பக்கங்கள்

திங்கள், டிசம்பர் 15, 2025


திரு சுவாமிநாதர் முருகேசு அவர்கள் மீதான இரங்கலுரை

”உங்கள் நினைவுகளைச் சுமந்து மானுடத்தை நேசிப்போம் ஆசானே!”

-நடராசா சுசீந்திரன்,ஜெர்மனி



எங்கள் தீவின் நெடிதுயர்ந்த மரங்கள் எப்பொழுதும் கம்பீரமானவை. வாடையிலும் கோடையிலும் அவை தம் வாழ்வைத் தொலைப்பதில்லை. பனையிலே வேரூன்றிப் பின்னர் எங்கும் விழுதூன்றி வியாபித்து நிற்கின்றன எங்கள் ஆலமரங்கள். பட்டைமேற் பட்டைவைத்து குட்டையாய்ப் பருத்துப் கிடக்கும் பூவரசுகளும் வேப்ப மரங்களும் பனைகளும் தம் நிலமெனத் திமிருடன் நிமிர்ந்து அங்கே நிலைக்கின்றன. முன்னர் பெருவேளைகளில், இற்றைக்கு எழுபது எழுபத்தைந்து ஆண்டுகள் முன்னால் மனிதர்களும் அப்படித்தான் கம்பீரமானவர்கள். நிலத்திற் பிணைந்து நெடுந்தீவில் நல் வாழ்வு கண்டவர்கள். மாண்ட பின் அந்த மண்ணிலே புதைந்தவர்கள், அதைக் காக்கும் கடலிலே கரைந்தவர்கள்.

நாற்பதுகள் வந்தது அதன் ஈற்றில் இலங்கை காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு பேரினக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இடப் பெயர்வுகள், இனக் கலவரங்கள், விடுதலை இயக்கங்கள், சண்டைகள் போர்கள் எங்கள் காலத்தின் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டன. என் நாடு , எனது மண், என் முற்றம், என் சுற்றம், என் உறவு , என் குடும்பம் எல்லாம் இந்த வேகச் சுழற்சியில் சிதிலமடைந்து சிதறிப் பறந்தன. „…things fall apart; the centre cannot hold…“என்று அதனைச் சொல்வர் W.P.Yeats என்ற கவிஞர். அப்படிச் சிதறிப் பறந்து செங்குன்றத்தில் விழுந்து இன்று சென்னையிலே சங்கமமாகும் என் பேராசான் அந்த மண்ணுக்குரிய மகத்துவத்துடன் கர்வத்துடன் கம்பீரமாய் வாழ்ந்த பெரியவர்; எங்கள் முன் தலைமுறையாலும் எங்கள் சமகாலத் தலைமுறையாலும் PT மாஸ்டர் என்று அன்போடும் மதிப்போடும் அழைக்கப்பட்டவரே திரு சுவாமிநாதர் முருகேசு அவர்கள். (ஊர்ப் பெரியவர்கள் அவரைச் ”சங்கிலி விதானையார் மகன்” என்று சொல்வார்கள்.)

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளிலிருந்தே அவரை நான் அறிவேன். அறுபதுகளின் நடுப்பகுதியில் நெடுந்தீவு மகாவித்தியாலயம்-ஜூனியர் ஸ்கூல் விளையாட்டு மைதானத்தைக் கொண்டிருக்கவில்லை. பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள், மற்றும் வேறு பொது விளையாடுப் போட்டிகள் அக்காலத்தில் சீக்கிரியான் பள்ளம் என்ற இடத்திலேயே நடைபெற்றன. அறுபதுகளின் மத்தியில்தான் நெடுந்தீவிற்கென்று ஒரு பொலீஸ் நிலையமும் வந்து சேர்ந்தது. நெடுந்தீவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளையெல்லாம் நிர்வகித்து நடாத்தும் ஒருவராகவே நான் என் சிறிய பராயத்தில் திரு சுவாமிநாதர் முருகேசு அவர்களைக் கண்டிருகின்றேன். போட்டிகளின் இறுதியில் பார்க்க வந்த சின்னஞ் சிறுசுகளையும் ஓடவிட்டுப் பரிசளிப்பார்கள். அப்படித்தான் ஒருமுறை சீக்கிரியான் பள்ளத்தில் 7உம் 7 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களையும் வந்து நிற்கச் செய்தார்கள். எனக்கு அப்போது 9-10 வயதிற்கு மேல் நின்றேன். ஆனால் PT மாஸ்டர் என்னைப் பெரியவன், வயது கூடியவன் என்று அப்பால் ஓட்டிவிட்டார். நான் போட்டிருந்த சட்டையைக் கழற்றி தலையைச் சுற்றிக் கட்டியபின் வேறொரு இடத்தில் மீண்டும் ஆயத்தக் கோட்டில் உள்நுழைந்துவிட்டேன். அப்படியும் என்னை அத்தனை சிறுவர்களுக்கும் மத்தியில் இனங்கண்டு சட்டை கழற்றித் தலையிற் கட்டியதையும் கண்டுபிடித்து நீக்கிவிட்டார்.

எழுபதுகளின் ஈற்றில் நான் இலங்கை விமானப் படைக்கு விண்ணப்பிக்க ஏதுவாக எனக்கான நற்சான்றுப் பத்திரங்களை அவரது கைப்பட எழுதித் தந்தார். முத்து முத்தான அழகிய கையெழுத்துக்களில் ஆங்கில மொழியில் அவர் எழுதியபோது நான் பெருமிதத்தில் வியந்து நின்றேன். அந்த நற்சான்றுப் பத்திரங்களை நான் இன்றும் பாதுகாத்து வைத்திருகின்றேன்.

எண்பதுகளின் தொடக்கத்தில் புங்குடுதீவில் அமைந்த நீதிமன்றத்தில் எனக்கு எதிரான குற்றவியல் வழக்கொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு தவணைக்கு நான் செல்லவில்லை. அப்போது நெடுந்தீவின் பொலீஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓஐசி நவரத்தினம் என்பவர்(Police Sergeant Navaratnam, former OIC of Neduntheevu was shot by two youths at Point Pedro bus stand on 2nd May 1984.). அவர் இராணுவதினருக்குக் இரகசியமாக் கொடுத்த சந்தேகத்திற்குரிய பயங்கரவாத நபர்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்தமையால் அக் கால இராணுவம் என்னையும் தேடினார்கள் என்று பிற்காலத்தில் நான் அறிந்துகொண்டேன். ஓஐசி நவரத்தினம் எப்பொழுதும் பொலீஸ் நிலைய முன்றலில் இருந்து வரும்வோர் போவோரை அவதானித்தபடியே இருப்பார். நான் அவரைக் கடந்து சென்ற பொழுது வழக்குத் தவணைக்கு வராதமையைக் காரணம்காட்டி என்னை பிடித்து பொலீஸ் நிலையச் சிறைக்குள் அடைத்துவிட்டார். சிலமணி நேரங்களின் பின்னர் எனது நல் வாய்ப்பாக வேறொரு வேலைக்காகப் பொலிஸ் நிலையம் வந்த எங்கள் PT மாஸ்டர் என்னைக் கண்டுவிட்டார். எந்தப் பேச்சோ எந்த நிபந்தனையோ எதுவுமின்றி “ நான் பிணை நிற்கின்றேன், இந்தப் பையனை விட்டுவிடுங்கள் என்று கூறி என்னை விடுவித்தார். இப்படியாக என் நெஞ்சில் எழுந்து வரும் அவரது நினைவுகளை எண்ணிப் பார்க்கின்றேன். மிடுக்கும் இளமையுமான அவரது தோற்றமே என்னுட் கிடக்கின்றது. உங்கள் நினைவுகளை நாம் சுமந்து மானுடத்தை நேசிப்போம் பெம்மானே.

”நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்பு பாராட்டும் உலகு” -திருக்குறள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக