பக்கங்கள்

செவ்வாய், பிப்ரவரி 01, 2022

நூல் அறிமுகம்: வீ. சின்னத்தம்பி அவர்களின் ‘ஓ...கனடா!’



1994ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட ’ஓ…கனடா’ என்ற இந்த நூலின் அமைப்பு, இலங்கையின் வடக்கில் அன்று நிலவிய மக்களின் பொருளாதார, வாழ்க்கை, கலை முயற்சிகள் போன்றவை இருந்த நிலமையினைத் தன்னதும் நிலையே என ஒரு எழுத்தாளன் எமக்கு இலகுவாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கின்றது. இன்றைய கவர்ச்சி எதுவுமில்லாத அன்றைய நமது பழைய கழுதைத் தாளில் ஒரு நாவல்! எண்ணிப்பார்த்தால் சரியாக முப்பத்தொரு வருடங்களுக்கு முன் இந்த நாவல் எழுதி முடிக்கப்பட்டிருகின்றது.





இரண்டு உலகப் போர்களின்போது ஜெர்மனியில் காகிதம் மற்றும் இன்னபிற பற்றாக்குறைகள் பெருமளவு இருந்த காலங்களில் வெளிவந்த பல புத்தகங்களைப் பார்த்தும் பரிதாபப் பட்டும், அதேவேளை வியந்தும் இருக்கின்றேன். இலங்கையிலும் வடகிழக்குப் பகுதிகளில் 90 களில் நடைமுறையில் இருந்த பொருளாதாரத் தடை, அச்சுத் தாள்கள் வரத்து இல்லாத நிலையினையும் ஏற்படுத்தியது. அவை இல்லாமையால், அங்குவெளிவந்த நூல்கள்; மாத இதழ்கள் கோடு வரைந்த தாள்களில் வெளிவந்தவையெல்லாம் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அவற்றின் மாதிரிகளை நாம் பாதுகாக்கவேண்டும்.

போரும் பொருளாதாரத் தடைகளும் கட்டுப்பாடுகளும் உறுதியற்ற வாழ்வும் கொண்ட ஒரு காலப்பகுதியில் இந் நாவல் நூலாக வெளிவந்திருப்பினும், 1948இல் இலங்கையின் சுதந்திரம் அடைந்தது தொடக்கம் இனவிடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்கள் மற்றும் எழுபதுகளின் இறுதியில்(77…) கடல் கடந்த இடப்பெயர்வு வரையிலான காலப்பகுதியில், இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வு எவ்வாறு இருந்தது என்ற கதையாக இந் நாவல் எழுதப்பட்டிருகின்றது.


கனடாவில் இருந்து இலங்கை வரும் தனது தம்பியையும், அவரது கனேடிய இளம் மனைவியையும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து கூட்டி வருவதற்காக அண்ணா தம்பிராசா நீண்ட காலத்தின் பின் புகைவண்டி மூலம் கொழும்புக்குச் செல்கின்றார். அப்பயணத்தின் போது அவரது பழைய நினைவுமீட்டலாக கதையின் முற்பகுதி சொல்லப்படுகின்றது. அவரது பார்வையில் எல்லாமே மாறிகிடக்கின்றது. ஆனால்…வடை விற்பவர்களும், இளநீர் விற்பவர்களும் அன்றாடம் காய்ச்சிப் பரம்பரையாக இன்றும் தொடர்கிறார்கள். அவரது இந்தப் பழைய நினைவுகளின் மீட்டல் கடந்த காலத்தினையும் சம காலத்தினையும் சமாந்தரமாக எம்முன் நிறுத்தி, நாம் அறிந்ததும் அறியாததுமான ஒரு பெரிய காலஇடைத்துண்டினைக் குறுக்கறுத்து ஒப்பீட்டுக் காட்சிகளாக எமக்கு வழங்குகின்றது.

முருகேசு ஒரு சராசரி யாழ்ப்பாண விவசாயி. மஹாகவியின் கவிதையொன்றின் வரிகள்போல ”…சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது, எனினும் பாறை பிளந்து பயன் விளைக்கும்…” கடின உழைப்பாளி. அவர் தனது மூத்த மகனை வெள்ளைக் காற்சட்டையும் வெள்ளைச் சேர்ட்டும் அணியும் அரசாங்க மேசையடி வேலை பெற்றுக் கொள்ளும் வரை படிப்பிக்கின்றார். மகன் தம்பிராசா அவர்களுக்கு கொழும்பில் எழுதுவினைஞராக (Clerical Servant) வேலை கிடைக்கின்றது.

இலங்கையில், அறுபதுகள் என்பது பெரிய அரசியல் நெருக்கடிகள் நிறைந்த காலம்…பண்டாரநாயக்கா கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம் முழுச் சிறுபான்மை இன மக்களையும் பாதித்திருக்கின்றது. ”அபே ஆண்டுவ” என்ற அக் காலத்துக் கோஷம், காலனித்துவ எதிர்ப்பு என்பது உண்மையானது எனின், அது பெற்றிருக்கவேண்டிய முற்போக்கு வடிவமோ சுதேச வடிவமோ பெறவில்லை. அதற்கு நேர் எதிராக, அக் கோஷம் பெரும்பான்மை இனத்துவத்தின் மிக மோசமான திமிராகச், சாதாரண மக்களில் இருந்து உச்ச அரசியல்வாதிவரை வெளிப்பட்டதை மத்தியதர வர்க்கப் பணியாளர்கள் நன்றாகவே அறிவார்கள். தம்பிராசா ஒரு முதலாம் தர அரச எழுதுவினைஞர். வேலையிடத்திலும் புறத்தேயும் பல்லின மக்களுடனும் பழகி, எமது தேசம் , எமது மக்கள், எமது அரசு, எமது பாதுகாப்புப் படையினர் என்ற எண்ணத்தில் இருந்தவர். ஆனால் இனத்துவ அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கியது.

1956 இல் ’சிங்களம் மட்டும்’ சட்ட அமுலாக்கத்திற்குப் பின்னர், இலங்கையின் பல்லின மக்களுக்கு இடையிலான பரஸ்பர மதிப்பளித்தல்களிலும் உறவுகளிலும் தேசிய ஒருமைப்பட்டு மனோநிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு ஆள்பவர்களும், ஆளப்படுபவர்களுமான ஒரு மறைமுகப் படிநிலை உருவாக்கப்பட்டுவிடுகின்றது. 1958இல் ஏற்பட்ட இனக்கலவரமும் மற்றும் இனவேற்றுமையும் தம்பிராசாவை தனது வேலையினைத் துறக்கவைக்கின்றன. அதன் பின்னர் இலங்கையின் வன்னிப் பகுதியில் அவரது கமத் தொழில் முயற்சியும் கைகூடாமற் போகவே யாழ்ப்பாணத்து இரும்புக்கடை ஒன்றில் அவர் வேலை செய்கின்றார்.

அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையில் எழுத்தாளார்களாக இருந்தவர்கள் பலர் இந்த எழுதுவினைஞர்களும் கொழும்பில் பணுபுரிபவர்களுமாக இருந்தார்கள். சொந்தக் கிராமத்தில் மனைவி, பிள்ளைகள் வசிக்கும்போது, உத்தியோகம் காரணமாகக் கொழும்பிற் தனித்து வாழவிதிக்கப்பட்டவர்களின் கதைகள் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. கொழும்பு வாழ்க்கை, தனிக் குடிதனம், சமறி என்கிற இளஞர்களின் கூட்டு வாழ்க்கை, புகையிரதப் பயணம் என்று இன்னோரன்ன கதைகள் எழுதப்பட்டிருகின்றன. அண்மையில் மீண்டும் வாசித்த எஸ்.பொன்னுத்துரையின் ”சடங்கு” நாவலில் கூட கொழும்பு-காங்கேசன்துறைப் புகையிரதம், கொழும்பில் பணியாற்றும் மனிதர்களும் வடக்கில் வாழும் அவர்களது குடும்பமும் எவ்வகை அவலங்களைத் தமக்குக் கிடைத்த வாழ்வாகக் கொள்ளவேண்டியிருந்தது என்று காட்டப்படுகின்றது. எஸ். அகஸ்தியர், சட்டநாதன், எஸ்.பொன்னுத்துரை, செ.யோகநாதன், கோகிலா மகேந்திரன், செ.கணேசலிங்கன், நெல்லை க.பேரன் என்று பலரைக் குறிப்பிடலாம். வடக்கில் நிலவுவது மணியோடர் பொருளாதாரம் எனவும் யாழ்தேவி என்ற புகையிரதம் வடக்கே ஓடாவிட்டால்…குழந்தைகளே பிறக்காது என்று அக் காலத்தினைத் தமாஸாகவும் குறிப்பிடுவார்கள்.


தம்பிராசாவின் சசோதரன் இலங்கையில் விரிவுரையாளராகச் சிலகாலம் பணியாற்றிய பின்னர் கனடாவிற்குப் போய் அங்கேயே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றார். இலங்கையின் வாழ் நிலமைகள் நாளுக்குநாள் மோசமடைந்துவரும் நிலையில் ஆண் பிள்ளைகளை உயிருடன் காப்பாற்ற ஒவ்வொரு பெற்றோரும் தமக்குத்தெரிந்த வழிகளில் முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

எது நடக்கக்கூடாது என்பதற்காக மனிதர்கள் தம்மிடமிருக்கும் அனைத்தினையும் இழந்துபடுகின்றனரோ இறுதியில் அதுவேதான் நடந்துவிடுவதை எப்படி மனிதர்கள் தாங்கிக்கொள்கின்றனர் என்பது புதிரானது. அது ”பயன் எதிர் விளைவு” என்பதிலும் பார்க்க அவலமானது. இலங்கையின் அரசியல் வரலாறும் அப்படித்தானே.

ஃபிரான்ஸ் காஃவ்காவின் குட்டிக் கதை ஒன்றில் எலிக்குஞ்சு ஒன்று தன் வளையை விட்டு வெளிவந்த சில கணங்களின் பின்னர் ஆபத்தை உணர்கின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உயிரை வெறுத்து அது ஓடும்…வேறு போக்கிடமோ இடைபாதையோ இல்லாது இருமருங்கும் நீண்டுயர்ந்த சுவர்கள் நடுவே, ஒருவழிப் பாதையின் அந்தலையில் தன் வளை இருப்பதாக எண்ணி ஓடிக்கொண்டே இருக்கும்…ஆனால் என்ன…! அந்த முனையின் மூலையில், வளையின் வாயிலில், அதிவேக ஓட்டத்தின் இறுதியில், ”நீ உனது ஓடுதிசையை மாற்றியிருக்கலாமே!” என்றபடி பூனை அதனைக் கவ்வும்.

கனடாவில் இருக்கும் தம்பி, தனது அண்ணா தம்பிராசா குடும்பத்தினரை கனடாவிற்கு அழைத்துவிட முயற்சிக்கின்றார். குடும்பத்தினருக்கு விசா அனுமதியும் கிடைக்கின்றது. தம்பிராசாவின் குடும்பம் படும் பெரும்பாலான அவஸ்தைகள் அனைத்துமே சராசரியாக முழுத் தமிழ் சமூகம் அனுபவித்தவையாகவே இருக்கின்றன. உருக்கமான இக் கதை புனைவெனவே கூறப்பட்ட போதும் எதுவும் கற்பனையாகவோ, மிகைப்படுத்தலாகவோ, கோட்பாட்டுக்கேற்ற நீட்டலோ குறைத்தலோ இன்றிய மிக இயல்பான கதையாகவே இருக்கின்றது.

நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்கள் பாரதிநேசன் என்ற புனைபெயரில் எழுதியவர். சீன வானொலிச் சின்னத்தம்பி அல்லது பீக்கிங் சின்னத்தம்பி என்று அறியப்பட்ட ஒலிபரப்பாளர், சீன வானொலிப் பணியின் நிமித்தம் சுமார் பதினந்து வருடங்கள் சீனாவில் வசித்தவர். நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். 1939இல் பிறந்த பாரதி நேசன் அவர்கள் தனது 62ஆவது வயதில் 2001ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் காலமானார். இறந்தவுடன் அவரது கண்கள் பார்வையற்றவர்களுக்கும் உடல் மருத்துவப் படிப்பிற்கும் தானம் செய்யப்பட்டதை இன்றும் நாம் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். இந் நூலிணை மீள் பிரசுரம் செய்வது காத்திரமான இலக்கியப் பணியாகவும் அமையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக