கொண்டு போக வறிய தோட்டத்‌ தொலாளர்களின்‌ பிள்ளைகள்‌ வருவார்கள்‌. விடுதிச்‌ சாப்பாட்டு விநியோகத்தைக்‌ குத்தகைக்‌ கெடுத்தவர்‌ பன்றி வளர்க்கும்‌ பண்ணைக்கு மிச்சச்‌ சாப்பாடுகளை விநியோகிக்கும்‌ ஒப்பந்தத்தைச்‌ செய்திருந்தார்‌. விடுதி வேலையாட்களுக்கு மிச்சச்‌ சாப்பாட்டை எடுக்க விடக்கூடாது என்று, ஒப்பந்த முதலாளி கடுமையான கட்டளை. மிச்சச்சாப்பாடு எடுக்க வரும்‌ பிள்ளைகளை மிரட்டித்‌ துரத்துவார்கள்‌. ஒரு நாள்‌ அக்பர்‌ நெல்‌ விடுதியில்‌ மிரட்டித்‌ துரத்தும்‌ கடமையில்‌ இருந்தவர்‌, ஓர்‌ இரும்பு உலக்கையால்‌ எறிந்து பசியால்வாடிய அந்தப்‌ பிள்ளைகளைத்‌ துரத்தினார்‌. இரும்பு உலக்கை ஒரு சிறுவனின்‌ மண்டையிற்பட்டு, மண்டை பிளந்து இரத்தம்‌ கொப்பளித்து சிறுவனும்‌ மயங்கி விழுந்து விட்டான்‌. விழுந்த சிறுவனை விசுவானந்ததேவனும்‌ மற்றும்‌ மாணவர்களும்‌ தூக்கிக்‌ கொண்டுபோய்‌ டைனிங்‌ மேசையில்‌ வைத்தனர்‌. காயத்தைக்‌ கட்ட துணியெடுக்க சிலர்‌ ஓடினார்கள்‌. தோட்டக்காட்டானைச்‌ சாப்பாட்டு மேசையில்‌ வளர்த்தாதையுங்கோ என்று வேறு சிலர்‌ கத்தினார்கள்‌. பின்னர்‌ அக்காயப்பட்ட சிறுவனைத்‌ தூக்கி நிலத்திலே வைத்து, மண்டையிலுள்ள காயத்தைக்‌ கட்டி, மயக்கம்‌ தெளிய விசு ஒரு கோப்பியும்‌ வாங்கிக்‌ கொடுத்து, இரண்டு பேரிடம்‌ சாப்பாட்டு ரிக்கற்‌ கடன்‌ வாங்கி சாப்பாடும்‌ கட்டிக்‌ கொடுக்கவே, அந்தச்‌ சிறுவனும்‌ சாப்பாட்டை வாங்கிக்கொண்டு மெல்ல, மெல்ல நடந்து போய்விட்டான்‌.

அன்று பின்னேரம்‌, யாழ்பாணப்‌ பொறியியல்‌ மாணவன்‌ ஒருத்தனுக்கு காற்பந்து விளையாடுச்‌ சப்பாத்து ஆணி கீறி விட்டது. பார்த்தவர்கள்‌ கறலாணியா கீறி விட்டது, ஏற்பு வரப்போகுது என்று கூறி, 'ஹெல்த்‌ சென்டரு'க்கு ரெலிபோன்‌ அடித்தார்கள்‌. உடனே அம்புலன்ஸ்‌ வந்து விட்டது. அதன்‌ பின்னர்‌ அவனுக்கு 'ஹெல்த்‌ சென்ரறி'ல்‌ சிகிச்சை. சில மணித்தியாலங்களில்‌ நடந்த இரு சம்பவங்கள்‌. நாளை பொறுப்பான பதவிகளில்‌ கட்டளையிடுமளவுக்கு அதிகாரம்‌ பெறப்‌ போபவர்களின்‌ சமுதாயச்‌ செயற்பாடு. இரக்கத்திற்குக்‌ கூட வர்க்கமிருக்கிறது. என்று முனகிக்‌ கொண்டு சொன்னார்‌ விசுவானந்ததேவன்‌.

ஒரு நாள்‌ கண்டி மாநகர நகரசுத்தித்‌ தொழிலாளர்‌ வதியும்‌ மகிய்யாவை வீடுகளுக்குச்‌ சென்று பேப்பர்கள்‌ விற்றுவிட்டு நான்‌ திரும்பினேன்‌. விசுவானந்ததேவன்‌ அங்கு முத்துலிங்கம்‌ என்ற தோழரைச்‌ சந்தித்துவிட்டுத்‌ திரும்பினார்‌. இருவரும்‌ நடந்து வரும்பொழுது கண்டிச்‌ சந்தைக்கு அருகாமையில்‌ ஒரு சிறுபிள்ளை வந்து கை நீட்டிக்‌ காசு கேட்டது. உடனே பொக்கட்டில்‌ இருந்த முழுச்‌ சில்லறையையும்‌ அள்ளி அந்தப்‌ பிள்ளையிடம்‌ கொடுத்துவிட்டார்‌ விசு. சிறிது தூரம்‌ போக அதே அளவுள்ள இன்னொரு பிள்ளை வந்து கை நீட்டிக்‌ கேட்டது. ச்சீ... எல்லாக்‌ காசையும்‌ கொடுத்துவிட்டேன்‌... நான்‌ அந்தப்‌ பிள்ளைக்கு கிடந்ததெல்லாவற்றையும்‌ கொடுத்துவிட்டேன்‌. இன்றைக்கு இல்லை. அடுத்தமுறை உன்னைக்கண்டால்‌ தாறன்‌' என்றார்‌ விசு. அந்தப்‌ பிள்ளை மீண்டும்‌ கெஞ்சியது. 'உன்னட்டை இருக்கோ! என்னைக்‌ கேட்டார்‌. நான்‌ என்னட்டை இருந்தவைகளை எடுத்துக்‌ கொடுத்தேன்‌. அதை அவர்‌ அந்தப்‌ பிள்ளைக்குக்‌ கொடுத்துவிட்டு, அந்தச்‌ சம்பவத்தைப்‌ பற்றிச்‌ சிந்தியாமல்‌ பழையபடி நாம்‌ கதைத்துக்கொண்டு வந்த விடயங்களைத்‌ தொடர்ந்து கதைத்தக்‌ கொண்டு வந்தார்‌. விசுவின்‌ மனிதாபிமானப்‌ பக்கம்‌ அப்பழுக்கற்றது. பதினைந்து வருடங்கள்‌, வாலிபக்‌ காலம்‌ முழுவதும்‌, எங்களது வாழ்க்கையில்‌ மிகப்‌ பெறுமதி வாய்ந்ததாகக்‌ கழித்த அந்த நாட்களில்‌ வந்து போன இப்படியான சம்பவங்களைச்‌ சொல்லிக்கொண்டே போகலாம்‌.

இலங்கையின்‌ அரசியல்‌ நடைமுறையைச்‌ சிறிது விளங்குவதற்கு ஒரு சிறு விடயத்தைச்‌ சொல்கிறேன்‌. 1976 அளவில்‌ அரசியல்‌ விஞ்ஞானப்‌ பேராசிரியர்‌ மத்திய கிழக்குப்‌ பிரச்சனை பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்‌. அன்றெல்லாம்‌ எங்களுக்கு மத்தியகிழக்கு மற்றும்‌ வியட்நாம்‌ பிரச்சனைகள்‌ தேதி வாரியாகத்‌ தெரியும்‌. அதைபற்றிக்‌ குறைந்தது நூறுதரமாவது விவாதித்து இருப்போம்‌. சிங்களத்‌ தோழர்களுக்கும்‌ அதிகமாகப்‌ பரிட்சயம்‌. அவர்‌ பேசிக்‌ கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே விசுவானந்ததேவன்‌, உனக்கு மத்தியகிழக்கு அரசியலைப்‌ பற்றி ஒன்றும்‌ தெரியாது, இறங்கிப்‌ போவென்று அவரைப்‌ பார்த்து சிங்களத்தில்‌ சொன்னார்‌. அவருக்கு ஒத்தாசையாகச்‌ சிங்கள மாணவத்‌ தோழர்களும்‌ இறங்கென்று கத்தினார்கள்‌. கூட்டம்‌ நின்று விட்டது. இதற்கொரு சமாந்தரத்தைச்‌ சொல்ல வேண்டும்‌. 1905 இல்‌ ரஸ்சியாவில்‌ 23 வயதுடைய யூத மார்க்ஸ்சியவாதியொருவர்‌ ரஸ்சிய மொழியில்‌ சார்‌ முடிமன்னனை வீழ்த்தென்று கட்டளையிட, ரஸ்சியர்கள்‌ எல்லோரும்‌ அவரது கட்டளையைக்‌ கேட்டு, அவர்‌ சொன்னபடி செய்தார்கள்‌. விசுவானந்ததேவன்‌ மத்தியமாகாணத்தில்‌ சிங்கள, தமிழ்‌, முஸ்லிம்‌ மக்களோடு அரசியல்‌ ரீதியில்‌ வாழ்ந்தவர்‌. அதனால்‌ ஆளுமையைப்‌ பெற்றவர்‌. 1977 இனக்கலவரத்தோடு அப்படியான வாழ்க்கை தொடரமுடியாமற்‌ போய்விட்டது. இலங்கையின்‌ தேவை இப்படியான ஒரு நடைமுறை அரசியல்‌ வாழ்க்கையாகும்‌. தமிழ்‌ மார்க்சியவாதி ஒருவர்‌ சிங்களத்தில்‌ சிறீசேனாவைத்‌ தூக்கியெறியென்று கட்டளையிட, சிங்களத்‌ தொழிலாளர்கள்‌ அவர்‌ கட்டளையை நிறைவேற்ற வேண்டும்‌. சிங்கள மார்க்சியவாதி ஒருவர்‌ தமிழ்‌ மொழியில்‌ விக்னேஸ்வரனைத்‌ தூக்கியெறியென்று கட்டளையிட, தமிழ்த்‌ தொழிலாளர்கள்‌ அதைச்‌ செவிமடுக்க வேண்டும்‌. இந்த ஆளுமையைப்பெற எத்தனை அமிலப்‌ பரிசோதனைகளில்‌ தேறவேண்டும்‌. ரஸ்சியப்‌ புரட்சி அப்படித்தான்‌ தயாரிக்கப்பட்டது. ஏங்கல்ஸ்‌ இருபத்தொரு மொழியில்‌ கடிதத்‌ தொடர்புகளை மேற்கொண்டவர்‌. மார்க்ஸ்‌ பத்துமொழிகள்‌ பேசத்‌ தெரிந்தவர்‌. விசுவானந்ததேவன்‌ பல்கலைக்கழகத்திற்குப்‌ புகுந்த நாட்‌ தொடக்கம்‌ சிங்களத்தை சிங்களத்‌ தொழிலாளர்‌ மத்தியில்‌ அரசியல்‌ செய்யவேண்டும்‌ என்பதற்காக, மிகச்‌ சிரத்தையாகத்‌ தானே கற்றவர்‌. இதெல்லாம்‌ புத்திக்கூர்மையின்‌ வெளிப்பாடல்ல. நாம்‌ அந்தப்‌ பிரச்சனைக்குள்‌ நிற்பவர்கள்‌. பலஸ்தீனப்‌ பிரச்சனையோ வங்காளப்‌ பிரச்சனையோ வேறொரு நாட்டுப்‌ பிரச்சனையல்ல. மார்க்சியவாதிகளுக்கு அது அவர்களின்‌ சொந்தப்‌ பிரச்சனை. மார்க்சியம்‌ சொல்லித்தந்த பாடமிது. மார்க்சியம்‌ பண்படுத்திய கலாச்சாரம்‌ அது. அது மொழி கடந்த இனங்கடந்த தேசங்கடந்த பொதுச்செல்வம்‌.

https://www.noolaham.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக