
பதின்மூன்று வருடங்கள் தலைமறைவாகியிருந்த பொஸ்னிய சேர்பியர்களின் தலைவர் றொடோவான் கறாசிக் அவர்கள் நேற்று செர்பிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். றொடொவான் கறாசிக் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். நெதர்லாந்தின் டென்ஹாக்கில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றில் இவர் விசாரிக்கப்படவிருக்கின்றார். இவரைக் கைது செய்து ஐக்கிய நாடுகளின் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் செர்பிய அரசு அக்கறை காட்டவில்லை என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் முதன்மை அரச வழக்கறிஞர் செர்பிய அரசின்மீது குறைப்பட்டுக்கொண்டார். பாரிய மனித உரிமை மீறலுக்காகவும் , போர்க்குற்றங்களுக்காகவும் இவர் தேடப்பட்டார். கைது செய்யப்பட்ட கறாசிக் அவர்கள் பெல்கிறேட்டில் உள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தப் பட்டபின் நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொஸ்னியா-ஹெர்சக்கோவினாவில் 1992 இல் இருந்து 1995 வரை நடைபெற்ற மனிதப் படுகொலைகளில் பொஸ்னிய செர்பியக் குடியரசின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட கறாசிக் Srebrenica வில் இடம்பெற்ற முஸ்ஸிம் மக்களின் இனப்படுகொலைக்குக் காரணமாவார். இப்பொடுகொலையின்போது சுமார் 8000 பேர் பலியாகினர்.

அந்த பொஸ்னியப் போரின்போது குறாசியாவைச் சேர்ந்த கோறான் ஹாட்சிக் என்பவனும் செர்பிய இராணுவத் தளபதி றட்கோ ம்லாடிச் என்பவனும் இவரோடு கூட்டாகச் செயற்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக