பக்கங்கள்

புதன், அக்டோபர் 13, 2021

இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற அப்துல்றசாக் குர்நா 1994 இல் எழுதிய 'சொர்க்கம்' என்ற புதினம்

2021 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் அப்துல்றசாக் குர்நா அவர்கள் பத்துக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதியிருகின்றார். „Paradise“ (சொர்க்கம்) என்ற நாவலை 1994 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கின்றார்.
விபரம்: Abdulrazak Gurnah. Paradise New York New Press (Norton, distr.). 1994. 247 pages. $19.95.

”ஆபிரிக்க இலக்கியங்கள்” என்ற கிளைத்துறை அறிஞர், பஃரைன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியப் பணியாற்றிய சார்ல்ஸ் பொன்னுத்துரை சர்வன் அவர்கள் WORLD LITERATURE TODAY என்ற சஞ்சிகையில் 1995 கூதிர் கால வெளியீட்டில் ஆங்கிலத்தில் எழுதிய சிறிய நூல் அறிமுகக் குறிப்புரையின் தமிழாக்கம் இது.

நன்றி: World Literature Today, Vol. 69, No. 1, Postmodernism/Postcolonialism (Winter, 1995), pp. 209-210

***************************************************************

சொர்க்கம்


சுவர்க்கத்தில் சொல்லப்படுவதாக அமைந்திருக்கின்றது “சொர்க்கம்” என்கின்ற இந்தப் புதினம். புதிய திருப்பத்தினை எதிர்கொண்டு, ஒரு நூற்றாண்டைத் தாண்டிப் பயணப்படுகின்றது இன்றைய தன்சானியா.

அந்த நூறு ஆண்டுகளுக்கு முந்திய, அன்றைய தன்சானியாவில், அரபு வழி மூதாதையரைக் கொண்ட பன்னிரெண்டே வயதில் இருக்கும் யூசூவ் என்ற சிறுவன், அவனது தந்தை பட்ட பணக் கடன் தீரும் வரை கடன் கொடுத்தவனிடம் வேலைக்காரனாய் இருப்பது என்ற நிர்ப்பந்தத்தில், அஸீஸ் என்கிற வியாபாரியிடம் கையளிக்கப்படுகின்றான்.



நைஜீரிய எழுத்தாளர் சினுவா ஆச்செப்பி(1930-2013) அவர்களின் ’சிதைவுகள்’ (Things Fall Apart) என்ற புகழ்பெற்ற நாவலில், கொடூரமான காலனித்துவ ஆக்கிரமிப்பினால் ஆபிரிக்க வாழ்க்கைமுறைகள் சிதிலங்களாவதும், சிதைக்கப்படுவதும் காட்டப்படுவது போலவே, குர்நா அவர்களின் ’சொர்க்கம்’ (Paradise) என்ற இந்த நாவலிலும் சிதிலங்களாவதும், சிதைக்கப்படுவதும் எமக்குக் காட்டப்படுகின்றன. இந்த இரண்டு நாவல்களிலுமே ஐரோப்பியக் கதை மனிதர்கள், கதைகளின் இறுதியில் மட்டுமே உள்வாங்கப்படுவதைப் பார்க்கலாம். நடந்தேறிவிட்ட மாற்றங்களும், அவற்றின் தீவிரங்களும் இவற்றிற் சொல்லப்படுகின்றனவே தவிர, அதற்கான சூத்திரதாரிகள் பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை.

சினுவா ஆச்செப்பியின் ’சிதைவுகளில்’ வருகின்ற அதே பயம், மனிதனின் அச்சம் இங்கே இப்படியாகச் சொல்லப்படுகின்றது: “எனது பயமெல்லாம் இனி வரப்போகும் காலங்கள் பற்றியதே…அவர்கள் நோக்கமெல்லாம், சும்மா வியாபாரமல்ல, இந்த மண்ணையும் மனிதர்கள், எங்களையும்…ஆக்கிரமித்துக்கொள்வதே!” ”எமதென்ற உரித்துடைய எல்லாவற்றையும் நாம் இழந்துவிடப்போகின்றோம்; எமக்கென்றிருந்த எங்கள் வாழ்வின் முறைமைகள் அடங்கலாக!”

ஆச்சேப்பியின் பாத்திரம் உமுவோபியா விவசாயத்தில் தம் வாழ்வாதாரத்தினைத் தேடிக்கொண்டவர். ஆனால் இக் கதையின் உயிரோட்டம் வியாபாரம். இந்த நாவலில் அஸீஸ் தனது வியாபாரப் பரிவாரங்களை வழிநடத்தியபடி தக்கநீக்கா மற்றும் விக்டோறியா என்ற இரண்டு பெருவாவிகளுக்கும் இடைப்பட்ட தொலைதூரப் பிரதேசங்களை ஊடறுத்துச் செல்வார். கோட்டைகள், ஆறுகள், திருடர் கூட்டங்கள் என்று பலவற்றை எதிர்கொண்டபடி, கொசுவும் கொடிய மிருகங்களும் பாம்புகளும் நிறைந்த அடர் காடுகளினூடு அவர்கள் பயணம் அமையும். ”இந்தப் பூமியில் இதைனைச் செய்யத்தான் விதிக்கப்பட்டிருகின்றோம்; இதைவிட உன்னதமானது வேறொன்று கிடையாது.” என்று கூறும் குர்நாவின் பாத்திரங்கள்.

ஆச்சேப்பியின் மொழியினைப் போன்ற தொற்றுநீக்கம் செய்யப்பட்ட நியம ஆங்கிலமல்ல அப்துல்றசாக் குர்நா அவர்களது மொழி. தேவைகருதி, அவசியம் எங்கோ அங்கு வந்து விளக்குவது அவரின் மொழிப் பாணி. “அது ஒரு ஹிறிஸி, ஜெபமாலையின் தொடர்மணி வார்த்தைகள்.”

சோலைகள் சொர்க்கத்தின் இன்றியமையாத கூறுகள் என்பது இஸ்லாமியக் கருத்துருவம். அறிவினைக் குலைத்து ஆளை மயக்கும் இசையில் ததும்பும் பூவுலகச் சோலைகளின் இருப்பினைப் பற்றி வளர்ந்து பெரியவனாகிவிட்ட யூசூவ் அறிந்துகொள்கிறான். அஸீஸுக்குரிய, ஆனால் யூசூவிற்கு மறுக்கப்பட்டவற்றை அவன் பார்த்துவிடுகின்றான். கடைசியில் அவன் எந்த நோக்கமுமற்றுத் தற்செயலாப் பிரவேசிக்கும் இடங்களைக் காண்கிறான். அவை எப்படி இருக்கக்கூடும் என்று கற்பனையில் நினைத்தானோ அத்தனை அழகாக நிஜத்தில் இருக்கின்றன; எங்கும் நறுமணம் பரவிக் கிடக்கின்றது. நீரின் ஓசையும் அதன்மீது தவழ்ந்துவரும் இசையும் அவனை அள்ளுகின்றன. சோலைகள் சூழ்ந்த தங்க மாளிகைக் கூடத்தின் இதமான ஒளி ஓடும் நீரிலும் ஒவியங்களை வரைகின்றன. இந்த அலங்காரச் சோலைக்குள் இருக்கும் மாளிகையில்தான் அஸீஸின் மனைவிகள் சுலைக்காவும் அமீனாவும் வாழ்கின்றனர்.

இதில் சுலைக்கா நடுத்தர வயதுக்காரி, குழப்பமும் மறதியும் அவளைப் பீடித்திருக்கின்றன. முகமோ ஊதாவர்ணத்தினால் மறைக்கப்பட்டிருக்கின்றது. அமீனா, கலீலின் சகோதரி; பெரியவள். யூசூவ்வைப்போலவே இந்தச் சகோதர்கள் இருவரும் அவர்களது தந்தையால் அஸீஸிடம் அடிமைகளாக விடப்பட்டவர்கள். தேவலோகச் சொர்க்கத்தின் சோலைக்குள் இருக்கும் யதார்த்தம் இது. ”பூலோகத்தில் நரகம் ஒன்று இருக்கின்றதென்றால், இங்கே அது இதுவாகத்தானிருக்கும்.” யூசூவ்வை அடைந்துவிட சுலைக்கா முயற்சித்தபோதும், யூசூவ்விற்கு அமீனா மேற்றான் காதல். தன்னுடன் வந்துவிடவேண்டுமென்று அவளை இரந்துநிற்கின்றான். அமீனாவை நீ பெண்டாடுதல் தவறு, ஏதிலியான அவளை நீ இப்படிச் செய்வது மோசம்; அவள் உன் இனத்தவளல்லவா…என்றெல்லாம் அஸீஸுக்குச் சொல்லிவிடத்தான் யூசுவ் விரும்புகின்றான்.

ஆச்செப்பியைப்போல் குர்நா அவர்கள் சமூகத்தின் பலவீனங்களைப் பெரிதாக்கிக் காட்டுவதில்லை. அந்த மக்களின் துணிவினை, கௌரவத்தினை, அவர்களின் உடலுழைப்பினை விபரிக்கும் போதுகூட இப் பலவீனங்கள் வெளிப்படுவதில்லை.

யூசூவ் தன் அடிமை நிலையினை உணரத் தொடங்குகின்றான். கடையில் சந்தோஷமாக இருக்கும் கலீலுக்கு இது நல்லதாகப் படவில்லை. தன்னை அடிமை கொண்டவனின் அறத்தின் படியே தான் வாழ்கின்றோம் என்பதுகூடக் கலீலுக்குப் புரியவில்லை. கலீலைப்போலவே அஸீஸின் தோட்டத்தில் வேலை செய்யும் முதியவரும் தன் அடிமைத் தனத்தில் இருந்து விட்டுவிடுதலையாகிவிட மனமின்றியிருக்கின்றார். விடுதலை என்பதும் சுதந்திரம் என்பதும் கலீலுக்கு ’அது தேர்வுகள் இல்லாதுபோய் விடும் நிலை’ என்றும் அது ’சுய இருப்பினை மறுக்கும் நிலை’ என்றுமே அர்த்தப்படுத்திக்கொள்கின்றான்.

ஆபிரிக்க மக்கள் மட்டுமல்லாது, மேலும் சில இனக்குழுமத்தினர் அங்கே வாழ்கின்றனர். இனங்களுக்கிடையில் ஒருவர்மீது ஒருவர் சந்தேகத்துடன் வாழும் நிலையே அங்கு காணப்படுகின்றது. அரபு இனத்தவர்கள், இந்தியர்கள், மற்றும் குறைந்த அளவில் கிரேக்கர்கள் ; போர்த்துக்கீசர் போன்றவர்களுக்கும் கிழக்கு ஆபிரிக்காதான் நாடும் வீடும். ஆனால் அது மறுக்கப்படுவதின் வளர்ச்சிப்போக்கினை அவர்கள் எல்லோரும் உணர்கின்றனர்.
கலீலின் குடும்பத்தினரும் மற்றும் அவர்களைப்போலப் பலரும் அரபு நாடுகளை நோக்கிச் சரணடையச் செல்கின்றனர். இடப்பெயர்வும் புகலிடமும் அவர்களை ஏதிலிகள் ஆக்குகின்றன. அவர்கள் படும் துன்பப்பாடுகளில் இருந்து அவர்களால் மீண்டுவிடமுடியவில்லை.

காலனித்துவ ஆக்கிரமிப்பு ஜெர்மன் அதிகாரிகளால் தமக்காகப் போர்புரிவதற்கும், அதனோடு தொடர்புடைய வேலைகள் செய்வதற்கும் பிடித்துச் செல்லப்படும் மனிதர்களோடு, இறுதியில் விரக்கியின் உச்சத்தில் இருக்கும் யூசூவ்வும் ஓடி விடுவதால் எதுவும் முடிந்துவிடுவதில்லை என்பதில் முடிகிறது கதை.

”…இன்னொரு தடவை இப் பயண சந்தர்ப்பம் வரப்போவதிலை…ஐரோப்பியர்கள் எல்லாவற்றையும் கையகப்படுத்திவிட்டனர்…”

பூகோவியச் சொற்களிற் சொல்வதென்றால், அல்லது புதிய வரலாற்றியலில் சொல்வதென்றால் குர்நா அவர்கள், செவிக்கு எடுக்கப்படாதிருந்த குழுக்களின் குரலாக ஒலிக்கின்றார். ஆரவாரச் சரித்திரவியலாளர்கள் போலல்லாது யூசூவ் பாத்திரம் மூலம், அமைதியாகக் குரல் எழுப்புகின்றார் குர்நா அவர்கள். இவ்வாறுதான் இக்போக்களுக்கு சினுவா ஆச்செப்பி அவர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் ஆசியர்களுக்காக வஸான்ஜி („The Gunny Sack“, 1989) அவர்களும் குரல்கொடுத்துள்ளனர்.

அடிமைகள் வியாபாரிகளாக மட்டுமே இப்போதும் சமூக நினைவடுக்கில் இருக்கும், குறித்த பிராந்தியத்தின் அரேபிய வழிச் சமூகங்களுக்காக குர்நா அவர்கள் இந் நாவலில் குரல் கொடுக்கின்றார். ‘சொர்க்கம்’ எனும் இந் நாவல் எம்மைத் தன்னகத்தே இழுத்துவிடும் ஈர்ப்புடையது. வழக்கொழிந்து மறைந்துவிட்ட வாழ்முறையொன்றினைத் தளம்பாத சமநோக்குடன் பகரும் சாட்சியம் என்றும் இந் நாவலைக் குறிப்பிடவேண்டும்.

சார்ல்ஸ் பொன்னுத்துரை சர்வன்
பஃறைன் பல்கலைக்கழகம்

(தமிழாக்கம்: நடராசா சுசீந்திரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக