பக்கங்கள்

செவ்வாய், பிப்ரவரி 15, 2022

வீட்டுக்கு றேடியோ வந்த கதை

ஊரில் அந்தக் காலத்தில் றேடியோ வைத்திருந்தவர்கள் வசதியும் செருக்கும் கொண்டர்வர்களாகத்தான் தெரிந்தார்கள். வீட்டின் கூரைக்கு மேலால் ஒரு வயர் கிளம்பி இரண்டு பனைகளுக்கு மத்தியில் இறுக்கப்பட்டிருக்கும் இன்னொரு வயரோடு இணைப்பட்டிருக்கும். பனையோடு கட்டப்பட்ட கயிற்றின் ஒரு முனை வெள்ளைவேளேரென்ற இருபக்கம் துவாரங்கள் கொண்ட சோகிமாடு போன்ற மாபிள் இணைப்பொன்றுடன் பொருத்திக் காணப்படும். அந்த மாபிள் உபகரணத்தைப் பார்ப்பதில் எனக்கு அலாதிப் பிரியம்.

எங்கள் ஊரில் ஒரு விதானையார் இருந்தார். கிராமத் தலைமைக்காரன் என்றும் சொன்னதாக ஞாபகம். அந்த விதானையார் வீட்டில் றேடியோ இருந்தது. மாற்றலாகி வேறூர் செல்லவேண்டிவந்தபோது ரேடியோவை விற்றுவிடத் தீர்மானித்தார். அதனை வாங்கும் வல்லமை – பர்ஸஸிங் பௌவர்- கிராமத்தவர்களிடம் இருந்திருக்காது போலும். அதற்கு அவர் ஒரு உத்தி வகுத்தார். லொத்தர் முறையில் விற்றுவிடுவது. ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. ஆனாலும் அதனை வாங்குவதில் மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு இருக்கவில்லை. றேடியோ இல்லாத பிரமுகர்கள் வீடுகளிலும் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. விதானையரின் முகத்திற்காக அவர்கள் டிக்கெட்டுக்களை வாங்கியிருக்கக் கூடும்.

எங்கள் வீட்டின் பின் புறத்தில் பரந்து வளர்ந்து குடைபரப்பிய ஆலமரம் ஒன்று இருந்தது. அதுவே அற்புதமான கள்ளுக்கொட்டிலாகவும் இயங்கியது. வகைவகையான மனிதர்கள், ஆண்கள் காலையும் மாலையும் கூடும் கேளிக்கைச் சதுக்கம் அது. விதானையார் மேலதிக டிக்கெட் விற்க ஏற்ற இடமாகவும் அது இருந்தது. சீட்டுக்குலுக்கல் எங்கே இடம் பெற்றதோ தெரியவிலை. ஆனால் வெற்றி பெற்றவர் எனது அப்பா என்று தெரியவந்தது. இப்படித்தான் எங்கள் வீட்டுக்கு றேடியோ என்கிற பெருஞ்சொத்து வந்து சேர்ந்தது. வீதியில் நடக்கும்போது எனக்குப் பெருமையாக இருந்தது.

அதற்குரிய பெரிய பெட்டிபோன்ற பற்ரறியை வைப்பதற்கும் இடம் தேவைப்பட்டது. இடையிடையே வெய்யிலில் காயவைப்பார்கள். பின்பு எடுத்து மாட்டுவார்கள். எவரெடி, லக்ஸபானா என்றெல்லாம் பெயர்கள் கொண்டவை அவை. சிலவருடப் பாவனைக்குப் பின்னர் அதனைச் சாதாரண சின்ன பற்றிகளில் இயங்கும் ’ட்றான்சிஸ்டர்’ றேடியோவாக செல்வராசா சித்தப்பா மாற்றிக்கொடுத்தார். அந்தச் செல்வராசா சித்தப்பா இந்தியாவில் கேரளாவிற்குச் சென்று குடியேறிக் காணாது போய்விட்டார். எங்கள் குடும்பமும் வேறெங்கோ குடியேறிச் சென்றனர் அந்த றேடியோவுடனும்தான்.

மூன்று ஏக்கர் காணியின் ஒரு மூலையில் தோட்ட வேலையில் இருந்த அப்பாவின் கூப்பிட்ட குரலுக்கு, மறு மூலையில் றேடியோ மயக்கத்தில் இருந்த தங்கை பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அலவாங்கு வைத்து அந்த றேடியோ அடித்து நொருக்கப்பட்டதுடன் அந்த ஊரில் ரேடியோவுடனான தங்கள் வாழ்வு முடிவிற்கு வந்தாக நேரில் இந்தக் கண்றாவியைக் கண்ட என் தம்பி பிற்காலத்தில் என்னிடம் கூறினான்.

NEXT SUNDAY என்ற ஆர்.கே.நாராயன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பில் ’றேடியோ லைசென்ஸ்’ என்ற கட்டுரை காணப்படுகின்றது. 1950களில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இன்றைய தலைமுறைக்குத் தெரியாத சமாச்சாரங்கள் பல இருப்பதால் அதனை இங்கே தருகின்றேன்.

றேடியோ லைசென்ஸ்

றேடியோ அனுமதிப் பத்திரத்தினைப் புதுப்பிப்பதற்கு எனக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைக் கால அவகாசத்தின் கடைசி நொடிகளைக் கடந்துகொண்டிருக்கிறேன் என்பது திடீரென எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அருகில் இருந்த அஞ்சல் அலுலகத்திற்குச் சென்று உரிய படிவத்தைத் தந்துதவும்படி கேட்டேன். பணியிடத்தில் இருந்தவர் கொஞ்சம் தயங்குவது தெரிந்தது. சிலவேளை இவன் பேப்பர்கள் சேர்ப்பவனாகவோ அல்லது அவற்றை (அலுவலக மொழியில் சொல்வதானால்) ஒரு-பக்கப் பேப்பராகப் பயன்படுத்தும் ஆசாமியாக நான் இருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்திருக்கலாம்.
ஆனாற் படிவத்தின் ஒவ்வொரு பக்கமும் கல்வெட்டு எழுத்துக்கள் போன்ற எழுத்துக்களாலும் புள்ளிகளினால் ஆன கருங்கோட்டு வடிவங்களாலும் நிரம்பி மூச்சுத்திணறடிக்கும் இந்தப் படிவத்தை அப்படியெல்லாம் செய்துவிடமுடியாது என்பதைச் சற்றே தாமதமாகத்தான் நான் கண்டுபிடித்தேன்.

முன்னைய அனுமதிப் பத்திரத்தினை நான் இதே தபால் நிலையத்தில் தான் பெற்றுக்கொண்டேனா? அப்படி இங்கேயில்லையென்றால் அப்புறம் எங்கே பெற்றுக்கொண்டேன் என்று அந்தக் கவுண்டரில் இருந்தவர் மிக நிதானமாக என்னைப் பார்த்துக் கேள்விகளை அடுக்கினார். இது அவர் நடத்தும் சகித்துக்கொள்ளமுடியாத குறுக்கு விசாரணையின் ஒருபகுதி என்றறிக. போன வருஷம் இந்த றேடியோ செட் தொல்லை எல்லாம் எனக்குப் பெரும்பாலும் இருந்திருக்காது. அல்லது சிலவேளை எனக்கான அனுமதியைப் பெற நான் வேறொருவருக்கு அதிகாரளித்திருக்கவும்கூடும். ஏனோ நான் பொய்யான தகவல்களை அளித்துக்கொண்டிருப்பதால் இதோ நான் குற்றவாளியாக்கப்பட்டுக்கொண்டிருப்பதான ஓர் அச்ச உணர்வு எனக்குள் பரவியது. எப்படியோ எனது கொஞ்சப் பதில்களுக்குப் பின்னர் உடனேயே கவுண்டரில் இருந்தவர் ஒரு படிவத்தைக் கையளித்தார்.

படிவத்தினைப் பார்த்த உடனேயே, எனது றேடியோ இருக்கும் இடத்தினை, அதாவது எனது வீட்டினை, ஏன் ’வயர்லெஸ் ரிசீவிங் ஸ்டேஷன்’ என்று படிவத்தில் குறிப்பிடுகிறீர்கள்? என்றும் இந்தப் பெரிய பிஸ்னெஸூக்கு அது ஒரு கெத்தாக இருக்கும் என்பதற்காகவா இந்தப்பெயர்? என்றும் நான் இங்கிருந்து எனது வீட்டிற்குத் திரும்புகிறேன் என்பதை இனி, ”வயர்லெஸ் ரிசீவிங் ஸ்டேஷ்னுக்குத் திரும்பிச் செல்கிறேன்” என்றுதான் உங்களிடம் கூறவேண்டுமா? என்றும் அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டுவிடத்தான் பார்த்தேன். ஆனால் இவை இந்த அனுமதி விண்ணப் படிவத்தினை அவமதிப்பதாகவோ அல்லது அஞ்சலகத்தில் அநாவசியமாக ரகளை பண்ணியதாகவோ கணிக்கப்பட்டுத் தண்டனைபெறும் ஆபத்து இருப்பதென்பதால் எனது கேள்விகளை என்னுள்ளேயே அமுக்கிக்கொண்டேன். அவற்றை விழுங்கிவிட்டுப் படிவத்தினை நிரப்பத் தொடங்கினேன்.

முதலில் எனது பெயர் எழுதப்படவேண்டும். அதுவும் தனித்தனி எழுத்துக்களில் எழுதப்படவேண்டுமென்று கட்டளையிடப்பட்டிருக்கின்றது. எனது பெயரைத் தனித்தனி எழுத்தாகப் பிரித்து எழுதும்போது பிழைத்துவிட்டது.(எப்பொழுதும் தனி எழுத்தில் கவனமாக எழுதப் புறப்பட்டால் இலகுவான எழுத்தைத் தவறவிடுவது போன்ற பிழைகள் நேர்ந்துவிடுகின்றன.) படிவம் பாழாகிவிட்டது. ஒரு பௌவியமான மன்னிப்புடன் இன்னொரு புதிய படிவத்தினைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்று, எனது பெயரை மிகுந்த கவனமாக எழுதிவிட்டேன். இனி வீடு, வீதி, வட்டாரம், ஊர் நகரமெல்லாம் யோசித்து எழுதவேண்டும்.

பிரச்சனை என்னவென்றால் பல நூற்றாண்டுகளாக நமது வீதிக்குப் பெயரில்லை. நகரசபைக்கும் தெருக்களுக்குப் பெயர் வைப்பதில் எந்த நம்பிக்கையுமில்லை.
எனது தெரு வடக்கிலிருந்து தெற்கே செல்லும் ஐந்து வீதிகளில் ஒன்று. அத்தோடு வாணி விலாஸ் ரோட்டில் தண்ணீர்த் தொட்டிக்கு வலப்பக்க ரோட்டு என்றே சர்வ உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இப்படியெல்லாம் அப்பட்டமான உள்ளூர் வழமையில் படிவத்தில் எழுதமுடியாது. எனவே ’முதலாம் குறுக்குத் தெரு’ என்று எழுதிவிட்டேன். ஆரவாரம் எதுவுமில்லாமல் எனது வீதிக்குப் பெயர் சூட்டியது பெருமிதமாக இருந்தது. ஐந்தாவது குறுக்குத்தெரு ஆள் ஒருவர் தனது குறுக்குத் தெருவுக்கு முதலாம் குறுக்குத்தெரு என்று பெயர் எழுதும் வரைதன்னும் நான் சூட்டிய இப் பெயர் நிலைக்கத்தான் போகின்றது. எப்படி இருந்தாலும் என்னுடையது முதலாவதான முதலாம் குறுக்குத்தெருவாகவும், அவர்களுடையது இரண்டாவது முதலாம் குறுக்குத்தெரு என்தில் நான் இனி ஐயமுறத்தேவையில்லை.

அடுத்து என்னைக் குழப்பிய பெட்டி எனது தொழில் என்ன என்பது. (நல்ல இசைக்காக வானொலிக்கருகிற் காத்துக் கிடப்பது என் முக்கிய தொழில் என்று எழுதிவிட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்களாக்கும்?). தாய்மொழி ( ஐயோ, ஏன் இந்தப் புளித்துப்போன வார்த்தையை இன்னும் காவிக்கொண்டு வருகிறார்கள். இப்பொழுதெல்லாம் 'பிராந்திய மொழி' என்றெல்லவா கேட்க வேண்டும்?) மற்றும் வீட்டில் உள்ள அங்கத்தவர்களின் தொகை... (இதற்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?). இந்த கடைசிக் கட்டத்தில், தற்போது எங்களுடன் தங்கியிருக்கும் மச்சானின் மகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமா, அத்துடன் அவர்களது வயதுகளை மொத்தமாக் கூட்டினாலும் என் வயதைத் தாண்டாத வீட்டின் மிக இளைய உறுப்பினர்களான மூன்று பேரையும் மொத்த எண்ணிக்கையில் இருந்து கழித்து விலக்கிவிடலாமா? நான் ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் ஆள் போல் உணர்ந்தேன்.

எதுக்கு இவ்வளவு கேள்விகள்? வயர்லெஸ் ரிசீவிங் செட்டின் முக்கியமற்ற ஆப்பரேட்டர் நான். இந்த வயர்லெஸ் லைசென்ஸ் படிவத்தில் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்று சொல்ல நான் யார்?’ பணிவுடன் தலை தாழ்த்திப் படிவத்தை நிரப்பத் தொடங்கினேன்.

நிரப்புதலில் முன்னேறிக்கொண்டிந்த என்னை இன்னொரு கட்டம் வந்து தடுத்து நிறுத்தியது. 'வயர்லெஸ் ஸ்டேஷனில் வேலை செய்வதற்கு... (நிலையத்தின் லொக்கேஷன்)'

வீட்டின் விறாந்தையில் ஸ்டேஷன் வைக்கப்பட்டிருக்கும் என்று நான் சொல்ல வேண்டுமா அல்லது வேறு ஏதாவது எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று யோசித்தேன்.

இதையடுத்து வந்த கேள்விகள் எவ்விதத்திலும் இலகுவானவையாக இல்லை. ஒலிபரப்பு வாங்கியின் தொடர் எண், உற்பத்தியாளரின் பெயர், மாதிரியின் வகை, அவற்றின் தொகை, யாரிடமிருந்து வாங்கியது...இத்தியாதி…. இவை எல்லாம் எனக்குக் கடுமையான மனவுளைச்சலைத் தந்தன.

றேடியோ பரிவர்த்தனையின் அழியாத தன்மையைப் பற்றி யோசிக்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, ஆனால் என்னுடைய ரேடியோ பெயரிலிகளால் பொருத்தப்பட்ட டப்பா. இதையொத்த டப்பாக்களை விட இருக்கவேண்டிய இன்னும் இரண்டு சாமான்கள் குறைவானது இது. இதையெல்லாம் நான் எப்படி விவரிப்பத்தாம்?

ஒருவாறு படிவத்தைத் திருப்தியுடன் பூர்த்திசெய்துவிட்டேன். படிவத்தின் அடியில், 'வேண்டாத வார்த்தைகளை வெட்டிவிடவும் என்ற ஆரோக்கியமான ஆலோசனையைக் கண்ணுற்றேன். சொன்னபடி வெட்டவும் செய்தேன். விளைவாக படிவத்தில் எனது பெயர் மற்றும் வீட்டெண் மட்டுமே எஞ்சியிருந்தன. படிவத்தைத் தபால் கந்தோருக்கு கொண்டு சென்று பதினைந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அனுமதிப் பத்திரத்தைச் சட்டைப்பையில் திணித்துவிட்டு ஊதுகுழலுக்கு காசு கட்டியாச்சு இனி ஊதக்கேட்கலாம் என்ற மனத்திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக