ஈழத்தமிழ்ச் சமுதாயத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டம்
க.அருமைநாயகம்
யாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதியமைப்பின் வெளிப்பாட்டுச் சின்னங்களிற் சில காலத்தோடொவ்வாதனவாகையால் கைவிடப்படல் வேண்டுமென்ற சிந்தனையோட்டம் சீர்திருத்தக் கருத்துடைய உயர் சாதி இந்து இளைஞர் மத்தியிலும், தாழ்ந்த சாதியினர் மத்தியிலும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாழ்ந்த சாதியினர் மத்தியில் ஏற்பட்ட சில அபிவிருத்திகள் உயர்சாதியினரது ஏகபோக தராதரச் சின்னங்களாக விளங்கி வந்தவைகளைப் புறக்கணிக்கச் செய்தன.
1844-இல் ஏற்பட்ட சிறைகுடி ஒழிப்பு 1833-இல் ஊழிய முறை ஒழிப்புப் போன்ற சட்ட நடவடிக்கைகளும் கிறிஸ்தவ பாடசாலைகளில் பெற்ற கல்வியும் அதன் விளைவாகப் பெற்ற உத்தியோக வாய்ப்புக்கள், பாரம்பரிய தொழில் முறைகளிலிருந்து விலகி அரசாங்க, தனிப்பட்ட தொழில்களில் ஈடுபட்டமையும் ஏற்கனவே தாழ்ந்த சாதியினரின் சிலரைப் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை அமைக்க உதவியது. (1) அரசாங்கமும் பொது விடயங்களில் சாதி வேறுபாட்டிற்கு உத்தியோக ரீதியாக அங்கீகாரம் அளிப்பதை நிறுத்திக் கொண்டது. இவைகளின் பெறுபேறாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் கூற்றிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும், தாழ்ந்த சாதியினர் உயர் சாதி மக்களைப் பின்பற்றிப் பிரதேங்களைத் தகனஞ் செய்யவும், பிரேத ஊர்வலத்தின்போது பறைமேளம் அடித்துச் செல்லவும், பாடசாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களிலும் சரி நிகர் சமானமாக ஆசனங்களில் அமரவும் முற்பட்டனர். தாழ்ந்த சாதியினரது முயற்சிகளும், அவர்களுக்கு ஆதரவாக விளங்கிய முற்போக்குக் கருத்துடைய உயர் சாதி தீவிரவாதிகளினது செய்கைகளும் இயல்பாகவே பழமை போற்றுவோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
புதிய கருத்துக்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற சாதிக்கலவரங்கள் போன்று, (2) இந்நூற்றாண்டிலும் பெருங்கலவரங்கள் நடைபெற வழிகோலின. சாதி சம்பிரதாயங்களைக் கைவிட முயன்ற தாழ்ந்த சாதியினரைத் தண்டிப்பதற்கு வேளாளர் மாத்திரம் முனையவில்லை. ஏனைய சாதியினரும் தமக்குக் குறைவான படி நிலையிலுள்ள சாதியினரைத் தண்டிக்கவே செய்ததனர். பொதுவாக பள்ளர், நளவர், பறையர் சாதிகளைச் சேர்ந்த மக்களே பாதிப்புக்குள்ளாயினர். அக்காலப் பத்திரிகைகள் வடமாகாண அரசாங்க அதிபர்களது நிருவாக அறிக்கைகள், தினசரிக் குறிப்புக்கள் ஆகியவற்றை ஆராய்வோர் சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதிகளை அவதானிக்கத் தவறமாட்டார். உதாரணமாகப் பின்வரும் பெருங்கலவரங்களைக் குறிப்பிடலாம். 1914- இல் பண்டத்தெருப்பில் வேளாளருக்கும், தச்சருக்கும், தனக்காரக்குறிச்சியில் வேளாள ருக்கும், பொற்கொல்லருக்கும், வரணியில் வேளாளருக்கும் பள்ளர், நளவருக்குமிடையேபெரும் மோதல்கள் ஏற்பட்டன. (3) 1922-இல் வேளாளருக்கும் நளவருக்கும், உரும்பராயில் வேளாளருக்கும் பள்ளருக்கும், சிவியா தெருவில் வேளாளருக்கும் பள்ளருக்குமிடையே பெருங்கலவரங்கள் நடைபெற்றன. 1931.- இல் பிராம்பத்தையில் (சங்கானை) சாண்டாருக்கும் பள்ளருக்குமிடையே நடைபெற்ற தொடர் மோதல்களின் விளைவாக அவ்விடத்தில் மூன்று மாத காலத்திற்குத் தற்காலிக பொலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இக்கலவரங்களில் மூளாயில் பெரும்பாலானவை பிரேத அடக்கம் சம்பந்தமானவைகளாகும், ஏனைய கலவரங்கள் பொதுக்கிணறுகள், குளிப்பிடங்கள் ஆகியவற்றை உபயோகித்தல் தாழ்ந்த சாதிப் பெண்கள் நகைஅணிதல், உயர்சாதியினருக்கு தாழ்ந்த சாதியினர் வழிவிட்டொதுங்கிச் செல்ல மறுத்தல் ஆகியவை சம்பந்தமானவை களாகும்.
1933- இல் புங்குடுதீவில் நடைபெற்ற கலவரமொன்றுக்குக் கால் கோலாக விளங்கியது பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் அணிந்த காலணியாகும். இச்சச்சரவின் போது பறையரது பல குடிசைகள் தீக்கிரையாகியதுடன் பல கொலைகளும் நடைபெற்றன. (4)
ஆலயப் பிரவேசம்
ஆலயப்பிரவேசம் பற்றிய சர்ச்சைகள் ஆரம்பகாலத்தில் புரட்சிகரமாற்றங்களுக்கு இடமளிக்காவிடினும் அதுபற்றிய வாதப்பிரதி வாதங்கள் 1930-ஆம் ஆண்டளவில் வலுப்பெற்றன. ஆலயப் பிரவேசம் சம்பந்தமான விடயங்களில் அரசாங்கம் நேரடியாகத் தலையிடவிரும்பவில்லை. யாழ்ப்பாணத்துப் பெரும் சைவக் கோயில்கள் பொது வழிபாட்டுத்தலங்களாக (உயர்சாதியினர் மாத்திரம் உட்செல்லும் உரிமையுடன்) விளங்கினும் சட்டரீதியாக அவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒருவரது அல்லது குடும்பத்தவரது பிரத்தியேகச் சொத்தாக விளங்கியது. இவையனைத்தும் பிராமணரதும் வேளாளரினதும் கண்காணிப்பிலேயே இருந்தன. தாழ்ந்த சாதியினர் சட்டரீதியாக ஆலயப்பிரவேசம் செய்ய அனுமதி வழங்கும் சட்டமெதுவும் இருக்கவில்லை, மாறாக அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதைத் தடுக்கக்கூடிய நீதிமன்றத் தீர்ப்புக்களே இருந்தன. 1910-இல் சட்டத்தின் துணையுடன் பலாலியில் உள்ள கோவிலொன்றில் பிரவேசிப்பதற்கு முயன்ற அம்பட்ட சாதியினர் ஏமாற்றத்திற்குள்ளாயினர்.
இந்தியாவில் உள்ள சைவக் கோவில்களில் பிரவேசிக்கும் சலுகை அம்பட்டருக்கிருந்த போதிலும் யாழ்ப்பாணச் சாதிமரபு முறைகள் அச்சலுகையை வண்ணாருக்கே வழங்கியிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டே வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் சைவசமய மரபின்படி. அம்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்கும் உரிமையற்றவர்களெனவும், அம்பட்டர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு கோவில் முகாமையாளருக்கு உரிமையுண்டெனவும் கூறி, நீதி மன்றம் அத்தகைய தடையுத்தரவை வழங்க முடியுமெனவும் தீர்ப்பளித்தது. (5)
இத் தீர்ப்பினால் ஆலயப்பிரவேசத்திற்குச் சார்பான சட்டவாக்கம் அரைநூற்றாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதெனலாம். இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களும் இவ் இத்தகைய கொள்கையையே கடைப்பிடித்தது. நீதிமன்றங்களின் ஆதரவுடன் சாதிக்குழுக்கள் தமது பாரம்பரிய சலுகைகளையும் தனித்தத்துவத்தையும் தொடர்ந்தும் அனுபவிக்கக்கூடிய வசதியிருந்தது. தாழ்ந்த சாதியினர் கோவிலில் சமூகம் கொடுத்ததினால் ஏற்பட்ட அசூசையைப் போக்குவதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்த கிரியிகளுக்காக உயர்சாதியினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமென இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. (6)
சமய மாற்றம்
சாதிப் பிரச்சினைகள் ஒரு கால கட்டத்தில் உக்கிரமடைவதற்கும், அது பற்றிய தீவிர வாதங்களுக்கும் வழிவகுத்த பிறிதொரு காரணி கத்தோலிக்க சமயப் பரம்பலாகும். கத்தோ லிக்கச் சுவாமிகளது குறிப்பாகச் சுவாமி ஞானப்பிரகாசரது சமய மாற்றங்கள் பழமை போற்றும் சைவர்கள் மத்தியில் பெரும் புயலைத் தோற்றுவித்தது. கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கிலும், வலுவினாலும் யாழ்ப்பாணத்திலிருந்த கரையார்கள் வேளாளரது தீவிரசாதிப்பிடிப்பினின்றும் சிறிது சிறிதாக நழுவக்கூடியதாகவிருந்தது.
சிங்களவர் மத்தியில் ஏற்பட்ட கொய்கமகரவா சாதியினரது. போட்டிகள் போல், வெளிப் படையாகப் பிரச்சினைகள் தோன்றாவிடினும் மறைமுகமாகக் கரையாரது சமூகப்படி தர முயர்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்த கத்தோலிக்கக் கல்லூரிகள், பத்திரிகை போன்றவை கரையாரது சமூக நிலை உயர்வதற்குப் பெரும் தொண்டாற்றின. (7)
கல்வியினால் மேலோங்கியவர்கள் தம்மை ஏனைய கரையார மக்களிடமிருந்து பிரித்துத் தாம் மேலோங்கிக் கரையார் எனவும் அழைக்கத் தொடங்கினர். ஏனைய "குடி மக்கள்'' சாதியினரைப் போல வேளாளருடைய அன்றாடத் தொழில்துறைகள், குடும்பக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளும் இருக்காத காரணத்தால் காலப் போக்கில் வேளாளரது சாதிப்பிடியிலிருந்து கரையார் நழுவியதற்கு இன்னொரு காரணமாகக் கூறலாம். சுவாமி ஞானப்பிரகசரால் முப்பத்தேழு கத்தோலிக்கத் தேவாலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன எனக் கூறப்படுகின்றது. (8) இவைகளுள் ஒன்றைத் தவிர ஏனையவை வேளாளர் தவிர்ந்த சாதியினருக்காக ஸ்தாபிக்கப்பட்டவையாகும். அவைகளில் பன்னிரண்டு நளவருக்கும், பத்து பள்ளருக்கும், துரும்பருக்கும். இரண்டு பறையருக்குமாக விளங்கின. இத்தேவாலய ஸ்தாபிதங்கள் சமயமாற்றங்களின் விளைவாக மேற்கொள்ளப்பட்டனவாகையால் உயர்சாதிச் சைவர்களது எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டன. முற்போக்குச் சிந்தனையுடைய சைவர்களும் கத்தோலிக்கச் சமய மாற்றங்களை எதிர்த்தனர். கிராமப் புறங்களில் சமயமாற்றங்களுக்கு பல்வேறு வகையான எதிர்ப்புக்கள் கிடைத்தன. கத்தோலிக்கச் சமயச் சுவாமியார் மேற்கொள்ளும் உபதேசங்களைக் குழப்பும் வகையில் சத்தமிடல், கூட்டம் நடக்கும் இடத்துக்கு மறுபுறம் சைவ சமயப் பிரசாரம் செய்தல், தேவாலயங்களை இடித்தல் சமயம் மாறியவர்களுக்கு தொழில் எதுவும் கொடுக்காது விடல், கள்ளிறக்குவோரது வருமானத்தைக் குறைக்கும் எண்ணத்துடன் பனைப்பாளைகளை வெட்டிவிடல் போன்ற நடவடிக்கைகளுடன் கைகலப்புகளிலும் ஈடுபட்டனர். சமயமாற்றம் சம்பந்தமாக எழுந்த கலவரங்களில்முக்கியமானவை 1911-ஆம், 1916-ஆம், 1922-ஆம் ஆண்டுகளில் வேளாளருக்கும் பள்ளருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல்கள், (9) 1902-இல் நீர்வேலியில் நடைபெற்ற சமய மாற்றுச் சம்பவம், போன்றவையாகும்.(10) கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்தவர்கள் உயர்சாதியினரது இம்சைக்குள்ளானதிற்குப் பல காரணங்கள் கூறலாம்.
(அ) தமிழ் சமுதாயத்தின் பொதுப் பண்புகளிலிருந்து மக்களை விலகிச் செல்ல சந்தர்ப்பமளித்தல். (ஆ) சமயம் மாறியவர்கள் தமது பழைய எசமானர்களுக்குத் தொண்டு செய்ய மறுக்கலாம் என்ற அச்சம் – குறிப்பாக நிலச்சுவான்தார்களது அச்சம்.
இக்காரணங்கள் நியாயமானவை களாகவே காணப்படுகின்றன. ஏனெனில், கத்தோலிக்கச் சமயத்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய மாற்றத்தில் ஈடுபட்ட புரட்டஸ்தாந்து சமயத்தவர்களைப் பெயரளவில் தானும் தமிழரது சமுதாய ஒழுங்கினை இக்காலத்தில் குழப்ப விரும்பவில்லை. அவர்கள் அமைத்த ஆலயங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களே மாற்றம் நிச்சயமாக இனமாற்றமாகவோ, அல்லது சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிடுதலோ அல்ல-இதற்குச் சாதியும் விதிவிலக்கல்லவெனக் கூறியுள்ளார் (11) உண்மையான காரணம் தாழ்ந்த சாதியினரது தொழிற் சக்தியினை இழந்துவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற நிலச்சுவான்தார்களது அச்சமும் , எசமான் குடியானவன் என்ற உறவுமுறை உடைந்து விடலாம் என்ற அச்சமும் கௌரவக் குறைவுமே இக் கெடுபிடிகளுக்கு அடிப்படைக் காரணங்களெனக் கொள்ளலாம்.
எனவே சமய மாற்றம் சாதிப் பிரச்சனைகளுக்கு எக்காலமும் முற்றுப்புள்ளியிடவில்லை. 1932 இல் நாவாந்துறையில் கத்தோலிக்க முக்குவருக்கும் திமிலருக்கும் கிராம வீதிகளில் இசையுடன் ஊர்வலங்கள் நடத்துவது சம்பந்தமாக எழுந்த சச்சரவை வடமாகாண அரசாங்க அதிபராலும், கத்தோலிக்க ஆலயராலும் தீர்த்துவைக்க முடியாதென்ற காரணத்தால் சட்டசபையே அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தது. (12) அத்துடன் கத்தோலிக்க திருச்சபை கல்வி விடயங்களில் சாதி வித்தியாசம் பாராட்டியதைக் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த தாழ்ந்த சாதியினரே கண்டித்தனர். ”ஆங்கில கல்விக்கு ஆதித்திராவிடர் அருகராவாரா?'' என்ற தரப்பில் ஆதித்திராவிடரின் நீதிக்காக, வாதாடிய யாழ்ப்பாண வாதி பின்வரும் கேள்வியை எழுப்பினார்'', • நாமெல்லோரும் ஒரே பிதாவின் பிள்ளைகள் சொல்லிச் சொல்லி மனதிலொன்று கிரியையிலொன்று வாக்கிலொன்றாய் நடந்து மெய்யானதும், வளர்ச்சி யடைவதுமான மெய்க் கிறிஸ்து மதத்தைத் தம்மாசார நடவடிக்கையால் கெடுத்து சாதி பேதத்தையே கிறிஸ்து மத வேத புத்தகத்தின் ஒரு பகுதியாக்கவும் ஆண்டவரை மேல் சாதி யாருடன் இணைத்து எளிய சாதியினருக்கே நரகத்தை வாசஸ்தலமாகக் கொடுக்கவும் ஐயையோ, குருமாரும், சபைகளுமான சுதேசிகள் செய்யும் மாரீச அலங்கோலத்தையும் கிறிஸ்தவ சபைகளையும் கிறிஸ்தவ கலாசாலைகளையும் கெடுக்கும் விதத்தையும் என்னென்று சொல்வது?
கிறிஸ்து மார்க்கத்திற்கு எட்டுனையும் பொருந்தாத சாதி பேதம் கலாசாலைகளிலும், ஆலயங்களிலும், செய்யப்படும், புரளியை ஆதிதிராவிடா! நீ இன்னோர் முறை பேசத்தவறாய். (13)
சைவக் கோயில்கள், பாடசாலைகள் ஆகியவற்றிற்கும் கிறிஸ்தவர்களது ஸ்தாபனங்களுக்கும் இவ்விடயங்களில் ஒற்றுமை காணப்பட்டது. சாதி சமூகப் பிரச்சினை, சமயப்பிரச்சினை அல்ல.
இந்தியச் செல்வாக்கு
மேற்கூறப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், சமய மாற்றங்கள் ஆகியனவையும் இந்தியாவில் அக்காலத்தில் நடைபெற்று வந்த சமுதாயப் போராட்டங்களும் அரசியல் கிளர்ச்சிகளும், யாழ்ப்பாண சாதிமுறை பற்றிய சிந்தனைகளில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. ராணடே (Ranede) மகாத்மா காந்தி போன்றோரது, சமூகக் கொள்கைகளும் இந்திய தேசிய காங்கிரசின் போக்கும் ஹரிஜனர் பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களும் அவதானிக்கப்பட வேண்டியனவாகும். சமுதாயத்தின் அடித்தளத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை அரசியல் சுபீட்சமடைவது துர்லபம் என்ற கருத்தை மகாத்மா காந்தியடிகள் தேசிய காங்கிரசினர் மத்தியில் பரப்பி, உயர்குழாத்தினரது செல்வாக்கின் கீழிருந்த தேசிய காங்கிரசை மக்களியக்கமாக்கினார். மகாத்மாகாந்தி இந்தியாவில் ஹரிஜனர் பற்றி எழுதிய கட்டுரைகள், பாரதியார் பாடல்கள், மொடேன் ரிவியூ (Modern Review) போன்ற சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்து கல்வி கற்றோரால் விரும்பிப் படிக்கப்பட்டவைகளாகும். தவிர யாழ்ப்பாணத்திலிருந்து பிரசுரிக்கப்பட்ட ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் மூலமும், இந்தியச் செய்திகளைப் படித்து அறிந்தனர். மகாத்மா காந்தி நடாத்திய ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகம், வெளிநாட்டுப் பொருட்களை பகிஷ்கரித்தல் போன்ற நடைமுறைச் சம்பவங்கள் ஆகியவையும் யாழ்பாணத்தவரால் கூர்ந்து அவதானிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாகும். அதுமாத்திரமின்றி இந்தியாவின் ஹரிஜனரது சமூக நிலையை உயர்த்துவதற்கும் தாழ்வு மனப்போக்கை மாற்றுவதற்கும் முயன்றவர்கள் பிராமணர் என்பதும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சென்னை மாநில சட்ட சபையில் ஆலயப் பிரவேச சட்டம் இயற்றுவதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் பிராமணர்களான ராஜகோபாலசாரியார் முதலியோர் ஆவர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஹரிஜனங்களை சென்று ஆலயப்பிரவேசம் செய்யப் பொறுப்பாக இருந்தவர் இன்னொரு பிராமணரான ஏ. வைத்திய நாத ஐயர் ஆகும். இந்தியாவில் பரவலாகவும், தமிழ்நாட்டில் குறிப்பாகவும் இதே காலத்தில் நடைபெற்ற இயக்கங்களில் சாதி பற்றிய விடயம் முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டம் மக்கள் இயக்கமாக இருந்தது. இதனால் சாதியினரையும் கூட்டுச் சேர்க்க வேண்டியிருந்தது.
இலங்கையில் சுதந்திரப் போராட்டம்'' மக்கள் இயக்கமாகவல்லாது மத்திய வகுப்பினரது இயக்கமாகவும் சாதாரண மக்களின் ஆதரவை நாடாத ஒன்றாகவும் விளங்கியது, இவ்விருத்திகள் யாவும் புரட்சிகரமானவைகளாகும். இலங்கையிலும் சேர். பொன். இராமநாதன், சேர், பொன். அருணாசலம் போன்றோரும் தாழ்ந்த சாதியினரது கல்வி விடயங்களில் உயர் சாதியினர் சிரத்தையெடுக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி வந்துள்ளனர். (14) குறிப்பாக அருணாசலம் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு அனுபவங்களைக் கொண்டு உயர் சாதியினரது மனப்பாங்கு மாறவேண்டுமென வற்புறுத்தியுள்ளார். (15)
சாதிக்கலவரங்களும், அதன் விளைவாக மீண்டும் கிறிஸ்தவம் துரிதமாக விருத்தி அடைந்து வருவதையும் அவதானித்த இந்து வாலிப சங்கத்தினர், தாழ்ந்த சாதியினரது கல்வி நிலையை விருத்தி செய்ய வேண்டியதின் அவசியத்தை வற்புறுத்தினர். பஞ்சமரது சமய, சமயச் சார்பற்ற கல்விக்கு உடனடியாகப் போதிய முன்னேற்பாடு எதுவும் செய்ய நாம் தவறினால், அப்பணியைக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்டு தமது பட்டியைக் கூட்டினால் நாம் மனக்குறைபாடு கொள்ளுதல் கூடாது. பிரச்சினையை எதிர்நோக்கி அதற்குரிய பரிகாரத்தைத் தேடுவதற்கு எமக்கு துணிவில்லாதிருந்தால், நாம் ஒதுங்கியிருந்து ஏனைய சமயத்தவர்கள் கல்வி வசதிகள் அளித்து பஞ்சமரது நிலையினை உயர்த்துவதைப் பார்க்க வேண்டும். (16)
இது போன்ற சிந்தனை இக்காலகட்டத்தில் வரவேற்கப்படவேண்டிய தொன்றாகும். அத்துடன் கிறிஸ்தவர்களது முயற்சியினை முதன் முறை மெச்சுவதாகவும் உள்ளது. போதிய பொருளாதார உதவியும் சமூகத்தின உதவியும் கிடைக்காததால் தமது பஞ்சமர் பற்றிய திட்டங்களை இந்து வாலிபர் சங்கத்தினரால் நிறைவேற்ற முடியவில்லை. எனினும் 1919இல் ஆனைப்பந்தியில் பஞ்சமருக்காகப் பாடசாலை ஒன்றை நிறுவினர். (17) மேலும் பஞ்சமர்கள் மரணச் சடங்குகளில் பறைமேளம் அடிப்பதால் ஏற்பட்ட ”தலைகொய்யும்" சம்பவங்களையும் இவர்கள் கண்டித்தனர்.
இந்தியாவிலுள்ள சைவவேளாளர்கள் பிரேத ஊர்வலத்தில் பறை மேளமடிப்பதை அவமரியாதையாகக் கருதுவதைச் சுட்டிக்காட்டி இங்குள்ள வேளாளர்கள் தமக்குத்தான் அத்தகுதியுடையது எனக் கோருவது முரண்பாடானதும் நியாயமற்றதும் என விளக்கினர். (18) இவர்கள் இம் முயற்சியில் சித்திபெற முடியவில்லை.
சம ஆசனம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமாரது முயற்சியினாலும், பின்னர் சைவர்க களது பிரயத்தனங்களினாலும் பல பாடசாலைகள் தாபிக்கப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை அரசாங்க நன்கொடை பெறும் பாடசாலைகளாகவும் விளங்கின. இவைகளில் சிலவற்றில் ஹரிஜனர் படித்து வந்தாலும் உயர்சாதிப் பிள்ளைகளுடன் சரிநிகர் சமானமாக ஆசனமமைத்துப் படிக்க முடியவில்லை.
தரையிலமர்ந்து அல்லது வகுப்புக்கு வெளியே நின்று பாடம் கேட்க வேண்டியிருந்தது. அரசாங்க நன்கொடை பெறும் பாடசாலைகளில் இந்நிலை நீடிப்பதை விரும்பாத அரசாங்கம் 1929 ஆம் ஆண்டு கல்விப் பணிப்பாளரது பிரமாணம் ஒன்றின் மூலம் அரசாங்க, அரசாங்க உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளனைத்தும் இன, மத, சாதி, தேசிய வேறுபாடின்றி பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்க வேண்டுமெனப் பணித்தது. (19) இப்பிரமாணம் யாழ்ப்பாணம் முழுவதும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. (20)
(பாலம், 1986, பக். 9 )
(தொடர்ச்சி: பாலம் ஜனவரி 1987)
சாதி வெறியர்கள் 15 பாடசாலைகளைத் தீக்கிரயாக்கினர்.
யாழ்ப்பாண மாணவ மகாநாட்டினர், இந்து வித்தியா விருத்திச் சங்க இராசரத்தினம். பேராசிரியர் சுந்தரலிங்கம் போன்றோரைத் தவிர ஏனையோர் இப் பிரமாணங்களைக் கடுமையாக எதிர்த்தனர். பாடசாலை முகாமையாளர் ஆசிரியர்கள், ஆகியோரும், கிராமச் சங்கங்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தன. இப்பிரமாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி மாணவர்களாயிருந்த பிராமணர் இருவர் ஏனையோருடன் சமபோசனம் வைக்க வேண்டிய நிலைக்குட்படுத்தியதால் அதனைத் தளர்த்தும்படி சேர். பொன். இராமநாதன் தலைமையிலான குழுவொன்று தேசாதிபதியைச் சந்தித்து உரையாடியது.(21)
கல்விப்பணிப்பாளர் இவ்விரண்டு பிராமணர் விடயத்தில் சலுகை காட்டினார்.(22) கிராமப் புறங்களிலுள்ள விவசாயிகளில் எழுபத்தைந்து வீதத்துக்கு மேற்பட்டோர் இப்பிரமாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் கிராமப்புறங்களில் இவ்வாணையை அமுல் நடத்த வேண்டாமென நகர்ப்புற பாடசாலை முகாமையாளர்கள் அரசாங்க அதிபரைக் கோரினர். (23)
பேராசிரியர் சுந்தரலிங்கம் சம ஆசனத்திற்காதாரமாக யாழ்ப்பாணம் விவேகாநந்த சபையில் பேசிய பொழுது கூட்டத்தில் குழப்பமேற்பட்டு கூட்டம் வன்முறைச் சம்பவங்களுக்கு இடங்கொடுத்து விடுமென்ற அச்சத்தால் இடைநிறுத்தப்பட்டது. (24) தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் தாழ்ந்த சாதியினரை அனுமதிப்பது சம்பந்தமாகவும், சரி ஆசனம் கொடுப்பது பற்றியும் கல்விப் பணிப்பாளர் உறுதியாக இருந்ததினால் இதில் தலையிடுமாறு பேராசிரியர் சுந்தரலிங்கத்தை உயர் சாதியினர் கேட்டனர். அரசாங்கத்திற்குத் தாழ்ந்த சாதியினரும் உயர்ந்த சாதியினர் போல் நல்ல பணம் வழங்கி இருப்பதால் இப்பாடசாலைகளுக்குத் தாழ்ந்த சாதியினர் பிள்ளைகளை அனுப்புவதில் தவறில்லை என வாதிட்டார். அத்துடன் ஏற்கனவே படித்து வந்த பிள்ளைகளைப் பாடசாலைக்கனுப்பாது விட்டால் வழக்குத் தொடருவேன் எனவும் எச்சரிக்கை செய்தார்.
பின்னர் மாவிட்டபுரம் திருவிழா ஒன்றிற்கு இத்தாழ்ந்த சாதிப் பிள்ளைகளும் பண உதவி புரிந்தனர் .(25) இச்சந்தர்ப்பத்தில் தீர்க்கமான முடிவொன்றினை மக்களுக்கு இதுபற்றி வழங்க வேண்டுமெனப் பத்திரிகையாளர்களும், தனிப்பட்டவர்களும், சேர். பொன். இராமநாதனைக் கோரினர். இராமநாதனவர்கள் ஏலவே தாழ்ந்த சாதியினரது கல்வி வளர்ச்சியில் முக்கிய கவனம் எடுத்தல் வேண்டுமென இந்து வித்தியா விருத்திச் சங்க ஆசிரியர்களைக் கேட்டிருந்தனர். ''சில தாழ்ந்த சாதிப் பிள்ளைகள் தங்கள் பாடசாலைக்கு வரவிரும்பும் தங்களுக்கு அது பிரிய வீனத்தையும் தொந்தரவையு முண்டாக்குமோ என்னும் பயத்தினால் அப்பிள்ளைகள் பின்னிற்கின்றனர். தாங்கள் அவ்வித பிள்ளைகளைக் கொள்ளவும் அவர்களுக்குச் சமஆசனம் கொடுக்கவும் சம்மதித்தால், இங்குள்ளவர் யாவரும் வித்தியா பகுதிப் பிரமாணத்தின் படி தாழ்ந்த சாதியாரோடு சம ஆசனத்திலுட்காரப் பின்னிட மாட்டார்கள்'
சேர். பொன். இராமநாதன் பகிரங்க அறிக்கை எதுவும் விடுத்ததாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தவர் சிலர் குடியேற்ற நாட்டுக் காரியதரிசிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி சாதிமுறை பற்றி ஆராய ஆணைக்குழுவொன்றும், தாழ்ந்த சாதியினரது பொருளாதார நிலையை விசாரிக்கக் குழுவொன்றும் நியமிக்கவேண்டுமெனக் கோரினர். அத்துடன் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளில் சம ஆசனம் வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சம ஆசனவிடயத்தில் தான் தலையிட வேண்டிய அவசியம் எதுவுமில்லை எனவும், கோரப்பட்ட ஆணைக்குழுக்கள் தேவையற்றதெனவும் குடியேற்ற நாட்டுக் காரியதரிசி பதில் அனுப்பினார். (27) எனினும் யாழ்ப்பாணம் இந்து வித்தியா விருத்திச் சங்கம் தனது பாடசாலைகளில் சம ஆசனம் அளிக்கவும், இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு ஒத்தாசை நல்கவும் தனது உடன்பாட்டைத் தெரிவித்தது. (28) எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காததால் சினங் கொண்ட சாதியபிமானிகள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினர். (29) துன்னாலை, புத்தூர், உரும்பராய் போன்ற இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவுகள் தாபிக்கப்பட்டன. உயர் சாதியினரது பயமுறுத்தல்களால் தாழ்ந்த சாதியினர் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை. வேளாளரும் கல்விப் பணிப்பாளரது பிரமாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தமது பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பவில்லை.
இதனால் ஏழாலை, கோப்பாய் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. வேறு சிலர் அரசாங்க உதவி நன்கொடை பெறாத பாடசாலைகளைத் தாபித்து நடத்தினர். 1930 இல் அரசாங்கம் நன்கொடை பெறாத பன்னிரண்டு பாடசாலைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. இவ்வாண்டுகளில் பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. என்பதற்கு எடுத்துக்காட்டாக பிள்ளைகளது பாடசாலை வரவு ஒழுங்கீனம் சம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையிலிருந்து அறிந்துகொள்ளலாம். 1929ஆம்,1930ஆம், 1931ஆம், 1932ஆம் ஆண்டுகளில் முறையே 5376, 9447, 8098, 14286 வழக்குகள் தொடரப்பட்டன. (30)
கல்விப்பணிப்பாளரது பிரமாணத்துக்கு எதிராக மக்கள் காட்டிய எதிர்ப்பும், பயமுறுத்தல்களுமே இப்பெருந்தொகை வழக்குகளுக்குப் பிரதான காரணம் வடமாகாண அரசாங்க அதிபர்கள் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளனர். (31)
வழக்குத் தொடரப்படும் எனத்தெரிந்திருந்தும் பாடசாலைக்கு வராதோரின் எண்ணிக்கை அதிகரித்ததிற்குரிய பொறுப்பு குற்றவாளிகளுக்கு கிராமச்சங்கங்கள் காட்டிய ஆதரவாகும். கிராமச் சங்கங்கள் தாமே சம ஆசனத்துக் கெதிராக இருந்த காரணத்தினால் இவ்வழக்குகளில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. இதனாலேயே பாடசாலை வழக்குகளை பொலிஸ் நீதிமன்றத்திற்கு மாற்றக்கூடிய சட்டத் திருத்தமொன்று அவசியமென அரசாங்க அதிபரொருவர் அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்தார். அரசாங்கம் தனது கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்த போதிலும் பாடசாலை முகாமையாளர்களும், கிராம பொலீஸ் விதானைமாரும், (32) தொடர்ந்து தாழ்ந்த சாதியினரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.
இத்தகைய பயமுறுத்தலினால் சிறுப்பிட்டியிலுள்ள அரசாங்க உதவிநன்கொடை பெறும் பாடசாலை தனது பதிவை இழந்தது. உதவி நன்கொடை பெறுவதற் பாடசாலைகள் மாணவரிடையே பட்சம் காட்டப்படுவதில்லை என்ற உறுதிப் பத்திரத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தாலும் நாலாம் ஐந்தாம் தசாப்தம் வரையும் சில பாடசாலைகள் ஹரிஜனப் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. அக்காலப் பாடசாலை முகாமையாளரது மனப்பாங்கிற்கு எடுத்துக் காட்டாக ஹண்டி பேரின்ப நாயகம் விபரித்த நிகழ்ச்சியொன்று இதற்குச் சான்று பகர்கின்றது. (33)
1944 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் பதவிக்கு நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது அக்கல்லூரியின் முகாமையாளர் திரு. ஸி. சுப்பிரமணியத்திடம் தெரிந்து கொள்ள விருப்பிய பிரதான விடயம் அவர் பாடசாலையில் ஹரிஜனப் பிள்ளைகளுக்கு இடமளிப்பாரா என்பதுதான். கிறிஸ்தவப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் பெரும்பாலும் இரண்டாம் மகாயுத்தம் முடிவுற்ற பின்னரேயே ஹரிஜனப் பிள்ளைகளுக்குப் படிக்கும் வாய்ப்பேற்பட்டது.(34)
பாடசாலைகளில் மாத்திரமின்றி பஸ்களிலும், வாடகைக் கார்களிலும் சமஆசன வசதிகிடைக்காததால் யாழ்ப்பாண ஒடுக்கப்பட்ட தமிழர் சேவைச் சங்கத்தை (Jaffana Depressed Tamill Service League) சேர்ந்தவர்கள், வாடகை வாகனங்களில் தமக்கு ஆசன வசதி செய்துதர வேண்டுமென அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இவர்களுடைய கிளர்ச்சியினால் வேளாள பஸ் சாரதிகள் 1933 ஆம் ஆண்டில் வேலை நிறுத்தம் செய்தனர். (35)
வாலிப மகாநாடு (Youth Congress)
சாதிப்பிரச்சினைகள் 1930ஆம் ஆண்டளவில் உயிரூட்டம் பெற உழைத்த சக்திகளில் யாழ்ப்பாண வாலிபர் மகா நாட்டினர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.(36) இலங்கை வரலாற்றில் இதுவரை இவ் வடமாகாண யாழ்ப்பாண வாலிப மகா நாட்டினரது தொண்டு பற்றி விரிவான ஆய்வுகள் நடாத்தப் பெறாததால், அவர்களது பங்களிப்பு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற முடியவில்லை. (37)
இந்திய தேசியக் காங்கிரசின் கொள்கைகளைக் , குறிப்பாக காந்தி காலத் தத்துவத்தை முன்னோடியாகக் கொண்டு இலங்கையில் தோன்றிய இயக்கங்களில் யாழ்ப்பாண வாலிபர் மகா நாட்டினர். முதலிடம் வகிக்கின்றனர். இலங்கை அரசியல் வளர்ச்சியிலும் இது பிரதிபலிக்கக் காணலாம். வாலிப மகாநாட்டினர் இலங்கையின் அரசியல் சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் காந்திய வழியையே பின் பற்றினர். தேசிய ஐக்கியம், பூரண சுயராச்சியம், சாதி வேற்றுமையை ஒழித்தல், சீதனம் ஒழித்தல் வெளிநாட்டுப் பொருட்களைப் பகிஷ்கரித்து உள் நாட்டு உற்பத்திகளை உபயோகித்தல் போன்றவற்றை இலங்கையிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைமுறைப் படுத்த விரும்பினர். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
”மாணவர் மகா நாடாக'' (Student Congress) இவ்வாலிபர் மகா நாடு தோன்றிய (1924) காலத்திலேயே சாதிமுறை ஒழிக்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர். (38) பின்னர் பொதுமேடைகளில் சமுதாய விழிப்புணர்ச்சிபற்றிப் பேசிய பழைய தலைமுறையின் தலைவர்களைப் போலன்றித் தாம் பிரச்சாரம் செய்ததைப் பலரினது எதிர்ப்பின் மத்தியிலும் செயற்படுத்தவும் விழைந்தனர். சகல கிராமங்களுக்கும் சென்று - சாதி வேறுபாடுகள் பாராட் டாமல் தமது கொள்கைகளைப் பிரசாரம் செய்தனர். இத்தகைய பிரச்சாரமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. அத்துடன் காந்தியைபும், அவரது தத்துவத்தில் நம்பிக்கையுடன் உழைத்தவர்களும், இந்தியத் தேசிய காங்கிரசின் பெருந்தூண்களாக விளங்கிய எஸ்.சத்தியமூர்த்தி, இராஜகோபாலாச்சாரியார், சரோஜினி தேவி, கமலாதேவி சட்டோபாத்தி யாய, ஜவஹர்லால் நேரு, திரு. வி. கல்யாணசுந்தர முதலியார், போன்றவர்களை வரவழைத்து சமூகச் சீர்கேடுகள் களைந்தெறிய வேண்டிய அவசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்தோதச் செய்தனர். சிறப்பாக காந்தியின் ஹரிஜனர் பற்றிய சொற்பொழிவுகளுக்குப் (39) பாடசாலைகளில் ஹரிஜனப்பிள்ளைகளுக்கு அனுமதி கிடைத்தது. (39ஆ)
வாலிப மகாநாட்டினர் தமது வருடாந்தர மகா நாடுகளின் போது தாழ்ந்த சாதி மக்களையும் தம்முடன் சேர்த்து மகா நாட்டு மண்டபங்களில் ஆசனம் கொடுத்தனர். மல்லாகத்தைச் சேர்ந்த மூத்தவி, இளையவி, தெல்லிப்பழையைச் சேர்ந்த யோ. போல் போன்ற தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் வாலிப மகா நாட்டினருடன் ஒத்துழைத்தவர்களில் சிலராவர். இக் காரணத்தினால் தமது மகா நாடுகளைத் கீரிமலை வைத்திலிங்கம் மடத்தில் நடத்துவதை விடுத்துக் காங்கேசன்துறை, தெல்லிப்பழை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்த வேண்டியிருந்தது. தாழ்ந்த சாதியினரை மகாநாட்டு மண்டபங்களில் சேர்த்துக் கொண்டதின் விளைவாக மகா நாட்டு மண்டபங்கள் உயர் சாதிக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன. இவைகளிலும் பார்க்க வாலிப மகாநாட்டினர் அறிமுகப்படுத்திய "சமபந்தி போசனக்'' கூட் டங்கள் பெரும் வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகோலக் கூடிய வகையிலமைந்தது.
உதாரணமாக 1930 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த மகாநாட்டின் போது ஹரிஜனர்களை மகா நாட்டு மண்டபத்தில் அனுமதிப்பதோடமையாது அவர்களுடன் சமபந்தி போசனம் செய்யவும் திட்டமிடப் பட்டிருந்தது. இதனைத் தடுக்க முனைந்த சாதியபிமானிகள் முதல் நாளிரவே மகா நாட்டு மண்டபத்திற் கருகிலிருந்த கிணறுகளை அசுத்தப்படுத்தினர். மேலும் சேர். பொன். இராம நாதனைத் தலைவராகக் கொண்ட வேதாகம சங்கத்தினர், மகாநாட்டு மண்டபத்திற்குள் கற்களை வீசி மகாநாட்டில் கலந்து கொண்டவர்களைத் துரத்தினர். பொலிஸார் தலையிட்டிருக்காவிடின் இந்நிகழ்ச்சி வன்முறைச் சம்பவங்களுக்கு இடம் கொடுத்திருக்கும். இம்மகாநாடு இதனால் அவ்விடத்தில் நடைபெறுவதைக் கைவிட்டு யாழ்ப்பாணம் ரிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. (40)

(தொடரும்- அடுத்த தொடர் வெளிவந்த “பாலம்” சஞ்சிகை இதுவரை கிடைக்கப்பெறவில்லை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக