பக்கங்கள்

புதன், டிசம்பர் 22, 2021

கம்யூனிஸ்ட் அறிக்கை

எந்தப் பெரிய விடயங்களையும் எப்படிச் சுருக்கமாக, தெளிவாக, ஆழமாக அதேவேளை அழகாக எழுதுவதென்பதை அறிந்துகொள்ள, ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் கம்யூனிஸ்ட் அறிக்கையினைப் படிக்கவேண்டும். இவ்வறிக்கை 1848இல் கார்ல் மார்க்ஸ் அவர்களாலும் பிரடெறிக் ஏங்கல்ஸ் அவர்களாலும் எழுதப்பட்டது.

இந்த அறிக்கையின் தமிழாக்கங்கள் தமிழ் நாட்டில் 1931இல் பெரியாரின் அறிமுகவுரையுடன் 'குடியரசு' சஞ்சிகையிலும், 1948 இல் எம். இஸ்மத் பாஷா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி பிரசுராலயத்தாலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்படும் தமிழாக்கம் பெப்ரவரி 1948 இல் இலங்கையில் எஸ். இராமசாமி ஐயர் மற்றும் எஸ்.கே. கந்தையா என்பவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கமிட்டியினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இவ்வறிக்கையின் பல தமிழ் ஆக்கங்கள் கிடைக்கின்ற போதிலும் இம் முன்னோடி முயற்சி எத்துணை பெறுமதியானது என்பதினை இன்று வாசிக்கும்போது உணரமுடிகிறது.


கம்யூனிஸ்ட் அறிக்கை

எழுதியவர்கள்:

கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கல்ஸ்

மொழிபெயர்ப்பு:

எஸ். இராமசாமி ஐயர்

எஸ். கே. கந்தையா


பதிப்பாளர்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கமிட்டி, ஸ்டான்லி ரோட், யாழ்ப்பாணம்.

இதன் விலை]

[சதம் 75|

முதற் பதிப்பு: 1948 பெப்ரவரி

உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!!

___________________________________________________________________________
Printed at Sri Sanmuganatha Press, Jaffna 20-2-48
(Copy Right Reserved)



பதிப்புரை



"ஐரோப்பாவை ஓர் பூதம் பயமுறுத்துகிறது; அது தான் கம்யூனிஸம்" என்னும் வாக்கியத்துடன் 1848-ம் வருஷம் பெப்ரவரி மாதத்தில் கார்ல் மார்க்ஸும் பிரெடரிக் ஏங்கல்ஸும் தங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஆரம்பித்தார்கள். கம்யூனிஸ்ட் அறிக்கையின் நூறாவது ஆண்டாகிய 1948-ல் உலகம் முழுவதையும் இப் பூதம் பயமுறுத்துகிறதென அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களைப் பின்பற்றும் ஒவ்வோர் தேசத்துப் பிற்போக்குக் கும்பலும் ஓயாது உளறுகின்றனர்.கம்யூனிஸம் ஓர் பூதமெனக்கூறி ஐரோப்பிய தேசங்களிலுள்ள பெரும்பான்மையோரான பாமர மக்களை ஐரோப்பிய பிற்போக்காளர் அக்காலத்தில் ஏமாற்ற முயற்சித்தனர்.
இவ்வேமாற்றலைத் தகர்க்கவே கம்யூனிஸ்ட் அறிக்கை பிரகடனமாக்கப்பட்டது. இன்று ஒவ்வோர் தேசத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கம் வேருன்றி வளர்கின்றது. சோவியத் நாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் கோட்பாடுகள் நடைமுறையில் வந்து முப்பது வருஷங்களாகின்றன.எனினும் கம்யூனிஸத்தைப்பற்றிய துர்ப்பிரசாரத்தை எதிர்க்கவேண்டியிருக்கிறது. கீழைத்தேசங்களின் இயல்புக்கு கம்யூனிஸம் மாறானது; மேலைத்தேச ஜனநாயக முறைக்கும், அது மாறானதெனக் கூறப்படும் பொய்களை அழிக்க வேண்டும்.கம்யூனிட் அறிக்கை உலகசரித்திரப் போக்கைத் துருவி ஆராய்ந்தெழுதப்பட்டது. அதிலுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் விரிவாக வளரக்கூடியன. இவ்வறிக்கையிலிருக்கும் ஒவ்வொரு வசனமும் சிந்தனைக்கிளையாக வளர வேண்டியது; அப்படி வளர்ந்து உலக சரித்திரத்தின் பல அம்சங்களையும் இக் கருத்துக்கள் தெட்டத்தெளிவாக விளக்கக் கூடியன.
எனவே, தமிழன்பர் மொழிபெயர்க்கப்பட்ட இவ்வறிக்கையை வசனம் வசனமாக, ஆராய்ந்து படிக்கவேண்டும்; அப்போது கம்யூனிஸம் இயல்பின் போக்கில் தவிர்க்கமுடியாது வளர்வது, ஒவ்வோர் தேசத்துச்கும் ஏற்றது என்பது விளங்கும். கம்யூனிஸம் ருஷ்யச்சரக்கல்ல; அது ஓர் உலகதத்வம் என்பதை தமிழன்பர் உணரவேண்டும் என்ற ஆவலினால் இம் மொழிபெயர்ப்பை அறிக்கையின் நூறாவது ஆண்டில் பிரசுரிக்கிறோம்.

யாழ்ப்பாணம்,18.2.1948
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கமிட்டி



கம்யூனிஸ்ட் அறிக்கை.


ஐரோப்பாவை ஒரு பூதம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது - அதுதான் கம்யூனிஸம். இப்பூதத்தை ஐரோப்பாவிலிருந்து துரத்தியடிப்பதற்காக, ஐரோப்பாவிலுள்ள சகல பூர்வீக (பிற்போக்கான) சக்திகளெல்லாம்-மத ஸ்தாபனத்தின் தலைவனாகிய போப், ருஷ்ய சக்கிரவர்த்தியாகிய ஜார், ஆஸ்டிரிய பிரதம மந்திரி மெட்டோனிச், பிரஞ்ச் அதிகாரி தய்சோ, பிரஞ்ச் ரடிக்கல்ஸ் (Radicals) ஜெர்மன் பொலிஸ் ஒற்றர்கள், இவர்கள் எல்லாம் – ஒரு ’பரிசுத்தமான’ ஒப்பந்தத்திற் பிரவேசித்திருக்கிறார்கள்.
1948

அதிகாரத்திலிருக்கும் கட்சியால் 'கம்யூனிஸ்ட்' என்று குற்றம் சுமத்தப்படாத ஒரு அரசியல் எதிர்க்கட்சி எங்கேயாவது உண்டா? பிற்போக்கான கட்சியாயிருந்தாலும் சரி, முற்போக்கான கட்சியாயிருந்தாலும் சரி, அந்தக் கட்சிக்கு எதிராகும் போது 'கம்யூனிஸ்ட்' என்னும் அபாண்டமான பழியைச் சுமத்தாத எதிர்க்கட்சி ஒன்று உண்டா?

இதிலிருந்து இரு உண்மைகள் பிறக்கின்றன. (1)கம்யூனிஸம் என்பதும் ஒரு தனித்த சக்தியென்பதை எல்லா ஐரோப்பிய சக்திகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
(2) கம்யூனிஸ்டுகள் சகல உலகத்திற்கும் பகிரங்கமாகத் தங்கள் கொள்கைகளையும், நோக்கங்களையும், திட்டங்களையும் ஒரு பிரகடனம் மூலம் வெளிப்படுத்தி, கம்யூனிஸ்ட் பூதமென்னும் சிறுபிள்ளைப் பூச்சாண்டிக் கதையை அம்பலப்படுத்தக் காலம் வந்து விட்டது. இதற்காகவே, பல தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்களும் லண்டனில் கூடி இங்கிலிஷ், பிரஞ்சு,ஜெர்மன், இத்தாலி, பிலிமிஷ், டானிஷ், பாஷைகளில் பிரசுரிப்பதற்காகக் கீழ்க்காணும் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார்கள்.

I

பூர்ஷ்வாக்களும் புரோலிட்டேரியட்டுகளும்1



மனித சமுதாயத்தின் சரித்திரமானது வர்க்கப் போராட்டத்தின் சரித்திரமாகவே இருந்து வந்திருக்கிறது.அடிமைத் தழைகளை இழந்தவன், அடிமை;பட்றிஷன்2,பிலிபியன் (Patrician, Plebian); நிலப்பிரபு, பண்ணை அடிமை; கில்ட்மாஸ்டர், ஜேனிமன்(Guild-master, Journeyman)3;- சுருக்கக்கூறின் சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் - என்னும் இருவர்க்கத்தாரும் ஒருவரையொருவர் எதிர்த்து எப்பொழுதும் போராடிக்கொண்டு வந்திருக்கின்றனர். இப்போராட்டம் சிலசமயங்களில் பகிரங்கமாகவும், சிலசமயங்களில் மறைமுகமாகவும் தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. இப்போராட்டம் ஒவ்வொரு முறையும் புரட்சிகரமான வழியில் சமூகத்தைத் திருத்தியமைத்தது, அல்லது இருவர்க்கத்தாருடைய அழிவையும் தேடிமுடிந்தது.

சரித்திரகால முற்பகுதியில், எல்லா விடத்திலும் சமூகம் பல சிக்கலான முறையில் பல படிப்படியான, ஏற்றம் தாழ்வான, முறையில் பிரிக்கப்பட்டிருந்தன. புராதன ரோமாபுரியில், பிரபுக்கள் நைட்டுகள் - (Knights)4பிலிபியன், அடிமை என்றும், மத்திய கால ஐரோப்பாவில் ஜமீன்தார், கீழ்க்குத்தகைக்காரன், கில்ட்மாஸ்டர் ஜேனிமன், கைத்தொழில் கற்போர், பண்ணை அடிமைகள் என்றும் சமுதாயம் பிரிக்கப்பட்டது. இப்பிரிவுகளுக்குள் அனேக உட்பிரிவுகளும் இருந்தன.

நிலப்பிரபுத்துவ சமூகத்தை அழித்துத் தேய்த்து உற்பத்தியான பூர்ஷுவா சமூகமானது வர்க்க விரோதத்திற்கு விடை கொடுக்கவில்லை. அது புதியவர்க்கங்களையும், புதிய சுரண்டல்களுக்கேற்ற நிலையையும், வர்க்கப் போராட்டத்தில் பழைய முறைகளுக்குப் பதிலாக புதிய முறைகளையுமே சிருஷ்டித்தது.


எங்கள் சகாப்தம் - அதாவது பூர்ஷ்வாக்களுடைய சகாப்தம் - மற்றைய எல்லா சகாப்தங்களையும் விட ஒரு விசேஷ அம்சத்தைப் பெற்றிருக்கிறது: வர்க்க விரோதத்தின் சிக்கல்கள் குறைந்ததே இவ்வம்சம், சமூகம் முழுவதும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் இரு பெரும் வர்க்கங்களாக பிளவுபட்டுக் கொண்டேபோகிறது. இவ்விரு வர்க்கங்களாவன பூர்ஷுவா, புரோலிட்டேரியட் வர்க்கங்களே.

மத்தியகால பட்டணங்களில் பண்ணை அடிமைகளிலிருந்து சலுகைகள் பெற்ற பேகர்கள் (Burgesses)5அவதரித்தனர். இப்படி அவதரித்த பேகர்களிலிருந்து பூர்ஷூவாக்களுடைய முதல் நபர்கள் உருவாயினர்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை, ஆபிரிக்காவைச் சுற்றி இந்தியாவிற்கு ஒரு கடற்பாதை கண்டுபிடித்தமை பூர்ஷ்வா வளர்ச்சி யுறுவதற்கு புதுச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தின. கிழக்கிந்திய, இந்திய, சீன மார்க்கட்டுகள் அமெரிக்காவில் குடியேற்றம், குடியேற்ற நாடுகளுடன் ஏற்பட்ட வியாபாரம், நாணயமாற்றில் ஏற்பட்ட அபிவிர்த்தி பண்டமாற்றில் பொதுவாக ஏற்பட்ட அபிவிர்த்தி ஆகியவைகள், வியாபாரத்திற்கும், கப்பல் போக்குவரத்திற்கும், தொழில் அபிவிர்த்திக்கும், முன் ஒருபோதும் கேள்விப்படாத அளவில் ஒரு முன்னேற்ற சக்தியைக் கொடுத்தது. இதனால் கிடுகிடன ஆடிக்கொண்டிருக்கும் நிலப்பிரபுத்வ சமூகத்திலிருந்த புரட்சிகரமான சக்திகள் வேகமாக வளர்ச்சியுற்றன. நிலப்பிரபுத்வ காலத்திலுள்ள கைத்தொழில் முறையில் பொருள் உற்பத்திகளெல்லாம், கில்ட்களின் ஏகபோக உரிமையாகவிருந்தது. இவ் உற்பத்தி முறையால் புதிய மார்க்கட்டுகளின் வளருகின்ற தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியவில்லை. ஆகவே தொழிற்சாலை முறை ஏற்பட்டது. கில்ட்மாஸ்டர்கள், தொழிற்சாலை உற்பத்தியில் ஈடுபட்ட மத்திய வகுப்பாரால் ஒதுக்கப்பட்டனர். தம்தம் தொழிலிற்கேற்ற சங்கங்கள் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினை போய், தொழிற்சாலைவாரியாகப் பிரிக்கப்பட்ட தொழிற்பிரிவினை ஏற்பட்டது.

அதேசமயத்தில் மார்க்கட்டுகள் வளர்ந்து கொண்டே போயின. தேவைகளும் அதிகரித்தன. இந்நிலையில் கைத்தொழிலால் ஏற்பட்ட உற்பத்தி போதாததாயிருந்தது. அப்பொழுது நீராவியும், யந்திர சாதனமும் தொழில் உற்பத்திமுறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. (தற்கால ராக்ஷத யந்திரத் தொழிற்சாலைகள் சிறிய கைத் தொழிற்சாலைகளுடைய இடத்தைக் கைப்பற்றின. கைத்தொழிலில் ஈடுபட்ட மத்திய வகுப்பாருடைய இடத்தை லக்ஷாதிபதிகளான யந்திரசாதன முதலாளிகள் எடுத்தனர். இவ் லஷாதிபதிகள் கைத்தொழிலில் ஈடுபட்ட பிர்மாண்டமான தொழிலாளர் கூட்டங்களின் தலைவர்களாக வந்து தற்கால பூஷூவாக்களாயினர்.

தற்கால யந்திரசாதன உற்பத்தி உலக மார்க்கட்டை ஒன்றாக ஒரேமார்க்கட்டாக ஸ்தாபித்துவிட்டது. இதற்கு அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை அடிப்படைக் காரணமாயிருந்தது. இவ்வுலக மார்க்கட் வியாபாரத்திற்கும் தரையிலும் கடலிலும் உள்ள போக்குவரத்து சாதனங் கட்கும் பெரிய அபிவிர்த்தியைக் கொடுத்தது. இவ்வபிவிர்த்தி யந்திரசாதனத் தொழில் முறையின் வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது யந்திர சாதன உற்பத்தி, வியாபாரம், கப்பல் போக்குவரத்து, ரயில்வேக்கள், ஆகியவைகள் பெருகிய விதத்தில் பூர்ஷ்வாக்களும் அபிவிர்த்தியடைந்தனர். தங்கள் மூலதனத்தைப் பெருக்கினர். மேலும், மத்திமகாலம் தொட்டு உண்டாயிருந்த பல்வேறு மத்திய வகுப்பினரையும் சமூக நிலையில் கீழ்ப்படுத்தினர்.

ஆகவே பொருள் உற்பத்திமுறையிலும் பண்டமாற்று முறையிலும் நடந்த பல புரட்சிகளின் விளைவாய் ஏற்பட்ட நீண்டகால வளர்ச்சியினால், தற்கால பூர்ஷூவாக்கள் உருவெடுத்தனர் என்பதை நாம் காண்கிறோம்.

பூர்ஷ்வாக்களுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கும் ஏற்ப அவ் வகுப்பாருடைய அரசியல் முன்னேற்றம் ஏற்பட்துட. இவ் வகுப்பார் நிலப்பிரபுத்வ காலத்தில் சுரண்டப்படும் வகுப்பாயும் மத்தியகால 'கம்யூனில்' (Commune)6ஆயுதந்தரித்த சுய ஆட்சி செய்யும் சங்கமாகவுமிருந்தார்கள். இத்தாலி, ஜெர்மனி போன்ற இடங்களில் சுயாட்சியுள்ள குடியரசுப் பட்டணங்களாகவும், பிரான்ஸ் போன்ற இடங்களில் அரசனுக்கு வரிசெலுத்தும் மூன்றாவது எஸ்டேட்7ஆகவும் இருந்தார்கள். பின்பு கைத்தொழில் காலத்தில் பிரபு வர்க்கத்தை எதிர்ப் பதற்காக, நிலப்பிரபுத்துவ அல்லது எதேச்சாதிகார மன்னர்களுக்கு சேவை செய்தும், உண்மையில் பெரிய முடியாட்சிகளின் மூலக் கற்களாக அமைந்தனர். இப் பூர்ஷ்வாக்கள், நவீன யந்திரசாதன ஸ்தாபனத்துடனும், உலகமார்க்கட்டின் ஸ்தாபனத்துடனும், தற்கால ஜெனப்பிரதிநித்துவ அரசாங்கத்தில் அரசியல் அதிகாரங்கள் முழுவதையும் தங்களுக்கெனக் கைப்பற்றிக்கொண்டனர். எனவே, தற்கால அரசாங்கம் சகல பூர்ஷுவாக்களுடைய பொது விவகாரங்களைத் திறமையாக நிர்வகிக்கும் ஒர் சபையே.

சரித்திர பூர்வமாக நோக்குமிடத்து பூர்ஷுவாவர்க்கம் மிகவும் புரட்சிகரமான செய்கையைச் செய்திருக்கின்றது.

எங்கெங்கு பூர்ஷ்வா வகுப்பின் கை வலுத்ததோ அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவ, பற்றிரியாக்கள், (குடும்பத் தவைன் குடும்பத்தில் எதேச்சாதிகார ஆட்சி நடத்தல்) ஐடிலிக், (கற்பனை உலகில் உள்ள தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தனக்கு இயற்கையாகயமைந்த மேல்வர்க்கத்தாருடன் மனிதன் பிணைக்கப்பட்டிருந்த பல நிலப்பிரபுத்வத் தன்மையான சகல பந்தங்களையெல்லாம் ஈவிரக்கமின்றித் தகர்த்தெறிந்து, மனிதனும், மனிதனும், வெறும் சுயநலத்தால் - ஈவிரக்கமில்லா ரொக்கம் கொடுத்தலால் - எற்படக்கூடிய ஒரே ஒரு தொடர்பை மாத்திரமே வைத்திருக்கும்படி இவ்வகுப்பு செய்தது. தன்னையே உயர்த்தும் நோக்கத்தைக்கொண்ட உணர்ச்சி யற்றவாழ்க்கை முறையில், தெய்வீகப் பரவசத்தால், க்ஷத்திரீய தார்மீக உற்சாகத்தால், மனவிருப்பையே அடிப்படையாகக்கொண்ட வெறும் உணாச்சியால், ஏற்படும் குதூகல ஆவேசங்கள் எல்லாவற்றையும் இவ்வகுப்பு அமிழ்த்திவிட்டது. மனிதனுடைய மதிப்பை நாணயமாற்றுப்போல் மாற்றக்கூடிய ஒருவிலையாக மாற்றிவிட்டது. அழிக்கமுடியாத அனேக சாதன ரீதியான சுதந்தரங்களுக்குப் பதிலாகத் தங்கு தடையற்ற வியாபாரம் என்னும் ஒரே சுதந்தரத்தை, - சுருங்கக்கூறின் சமய அரசியல் பிரேமைகளால் போர்வையிடப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக, ஒழிவு மறைவு இல்லாத, நேரடியான, வெட்கக்கேடான, மிருகத்தனமான, சுரண்டலை - ஏற்படுத்தியது.

இதுகாறும் பயபக்தியுடனும் வணக்கத்துடனும் உலகத்தில் மதிக்கப்பட்ட தொழில்களெல்லாவற்றிலிருந்தும் கீர்த்திப் பிளம்பை பூர்ஷுவா வகுப்பு எடுத்துவிட்டது. வைத்தியன், வக்கீல், மதகுரு, கவி, விஞ்ஞானி ஆகிய எல்லோரையும் தன்னுடைய கூலிவேலைக்காரராக இவ் வகுப்பு ஆக்கிவிட்டது.

மேலும் பூர்ஷ்வா வகுப்பு குடும்பத்திலிருந்த உணர்ச்சிப் போர்வையைக் கிழித்தெறிந்து, குடும்ப சம்பந்தத்தை கேவலம் பணம் சம்பந்தமான நிலைக்குக் தாழ்த்திவிட்டது.

மத்திய காலத்தில், வேடிக்கைக்காக, மிருகத்தனமாகக் காட்டப்பட்ட தைரியத்திறமை - பிற்போக்குவாதிகளால் புகழப்பட்டபோதிலும் - எவ்விதம் மிகவும் கேவலமான சோம்பலுடன் இயற்கையாக இணைத்ததென்பதை பூர்ஷுவா வகுப்புக்காட்டியது. முதல் முதலாக இவ் வகுப்பே மனித சக்தியால் என்னென்ன செய்யமுடியுமென்பதைக் காட்டியது. எகிப்திய கூர்நுதிக் கோபுரங்கள், ரோமாபுரியிலுள்ள நீர்ப்பாசன வாய்க்கால்கள், கொதிக் தேவாலயங்கள், முதலிய அற்புதங்களைக் காட்டிலும் மிகப்பெரிய அற்புதங்களை இவ்வகுப்பு செய்திருக்கிறது. முற்காலத்தில் நடந்த தேசிய இனங்களின் பிரயாணங்களையும் 'சிலை' யுத்தங்களையும் மிகச்சிறு செய்கைகளாக்கும் பெரியபடையெடுப்புக்களை நடத்தியிருக்கிறது.

உற்பத்தி சாதனங்களை அடிக்கடி புரட்சிகரமாக மாற்றாமல் பூர்ஷுவாவர்க்கம் நிலைக்க முடியாது. அதோடு உற்பத்தி தொடர்புகளையும், அவற்றோடு மனித சமூகத்தின் தொடர்புகளையும் மாற்றாமல் இருக்க அவ்வர்க்கத்தால் முடியாது. இதற்குமாறாக முன்பு கைத்தொழிலில் ஈடுபட்ட வர்க்கங்கள் தாம் நிலைப்பதற்கு அக்காலத்துப் பழைய உற்பத்திமுறைகளை மாற்றாமல் பாதுகாக்கவேண்டி இருந்தது. உற்பத்தியில் புரட்சிகரமான மாற்றமும், சமூகநிலையில் தொடர்ச்சியான குழப்பமும் எப்பொழுதுமுள்ள நிலையற்ற தன்மையும், கிழர்ச்சியும் தான் பூர்ஷ்வா சகாப்தத்தை முன் வந்த சகாப்தங்களிலிருந்து பிரித்து அதற்குத் தனித்தன்மையைக் கொடுக்கின்றது. நிலை பெற்ற பழைய சம்பந்தங்களும் அவைகளுடன் தொடர்ந்து வரும் பழைய மதிக்கப்பட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தகர்க்கப் படுகின்றன. புதிதாய் எழும் தொடர்புசளும், கருத்தக்களும் சமூகத்தில் நிலை பெறமுன் பழையனவாய் விடுகின்றன. ஸ்திரமென்று கருதப்பட்டவைகளெல்லாம் அழிகின்றன. பரிசுத்தமானவைகளெல்லாம் அசூசிப்படுகின்றன. இறுதியில் மனிதன் தன் தெளிவான புத்தியுடன் தன்னுடைய வாழ்வின் உண்மையான நிலையையும் மற்றைய மனிதருடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் தொடர்புகளையும் உணரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

பூர்ஷுவாக்களுடைய உற்பத்திப் பொருள்களுக்கு வேண்டிய புதுப்புது மார்க்கெட்டுகளை எப்பொழுதும் விருத்தி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை பூமிமுழுவதும் துரத்துகிறது. அவ்வர்க்கம் பூமிமுழுவதும் வசிக்கவும் குடியேறவும் வேண்டியிருக்கிறது. மேலும் அவ்வர்க்கம் எல்லா இடங்களிலும் தொடர்பு வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

உலக மார்க்கெட் முழுவதையும் பூர்ஷ்வா வர்க்கம் சுரண்டுவதின் மூலம் ஒவ்வொருதேசங்களிலுமுள்ள பொருளுற்பத்திக்கும், பொருள்களின் உபயோகத்துக்கும் சர்வதேசீயத் தன்மையைக் கொடுத்திருக்கிறது. பிற்போக்காளரின் மனம் கொதிக்கும்படி, முன்பு தேசிய அடிப்படையில் வளர்த்த தொழில் முறையின் அஸ்திவாரத்தை இவ் வர்க்கம் தகர்த்தவிட்டது. முன் ஸ்தாபிக்கப்பட்ட தேசியக் கைத்தொழில்கள் எல்லாம் அழிக்கப்பட்டோ அல்லது நாளக்கு நாள் அழிந்து கொண்டோ போகின்றன. இத்தேசீயக் கைத்தொழில்கள் புதிய யந்திரசாதன முறைகளை உபயோகிக்கும் தொழிற்சாலைகளால் தங்கள் ஸ்தாபனத்திலிருந்து நீக்கப்படுகின்றன. இவ் யந்திரசாதன முறைகள் இரு தன்மைகள் வாய்ந்தன; அவையாவன: சொந்த நாட்டு மூலப்பொருள்களை மாத்திரம் உபயோகிக்காமல் மிகத் தூரதேசத்திலுள்ள மூலப்பொருள்களை உபயோகிப்பதும், யந்திர சாதனத்தால் உற்பத்தியாகும் பொருள்களை சுயதேசத்தில் மாத்திரம் அல்லாமல் வெளிநாடுகளிலும் செலவழிதலுமாம். இவ் யந்திரசாதன முறையை ஸ்தாபித்தல் எல்லாச் சீர்திருத்தின நாட்டினதும் ஜீவாதாரப் பிரச்னையாகிறது. அவ்வத் தேசத்தில் உற்பத்தியான பொருள்களைக் கொண்டு அவ்வத் தேசங்கள் தங்கள் முக்திய தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட முறைக்குப் பதிலாக, சகல தேசங்களினதும் சகல சுவாத்தியத்தினதும் உற்பத்திப் பொருள்கள் மனிதரின் புதிய தேவை களைப் பூர்த்திசெய்ய அவசியமாகின்றன. அவ்வவ்விடத் திற்கும் தேசிய இனத்திற்குமுரிய ஏகாந்தவாசத்திற்கும், சுயசம்பூரணத்துக்கும் பதிலாக எல்லாத்திக்கிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு சர்வதேசங்களும் ஒன்றின் மேல் ஒன்று சார்ந்திருக்கும் நிலையை அடைகின்றன. பொருள் உற்பத்தியில் மாத்திரமல்லாமல் அறிவு வளர்ச்சியிலும் இத் தன்மை செறிந்திருக்கிறது. தனிப்பட்ட தேசங்களின் அறிவுவளர்ச்சியின் சிருஷ்டிகள் எல்லாத் தேசங்களுக்கும் பொதுச் சொத்தாகின்றன. குறுகிய தேசிய மனப்பான்மையும், பட்சபாதமான தேசிய உணர்ச்சியும், உலகிலிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சகல தேசிய பிராந் தீய இலக் கியங்களிலிருந்து ஒரு உலக இலக்கியம் வளர்கின்றது.

உற்பத்திசாதனங்களை மிகவேகமாகத் திருத்தியமைத்தலாலும், போக்குவரத்தை மிகவும் இலகுவாக்கும் முறைகளாலும் உலகிலுள்ள மக்களுள் நாகரீகத்தின் கடைசிப்படியில் உள்ள தேசிய இனங்களையும் கூட பூர்ஷுவாவர்க்கம் நாகரீகத்திற்குள் இழுக்கின்றது. இவ்வகுப்பின் வியாபாரப் பொருட்களின் குறைந்தவிலைகள், தகர்க்கமுடியாத சகல தடைகளையும் தகர்க்கும் பெரும் பீரங்கிகளாகின்றன. அதோடு விதேசிகளை எதிர்க்கும் அநாகரீக மக்களிடையே யுள்ள பிடிவாதமான வெறுப்பையும் அகற்றி அம் மக்களைச் சரணடையச் செய்கிறது. தாங்கள் அழியாதவாறு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சகல தேசங்களும் பூர்ஷுவா பொருள் உற்பத்திமுறையைக் கைக்கொள்ளும்படி இவ்வர்க்கம் நிர்ப்பந்திக்கிறது. அதாவது அவர்கள் எல்லாரையும் பூர்ஷுவாத்தன்மையுள்ளவர்களாக மாற்றுகிறது. சுருக்கக்கூறின், பூர்ஷு வா வர்க்கம் தன்னுடைய பிரதிபிம்பமாகவே உலகத்தை அமைக்கின்றது.

பூர்ஷுவா வர்க்கம் கிராமங்களை நகரத்திற்கு அடிமையாக்கியது. பிரமாண்டமான சகாக்களைச் சிருஷ்டித்தது. நகர ஜனத்தொகையை கிராம ஜனத்தொகையிலும் பன்மடங்கு அதிகமாக்கியது. இவ்வாறு அனேக ஜனங்களை கிராமாந்திர விவேக சூனியத்திலிருந்து காப்பாற்றி யது. கிராம வாழ்க்கையை எப்படி நகர வாழ்க்கையில் தொங்கும்படி செய்ததோ அப்படியே நாகரீகமற்ற, அரை நாகரீமுள்ள தேசங்களை, நாகரீகமுள்ள தேசங்களில் தங்கும்படி செய்தது. அதுபோல விவசாயிகள் நாடுகளை பூர்ஷுவா நாடுகளிலும், கீழைத் தேசங்களை மேலைத்தேசங்களிலும் தொங்கும்படி செய்தது.

ஜனங்களினதும், உற்பத்திச் சாதனங்களினதும், சொத்துக்களினதும் பரந்திருக்கும் தன்மையை நாளாந்தம், இவ்வர்க்கம் மாற்றிக்கொண்டு வருகிறது. ஜனங்களை ஒரே இடத்தில் திரட்டி வருகிறது. அது போல உற்பத்திச் சாதனங்களையும் சொத்துக்களையும் ஒரு சிலருடைய கைகளில் குவித்து வருகிறது. இவற்றால் இன்றியமையாது ஏற்பட்ட பலன், அரசியல் முறையிலும் ஓர் மத்திய அதிகாரத்தை ஏற்படுத்தியதே. பல்வேறு அபிலாக்ஷைகள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிமுறைகள் ஆகியவற்றுடன், சுதந்திரமாகவோ அல்லது பெயரளவில் ஒன்றுபட்டோவிருந்த பல மாகாணங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஒரே அரசாங்கம், ஒரே சட்டமுறை, ஒரே தேசீய வர்க்க நலம், ஒரே அரசாங்க எல்லை, ஒரே சுங்கவரி ஆகியவற்றையுள்ள ஒரே தேசமாயின.

முந்திய தலைமுறைகளெல்லாம் சேர்த்து சிருஷ்டித்த உற்பத்தி சக்திகளிலும் பார்க்க அக பிரமாண்டமான உற்பத்தி சக்திகளை பூர்ஷ வாவர்க்கம் நூறு ஆண்டுகளுக்குட்பட்ட தனது ஆட்சி காலத்தில் சிருஷ்டித்திருக்கிறது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிமைப்படுத்தல், யந்திரசாதனங்களை உபயோகித்தல், ரசாயனத்தை விவசாயத்திற்கும் கைத்தொழிலிற்கும் உபயோகப்படுத்தல்,நீராவியின் மூலம் கடலில் போக்குவரத்துச் செய்தல், ரயில்வேய்க்கள், எலக்டிரிக் தந்திகள், முழுக்கண்டங்களிலும் விவசாயத்திற்காகக் காடுவெட்டல், ஆறுகளை வாய்க்கால்கள் மூலம் திருப்புதல், ஜனமில்லாவிடத்தில் பெருந்தொகை ஜனத்திரள்களைச் சிருஷ்டித்தல் ஆகியவற்றை பூர்ஷுவாவர்க்கம் செய்திருக்கிறது. இத்தகைய உற்பத்தி சக்திகளெல்லாம் சமுதாயத்தின் தொழிற் சக்திக்குள் அடக்கிமறைமுகமாக விருக்கின்றன வென்று முந்திய நூற்றாண்டுகளில் யாராவது கனவுகண்டதுண்டா?

ஆகவே பூர்ஷுவா வகுப்புதான் வளர்வதற்கு அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பண்டமாற்றுச் சாதனங்கள் நிலப்பிரபுத்வ சமுதாயத்தினுள்ளேயே உருவெடுத்தனவென்பதை நாங்கள் முற்கூறிய வற்றிலிருந்து அறிகிறோம்; பொருளுற்பத்தியினதும், பண்டமாற்றினதம் அபிவிருத்தியின் ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்வமுறை கையாண்ட பொருள் உற்பத்தி பண்டமாற்று முறைகளும் ஜமீந்தாரி முறையின் படி அமைக்கப்பட்ட கைத்தொழில் விவசாயமுறைகளும்,--சுருங்கக் கூறின் நிலப்பிரபுத்வ முறையிலுள்ள சொத்துரிமைத் தொடர்புகள் எற்கனவே வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளுடன் முரண்பட்டன. இத்தொடர்புகள் இவ் வுற்பத்திசக்திகளின் விலங்குகளாயின. ஆகவே அவ் விலங்குகள் அறுத்தெறியப்பட வேண்டியிருந்தது; அறுத்தம் எறியப்பட்டன.

நிலப்பிரபுத்வ முறையில் தங்குதடையற்ற போட்டி அதனுடன் கூடவே அப்போட்டிக்குரிய அரசியல் சமுதாய அமைப்பும் ஏற்பட்டது; மேலும் அத்துடன் பூர்ஷுவாவர்க்கத்தின் அரசியல் பொருளாதார ஆதிக்கம் ஏற்பட்டது.

இதுபோன்ற வளர்ச்சியொன்று எங்கள் கண்முன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. தற்கால பூர்ஷுவா சமூகம் தனக்கெனப் பிரத்தியேகமாக ஏற்படுத்திய உற்பத்திசாதன விநியோக, சொத்துரிமைத் தொடர்புகளுடன் பிரமாண்டமான உற்பத்திவிநியோக சாதனங்களை வளர்த்திருக்கிறது. தனது மந்திரத்தைக்கொண்டு பாதாளலோகத்திலிருந்து அழைத்த பிசாசுகளைக் கட்டுப்படுத்தமுடியாது நின்று தத்தளிக்கும் மாந்திரீகனைப்போல் இச்சமுதாயம் இப்போயிருக்கிறது. கடந்த அநேக வருடங்களாக ஏற்பட்ட யந்திரசாதனத்தினதும், வியாபாரத்தினதும் சரித்திரம், பூர்ஷுவாவர்க்கத்தின் ஆட்சியும் வாழ்க்கையும் நிலைப்பதற்குச் சாதகமான உற்பத்தியின் தற்கால சூழ்நிலையுடனும், சொத்துரிமை முறைகளுடனும் தற்கால உற்பத்திசக்திகள் நடத்திவரும் போராட்டத்தின் சரித்திரமேயாகும். இவ்விடத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் வியாபார நெருக்கடிகளை மாத்திரம் குறித்தால் போதுமானது. இந் நெருக்கடிகள் முழு பூர்ஷுவா சமுதாயத்தின் வாழ்க்கையையும் காலத்திற்குக் காலம் சோதனைக்குட்படுத்துகிறது. இந்நெருக்கடிகளில், உற்பத்தியான பொருள்களில் பெரும்பகுதி மாத்திரமல்லாமல் முந்தி சிருஷ்டிக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் அழிக்கப்படுகின்றன. இந் நெருக்கடிகளில், முற்காலத்தில் கேலிக்கிடமான மிஞ்சிய உற்பத்தி என்னும் வியாதி பரவுகிறது.

இவ்வியாதி காரணமாக சமூகம் திடீரெனத் தன்னை மிலேச்ச இயல்புக்கு தற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறது. அழிவை உண்டாக்குகின்ற பஞ்சம் அல்லது சர்வகாசம் செய்யும் யுத்தம் ஏற்பட்டு ஜீவாதாரத்துக்குரிய பொருள்களின் விநியோகத்தைத் தடுத்து விட்டனபோல் தோன்றுகிறது; பொருள் உற்பத்தியும் வியாபாரமும் அழிந்தது போல் தோன்றுகிறது. இவை ஏன் திகழ்கின்றன?

நாகரிகம் அதிகப்பட்டதாலும், ஜீவனாம்சத்திற்கு உள்ள வழிமுறைகள் அதிகப்பட்டதாலும் யந்திரசாதன முறையும் வியாபாரமும் அதிகப்பட்டதாலும் மேற்கூறியன நிகழ்கின்றன. சமூகத்தின் உபயோகத்திலிருக்கும் உற்பத்தி சக்திகள் பூர்ஷுவாக்களின் சொத்தை அபிவிர்த்திசெய்ய முடியாத கட்டத்தை அடைந்துவிட்டன. இதற்கு மாறாக, பூர்ஷுவாச் சொத்துக்களை வளர்ப்பதற்கு சாதகமான எல்லைகளை மீறி இவ் உற்பத்தி சக்திகள் பெலமடைகின்றன. இவ் எல்லைகள் இச்சக்திகளின் தளைகளாக மாறி அச்சக்திகளால் தகர்க்கப்படும் காலத்தில் பூர்வா சமுதாயம் முழுவதிலும் ஓர் சீர்கேடு எற்படுகின்றது. அதுமாத்திரமல்ல; பூர்ஷுவா சொத்துமுறையே ஆபத்திற்குட்படுகிறது. பூர்ஷ்வா சமுதாயமானது, தான் சிருஷ்டித்த ஐசுவரியத்தை தனக்குள்ளே அடக்குவதற்கு போதிய அளவு விசாலித்ததாகவில்லை. பூர்ஷுவாவர்க்கம் எப்படி இந் நெருக்கடியைச் சமாளிக்கிறது! அது தன் உற்பத்தி சக்தியின் ஓர் பெரும் பகுதியைத் தானாகவே கட்டாயப்படுத்தி அழித்தலாலும் புது மார்க்கட்டுகளைப் பிடித்தலாலும் பழைய மார்க்கட்டுகளைச் சம்பூர்ணமாகச் சுரண்டுவதாலும், நிலைமையைச் சமாளிக்கிறது. இன்னும் விஸ்தாரமான, இன்னும் பெரும் அழிவைக் கொண்டுவரக்கூடிய நெருக்கடிகளுக்கு வழிதேடுவதாலும் இனிவரும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கேற்ற வழிகளைக் குறைப்பதாலுமே இது சாத்தியமாகிறது.

பூர்ஷ்வாவர்க்கம் நிலப்பிரபுத்வத்தை எவ் ஆயுதங்களால் வெட்டி வீழ்த்தியதோ அவ் ஆயுதங்கள் அவர்களுக்கு எதிராகத் திருப்பப் பட்டிருக்கின்றன.

பூர்ஷுவாவர்க்கம் தனக்கு மரணத்தை விளைவிக்கும் ஆயுதங்களை உண்டாக்கினதுமல்லாமல், அவ்வாயுதங்களை உபயோகப்படுத்தும் தற்காலத் தொழிலாளியையும் புரோலீட்டேரியட்டையும் - சிர்ஷ்டித்திருக்கிறது.

பூர்ஷுவா வர்க்கம் - மூலதனம் - விருத்தியாகும் விகிதத்தில் புரோலீட்டேரியட்டும் விருத்தியாகிறது. இப் புரோலீட்டேரியட்வர்க்கம் வேலை கிடைக்கும் வரைக்கும் மாத்திரம் ஜீவிக்கக்கூடிய தொழிலாளர் வர்க்கமாகவும், தங்களுடைய தொழில், மூலதனத்தை விர்த்தி செய்யும் வரைக்குமே உழைப்பைப் பெறும் வர்க்கமாகவும் இருக்கின்றது. இக் கூலியுழைப்பாளிகள் தங்களைத் தனிப்பட்ட முறையில் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, மற்ற வியாபாரப் பொருள்களைப் போல ஆகின்றார்கள். இதனால் வியாபாரப் போட்டியினால் எற்படும் மாற்றங்களுக்கும் மார்க்கெட்டில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் எல்லாவற்றிற்கும் தொழிலாளிகள் ஆளாகின்றனர்.

பெருவாரியான அளவில் யந்திரசாதனத்தை உபயோகப் படுத்தப்படுவதாலும், தொழிற்பிரிவினாலும், புரோலீட்டேரியட்ருடைய வேலை தனிப்பட்ட தன்மையை எல்லாமிழந்து, தொழிலாளி தன் தொழிலில் வைத்திருக்கக்கூடிய கவர்ச்சியை இழந்து விழுகிறான். அவன் யந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறான்; அவனுக்கு வேண்டியது மிகவும் இலகுவானதும் ஒரே தன்மையானதும் இலகுவிற் பெறக்கூடியதமான ஆற்றலுமே. ஆகையால் ஒரு தொழிலாளியை உற்பத்தி செய்யும் செலவு ஏறக்குறைய தொழிலாளி உயிருடன் வாழ்வதற்குத் தேவையான பொருள்களைப் பெறுதற்கும் தனது வர்க்கத்தாரைப் பெருக்குவதற்கும் ஏற்படும் செலவு மாத்திமே. ஆனால், ஒரு பொருளின் விலையோ, தொழிற்சக்தியின் விலையோ அதை உற்பத்தி செய்யும் செலவிற்குச் சமானமாகும். ஆகையால் வேலையிற் பற்றின்மை கூடும் சம்பளமும் குறையும் யந்திர சாதன உபயோகமும் வேலையிற் பிரிவினைகளும் அதிகப்படும் விகிதத்தில் உழைப்பின் கஷ்டமும் அதிகப்படுகிறது. மேலும் வேலைசெய்யும் நேரத்தைக் கூட்டுதலாலோ, குறித்த நேரத்தில் கூடிய வேலையைச் செய்வித்தலாலோ, யந்திர சாதனத்தின் வேகத்தை அதிகரித்தலாலோ வேலைக் கஷ்டம் அதிகரிக்கிறது. தற்கால யந்திர சாதனம் குடும்ப எஜமானுடைய சிறு கைத்தொழில் பட்டடையைத் தொழில் முதலாளியுடைய பெரிய யந்திரத் தொழிற்சாலையாக மாற்றிவிட்டது. தொழிலாளர் குழாம்கள் தொழிற்சாலைக்குள் திரட்டப்பட்டு ஒருசேனையைப்போல் அமைக்கப்பட்டிருக்கின்றனர். தொழிற்சேனை யிலுள்ள சாதாரணப் போர்வீரராக, அவர்கள் ஆபீசர்கள், சார்ஜண்டுகள் முதலியவர்கள் அமைந்த ஒருதிறம் கட்சி அரணின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய அடிமைகள் மாத்திரமல்லாமல் பூர்ஷுவா அரசாங்கத்தின் அடிமைகளாகவுமிருக்கிறார்கள். ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் யந்திரத்தாலும் மேற்பார்வையாளராலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தனிப்பட்ட பூர்ஷுவா முதலாளிகளாலும் அவர்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள். இந்த கொடுங்கோல் ஆதிக்கம், லாபமே தன்னுடைய குறிக்கோள் என்று எவ்வளவு பகிரக்கப் படுத்துகிறதோ அவ்வளவுக்கு அவ்வாதிக்கம் அற்பமும் வெறுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

கையால் செய்யப்படும் வேலையில் உபயோகிக்கப்படும் சரீர பலமும் சாமர்த்தியமும் எவ்வளவு குறைவாகத் தேவைப்படுகிறதோ, அதாவது தற்கால யந்திரசாதன முறை எவ்வளவுக்கு அபிவிருத்தியடைகிறதோ, அவ்வளவிற்கு ஆண் தொழிலாளியின் இடம் பெண் தொழிலாளியால் எடுக்கப்படுகிறது. இனிமேல் தொழிலாளவர்க்கத்தில் வயது வித்தியாசங்கள், ஆண் பெண் வேறுபாடுகள், சமூக தேவைகளுக்குக் கருத்துள்ளதாக இருக்கமுடியாது. எல்லாரும் வேலையின் ஆயுதங்களாகவும், வயது வேறுபாடு, ஆண் பெண் வேறுபாடு இவைகளுக்கு ஏற்ற விலையுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள்.

தொழிலாளிமீது சுமத்தப்படும் தொழில் முதலாளியின் சுரண்டல், அத்தொழிலாளி தனது சம்பளத்தைப்பெறும் பொழுது முடிந்ததும், அத்தொழிலாளி பூர்ஷுவாவர்க்கத்தின் மற்றைய பகுதிகளாகிய நிலச்சொந்தக்காரன், கடைக்காரன், லேவாதேவிக்காரன் முதலியவர்களால் சுரண்டப்படுகிறான்,

மத்திய வகுப்பாரின் கீழ்ப்படியிலுள்ள – அதாவது சிறு கைத்தொழிற் காரர்கள், சிறு வியாபாரிகள், பொதுகைத்தொழில் செய்து இளைப்பாறியவர்கள், எல்லா விவசாயிகளும் சிறுகைத்தொழில் செய்பவர்களும் -மெல்ல மெல்ல புரோலீட்டேரியட்டாகத் தாழ்ந்துவருகின்றனர். இதற்குக்காரணம் இவர்களுடைய மூலதனம் தற்கால யந்திரசாதன உற்பத்திமுறையைக் கைக்கொள்ளப் போதாததும், பெரிய முதலாளிகளுடைய போட்டியினால் நசுக்கப்படுவதுமே. மேலும் -புதுஉற்பத்தி முறைகளால் அவர்களுடைய தொழிற்சாமர்த்தியம் பிரயோசனமற்றதாய் விடுதலும் மற்றோர் காரணமாகும். இப்படியே புரோலீட்டேரியட் வர்க்கம் சகலவகுப்புகளிலுமிருந்து திரட்டப்படுகிறது.

புரோலீட்டேரியட் வர்க்கம் அனேக வளர்ச்சிக் கட்டக்களுக்கூடாகச் செல்கின்றது. அதன் பிறப்புடன் பூர்ஷ்வாவர்க்கத்துடன் போராட்டமும் ஆரம்பிக்கிறது. முதலில் தனிப்பட்ட தொழிலாளர்களாலும், பின் ஒரு இடத்திலுள்ள ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டவர்களாலும் தங்களைச் சுரண்டும் தனிப்பட்ட பூர்ஷுவாவிற்கு எதிராக இப்போராட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் பூர்ஷ்வா உற்பத்தி சூழ் நிலைக்கு எதிராக வல்லாமல், உற்பத்தி சாதனங்களின் மேலேயே தங்கள் தாக்குதல்களை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தொழிலுடன் போட்டி போடும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான சரக்குகளை அழித்தும், யந்திரங்களை உடைத்தெறிந்தும், தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கியும், வலோற்காரமாக மத்திய காலத் தொழிலாளி பெற்றிருந்து இப்போ அழிந்த ஸ்திதியை மீளவும் ஸ்தாபிக்க முயற்சிக்கிறார்கள்.

இக் கட்டத்தில் தொழிலாளர் தேசமுழுவதும் சிதறியும், அவர்களுக்குள் ஏற்படும் போட்டியால் துண்டுதுண்டாகப் பிரிக்கப்பட்டுமிருக்கிறார்கள். எங்கேயாவது அவர்கள் ஒன்று திரண்டு தாக்கும் சக்தியுள்ள ஒரு கூட்டங்களாக விருக்கிறார்களென்றால் அது அவர்களுடையஊக்கமான சேர்க்கையல்ல; இதற்குக் காரணம் பூர்ஷுவா வர்க்கத்தின் ஐக்கியமும், அவர்கள் தம் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக புரோலிட்டேரியட் வர்க்கத்தை இன்னமும் முற்செலுத்தக் கூடிய நிலையிலிருந்து கொண்டு புரோலிட்டேரியட்டை இயக்குவதுமே. இக்காலத்தில் அவர்கள் தங்கள் பகைவர்களுடன் சண்டைபோடாமல் தங்கள் பகைவர்களின் பகைவர்களான எஞ்சியிருக்கும் எதேச்சாதிகார மன்னர்களையும், நிலப்பிரபுக்களையும், யந்திரத் தொழிலில் ஈடுபடாத மற்ற பூர்ஷுவாக்களையும், எதிர்த்துச் சண்டைபோடுகிறார்கள். இதனால் சரித்திர சம்பந்தமான வளர்ச்சி முழுவதும் பூர்ஷுவாக்களுடைய கையில் அடங்கியிருக்கின்றது. ஆதலால், இயக்கத்தால் ஏற்பட்ட ஒவ்வொரு வெற்றியும் பூர்ஷ்வாக்களின் வெற்றியே.

யந்திர அபிவிர்த்தியுடன் புரோலிட்டேரியட் வர்க்கத்தின் தொகை பெருகியது மாத்திரமல்லாமல், அது கூடியதொகைகளாக ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டுத் தன் பெலனை அதிகரித்துத் தன் பெலனையும் உணருகின்றது. யந்திர சாதனம் தொழிற்பாகுபாடுகளை அழித்துக் கூலியை எங்கும் ஒரே குறைந்த அளவிற்குக் குறைத்து, கூலியைச் சமமாக- கூலியில் ஏற்றம் தாழ்வு இல்லாமல் - கொண்டுவரும் வேகத்தில் புரோலிட்டேரியட்டிலுள்ள வெவ்வேறு வாழ்க்கை முறைகளும் அபிலாஷைகளும் வரவரச் சமநிலையடைந்து கொண்டிருக்கின்றன. பூர்ஷுவாக்களுக்குள் வளரும் போட்டியும், அதனால் ஏற்படும் வியாபார நெருக்கடிகளும், தொழிலாளருடைய கூலியை இன்னும் நிலையற்றதாக்குகிறது. இடைவிடா யந்திர அபிவிர்த்தி மிக வேகமாக வளர்ச்சியுறுவதாலும், தொழிலாளருடைய ஜீவியம் வரவர அந்தரமாகின்றது. தனிப்பட்ட தொழிலாளிகளுக்கும் தனிப்பட்ட பூர்ஷ்வாக்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டமானது, வரவர இரு வர்க்கங்களுக்குமிடையே நடக்கும் போராட்டத் தன்மையை அடைகின்றன. ஆகையால், தொழிலாளர் பூர்ஷுவாக்களுக்கு எதிராக ஸ்தாபன ரீதியாகத் தொழிற் சங்கங்களை அமைக்கின்றனர். அவர்கள் கூலி விகிதத்தை கூட்டுவதற்கு ஒருங்குதிரளுகின்றனர். அடிக்கடி ஏற்படும் புரட்சிக்கு ஏற்கனவே தயார்ப்படுத்துவதற்காக நிலையான சங்கங்களை அமைக்கின்றனர். இப்போராட்டமானது சிற்சில இடங்களில் கலகங்களாகக் கிளம்புகின்றது.

சில சமயங்களில் தொழிலாளர் வெற்றியும் அடைகின்றனர். ஆனால் இவ் வெற்றி தற்காலிகமானதே. அவர்களுடைய போராட்டத்தின் உண்மைப் பலன், அப்போ கிடைக்கும் சிற வெற்றிகளல்ல; இப்போராட்டங்களால் வளர்ந்து வரும் தொழிலாளிகளின் ஐக்கியமே உண்மைப் பலன். தற்கால யந்திரசாதனம் ஏற்படுத்திய முன்னேற்றமான போக்குவரத்து சாதனங்களால், பல்வேறு இடன்களிலுள்ள தொழிலாளர், ஒருவரோடொருவர் தொடர்பு வைத்து இவ் வேற்றுமையை அதிகரிக்கின்றனர். ஒரே தன்மை வாய்ந்த, பல்வேறு பகுதிகளில் கடந்த போராட்டக்களை ஒன்றுபடுத்தி வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஓர் தேசீயப்போராட்டமாக மாற்றுவதற்கு இத் தொடர்பே தேவையாக விருந்தது. ஆனால் ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமேயாகும். புரோலிட்டேரியட்டுகள் தங்களிடையே ஐக்கியத்தை ரயில்வேக்களின் உதவியால் சில வருஷங்களுக்குள் பெற்றார்கள். ஆனால் இதே ஐக்கியத்தை மத்திய காலத்திலுள்ள பட்டண வியாபாரிகள் அக்காலத்திலுள்ள தங்களது மோசமான போக்குவரத்துச் சாதனங்களைக் கொண்டு பல நூற்றாண்டுகளில் அடைந்தார்கள். புரோலிட்டேரியட்டுக்களை ஒரு வர்க்கமாக ஸ்தாபித்தலும், இதன் பலனாக அவர்களை ஒரு அரசியல் கட்சியாக அமைப்பதும் தொழிலாளருக்குள் ஏற்படும் போட்டியால் அடிக்கடி கவிழ்க்கப்படுகின்றது. அப்படிக் கவிழ்க்கப்படும் ஒவ்வொரு தடவையும் முன்னிருந்ததை விட உறுதியுள்ளதாக அதுவும், பலமுள்ளதாகவும், இவ்வர்க்கம்கிளம்புகிறது. பூர்ஷாவர வர்க்கத்தாருக்குள் உள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளருடைய குறிக்கப்பட்ட நலன்களைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும்படி இவ் வர்க்கம் நிர்ப்பந்திக்கின்றது. இவ்வழியால் தான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலை மசோதா அங்கீகரிக்கப் பட்டது.

மேலும் பழைய சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் மோதல்கள் புரோலிட்டேரியட்டின் வளர்ச்சிக்கு அனேக வழிகளில் உதவிபுரிகின்றன. பூர்ஷூவா வர்க்கம் தான் எப்பொழுதும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைக் காண்கின்றது. முதலில் பிரபு வர்க்கத்துடனும் பின்பு தன் வர்க்கத்தாருடன் யந்திரசாதன உற்பத்தி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக விருக்கும் பகுதிகளுடனும், எப்பொழுதும் மற்றத் தேச பூர்ஷுவாக்களுடனும் போராடுகின்றது. இப்போராட்டம் எல்லாவற்றிலும் பூர்ஷுவா வர்க்கம் புரோலிட்டேரியட்டிடம் உதவிகோரி அதையும் அரசியல் அரங்கிற்கு இழுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பூர்ஷுவா வர்க்கமே புரோலிட்டேரியட்டுக்கு அரசியல் கல்வியிலும், பொதுக் கல்வியிலும், ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது. அதாவது தன்னை எதிர்த்துப் போராடுவதற்குரிய ஆயுதத்தைப் புரோலிட்டேரியட்டிடம் பூர்ஷூவாவர்க்கம் கொடுக்கிறது.

மேலும் யந்திரசாகன உற்பத்தியால் அதிகார வர்க்கங்களின் பெரும் பகுதிகளிற் சில புரோலிட்டேரியட் வர்க்கத்துக்குள் வீழ்த்தப்படுகின்றன என்பதை யாம் அறிந்தோம். மேலும் இந்நிலையை யடையாத வேறு சிலபகுதிகளின் வாழ்க்கைநிலை நிலையற்ற தாக்கப்படுகின்ற தென்பதையும் அறிதோம். இவர்களும் புரோலிட்டேரியட்டுக்குப் புதிய அறிவுப் பிரகாசத்தையும் முன்னேறக்கூடிய சக்தியையும் கொடுக்கின்றன.

கடைசியாக வர்க்கப்போராட்டம் உச்சிக் கட்டத்தை யடையும்போது அதிகார வர்க்கத்திடையேயும் பழைய சமுதாய முழுவதிலும் ஏற்படுகின்ற சிதைவு மறைக்க முடியாத விதமாக வலுக்கிறது. அப்பொழுது அதிகாரவர்க்கத்தின் ஓர் சிறிய பகுதி தனது வர்க்கத்தை விட்டுப்பிரிந்து, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிரதான பொறுப்பைப் பெற்ற புரட்சிவாத வர்க்கத்தைச் சேர்கின்றது. முற்காலத்தில் பிரபுவர்க்கத்தின் ஒரு பகுதி பூர்ஷுவா வர்க்கத்துடன் போய்ச் சேர்ந்த மாதிரி இப்போ பூர்ஷுவா வர்க்கத்தின் ஒரு பகுதியும், குறிப்பாக பூர்ஷுவா தத்துவப் பிரசாரகருள் ஒரு பகுதியும் (அதாவது சரித்திர வளர்ச்சி முழுவதையும் தத்துவரீதியில் விளக்கக்கூடிய அளவிற்கு வளர்சி பெற்றவர்கள், புரோலிட்டேரியட்டில் வந்து சேருகின்றது.

பூர்ஷுவா வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் வர்க்கங்களில் புரோலிட்டேரியட் வர்க்கமொன்றே உண்மையில் புரட்சிகாமானது. மற்றவர்கள் எல்லாம் தற்கால யந்திரத்தின் முன்னிற்கமுடியாமல் உழுத்து மக்கி மடிந்து போகின்றன. ஆனால் புரோலிட்டேரியட் யத்திர சாதனத்தின் விஷேடித்ததும் இன்றியமையாததுமான சிருஷ்டி.

மத்திய வகுப்பின் கீழ்ப்பகுதிகளாகிய சிறுகைத்தொழிற் காரனும், சிறுவியாபாரியும், பிரத்தியேகத் தேர்ச்சிபெற்ற தொழிலாளியும், விவசாயியும் பூர்ஷுவா வர்க்கத்தை எதிர்ப்பதற்குக் காரணம்: தாங்கள் மத்தியவகுப்பின் சிறுபகுதிகளாக விருப்பதைப் பாதுகாப்பதற்கே.

ஆகவே அவர்கள் புரட்சிகரமானவர்களல்லாது பிற்போக்கு மனப்பான்மை யுள்ளவர்களாகின்றனர்; அவர்கள் சரித்திரத்தின் போக்கைப் பின்னுக்கிழுப்பதால் பிற்போக்குவாதிகளுமாகின்றனர். தற்செயலாக அவர்கள் புரட்சிகரமாக விருக்கிறார்கள் என்றால் தாங்கள் புரோலிட்டேரியட்டாக மாறவிடுவோமோ என்ற பயத்தினால்தான். ஆகவே இவர்கள் தங்களது தற்கால நலன்களைப் பாதுகாக்காமல் தங்கள் வருங்கால நலன்களையே பாதுகாக்கின்றனர். புரோலிட்டேரியட்டுகளினுடன் சேர்ந்து நிற்பதற்காகத் தங்கள் நிலையை விட்டுவிடுகிறார்கள்.

பழைய சமுதாயத்தின் கீழ் படிகளிலிருந்து எழுந்து உத்வேக மற்றும் பழுதடைந்து கொண்டு போகும்கூட்டம் - அதாவது சமுதாயத்தின் குப்பைகூள மென்றும் அபாயகரமான வகுப்பென்றும் சொல்லப்படுபவர்கள் சிற்சில சமயங்களில் புரோலிட்டேரியட் புரட்சிக்குள் சேர்க்கப்படவும் கூடும்; இவர்களின் வாழ்க்கை முறையானது அவர்களிற் பெரும்பான்மையோரை பிற்போக்குவாதிகனின் சூழ்ச்சிக் கேதுவான கூலிகளாக்கின்றனர்.

புரோலிட்டேரியட்டின் சூழ்நிலையில் பழைய சமூகநிலைகளெல்லாம் அனேகமாகத் தாழ்த்தப் பட்டுவிட்டன. புரோலிட்டேரியட்டுக்குச் சொத்து ஒன்றும் கிடையாது. அவனுக்கும் அவனுடைய மனைவி மக்களுக்கும் உள்ள தொடர்பிற்கும், பூர்ஷுவா வர்க்கத்தாரிடையே நிலவும் குடும்பத் தொடர்புக்கும் யாதொரு ஒற்றுமையும் கிடையாது. நவீன யந்திரத்தொழில் - அதாவது தற்கால மூலதனத்திற்கு அடிமையான தொழில் இங்கிலாந்தைப் போலவே, பிராஞ்ச், அமெரிக்கா, ஜெர்மனி முதலிய நாடுகளிலும், தொழிலாளியிடமிருந்து தேசிய இயல்புகளை துளியளவுகூட வில்லாமல் உரித்தெறிந்து விட்டது. சட்டம் தர்மீகக் கோட்பாடு சமயம் என்பனவெல்லாம் பூர்ஷுவா வர்க்கத்தினுடைய அர்த்தமற்ற எண்ணங்களெனவும் அவைகளெல்லாம் பூர்ஷ்வா வர்க்கத்தின் நலன்களை மறைவில் வைக்கும் போர்வைகள் எனவும் தொழிலாளி கருதுகிறான்.

இதற்குமுன் அதிகாரத்திற்கு வந்த வர்க்கங்களெல்லாம், உற்பத்தியாகும் பொருட்களைத் தங்களுக்குச் சொந்தமாக்குவதற்குச் சார்பாகச் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தித் தாங்கள் ஏற்கனவே அடைந்த ஸ்திதியை அரண் செய்ய முயற்சித்தார்கள். தங்களுடைய ஊதியத்தைப் பெறுவதற்காகத் தாங்களே, முன்பு பின்பற்றிய முறையை அழித்தும் அதன் மூலம் முன்பு உள்ள சொத்துத் தேடும் முறைகள் எல்லாவற்றையும் அழித்தமே புரோலிட்டோரியட்டுகள் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளின் எஜமானர்களாக வரமுடியும். அவர்களுக்கு தங்களுடையதென்று சொல்லிப் பெறுவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒன்றுமில்லை. தனிப்பட்டவர்களுடைய சொத்துக்களுக்குத் தேவையான முன்னுள்ள பாதுகாப்புக்களை அழிப்பதே அவர்களுடைய கடமை.

முன் ஏற்பட்ட எல்லாச் சரித்திர பூர்வமான இயக்கங்களெல்லாம் சிறுபான்மையோருடைய இயக்கங்களாக அல்லது சிறுபான்மையோருடைய நலத்தைப் பாதுகாக்கும் இயக்கங்களாக விருந்தன. புரோலிட்டேரியட் இயக்கமாவது பெரும்பான்மையோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அப் பெரும்பான்மை யோரால் ஏற்படுத்தப்பட்ட தன் உணர்சியுள்ள சுயேச்சையான இயக்கம். மரபினாற் பெலமடைந்த சமூகத்தின் மேற்படையைத் தகர்க்காமல் இன்றைய சமுதாயத்தின் அடிப்படையினுள்ள புரோலிட்டேரியட் வர்க்கம் அசையவோ, தன்னை உயர்த்தவோ முடியாது.

புரோலிட்டேரியட் பூர்ஷுவாவுடன் நடத்தும் போராட்டமானது தொடக்கத்திற் தேசியப் போராட்டத்தின் ரூபத்தை எடுக்காவிட்டாலும் அதன் தன்மையைப் பெறுகிறது. ஒவ்வொரு தேசப் புரோலீட்டேரியட்டும் முதலில் தங்கள் தங்கள் பூர்ஷுவாக்களுடனேயே தங்கள் போராட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

தற்போதைய சமூகத்தினுள் ஓர் அளவிற்கு மறைமுகமாக நடக்கும் போராட்டம் வளர்கின்றதென்றும், அப்போராட்டம் பகிரங்கப் புரட்சியாக மாறவேண்டிய நிலை ஏற்படுகின்றதென்றும், அந்நிலையில் பூர்ஷுவா வர்க்கத்தின் அதிகாரம் பலாத்காரமாக வீழ்த்தப்படுவதால் புரோலிட்டேரியட்டின் ஆதிக்கத்திற்கு அஸ்திவாரமிடப் படுகின்றதென்றும் புரோலிட்டேரியட்டின் வளர்ச்சியின் பிரதான கட்டக்களை விவரிக்கும்போது விளக்கினோம்.

நாங்கள் இதுவரையும் பரிசீலனை செய்ததின்படி, இதுவரையிலுமுள்ள ஒவ்வொரு சமூகங்களின் அமைப்பும் சுரண்டுவோர் சுரண்டப்படுவோர் என்னும் இருசாராருக்கும் இடையே உள்ள பகையின் அஸ்திவாரத்தின் மேலேயே கட்டப்பட்டிருந்தனவென்பதை அறிந்தோம். ஆனால் ஒரு வர்க்கத்தைச் சுரண்டுவதற்கு அவ்வடிமைத்தனத்திலாவது அது நிலைத் திருப்பதற்குச் சாதகமாகச் சில அம்சங்கள் இருக்கவேண்டும். பண்ணை அடிமை முறையின் கீழிருந்த அடிமை, தன்னை கம்யூனில் ஒருவனாக உயர்த்திக்கொண்டது போல, நிலப் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்கு அமைந்த வியாபாரி பூர்ஷுவாவாக விர்த்தியடைந்தான். ஆனால் இதற்கு மாறாகத் தற்காலத் தொழிலாளி, தற்கால யந்திரத் தொழில் அபிவிர்த்தியுடன் மேல் எழாமல் தன்வர்க்கத்திற்குள்ள நிலையிலிருந்தும் கீழே தாழ்ந்து கொண்டே யிருக்கிறான். அவன் ஆண்டியாகி விடுகிறான். ஜனத்தொகையும் செல்வமும் பெருகுவதிலும் பார்க்க வறுமை வேகமாகப் பெருகுகின்றது. இந் நிலையில் பூர்ஷுவா வர்க்கம், சமுதாயத்தில் அதிகார வர்க்கமாக விருக்கவும், தான் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கை முறைகளைச் சமூகத்தின் மேல் சட்டமாக்கவும், இனி தகுதியற்றதாகிறது. தனது அடிமைக்கு அவனது அடிமை நிலையிலாவது வாழ்வதற்குச் சந்தர்ப்பமளிக்கத் தகுதியற்ற படியாலும் அவனின் உழைப்பாற் தனது உணவைப் பெறாது அவனுக்கு உணவு ஊட்ட வேண்டிய நிலைக்கு அவனை வீழாது தடுக்க முடியாததாலும், பூர்ஷுவா வர்க்கம் அதிகாரம் செலுத்தத் தகுதியற்றது. சமூகம் இனிமேல் ஒரு பொழுதம் பூர்ஷ்வா வர்க்கத்தின் கீழ் இயங்க - அதாவது அதனுடைய வாழ்க்கை சமூகத்துடன் இணங்க முடியாது. பூர்ஷுவாவர்க்கம் இருப்பதற்கும் அதிகாரம் செலுத்துவதற்கும் மூலகாரணமாயிருப்பது மூலதன சிருஷ்டியும் பெருக்கமுமே. மூல தன அபிவிர்த்திக்குச் சாதகமாயுள்ளது கூலி உழைப்பே. தொழிலாளரிடையேயுள்ள போட்டியிலே கூலி உழைப்பு முற்றாகத் தங்கியிருக்கிறது. பூர்ஷுவா வர்க்கம் இன்றியமையாது வளர்க்கும் தொழில் அபிவிர்த்தியே தொழிலாளருக்குள் போட்டியினால் ஏற்பட்ட தனிமையை நீக்கி, தொடர்பால் ஏற்படும் புரட்சிகரமான சேர்க்கையை ஏற்படுத்துகிறது. ஆகையால், தற்கால யந்திரத்தொழில் அபிவிர்த்தி, பூர்ஷுவா வர்க்கத்தின் பொருள் உற்பத்தி சொத்தாக்கும் முறைகளின் அஸ்திவாரத்தை அவ் வர்க்கத்தின் கீழிருந்து அகற்றிவிடுகிறது. ஆகையால் எல்லாவற்றிற்கும் மேலாக பூர்ஷுவா வர்க்கம் உற்பத்தியாக்குவது என்னவென்றால் தன் ஈமக் கடன்களைச் செய்பவர்களை என்றேசொல்ல வேண்டும். ஆகையால் பூர்ஷ்வாவர்க்கத்தின் வீழ்ச்சியும் புரோலிட்டேரியட்டின் வெற்றியும் ஒரே அளவிற்குத் தவிர்க்க முடியாதனவே.

II

புரோலிட்டேரியட்டுகளும் கம்யூனிஸ்டுகளும்



புரோலிட்டேரியட் அனைத்துடனும் கம்யூனிஸ்டுகள் என்ன சம்பந்தத்துடனிருக்கிறார்கள்?

மற்றும் தொழிலாள வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு பிரத்தியேகமான ஒரு கட்சியை கம்யூனிஸ்டுகள் ஸ்தாபிக்கவில்லை.

புரோலிட்டேரியட் முழுவதற்கும் பொதுவாக உள்ள நலன்களைத் தவிர கம்யூனிஸ்டுகளுக்கெனப் பிரத்தியேகமான நலன்கள் கிடையா.

புரோவிட்டேரியட் இயக்கத்தை உருவம் கொடுத்து வழர்ப்பதற்காகத் தங்களுக்கே பிரத்தியேகமான கொள்கைகளை ஸ்தாபிக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் மற்ற எல்லாத் தொழிலாளி வர்க்கக்கட்சிகள் எல்லாவற்றிலுமிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகின்றனர். முதலாவதாக வெவ்வேறு தேசங்களில் புரோலிட்டேரியட்டுகள் நடத்தும் போராட்டங்களில் தேசியத் தன்மையால் பாதிக்கப்படாது, புபோலிட்டேரியட் வர்க்கம் முழுவதற்கும் பொதுவாக நலன்களை கம்யூனிஸ்டுகள் சுட்டிக்காட்டி அவைகளுக்கு முதல் ஸ்தானம் கொடுக்கின்றனர். இரண்டாவதாகத் தொழிலாளிவர்க்கம் பூர்ஷுவா வர்க்கத்துடன் நடத்தும் போராட்டத்தின் பல கட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் அவ்வியக்கம் முழுவதற்குமுரிய நலன்களையே ஆதரிக்கின்றனர்.

ஆகையால் கிரியாம்சமுறையில் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு தேசத்திலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் முன்னணியில் மனோதிடத்துடன் நிற்கும் பகுதியாகவும், தொழிலாளி வர்க்கத்தின் மற்றெல்லாப் பகுதிகளையும் முற்செலுத்தும் பகுதிகளாகவுமிருக்கிறார்கள். அதோடு தத்துவ சம்பந்தமாகப் புரோலிட்டேரியட்டின் இயக்கத்தின் முன்னேற்ற வழி, சூழ்நிலை, இறுதியாகக் கிடைக்கக்கூடிய பலன்கள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கக்கூடிய ஆற்றல் புசோலிட்டேரியட்டின் பெரும் பகுதியிலும் பார்க்கப் பெற்றிருக்கிறார்கள்.

மற்றெல்லாப் புரோலிட்டேரியட் கட்சிகளைப் போலக் கம்யூனிஸ்டுகளுடைய உடனடியான நோக்கம் புரோலிட்டேரியட்டை ஒரு வர்க்கமாக உருப்படுத்துவது. பூர்ஷுவா அதிகாரத்தைக் கவிழ்ப்பது, புரோலிட்டேரியட் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவைகளே.

கம்யூனிஸ்டுகளுடைய சித்தாந்த முடிபுகள் எவ்வழியிலாவது உலகம் முழுவதையும் திருத்தியமைப்போமெனப் பறைசாற்றும் எந்தப் பேர் வழியாலும் கண்டு பிடிக்கப்பட்ட எண்ணங்கள் கொள்கைகளிலிருந்து பிறந்தனவல்ல.

எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் சரித்திர வளர்ச்சியிலிருந்தும், இப்போ நடக்கும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும் எழுகின்ற உண்மையான தொடர்புகளைப் பொதுவான முறையில் விளக்குகின்றார்கள், அமுலிலிருக்கும் சொத்துத் தொடர்புகளை அழித்தல் கம்யூனிஸத்தின் விசேஷலக்ஷணமல்ல.

சரித்திர நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் பலனாக எல்லாச் சொத்துத் தொடர்புகளும் காலத்திற்குக் காலம் சரித்திரப் பிரசித்தியான மாற்றத்தை அடைந்திருக்கின்றன.

உதாரணமாக பிரஞ்ச் புரட்சி நிலப்பிரபுத்துவ சொத்தை அழித்துப் பூர்ஷுவா சொத்தை ஸ்தாபித்தது.

கம்யூனிஸத்துடைய தனிப்பெரும் லக்ஷணம் பொதுவாகச் சொத்து எனப்படுவதை அழிப்பதல்ல. ஆனால் பூர்ஷ்வாக்களின் சொத்துரிமையை அழிப்பதே. ஆனால் அனேகரை ஒரு சிலர் சுரண்டுதலின் மீதும், வர்க்க விரோதங்களின் மீதும் அமைக்கப்பட்ட பொருளுற்பத்தி சொத்தாக்கும் முறையின் இறுதியான பரிபூரணமான ரூபமே தற்கால பூர்ஷுவா தனி உடமைச் சொத்து.

இந்தக் கருத்தின்படி கம்யூனிஸ்டுகளின் கொள்கை ஒரு வசனத்திலேயே சுருக்கப்படலாம்: தனி உடமைச் சொத்தை அழிப்பதே.

கம்யூனிஸ்டுகளான நாங்கள் தனிப்பட்டவர் தன்முயற்சியின் பயனால் கிடைக்கும் பொருளைத் தனது சொத்தாக்கும் உரிமையை அழிக்க விரும்புகிறோமென்று குற்றம் சாட்டப்படுகிறோம். அதோடு இத்தகைய சொத்து தனிப்பட்டவரின் சுதந்திரம், தனிப்பட்டவரின் முயற்சி, சுதந்திரம் ஆகியவற்றின் அஸ்திவாரமென்றும் கூறப்படுகிறது.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பொருளென்று சொல்கிறீர்களே! இப்படிச் சொல்லும்போது சிறுகைத்தொழில், சிறு வியாபாரம் செய்தோருடைய சொத்தை – அதாவது சொத்தென்பது பூர்ஷுவாச் சொத்தாக முன்பு பெற்றிருந்த ரூபத்தை – குறிக்கிறீர்களா? இவ்வித சொத்தை இப்போ அழிக்கத் தேவையில்லை. யந்திரசாதன உற்பத்திமுறையின் வளர்ச்சி அநேகமாக இதை அழித்தும் விட்டது: ஒவ்வொருநாளும் அழித்தும் கொண்டுவருகிறது.

அல்லது நீங்கள் தற்கால பூர்ஷ்வா தனிஉடமைச் சொத்தையா கருதுகிறீர்கள்?

ஆனால் கூலி உழைப்பு, தொழிலாளிக்காக ஏதாவது சொத்தை உற்பத்திசெய்கின்றதா? இல்லைவே இல்லை; அது மூலதனத்தையே உற்பத்தி பண்ணுகிறது. இவ்வித சொத்துரிமை கூலி உழைப்பைச் சுரண்டுந் தன்மையையும், மேலும் சுரண்டுவதற்காக புதுத் தொழிலாளரை சிருஷ்டியாது வளரமுடியாத தன்மையையும் பெற்றிருக்கின்றது. இன்றைய ரூபத்தில் உள்ள சொத்து மூலதனத்துக்கும் கூலி உழைப்பிற்கும் இடையேயுள்ள விரோதத்தின் மீது அமைக்கப்பட்டதே. இவ் விரோதத்தின் இரு அம்சங்களையும் கவனிப்போம்.

முதலாளியாயிருப்பதற்கு பொருள் உற்பத்தியில் தனிப்பட்டவர் சம்பந்தமாகவுள்ள அந்தஸ்து மாத்திரமல்லாமல் சமூக அந்தஸ்தும் இருக்கவேண்டும். மூலதனம் அனேகரின் சிருஷ்டியே; அது அநேக அங்கத்தினரின் ஒன்றுபட்ட செய்கையால் மாத்திரம் - இல்லை இறுதிக்கட்டத்தில் சமூகத்தின் எல்லா அங்கத்தினருடைய ஒன்றுபட்ட செய்கையால் மாத்திரமே - இயக்கப்பட முடியும்.

ஆதலால் மூலதனம் தனிப்பட்டவருடைய சக்தியல்ல: அது ஓர் சமூக சக்தியே.

ஆகையால் மூலதனம் பொதுச் சொத்தாக மாற்றப்படும் போது - அதாவது சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களுடைய சொத்தாக மாற்றப்படும் போது - தனிப்பட்டவரின் சொத்து சமூகத்தின் சொத்தாக்கப் படுவதில்லை. அச்சொத்து சமூகத்தில் பெற்றிருந்த தன்மையே மாற்றப்படுகின்றது. ஓர் வர்க்கத்தின் சொத்தாகவிருந்த அது வர்க்கவியல்பை இழக்கிறது.

கூலி உழைப்பை இனி ஆராய்வோம்.

தொழிலாளி, தொழிலாளியாகவே சீவிப்பதற்கு இன்றியமையாது தேவையான வாழ்க்கை வசதிகளைக் கொடுக்கும் குறைந்த கூலியே கூலி உழைப்பின் சராசரி விலையாகிறது. ஆகையால் கூலி உழைப்பாளி தன்னுடைய கூலியின் மூலம் தனதாக்குவது, அவனுடைய சீவியத்தை ஒருவாறு இழுத்துக் கொள்ளவும் தன்னைப் போன்ற உழைப்பாளிகளை உற்பத்தி செய்வதற்குமே போதுமானது. கூலியின் பயனை ஒருவர் இவ்விதம் தனதாக்கும் முறையை அழிக்க நாங்கள் ஒருபோதும் எண்ணவில்லை. ஏனெனில் இம்முறை மற்றவர்களின் உழைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய எவ்வித மிகுதியையும் கொடுக்காது தொழிலாளியின் வாழ்வை ஆதரிக்கவும் தன்னைப் போன்ற தொழிலாளிகளோ உற்பத்தி செய்யவுமே சாதகமாகின்றது. மூலதனத்தை அதிகரிப்பதற்கு மாத்திரம் தொழிலாளி வாழ்வது, ஆளும் வர்க்கத்தின் நலன்தேவைப்படும்வரை மாத்திரம் தொழிலாளியை ஜீவிக்க விடுதல், ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ள இச் சொத்தாக்கும் முறையின் பாழான இயல்பையே வேரோடு அழிக்க விரும்புகிறோம்.

பூர்ஷ்வா சமுதாயத்தில், உயிர் உள்ள தொழிலாளிசேர்த்து வைக்கப்பட்ட தொழிற்சக்தியை அதிகரிக்க ஏதுவாக மாத்திரம் இருக்கிறான். கம்யூனிஸ்ட் சமுதாயத்திலோ சேர்த்து வைக்கப்பட்ட தொழிற்சக்தி தொழிலாளியின் வாழ்க்கையை விசாலிக்கவும், செல்வாக்குறச் செய்யவும் உயர்த்தவும் சாதகமான ஏதுவாகவே யிருக்கிறது.

ஆகையால் பூர்ஷ்வா சமூகத்தில் இறந்தகாலம் தற்காலத்தின் போக்கை நிர்ணயிக்கும் வலிமையுடையதாகிறது. கம்யூனிஸ்ட் சமுதாயத்தில் தற்காலம் இறந்த காலத்திலும் பார்க்க வலிமையுள்ளதாகிறது. பூர்ஷுவா சமூகத்தில் மூலதனம் தழைகளற்றுத் தனித் தன்மை பெற்றவர் உயிர் உள்ள ஒருவன் தனித்தன்மை இழந்து சுதந்தரமற்றவனாகிறான்.

இவ்வித நிலையை யழிப்பதையே பூர்ஷ்வா வர்க்கம் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் அழிப்பதாகக் கூறுகின்றனர். அது சரியானதே. பூர்ஷுவாவினுடைய தனித்தன்மையையும், சுயா தீனத்தையும், சுதந்திரத்தையும் அழிப்பதே திடமான நோக்கமாகின்றது.

தற்கால பூர்ஷுலா பொருள் உற்பத்தி நிலையில், தங்குதடையற்ற வியாபாரமே - அதாவது கட்டுப்பாடின்றிக் கொள்முதல் விற்பனை செய்தலே - சுதந்திரமெனக் கருதப்படுகின்றது.

ஆனால் கொள்முதலும் விற்பனையும் மறைந்தால் அத்துடன் தங்கு தடையற்ற கொள்முதலும் விற்பனையும் மறைந்துவிடும். தங்கு தடையற்ற கொள்முதல் விற்பனை ஆகியவற்றைப்பற்றி எங்கள் பூர்ஷ்வாக்கள் பேசும் பேச்சுக்களும், சுதந்தர மென்பதைப் பற்றிப் பொதுவாக இவர்கள் பேச்சும் இவர்களுடைய ஏனைய ”வீரப்பேச்சுக்களும்" ஓர் சந்தர்ப்பத்திலேயே ஏதாகிலும் ஓர் அர்த்தத்தைப் பெறமுடியும். அதாவது மத்திய காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொள்முதல் விற்பனை ஆகியவற்றுடனும், அக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிகளுடனும் சீர்தூக்கிப் பார்க்கப்படும் போதே இப் பேச்சுக்களெல்லாம் அர்த்தம் பெற முடியும். ஆனால் (கம்யூனிஸ்ட் சமுதாயத்தால் அழிக்கப்படும்.) கொள்முதல், விற்பனை பூர்ஷ்வா பொருள் உற்பத்தியின் இயல்பு ஆகியவற்றை அழித்து முடித்த கம்யூனிஸ்ட் சமுதாயத்துடனும், பூர்ஷூவா வர்க்கத்தையே அழித்து முடித்த சமுதாய நிலையுடனும் சீர்தூக்கிப் பார்க்கும்போது இப் பேச்சுக்கள் அர்த்தமற்றதாகின்றன. தனிவுடைமைச் சொத்தை அழிக்கும் எங்கள் எண்ணத்தைக் கண்டு நீங்கள் திகலடைந்து விடுகிறீர்கள். ஆனால் உங்களிடையே இப்போதிருக்கும் சமூகத்தில் பத்தில் ஒன்பது வீதம் உள்ள ஜனத்தொகையினரைப் பொறுத்தவரையிற் சொத்து எற்கனவே பறிக்கப் பட்டு விட்டது. சமூகத்திலுள்ள இவ்வொன்பது வீதத்தினர் கையிலும் இச்சொத்து இல்லாததுவே ஓர் சிலரின் கையில் இச் சொத்திருப்பதற்குப் பூரணகாரணம். ஆகவே சமுதாயத்தின் மாபெரும் பகுதியினரிடம் ஒருவித சொத்துமில்லாததையே இன்றியமையா அம்சமாகக்கொண்ட ஓர் சொத்து முறையை நாங்கள் அழிக்கப் போகிறோமென நீங்கள் பழிசுமத்துகிறீர்கள்.

சுருங்கக்கூறின் உங்கள் சொத்தை அழிப்பதற்காக எங்களைக் கண்டிக்கிறீர்கள். அது முற்றும் சரியே. அதையே நாங்கள் செய்யக் கருதுகிறோம்.

தொழிற் சக்தி மூலதனமாகவோ, அல்லது பணமாகவோ, அல்லது வாடகையாகவோ, அல்லது பிரத்தியேக சொந்தமாக்கக்கூடிய சமுதாய சக்தியாகவோ மாற்றப்படமுடியாத க்ஷணத்திலிருந்து - அதாவது தனிவுடைமைச் சொத்து பூர்ஷா சொத்தாகிய மூலதனமாக மாற்றப்பட முடியாத அந்த க்ஷணத்திலிருந்து – மனிதனின் தனித்தன்மை இல்லாமற் போகிறதென நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆகையால் நீங்கள் ”தனிப்பட்டவன்” என்பதால் பூர்ஷுவாவாகிய மத்திய வகுப்புச் சொத்துரிமைக்காரனையே கருதுகிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளல் வேண்டும். உண்மையில் இம் மனிதன் (பூர்ஷாவா) இனிமேல் சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் நீக்கப்பட்டு, இத்தன்மையுடன் வாழமுடியாத நிலை யேற்பட வேண்டும்.

சமுதாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தனதாக்கும் சக்தியை ஒரு மனிதனிடமுமிருந்தும் கம்யூனிஸம் பறிக்கவில்லை. ஆனால் அப்படித் தனதாக்குவதால் மற்றவர்களுடைய உழைப்பைத் தன்னாதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரும் சக்தியையே பறிக்கிறது.

தனியடைமைச் சொத்தை அழித்தவுடன் எல்லா வேலையும் நின்று உலகம் முழுவதையும் சோம்பல் பீடிக்குமென ஆக்ஷேபிக்கப்படுகிறது.

இல் வாக்ஷேபனையின்படி வெறும் சோம்பலாலேயே பூர்ஷுவா சமூகம் எப்பொழுதோ நாசமாய்ப் போயிருக்க வேண்டும். ஏனென்றால் அச்சமூகத்தில் உழைப்போர் ஒன்றுமே பெறுவதில்லை. ஆனால் பலன்பெறுபவர் உழைப்பதில்லை. இவ் வாக்ஷேபனை முழுவதம் கூறியதை விலக்காது திரும்பவும் கூறுவதே. மூலதனமில்லாத போது கூலி உழைப்பும் இருக்க முடியாது என்ற கூற்றின் வேறு ரூபமே இவ்வாக்ஷேபனை.

கம்யூனிஸ்ட் முறைப்படி பொருட்களை உற்பத்தி செய்தற்கும் உற்பத்தியாக்கப்பட்ட பொருள்களை அதே முறைப்படி தன தாக்குவதற்கும் எதிராகச் செய்யப்படும் ஆக்ஷேபனைகள் எல்லாம் அறிவு வளர்ச்சியால் ஏற்படும் சிருஷ்டிகள் சம்பந்தமாகக் கம்யூனிஸம் கைக்கொள்ளும் முறைக் கெதிராகவும் செய்யப்பட்டன. எவ்விதம் வர்க்கச் சொத்தின் அழிவுடன் உற்பத்தியும் மறைந்து விடுகிறதெனப் பூர்ஷ்வாவிற்குத் தோன்றுகிறதோ அவ்விதமே வர்க்கக் கலாசாரத்தின் மறைவுடன் எல்லாக் கலாசாரமும் மறையுமென அவனுக்குத் தோற்றுகிறது.

இழக்கின்றேனே என்று அவன் மனம் வருந்தும் கலாசாரம் மாபெருந்தொகையினருக்கு யந்திரம் போல் இயங்கும் பயிற்சியினை மாத்திரம் கொடுத்தலாகின்றது.

பூர்ஷுவாவினுடைய சொத்தை அழிக்கும் எங்கள் விருப்பத்தை அளப்பதற்கு, சுதந்திரம், கலை, சட்டம் என்பவற்றைப் பற்றி பூர்ஷுவா வைத்திருக்கும் அபிப்பிராயங்களை அளவு கோலாக நீங்கள் பாவிக்கும் வரைக்கும் நீங்கள் எங்களுடன் வாதம் செய்யாதீர்கள்.

உங்கள் கருத்துக்கள், பூர்ஷுவா சொத்து, பூர்ஷுவா பொருள் உற்பத்திமுறை ஆகியவற்றிற்கு வேண்டிய நிலைகளிலிருந்து எழுந்த கருத்துக்களேயல்லாமல் வேறொன்றுமல்ல. மேலும் உங்கள் வர்க்கத்தின் விருப்பம் எல்லோருக்கும் சட்டமாக்கப்பட்டது. இவ்விருப்பத்தின் உண்மை இயல்பும் போக்கும் உங்கள் வர்க்கம் நிலைப்பதற்கு ஏற்ற பொருளாதார சூழ்நிலையால் நிர்ணயிக்கப்பட்டது. இவ்விருப்பமே உங்கள் நீதி சாஸ்திரமாகின்றது.

உங்களுக்கும், உங்களுக்கு முந்திய ஒவ்வோர் ஆளும் வர்க்கத்திற்கும் பொதுவான ஓர் தப்பபிப்பிராயம் உண்டு. பொருள் உற்பத்தி செய்வதற்கு ஏற்படுத்திய இன்றைய முறையிலிருந்தும், தற்போது நிலவுகின்ற சொத்துரினம முறையிலிருந்தும் கிளம்பிய சமுதாய முறைகளை - அதாவது பொருள் உற்பத்தியின் வளர்ச்சியின் போது சரித்திரபூர்வமாகத் தோன்றி மறையும் தொடர்புகளை - என்றென்றைக்குமுள்ள இயற்கைச் சட்டங்கள், நியாயச் சட்டங்களென மாற்றச் செய்யும் சுயநலத்தன்மை வாய்ந்த தப்பபிப்பிராயமே அது. புராதன காலச் சொத்தைப்பற்றி நீங்கள் தெளிவாக அறிந்தஉண்மைகளை, நிலப்பிரபுத்வத்தை முறையிலுள்ள சொத்தைப்பற்றி நீங்கள் ஏற்றுக்கொண்ட உண்மைகளை உங்களது பூர்ஷ்வா சொத்து முறை சம்பந்தமாக நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கு முடியாதுதான்.

அடுத்தபடியாக, குடும்பத்தை அழிக்கப் போகின்றார்கள்ளென்ற பிரச்னைக்கு வருவோம். தீவிர முற்போக்காளர் கூடக் கம்யூனிஸ்ட்டுகளின் கேவலமான இந்நோக்கத்திற்கு எதிராகச் சீறி எழுகிறார்கள்.

இன்றைய குடும்பம் - அதாவது பூர்ஷுவா குடும்பம் என்ன அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது? மூலதனத்தின்மேலும் தனிப்பட்டவரின் லாபத்தின்மேலும் தான் கட்டப்பட்டிருக்கிறது. இக் குடும்பமுறை பூரணவளர்ச்சியுடன் தோற்றுவது பூர்ஷ்வா வர்க்கத்தினிடையேயே. இவ்வித வளர்ச்சியடைந்த குடும்பமுறையுடன் இணைந்து இன்னோர் நிலையிருக்கிறது. புரோலிட்டேரியட்டு களிடையே இக்குடும்பமுறை ஏறக்குறைய இல்லாததும் பகிரங்கமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விபசார முறையுமே இந்நிலை.

மேற்கூறிய இரண்டாவது நிலை மறையும்போது கண்டிப்பாகவே பூர்ஷ்வா குடும்ப முறையும் தானாகவே மறையும். இவ்விரண்டும் மூலதனம் மறையும் போதுதான் மறையும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சுரண்டுவதை நிறுத்த விரும்புகிறோம் என எங்களைக் குற்றம் சாட்டுசிறீர்களா? இக் குற்றத்திற்கு நாங்கள் பாத்திரவாழிகளென ஒப்புக் கொள்கிறோம்.

ஆனால் நாங்கள் வீட்டுக் கல்விக்குப் பதிலாகச் சமூகக் கல்வியை ஏற்படுத்தும்போது எல்லாவற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்ட தொடர்பை அழிக்கிறோமென்று நீக்கள் சொல்வீர்கள்.

உங்கள் கல்விகள் என்னே? சமுதாயத்தின் நேரான அல்லது மறைமுகமான தலையீட்டினாலும், பள்ளிக்கூடங்கள் மூலம் நீங்கள் கல்வி கற்பிக்கும் பொழுதுள்ள சமுதாய நிலைகளாலும் உங்கள் கல்விமுறை நிர்ணயிக்கப்பட்டுச் சமூகக் கல்வியாகவில்யைா? கல்வியில் சமூகத்தின் தலையீட்டைக் கம்யூனிஸ்டுகள் புதிதாகப் புகுத்தவில்லை. அத்தலையீட்டின் தன்மையை மாற்றுவதற்கும் அதிகார வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் கல்வியைமீட்கவுமே அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

குடும்பம், கல்வி, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே நிலவிய பரிசுத்தமாக்கப்பட்ட பரஸ்பர தொடர்பு ஆகியவற்றைப் பற்றிப் பூர்ஷ்வாக்கள் பேசும் அர்த்தமற்ற பேச்சுக்கள் தற்கால யந்திரசாதன உற்பத்தி முறையில் ஏற்படும் நடைமுறையால் இன்னும் அதிகமாக வெறுக்கத் தக்கதாகின்றன; ஏனெனில் புரோலிட்டேரியட்டுக்களினிடையே உள்ள குடும்பத் தொடர்புகளெல்லாம் அறுக்கப்பட்டு அவர்களுடைய பிள்ளைகள் சாதாரண வியாபாரப் பொருட்களாகவும் தொழிற்கருவிகளாகவும் மாற்றப்படுகின்றனர்.

ஆனால் கம்பூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களையும் பொதுச்சொத்தாக்குவீர்களென பூர்ஷ்வா வர்க்கம் முழுவதும் ஏகோபித்து உழறுகிறது.

பூர்ஷ்வா தன் மனைவியை உற்பத்திக்கேதுவான ஒரு வெறும் சாதனமென்றே கருதுகிறான். உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் சமூகத்திலுள்ள எல்லாராலும் உபயோகிக்கப்படும் என்று பூர்ஷுவா கேள்விப்படுகின்றான். உடனே பொதுவாக மற்றெல்லாப் பொருள்கட்கு நேரும் கதியைப் போலவே பெண்களுக்கும் நேரிடுமென்னும் முடிவுக்கு வருவதைத்தவிர வேறுமுடிவுக்கு அவனால் வரமுடியாது.

பெண்கள் உற்பத்திக்கு ஏதுவான யந்திரங்களாகவே கருதப்படும் அவர்கள் அந்தஸ்தை இல்லாமல் செய்வதே உண்மையான நோக்கம் என்பதைப் பூர்ஷுவா கனவிலும் காண்பதில்லை.

தவிரப் பெண்களைப் பொதுச் சொத்தாக்குதல் பகிரக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும் கம்யூனிஷ்டுகளால் ஏற்படுத்தப்படுமெனப் பூர்ஷுவாக்கள் பாசாங்கு செய்து தர்மத்தின் பேரால் அவர்கள் காட்டும் சிரத்தையைப் போல கேலிக்கிடடமானது எதுவும் கிடையாது. பெண்களைப் பொதுச்சொத்தாக்குதல் என்னும் முறையைக் கம்யூனிஸ்டுகள் புகுத்தவேண்டிய அவசியமில்லை; பண்டைக்காலம்தொடங்கியே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

எங்கள் பூர்ஷ்வாக்கள் பொதுவிபசாரிகளையும், தங்கள் புரோலிட்டேரியட்டுகளுடைய மனைவிகளையும் பெண்களையும் தங்கள் தேவைக்கு ஏற்பப் பெறுவதோடு திருப்திப்படாது, ஒருவர் மற்றவருடைய மனைவியை கற்பு நெறியிநின்று விலகச்செய்வதில் மிகவும் ஆனந்தம் பெறுகின்றனர்.

பூர்ஷ்வாக்களின் விவாகம்: உண்மையில் பொதுவில் மனைவிகளை வைத்திருக்கும் ஒரு முறையே. ஆதலால் கபடமாக மறைக்கப்பட்டிருப்பதற்குப் பதிலாக, பகிரங்கமாக, சட்டபூர்வமாக்கப்பட்ட பெண்களைப் பொதுவாக்கும் முறையைப் புகுத்துவதற்கு கம்யூனிஸ்டுகள் விரும்புகிறார்களெனக் குற்றம் சாட்டப்படலாம். தவிர, தற்கால உற்பத்திமுறையை அழித்தலோடு அம் முறையிலிருந்து எழுந்த பெண்களைப் பொதுவாக வைத்திருக்கும் முறையும் அழிக்கப்படுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலாகின்றது. அதாவது பகிரங்கமாகவும், இரகசியமாகவும் நடத்தப்பட்ட விபசாரமுறை அழிக்கப்படுகிறது.

தேசங்களையும், தேசீயத் தன்மைமையையும் கம்யூனிஸ்டுகள் அழிக்க விரும்புவதாக இன்னோர் குற்றம் அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது.

தொழிலாளர்களுக்குத் தேசம் சொந்தமாக இல்லை. நாங்கள் அவர்களிடமில்லாத ஒன்றை அவர்களிடமிருந்து எடுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் முன் புரோலிட்டேரியட்டுகள் அரசியல் அதிகாரம் பெறவேண்டி இருப்பதாலும் ஓர் தேசத்தின் முன்னணியிலிருக்கும் வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டியிருப்பதாலும், உண்மையில் தன்னையே ஓர் தேசிய இனமாக்க வேண்டுவதாலும் அந்த அளவிற்குத் தேசியத்தன்மை பெற்றிருக்கிறது. ஆனால் தேசீயத்தன்மை என்பதின் இக்கருத்துக்கும், பூர்ஷ்வாக்கள் அப்பதத்திற்குக் கொடுக்கும் கருத்திற்கும் தொடர்பே கிடையாது.

பூர்ஷ்வாக்களுடைய அபிவிருத்தியாலும், தங்குதடையற்ற வியாபாரத்தாலும், உலக முழுவதும் ஒரேமார்க்கெட் ஆனதாலும் உற்பத்தியில் ஒரே வழிமுறையில் ஒரே தன்மை ஏற்பட்டதாலும், இந் நிலைகளுக்கேற்ற ஜீவியமாற்றங்களாலும் மக்களிடையே தேசிய வேற்றுமைகளும், விரோதங்களும் நாளுக்குநாள் அதிகம் அதிகமாக மறைகின்றன.

புரோட்டேரியட்டின் ஆதிக்கம் அப் பகைகளை மேலும் இன்னும் சீக்கிரமாக அழித்து விடும். புரோலிட்டேரியட்டின் அடிமைத் தளைகளைத் தறித்தெறிவதற்கு முக்கியமான ஓர் அம்சம் தேவைப்படுகிறது. வளர்ச்சியுற்ற சில நாகரீக நாடுகளாகிலும் ஒன்றுபட்டு உழைப்பதே இவ் வம்சம்.

ஒருவன் ஒருவனைச் சுரண்டுதல் எவ்வளவிற்கு அழிக்கப் படுகின்றதோ, அவ்வளவிற்கு ஓர் தேசத்தை இன்னோர் தேசம் சுரண்டுவதும் முடிவடையும். ஒரு தேசத்திலுள்ள வர்க்கங்களிடையே ஏற்படும் பகைமை முடிவடையும் விகிதத்தில் தேசங்களுக்கிடையே ஏற்படும் பகைமையும் அற்றுப்போகும்.

சமயம், வேதாந்தம், மனோதத்வம் ஆகிய துறைகளிவிருந்து கம்யூனிஸத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டுகளை ஆராய்வாக அலசிப் பார்ப்பதற்கு அவசியமில்லை.

மனிதனுடைய லோகாயத வாழ்க்கையிலும் சமூகத் தொடர்புகளிலும், சமுதாய வாழ்க்கையிலும் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துடனும் மனிதனுடைய எண்ணங்கள் கொள்கைகள் கோட்பாடுகள் -சுருகங்கக்கூறின் மனிதனுடைய அறிவு உணர்ச்சி - மாறுகின்றன என்பதை விளக்குவதற்கு ஆழமான அறிவாற்றல் தேவைப்படுகிறதில்லை.

ஜடப்பொருள் உற்பத்தி மாறும் விகிதத்தில் அறிவு உற்பத்தியும் தன் தன்மையில் மாறுகிறதென்பதைவிட வேறு எந்த உண்மையை எண்ண வளர்ச்சியின் சரித்திரம் ருசுப்படுத்துகிறது? ஒவ்வொரு காலத்திலும் செல்வாக்குப் பெற்ற எண்ணங்கள் எப்போதும் அக்காலத்தி உள்ள அதிகார வர்க்கத்துடைய எண்ணங்களாயிருந் திருக்கின்றன.

சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றம் எண்ணங்களைப்பற்றி ஜனங்கள் பேசும்போது, பழைய சமூகத்திற்குள்ளேயே புதுச் சமூகத்தின் விதைகள் உருவெடுக்கின்றன வென்பதையும் பழைய வாழ்க்கை நிலையின் குலைவிற்கு ஏற்பப் பழைய எண்ணங்களின் குலைவு ஏற்படுகின்றது என்ற உண்மையையுமே விளக்குகிறார்கள்.

ஆதிகால உலகம் தன் அந்தியகால வேதனையிலிருக்கும் போது பழைய சமயங்கள் எல்லாம், கிறீஸ்து சமயத்தால் வெற்றி கொள்ளப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தற்கரீதியான எண்ணங்களுக்கு கிறிஸ்துவ சமயம் தலை குனிந்தபோது அக்காலத்தில் புரட்சிகரமான தன்மையைப் பெற்றிருந்த பூர்ஷுவா வர்க்கத்துடன்பிரபுத்வ சமுதாயம் தனது இறுதிப் போரை நடாத்தியது. சமயசுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் ஆகிய எண்ணங்கள் அறிவு மண்டலத்திற்குள்ளும் தங்குதடையற்ற போட்டி நிலைவேண்டுமென்ற எண்ணத்தையே விளக்கின.
சரித்திர வளர்ச்சியின் போக்கில் சாய, தர்மீகவேதாந்த, நீதிசாஸ்திர கோட்பாடுகள் சந்தேகமில்லாமலே திருத்தியமைக்கப்பட்டன; அப்படி இருந்தபோதிலும் தர்மீகமுறை, வேதாந்தம், அரசியல் சாஸ்திரம்,சட்டம் ஆதியன இம் மாற்றங்களுக் கெல்லாம் தப்பி நிலைத்திருக்கின்றனவே என்று கூறப்படுகின்றன.
இதோடுபின் வருமாறு சிலர் கூறுகின்றார்கள், சுதந்திரம், நீதி என்பன போன்ற அழியா உண்மைகள் எல்லாச் சமூக நிலைகளுக்கும் பொதுவாக உள்ளன, ஆனால் இவ் அழியா உண்மைகளையும், சமயம் முழுவதையும் தர்மீகமுறையையும், ஓர் புதிய அடிப்படையில் அமைக்காது அவைகளைக் கம்யூனிஸம் அழிக்கின்றதே. ஆகையால் இதுகாறும் கிடைக்கப்பெற்ற சரித்திர அனுபவம் முழுவதற்கும் மாறாகக் கம்யூனிஸம் நடக்கிறதே!
இக்குற்றச்சாட்டின் அர்த்தமென்ன? பழைய சமூசத்தின் சரித்திரம் முழுவதும் வர்க்கப் பகைகளின் வளர்ச்சியையும் காலத்திற்குக் காலம் இவ் விரோதங்கள் எடுத்த வெவ்வேறு ரூபங்களையுமே கொண்டுள்ளது.
என்னென்ன உருவங்களை இவ் விரோதங்கள் எடுத்தாலும் கடந்த காலங்களுக்கெல்லாம் ஒரு உண்மை பொதுவாக விருந்தது. சமூகத்தின் ஒரு பகுதி மற்றும் பகுதிகளைச் சுரண்டுவதே இவ் உண்மை. ஆகையால் சென்றகாலங்களில் உள்ள சமுதாய சம்பந்தமான உணர்ச்சி பலவித வித்தியாசங்களைக் காண்பித்தாலும், சில பொதுவான ரூபங்களுக்குள் அல்லது சில பொதுவான கோட்பாடுகளுக்குள்ளேயே கட்டுப்பட்டு வளர்த்திருக்கிறது; இவ் ரூபங்களும் கோட்பாடுகளும் வர்க்கப்பகையின் சம்பூர்ண மறைவுடனல்லாமல் வேறுவிதமாக அழிக்கப்படமாட்டா. இது ஓர் அதிசயமன்று.
பரம்பரையாக இருந்த சொத்துத் தொடர்புகளிவிருந்து சமுதாயத்தை முற்றாகப் பிரிப்பதே கம்யூனிஸ்ட் புரட்சியாகும். இப்புரட்சியின வளர்ச்சி பரம்பரையாகவுள்ள எண்ணங்களில் ஒருபோதுமில்லாத மாற்றத்தையும் அவசியமாக்குவது நூதனமல்ல.
கம்யூனிஸத்திற்கு எதிராகப் பூர்ஷுவா வாக்கம் எழுப்பும் ஆக்ஷேபனைகளை இனி விடுவோம்.
தொழிலாளிவர்க்கம் ஏற்படுத்த வேண்டிய புரட்சியின் முதற்படி புரோலிட்டேரியட்டை அதிகாரவர்க்கமாக உயர்த்தி ஜனநாயகப் போராட்டத்தை வெல்வது என்பதே நாங்கள் மேலே அறிக்தோம்.
புரோலிட்டேரியட் இவ் அரசியல் அதிகாரத்தைப் பாவித்து எல்லா மூலதனத்தையும் பூர்ஷ்வாவிடமிருந்து கைப்பற்றும் எல்லா உற்பத்தி சாதனங்களையும் ஓர் மத்திய அதிகாரத்தின் கீழ்ப்படுத்தி, அதிகாரவர்க்கமாக அமைக்கப்பட்ட புரோலிட்டேரியட்டின் கையில், அதாவது அரசாங்கத்தின் கையில் கொடுக்கும்; மேலும்உற்பத்திச் சக்திகளின் தொகையைக் கூடிய சீக்கிரத்தில் அதிகரிக்க முயற்சிக்கும்.
முதலில், தனிப்பட்ட சொத்துரிமைகளிலும், பூர்ஷுவா பொருள் உற்பத்தி முறைகளிலும் யதேச்சாதிகாரமாகத் தலையிடாமல் வேறு வழிகளால் இதைச்சாதிக்க முடியாது. ஆகையால் இவ்வழிவகைகள் பொருளாதார ரீதியில் போதாதனவாயும் சாத்தியமற்றனவாயும் தோன்றினாலும் சரித்திரப்போக்கில் இவைகள் தங்களின் தொடக்க எல்லைகளை மீறிப் பழைய சமுதாய முறையில் இன்னும் தீவிரமாகத் தலையிட வேண்டி வருகிறது. மேலும் இவை பொருள் உற்பத்தி முறையைப் புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்குத் தவிர்க்க முடியாத முறைகளாகின்றன.
இவ் வழிவகைகள் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
ஆகிலும் மிகவும் முன்னேற்றமடைந்த தேசங்களில் கீழ்க்காண்பவை பொதுவாகப் பொருந்தும்.
1. நிலச் சொத்து முறையை அழித்து நிலக் குத்தக ைஎல்லாவற்றையும் பொது நோக்கங்களுக்குப் பாவித்தல்.
2. உயர்ந்தவருமானங்களில், படிப்படியாக உயர்க்துவரும் வருமான வரிபோடல்.
3. சகலவிதமான பரம்பரைச் சொத்துரிமை முறையை அழித்தல்.
4. பரதேசம் செல்லுவோர், கலகம் விளைவிப்போர்ஆகியவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.
5. அரசாங்க மூலதனத்துடன், அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாகத் தேசியப் பாங்கை ஏற்படுத்திக் கடன்கொடுக்கல் வாங்கலை அரசாங்கத்திடமேயேவைத்து ஒரே அதிகாரத்துக்குட்படுத்தல்.
6. போக்குவரத்துச் சாதனங்களை ஒரே அதிகாரத்திற்குட்படுத்தி அரசாங்கத்தின் கீழ் வைத்தல்.
7. அரசாங்கத்தால் நடாத்தப்படும் தொழிற்சாலைகனையும், உற்பத்திச் சாதனங்களையும் பெருக்குதல். ஒரு பொதுவான திட்டத்தின்படி தரிசாகக் கிடக்கும் நிலங்களில் பயிர்ச்செய்கை செய்வதும், பொதுவாகப் பூமியைச் சீர்ப்படுத்துவதும்.
8. சகலரும் சமமாக வேலை செய்யவேண்டு மெனக் கட்டுப்படுத்துதல்; தொழிற் பட்டாளங்களை முக்கியமாக விவசாயத்திற்காக ஏற்படுத்தல். 9. விவசாயத்தையும், யந்திரசாதன உற்பத்தித் தொழிலையும் ஒன்று சேர்த்தல்: தேசம் முழுவதும் ஜனத்தொகைபைச் சமமாகப் பரப்புவதின் மூலம் நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள வித்தியாசங்களப் படிப்படியாக இல்லாது செய்தல்.
10. பொதுப் பள்ளிக்கூடங்களில் எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வி அளித்தல், குழந்தைகள் தொழிற்சாலையில்வேலை செய்யும் தற்போதைய முறையை அழித்தல், கல்வியையும், யந்திரசாதனப் பொருள் உற்பத்தியையும் இணைத்தல்.

சரித்திரப்போக்கில், வர்க்க வித்தியாசங்கள் மறைந்து தேசமுழுவதும் ஒரு பெரும் சங்கமாய்ச் சேர்த்து எல்லாப்பொருள் உற்பத்தியையும் தானே நடத்தும் போது,பொது வேலைக்காக அமைக்கப்பட்ட அதிகாரம் தனது அரசியல் அம்சத்தை இழந்துவிடும். உண்மையில் அரசியல் அதிகாரமென்பது ஒரு வர்க்கம் மற்ற வர்க்கத்தை அடக்குவதற்கு ஸ்தாபித்த அதிகாரமேயாகும். பூர்ஷுவா வர்க்கத்துடன் நடத்தும் போராட்டத்தில் புரோலிட்டேரியட் சூழ் நிலையின் காரணத்தால் தன்னை வர்க்கமாக அமைக்க வேண்டி வருகிறது; பின்பு ஒரு புரட்சியின் மூலம் அது தன்னையே அதிகார வர்க்கமாக்குகிறது. பழைய உற்பத்தி முறைகளைப் பலாத்காரமாக அகற்றி விடுகிறது. இவை எல்லாவற்றையும் செய்வதால் வர்க்க வித்தியாசங்களிருப்பதற்கு ஏதுவான நிலைமைகளையும் - இல்லை, பொதுவாக வர்க்கங்களையுமே -புரோலிட்டேரியட் அகற்றிவிடும். எனவே தான் பெற்ற அதிகாரத்தையுமே புரோலிட்டேரியட் வர்க்கம் இறுதியில் அகற்றிவிடும்.
அனேக வர்க்கங்களும், வர்க்கப் பகைமையும் நிறைத்த பழைய பூர்ஷுவா சமுதாயத்திற்குப் பதிலாக ஓர் சமூகம் ஏற்படும். அதில் எல்லோருடைய வளர்ச்சிக்கும் ஒவ்வொருவருடைய பூரணவளர்ச்சியும் இன்றியமையாத அவசியமாகும்.


III

சோஷலிஸ்ற் கம்யூனிஸ்ற் நூல்கள்

1. பிற்போக்கான சோஷலிஸம்.



(அ) நிலப்பிரபுத்வ சோஷலிஸம்.

சரித்திர பூர்வமாக ஏற்பட்ட தங்கள் நிலையினால் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய தேசங்களிலுள்ள பிரபுக்கள் தற்கால பூர்ஷுவா சமூகத்தைக் கண்டித்துப் பிரசுரங்கள் எழுதுவதைத் தங்கள் தொழிலாக்கியிருக்கிறார்கள். 1830-ம் வருடம் ஜூலை மாதம் நடந்த பிரஞ்சுப்புரட்சியின் போதும், இங்கிலாந்தில் அரசியல் சீர்திருத்தம் சம்பந்தகாக நடந்த கிளர்ச்சியின் போதும், இந் நிலப்பிரபுக்கள் தாங்கள் தான்தோன்றிகளென வெறுத்த பூர்ஷ்வாக்களிடம் திரும்பவும் சரண்புகுந்தார்கள், அக்காலந்தொடக்கம் இவ்விரு சாராருக்குமிடையே பிரபலமான அரசியல் போராட்டமெதுவும் ஏற்படமுடியாது இருந்தது. ஆனால் தர்க்க மூலம் நடத்தும் போராட்டம் மாத்திரம் சாத்தியமாயிருந்தது. பழைய அரச வம்சம் திரும்பியாண்ட காலத்துக் கூற்றுகள் கூட இப்போராட்டத்தில் பாவிக்கமுடியாது இருந்தது. (அரசவம்சம் திரும்பவும் பிரான்சை ஆண்ட காலம் 1814 – 1830.)

இந் நிலப் பிரபுக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்காக தங்கள் தலங்களை வெளிப் பார்வைக்கு மறைத்துச் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையே அடிப்படையாகக் கொண்டு பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிராகத் தன் கண்டனப் பிரசாரத்தினை நடத்துகிறார்கள். இவ்வாறு தங்கள் புதிய எஜமானர்கள் மேல் வசைமாரிகளைப் பாடுவதாலும், வரப்போகும் பெரும் விழ்ச்சியைப் பற்றிப் பயங்கரமான ஜோதிஷத்தை அவர்களுக்கு இரகசியமாகக் கூறுவதாலும் பிரபுத்வ வர்க்கம் அவர்கள்மேல் உள்ள தனது பகையைத் தீர்த்துக் கொள்ளுகின்றது.

இவ் வழியாகவே நிலப்பிரபுத்வ சோஷலிஸம் கிளம்பியது. இதன் தன்மை: பாதி புலம்பலும் பாதி வசைமாரியுமே. ஒர் விதத்தில் இறந்த காலத்தின் பிரதிபிம்பமாகவும், இன்னோர் விதத்தில் எதிர்காலம் கொண்டு வரும் அபாயமாகவும் அது தோன்றுகிறது, தீவிரமான, யூகமான, காரமான கண்டனத்தினால் பூர்ஷ்வா வர்க்கத்தின் உயிர்நிலையை சில வேளைகளில் அது தாக்குகிறது. ஆனால் தற்காலச் சரித்திரப் போக்கை ஓர் அளவேனும் விளக்கமுடியாத நிலையால் அது எப்போதும் கேலிக்கிடமானபலனையே அடைகிறது.

ஜனங்களைத் தன் பக்கம் சேர்ப்பதற்காக புரோலிட்டேரியட்டுடைய பிச்சைப் பாத்திரத்தை தன் கொடியாக நிலப்பிரபுத்வ வர்க்கம் தன்முன் நாட்டுகிறது. ஆனால் ஜனங்கள் அவ் வர்க்கத்தின் பக்கத்தைச் சேர்ந்தவுடன் அதன் பின்னணியில் இருக்கும் அவ் வர்க்கத்தின் உண்மைக் கொடி,யான பழய நிலப்பிரபுத்வ ஆயுதச் சின்னக் கொடியைக் காண்கின்றனர். உடனே அவ் வர்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக நகைத்து அவ்வர்க்கத்தை விட்டு ஒழிகிறார்கள்.

”பிரஞ்ச் லெஜிற்றிமின்ற்” களின் ஒருபகுதியும் ”யங் இங்லண்ட்" டில் ஒரு பகுதியும் மேற்குறித்த காட்சியை அளித்தன.

தாங்கள் சுரண்டும் முறை பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய முறையினின்றும் வேறுபட்டதென்பதைச் சுட்டிக் காட்டும் போது நிலப்பிரபுத்வ வாதிகள் ஓர் விஷயத்தை மறக்கின்றனர்; அதாவது தாங்கள் சுரண்டும் போது இருந்த சூழ்நிலைகள் வேறுபட்டன என்பதையும் இப்போ உபயோகிக்கமுடியாது. பழைமை அடைந்துவிட்டன என்பதையும் மறந்து விடுகிறார்கள், தங்கள் ஆட்சியின் கீழ் தற்காலத்துப் புரோலிட்டேரியட் வர்க்கம் ஒருபோதும் இருக்கவில்லை யென்பதை அவர்கள் எடுத்துக் காட்டும் போது தற்கால பூர்ஷுவா வர்க்கம் தங்களது உற்பத்தி சொந்தமான சமூக முறையில் தவிர்க்கமுடியாது தோன்றிய வ ழித்தோன்றல் என்பதை மறக்கின்றார்கள்.

தவிர, தங்கள் கண்டனங்களின் பிற்போக்கான தன்மையைச் சிறிதுகூட மறையாது பூர்ஷ்வா வர்க்கத்தின் மேல் அவர்கள் சுமத்தும் முக்கிய குற்றச்சாட்டு என்னவாகிறது என்பதைப் பார்ப்போம். பழைய சமூக முறையை அடியோடு வேரறுக்கும் கடமையைப் பெற்ற ஓர் வர்க்கம் பூர்ஷுவா ஆட்சியின் கீழ் வளர்ச்சியடைகின்றன தென்பதே அது.

அவர்கள் பூர்ஷ்வா வர்க்கத்தைக் கண்டிப்பது புரோலிட்டேரியட் வர்க்கத்தை உண்டு பண்ணுவதற்காகவல்ல; புரட்சிகரமான புரோலிட்டேரியட்டை உண்டுபண்ணுவதற்காகவே இக் கண்டனம்.

ஆகையால் அரசியலில் அவர்கள் தொழிலாளி வர்க்கத்தைப் பலாத்காரமாக அடக்கும் முறைகள் எல்லாவற்றிலும் சேர்ந்து கொள்கிறார்கள்; தங்களுடைய உன்னத லக்ஷியப் பேச்சுக்களுக்கு மாறாகச் சாதாரண வாழ்க்கையில் யந்திரசாதன உற்பத்தி முறை யென்னும் மரத்தினின்றும் விழுகின்ற பொற்பழங்களை எடுக்கிறார்கள்; மேலும் உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றைப் பண்டமாற்றாகக் கொடுத்து, கம்பளி, சீனி, குடிவகை ஆகிய வியாபாரப் பொருட்களைப் பெற்று வியாபாரம் செய்து தங்களைத் தாழ்த்துகிறார்கள்.

நிலப்பிரபுவுடன் குருவானவர் எவ்விதம் ஒன்றுபடுகிறாரோ அப்படியே மதசோஷலிஸம், நிலப்பிரபுத்வ சோஷலிளத்துடன் ஒருமைப்படுகிறது.

கிறீஸ்தவ சந்தியாஸத்திற்குச் சோஷலிஸ்ட் அம்சத்தைக் கொடுப்பதை விடச் சுகமான விஷயம் வேறொன்றில்லை. தனிப்பட்ட சொத்துரிமை, விவாகம், அரசாங்கம், ஆகியவற்றிற்கு எதிராகக் கிறீஸ்தசமயம் உத்வேகப் பிரசங்கங்கள் செய்யவில்லையா? இவைகளுக்குப் பதிலாக தர்மம், வறுமை, பிரம்மசாரியம், தபசினால் உடம்பை வாட்டல், சந்நியாச வாழ்க்கை, கோவில் முதலியவற்றை அவசியமெனப் போதிக்கவில்லையா? நிலப்பிரபுவினுடைய இருதயத் துடிப்பை மாற்றி அவனை ஓர் குரு பரிசுத்தமாக்குவதற்கு ஏதுவான தீர்த்தம் போலவே கிறீஸ்தவ சோஷலிசமிருக்கிறது.

(ஆ) குட்டி பூர்ஷுவா சோஷலிஸம்

பூர்ஷுவா வர்க்கத்தால் வீழ்த்தப்பட்ட வர்க்கம்-அதாவது தனது வாழ்க்கைக்கு ஏதுவான நிலைமைகள் குன்றித் தற்கால பூர்ஷ்வா சமுதாயத்தின் சூழ்நிலையில் அமிழ்த்திய வர்க்கம் நிலப்பிரபுத்வ வர்க்கம் மாத்திரமல்ல. மத்தியகாலச் சிறு வியாபாரிகளும், சிறு விவசாய நிலச் சொந்தக்காரர்களுமே தற்கால பூர்ஷ்வா வர்க்கத்தின் முதல் தோற்றங்கள். யந்திர சாதன உற்பத்தியிலும் வியாபாரத்திலும் நன்றாக வீர்த்தியடையாத தேசங்களில் இன்னும் இவ்விரண்டு வர்க்கங்களும் வளர்கின்ற பூர்ஷுலா வர்க்கத்தின் பக்கத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றன.

தற்கால நாகரீகம் பூரண வளர்ச்சி பெற்ற தேசங்களில் ஒரு புதிய குட்டி பூர்ஷ்வா வர்க்கம் தோன்றுகிறது. அது பூர்வுலா வர்க்கத்திற்கும் புரோலிட்டேரியட் வர்க்கத்திற்கும் நடுவில் ஊசலாடிக்கொண்டு பூர்ஷுவா வர்க்கத்திற்குப் புதிய முதலாளிகளைக் கொடுக்கும் ஓர் பகுதியாகத் தன்னைப் புதிப்பித்தக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இவ் வர்க்கத்தில் உள்ள தனிப்பட்டவர்கள் போட்டியின் போக்கால் திரும்பவும் புரோலிட்டேரியட் வர்க்கத்தக்குள் வீழ்த்தப்படுகின்றனர். மேலும் தற்கால யந்திரசாதன உற்பத்தி வளரவளர இவர்கள் தற்கால சமுதாயத்தின் ஓர் சுதந்திரமான பகுதியாகஇல்லாது, முற்றாக அழியும் காலம் வருகிறதையும், கைத்தொழில் வியாபாரம் விவசாயம் ஆகியவற்றில் மேற்பார்வையாளராலும்ம் கங்காணிகளாலும் கடைக்காரராலும் அகற்றப்படுகின்றதையும் கூட அவர்கள் காண்கின்றார்கள்.

ஜனத்தொகையில் பாதிக்குமேல் விவசாயிகளாக உள்ள தேசங்களில், உதாணமாகப் பிரான்ஸ் போன்ற தேசங்களில் புரோலிட்டேரியட்டுக்குச் சார்பாகவும் பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராகவும் இருந்த எழுத்தாளர்கள் பின்வரும் தன்மைகள் உள்ளவர்களாக இருந்தார்கள். பூர்ஷுவா ஆட்சியைக் கண்டிக்கும்போது விவசாயி, குட்டி பூர்ஷுவா ஆகியவர்களுடைய கோட்பாடுகளையே இவர்கள் உபயோகித்தார்கள். இவ் விடைத்தர வர்க்கங்களின் மனோநிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்திற்குச் சார்பாக அவர்கள் போராடினார்கள். இவ்வெழுத்தாளர்கள் இவ்விதம் செய்தது இயல்பானதே. இவ்விதமே குட்டி பூர்ஷுவா சோஷலிஸம் எழுந்தது. பிரான்சிலும், இங்கிலாந்திலும், ’சின்மோண்டி' என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார்.

தற்கால உற்பத்தி முறையிலுள்ள முரண்பாடுகளை மிகவும் நுணுக்கமாக இக்கூட்டத்தினர் துருவி ஆராய்ந்தார்கள். அவர்கள் பொருளாதார நிபுணர்களுடைய கபடமான சாக்குப் போக்குகளை அம்பலப்படுத்தினர். யந்திரத்தினாலும், தொழிற்பிரிவினாலும் ஏற்பட்ட அபாயகரமான பிளவுகளை மறுக்க முடியாத விதமாக இவர்கள் நிரூபித்தார்கள். மேலும் மூல தனமும் நிலமும் ஒரு சிலருடைய கையில் போய் அடைவதையும், கிராக்கிக்கு மிஞ்சிய பொருள் உற்பத்தி, அதனால் வரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றியும் உள்ள உண்மைகளையும் அவர்கள் ஸ்தாபித்தார்கள். குட்டி பூர்ஷ்வாவும் விவசாயியும் தப்பாது வீழ்ச்சியடைகின்றனர். புரோலிட்டேரியட் வர்க்கம் கேவல நிலை அடைகின்றது. உற்பத்தியில் ஒழுங்கின்மை ஏற்படுகின்றது. செல்வம் பங்கிடப் பட்ட முறையில் பிரமாண்டமான வித்தியாசங்கள் உன்ளன. தொழில்முறை சம்பந்தமாகத் தேசங்களிடையே ஒருவரை ஒருவர் அழிக்கும் போர் மூளுகின்றது. பழைய தர்மீகக் கட்டுப்பாடுகள் குலைகின்றன, பழைய குடும்பத் தொடர்புகளும் பழைய தொடர்புகளும் அறுக்கப்படுகின்றன, என்றெல்லாம் இக்கூட்டத்திலுள்ள சோஷலிஸ்டுவாதிகள் காட்டியிருக்கிறார்கள்.

ஒன்றில் பழைய உற்பத்திச் சாதனங்களையும்பண்டமாற்றுச் சாதனங்களையும் அவற்றுடன் பழையசொத்துத் தொடர்புகளையும் பழைய சமுதாயத்தையும் திருப்பி அமைக்கவேண்டும் அல்லது தற்கால உற்பத்திச் சாதனங்களையும் பண்டமாற்றுச் சாதனங்களையும் அச்சாதனங்களால் தவிர்க்கமுடியாது தகர்க்கப்பட்ட பழைய சொத்துக் தொடர்பு முறைக்குள் அடக்கவேண்டும். இவ் இரு வழிகளில் ஒன்றையாதல் இக்கூட்டம் பின்பற்றும் அளவிற்கு அது பிற்போக்குத் தன்மையதாகவும் செய்கை முறையில் சாத்தியமாகாக் கூற்றையுள்ளதாகவும் அது இருக்கிறது.

இக் கூட்டத்தின் இறுதி வார்த்தைகளாவன: ''கைத்தொழிலிற்கு ஐக்கிய கில்டுகள் அவசியம். விவசாயத்திற்குக் குடும்பத் தலைவரின் கீழ் உள்ள தொடர்புகள் அவசியம்." கடைசியாக ஒப்புக்கொள்ள வேண்டிய சரித்திர உண்மைகள் தன்னை ஏமாற்றுவதால் கிடைக்கின்ற ஆவேச மனப்பான்மையைக் குழப்பிய பொழுது இத்தகைய சோஷலிஸம் கேவலமான வெறும் அட்டகாசமாகவே முடிந்தது.

(இ) ஜெர்மன் அல்லது 'உண்மையான' சோஷலிஸம்

பிரான்சில் எழுதப்பட்ட சோஷலிஸ கம்யூனில நூல்கள் அதிகாரத்திலிருக்கும் பூர்ஷ்வா வர்க்கத்தின் நிர்ப்பத்தத்தின் கீழ் உருவெடுத்தது. இவை அதிகாரத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் பிரதிபிம்பமாகவே இருந்தன. ஜெர்மனியில் பூர்ஷ்வா வர்க்கம் எதேச்சாதிகார நிலப்பிரபுத்வத்திற்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இது அத்தேசத்தில் புகுந்தது.

ஜெர்மன் தத்வஞானிகளும், தத்வஞானிகளாக வரவிரும்பியவர்களும், படிப்பாளிகளும் இந்நூல்களை அவாவுடன் படித்தார்கள். இந் நூல்கள் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்குக் கொண்டுவரப்பட்ட பொழுது அவற்றுடன் பிரஞ்ச் சமுதாய நிலைகளும் கொண்டு வரப்படவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை. ஜெர்மன் சமூகநிலையில் இப் பிரஞ்சு நூல்கள் உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடிய தன்மையை யிழந்தன. ஆகவே வெறும் இலக்கியத்தின் தன்மைபையே இவை பெற்றிருந்தன. ஆகையால் பதினெட்டாம் நூற்றாண்டிலுள்ள ஜெர்மன் தத்துவ ஞானிகளுக்கு முதலாவது பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் பொதுவாக நடைமுறையில் நியாயமானது என்று சொல்லப்படும் கொள்கைக்கு ஏற்ற கோரிக்கைகளாகவே தோன்றின, மேலும் புரட்சிகரமான பிரஞ்ச் பூர்ஷுவாவர்க்கத்தின் விருப்புகளின் ரூபங்கள் அவர்களுக்கு வெறும் விருப்பங்களின் சட்டங்களாக அதாவது 'விருப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று சொல் லக்கூடிய மனோலையின் சட்டங்களாகவும் உண்மையான மனித விருப்பு என்று பொதுவாகச் சொல்லப்படும் மனோநிலையின் சட்டங்களாகவும் தோன்றின.

புதிய பிரஞ்சுக் கருத்துக்களைத் தங்கள் பூர்வீகத் தத்துவத ஞானத்தால் ஏற்பட்ட மனச்சாட்சியுடன் இசைந்து வரச்செய்வதே ஜெர்மன் படிப்பாளிகளின் வேலையாக இருந்தது. உண்மையில் தங்கள் சொந்தத் தத்துவஞான நிலையைப் புறக்கணிக்காது பிரஞ்சுக்கருத்துக்களை இவர்கள் தங்களுடைய தாக்கினார்கள்.

அன்னிய பாஷையின் கருத்து எவ்விதம் மொழிபெயர்ப்பின் மூலம் பயன்படுத்தப்படுகின்றதோ அப்படியே இச் சேர்க்கையும் நடந்தது.

கத்தோலிக்க குருமாரைப்பற்றி யேற்க முடியாத சரிதைகள் எழுதுவதற்குக் கிறீஸ்துவ சமயத்துக்கு முந்திய பூர்வீக சமயங்களின் இதிகாசங்களின் கையெழுத்துப் பிரதிகளைக் கத்தோலிக்க குருமார் பாவித்தார்கள் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம். சமயத்துக்கு விரோதமானவை யென்று பொதுவாகக் குறிக்கப்பட்ட பிரஞ்ச் நூல்கள் சம்பந்தமாக ஜெர்மன் படிப்பாளிகள் இதே முறையை மாற்றி உபயோகித்தார்கள். அதாவது இப் பிரஞ்சு நூல்களை மேற்கோளாகக் கொண்டு அவற்றிற்கு அர்த்தமற்ற தங்கள் தத்துவக் கருத்துக்களைக் கொடுத்தார்கள். உதாரணமாகப் பணத்தின் பொருளாதார ரீதியான இயல்புகளைப் பற்றிப் பிரஞ்சுக்காரர்கள் செய்த கண்டனத்தின் கீழ் மனிதனிடமிருந்து மானுஷீகத்தைப் பறித்தல் என்று அவர்கள் – எழுதினார்கள். மேலும் பூர்ஷுவா அரசாங்கத்தைப் பற்றிப் பிரஞ்சுக்காசர் செய்த கண்டனத்தின் கீழ் எக்காலங்களிலும் எந்நிலையிலும் உண்மையானதென்று எந்தக் கருத்து ஏற்கப்பட்டதோ அக்கருத்து நிராகரிக்கப்பட்டது" என்று எழுதினார்கள்.

சரித்திர ரீதியாகப் பிரஞ்சுக்காரர் செய்த கண்புனங்களுக்கு இந்தத் தத்வார்த்த சொற்றொடர்களால் நாமஞ் சூட்டுவதை செயல் முறைக்கேற்ற ஞானம்"'உண்மை சோஷலிஸம்" சோஷலிஸத்தைப் பற்றிய ஜெர்மன் ஸயன்ஸ்", ”சோஷலிஸத்தின் தத்வரீதியான அஸ்திவாரம்" என்று என்னென்னவோ வெல்லாம் சொன்னார்கள்.

பிரஞ்ச் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் நூல்களின் கருத்துக்களெல்லாம் முற்றாக நசுக்கப்பட்டு வேறாகின.ஜெர்மன் கையில் இச் சோஷலிஸம் வர்க்கப் போராட்டத்தை விளக்கும்கொள்கை ஆகாதுவிட்ட தால் அவர்கள் பிரஞ்சுக் கொள்கையினுடைய குறைகளைத் தாங்கள் நீக்கிவிட்டதாக எண்ணினார்கள். பிரஞ்சுக் கொள்கையில் ஓர் அம்சம் மாத்திரம் பிரதானமாக இருந்ததென்று அவர்கள் கருதினார்கள், இக்குறையைத் தீர்ப்பதன் பேரில் அவர்கள் உண்மைத் தேவைகளை வற்புறத்தாது உண்மையின் தேவைகளென்பனவற்றை வற்புறுத்தவதாக எண்ணினார்கள். அதாவது புரோலிட்டேரியட்டின் நலன்களை வற்புறுத்தாது மனித இயல்பின் தேவைகள் என்பனவற்றை வற்பு றுத்தவதாக எண்ணினார்கள், இவர்கள் வற்புறுத்தினது உண்மை மனிதனின் தேவைகள் அல்ல. ஓர் வர்க்கத்திற்கும் சேராத உண்மையில் இல்லாத மனிதன் - அதாவது தத்வஞானமென்று கருதப்படும் மனோபாவனையைக் கொண்ட கற்பனை உலகத்தில் மாத்திரமே உள்ள மனிதனின் - நலன்களையே இவர்கள் வற்புறுத்துவதாக எண்ணினார்கள்.

பள்ளிக்கூட மாணவர் படிப்பது போலப் படிக்கும் இவ்வேலையை இந்த ஜெர்மன் சோஷலிஸம் தீவிரமாகவும் பயபக்தியுடனும் செய்து இக் கௌவைக்குதவாத தனது சரக்கை வெறும் ஆடம்பரத்தடன் உன்னதமாக்கப் பார்த்தது; ஆனால் இதற்கிடையில் வெறும் அறிவுக்காகப் படிக்கப்படும் பொழுது இது பெற்றிருந்த மனத்தூய்மையைப் படிப்படியாக இழந்தது. நிலப்பிரபுத்வ மன்னனுடம் எதேச்சாதிகார முடியாட்சியுடனும் ஜெர்மன் பூர்ஷ்வா வர்க்கமும், பிரதானமாகப் பிரஷ்ய பூர்ஷுவா வர்க்கமும் நடாத்திய போராட்டம் அதாவது மிதவாத இயக்கம் - வரவர உத்வேகமடைந்து வந்தது.

இதனால் உண்மையான சோஷலிஸம் என்பதற்கு நீண்ட காலமாக வேண்டப்பட்டு வந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கண்முன்னே வளர்ந்த அரசியல் இயக்கத்தின் முன் சோஷலிஸக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க இதனால் முடிந்தது. மிதவாதம், பிரதிநிதித்வ அரசாங்கம், பூர்ஷுவா போட்டி, எழுத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பூர்ஷுவாக்கள் கொண்ட கொள்கை, பூர்ஷ்வா சட்டமாக்கும் முறை, பூர்ஷுவா சுதந்திரம், சமத்துவம் ஆகிய எல்லாவற்றிற்கு மெதிராக வழக்கமாகக் கூறப்பட்டு வந்த பிரதிவாதக் கூற்றுக்களைப் பாவிக்கவும், இப் பூர்ஷ்வா இயக்கத்தால் பொதுஜனங்கள் பெறுவதற்கு ஒன்றுமில்லை,இதனால் அவர்கள் எல்லாவற்றையும் இழப்பார்கள் எனப் பொது ஜனங்களுக்குப் புத்தி கூறவும் இந்த 'உண்மை' சோஷலிஸத்திற்குச் சந்தர்ப்பம் அழித்தது. பிரஞ்சுக் கண்டனத்தின் மூட எதிரொலியான ஜெர்மன் சோஷலிஸம் தக்க தருணத்தில் ஓர் விஷயத்தை மறந்தது. ஜெர்மனியில் நடக்கப்போகும் போராட்டம் அடையவேண்டியிருந்த நோக்கங்கள், தற்கால பூர்ஷுவா சமூகம் தோன்றுதல், அது நிலைப்பதற்கேற்ற பொருளாதார நிலைமைகள், அவைக்கிணங்கிய அரசியல் திட்டம் ஆகியவை என்பனதயும், இந் நோக்கங்கள் பிரான்சில் ஏற்கனவே சரித்திர உண்மைகளான பின்பே குறித்த பிரஞ்சுக் கண்டனங்கள் உருவெடுத்தன என்பதையும் மறந்தது.

குருமார்களும் பண்டிதர்களும் கிராமப் பிரபுக்களும் உத்தியோகத்தர்களும் வால்பிடிக்கும் எதேச்சாதிகார அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தை வீழ்த்த முயற்சிக்கும் பூர்ஷுவா வர்க்கத்தை விரட்டும் வெருளியாக இந்தச் சோஷலிஸத்தை வரவேற்றன.

ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகள் இந்நேரத்தில் ஏற்பட்டபோது இதே அரசாங்கங்கள் அவ்வெழுச்ச்சிகளை அடக்கும் மருந்தாகத் தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பிரயோகித்தார்கள். அக் கசப்புமருந்தின் பின் இந்தச் சோஷலிஸம் ஓர் இனிமையான முடிவாகியது.

இவ் ”உண்மையான" சோஷலிஸம் ஜெர்மன் பூர்ஷுவாக்களை எதிர்த்து யுத்தம் செய்வதற்கு, அரசாங்களுக்கு ஓர் ஆயுதமாகியதோடு, அதே நேரத்தில் வெறும் மனவிருப்பையே அடிப்டையாகக் கொண்டு அரசியல் ஞானம் பேசி அடக்கு முறையைக் கண்டதும் பயமடைகின்ற ஜெர்மனிய அரசியல் வாதிகளின் நலனின் பிரதிவிம்பமாகவுமிருந்தது. இந் நலன் ஒரு பிற்போக்குத்தன்னம வாய்ந்ததே. பதினாறாம் நூற்றாண்டிலேயே இருந்து ஜெர்மனியில் மாறாது வந்தம் அக்காலம் தொடக்கம் வெவ்வேறு ரூபங்களில் திருப்பித் திருப்பித் தோன்றியும் வந்த குட்டி பூர்ஷு வா வர்க்கமே ஜெர்மனியில் இப்போதுள்ள நிலைமையைத் தாங்கும் உண்மைச் சமுதாய அஸ்திவாரமாகின்றது.

இவ்வர்க்கத்தைப் பாதுகாப்பதாயிருந்தால் ஜெர்மனியில் இப்போ நிலவும் நிலையையும் பாதுகாக்கவேண்டும். யந்திரசாதனத் தொழில் உற்பத்தியிலும், அரசியலிலும் பூர்ஷுவா வர்க்கம் அதிகாரம் பெறுவதில் இவ் வர்க்கத்திற்கு இரு வழியால் கட்டாய அழிவைத் தேடுகிறது. மூலதனத்தை ஒருசிலரே பெறுவதாலும், புரட்சிகரமான புரோலிட்டேரியட் எழுவதாலும் இம்முடிவு நிட்சயம். "உண்மையான" சோஷலிஸம் இவ்விரண்டு அபாயத்தையும் ஒரேயடியில் அகற்றுவதாகத் தோன்றியது. ஆகவே காட்டுத் தீபோல் பரவியது.

ஜெர்மனிய சோஷலிஸ்டுகளின் ”நித்திய உண்மைகள்" என்று சொல்லப்படும் பரிதபிக்கத்தக்க இயக்கும் சக்தியற்ற கொள்கைகள், கற்பனை எனப்படும் சிலந்தி நூல்களால் செய்யப்பட்ட ஓர் போர்வையால் மூடப்பட்டிருக்கின்றன. பாஷா அலக்காரமென்னும் பூக்கள் மனத்தை வெறுக்கச் செய்யும் வெற்றுணர்ச்சி யென்னும் பனிநீரில் தோய்க்கப்பட்டு இப்போர்வையை அழகுபடுத்துகின்றன. ரூபத்தை உன்னதப்படுத்தும் இவ் ஆடையே எலும்பும் தோலுமான கொள்கைகளை இத்தகைய பொதுஜனங்களிடையே அதிசயிக்கத்தக்க விதமாகப் பரப்புவதற்கு ஏதுவாகின்றது.

வெறும் மன விருப்பையும் பயத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள குட்டி பூர்ஷுவா அரசியல்வாதியின் சொற்பிரயோகம் செய்யும் பிரதிநிதியாகவிருப்பதே தனது தொழிலென ஜெர்மன் சோஷலிஸம் வரவரத் தானாகவே ஒப்புக்கொள்கின்றது.

அது ஜெர்மன் ஜாதியே முன்மாதிரியான ஜாதியென்றும் மேற்குறித்த ஜெர்மன் குட்டி பூர்ஷுவாவே சரியான மனிதனென்றும் அது பகிரங்கமாகக் கூறியது. இம்மாதிரி மனிதனிலுள்ள ஒவ்வொரு மோசமானமான குணமும் அதனது உண்மைக் கருத்திற்கு நேர்மாறாக மறைமுகமான உன்னதமான சோஷலிஸத் தன்மையைப் பெற்றிருக்கிறதென அது விமர்சனம் செய்தது.மேலும் கம்யூனிஸத்தின் மிருகத்தனமாக அழிக்கும் போக்கை நேராகத் தான் எதிர்ப்பதாகவும் எல்லா வர்க்கப்போராட்டங்களையும் தான் வித்தியாசமில்லாது முற்றாக வெறுப்பதாகவும் கூறும் கடைசிக் கட்டத்தையும் அடைந்து விட்டது. சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசுரங்கள் என்று சொல்லப்பட்டு இப்போது (1848) ஜெர்மனியில் பரவியிருக்கும் பிரசுரங்களெல்லாம் ஓர் சிலவற்றைவிட இந்த மோசமான மனத்தைக் களைக்கும் நூல்களின் கூட்டத்தையே சேர்ந்தன.
____________________________

2. கன்ஸர்வேட்டிவ் அல்லது பூர்ஷுவாசோஷலிஸம்.

பூர்ஷுவா சமூகம் எப்பொழுதுமே நிலைத் திருப்பதை உறுதியாக்குவதற்கு பூர்ஷுவா வர்க்கத்தின் ஓர் பகுதியினர் சமூகக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறார்கள்.

பொருளாதார நிபுணர், பரோபகாரிகள், தயாநுபவர்கள், தொழிலாளி வர்க்கத்தினுடைய நிலைகளைச் சீர்திருத்துவோர், தர்மகாரியங்களை ஒழுங்கு செய்வோர்,மிருகங்களுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் சங்கங்களின் அங்கத்தவர்கள்; மதவிலக்குப் பிரேமிகள், மூலை முடுக்குகளில் சீர் திருத்தம் செய்ய விரும்புவோர் ஆகியவர்கள் இவ் வகுப்பைச் சேர்ந்தவர்கள். மேலும் இவ்வித சோஷலிஸம் பூரணமாக அமைக்கப்பட்ட திட்டங்களாகவும் உருவாக்கப் பட்டிருக்கின்றது.

இம்முறையின் உதாரணமாக பிறௌடோன்(Proudhon) எழுதிய ”வறுமையின் தத்துவ சாஸ்திரம்'' என்னும் நூலை நாங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தற்கால நிலைகளிலிருந்து இன்றியமையாது கிளம்புகின்ற போராட்டங்களையும் தவிர்த்து, அந் நிலைகளிலிருந்தும் எழுகின்ற நன்மைகள் எல்லாவற்றையும் சோஷலிஸ்ட் பூர்ஷ்வாக்கள் 'விரும்புகின்றார்கள். தற்போது நிலவும் சமூக நிலையைக் குலைத்துப் புரட்சிகரமாக மாற்றக் கூடிய அம்சங்களைத் தவிர்த்து அம்முறை மாத்திரம் நிலைக்க வேண்டுமென விரும்புகிறார்கள். புரோலிட்டேரியட் வர்க்கமில்லாது பூர்ஷ்வா வர்க்கமே யிருக்கவேண்டுமென விரும்புகிறார்கள். தான் ஆதிக்கம் செலுத்தும் உலகமே எல்லாவற்றிலும் சிறந்ததென இயற்கையாகவே பூர்ஷுவா வர்க்கம் எண்ணுவது இயல்பே. மனதைச் சாந்தி பண்ணும் எண்ணத்தை அநேக விதமான சித்தாந்தங்களாகப் பூர்ஷ்வா சோஷலிஸம் வளர்த்திருக்கிறது. இவ்வித சித்தாந்தத்தைப் புரோலிட்டேரியட் நடைமுறைக்குக் கொண்டு வந்து புதிய மோக்ஷசமுதாயத்துக்குப் புரோலிட்டேரியட் செல்ல வேண்டுமெனப் பூர்ஷா வர்க்கம் விரும்பும்போது உண்மையில் பின் வருவதைதையே விரும்புகிறது. தற்போதைய சமுதாயத்தின் எல்லைகளுக்குள் புரோலிட்டேரியட் கட்டுப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் பூர்ஷ்வா வர்க்கத்தைப் பற்றித் தான் கொண்டிருக்கும் துவேஷ எண்ணங்கள் எல்லாவற்றையும் புரோலிட்டேரியட் கழைய வேண்டும்.

இன்னோர் முறையாக இப் பூர்ஷுவா சோஷலிஸம் உருவெடுத்திருக்கிறது. இவ்விரண்டாவது முறை மேற்குறித்ததைப்போல் ஓர் சித்தாந்தமாக அமைக்கப்படாவிட்டாலும் அதிலும் பார்க்கக்கூடிய அளவிற்கு அனுபவ சாத்தியமாகிறது. இதன் தன்மையாவது: அரசியல் திருத்தத்தால் மாத்திரம் புரோலிட்டேரியட்டுகளுக்கு நன்மை வராது எனக் காட்டுதல், பொருளாதார சம்பந்தங்களிலும் வாழ்க்கைக்கு எதுவான பொருள் வசதிகளிலும் மாற்றம் ஏற்படுவதால் மாத்திரமே புரோலிட்டேரியட் வர்க்கத்திற்கு நன்மை கிடைக்குமெனக்கூறுதல், இவ்விதம் கூறி ஒவ்வொரு புரட்சியையும் தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் இழிவு படுத்தல் ஆகியவையே. வாழ்க்கைக்கேதுவானபொருள் வசதிகளில் மாற்றம் வேண்டுமென இவ்வித சோஷலிஸம் கூறும் போது என்னத்தைக் கருதுகிறது! தொழில் உற்பத்தியிற் பூர்ஷுவாக்களேற் படுத்தியிருக்கும் தொடர்புகளை நிலைத்திருக்கும் அஸ்திவாரமாக வைத்து அவ்வடிப்படையில் நிர்வாக மாற்றங்களை யேற்படுத்தல் என்பதையே இது கருதுகிறது. ஆகையால் இம்மாற்றம் முதலுக்கும் தொழிலிற்கு மிடையேயுள்ள தொடர்புகளை ஓர் விதமாகவேனும் பாதியாது பூர்ஷ்வா அரசாங்கத்தின் நிர்வாக வேலையைச் சுலபமாக்கவும், செலவைக்குறைக்கவும் ஏதுவாகின்றன.

வெறும் சொற்சித்திரமாக வரும்பொழுதே பூர்ஷுவா சோஷலிஸம் போதிய விளக்கமுள்ள நிலையையடைகிறது.
பூர்ஷுவா சோஷலிஸம் தீர்க்கமாகவும் இறுதியாகவும் சொல்வது யாது! தங்குதடையற்ற வியாபாரம், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே இருக்கிறதென்பதும், தொழில்களைப் பாதுகாக்கும் தீர்வை வரிகள் தொழிலாளி வர்க்கத்தின் நன்மைக்காகவே யிருக்கின்றன வென்பதும், சிறைப்படுத்தும் முறையில் சீர்திருத்தம் செய்வதும் தொழிலாளி வர்க்கத்தின் நன்மைக்காகவென்பதுமே. இதைச் சுருங்கக் கூறினால் பூர்ஷ்வா பூர்ஷுவாவாக இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நன்மைக்காகவே எனச் சொல்லலாம்.

3. ”கிரிட்டிக்கல் - யுதோப்பியன்" சோஷலிஸமும் கம்யூனிஸமும்.

தற்காலத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரும் புரட்சிபிலும் புரோலிட்டேரியட் வர்க்கத்தின் கோரிக்கைகளை வற்புறுத்திய நூல்களை பபூவ்" (Babuef) முதலியோர்களின் நூல்களை நாங்கள் இங்கே குறிக்கவில்லை.

தனது சொந்த நோக்கங்களை அடைவதற்காகப்புசோலிட்டேரியட் தானாகவே எடுத்த முதல் முயற்சிகள் நிலப்பிரபுத்வ சமுதாயம் வீழ்த்தப்படும் போதும் எங்கும் உணர்ச்சி ஆவேசம் ஏற்பட்டிருந்த காலத்திலும் எடுக்கப்பட்டன. இவை அக்காலத்தில் சித்தியடையாதது தவிர்க்க முடியாத ஓர் விடியமே. அக்காலத்தில் புரோலிட்டேரியட் வளர்ச்சியடையாத நிலையில் இருந்ததாலும் புரோலிட்டேரியட்டின் விமோசனத்திற்கு எற்ற இந்தப் பொருளாதார நிலைமைகள் இல்லாதிருந்ததாலும் இம்முயற்சிகள் சித்தியடையவில்லை. புசோலிட்டேரியட்டின் விமோசனத்திற்கேற்ற இந்தப் பொருளாதார நிலைகள் அடுத்து வந்த பூச்ஷுவா சகாப்தத்தில் மாத்திரமே யேற்படுத்தக் கூடியனவாயிருந்தன. புரோலிட்டேரியட்டின் முதல் முயற்சிகள் இவ்வியக்கங்களுடன் சேர்ந்து எழுந்த புரட்சிகரமான நூல்கள் தவிர்க்க முடியாது ஓர் பிற்போக்குத் தன்மையைப் பெற்றிருந்தன.எங்கும் எழிய வாழ்க்கை நிலவவேண்டும், சமூக ஏற்றத் தாழ்வுகளை மட்டுப்படுத்தவேண்டும் என்ற கொள்கைகளை மிகவும் கேவலமான முறையில் இந் நூல்கள் பரப்பின.
சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் முறைகளெனச் சரியாகச் சொல்லக்கூடியவை - செயின்ற சைமன (Saint-Saimon) போறியர் (Fourier) ஓவன் (Owen) முதவியோர்களின் முறைகள் - புரோலிட்டேரியட் வர்க்கத்துக்கும் பூர்ஷ்வா வர்க்கத்துக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் தொடக்க வளர்ச்சி குறைந்த காலமென மேலே விவரிக்கப்பட்ட காலத்திலேயே உருவெடுத்தன. ( ”பூர்ஷுவாக்களும் புரோலிட்டேரியட்டுகளும்'' என்ற தலையங்கமுள்ள முற்பகுதியைப் பார்க்க!)

தற்போது நிலவும் சமுதாய முறையில் ஏற்படும் வர்க்க விரோதங்களையும் அம்முறையைக் குலைக்கும் சக்திகளின் வேலைகளையும். இந்த சோஷலிஸ்ட் கம்னிஸ்ட் முறைகளைக் கண்டுபிடித்தவர்கள் உண்மையில் கண்டார்கள். ஆனால் அவர்களின் கண்ணோட்டத்திற்கு இன்னமும் குழந்தைப் பருவத்திலிருந்த புரோலிட்டேரியட் வர்க்கம் சரித்திரத்தின் நிர்ணயிக்கக்கூடிய தன்முயற்சியையோ, தனித்து அரசியலில் இயங்கக்கூடிய தன்மையையோ பெற்றதாகத் தோன்றவில்லை.

வர்க்க விரோதத்தின் வளர்ச்சி யந்திரசாசன முறையின் வளர்ச்சியோடு சமவேகத்தோடு ஏற்படுவதால் அவர்கள் கண்ட பொருளாதார நிலை புரோலிட்டேரியட் வர்க்கத்தின் விமோசனத்திற்கு ஏதுவான பொருள் வசதிகளை யுடையதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆகையால் இந்தப் பொருள் வசதிகளே சிருஷ்டிக்கக்கூடிய புதிய சமூகக்கோட்பாடுகளையும் ஓர் புதிய சமூக விஞ்ஞானத்தையும் அவர்கள் தேடுகிறார்கள். சரித்திரத்திலேற்படும் செய்கைக்குப் பதிலாகத் தனிப்பட்டவர் கற்பனையால் ஏற்படும் முயற்சியை அவர்கள் அவசியமெனக் கருதுகிறார்கள். "சரித்திர வளர்ச்சியின் போது சிருஷ்டிக்கப்பட்ட விமோசன நிலைக்குப் பதிலாகக் கற்பனையாலேற்படும் சிலைகளையே அவர்கள் அவசியமெனக் கருதுகிறார்கள்" படிப்படியாகத் தானாகவே புரோலிட்டேரியட் வர்க்கம் அமைவதற்குப் பதிலாக இந்தக் கற்பனை சிருஷ்டிக்காரரால் வேண்டும் என்று அமைக்கப் பட்ட ஓர் சமுதாய அமைப்பை ஏற்றது எனக் கருதுகிறார்கள். இவர்களுடைய கண்ணோட்டத்தில், காலச் சரித்திரம் இவர்களுடைய சமூகத் திட்டங்களைப் பரப்பும் பிரசாரமாகவும், அவைகளை நடைமுறையில் கொண்டுவரும் வேலையாகவும், மாறுகிறது.

தங்களுடைய திட்டங்களை உருவாக்கும்போது ஓர் விஷயத்தை அவர்கள் உணருகிறார்கள். தொழிலாளி வர்க்கம் எல்லாவற்றிலும் பார்க்கக் கூடக் கஷ்டப்படும் வர்க்கமாதல் அவ்வர்க்கத்தின் நலன்களை விசேஷமாகக் கவனக்கறோம் என அவர்கள் உணருகிறார்கள். மிகவும் மோசமாகக் கஷ்டப்படும் வர்க்கமென்ற தோரணையிலே புரோலிட்டேரியட் வர்க்கம் அவர்களுக்குத் தோன்றுகிறது.

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி குறைந்த நிலையும், அவர்களுடைய குழ்நிலையும், இவ்வித சோஷலிஸ்டுக்களுக்கு ஓர் எண்ணத்தைக் கொடுக்கின்றன. “வர்க்கவிரோதக்கள் எல்லாவற்றிற்கும் தாங்கள் எவ்வளவோ மேலானவர்கள் எனத் தங்களைத் தாங்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே கூடிய சலுகைகள் பெற்றவர்கள் உட்பட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவருடைய நிலையை முன்னேற்ற அவர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் வர்க்க வித்தியாசமில்லாது பொதுவாகச் சமூகம் முழுவதற்கும் அவர்கள் விடாது விண்ணப்பஞ் செய்கிறார்கள். தங்களுடைய திட்டத்தை விளங்கியதின் பின்பு சமுதாயத்தைக் கூடியளவு திறமான முறையில் வைப்பதற்குக் கூடியளவு திறமான திட்டம் இதுதான் என்பதை அவர்கள் எவ்விதம் மனிதர் காணாமலிருக்க முடியுமென நினைக்கிறார்கள்.

ஆகவே அரசியல் செய்கை எல்லாவற்றையும் விசேஷமாக, புரட்சிகரமான செய்கை எல்லாவற்றையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள்; தங்கள் நோக்கங்களைச் சமாதான முறைகளில் அடைய எத்தனிக்கிறார்கள்; சித்தியடையாது கட்டாயமாக முடிய வேண்டிய சிறுசோதனை வேலைகளின் மூலமும், முன் மாதிரி காட்டுவதால் ஏற்படும் செல்வாக்கின் மூலமும், தங்கள் புதிய சமுதாய சித்தாந்தத்தையடைய எத்தனிக்கிறார்கள்.
வளர்ச்சியடையாத நிலையிலிருந்து தனது நிலையைப் பற்றிப் புரோலிட்டேரியட் கற்பனையான ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்கும் காலத்தில் எதிர்கால சமுதாயத்தைப் பற்றி வரையப்பட்ட இந்தக் கற்பனைப் படங்கள், சமுதாயத்தை முற்றாக மாற்றி அமைப்பதற்கு இவ்வர்க்கம் முதல் முதலாக இயல்பாகவே கொண்ட விருப்பங்களுக்கு ஏற்றனவாயிருக்கின்றன.

ஆனால் இச் சோஷலிஸ கம்யூனிசப் பிரசுரங்கள் கண்டனம் செய்யும் ஓர் தன்மையையும் கொண்டுள்ளன. நிலவுகின்ற சமூகத்தின் ஒவ்வோர் கோட்பாட்டையும் இவை தாக்குகின்றன. ஆகையால் தொழிலாளி வர்க்கத்தின் அறிவு வளர்ச்சிக்கேற்ப மிகவும் அருமை உண்மைகள் இவைகளில் நிறைந்திருக்கின்றன. நகரத்திற்கும் நாட்டுப்புறத்திற்கு முள்ள வித்தியாசம்,குடும்பம், தனிப்பட்டவர்களுக்காகத் தொழில்களை நடத்தும் முறை, சம்பளமுறை, ஆகியவற்றை அழித்தல், சமுதாயத்தில் முரண்பாடற்ற நிலையை ஏற்படுத்தல், அரசாங்கத்தின் வேலைகளைத் தொழில் உற்பத்தியை மேற்பார்வையிடுதலாக மாத்திரம் மாற்றல் - இவ்விதம் செய்கை முறைகளை அவர்களின் பிரசுரங்களிற் காணலாம். இந்த நோக்கங்களெல்லாம் அந்தக் காலத்தில் முளைத்து, தெளிவாகத் தொடக்க ரூபத்தில் மாத்திரம் இப் பிரசுரங்களில் கணிக்கப் பெற்ற வர்க்க விரோதங்கள் அழிவடையும் நிலையையே குறிக்கின்றன. ஆகையால் இவைகள் நடைமுறைக்கு வரமுடியாத ஏட்டுச் சுரைக்காய்த் தன்மையையுடையன.

சரித்திரவளர்ச்சி எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு இந்த கிரிட்டிக்கல் - யுதோப்பியன்' (அதாவது கண்டனம் செய்யும் தன்மை யுடையதும் எட்டுச்சுரைக்காய்த் தன்மையும் பெற்ற) சோஷலிஸமும் கம்யூனிஸமும் கருத்துப் பெருமையை இழக்கின்றது. தற்கால வர்க்கப் போராட்டம் வளர்ந்து தெளிவான ரூபம் எடுத்துக் கொண்டு போகப் போகப் போட்டியினின்று விலகிநிற்கும் கற்பனைக் கொள்கையும் அப்போட்டியைத் தாக்கும் இக் கற்பனைக் கண்டனங்களும் அனுபவ சாத்தியம் சற்றுமே இல்லாமல் தத்வரீதியிலும்கூட அவசியமில்லாமற் போகின்றன. ஆகையால் இந்தச் சித்தாந்தங்களைத் தொடங்கியவர்கள் அனேகமாகப் புரட்சிகரத் தன்மையைப் பெற்றிருந்த போதிலும் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் எங்கும் பெறும் பிற்போக்குத் தன்மையான குழுக்களாயிருக்கின்றனர். ஆகவே இடைவிடாது வர்க்கப் போராட்டத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் வர்க்க விரோதங்களைச் சமாளித்து ஒற்றுமைப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள், தங்களுடைய ஏட்டுச் சுரைக்காய்த் தன்மையதான சமூகத்திட்டங்களைச் சோதனை செய்து அடையவும் தனியிடங்களில் சிருஷ்டிக்கவும் சோஷலிஸ்ட் காலனி(ஓவனுடைய ஹோம் காலனி பேரியடையபெலான்ஸ் டெரஸ், கபெற்றுடைய வீட்டில் இக்கேரியா போன்ற காலனிகளை) - அதாவது புதிய மோக்ஷ உலகத்தின் சிறிய காப்பிகளையும் - அமைக்கவும் கனவு காண்கின்றார்கள். மனக்கோட்டைகளை எல்லாம் அடைவதற்குப் பூர்ஷு வாக்களின் தர்ம உணர்ச்சிகள், பொருள் உதவி ஆகியவற்றை உபயோகிக்கும் நோக்கமாக விண்ணப்பம் செய்ய நிர்ப்பக் திக்கப்படுகிறார்கள். படிப்படியாக மேலே விளக்கப்பட்ட பிற்போக்கான பழமைவாத சோஷலிஸ்டுகளின் கூட்டத்தில் போய்ச்சேருகிறார்கள். ஒரு விஷயத்தில் மாத்திரம் இவ் விருசாராருக்கும் இடையே வித்தியாசம் உண்டு. பிந்தியவர்களிலும் பார்க்கக் கூடிய ஒழுங்குள்ள வெறும் பாண்டித்தியத்தைக் காட்டுவதிலும் தங்களது சமூக விஞ்ஞானம் இந்திர ஜால பலனைக் கொடுக்கும் என்ற பிடிவாதமான மூட நம்பிக்கையைக் காட்டுவதிலுமே இவர்கள் பிந்திய கூட்டத்தாரிலிருந்து வேறுபடுகிறார்கள்.

ஆகவே தொழிலாளி வர்க்கம் நடாத்துகின்ற எல்வா அரசியல் செய்கையையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கிறாகள். இவர்களின் கோட்பாட்டின்படி புதிய சித்தாந்தத்தை நம்பாது குருட்டுத் தன்மையிலிருந்தே இவ்வித அரசியல் செய்கை ஏற்படக்கூடும்.

இங்கிலாந்தில் ஓவனைப் பின்பற்றுபவர்களும் பிரான்சில் போரியரைப் பின்பற்றுபவர்களும் சாட்டிஸ்டுகளையும் (Chartists) றிபோமிஸ்ட் (Refomists) என்பவர்களையும் எதிர்க்கிறார்கள். __________________________

VI
தற்போதுள்ள சகல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாக கம்யூனிஸ்டுகள் எடுக்கும் நிலை.



தற்போதுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன், அதாவது இங்கிலாந்தில் சாட்டிஸ்டுகள், அமெரிக்காவில் விவசாய சீர்திருத்தக் காரருடன், கம்யூனிஸ்ட்டுகள் கொண்டுள்ள தொடர்புகளை மேலேயுள்ள இரண்டாம்பகுதி விளக்கியிருக்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் உடன் நோக்கங்களை அடைவதற்கும் அவ் வர்க்கத்தின் தற்போதைய நலன்களை வற்புறுத்தவும் கம்யூனிஸ்டுகள் போராடுகின்றார்கள்; இன்றைய இயக்கத்தினுள்ளிருந்து அவ் இயக்கத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்து இவ் இயக்கத்தின் எதிர்காலப் பிரதிநிதியாகவு மிருக்கிறார்கள். பிரான்சில் பழமைவாத, புதுமைவாத, பூர்ஷ்வாக்களுக்கு எதிராக சோஷல் டிமோக்கிராட்டுகளுடன் (Social Democrats)சேர்கிறார்கள். ஆனால் பெரிய புாட்சியிலிருந்து பரம்பரையாக ஏற்கப்பட்டுவந்த சொற்றொடர்களையும் தத்வப் பிரேமைகளையும் தாங்கள் பரிசீலனை செய்யக்கூடிய நிலையைக் கொடுக்கும் உரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

சுவிட்சலாந்தில் ரடிக்கல்ஸ் என்று சொல்லப்படும் புதுமை வாதிகளை அவர்கள் ஆதரிக்கிறார்கள்; ஆனால் இந்தக் கட்சியினுள் ஒன்றுக்கொன்று விரோதமான சக்திகள் இருக்கின்றனவென்றும் இந்தக் கட்சியில் ஒருபகுதி பிரான்சிலே யுள்ளவர்களைப் போன்ற ஜனநாயக சோஷலிஸ்டுக்களாகவும் இன்னோர் பகுதி புதுமைவாத பூர்ஷுவாசுகளாகவும் இருக்கின்றனர் என்பதை மறக்கவில்லை.

போலந்தில் தேசிய விடுதலைக்கு விவசாயப் புரட்சி முற்றேவை என்பதை வற்புறுத்தும் கட்சியை, அதாவது 1846-ல் ”கிராக்கௌ” என்ற இடத்தில் புரட்சி உண்டாக்கிய கட்சியை - அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
ஜெர்மனியில் எதேச்சாதிகார முடியாட்சி, நிலப் பிரபுத்துவ வர்க்க ஆட்சி ஆகியவற்றிற்கு எதிராகப் பூர்ஷுவா வர்க்கம் புரட்சிகரமான முறையில் போராடும் போது அவர்களுடனும் மற்றும் குட்டி பூர்ஷ்வாக்களுடனும் அவர்கள் சேர்த்து போராடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்குக் கூடிய அளவு தெளிவாக விளங்கக்கூடிய விதமாக ஓர் உண்மையைப் பரப்பாது ஓர் நிமிஷமும் அவர்கள் விடயத்தில் பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் புசோலிட்டேரியட்டிற்கு மிடையே எதிர்த்தன்மையான விரோதம் இருக்கின்றதென்பதைத் தொழிலாளி வர்க்கம் உணரும்படி செய்தார்கள். தனது ஆதிக்கத்துடன் சேர்த்து பூர்ஷுவா வர்க்கம் சிருஷ்டிக்கும் சமூகப் பொருளாதார நிலைகளைப் பூர்ஷ்வா வாக்கத்திற்கு எதிராக ஜெர்மன் தொழிலாளிகள் பாவிக்கவும் ஜெர்மனியின் பிற்போக்கு வர்க்கங்கள் எல்லாம் வீழ்ந்தபின் பூர்ஷ்வா வர்க்கத்திற்கே எதிராக நடக்கும் போராட்டம் உடனே தொடங்கவும் இவர்கள் இவ்விதம் செய்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் பிரதானமாக ஜெர்மனிமீது தங்கள் கருத்தைச் செலுத்துவதற்குக் காரணம் உண்டு. இந்தத் தேசம் பூர்ஷுவாப் புரட்சி தொடங்கும் தருவாயிவிருக்கிறது. இப்புரட்சி 17-ம் நூற்றண்டில் இங்கிலாந்தில் நடந்த புரட்சியிலிருந்தும் 18-ம் நூற்றாண்டில் பிரான்ஸ்சில் நடந்த புரட்சியிலிருந்தும் வேறுபடுகிறது. ஏனெனில் இப்புரட்சி ஐரோப்பிய நாகரீகத்தின் வளர்ச்சிபெற்ற சூழ்நிலையில் நடக்கப்போகின்றது. முந்திய புரட்சிக்காலங்களில் இங்கிலாந்தில், பிரான்ஸ்சிலிருந்த புரோலிட்டேரியட்டிலும் பார்க்க எவ்வளவோ கூடிய வளர்ச்சிபெற்ற வர்க்கம் இருக்கும் நிலையில் இப்புரட்சி நடக்கப்போகிறது; மேலும் ஜெர்மனியில் நடக்கப்போகும் பூர்ஷுவாப் புரட்சி உடனே தொடர்ந்து நடக்க வேண்டிய புரோலிட்டேரியட் புரட்சியின் வழிகாட்டியாகவே இருக்கிறது.

சுருக்கக் கூறின் தற்போது நிலவுகின்ற சமூக அரசியல் முறைகளுக்கு எதிராக எங்கெங்கு எவ்வெப்புரட்சி நடக்கின்றதோ அப்புரட்சி ஒவ்வொன்றையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றார்கள்.

இந்த இயக்கங்கள் எல்லாவற்றிலும் ஓர் பிரச்சினையை முதற் பிரச்சினையாக, அவர்கள் கொண்டு வருகின்றார்கள். குறித்த காலத்தில் எவ் வளர்ச்சியைச் சொத்துப் பிரச்சினை அடைத்திருந்தாலும் இப் பிரச்சினையையே அவர்கள் முதன்மையாகக் கொண்டுவருகிறார்கள்.

இறுதியாக, எல்லாத் தேசங்களிலும் உள்ள ஜனநாயகக் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி ஒன்று படுத்த அவர்கள் எங்கும் சளையாது உழைக்கிறார்கள்.

தங்களது கொள்கைகளையும் நோக்கங்களையும் மறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் வெறுக்கிறார்கள். நிலவுகின்ற சமூகநிலைகள் எல்லாவற்றையும் பலாத்காரமாக வீழ்த்துவதின் மூலமே தங்களது நோக்கங்களை அடையலாமென அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் வர்க்கங்கள் நடுங்கட்டும். புரோலிட்டேரியட்டுக்கள் தங்களது தழைகளை விட இழப்பதற்கு ஒன்றையும் வைத்திருக்கவில்லை. அவர்கள் வெற்றிபெற்று அடைவதற்கு உலகம் முழுவதுமே இருக்கிறது.

எல்லாத் தேசத்துத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!



அடிக் குறிப்புக்கள்:

  1. பூர்ஷுவா : (Bourgeoisie) சமூகத்திற்கு வேண்டியவற்றை உற்பத்திசெய்யும் சாதனங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு கூலிக்கு உழைப்பை விலைக்கு வாங்கும் நவீன கால முதலாளி.
    புரோலிட்டேரியட்: (Proletariat) கூலிக்கு வேலை செய்யும் நவீனகாலத் தொழிலாளர்கள்; இவர்களுக்கு தங்களுக்கென சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் எதுவும் கிடையாது; இதனால் உயிர் வாழ்வதற்காகத் தங்களுடைய உழைப்பு சக்தியை விற்கும்படியான நிலைமைக்குத் தாழ்த்தப் பட்டிருக்கிறார்கள்.


  2. பட்றிஷன்: (Patrician) பூர்வீக ரோமாபுரியிலுள்ள ஆளும்வகுப்பு; இவர்களே பெரும்பான்மையான நிலச் சொந்தக்கார்களாகவுமிருந்தனர். பெலிபியன்: (Plebian) பூர்வீக ரோமாபுரியில் சுதந்தர வர்க்கத்தைச் (அடிமையல்லாத வர்க்கத்தை) சேர்ந்தவர்களாயிருந்த போதிலும் பிரஜா உரிமைகள் எல்லாம் பெறாதவர்கள்.


  3. கில்ட்மாஸ்டர், ஜேனிமன் : (Guildmaster, Journeyman) 14-ம் 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஒரே பட்ட ணத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டோர் ஒரு சங்கமாகச் சேர்த்து ஒரு தலைவனின் கீழ்வேலை செய்யும் முறையினால் ஏற்பட்ட தொழிற் தலைவனும், தொழிலாளியும்.


  4. நைட்டுகள்: (knights) புராதன ரோமாபுரியில் லேவாதேலி செய்பவரும் பெரிய வியாபாரிகளும் நைட்டுகள் என்றழைக்கப்பட்டனர்.


  5. பேகர்கள்: (Burgesses) பட்டணத்திலுள்ள வியாபாரிகள், கைத்தொழில் செய்வோர் முதலியவர்கள்.


  6. கம்யூன் : (Commune) பிரஞ்ச் தேசத்தில் உள்ள பட்டணர்கள் ஜமீன்தார்களிடமிருந்து உரிமைகளைப் பெறமுன்பே தங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர்.


  7. மூன்றாவது எஸ்டேட்: மூன்று எஸ்டேட்டுகளாவன முதலாவது மதஸ்தாபனங்கள், இரண்டாவது நிலப்பிரபுக்கள், மூன்றாவது பூர்ஷ்வாக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக