பக்கங்கள்

வியாழன், டிசம்பர் 30, 2021

அஞ்சலிக் கட்டுரை : செ. கணேசலிங்கன் - ”எந்தவொரு ஆதிக்கவாதியாகவும் இல்லாது மார்க்ஸியவாதியாகவே பிரச்சினைகளை அணுகியவர்”

Photo(above):N.Sridharan
மூலம்: ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
தமிழில்: ந. சுசீந்திரன்


இலங்கையின் அரசியற் தலைவர்கள் சென்னைக்கு அல்லது சென்னையினூடாகப் பயணப்படும்போது ’இந்து’ பத்திரிகை வெளியீட்டுக் குழுமத்தின் மூத்த ஊடகவியலாளர்களைச் சந்திப்பதைத் தமது வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது சிங்கள அரசியற் தலைவர்கள் இந்த நகரத்தில் தலைகாட்டக்கூடாது, நடமாடக்கூடாது என்று தமிழ் நாட்டின் அரசியற் கட்சிகள் இன்னமும் தடைவிதிக்காத காலமாக இருந்தது.

அந்த அரசியற் தலைவர்கள் பலர் இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை பற்றித் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினைப் புரிந்துகொள்ள முயன்றனர். இலங்கைப் பிரச்சினைகளில் முனைப்பாக அக்கறைகாட்டிய ஊடகவியளாளர்களும் இவ்வாறான தகவற் பரிவர்த்தனைக் கலந்துரையாடல்களில் பங்கேற்றுக்கொண்டனர். அப்படியொரு நிகழ்வில் அனுபவமும் பண்பும் மிக்க தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் கலந்துகொண்டு இலங்கையின் இன்றைய அரசியல் நிலை பற்றி உரையாற்றியதுடன், இறுதியில் வடக்கின் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கம் வழங்குவது எவ்வளவு கடினமானதும் சிக்கலானதும் ஆகும் என்ற தொனிப்படவும் பேசிமுடித்தார்.

அதிகமும் மார்க்ஸியப் பார்வையிலேயே தனது புனைவுகளையும் அ-புனைவுகளையும் எழுதிக்கொண்டிருக்கும் சென்னை வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் அந்த அரசியல்வாதியிடம் பின்வரும் கேள்வியினை எழுப்பினார். “என்றோ ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களப் பெரும்பான்மையினர் ஈழத்தமிழர் கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றிவிட்டால், இத் தீவில் நீண்ட காலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடுமா?” என்பதே அந்தக் கேள்வி.

இதற்கான அந்த அரசியல்வாதியின் பதில் நேரடியானதாக இருக்கவில்லை. ”எந்தத் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? வெள்ளாளத் தமிழர்களினதா?” (சிங்கள அரசியல்வாதிகளுக்கு, வடக்குத் தமிழர்களை வெள்ளாளர்கள் என்றும் வெள்ளாளர் அல்லாதோர் என்றும் பிரித்துப் பேசி மடக்குவது ஒரு பொதுப்போக்காக, அரசியல் நாகரிகமாக இருந்துவந்தது. வெள்ளாளர்கள் கல்வியிலும் சமூக-பொருளாதார நிலைகளிலும் மேம்பாடுடையவர்களாக இருந்ததுடன் சமூகத்தில் முக்கிய பதவிகளையும் வகித்துக்கொண்டிருந்தனர். தமிழ் அரசியற் கட்சிகளிலும் பெரும்பாலும் வெள்ளாளர்களே ஆதிக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர். இதனால் வெள்ளாளர் அல்லாதோர் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் அதிகம் அக்கறை காட்டியதில்லை.)

இந்த அஞ்சலியினை எழுதிக்கொண்டிருக்கும் நானும் அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தேன். அந்த அரசியல்வாதியிடமிருந்து இந்த எதிர்க்கேள்வி உதிர்க்கப்பட்டவுடன் கணேசலிங்கன் அவர்கள் கொடுப்புக்குள் மெலிதாகச் சிரித்தபடி, தன் முகத்தினை வேறுதிசையில் திருப்பிக்கொண்டதை நான் அவதானித்தேன். மேற்கொண்டு அவர் வேறெதையும் கேட்கவோ சொல்லவோ விரும்பவில்லை என்றும் தெரிந்தது.

அறிவும் நேர்மையும் மிக்க சிங்கள அரசியல்வாதி என்று சொல்லப்படும் ஒருவர், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்குவது தொடர்பான பிரச்சினையில், எங்கே நிற்கின்றார் என்பதை இலகுவில் அறிந்துகொள்ளவே தான் இச் சிறிய கேள்வியினை எழுப்பியதாகவும், ஏனைய சராசரிச் சிங்கள அரசியல்வாதிகளைப் போலவே இவரும் அதிற் ’தெளிவாகவே’ இருக்கிறார் என்றும், இலங்கையின் எந்தவொரு சிங்கள அரசியல் வாதியும் இக் கோரிக்கையை ஏற்கும் நிலையில் இருப்பதில்லை என்றும் கணேசலிங்கன் அவர்கள் என்னிடம் கூறினார்.

தமிழ் எழுத்துலகில் 1950களில் புதிய அலையினைத் தோற்றுவித்த, ஈழப்போராட்டத்தின் கொந்தளிப்பான காலங்களையும், அந்தக் கொந்தளிப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலமாயமைந்த அரசியல் காரணிகளையும் அடிப்படைகளாகக் கொண்டு தனது ஆக்கங்களைப் படைத்த செ. கணேசலிங்கன் அவர்கள் தனது 93 ஆவது வயதில் 2021 டிசம்பர் 4ஆம் திகதி சென்னையில் காலமாகிவிட்டார்.

அவரது நீண்டகால நண்பரும், இந்து பத்திரிகை வெளியீட்டுக் குழுமத்தின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என். ராம் அவர்கள் செ. கணேசலிங்கன் அவர்களின் 75ஆவது அகவையின்போது பாராட்டியதை இன்று நினைத்துப் பார்க்கலாம்: “இலங்கைத் தமிழ் விவகாரங்களுக்கு அவர் 'நம்முடையவர்' ஆனார்; அபாரமான களநிலை அறிவும் அனுபவமும் மிக்க வளவாளராகவும் அதேவேளை துரிதமாக மாறிவிடும் (நண்பன்-எதிரி அரசியல்) நிலைமைகளிலுங்கூடத் தனது தொடர்புகளைத் தக்கவைத்துக் கொண்டவராகவும் காணப்பட்டார். பல்வேறு தமிழ் அமைப்புக்கள், போராளிக் குழுக்கள், மிதவாதப் போக்குடையவர்கள்… பற்றியெல்லாம் அறிந்துகொள்ள நாம் அவரைத்தான் அணுகினோம். பரந்ததும் ஆழமானதுமான பார்வை அவருடையது. நிகழ்வுகள், நடைமுறைப் போக்குகள் மற்றும் அவற்றின் வளர்ச்சிகளை அவர் மார்க்சியக் கண்ணோட்டத்திலேயே புரிந்துகொண்டார்.”

கணேசலிங்கன் அவர்களின் இலங்கை நட்புக்கள் இன, வர்க்க வேறுபாடுகள் கடந்தவை. இலங்கைச் சிவில் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அங்கத்தினராகவும் அவர் இருந்தார். இதனால் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் அதனதன் பின்னணியில் துல்லியமாக் கணிப்பிட அவரால் முடிந்திருக்கின்றது. இலங்கை அரசியலின் விரிந்து பரந்த மனப்படத்தினையும் நாடு செல்லும் திசைவழியையும் அவர் கண்டறியும் திறனுக்குப் பின்னால் அவர் எந்தவொரு ஆதிக்கவாதியாகவுமல்லாமல் ஒரு மார்க்சியவாதியாக பிரச்சினைகளை அணுகியதே காரணமாகும்.

”கணேசலிங்கன் அவர்கள் தமிழர்கள் படும் துன்பங்களைச் சகித்துகொள்ள முடியாதவராக இருந்த அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள், ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒருபோதும் ஒரு அரசியற் தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பதிலும் மிக்க உறுதியோடிருந்தார். கணேசலிங்கனின் எழுத்துக்களுங்கூட இந்த இக்கட்டான நிலைகளையும் அவை உருவாக்கும் கையறு நிலையினையும் பிரதிபலித்தன” என்கிறார் ’இந்து’ பத்திரிகை வெளியீட்டுக் குழும, வெளியீடுகளின் இயக்குனராகத் தற்போது பணியாற்றும் என். ராம் அவர்கள்.

கணேசலிங்கன் அவர்களின் நேரடி அனுபவங்களான 1983 இல் நடந்த கலவரம்-படுகொலைகள், 1987இல் ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம், வட இலங்கையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்தும் என்று கருதப்பட்ட 2002இன் சமாதான ஒப்பந்தம், பின்னர் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி போன்றவைகள் கணேசலிங்கனின் நம்பிக்கைகள் கொள்வதும் குலைவதுமாகத் தொடர்ந்த வண்ணம் இருந்தன. அப்படித்தானே தமிழ்ச் சிவில் சமூகத்தின் பெரும்பகுதியினரின் நிலையும் இருந்தது.

இந்தக் காலகட்டங்களில் தீர்வு ஒன்று சாத்தியம் என்று கணேசலிங்கன் அவர்கள் எப்போதாவது நம்பிக்கை கொண்டிருந்தாரா என்று கேட்டதற்கு, ராம் அவர்களின் பதில் இவ்வாறிருந்தது: “அவரது உணர்வுகள் இது பற்றி ஏற்ற இறக்கம் கொண்டவையாகவே இருந்தன. ஒருபுறத்தில், அவருக்கு தீவிரவாதிகள் மீது, குறிப்பாக வன்முறைக் குழுக்கள் மீது எந்த அனுதாபமும் இல்லை; தொடர்புகளையும் பேணவில்லை. இருப்பினும் உமா மகேஸ்வரனை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புளொட்) நன்றாகத் தெரிந்திருந்தார். உமா மகேஸ்வரன் நம்பிக்கைக்குரியவராகவும், யதார்த்த வாதியாகவும் தோன்றிய காலம் ஒன்று இருந்தது.

1990கள் என்பது ஒரு வகையான ஏற்றமும் இறக்கமும் நிறைந்த காலகட்டம். கணேசலிங்கனுக்கு இருந்தாற்போல் நம்பிக்கை கொள்வதற்கான ஏதாவது சமிச்சைகள் தோன்றும்; புதிய தகவல்கள் கூடக் கிட்டும். சிலவேளைகளில் அவை அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். ஆனால் அவற்றை எப்படிப் பொருள்கோடல் செய்வது என்பதில்தான் எமக்கிடையில் முரண்படுகின்ற வாதங்களும் பிரதிவாதங்களும் நடைபெற்றன. ஈற்றில் அவற்றின் பெறுபேறுகள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருந்தன. ”நாம் கொண்டிருந்த நம்பிக்கைகள் தகர்ந்தன” என்பது தான் அப்பெறுபேறு.

    விடுதலைப் புலிகளின் இலக்கைப் புரிந்துகொள்வது


ஈழப் போராளிக் குழுக்கள் தங்களின் உண்மையான பலத்தை மறைக்க முயன்ற காலம் அது. உண்மையில் உமா மகேஸ்வரனின் புளொட் தான் பிரதான இயக்கம் என்று கொழும்பில் உள்ள அனேக சிங்கள அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பலர் நம்பிக்கொண்டிருந்தனர். இது பற்றி ராம் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். ”அவர்கள் அப்படி நினைக்கக் காரணமும் இருந்தது. உதாரணமாக புளொட் அமைப்பினர் மிதக்கும் படகொன்றில் இருந்து வானொலி ஒலிபரப்பு நடாத்தினர்கள். இவை போன்றவையே அவர்கள் மீதான மிகை மதிப்பீட்டின் காரணமாகும். ஆனால் கணேசலிங்கன் அப்படி நினைக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். புளொட் (PLOTE) அமைப்பினர் ஒரு உடன்பாட்டுக்கு வருவார்கள் என்றும் தமிழர்களுக்கு இதனால் நல்லது நடக்கலாம் என்று அவர் நம்பினாரே தவிர தமிழீழத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்ததாக நான் நினைக்கவில்லை. போர் நடந்து கொண்டிருந்த போது அவரது நம்பிக்கைகள் சற்றே முளைவிடுவதும் பின்னர் அவை கருகிப்போவதுமான நிலையினை நான் அவதானித்திருக்கின்றேன். தீர்வு ஒன்று; அது ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருப்பதான ஒரு தீர்வினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுகொள்ளப்போவதில்லை என்பதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் உயர் அதிகாரங்களைக் கொண்டமைந்த ஒரு மாநில சுயாட்சி என்ற தீர்வினைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுகொள்ளப் போவதில்லை என்பதை நாம் இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தோம். என்னைவிட, கணேசலிங்கனுக்கு இதில் ஒருபோதும் சந்தேகமே இருந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரன் இதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்று கணேசலிங்கன் கூறுவார். விடுதலைப் புலிகளில் சிலரை அவருக்கு நன்றாகத் தெரியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆயுதப் போராட்த்தின் மூலம் தம் தமிழீழ இலக்கினை அடைவதில், மற்றைய இயக்கங்களைப் போலன்றி, எந்த விட்டுக்கொடுப்புமற்றவர்கள். தனிநாட்டுக்குக் குறைவான எந்தத் தீர்விற்கும் அவர்கள் இணங்கிவரப்போவதில்லை என்பதில் கணேசலிங்கன் அவர்கள் மிகத் தெளிவாகவே இருந்தார். ஆனால் நானோ ஆகஸ்ட் 1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பின்னரே சண்முகலிங்கனின் இக் கருத்துநிலையுடன் உடன்பட முடிந்தது” என்றும் கூறுகின்றார் ராம் அவர்கள்.

”இலங்கை அரசியலின் சதாவதானி, பேதங்களற்று எல்லா மக்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட ஒரு தீவிர எழுத்தாளரின் இந்த நிலைப்பாட்டை அப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் கவனத்தில் எடுக்கவில்லை?” என்ற எனது கேள்விக்கு ராம் கூறுகின்றார்: "இலங்கைக்கான இந்தியத் தூதுவர்கள், அரசியல் பீடங்களின் உயர் அதிகாரிகள், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதிநிதிகள் போன்றோர் பலர் சென்னையூடாகச் செல்லும்போது என்னை வந்து சந்தித்துச் செல்வார்கள். அக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்வொன்றுக்கு இணங்கி வருவார்கள் என்ற நம்பிக்கை அல்லது கற்பிதமே அவர்களுக்கு இருந்தது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளும் தமது தரப்பில் மிகவும் சாணக்கியமாக் காய் நகர்த்தினார்கள் என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில் புலிகள் தரப்பின் கீழ் மட்ட உறுப்பினர்களையே அவர்கள் மூத்த அரசியல்வாதிகளுடன் சந்தித்துப் பேச அனுப்பிவைப்பார்கள். ஆனால் இந்த நபர்கள் அந்தவகைத் தொடர்புகளில் பெருமையும் திருப்தியும் அடைந்தார்கள். அக் கால ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் தீர்வுக்கான அரசியல் அமைப்பின் முன்மொழிவுகள் ஆகச் சிறந்தவையாகவும் மக்களுக்கும் அவர்தம் இறைமைக்கும் நல்வாய்ப்பினை வழங்குபனவாகவும் அமைந்திருந்தன. கணேசலிங்கன் அவர்களும் இதே கருத்தினையே கொண்டிருந்தார் என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் அது சிங்கள அரசியல் மற்றும் விடுதலைப் புலிகள் என்ற இரண்டு தரப்பினராலும் தூக்கி வீசப்பட்டது.”

விடுதலைப் புலிகள் சமரசத் தீர்வு ஒன்றுக்கு உடன்படப் போவதில்லை என்ற பட்டறிவு கணேசலிங்கனின் எழுத்துக்களில் பிரதிபலித்தது. தமிழர்கள் படும் துன்பங்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் நேரடி அனுபவமாகவே கண்ட அவருக்குத் தேர்வுக்கான இடைபாதை அந்த எரிநெருப்பில் இருக்கவில்லை. சிங்களப் பேரினவாத்தினதும் அரச படைகளின் மனித விரோதப்போக்குகளையும் சிவிலியன்கள் மீதான புலிகளின் வன்முறைத் தாக்குதல்களையும் அவர் கண்டித்தபடியே இருந்தார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ்ச் சமூகம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறதே என்ற சூனிய மனநிலை அவருக்கும் இருந்தா என்று கேட்டதற்கு, ராம் சொல்கிறார்: ”கணேசலிங்கன் மனமுடைந்து , சோர்ந்துவிடவில்லை. நிதானமும், யதார்த்தமும் அவரிடமிருந்தன. ஆனால் இதுவரை கிடைக்கக் கூடியனவாக இருந்தவை முற்றிலும் மாறி விட்ட புதிய களநிலையில், இனியும் அப்படி இருக்கப்போவதில்லை என்ற யதார்த்த நிலையினை எல்லோரைப் போலவும் அவரும் ஜீரணித்தே ஆகவேண்டியிருந்தது.”

மாகாண சபைத் தேர்தலினூடக உருவாக்கப்படும் மாகாண சபைகளுக்குங் கூட அது ஒரு மாநில சுயாட்சி என்று சொல்லமுடியாதபடி மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டன. ” இதனால் அதிலும் நம்பிக்கை கொள்ள முகாந்திரங்கள் இல்லாது போயின. ஆயினும் கணேசலிங்கனுக்கு இயங்கிக்கொண்டிருப்பது என்பது ஒரு கொடை. எழுதிக்கொண்டிருப்பது அவர் இயக்கம். அவரது ஆர்வத்தளங்கள், அரசியல் , கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்று பலவகைப்பட்டன. எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் அவர் எழுதிக்கொண்டேயிருந்தார்.

கணேசலிங்கனது இளங்காலத்தில் மகாத்மா காந்தியே அவரது ஆதர்ஷம். ஜனவரி 30 1948 இல் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஓர் அஞ்சலிக்கூட்டமொன்றை ஒழுங்குசெய்திருக்கின்றார். விஜிதா சிவபாலனும் வரீதா ஏ. ஹாக்கும் கணேசலின்கனின் 75ஆவது பிறந்தநாள் மலரிற் காட்டியபடி, “ ஜமுனை நதிக்கரை ஓரத்தில் மகாத்மா காந்தியின் பௌதிக உடல் தீப் பிழம்புகளில் வேகின்ற வேளையில் நான் இங்கே உரையாற்றுகிறேன்” என்று கணேசலிங்கன் பேசியிருகின்றார். இந்த உரையைடுத்து கணேசலிங்கன் யாழ்ப்பாணத்தில் ‘மகாத்மா காங்கிரஸை’ என்றொரு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பைப் பயன்படுத்தியும் பல பொதுக்கூட்டங்களை நடாத்தியும், காந்தீயத்தை முன்னெடுத்துச் செல்லப்பாடுபட்டார். கோவில்களில் வேள்வியின் பேரில் மிருகங்கள் பலியிடப்படுவதைக் கண்டித்தும், அதைனை நிறுத்தவும் கோரி ஒரு வெகுஜனப் போராட்டத்தையும் ஏற்பாடு செய்தார். ’இவை போன்ற போராட்டங்களின் உடனடிப் பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடினார் கணேசலிங்கம் என்பதே கவனத்திற்குரியது.’ என்ற குறிப்புக்களும் அந்த மலரிற் காணப்படுகின்றன.

    மார்க்சியப் படிப்பு


பொதுவாகவே வர்க்கப் போராட்டம், சமத்துவம் என்ற இதுசாரிப் புரட்சிகரக் கருத்துக்களில் தொடங்கி உலக சகோதரத்துவம், அஹிம்சை, அமைதி என்ற காந்தீயத்தில் ஈடுபாடு வருவது வழக்கம் என்றாலும், கணேசலிங்கனைப் பொறுத்தவரை அது மறுதிசையாக, காந்தீயத்தில் இருந்து மார்க்சிஸம் நோக்கியதாக நடந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசனுடன்’ இருந்த தோழமைதான் அவரை மார்க்சியம் பயில வைத்து. அன்டோனியோ கிராம்சியின் மேலாதிக்கக் (hegemony) கோட்பாடு, லூயி அல்தூசரின் சித்தாந்த அரசின் எந்திரங்கள், அடோர்னோவின் சமூகவியற் கோட்பாடு மற்றும் பிற்கால முதலாளித்துவத்துடன் மார்க்ஸியத்தினை இணைத்து நோக்கிய சிந்தனைகள் போன்றவை அவரது ஆர்வப்புலங்களாக இருந்திருக்கின்றன.

’நியூ லெஃப்ட் ரிவ்யூ’ போன்ற இதழ்களின் சந்தாதாராக இருந்து, விமர்சன மார்க்சியக் கோட்பாடுகளை தமிழ்ப் பரப்பிற்கும் அறிமுகஞ்செய்து கொண்டிருந்தார். அதைவிட இயங்கியற் பொருள்முதல்வாதத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் சாதாரண வாசகர்களும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளும்படி எழுதிக்கொண்டிருந்தார். ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களைப் போலவே, அவர் தனது மகனுக்கும் இரண்டு மகள்களுக்கும் கடிதங்கள் வடிவில் இவற்றை எழுதினார். அவரது இலக்கியப் படைப்புகள் பிரச்சார எழுத்துக்கள் என்று ஒரு கருத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்தது. உலகமயமாக்கல் முதல் அரசியல் வரையிலான விடயங்களில் தனது கருத்துக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்வதே அவரது எழுத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறுவார். வரவிருக்கும் கதையின் தொனியை அமைத்து, அவரது நாவல்கள் பற்றிய விரிவான அறிமுகத்தில் இந்தக் கருத்துக்களை அறிமுகப்படுத்தி விவாதிப்பது அவரது வழக்கம். எடுத்துக்காட்டாக அவரது ”தாமரை- அறிவும் முரண்பாடும்” என்ற நூலில் பகைமுரண்பாடு, நேசமுரண்பாடு என்ற மாவோ சேதுங்கின் இரண்டு வகையான முரண்பாடுகளை விளக்கிக் காட்டுகிறார்.

நாவலாசிரியர், எழுத்தாளர் என்று முத்திரை பதித்த கணேசலிங்கனின் இன்னொரு விருப்ப அர்ப்பணிப்புத்துறை நூல்வெளியீடு. பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற முன்னணி அறிஞர்களின் எழுத்துக்கள் பரந்து விரிந்த வாசகப் பரப்பினைச் சென்றடையும் வழிவகைகளையும் மேற்கொண்டார். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இவரது ஆத்ம நண்பன். இவரது புரட்சிகரமான முன்னோடி நாவலாக அக்காலத்திற் கருதப்பட்ட 1966இல் வெளிவந்த ”செவ்வானம்” நாவலுக்கு பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் நீண்ட முன்னுரையினை எழுதியிருகின்றார். ’போர்க் கோலம்’, ’மண்ணும் மக்களும்’ இலங்கையில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. ”வளமான மொழியாகவும் விஸ்தாரமான உள்ளடக்கமாகவும் எங்களுக்குத் தோன்றுகின்ற அவரது மேற்படி நாவல்கள், இலங்கையில் ஆட்சிபீடத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் கூட அச்சமூட்டின போலும்!” என்று இத் தடைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார் சக, சமகால எழுத்தாளர் ஒருவர்.

சிறந்த எழுத்தாளரான கணேசலிங்கன் வருடத்தில் இரு வாரங்கள் நூல் எழுதுவதற்கென்றே கொடைக்கானலுக்குச் சென்றுவிடுவார். இதுவரை 71 நாவல்களும் 7 சிறுகதைத் தொகுப்புக்களும் 8 சிறார் நூல்களும் 22 கட்டுரைத் தொகுப்புக்களும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

கட்டுரைத் தொகுப்பில், திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் மற்றும் பகவத் கீதையும், மாக்கியவல்லியின் இளவரசனும் என்ற ஓர் ஒப்பியல் இலக்கிய ஆய்வுக் கட்டுரையும் கிடைக்கின்றது.

1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த இனச் சுத்திகரிப்பு சங்காரத்தின்போது ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக கணேசலிங்கன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். கலவரத்தின்போது கொழும்பில், அவரது குடும்பத்தினருக்கு கல்வியிற் சிறந்த சிங்களக் குடும்பம் ஒன்று அடைக்கலம் கொடுத்து, ஆபத்து நீங்கும் வரை அவர்களைப் பேணிக் காப்பாற்றியது. இனச் சுத்திகரிப்பு என்ற இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் கணேசலிங்கன் அவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். இன்றைய கோவிட்-19 என்ற பெருந்தொற்றுக் கால முடக்கத்திற்குச் சற்று முன்புவரை சென்னையில் உள்ள இந்து பத்திரிகைக் குழும தலைமையகத்தின் “ஃப்ரண்ட்லைன்” அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

கணேசலிங்கன் அவர்கள் 9 மார்ச் 1928 இல் யாழ்ப்பாணத்தின் வடக்கே உரும்பிராயில் பிறந்தவர். இன்றைய பல்கலைக்கழக வளாகமாக இருக்கும் அன்றைய பரமேஸ்வரா கல்லூரியில் கல்வி கற்றவர். புலமையின் காரணமாக இரட்டை வகுப்பேற்றம் வென்றவர். 1949 இல் இலங்கையின் அரச பணித்துறைக்குள் உள்வாங்கப்பட்டார். ”ஒவ்வொரு மே மாதமும் நடத்தப்படும் அகில இலங்கைப் பரீட்சை மூலம் தேர்வு செய்யப்படும் வெகு சிலரில் தாம் இருவர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டோம்” என்கிறார் அவரது பால்யகால நண்பன் என். பவான் அவர்கள்.

கிராமங்களில் பிறந்து வறிய குடும்பப் பிண்ணியில் இருந்து கிளம்பி வரும் கணேசலிங்கன் போன்ற ஒருவர் கல்வியில் உயர்ந்து, அரச பணிக்கான விருதை வெல்வது என்பது மிகப் பெரிய சாதனைதான். கணேசலிங்கன் அவர்கள் இலங்கைத் திறைசேரியில் அரச பணியில் இருந்து 1981இல் ஓய்வு பெறுவதற்கு முன்னர் கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் பணியாற்றியிருகின்றார். குமரன், குந்தவி, மான்விழி அவரது பிள்ளைகள்.
எழுத்தாளர் எஸ்.கணேசலிங்கன்(1928-2021) அவர்கள் ஈழப்போராட்டத்தின் நெடிய ஆண்டுகளின் செல்நெறியினை மார்க்ஸிய நோக்கிற் கண்டு அதன் வளர்ச்சிப் போக்கினைத் தனது படைப்புக்களில் திறம்பட வெளிக்கொணர்ந்தவர் என்பது என்றும் மனங்கொள்ளத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக