பக்கங்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் வே. கனகரத்தின உபாத்தியாயரின் "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்” (1882) பெறும் முக்கியத்துவம்

இரா. வை. கனகரத்தினம்

தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் வே. கனகரத்தின உபாத்தியாயரின் "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்” (1882) பெறும் முக்கியத்துவம்

-இரா. வை. கனகரத்தினம் (1946-2016)



''இலக்கிய வகைகள் அனைத்திலும் முதன்மைமிக்கது வாழ்க்கை வரலாற்று இலக்கியமேயாகும்”: சாமுவேல் ஜான்சன் .

தமிழில் எழுந்த இலக்கிய வகைகளுள் காலத்தால் பிற்பட்ட இலக்கிய வகைகளுளொன்றே வாழ்க்கை வரலாற்று இலக்கியமாகும். உலக இலக்கிய வரலாற்றிலும் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்த இலக்கியத்திற்குக் கால்கோள் நடத்தப்பெற்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை இவ்வாழ்க்கை வரலாற்று இலக்கிய வளர்ச்சிக்கான பரிணாமங்கள் காலந்தோறும் வளர்ந்துவந்தமையை அறிய முடிகின்றது. ஒரு வகையில் தமிழிலக்கியத்துறைக்கு இத்துறை புதியதாக அமையாவிட்டாலும், ஒருவடிவமாக இத் துறை தமிழ் இலக்கிய வரலாற்றில் வளரவில்லை என்பது இங்குக் கருதத் தக்கதாகும். ஆயினும், ஆழமாகத் தமிழிலக்கிய வரலாற்றைத் ஆராய்ந்து பார்த்தால் சோழப் பெருமன்னர் ஆட்சிக்காலத்தில் இவ்விலக்கிய வகை ஒரு முழுமையான இலக்கிய வடிவிற்கு உருக்கூட்டி வளர்ந்தது எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்விலக்கியம் முழுமையான வடிவத்தைப் பெறலாயிற்று. இப்படைப்பு இலக்கியப் படைப்பாளர்களாக ஈழநாட்டவர் விளங்கினர் என்பதை ஆய்வுபூர்வமாக அறிய முடிகின்றது.

சங்ககால இலக்கியங்களில் இயன் மொழித் துறையிலும் வாகைத் திணையிலும் வருகின்ற நடுகல் வாழ்த்து, மன்னைக்காஞ்சி முதலானவை ஒருவகையில் இவ்வகை இலக்கிய வடிவத்திற்கு உட்பட்டவையேயாகும். மற்றும், அதியமானைப் பற்றி ஔவையார் பாடியனவும், பாரியைப்பற்றிக் கபிலர் பாடியனவும், ஆய் அண்டிரனைப்பற்றி உறையூர் எணிச்சேரி முடமோசியார் பாடியனவும் மேற்காட்டிய இலக்கிய வடிவத்தைச் சார்த்தனவேயாகும். இவ்வகையில் ''ஒரு மனிதன் வாழ்வு யதார்த்த நோக்கில் சித்திரிக்கப்படுவதாகிய வாழ்க்கை வரலாற்று இலக்கிய நோக்கு சங்க காலத்தில் கால் கொண்டிருந்தது” என்ற கூற்றை மறுப்பதற்கில்லை, சங்ககாலத்திற்குப் பிற்பாடு சிலப்பதிகாரம், பழமொழி நானூறு, தேவாரங்கள், திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, மூவர் உலா, கலிங்கத் துப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பெரிய புராணம் முதலான இலக் கியங்களிலும் கல்வெட்டு, செப்பேடு, மெய்க்கீர்த்தி முதலான வரலாற்று ஆவணங்களிலும் வாழ்க்கை வரலாற்று இலக்கியப் பண்புகளைக் கூர்ந்து நோக்கலாம், இவ்வகை இலக்கியங்களில் கருக்கொண்ட கருத்துகள் யாவும் ஒருங்குதிரண்டு முழுமையான வாழ்க்கை வரலாற்று இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தது எனலாம். இவற்றோடு பிறிதொரு வகையாகவும் இவ்விலக்கிய வடிவம் பரிணமிப்பதற்குக் காரணமிருப்பதாகத் தோன்றுகின்றது.

இவ்விலக்கிய வடிவங்களையும் தமிழிலக்கியத்தையும் வளம்படுத்தியதில் புராணங்களும் காப்பியங் களும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. புராணங்கள் புராண மரபுகளை வளர்த்துச்சென்றபொழுதும், தேவர்கள், மன்னர்கள் ஆகியோரின் தோற்றம், நிலைபேறு, இறப்பு ஆகிய மூன்று பண்புகளையே பெரிதும் வலிந்து குறிப்பிட்டுச் செல்லும் பண்பினை அவை கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இவற்றின் கருத்துகள் பெரிதும் தமிழிலக்கிய வடிவங்களைப் பாதிக்கவே செய்தன. அவ்வகையில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் புராணங்களின் செல்வாக்குக் கணிசமானதென்றே சொல்லலாம். அவ்வாறே காப்பியங்களும் இவ்வகை இலக்கிய வரலாற்றுப் போக்கிற்குக் கணிசமான பங்களிப்பினை ஆற்றியுள்ளன. தண்டியலங்காரம் தரும் காப்பிய இலக்கணத்தை நோக்கும் பொழுது இதன் தாக்கம் தெளி வாகப் புலப்படும். ஆனால், தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்ற மும் வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்தோர் இக்கருத்துகளில் கவனம்செலுத்தியதாகக் தெரியவில்லை.

வாழ்க்கை வரலாற்று இலக்கியம் கலைப்படைப்பு என்றதோடு அமையாது சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உயிருள்ள பொருளாகவே விளங்குகின்றது. இதன் முக்கியத்துவத்தைச் சாமுவேல் ஜான்சன் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“வாழ்க்கை வரலாறுகளில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் உணர்ச்சிகளும் நமது வாழ்க்கை அனுபவத்திற்கு மிகவும் அணுக்கமானவையாகவும் அவற்றோடு நெருங்கிய தொடர்புடையவை போலவும் அமைவதால், நமது கவ னத்தை ஈர்த்தும் கருத்தை ஒருநிலைப்படுத்தியும் நமது வாழ்வுக்கு வழிகாட்டு வதில் வாழ்க்கை வரவாற்றுக்கு இணையான இலக்கியம் வேறு இல்லை.”2

வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்பது பற்றித் தக்க வரையறை செய்வது கடினமானது என்றாலும் ஒரு மனிதனின் பிறப்பு, நிகழ்வு, இறப்பு என்னும் மூன்று புள்ளிகளைத் தாண்டிச் செல்லும்பொழுது அவன் தனக்காகவும் சமுதாயத்திற்காகவும் ஆற்றிய பணிகளை உலகிற்குப் புலப்படுத்தும் அதே வேளையில் சமுதாயத்திலிருந்து அவனைப் போன்றோரை உருவாக்கும் வகையில் கலைப்படைப்பாகப் படைக்கப்படும் நூலினை வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்று குறிப் பிடலாம்.

வாழ்க்கை வரலாற்று இலக்கியப் போக்கினை மனத்தில்கொண்டு அதனை இரண்டு வகையாக வகுத்து நோக்கலாம். (1) வாழ்க்கை வரலாறு (2) தன் வரலாறு (சுய சரிதை) என்பனவாகும். வாழ்க்கை வரலாறு என்பது தனி மனித வாழ்க்கை வரலாற்றையும் பல தனி மனிதர்களின் வரலாற்றின் தொகுப்பாகவும் அமையலாம். இவை இரண்டும் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் அடங்கும்.

இவ்வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனில் காணப்படும் ஆளுமைக்கேற்ப வேறு பட்டதாக அமையும், இதனால் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் போக்கு பல்வேறு வகையாகப் பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சான்றாகக் கலை, தத்துவம், இலக்கியம், சினிமா, நடனம் என்ற வகையில் அமையக் கூடும். இவற்றின் பெருக்கத்தினை மட்டுப்படுத்தும்பொருட்டு (The World Books Encyclopaedia) உலகப் புத்தகக் கலைக்களஞ்சியம் (1960) வாழ்க்கை வரலாற்று இலக்கி யத்தைச் சுருக்க வரலாறு, ஆய்வுமுறை வரலாறு, பக்கச் சார்பான வாழ்க்கை வர லாறு, வரலாற்றுக் கற்பனை, சுவைமலி வாழ்க்கை வரலாறு என்று வகுத்துக் குறிப் பிடும். இவற்றினைப் பின்வருமாறு புலப்படுத்தலாம்.

(1) சுருக்க வரலாறு: சிறிய குறிப்பு அடங்கியது, சான்றாகச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் எழுதிய ''தமிழ்ப் புலவர் சரித்திரம்' என்னும் நூலைக் குறிப்பிடலாம்.

(2)ஆய்வுமுறை வரலாறு: இதுபட்டப் படிப்புக்கு ஆய்வுக் கட்டுரை எழுதுவது போன்றது, சான்றாக மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய “சி, வை. தாமோதரம் பிள்ளை- ஓர் ஆய்வு நோக்கு” என்னும் நூலைக் குறிப்பிடலாம்.

(3) பக்கச் சார்பான வாழ்க்கை வரலாறு: தலைவனின் வாழ்க்கை வரலாற்றின் சிறப்பான பகுதியை அல்லது இரண்டாம் பகுதியைச் சுட்டிக் காட்டல், சான்றாக, உ. வே. சாமிநாதையர் எழுதிய "திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்” என்னும் நூலைக் குறிப்பிடலாம்.

(4) வரலாற்றுக் கற்பனை: தன்னிகரில்லாத் தலைமகனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நவீனங்களைப் படைத்தல். சான்றாக வ. அ. இராசரத்தினம் எழுதிய "கிரௌஞ்சப் பறவைகள்'' என்னும் நூலைக் குறிப்பிடலாம்.

(5) சுவைமலி வாழ்க்கை வரலாறு: இலட்சிய முனைப்போடு தெளிந்தவோட்டத்தில் எழு தப்படுவது. சான்றாக, மறைமலையான் எழுதிய "பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு” என்னும் நூலைக் காட்டலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் வாழ்க்கை வரலாறு பற்றி எழுந்த இலக்கியங்கள் நாற்பத்து மூன்று அறிய முடிகிறது.4 அவற்றில் ஈழ நாட்டில் மூன்று நூல்களும் தமிழகத்தில் நாற்பது நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றில் பன்னிரண்டு கிறித்தவ சமயத் தொண்டர்கள் பற்றியவை, பதினெட்டு இந்துசமய அடியவர் பற்றியனவ. ஈழ நாட்டில் வெளிவந்த ஒரு வெளியீடும் ஒரு புலவர் பெருமகன் பற்றியதேயாகும். இவற்றில் பெரும் பாலானவை சமயச் சார்புடையனவாகக் காணப்படுவதினாலும், பாடசாலைப் பாடத் திட்டத்திற்கமைய எழுதப்பட்டமையாலும், ஒழுக்கம் நீதி புகட்டும் நோக்கத்துடன் அதீத அற்புதங்களை ஆற்றும் மெய்யடியார்களின் வரலாறுகளாகவும் இந்நூல்கள் அமைந்திருந்தன என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த பல்வேறு சமயப் போட்டிகள் இத்தகைய அவாவினை எழுத்தாளர்களிடையே வளர்த்துச் சென்றமைக்குக் காரணங்களாக அமைந்தன.

1882ஆம் ஆண்டிற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் “கிளைவ் சரித்திரம்" (1871), ''கி, கொ, சரித்திரம்” (1871), ''நபிகள் வரலாறு'' (1875), “சங்கர விஜயம்” (1879), ''இயேசு கிறிஸ்துவின் ஜீவிய சரித்திரம்" (1882), "ப்ரொபல் வாழ்க்கை வரலாறு" (1882) என்னும் நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் தொழுவூர் செ. வேலாயுத முதலியாரால் இயற்றப்பெற்ற "சங்கர விஜயம்'' என்ற நூலொன்றே தமிழ் நாட்டைச் சேர்ந்த பெரியார் பற்றிய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலாக அமைகின்றது எனலாம். இராமலிங்க அடிகளார் பக்தரான இவர், அடிகளார் மறைந்தபின் (1864) ஏற்பட்ட மனமாற்றத்தால் எழுதப்பட்ட நூல் இது என்பர். பொதுவாக இந்நூல்கள் சமயச் சார்பானவையாகவும் அதி அற்புதங்களும் திருவிளை யாடல்களும் நிறைந்தனவாயும் தத்துவங்களைப் போதிப்பவையாயும் மிகவும் சுருங்கிய வடிவின தாயும் அமைவதால் இவற்றினை உயரிய வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் என்று குறிப்பிடுவதற்கில்லை. 1882ஆம் ஆண்டிற்குமுன் எழுந்த நூல்கள், தமிழ் நாட்டில் தமிழில் எழுந்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்ற மட்டில் முதன்மை பெறுகின்றனவே தவிர வேறெந்த வகையிலுமல்ல.

ஈழநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த நூல்களுள் சைமன் காசிச் செட்டி, (1807-1860) எழுதிய "தமிழ் புளூராக்” (Tamil Plutarch), அ. சதாசிவப் பிள்ளையால் (1820-1895) இயற்றப்பெற்ற "பாவலர் சரித்திர தீபகம்" (1886), வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித் தீரம்" (1882) என்பன குறிப்பிடத்தக்கன. முதல் இரு நூல்களும் மானிப்பாய் (Strongs Absury) அச்சகத்திலிருந்து வெளிவந்தன, "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக தாவலர் சரித்திரம்," யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை அச்சிற் பதிப்பிக்கட்பட்டுச் சித்திரபானு வருஷம் ஐப்பசி மாதம் (1882) வெளிவந்தது. இம் மூன்று நூல்களும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் வாழ்க்கை வரலாற்று இலக்கிய வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெறும் நூல்களாக அமைந்துள்ளன. வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முன்னோடிகளாகவும் பரந்த பார்வையும் ஆழமான நோக்குமுடைய நூல்களாகவும் இவை விளங்குகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வாழ்க்கை இலக்கிய வகையில் அமையும் தமிழ்ப்புலவர் சரித்திரத்தை ஆங்கிலத்தில் முதன் முதல் எழுதிவெளியிட்ட பெருமை சைமன் காசிச் செட்டியாரைச் சாரும்.

மணியகாரர், முதலியார், நீதிபதி முதலான பதவிகளை வகித்த சைமன் காசிச் செட்டியவர்கள் சிலாபத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தம் நூலில் 196 புலவர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பொ.பூலோகசிங்கம், இந்நூல் தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியம் 202 புலவர்கள் பற்றிக் குறிப்பிடும் எனப் புகழ்ந்துரைப்பார்.5 தண்டபாணி சுவாமிகள் (1859-1898) தனது "புலவர் புராணம்” என்ற நூலினைப் பதினெட்டாம் நூற்றாண்டில் வெளியிட்டார். அந்நூல் நூறு புலவர்கள் பற்றியே குறிப்பிடுகின்றது. அது புராண மரபுகளைத் தழுவிநின்றே விளக்குகின்றது. அ. சதாசிவப் பிள்ளை (1820-1895) யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1832ஆம் ஆண்டு முதல் வட்டுக்கோட்டைச் செமினரியில் கல்வி பயின்றவர். 1857ஆம் ஆண்டு முதல் உதயதாரகைப் பத்திரிகை ஆசிரியராகவும், உடுவில், சாவகச்சேரி, மானிப்பாய் முதலான பகுதிகளில் ஆசிரியத் தொழிலையும் மேற்கொண்டவர். நாவலர் பீற்றர் பார்சிவல்துரை ஆகியோரோடு விவிலிய நூல் மொழிபெயர்ப்பு அங்கீகாரம் பெறத் தமிழ் நாடு சென்று திரும்பியவரென அறிய முடிகின்றது. இவரது “பாவலர் சரித்திர தீபகம்”(1886}, 410 புலவர்களின் வரலாற்றினை விளக்கிச் செல்கின்றது. அவர்களில் 82 ஈழ நாட்டுப் புலவர்கள் பற்றியும் 328 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதோர் ஆய்வுமுறையாக அமையாவிட்டாலும் சுருக்க வரலாற்றைத் தழுவிப் பெரிதாக அமைந்துள்ளது. தமிழில் பின்னெழுந்த தமிழ்ப் புலவர் சரிதைகள் அனைத்துக்கும் முன்னோடியானதாகவும் தமிழில் எழுந்த முதல் தமிழ்ப்புலவர் வரலாறு என்ற வகையிலும் வரலாற்றில் முதன்மையும் முக்கியமும் பெற்று விளங்குகின்றது எனலாம்.

வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம்” முழுமையான வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலாக அமைகின்றது. ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும் ஆசிரியரின் தகுதிப்பாட்டினைச் சரியாக யாரும் வரையறுத்துச் சொல்வது கடினம். ஆயினும் அவ்வப்போது சில ஆய்வாளர்கள் இது பற்றிய கருத்துகளைக் கூறிச் சென்றுள்ளனர். பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகும் ஆசிரியர் அவரோடு நெருங்கிய தொடர்புடையவராக இருத்தல் வேண்டும் எனவும் அவனிடத்தில் பரிவுணர்ச்சியும் ஈடுபாடும் ஆய்வும் ஆளுமையும் மிகுந்திருத்தல் வேண்டும் எனவும் கருதப்படுகின்றது. இவற்றின் மூலம் அவன் உயிரோட்டமான உண்மையான உணர்ச்சி மிகுந்த சிறந்த கலைப்படைப்பாக வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தைப் படைக்க முடிகின்றது. இங்கு வே.கனகரத்தின உபாத்தியாயருக்கும் அவர் நூலின் தலைமகனான நாவலருக்கும் உள்ள உறவு மேற்காட்டிய அம்சங்களின் பாற்பட்டவையாகும். இன்று நாவலரின் வாழ்க்கை வரலாறு பற்றி 15க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் வே.கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய நூலும் நாவலரின் பெறாமகன் த. கைலாசபிள்ளை எழுதி (காலயுத்தி வருஷம், தை) சென்னைப் பட்டணம் வித்தியா நுபாலன யந்திரசாலை மூலம் வெளியிட்ட ஆறுமுக தாவலர் சரித்திரமும் குறிப்பிடத்தக்கன. த.கைலாசபிள்ளை கனகரத்தின உபாத்தியாயர் நூல் பற்றியும் தனது நூல் பற்றியும், பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கதாம்.

"கனகரத்தினபிள்ளை எழுதியது கொஞ்சம் சுருக்கமானது மாத்திரமன்றிச் சில கதை வேறுபாடும் உடையது..... இச்சரித்திரத்தை விரிவாக எழுதல் வேண்டுமென்று ஸ்ரீ தி. த. கனகசுந்தரம்பிள்ளை,பி.ஏ. முதலானவர்கள் சிலர் என்னைக் கேட்டார்கள். நான் நாவலருடைய தமையனார் ஒருவனுடைய மகன்; அவர்களுடைய எழுத்து வேலைகளைச் சில வருட காலஞ் செய்தவன்; அவர்களுடைய சரித்திரம் அதிகம் அறிந்தவன். ஆதலால் ஷ பிள்ளை முதலானவர் என்னைக் கேட்டது நீதியேயாம். என்னைக் கேட்டவர்களுடைய சொல்லை மீறவும் தட்டாமல் என்னுடைய தகப்பனார், பெரிய தகப்பனார் முதலானவர்கள் பலமுறை சொல்ல நான் கேட்டவைகளையும், நாவலரவர்கள் தாமே சொல்ல நான் கேட்டவைகளையும், நான் நேரே கண்ட வைகளையும் ஒரு கோவைப்படுத்தி இச்சரித்திரத்தை எடுத்திருக்கிறேன். ஆதலால், இச்சரித்திரத்தில் ஸ்துதியாயுள்ளவை இல்லை என்பதே துணிவு”.7

இத்தகைய கூற்று வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரத்தில் பிழைகள் நிறைந்துள்ளன என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவதோடு அமையாது, நாவலர் சரித்திரத்தை எழுதுவதற்குத் தமக்கே வலுவும் தகுதியும் உண்டென்பதை மறைமுகமாகச் சுட்டிச் செல்வதையும் கூர்ந்துநோக்க முடிகின்றது. ஆனால், உண்மை அதுவன்று. த.கைலாச பிள்ளையவர்களுக்கு நாவலர் சரித்திரத்தை எழுதுதற்கு எத்தகைய உரிமையும் தகுதிப்பாடும் வலுவும் உண்டோ அத்தனையும் கனகரத்தின உபாத்தியாயருக்கும் இருந்தது.

வே. கனகரத்தின உபாத்தியாயர், யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேதவனப்பிள்ளை என்பாரின் குமாரர். இவருக்கு மாணிக்கவாசகபிள்ளை என்ற மறுபெயருமுண்டு. இதனால் மாணிக்க உபாத்தி யாயர் என்றும் இவரை அழைப்பர். நாவலரின் வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையில் பயின்றவர். நாவலரிடத்தே தமிழ்க் கல்வி யைப் பிழையறப் பயின்றவர். சைவ உதயபானு, இவர் பற்றிக் குறிப்பிடுகையில் "வண்ணார்பண்ணையில் தமிழ்க்கல்வி, இங்கிலிஸ் கல்விகளை இயன்ற வரை கிரமமாகக் கற்றவரும் நல்லொழுக்கத்திற் பலராலும் பாராட்டப்பட்டவரும்” எனச் சிறப்பித்துக் குறிப்பிடுவதும் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. நாவலரிடத்தே பயின்ற இவர் நாவலர் நிறுவிய சைவாங்கில வித்தியாசாலையில் (1872- 1878) ஆறு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். நாவலரை இவ் ஆங்கில வித்தியாசாலையை நடத்தமுடியாமற் செய்வதற்குப் பாதிரிமார் எடுத்த வெளிப்படையான அஞ்சாத முயற்சியினால் நாவலர் இப்பாடசாலையை 1878 ஆம் ஆண்டு மூடினார். இதனைத் தொடர்ந்து அவர் 1878ஆம் ஆண்டு முதல் சேர் சோக் பாதிரியார் நிறுவிய சீதாரி ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்துகொண்டார். 1883ஆம் ஆண்டு நொத்தாரிசு (Notary Public) வேலைக்குப் படிக்கும் பொருட்டு ஆசிரியத் தொழிலினின்றும் ஓய்வு பெற்றார். அப் பொழுது அவருடைய நன் மாணாக்கர்கள் அவருக்கு ஒருவாழ்த்துப் பத்திரமும் கல்லிழைத்த மோதிரமும் அன்பளிப்பாக அளித்துப் போற்றினர். அதுபற்றி உதய தாரகை செய்தி வெளியிடுகையில்,

"தமக்கு மேலாயுள்ள மேனேச்சர்களுக்கு (கடமைகளை நேர்மையாய் நடத்துதலால்) மிகுந்த திருப்தியாயினார். தமக்குக் கீழேயுள்ள மாணாக்கர்களுக்கு (அவர்களைப் பெற்ற பிதாவிலும் அன்பாயும் ஆதரவாயும் நடத்துதலினால்) மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தார். இவருடைய போதனையாலும் அன்பாலும் வசீகரிக்கப்பட்ட இவர் மாணாக்கர்கள் இவர் தங்களை எப்பொழுதும் நினைக்கும் பொருட்டும் தங்களுடைய நன்றியைக் காட்டும் பொருட்டும் வத்தனப் பத்திரமும் கல்லிழைத்த மோதிரமும் உபகாரமாகக் கொடுத்தார்கள்"9

எனச் சிறப்பித்துக் குறிப்பிடும்.

கனகரத்தின உபாத்தியாயரிடத்தில் தமிழ், ஆங்கிலக் கல்வியின் அறிவும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கின்ற உயர்பண்புகளும் குரு பக்தியும் மேலோங்கி நின்றன. நாவலரின் ஆங்கிலப் பாடசாலையில் இவர் ஊதியம் பெறாது கல்வி பயிற்றி வந்தார். தாம் கிறித்தவப் பாடசாலையில் ஊதியத்தின் பொருட்டுக் கல்வி கற்பித்துவந்தபோதும் தம்மை மதமாற்றிக் கொள்ளவில்லை. அப்பாடசாலையில் கற்பித்த காலப்பகுதியில்தான் உபாத்தியாயர் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரத்தை எழுதி அரங்கேற்றினார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும், நாவலரிடத்தில் காணப்பட்ட ஒழுகலாறுகளும் அஞ்சாமையும் அவர் மாணாக்கரான உபாத்தியாயரிடத்தேயும் காணப்பட்டன, எல்லாவற்றிலும் குருபக்தியே உயர்ந்து நின்றது, இதனால்தான் நாவலருக்குப் பல முதல் மாணாக்கர்களும் உறவினர்களும் இருந்தபொழுதும் உபாத்தியாயர் கிறித்தவக் கல்லூரியில் இருந்துகொண்டே நாவலர் சிவபதமடைந்து மூன்று ஆண்டுகளுக்குள் நாவலரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலினைப் படைத்து வெளிப்படுத்தினார் எனலாம். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இந்நூலுக்கு அளித்த சிறப்புப் பாயிரத்தில் இவர் குரு பக்தியைப் பின்வருமாறு போற்றுவது இங்கு உற்றுநோக்கத் தக்கதாகும்.10

“உத்தம நல்லிலக்கிய லக்கணந் தேர்ந்தோன் பரம்பரை சேருபாத்தியாயன் சத்தியவா சகவேத வன நாதன் றவவலியிற் றந்த பாலன் அத்தகைய நாவலர்கோன் சீடருண் மாணிக்கமென வறையப்பட்டோன் புத்திமிகுந்தொளிர் கனகரத்தின நாம சுகுண பூபன்றானே.”

உபாத்தியாயர் தனது குரு வணக்கத்தில் தனது குரு பக்தியைப் பின்வருமாறு சிறப்புற வெளிப்படுத்துவார்.11

"பேரேறு சைவப் பெரும்பயிர் வளர்த்திடும் பெட்புடைக் காரையடியார் பெயராத மலவிருள்க ளருகவிரி பரிதியைப் பிறைசூடி யேபரனெனா நாரேற வழிபட்டு நாமெலா முய்ய வருணங் குருவை நாவலப்பேர் நவில்யோக ரூடியாப் பெற்றபெரு மானையடி நளின மலர் போற்றி செய்வாம்”

நூலின் முகவுரையில் கனகரத்தின உபாத்தியாயர் பின் வருமாறு குறிப்பிடு வதும் இங்குக் கவனத்திற்குக் கொள்ளத் தக்கதாகும்.12

"எம்பெருமான் கைம்மாறு கருதாது தமக்கெல்லாம் செய்தசெயற்கருங் செய்கைகளையும் அவருடைய புகழையும் சரித்திரமாக வெழுதக் கருதி, தம் மையுமொரு பொருட்படுத்தித் தமது சந்நிதானத்திலே நிற்கு மொருவனாகச் சேர்த்த குருமூர்த்தியினுடைய திருவடிகளைத் துதித்து அவரது திருவருளி னாலே கத்திய ரூபமாகச் செய்து அச்சிற்பதிப்பித்தோம்''. இவ்வகையில், வே. கனகரத்தின உபாத்தியாயருக்கு நாவலர் சரித்திரத்தை எழுதற்கோ வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தைப் படைத்தற்கோ வேண்டிய தகுதிப்பாடுகள் யாவும் அவரிடத்தில் ஒருங்கே அமைந்து காணப்பட்டன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. உபாத்தியாயர் இந்நூலினை எழுதி 1882ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் 6 மணி யளவில் நாவலர் பாடசாலையாகிய வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியா சாலையில் வெளிப்படுத்தினார். அப்பொழுது இப்பாடசாலையின் தலைவராக இருந்தவர் சதாசிவப்பிள்ளை அவர்களாகும்.

வே. கனகரத்தின உபாத்தியாயரின் நூலுக்கும் கைலாசபிள்ளையின் நூலுக்கு மிடையில் உள்ளடக்கத்தைப் பொறுத்த மட்டில் வேறுபாடிருக்கவில்லை பொ. பூலோகசிங்கம் குறிப்பிடுவதுபோல, வே, கனகரத்தின உபாத்தி யாயர் குறிப்பிட்ட விடயங்களை ஒழுங்குபடத் திரட்டிச் செப்பனிட்ட முயற்சி யாகவே பெரிதும் அமைந்துள்ளது",13 அனுபந்தமாகச் சில கடிதங்கள், சிறப்புச் செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஆனால், இச்சிறப்புச் செய்திகளில் சில உபாத்தியாயர் காலத்திற்குப் பிற்பட்டோரது குறிப் புகளாகவே காணப்படுகின்றன. இவை உபாத்தியாயருடைய நூலில் இடம் பெறாமை பெரும் வியப்புக்குரிய செய்தியன்று;

தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தை ஆய்வு செய்த சாலினி இளந்திரையன் “19ஆம் நூற்றாண்டில் எழுந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் பெரிதும் சமயச் சார்புடையனவாக அமைந்து, புனைந்துரைகளை மிகுதியாக உடையதினால் அவற்றை வாழ்க்கை வரலாற்றுக்குப் பொருத்தமான முழுமையான வாழ்க்கை வரலாறுகளாகக் கொள்வதற்கில்லையெனத் துணிந்து குறிப்பிடுவதோடு 20ஆம் நூற்றாண்டு பிறந்தவுடனேயே தமிழ் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்துக்கும் ஒரு முழுமை கிடைத்து விட்டது”14 என ஆராய்ந்து குறிப்பிடுவார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கா. ச. துரைசாமி எழுதிய “தென்னாட்டுச் சிரேட்டர்கள்" என்னும் நூலினையும், டீ.ஏ. இராசரத்தினம் எழுதிய "சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் சரித்திரம்" (1902) என்ற நூலினையும் சிறப்பாக எடுத்துக் காட்டுவர். உண்மையில் அம்மையாருக்கு ஈழநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த மேற்கூறிய தமிழ்ப் புளூராக், பாவலர் சரித்திர தீபகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம் ஆகிய மூன்று நூல்களும் கிடைக்கவில்லை போலும், ஆனாலும், அவ்வாறு கருதுவதற்கு இடந்தரவில்லை. ஏனெனில், 1856ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புளூராக் என்னும் நூலினை தெ.பொ.மீ. 2ஆம் பதிப் பாக 1846ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். பாவலர் சரித்திர தீபகம் பற்றி 1970ஆம் ஆண்டில் பூலோகசிங்கம் தமது " தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சி கள்” என்ற நூலிலும் ஆராய்ச்சி மலர் ஒன்றிலும் இந்நூல்பற்றிச் சிறப்பாக ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார். அம்மையாருக்கு வே, கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரத்தின் 2ஆம் பதிப்புக் கிடைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது. அவ்விரண்டாம் பதிப்பில் முதற்பதிப்பின் முகப்பு அட்டை அவ் வாறே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அம்மையார் அவர்களுக்கு மேற்காட்டிய நூல்கள் கிடைக்காமல் விட்டிருக்கலாம் என்று நாம் நினைப்பது தவறென்றே உணர வேண்டியுள்ளது. இதற்குப் பிரதேச வேறுபாடோ, கௌரவ இழப்போ காரணமாக அமையலாம் போலத் தோன்றுகிறது. வாழ்க்கை வரலாற்று ஆசிரியனுக்கு விருப்பு வெறுப்பு இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வரலாற்று ஆய்வாளனுக்கும் விமரிச கனுக்கும் எவ்விதமான காழ்ப்புகளோ, விருப்பு வெறுப்புகளோ இருத்தல் ஆகாது. அவ்வாறு இருப்பின் அவன் உண்மை ஆய்ந்து தேர்வதில் தவறிவிடுவான். அவனது ஆய்வு உண்மையான ஆய்வாகவோ விமரிசனமாகவோ இருக்கமுடியாது.

பொ. பூலோகசிங்கம் "பாவலர் சரித்திர தீபகமே நம் தமிழ்மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் சரித்திரமாகும்"15 என்பார். அம்மையார் தமது கூற்றுக்கு ஆதாரமாக சத்தியநாதன், 'தென்னாட்டுச் சிரேட்டர்கள்' என்னும் நூலுக்கு கொடுத்திருக்கும் முகவுரையைக் காட்டியுள்ளார். “இந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வரிசைக்குத் தனித்துவம் ஒன்று உண்டு, அதாவது எனக்குத் தெரிந்தவகையில் இவைகளில்தான் ஆங்கிலத்திலுள்ள வாழ்க்கை வரலாறு நூல் களின் முறையில் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையோடு மாறுபடாத தன்மை, மனிதரையும் மற்றவற்றை யும் பற்றிய நியாயமான கணிப்பு, நாயகர்களின் குண நலன்களைப் பற்றிய சரியான மதிப்பீடு போன்ற பண்புகளை இவைகளிலே போதிய அளவு காணமுடிகின்றது.” என்பது தென்னாட்டுச் சிரேட்டர்கள் பற்றிய சத்தியநாதன் கணிப்பீடாகும். இந் நூல் பதினேழு சமகாலப் பெரியோர்கள் பற்றிக் குறிப்பிடும். ஆனால், பாவலர் சரித்திர தீபகம் சங்ககாலம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த 410 புலவர்கள் பற்றிய செய்திகளை மிகவும் கவனத்தோடும் ஆதாரத்தோடும் தருகின்றது. சமகாலப் புலவர்கள் பற்றிப் பேசுகின்றபொழுது உண்மையோடும் அத்துடன் அவர்களின் குணம், பண்பு, நடத்தை, முயற்சி, ஆக்கம் என்பவற்றைத் தக்கவாறு கணிப்பீடுசெய்தும் வெளிப்படுத்தியுள்ளார். பதினெட்டுப் புலவர்கள் பற்றிப் பேசுவதற்கும் 410 புலவர்கள் பற்றிப் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஆனாலும், பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் தான் எடுத்துக்கொண்ட நோக்கில் பெரிதும் பிசகாமல் வெற்றி பெற முயன்றுள்ளார். அந்த வகையில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முன்னோடியாகவும், வாழ்க்கை வரலாற்று இலக்கியத் தினைத் தொகுத்து வழங்கியதில் முதன்மைமிக்கவராகவும் விளங்குகிறார்.

சத்தியநாதன் கூறும் கருத்துகளைக் கனகரத்தின உபாத்தியாயரின் ஆறுமுக நாவலர் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முழுமையான வடிவத்தை அவரது இந்நூல் பெற்றுவிடுகின்றது. அவ்வகையில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் பண்பினையும் தனித்துவத்தை யும் தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் முதன் முதலிற் பெற்று விளங்குவது ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம் என்றே கூறுதல் வேண்டும்.

மேலும், வரலாற்று இலக்கியப் பகுப்பினை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரத்தினை நோக்கில், இந்நூல் ஐவகைப் பகுப்புகளில், ஆய்வு முறைப் பகுப்புக்குள்ளேயே அடக்கி ஆராயப்படவேண்டிய தொன்றாகும். ஆரம்ப காலத்தில் எழுந்த சிறந்த ஆய்வுமுறை வரலாற்று இலக்கியமாக பி.ஏ. இராச ரத்தினம் எழுதிய சி.வை. தாமோதரப் பிள்ளையவர்கள் சரித்திரம் கொள்ளப் பட்டது. இதனை அடிப்படையாகக்கொண்ட பின் சிறிய மாறுதல்களை மட்டும் செய்துகொண்டார்கள். அவ்வாறு கொள்வதற்கு அந்நூலில் தரப்பட்டுள்ள முகவுரையே சான்றென்பர். அது பின்வருமாறு அமையும்:

''பல தலைப்புக்களாக வகுக்கப்பட்டுள்ள இந்த வரலாறு பிள்ளையவர்களின் பிறந்த நாடும் ஊருமாகிய இலங்கை, யாழ்ப்பாணம் ஆகியவற்றின் வருணனை யோடு தொடங்குகின்றது. அதைத் தொடர்ந்து அவருடைய பிறப்பு, இளமை படிப்பு, அலுவல், வாழ்வு ஆகியவை விவரிக்கப்படுகின்றன. இந்த விவரணம் அவர் பிற்காலத்தில் மேற்கொண்ட அரிய தமிழ்ப் பணிக்கு அவர் தயாராகி வந்ததையும் உரியவாறு உணர்த்திக்கொண்டுவருமாறே அமைகின்றது. சீர் குலைந்து மறைந்து கிடந்த பழந்தமிழ் நூல்களை மீட்டு அச்சிட்டுத்தந்ததே இவருடைய பணிகளிலே தலையாயது. எனவே, அது போதிய அழுத்தம் பெறும்வகையில் தமிழ் இலக்கிய வரலாறு சுருக்கமாகத் தரப்படுகின்றது. அதை யடுத்து அவர் பதிப்பித்த நூல்களைப் பற்றிய விபரம் தரப்படுகின்றது. இறுதியில் அவருடைய சொந்த வாழ்வைப் பற்றிய விளக்கம் தரப்படுகின்றது.

ஆய்வுமுறை வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையான அமைப்புமுறை இது."17

இவ்வடிப்படையில், இந்நூல் எழுதுவதற்குப் பத்து ஆண்டுகள் முற்பட்ட, கனக ரத்தின உபாத்தியாயரின் நூலினை ஒப்பிட்டு நோக்கின், எது முன்னோடியானதும் சிறப்பானதுமான ஆய்வுமுறை வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். உபாத்தியாயர் 1882ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தனது நூலினை எழுதிமுடித்து வெளிப்படுத்துவதற்கு முன்பாக சைவ உதயபானு என்னும் பத்திரிகை இந்நூலின் சிறப்பினைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

“இது வண்ணார் பண்ணையிலே தமிழ்க்கல்வி, இங்கிலிஷ் கல்விகளை இயன்ற வரையிற் கிரமமாகக் கற்றவரும் தல்லொழுக்கங்களிற் பலராலும் பாராட்டத்தக்கவரும் ஆகிய "ஸ்ரீ மாணிக்க உபாத்தியாயரென வழங்கும் கனகரத்தினப்பிள்ளை யாலே கத்தியரூபமாகச் செய்து சைவப்பிரகாச சமாசீயருளொருவராகிய வண்ணார்பண்ணை ஸ்ரீ வை. ஆறுமுகம்பிள்ளையுடைய கேள்விப்படி இச் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. இதனிறுதி யிலே நா வலரவர்கள் பேரிலே பல வித்துவான்களாலே செய்யப்பட்ட பற்பல செய்யுள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது மிக எளிதில் விளங்கிக் கொள்ளத் தக்க செந்தமிழ் நடையிலே எழுதப்பட்டிருக்கின்றது. இதனால் நாவலரவர் களது சமானாதிகர கித பரிபூரண மகா கல்வித் திறமைகளும், பெருந்தன்மை களும், குருலிங்கம சக்தி பக்திகளும், பரமதகண்டன சுயமத ஸ்தாபனங்களும், சைவசமயிகளைத் திருத்தலிலே பேரவாவுடைமையும், தன்பொருட்டின்றி பிறர் பொருட்டாகவே தம் வாழ்நாள் முழுதும் போக்கினமையும் அதில் நல்லொழுக் கங்களும் மற்றைய சமஸ்த நன்மைகளும் பிறவும் தெள்ளிதின் விளங்கும். இப் புத்தகம் சைவசமயிகளுக்கும் மற்றையவர்களுக்கும் அத்தியாவசியகம் வேண்டத் தக்கது.18

டி.ஏ. இராஜரத்தினம் ஈழநாட்டைச் சேர்ந்தவர்; நாவலருக்கும் சி.வை. தாமோ தரம்பிள்ளைக்கும் உள்ள தொடர்பை நன்கறிந்தவர்; நாவலரின் ஆளுமையை நன்கு தெரிந்தவர்; உபாத்தியாயர் நாவலரைப் பற்றி எழுதிய நூலினைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். இந்நூலின் அமைப்பு, போக்கு யாவும் உபாத்தியாயரின் நூலின் போக்கினைப் பெரிதும் பின்பற்றியே செல்கின்றது. இராஜரத்தினம் நூலுக்கு முன்னோடியாக அமைந்தது உபாத்தியாயர் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் அமுக நாவலர் சரித்திரம் என்றால் அது மிகையான கூற்றன்று. ஆகவே, ஆய்வு முறை வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுந்த முதல் நூல் கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரமே யாகும். (சாலினி இளந்திரையனால் இதை வலியுறுத்தமுடியாமற் போனமை கவலை கொள்வதற்கில்லை).

உ.வே. சாமிநாதையர் எழுதிய திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரங்கூட, கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுகநாவலர் சரித்திரத்தின் போக்கினை அவ்வாறே அடியொற்றி எழுதப்பட்ட தென்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இந்நூல் யதார்த்த நோக்கில் அமைந்த விரிவான ஆய்வுமுறை வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்பர் ஆய்வாளர்கள். 19 இந்நூல் விரிவாக எழுதப்பட்டதென்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இது சிறப்பான ஆய்வு நூல் என்னும் கூற்று ஆராயப்படவேண்டியதொன்று. கனகரத்தின உபாத்தியாயரின் நூலின் பின் எழுந்த, சிறப்பானதும் கச்சிதமானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான ஆய்வுநூல் கைலாசபிள் ளை எழுதிய ஆறுமுகநாவலர் சரித்திரமேயாகும். இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறுவரை இக்கருத்துப் பொருத்த முடையது என்று கருதுவதில் தவறில்லை எனலாம்.

வே. கனகரத்தின உபாத்தியாயர் நேர்மையோடும் துணிவோடும் நாவலரின் வாழ்க்கை வரலாற்றில் அமைந்த உண்மைச் சம்பவங்களை இனிமையும் எளிமையும் வாய்க்கப்பெற்றதாய், படிப்போரைக் கவர்ந்து புதிய உத்வேகம் அளிக்கத்தக்கதாய் ஒரு மதிப்பீடாக ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரத்தை எழுதினார். தமிழில் எழுந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முன்னோடியாகவும் உண்மை யான ஆய்வுமுறையும் நாவலர் இந்நூற்றாண்டின் சிறந்த அறிஞராக மக்கள் கணிப்பீடுசெய்வதற்கு உதவிற்று எனலாம். ஆறுமுக நாவலரின் சரித்திரம் நாவலர் சித்திபெற்று மூன்றாம் ஆண்டின் போது எழுதப்பட்டமையே நாவலரின் புகழ் இன்றும் மங்காது பேணப்பட்டும் போற்றப்பட்டும் வருவதற்குமோர் காரணியு மாகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியின் போதும் பின்னரும் நாவலர் மேல் பழிப்புரைகளும் புனைந்துரைகளும் சுமத்தி அவரின் புகழை மறக்கச்செய்த முயற்சிகள் வரலாறு அறிந்தோர் அறிவர். அவற்றில் உ. வே. சாமிநாதைய ரின் பங்களிப்பு முதன்மையானதாகும்.

இந்நிலையால், தமிழ் இலக்கிய வரலாற்றில் கனகரத்தின உபாத்தியாயரின் ஆறுமுக நாவலர் சரித்திரம் கூறும் பேருண்மைகளையும் அதன் இலக்கிய வரலாற்று முக்கியத்துவத்தினையும் நோக்குதல் தகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு நாவலரின் தனித்துவத்தால் முதன்மைபெற்றது. அவருடைய ஆற்றலும் சக்தியும் எங்கும் பரந்து நின்று வரலாற்றை இயக்கின. இந்நூற்றாண்டின் தலைமகனாக நாவலர் விளங்குவதைப் பலர் விரும்பாமையால் நாவலரது வரலாற்றை இருட்டடிப்புச் செய்வதற்கும் புகழை மங்கச் செய்வதற்கும் பல முயற்சிகள் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியினை முதலில் ஆரம்பித்தவர் உ.வே. சாமிநாதையர் ஆவர். அவர் தாம் எழுதிய திருவாவடுதுறை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரத்தில் (1933) நாவலர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகிய இருவரின் சந்திப்புக்களையும் நட்புரிமை களையும் விளக்கி, நாவலர் இராமநாதபுர சமஸ்தானத்தில் செல்வாக்கு மிக்க இராமசாமிப்பிள்ளையைப் பயன்படுத்தி, நாவலர் திருவாவடுதுறை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து சிறப்புப் பாயிரங்களைப் பெற்றுக் கொண்டார் எனக் குறிப்பிட்டுச் சொல்வார். 50 வரலாற்று உண்மை இஃதல்ல. கனகரத்தின உபாத்தியாயர், நாவலரவருக்கும் ஆதீனங்களுக்குமுள்ள தொடர்பு களைக் குறிப்பாகத் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பினைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார், 1848ஆம் ஆண்டு முதல் 1879ஆம் நாவலருக்குமுள்ள தொடர் ஆண்டுவரையும் நாவலருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பிரசங்கம், சமயம், கல்விப்போ தலன, பதிப்பு, அருட்பா மறுப்புப் போராட்டம் என்னும் பலவகைத் துறைகளில் தொடர்பு மிகுந்திருந்தது. இத்தகைய தொடர்புகளைக் கனகரத்தின உபாத்தியாயர் சிறப்பாகச் சுட்டிச்சென்றுள்ளார். நாவலர் 1863ஆம் ஆண்டில் கும்பகோணம் சென்றிருந்தபொழுது, திருவாவடுதுறை பண்டாரசந்நிதிகள் அங்கு மகாவித்துவானாக இருந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளையை அழைத்து நாவலரை மடத்துக்கு அழைப்பித்துவரும்படி பணித்த செய்தி சிறப்பாக இந்நூலிற் சுட்டப் பெற்றுள்ளது. 21

இந்நிகழ்ச்சி மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கனாகக் கல்விபெற்ற உ.வே. சாமிநாதையரின் உள்ளத்தைப் புண்படுத்தியிருக்கலாம். இதன் விளை வாக அவர் உள்ளத்தில் உதித்த கற்பனையே மேற்காட்டிய சம்பவங்களாகும். இவ்வாதீனத்தில் இராமசுவாமிபிள்ளையும் நாவலரிடத்தில் திருவிளையாடற் தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியம் 93 புராணத்தைப் பாடங்கேட்டுவந்தமையும் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது,! எல்லா வற்றுக்கும் மேலாக உ. வே. சாமிநாதையர் கனகரத்தின உபாத்தியாயரின் ஆறுமுகநாவலர் சரித்திரத்தை படித்து வரலாற்று உண்மைச் சம்பவங்களை அந் நூல் மூலம் அறிந்திருந்தார் என்பதை அறியமுடிகின்றது. 23 உ.வே.சாமிநாதையரின் கற்பனைத் திறனைப் போற்றிய த. கைலாசபிள்ளை, "கதைகளை யாரும் நம்பத்தக்கவகை வர்ணிப்பதில் கம்பர் முதலிய எந்த வித்துவானும் ஐயரவர் களுக்குச் சமமாகார்'' எனச் சிறப்பித்துக் கூறுவது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்க தாகும். ஐயரின் சீரிய கற்பனைத்திறனைப் போற்றிப் பல கண்டனங்கள் ஈழ நாட்டில் எழுந்தன. அவற்றில் சிவகாசி அருணாசலக்கவிராயர் பாடிய "யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரத்தின் 2ஆம் பதிப்பையும் (1934) த. கைலாசபிள்ளை எழுதிய முகவுரையையும் இந்நூலின் 3ஆம் பதிப்புக்குப் பண்டித மணி சி.க, எழுதிய முன்னுரையையும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருட்பா- மருட்பாப் போராட்டம் பற்றியும் கனகரத்தின உபாத்தியாயர் குறிப்பிட்டுள்ளார். நாவலர் ஏன் இராமலிங்க அடிகளாரின் பாடல்களைப் போலியருட்பா என்று கண்டித்தாரென்பதற்கான காரணத்தையும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். 25 ஆனால், வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அருட்பா--மருட்பா போராட்டத்தின் விளைவாக நாவலர் இராமலிங்க அடிகளார்மீது தொடுத்த மஞ்சக் குப்பக் கோர்ட்டு வழக்குப்பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்காக அப்படியொரு வழக்கு நடைபெறவில்லை என்பது அர்த்தமில்லை. நாவலர் தாம் எழுதிய மித்தியாவாத நிரசனம் என்னும் பத்திரிகையில் இவ்வழக்குப்பற்றியும் அதன் முடிவு பற்றியும் மிகவும் சிறப்பான முறையில் பின்வருமாறு குறிப்பிடுவது இங்கு மனங் கொள்ளுதல் வேண்டும்.

"சுக்கில ஆனி உத்திரத்தரிசனத்திலே சிதம்பரத்துப் பேரம்பலத்திலே வெகுசனக் கூட்டத்திலே சுவாமி சந்நிதானத்திலே, சைவப்பிரசாகரை அவதூறாகப் பேசிய இராமலிங்கப்பிள்ளை, அடுத்த மார்கழித் திருவாதிரைத் தரிசனத்திலே, மஞ்சக் குப்பக் கோர்ட்டிலே, வெகுசனக் கூட்டத்திலே நியாயாதிபதியெதிரே, தாஞ் சைவப்பிரசாரகரை அவதூறாக ஒரு சிறிதும் பேசவில்லையென்று மறுத்து எல்லோராலும் நகைக்கப்பட்டது அவ்வழக்குப் புத்தகம் பேசும். 26

ஆனால், கனகரத்தின உபாத்தியாயர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் இன்னும் சரியாக ஆராயப்படாததுமான பிறிதோர் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளமை இங்குச் சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.

“நாவலர் சிதம்பர தரிசனத்தின் பொருட்டு அங்கு இருக்குங்காலத்திலே இராமலிங்கபிள்ளைக்கும் இராமலிங்கபிள்ளை பட்சத்தாராகிய தீஷிதருக்கு மிடையே அநேக வாதங்களும் வியாச்சியங்களும் சம்பவித்தன, திருமஞ்சனத் தன்று ஆயிரங்கால் மண்டபத்திலே அவரைத் தூஷித்தவர்கள் தூஷித்த பின்பு அவரும் அவரைச் சார்ந்தோரும் தங்களை அடித்தார்கள் என்னும் பொய் வழக்கை எடுத்தார்கள், அவ்வழக்கு தீஷிதர்களைச் சார்ந்த ஒரு சுதேச நீதிபதியினால் விளக்கப்பட்டுப் பொய்வழக்கெனக் காணப்பட்டபடியால் தள்ளப்பட்டது.27

என்பதே அச்செய்தியாகும். வே. கனகரத்தின உபாத்தியாயர் நாவலரின் உண்மையான ஆத்மீக சித்தாந்தத்தைக் காட்டத் தவறவில்லை. நாவலர் வேதம் ஆகமம் சிறப்பு என்ற நோக்கத்தினை உடையவராகக் காணப்பட்டபோதும், ஆகம நூல்வழி வந்த சைவக் கிரியை நெறியிலும் தேவார திருவாசகம் முதலான திருமுறைகள் வழி வந்த கருத்துகளிலும் மெய்கண்ட சாஸ்திரங்களால் கட்டமைத்துச் சிந்தாந்தக் கோட்பாடாகப் பரிணமித்த சைவசித்தாந்தக் கோட்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தார். அவ்வாறு நாவலர் கொள்வதற்குக் கைலாசநாதக் குருக்கள் கூறும் பின்வரும் காரணம் பொருந்துமாற்றினைச் சைவர்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அக்காரணம் பின்வருமாறு அமையும்.

"நாவலர் வேதங்களைப் பிரமாண நூல்கள் எனவும் வேதங்கள் தேவாலயங்களில் ஓதுதற்குரியவை என்றும் அடிக்கடி வற்புறுத்திவந்தமை மட்டுமே காணு கின்றோம். வேதக் கருத்துகளை எடுத்துக்கூறிக் குறிப்புரைகளோ விளக்க வுரைகளோ கூறிய சந்தர்ப்பங்களை அவர் நூல்களிற் காணல் அரிது. இதற்குக் காரணம் மரபுதெரிந்தவர்களுக்கே தெளிவாகும்.”28

இக்கருத்தினை அலசி ஆராய்த்த பொ, பூலோகசிங்கம் ''நாவலரவர்கள் காலத்திலேயே ஆரிய வேதத்தின் பகுதிகள் மேல்நாட்டில் வெளிவந்துவிட்டன என்பதையும் வேதங்கள் மறைந்திருப்பது முறையன்று என்ற கருத்து உருவாகி விட்டது என்பதையும் நாம் மனதில் ஈண்டு நிறுத்திக்கொள்ளவேண்டும், இருந்தும், நாவலர் வேதத்திற்குப் பிரசாரகராக அமையவில்லை. அதற்கு அவர் தம்மைச் சூத்திரர் என்று கருதிக்கொண்டமைதான் காரணம் என்று கூறல் நகைப்பிற்கு இடமளிப்பதாகும்"29 என்று குறிப்பிடுவது யாவரும் கருத்திற் கொள்ளவேண்டிய தாகும்.

நாவலர் உண்மையிலேயே வேதசிவாகமங்களைச் சமமெனக் கொண்டார். ஆனால், தேவார திருவாசகங்களை இவற்றோடு ஒப்பிட்டு நோக்குவதை விரும்பவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலானவையாகவே அவற்றைக் கருதினார். அதன் தெய்வீக ஆற்றலைக் குறைத்து மதிப்பிடமுயன்ற எவரையும் தம் உயிரையும் துச்சமாக மதித்துத் தமது ஆற்றல் பொருந்திய நாவினாலும், கூரிய பேனா முனையினாலும் சாடினார். சைவசமயிகளின் ஆத்மீக ஈடேற்றத்திற்குத் திருமுறைகளாகிய அருட்பாக்கள் வழிகாட்டியாகவும் அமைய முடியுமென முடிவாக நம்பினார். அந் நூல்கள் பல்லோர் மத்தியிலும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை அருட்பா (1866) வடிவில் தொகுத்தும் பதினாராம் திருமுறை (1869) முதலான நூல்களைப் பதிப்பித்தும் வெளிப்படுத்தியதோடு அமையாது தமது ஆக்கங்களிலே திருமுறைகளைப் பெரிதும் எடுத்தாண்டுவந்தார். கனகரத்தின உபாத்தியாயர் தமது நூலில் மிகவும் சிறப்பானமுறையில் நாவலரின் முதன்மையான மெய் நூல் பக்தியினை அவரின் சொற்பொழிவு வாயிலாகக் குறிப்பிட்டிருப்பது அவரின் நுண்மாண் நுழைபுலத்தினையும் நூலின் முக்கியத்துவத்தினையும் எடுத்துக்காட்டும்.

''தேவார திருவாசகம் முதலியன, பசுகரண நீங்கிச் சிவகரணம் பெற்ற நாயன்மார் களாலே அருளிச்செய்யப்பட்டன. இவைகளே சிவாலய நித்திய நைமித்தியங் களிலும் சந்தியாவந்தனம், சிவபூசை முதலியவைகளிலும் ஓதத் தகுந்தன, இவை களே வேதத்திலும் பார்க்கத் தமக்கு (சிவனுக்கு) அதிக பிரீதியுள்ளவைகள் என்று எனது பிதாவாகிய சிவபெருமான் தமது அருட்சக்தியும் தமது உலக மாதாவும் ஆகிய உமாதேவியார் கேட்கும்படி திருவாய் மலர்ந்தருளினார். இவை சிவ ரகசியத்திலே கூறப்பட்டிருக்கின்றன”30

என்பதே கனகரத்தின உபாத்தியாயர் காட்டும் பேருண்மையாகும். நாவலர் ஏனைய நூல்கள் பற்றி அதிகம் கவனத்திற்கொள்ளாமைக்கு இதுவே காரணமாகும். சைவசமயிகள் இவ்வுண்மையைக் கருத்திற்கொள்ளுதல் மிகமிக அவசியமானதாகும்.

நாவலரின் மாணவ பரம்பரைபற்றிக் கூறவந்த கனகரத்தின உபாத்தியாயர் பரம்பரைபற்றிப் பகுத்தாய்வு செய்யவில்லை. த. கைலாசபிள்ளை மூன்று காலகட்டமாகக் குறிப்பிடுவார். ஆனால், உபாத்தியாயர் ஒரேகாலகட்டத்து ஆசிரியர்களைக் குறிப்பிட்டுள்ளார். க. ஆறுமுகச் செட்டியார், மு, தில்லைநாத க. சதாசிவம்பிள்ளை, விசுவநாதையர், மா. வைத்தியலிங்கம், வை. ஆறுமுகம்பிள்ளை, கந்தசுவாமிப்பிள்ளை, சு. வேலுப்பிள்ளை, சி. சுப்பிரமணிய பிள்ளை என்பவர்களையே உபாத்தியாயர் குறிப்பிட்டுள்ளார். உபாத்தியாயர் தாம் எக்காலகட்ட மாணவர் என்பதையும் பறைசாற்றவில்லை.

த. கைலாசபிள்ளை, கனகரத்தின உபாத்தியாயர் ஆகியோராலும் நாவலர் சரித்திரம்பற்றி எழுதிய பிற ஆசிரியர்களாலும் குறிப்பிட்டுச் சொல்லப்படாத ஈழ நாட்டினதும், தமிழ்நாட்டின தும் நாவலரின் மாணவர் பரம்பரையினர் சிலரை இன்று இனங்கண்டு கொள்ளமுடிகின்றது. ஈழ நாட்டைச் சேர்ந்த வை. சின்னத்தம்பி செட்டியார், ம. திருஞானசம்பந்தர்,ச. தில்லையம்பலபிள்ளை, இ. மாரிமுத்துப்புலவர், ச. சங்கர நாராயணபிள்ளை, ப. நாராயணசுவாமிப்பிள்ளை ஆகியோர் நாவலரின் மாணவ பரம்பரையைச் சேர்ந்தவர்களாகத் தெரிகின்றது. வை, சின்னத்தம்பிச் செட்டியார் நாவலரின் மாணாக்கரான ஆறுமுகச் செட்டியாரின் சகோதரராவார். இருவரும் இளமை முதல் நாவலரிடம் தனித்தும் அவரது பாடசாலையிலும் கல்வி பயின்றவர்கள், வை, சின்னத்தம்பிச் செட்டியார் பிற்காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் புனருத்தாரணப் பணிக்குத் தம்மால் இயன்ற மட்டும் நன்கொடையும் மானியமும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ம. திருஞான சம்பந்தர் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். திருநெல்வேலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராக விளங்கியவர். இவரும் நல்லூர் வை. திருஞானசம்பந்தரும் ஒருவரல்லர். இருவரும் பெயரால் ஒற்றுமைப்பட்டபொழுதும் வெவ்வேறான தகுதிப்பாட்டை உடை யவர்கள். நல்லூர் வை. திருஞானசம்பந்தபிள்ளை நாவலரின் மருகர்; தர்க்ககுடார தாலுதாரி என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தில்லையம்பலபிள்ளை என்பார் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; சரவணமுத்துச் செட்டியாரின் மூத்த புதல்வன்; நாவலரின் மருகர் ; வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை தமையனார்; சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முதல் நிருவாகியாக இருந்து அதன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்; 1882ஆம் ஆண்டு பங்குனிமாதம் சிவபதம் அடைந்தவர். இ. மாரிமுத்துப்பிள்ளை என்பார் சிதம்பரத்தில் வாழ்ந்தவர்; சிறந்த வித்துவான்; ச. தில்லையம்பலப்பிள்ளைக்குப் பின் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலபிள்ளையின் வேண்டுதலின் பேரில் நிருவாகி யாக நியமிக்கப்பட்டவர். ச. சங்கர நாராயணபிள்ளை என்பார் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்; நல்லகவிஞர். ப. நாராயண சுவாமிப்பிள்ளை நாவலரிடம் பயின்ற வர்; நாவலரின் சைவாங்கில வித்தியாசாலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியவர்; பின்னர் சட்டத்தரணியாகத் தொழிலாற்றியவர்.

தமிழ்நாட்டு மாணவ பரம்பரையில் இராமநாதபுரம் இராமசாமிப் பிள்ளை, திருவாவடுதுறை நமச்சிவாயத்தம்பிரான், வன்தொண்டச் செட்டியார் ஆகிய மூவரையும் சிறப்பாகக் குறிப்பிடுவர், ஆனால், சா. விசுவலிங்கப்பிள்ளை, முத்தையாத்தம்பிரான், முத்தையா ஓதுவார், திருமலை மகாவித்துவான் தணிகாசல முதலியார், பொன்னோதுவார் முதலானோர்களும் தமிழ்நாட்டில் நாவலரின் மாணாக்கர்களே என அறியமுடிகின்றது. ச. விசுவலிங்கப்பிள்ளை என்பார் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலையில் உபாத்தியாயராகக் கடமையாற்றியவர். முத்தையாத்தம்பிரான் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தம்பிரா னாவர். இவர் காசியில் மடம் கட்டியவர். இதனால் இவர் காசி முத்தையாத் தம்பிரான் என்று அழைக்கப்பட்டார். முத்தையா ஓதுவார் யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது (1882) சைவ உதயபானுப் பத்திரிகை இவரை நாவலர் மாணவர் என்றே போற்றுதல் செய்தமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். பொன்னோதுவார் நாவலரி டத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்றவர். இவர் குரோதன வருடம் ஆவணி மாதம் 2ஆம் தேதி (1865) பிறந்தவர். இவர் சுப்பிரமணிய ஓதுவார், சுப்பு ஓதுவார் பரம் பரையில் வந்தவர், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் திருமறை ஓதுவிக்கும் பொருட்டு இவர்களை நாவலர் அழைத்துவந்தார் பொன்னோதுவார் இங்கு வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளையிடமும் வை. திருஞானசம்பந்தப் பிள்ளையிடமும் கல்வி கற்றவர். திருமயிலை தணிகாசல முதலியாரை மேலைப்பு லோலி சதாவதானம், நா. கதிரைவேற்பிள்ளையவர்களின் முதல் மாணாக்கரான தமிழ்முனிவர் எனப் போற்றப்படும் திரு.வி.க. அவர்கள் தனது ஆசிரியப் பெருந்தகை சதாவதானம் நா.க, இறந்த பிற்பாடு அவரிடம் கல்வி பயில அணுகியபொழுது, தணிகாசலமுதலியார் தாம் நாவலரின் மாணாக்கர் என்று சொல்லிப் பெருமை கொண்டாரெனக் குறிப்பிடுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.31

தமிழ் இலக்கிய வரலாற்றின் அத்தியாயத்திற் பதிப்பு என்னும் கலை ஒருபகுதியாகக் கொள்ளப்படவேண்டியதன் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழ் இலக்கிய வரலாற்றிற் பதிப்புக்கலை என்னும் இயலுக்குக் கால்கோள் விழா மிகச் சிறப்பாக நடத்தப்பெற்றது. அவ்வியலினைப் பிழையறச் செப்பமுற ஆரம்பித்துவைத்த பெருமை நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரையே சாரும். வரலாற்று ஆய்வாளர் சிலர் "நாவலரவர்கள் பதிப்பாசிரியர் பணியிற் பெறவேண்டிய முதன்மையான இடத்தினை மறைக்க முற்படும் செயலினையும் உணரமுடிகின்றது. சிலர் நாவலரைச் சிறந்த பதிப்பாசிரியர் என்று கூடச் சொல்லத்தயங்குவதையும், சொல்லாமல் விடுவதில் பெருமை கொள்வதையும் உணர முடிகின்றது. நாவலர் தமிழ் இலக்கியப் பரப்பினைத் தமிழ் இலக்கியம், சைவசமய இலக்கியம் என்றவாறு பிரித்து நோக்கவில்லை. நாவலர் தமிழில் தோன்றிய சமய இலக்கிய நூல்கள் எல்லாவற்றையும் தமிழ் இலக்கிய நூலென்றே கருதினார். திருக்கோவையாரில் (முதற்பதிப்பு 1866) இடம்பெறும் நாவலரவரின் தமிழ்ப்புலமை என்னும் கட்டுரையையும், “இனி அச்சிற் பதிப்பிக்கப்படும் புத்தகங்கள்” என்னும் பட்டியலை யும் வாசிப்போர் அவரின் உண்மையான நோக்கினை உணர்ந்துகொள்வர். ''நாவலர் பதிப்பு நல்ல பதிப்பு” என்னும் முத்திரை பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரையும் பலராலும் தள்ளுபடிசெய்யாது போற்றப்படும் முத்திரையாக விளங்குவதால் பதிப்புக்கலையின் கர்த்தாவாக நாவலரே விளங்குகின்றார் என்பதை யாரும் மறப்பதற்கில்லை. திரு.வி.க. “பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்-32 என்று சிறப்பித்துக் குறிப்பிடுவது நாவலர் பதிப்புக்கலைக்கு ஆற்றிய தொண்டின் வரலாற்று முக்கியத்துவத்தினைப் புலப்படுத்தி நிற்கும்.

ஒரு பதிப்பாசிரியருக்கு இருக்கவேண்டிய பண்புகள் அனைத் தையும் தம்முட்கொண்டு, தமிழ் இலக்கியத்தில் புதிய வடிவத்தின் உண்மையான கர்த்தாவாக நாவலரே விளங்குகின்றார் என்றால் அது மிகையான கூற்றன்று, நாவலர் ஈழநாட்டிலும் தமிழ்நாட்டிலும் 75க்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மற்றும் தமது மாணாக்கர் பேரிலும் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆயினும், அந்நூல்கள் வெளிவந்த காலப்பகுதியும் என்னென்ன நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார் என்பது பற்றியும் ஒரு நூற்றாண்டு கழிந்தும் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பொ. பூலோகசிங்கம், வை. கனகரத்தினர் ஆகியோர் இவ்வாய்வில் பெரிதும் ஈடுபாடுகாட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நாவலரின் பதிப்பாசிரியர் பணி குறித்து முதன்முதல் குறிப்பிட்ட பெருமை கனகரத்தின உபாத்தியாயரையே சாரும். அவர் தனது நூலில் நாவலரின் பதிப்புக்களைப் பல வழிகளில் முயன்று சரியாகச் சுட்ட முற்பட்ட முயற்சியினைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டவேண்டும். அவரது முயற்சி (1) பதிப்பின் சரியான ஆண்டினையும் மாதத்தினையும் தருவது. (2) சரியான ஆண்டைத் தரமுற்படுவது (3) நாவலரின் வயதெல்லையைக்கொண்டு அக்கால கட்டத்திற் பதிப்பிக்கப்பட்ட நூல்களைக் குறிப்பிடுவது (4) தம்மாற் சரியாக அறிய முடியாத நிலையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரால் அச்சிற் பதிப்பித்து வெளிப் படுத்தப்பட்ட புத்தகங்கள் என்ற பட்டியலைத் தருதல் (5) சிறிதுபாகம் அச்சிற் பதிப்பிக்கப்பட்டும், சிறிதுபாகம் வேலை நடத்தப்படாதும் இருப்பவை பற்றிச் சுட்டுதல் (6) அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதத்தொடங்கியவை என்று வகுத்துக் காட்டுதல் என்னும் வகையில் அமைந்திருக்கின்றது. நாவலர் எழுதிமுடித்த புத்தகங்கள், பதிப்பித்த நூல்கள் என்னும் வகையில் எண்பத்தைந்துக்கு மேற் பட்ட நூல்களைக் கனகரத்தின உபாத்தியாயர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய போக்கில் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நாவலர் வெளியிட்ட நூல்களின் பதிப்பு. ஆண்டு, மாதம், அச்சகம் முதலான செய்திகளைப் பெரிதும் சரிவரக் கொடுக்கமுற்பட வில்லை. ஆனால் சில நூல்களின் வெளியீட்டு ஆண்டு, மாதம் என்பனவற்றைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான நூல்களை நாவலரின் வயதெல்லையைக் கொண்டு ஆண்டினைக் கணிப்பீடுசெய்யும்படி வாசகரிடையே விட்டுவிடுகின்றார், இவர் தரும் நாவலரின் வயதெல்லையையும் அக்காலப்பகுதியில் வெளியிட்ட நூல் களையும் கணிப்பீடுசெய்யும்பொழுது ஆண்டு சரியாகவே அமைகின்றது. மாதத்தைச் சரியாகக் குறிப்பிடாமைக்கு நாவலரது நூற்பிரதிகள் கிடைக்காமை காரண இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டியது நாவலரே தம் முதற் பதிப்புக்களில் "முதலாம் பதிப்பு” என்பதைப் பெரிதும் குறிப்பிடவில்லை. நாவலரின் முதற்பதிப்புக் களைச் சரியானமுறையில் கண்டுபிடிப்பதற்குக் கனகரத்தின உபாத்தியாயர் தருகின்ற தரவுகள் பெரிதும் சாதகமாகவே அமைகின்றன எனலாம். அவ்வகையில் கனகரத்தின உபாத்தியாயரின் நூல், வரலாற்று இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற நூலாக விளங்குகின்றது எனலாம்.

கனகரத்தின உபாத்தியாயர் தருகின்ற ஆண்டுகள் சிலவும், மாதங்கள் சிலவும் தருகின்ற விதத்திலும் சொல்லிலும் விதத்திலும் மாறுபாடுடையனவாகக் காணப் படுகின்றன. அவை நாவலர் வரலாற்றிலோ வரலாற்று இலக்கியத்திலோ பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டன என்று சொல்வதற்கில்லை. அவர், நூல்களைப் பாகுபாடுசெய்து ஆராய்ந்த முறை வரவேற்கத்தக்கதேயாகும். ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய தகைமைகளைத் தம்முட்கொண்டு அவற்றினைச் சரிவரச் செய்யமுயன்றுள்ளார். கனகரத்தின உபாத்தியாயரின் பாகுபாட்டினாலும், சில ஆண்டுக்குள் (1879-1882) நாவலரின் வரலாற்றினை எழுதியமையினாலும், நாவலர் பதிப்பிக்க வைத்திருந்த சுத்த ஏட்டுப் பிரதிகள் பெரும்பாலும் நாவலர் வெளியீடாக வருவதற்கும், நாவலரின் ஆளுமையும் கீர்த்தியும் காப்பாற்றப்படுவதற்கும் கனகரத்தின உபாத்தியாயரே காரணமாக இருந்தார் என்பதை நாவலர் வரலாற்றை அறிந்தோர் உணர்வர்.

நாவலரைப் பதிப்பாசிரியராக நோக்கும் ஆய்வுகள் இன்றும் முழுமை பெற்றுவிட வில்லை. ஈழநாட்டிலே இவ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இவ் வகையில் பெ, பூலோகசிங்கம், த. கைலாசபதி, பண்டிதமணி சி. க, ஆகியோ ரினதும் வை. கனகரத்தினம், சிவனேசச்செல்வன், ம. சற்குணம், எவ், எக்ஸ். சி. "நடராசா முதலானோர்களினதும் பணிகள் குறிப்பிடத்தக்கன. வே. கனகரத்தின உபாத்தியாயர் 85 க்கு மேற்பட்ட நூல்களைக் குறிப்பிட்டபொழுதும் அவரால் குறிக்கப்படாத நூல்கள் பலவற்றையும் நாவலர் பதிப்பித்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது, அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுதல் தகுமென்றே கருது கின்றேன். கதிர்காமவேலர் திருவருட்பா அல்லது காசி கதிர்காமவேலர் திருவருட்பா காசித்துண்டி விநாயகர் திருவருட்பா ஆகிய நூல்களையும் நாவலர் பதிப்பித்த தாகவே அறியமுடிகின்றது. ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, கதிர்காமவேலர் திருவருட்பா (1954) நூற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இங்கு கவனத்திற்கொள்ளத் தக்கதாகும். அது பின்வருமாறு அமையும் :

“இத்திருவருட்பாவின் அருமை பெருமைகளை நோக்கிப் போலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் இத்திருவருட்பாவையும் இதன் ஆசிரியராற் பாடப் பெற்ற இன்னொரு பிரபந்தமாகிய காசித்துண்டி விநாயகர் திருவருட்பாவையும் அக்காலத்திற் பிழையறப் பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார்." 31

நாவலர் பரிசோதித்து வைத்திருந்த ஏட்டுப்பிர திகள் பல அவர் மாணாக்கர் களினாலும் உறவினர்களினாலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் அவற்றில் சில வெளிவந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றின் பின்னும் ஒரு நூல் வெளிவந்ததாக அறியமுடிகின்றது. அந்நூல் 'சிவபூசைத்திரட்டு' என்பதாம். இந் நூலைச் சைவப்புலவர் வ. சுப்பிரமணியம் என்பார், புலோலி பசுபதீஸ்வரர் ஆலயக் கோபுரத் திருப்பணி நிதியின் பொருட்டு யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை யில் பதிப்பித்து பராபவ வருடம் தை மீ (1967) ஆம் ஆண்டில் வெளியிட்டுள் ளார். அதன் முன் அட்டையை நோக்குகின்றபோது கனகரத்தின உபாத்தியாயர் குறிப்பிடும், நாவலர் புதிதாக எழுதிய நூல்களிலொன்றான ''சிவபூசாவிதி"யே சிவபூசைத்திரட்டாக வெளிவந்ததாக ஊகிக்கமுடிகின்றது. "இஃது சிவபூசை செய் கின்றவர்களுடைய உபயோகத்திற்காக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் வைத்திருந்த ஏட்டின்படி பருத்தித்துறையைச் சேர்ந்த தும்பளை சைவப்புலவர் வ. சுப்பிரமணியம் அவர்களால் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிடுவிக்கப்பெற்றது" என்பதே முன்னட்டையின் வாசகமாகும். இவ்வாசகம் மேற்றிய கருத்தினை வலியுறுத்தி நிற்கும்.

முடிவாக, வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம் (1882) எழுந்து ஒரு நூற்றாண்டும் சில வருடங்களும் கடந்துவிட்டது. அது காலவெள்ளத்தோடு அள்ளுண்டுபோகாது காலவெள்ளத்தை வென்று நிமிர்ந்து நிற்கின்றது. இலக்கிய விமரிசகர்கள், 'ஒரு நல்லதோர் இலக்கியம் காலவெள்ளத்தைத் தாண்டி நிற்கவேண்டும்” என்பர். அக்கோட்பாட்டிற்கு இலக்கியமாக அமைந்த நூல்களிலொன்றே ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திர மாகும். நவீன தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியத்திலும் தனிமனித வாழ்க்கை வரலாற்று நூல் எழுந்த காலம் முதல் இன்று வரை புகழோடு நிலைத்து நிற்கும் நூலும் இதுவேயாகும், நாவலரைப் பற்றிய சரித்திரங்கள் பல தோன்றியுள்ளன. அவற்றில் த. கைலாசபிள்ளை எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரம் குறிப்பிடத்தக்கதாகும். அது பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அச்சகம் அவரிடத்தே இருந்தமையாகும் வே, கனகரத்தின உபாத்தியாயருக்கு அச்சகம் இருக்கவில்லை. என்றாலும் அவரது நூலுக்கு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது; அதுவே விளம்பரத்தை ஏற்படுத்திற்று. இதனால், இது பல பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

வே, கனகரத்தின உபாத்தியாயரின் நூல் எழுதுவதற்கு முன்பாக கிளைவ் சரித்திரம் (1871), நபிகள் வரலாறு (1875), சங்கர விஜயம் (1879) ஆகிய நூல்கள் தோன்றியபொழுதும் அவை பெரிதும் சமய போதனைகளையும் அதி அற்புத நிகழ்ச்சிகளையும் சித்திரிப்பனவாகவே அமைவதினால் அந்நூல்களை வாழ்க்கை வரலாற்று இலக்கியக் கோட்பாட்டில் வைத்து ஆராய்வது கடினமென்பர். இந்நூல்கள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்னும் வகையில் வைத்துப் பெயரளவிற் கணிக்கக்கூடியவையே. அவை வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் முதல் நூல் களாகக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் உடையன அல்ல. ஆனால், வே. கனகரத்தின உபாத்தியாயரின் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம், வாழ்க்கை வரலாற்று இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய எழுதப்பட்ட முதல் நூல் மாத்திரமல்லாது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் தலைமகனாக இலக்கியத்திலும், சைவம், தத்துவம் ஆகியவற்றிலும் பிரமப் பொருளாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருடைய வரலாற்றைக் கூறும் நூலாக அமைவதாலும் அது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நூலாக அமைகின்றது. அத்துடன், வரலாற்று இருட்டடிப்புக்களுக்கெல்லாம் விடையளிக்கும் நூலாகவும், நாவலர் வரலாற்றில் தெளிந்த சிந்தனையை வழிப்படுத்தற்குரிய பெரு நூலாகவும், வே, கனகரத்தின உபாத்தியாரின் “ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்” விளங்குகின் றதென்றால் மிகையன்று. அவ்வகையில், இந்நூல் போற்றப்பட வேண்டியதொன்றே. அவ்வாறு செய்வது தமிழ்-சைவ இலக்கிய வளர்ச்சிக்கும் வாழ்க்கை வரலாற்று இலக்கிய வளர்ச்சிக்கும் உரமூட்டுவதாகும்.




அடிக்குறிப்புகள்
1. சாலினி இளந்திரையன், வாழ்க்கை வரலாற்று இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1974, ப. 261.
2. R.W. Chapman, (Ed.), Selections From Samuel Johnson (1909-1984), London, 1961, p. 105.
3. The World Books Encyclopaedia, Vol. 2, Chicaco, 1960, p.24.
4. இக்கணிப்பீடு சாலினி இளந்திரையனின் மேலது நூலின் பிற்சேர்க்கையையும் ஈழத்தில் எழுந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. பொ. பூலோகசிங்கம், (பதி.), பாவலர் சரித்திர தீபகம், பகுதி 1.றெயின்போ அச்சகம், கொழும்பு, 1975. 6. சாலினி இளந்திரையன், மு. ச. நூ., பக்., 17-62.
7. த. கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் சரித்திரம். வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, முகவுரை, 1930.
8. சைவ உதயபானு, அக்டோபர், 1882.
9. உதயதாரகை, அக்டோபர், 1883.
10. கனகரத்தின உபாத்தியாயர், வே. ஆறுமுகநாவலர் சரித்திரம், 2 ஆம் பதிப்பு, திருமகள் அச்சகம், சுன்னாகம், சிறப்புப்பாயிரம். 1968.
11. மேலது நூல், குரு வணக்கம்.
12. மேலது நூல், முகவுரை.
13. நாவலர் பெருமான் 150 ஆவது ஜெயந்தி விழா மலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீடு, 1972, ப. 67.
14. சாலினி இளந்திரையன், மு. கு. நூ., 11. 162.
15. பொ. பூலோகசிங்கம், தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள், 1970, ப. 101.
16. சாலினி இளந்திரையன், மு. கு. நூ., ப. 223.
17. மேலது நூல், ப. 220-223.
18.சைவஉதயபானு, அக்டோபர், 1882.
19. சாலினி இளந்திரையன், மு. கு. நூ., 1974.
20. த. கைலாசபிள்ளை, ஆறுமுக நாவலர் சரித்திரம், கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1930, ப. 138. கனகரத்தின உபாத்தியாயர், ஆறுமுக நாவலர் சரித்திரம், 1882, பக். 52-56
ஆறுமுக நாவலர், (பதி), ' தமிழ்ப்புத்தகங்கள்' திருக்கோவையர். 1860.
21. நாவலர் கும்பகோணம் வந்திருக்கின்றார் என்பதைக் கேள்வியுற்ற திருவாவடுதுறை யாதீனத்துப் பண்டார சந்நிதிகள், வித்துவான்களிற் சிறந்தவரென்று தமிழ் நாடெங்கும் புகழ்படைத்தவரும், தேவாரம் பெற்ற அநேக ஸ்தலங்களுக்குப் புராணஞ் செய்த மகாவித்துவானுமாகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையையும், சில ஓதுவார்களையும், அவரை மடத்துக்கழைத்துக் கொண்டு வரும்படி, அனுப்பி வைத்தார்கள் (மேலது நூல். பக். 63).
22. மேலது நூல். ப. 62.
23. உ.வே., சாமிநாதையர், திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், ப. 64.
24. சி. கணபதிப் பிள்ளை, (பதி.) அருணாசலக் கவிராயரின் ஆறுமுக நாவலர் சரித்திரம் 2ஆம் பதிப்பு, முகவுரை, 1934.
25. வே. கனகரத்தின உபாத்தியாயர், மு. கு. நூ., பக். 70-71.
26. த. கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு 3ஆம் பதிப்பு சென்னை வித்தியாநுபாலன யந்திரசாலை சென்னைபட்டணம், 1954, ப, 11.
27. வே. கனகரத்தின உபாத்தியாயர், மு. கு. நூ., ப. 97,
28, கா. கைலாசநாதக் குருக்கள், 'நாவலர் பணிகள் வைதிக அடிப்படை, நாவலர் நூற்றாண்டு விழா மலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை வெளியீடு, பக். 97.
29. பேராதனை இந்து மாணவர் வெளியீடு, இந்து தர்மம் (1982-1983)
30. வே. கனகரத்தின உபாத்தியாயர், மு. த. நூ., பக். 70-71.
31. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு, கழக வெளியீடு, 1969, முதற்பதிப்பு, ப.99
32. மேலது நூல், ப. 160.
33. ம.க. திருஞான சம்பந்தப் பிள்ளை, பதிப்பு,கதிர்காம வேலவர் திருவருட்பா சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், முகவுரை, 1954.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக