பக்கங்கள்

வெள்ளி, பிப்ரவரி 18, 2022

சீன எழுத்தாளர் லாவோ ஷே (LAO SHE) அவர்களும் அவரது குறுநாவல் ’கூனற்பிறை’ (CRESCENT MOON)யும்

சீன எழுத்தாளர் லாவோ ஷே அவர்களது Crescent Moon என்ற குறுநாவலை ’கூனற்பிறை’ என்று தமிழில் மொழிபெயர்த்திருகின்றார் கே. கணேஷ் அவர்கள். இவர் புகழ் பெற்ற உலக இலக்கியங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து 22 நூல்களாக வெளியிட்டுள்ளார்.
சீனத்தின் புரட்சிகர எழுத்தாளர் லூ சூன் அவர்கள் சிறுகதைகள் ’போர்க்குரல்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது.’கூனற் பிறை’ என்ற குறுநாவலின் அறிமுகவுரையாக கே. கணேஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே மீளவும் வெளியிடுகின்றோம்.
இது இந்தக் குறுநாவலைப் புரிந்து கொள்ள எழுதப்பட்டதாயினும் சீனாவில் மன்னராட்சி முடிவிற்கு வந்த 1919க்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் ஓய்ந்து வெர்சைல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் சீனாவில் நிலவிய சமூக பொருளாதார அரசியல் நிலவரங்களையும், மறுமலர்ச்சி நாவலாசிரியர் லாவோ ஷே அவர்களது வரலாற்றையும் விரிவாகப் பேசுகின்றது. குறுநாவலின் கதையும் கூட 1920களிலேயே நடைபெறுகின்றது.
இந்தக் கட்டுரை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையும் சென்னை புக்ஸ்ஸும் இணைந்து வெளியிட்ட ”கூனற் பிறை” என்ற நூலில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது.


சீன எழுத்தாளர் லாவோ ஷே (LAO SHE) அவர்களும் அவரது குறுநாவல் ’கூனற்பிறை’ (CRESCENT MOON)யும்


எழுதியது:கே. கணேஷ்(1920-2004)



சீனாவில் தலைமுறை தலைமுறைகளாக நிலவிய மன்னராட்சி முறைக்கு 1911-ம் ஆண்டில் டாக்டர் சன்யாட் சென் தலைமையில் தோன்றிய புரட்சி முடிவு கட்டி அந்நாட்டில் முறையாக குடியாட்சியை நிலை நாட்டியது. அக்கடைசிக் காலத்தே ஆட்சி செய்தவர்கள் மஞ்சு என்ற சிங் பரம்பரையினர். சீனத்தின் சிறுபான்மை இனத்தவரான இவர்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்த வர்கள். மஞ்சு என்றும் சிங் பரம்பரையினர் என்றும் விளங்கிய அம்மன்னர் பரம்பரை கி. பி. 1644 முதல் 1911 வரை ஆட்சி புரிந்தது.
அந்த முடி ஆட்சி அரசின் ஊர்க்காவலரில் ஒருவராக ஊழியம் புரிந்தவர் லாவ் ஷவின் தந்தை. அவரும் மஞ்சு இனத்தவரே. அன்னியர்கள் ஊர் எல்லையைத் தாக்கிய பொழுது அவர்களை எதிர்ப்பதற்காகத் தம் பழைய துப்பாக்கிக்கு வெடி மருந்தைக் கெட்டிக்கும் பொழுது தோன்றிய விபத்தில் இறந்துபட்டவர். அச்சமயம் லாவ் ஷவின் வயது ஒன்று. 1899 ல் சீனப் புத்தாண்டு நாளன்று லாவ்ஷ பிறந்தார். சிங் சுன் என்பதே அவர் இயற்பெயர், லாவ் ஷ புனைபெயராகும்.

மஞ்சு ஆட்சி மங்கியதும் மன்னர் பரிவாரங்களாகப் பணிபுரிந்த அவ்வினத்தினர் ஏழ்மை நிலை அடைந்தனர். வீட்டுப் பணியாளர்கள், குப்பை பெருக்கிகள், பொட்டணிக்காரர்கள், ரிக்ஷாக் கூலிகள் என பல கீழ்நிலைத் தொழில் புரிந்து வயிற்றுப் பாட்டைக் கவனிக்க நேர்ந்தது. இந்நிலையில் தள்ளப்பட்ட ஷவின் அன்னையும் ஷவின் அக்காளையும் அண்ணனையும் உள்ளிட்ட நான்குபேர் கும்பியைக் காப்பாற்ற வீட்டுப் பணிபுரிய நேர்ந்தது.

ஆங்கில எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் கதைகளின் பாத்திரங்களைத் தனது வறிய சுற்றுச் சூழலில் வதிந்தவர்களினின்று பொறுக்கி எடுத்தது ஷவும் தனது பாத்திரங்களைக் குறிப்பாக அமெரிக்காவில் பிற்காலத்தே வெளியிடப்பட்ட உலகப் புகழ் தேடித்தந்த ரிக்ஷாக்காரப் பையன் (Rikshaw Boy) போன்ற புதினத்தில் வரும் ரிக்ஷாப் பையன் அவர் வாழ்ந்த குடியிருப்புச் சூழ் நிலை அண்டை வாழ்ந்தவர் அனுபவங்களே ஆம். இவ்வாறே அவர் வாழ்ந்து பழகிய ஏழ்மைச் சூழ்நிலையிலிருந்தவர்களின் துயர் நிறைந்த ஏழ்மை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுவனவாக அமைந்தன.

நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த அவரது தாயின் ஆதரவில் கல்விகற்ற லாவ் ஷவுக்கு ஒரு எளிய ஆசிரியத் தொழிலே கிட்டியது.மூவாயிரம் ஆண்டுகட்கு மேலாக நிலவிய முடியாட்சிக்கு முடிவுகட்டி 1911-ம் ஆண்டில் ஆசியாவின் முதல் குடியரசை சன்யாட் சென் தலைமையில் நடந்த புரட்சி உருவாக்கியது. முதலாம் உலகப் போர் 28 ஜூலை 1914ல் தொடங்கி 11 நவம்பர் 1918ல் முடிவுற்றது. வல்லரசுகளுக்கிடையே தோன்றிய வாணிபச் சந்தைப் போட்டியினால் விளைந்தது இது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா கொண்ட மத்திய வல்லரசுகள் ஒரு சார்பிலும்; இங்கிலாந்து, அதன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கனடா, இந்தியா, ஆஸ்த்ரேலியா உள்ளிட்ட நாடுகள், பிரான்ஸ், ருஷ்யா, ஜப்பான், பின்னர் இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிறுசிறு நாடுகள் நேசநாடுகள் என்ற அணியாக ஒரு சார்பிலும் போரிட்டதில் நேச நாடுகள் அணி வெற்றி கண்டது. இந்த நேசநாடுகள் அணியில் சீனாவும் பின் சேர்ந்து சண்டையிற் பங்கு கொண்டது. எனினும் போர் முடிந்து தோன்றிய வர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கையின்படி(Treaty of Versailles) தோல்வியுற்ற மத்திய வல்லரசுகளின் ஆட்சிக்குங் கீழிருந்த நாடுகளையும் அவற்றிலிருந்த உடைமைகளையும் 'மேற்பார்வை' என்ற பெயரில் தங்களிடையே பகிர்ந்து கொண்டன. சீனாவின் ஷான்டொங் மாநிலத்தில் நிலவிய ஜெர்மன் சொத்துக்களான சீன நாட்டுத் துறைமுகங்கள், புகைவண்டிகள், சுரங்கங்கள் அனைத்தையும் நேசநாடுகள் ஜப்பான் மேற்பார்வையில் விட்டுவிட்டன. நேசநாடுகளுடன் சேர்ந்து போரிற் பங்கு பற்றியிருந்தும் தன் சொந்த நாட்டு வளங்களையே தங்களுக்குத் திருப்பித் தராது அன்னிய நாடான ஜப்பா னுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததில் சீன மக்கள் ஆத்திரமடைந்திருந்தனர்.

இடையே ஜப்பானியர்களும் குடியரசுத் தலைவனாகவிருந்த யுவான் ஷி காயிடமும் அவன் இறந்தபின் முதல் அமைச்சரான துவான் சிஜூய் ஆகியவர்களிடமிருந்து பெருங்கடன்களையும் கையூட்டுகளையும் அளித்து ஜெர்மன் உடமைகளைப் பெறுவதற்கும் மற்றும் சீன நாட்டில் கால்கோள் கொள்ள ஏதுவாகப் பல சலுகைகளையும் ஜப்பான் பெற்றிருந்தது. தொழிலாளர்கள், மாணவர்களின் உரிமைக் கிளர்ச்சிகளை நசுக்கும் தமது அடிபடைகளை இக்கடன்கள் மூலம் பெருக்கிக் கொண்ட நாட்டைக் காட்டிக் கொடுத்த இந் நயவஞ்சகர்களும் ஜப்பானி யர்கட்கு விட்டுக் கொடுத்தனர்.

இந்நிலையில் 1919 மேத்திங்கள் நான்காம் நாள் வர்சேல்ஸ் உடன்படிக்கையை எதிர்த்து பீக்கிங் என்ற பெய்ஜிங் நகரின் தியான் அன்மென் சதுக்கத்தில் மூவாயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடினர். ஜப்பான்கைப்பற்றிய உரிமைகளையும், அவற்றைப் பெற உடந்தையாக இருந்த நாட்டின் எதிரிகளையும் எதிர்த்து முடிவுகள் எடுத்தனர். ஆட்சியாளர்கள் மாணவர்களைக் கைது செய்து துன்புறுத்தினர். ஆயினும் இவ்வியக்கம் நாட்டின் மற்றைய பகுதிகட்கும் பரவி வேரூன்றத் தொடங்கியது.

தொழிற்சாலைகள் நிறைந்த ஷாங்காய் பகுதிக்குப் பரவிய இவ்வியக்கம் ஜப்பானியப் பொருள்களை மறுப்பது, வல்லரசு எதிர்ப்பு, தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் எனப் பரவியது. சீனத்தின் வரலாற்றிலேயே தொழிலாளர்கள் தாங்களாகவே தொடங்கிய பணி முடக்கம் 1919 ஜுனில் ஷாங்காயில் நடந்ததாகும்.

இத்தகைய புதிய அரசியல் புத்துயிர்ப்புக்குள் கலை இலக்கிய மறுமலர்ச்சிக்கும் வித்திடப்பட்டது. மூவாயிர ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முடியாட்சியில் மூழ்கியிருந்த சீனம் குடியரசுத் தகுதிக்குத் தயாரித்துக் கொள்ள மாணவர்கள் தயாராகிக்கொள்ள முனைந்தனர். முடி, மன்னர்கட்கும் நிலக்கிழார்கட்கும் அனு சரணையாக வழிவழியாக வந்த தத்துவங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மாற்றவும் திருத்தவும் முற்பட்டனர். ஆண்களின் ஆளுகையின் கீழ் அடங்கியிருக்கும் வகையில் பெண்களுக்கு இரும்புக் காலணிகளால் கால்களை சுருக்கிவைத்தமை, ஆண்கள் நீண்ட சடைமுடி வைத்தமை போன்ற பழக்கவழக்கங்கள், ஆண்மையும் அறிவும் மங்கித் தமக்கு என்றும் அடிமைத் தொழில் புரியும் எண்ணத்துடன் வெள்ளையர் நுழைத்த அபினிப் பழக்கம் ஆகியவற்றினால் தோன்றிய தாழ்வுணர்ச்சிகளைப் போக்க முற்பட்டனர்.

அச்சுக்கலை, வெடிமருந்து போன்றவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய சீனா மேலை நாடுகளின் தொழிற் புரட்சி வளர்ச்சிப் பாதையை நோக்காது அலட்சியம் செய்திருந்துவிட்டது. நாகரிகத்தில் முதிர்ச்சி பெற்று விட்ட தன்னம்பிக்கையில் தோன்றிய தற்செருக்கில் பிற நாட்டவர்களை "வெளிநாட்டுப் பிசாசுகள்" என இகழ்ந்து ஒதுக்கி மூங்கித் திரையினூடே தூங்கியிருந்தது. வானவேடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திய வெடி மருந்துகளை வஸ்கோடகாமா போன்ற வெள்ளையர்கள் கற்றுக்கொண்டு சீனர்களின் கோட்டைக் கொத்தளம் களைத் தகர்ப்பதற்குத் தொடங்கினர். நாட்டைத் தம் வசப்படுத்தி மூலக் கனிவளங்களைக் கொள்ளை கொண்டு அந்நாட்டு மக்களையே குறைந்த ஊதியத்தில் கூலிகளாக அமர்த்தியும் தம் பண்டங்களின் விலைப்படு சந்தையாகவும் இவர்களுக்குத் தரகர்களாக ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் துணை செய்தனர். உரிமை வேட்கைக் குரல் உரத்துக்கேட்டால் தங்கள் படைகளின் அடியாட்களை அமர்த்தி வெஞ்சிறையில் அவர்களை வாட்டி வதைத்தனர். மீறினால் சுட்டுக் கொன்றனர்.

நேர்மை, ஒழுக்கப்பண்புகளை உணர்த்தும் கன்பூஷியஸ், தாவோ தத்துவங்களின் உள்ளார்ந்த உண்மைகளை விடுத்து தங்கள் சுரண்டல்களுக்குச் சார்பாக தங்களுக்குக் கீழ்ப்படிந்து பணிபுரியும் வண்ணம் அவ்வறியவர்களது பெற்றோர் முதியோர் பேணப் பணியுணர்வு போன்ற அறிவுரைகளை மட்டும் வலியுறுத்தி ஆயகலைகள் அறுபத்து நான்கினுள்ளும் புகுத்தி வளர்த்தார்கள்.

ஆட்சி நெறிப்படுத்தி நடத்த வேண்டிய அறிஞர்கள் மட்டும் பயில்வதற்கு வாய்ப்பான கல்வி முறையில் பண்டித மொழியே நிலவியது. எனவே படிப்பின் வாய்ப்பு சிலருக்கே கிட்டமுடிந்தது. செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றறிவே பெற்றனர். மேலை நாட்டுக் கைத்தொழிலின் பெரும்பேறுகள் நாட்டில் நுழையவில்லை.
முதலாம் பெரும்போர் நடந்த காலத்தே பிரான்ஸ், பிரிட்டன், ருஷ்யா போன்ற நாடுகளுக்குச் சீனாவினின்று 1,75,000 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களது மேலை நாட்டு வாழ்க்கையும் சமூக அனுபவங்களும் தொழில் துறையிலும் வாணிபத்திலும் முன்னேற வேண்டும் என்ற உந்து சக்தியாகத் திகழ்ந்தன.
ஆண்டை அடிமை நிலக்கிழார் அமைப்பில் வழிவழியாக ஊறிய அவர்களது உள்ளப் பாங்கும் உறங்கிப் போயிருந்தது. அவற்றை உசுப்பி எழுப்பும் வகையில் அறிவுப்புரட்சியையும் தோற்றுவிக்க மே நான்கு இயக்கம் (The May Fourth Movement) அடித்தளமிட்டது. பண்டித நடையில் பலருக்குப் பயன்படாதிருந்த சீன மொழியைப் பாமரரும் உணரும் வகையில் 'பய்ஹுவா'(BAIHUA) என்ற எளிய நடையில் முக்கலைகளையும் வளர்க்க அறிஞர்கள் முனைந்தனர்.
இம்மே நான்கு இயக்க காலத்தே பல நூற்கள், ஏடுகள், வெளியீடுகள் எனச் சீனாவில் தோன்றின. மேலை நாட்டில் நிலவிய புதிய சமூகத் தத்துவங்களான தொழிற்சங்க இயக்கம், சோஷலிசம், கம்யூனிசம், மானிதம், பெண்விடுதலை போன்ற இயக்கங்கள் குறித்தும் மக்களிடையே அறிவு தோன்றிப் பரவின.
இத்தகைய காலத்திலேயே நவசீனத்தின் நாயகர்கள் பலர் உருவாக்கினர் சீன இலக்கியத்து மறுமலர்ச்சி தந்தையான மாமேதை லூசுன் (1881-1936) அக்காலத்தே வாழ்ந்த சீனமக்களது உள்ளப் போக்கை உணர்த்தும் 'போர்க் குரல்' என்ற சிறுகதைத் தொகுப்பினையும் பிற் போக்கு வாதிகளைச் சுடுகின்ற சொற்களினால் வில்லம்புகளைவிட வலிய சொல்லம்புகள் கொண்ட கிண்டல் கட்டுரைகளையும் கவிதைகளையும் பெருமளவில் எழுதினார்.

பழமையிலே புதுமை புகுத்தி நாட்டுக் கூத்துக்கள், நாட்டுப் பாடல்கள், மரச்செதுக்கு வரைவுகள் என நாட்டிலே மறைந்து மங்கிக்கொண்டிருந்த பழங் கலைகளை மறுவாழ்வு தரும் அறிஞர் கூட்டத்தை உருவாக்கினார்.

1911ல் தோன்றிய புரட்சியின் பேறுகளைப் பிற்போக்கினர் தந்திரமாகக் கைப்பற்றிய நிலையில் மக்களிடையே மீண்டும் முடியரசு தோன்றிவிடுமோ என்று நிச்சயமற்ற ஐய நிலையில் - எண்ணங்களில் விரக்தி, செயலில் தயக்கம், பெருகிவரும் பெருவெள்ளத்தில் எதிர் நீச்சலிடுவதற்குப் பதில் கும்பலில் கோவிந்தா போட்டுத் தற்காலிகப் பயன் பெற முயலல், எளியவரை அவமதித்தல், பணத்திலும் பவுசிலும் உயர்ந்தவனைக் கண்டால் கைகட்டி வாய் புதைத்து நிற்றல் போன்ற தன்மை, தோல்வியையும் வெற்றியெனத் தத்துவார்த்தம் பேசி சமாளித்துக்கொள்கின்ற உள்ளப்போக்கில் வாழ்ந்துவந்த சராசரி சீனன் ஒருவனது வாழ்வை லூசுன் தமது உலகத்து ஒரு சிரஞ்சீவிக் காவியமான "ஆகிவ்வின் உண்மைக்கதை"யில் நன்கு உணர்த்தி இருக்கின்றார்.

இத்தகைய சீரழிந்த போக்குற்றவரையும் நிலைமைகளையும் மாற்றி அமைக்க உள்ளங்கொண்ட இளைஞர்கள் எட்டுத்திக்கும் சென்று பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைப் பயின்றுவர ஆர்வங் கொண்டனர். வளர்ந்துவரும் மேலை நாட்டுக் கலைகளையும் தொழில் முறைகளையும் விஞ்ஞான அறிவையும் பயின்று நாட்டிற்கு ஊட்டி வளமாக்க வேண்டும் என ஆர்வங் கொண்ட பல சீன இளைஞர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகட்குச் சென்று பயின்றுவரத் தொடங்கினர். லூசுன் ஜப்பான் சென்றார். 1924ல் லாவ் ஷவும் இங்கிலாந்து சென்றார். பல்கலைக் கழகம் பட்டம் பெறாத அவர் அங்கு சென்று பகுதி நேரம் ஊழியம் புரிந்து கல்வி பயின்றார்.

ஏழ்மையில் வாழ்ந்த லாவ் ஷாவின் மெலிந்த உடல் நிலையிலிருந்த அவர் வெளிநாடு சென்று உயிருடன் திரும்புவாரா என அவரது நண்பர்கள் பலர் ஐயுற்றனர்.
ஹொலிவுட் திரைப்பட உலகில் நெறியாளராக உலகப் புகழ்பெற்றவரும் மக்கள் ரஞ்சகமான குங்ஃபு என்ற பாத்திரத்தைக் குறித்த திரைப்படங்களை உருவாக்கியவரும் (Touch of Zen) என்ற படத்திற்கு 1975-ல் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் விருது பெற்றவருமான கிங் ஹ ு என்ற ஹிசின் சுவான் லாவ் ஷவின் இங்கிலாத்துக் கால வாழ்க்கையைத் தமது நூலில் விளக்கியுள்ளார்.

லண்டன் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாக கீழை நாட்டுக் கலைக்கல்லூரி (The school of Oriental studies) இயங்கி வந்தது. இதில் சீன, ஜப்பானிய, இந்திய, அராபிய என நான்கு பகுதிகள் இருந்தன அதில் சீனப் பகுதியில் லாவ் ஷ விரிவுரையாளராகப் பணிபுரிந்தார் இது பல் கலைக் கழகத்தின் அந்தஸ்தைப் பெற்றிராத ஒருவகை மொழிக் கல்லூரியே, தொழில் காரணமாகச் சீன மொழி யில் ஆர்வங்கொண்டவர்கள் இதன் மாணவ மாணவியர் ஆண்டொன்றுக்கு 350 பவுன்களைச் சம்பளமாக லாவ்ஷ பெற்றார். அதாவது திங்களொன்றிற்கு முப்பது பவுனில் வாழ்க்கைச் செலவு மிகுதியான லண்டனில் வாழநேர்ந் அதுவும் அதில் மிச்சம் பிடித்துத் தன் தாய்க்கு வேறு மாதாமாதம் செலவுக்காகப் பணமும் அனுப்பி வைத்தார். சீனமொழி புகட்டும் இசைத்தட்டு நிறுவனத் திலும், சீன நூற்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஒருவருக்கும் ஓய்வு நேரத்தில் பணிபுரிந்து மேலதிக வருவா யைச் சேர்க்க நேர்ந்தது. இருப்பினும் இவை அவரது உணவுச் செலவுக்கோ குளிர்காலத்தில் சூடு படுத்தத் தேவைப்படும் நிலக்கரி வாங்கவோகூட போதுமானதாக இருக்கவில்லை. எனவே மிகுந்த குளிர் நிறைந்த காலத் தில் மட்டும் பயன்படுத்த ஒரே கம்பளிச் சட்டையே இருந்தது அதை அக்காலத்தில் மட்டுமே உடுத்தி மற்ற காலங்களில் தன் வசமிருந்த ஒரே காக்கி உடையை அணிந்து வாழ்ந்திருக்கிறார்.

இவற்றுக்கிடையே தனது இங்கிலாங்து நாட்டு வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு ' இரண்டு மா'க்கள் (Two Mas) என்ற புதினத்தையும் லவ் சாங்கின் தத்துவம் (The Philosophy of Lao Chahg) சாவ் சூ யுயே (Chao Tzw-Yueh) என்ற மற்ற இருவகை புதினங்களையும் எழுதி வெளியிட்டார்.

ஷவுடன் பழகிய சிலரைப் பற்றியும் இவர் குறிப்பிட் டுள்ளார் ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் மொழி களையும் சரளமாகப் பேசக் கூடிய ஆங்கிலேயர் ஒருவர் வேலை கிடைக்காது செங்கல் சூளையில் விற்பனையாள ராக அதுவும் அரைநேர ஊழியாக வேலை செய்து பிழைக் கின்ற அவல நிலையை உணர்த்தியுள்ளார். மற்ற ஒருவர் முதியவரான பேராசிரியர் தனது வாழ்க்கையை நடத்து வதற்காக வீடுகளுக்குச் சென்று பலகணிகளைச் சுத்தம் செய்து கொடுப்பவர். அவர் எப்படித் தனது வீட்டில் தூய்மைப்படுத்தியபொழுது தன்னுடன் கன்பூசியஸ், தாகூர் போன்ற கீழைநாட்டு அறிஞர்களைப் பற்றியும் மற்றும் மேலை நாட்டு அறிஞர்கள் தத்துவவாதிகள் குறித்தும் சரளமாகப் பேசி மகிழ்வித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் குறித்து அவருக்கு இருவித எண்ணங்கள் இருந்தன. அவர்களின் பிடிவாதம், மமதை, உறவாடாமை பயன் கருது செயல், இனவர்க்க வேற்றுமை நோக்கு . அதீத தனித்தன்மை, குறுகிய தேசிய நோக்குகள் அவருக் குப் பிடித்திருக்கவில்லை. மாறாக அவர்களது பொறுப் புணர்ச்சி, நீதிக்கு கட்டுப்படல், அதற்க்குத் தரும் மரி யாதை. நடுநிலைப் போக்கு, சுயசிந்தனை, நெருக்கடி நேரத்தில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடும் உயரிய பண்பு, கிடைத்தவற்றைக்கொண்டு நிறைவுற்று எட்டாத தற்குக் கொட்டாவி விடாமை, நிகழ்வுகளை அறிவாக்கக் கண்ணோட்டத்துடன் தோக்கல் போன்ற உயர் பண்புகளைப் பாராட்டினார்.

ஆறு ஆண்டு இங்கிலாந்து வாழ்க்கைக்குப் பின் 1930ல் தாய்நாடு திரும்பி ஜினான் (JINAN) மாநிலத்து கிலோ (QILO) பின்னர் ஜான்டங் (Shontung) பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார்.
ஜப்பானியருடன் சீனமக்கள் போராட்டம் நடத்திய காலத்தில் நாட்டுப்பற்றையும் ஜப்பான் எதிர்ப்புணர்த்தும் கலைப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். நாடகங் கள் இயற்றுதல் அமைத்தல், சிறுவர் பாடல்கள், சிறுகதை இவ்வாற்றான பல துறைகளிலும் பணி செய்தார்.

1937-ல் ஜப்பான் சீனாவைத் தாக்கிய காலத்தே லாவ் ஷவால் எழுதப்பட்ட ' ரிக்ஷாக்காரப் பையன்' என்ற புதினம் சீன மொழியில் பல பதிப்புகளில் வெளிவந்தன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 1946-ம் ஆண்டுக்கு முந்திய 1945-ம் ஆண்டில் லாவ் ஷவின் பரிக்ஷாக்காரப்பையன்' சீனாவில் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த ரொபர்ட் எஸ். வார்ட் (Robert S. Ward) என்பவர் எவான் கிங் (Evan King) என்ற புனை பெயரில் மொழியாக்கம் செய்து (Rickshaw boy) என்ற தலைப்பில் அமெரிக்காவில் வெளியிட்டிருந்தார். "திங்கள் ஒரு நூல் தேர்வுக்கழகம்" (Book of the month club) தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாக நல்ல விற்பனையானது.

போர் முடிவுற்ற சில திங்கள்களுக்குள் சீன அமெரிக்க அறிஞர் பரிமாற்றல் திட்டத்தின் கீழ் 1946-ல் லாவ் ஷ அமெரிக்கா சென்றார். ஓராண்டுக்கால தங்கு சலுகையில் ஷ சலுகை முடிந்தும் ஈராண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். ரிக்ஷாக்காரப் பையன் நூலினின்று கிடைத்த வருவாய் அவருக்குத் தங்க உதவியது. அவரது அமெரிக்க வாழ்க்கையைப் பிரபல அமெரிக்க சீன எழுத்தாளரான ஜோர்ஜ் கவ் (Georg Kao) சஞ்சிகைகளில் வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்கர் வாழ்க்கை முறைகளையும் மக்கள் உளப் போக்கையும் தமது கதைப் பாத்திரங்களுக்காக அவர் தேடுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது நிகழ்ந்த ஒரு சுவை மிக்க வேடிக்கை நிகழ்ச்சியைக் கவ் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹோட்டல் முனையிலும் சினிமாக் கொட்டகை வாயில்களிலும் கருத்துச் சேர்க்கைக்காக ஆள்தேடுவது அவர் வழக்கம். ஒரு நாள் தலை முழுதும் நரைத்த கிழவர் வழக்கமாக நடமாடும் பரக்காவெட்டிகள் போலப் லாது அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரைச் சென்றடைந்து ஷ பேச்சுக் கொடுத்தார். அவரும் அமெ ரிக்க வாழ்க்கை நெறிகளைச் சுவைபடக் கூறி நடந்து வந்து கொண்டிருக்க அப்பெரியவர் சீன நண்பரே வாணிப முறையில் ஒருவரிடம் கொஞ்சம் பேசி இருக் கிறது இன்னும் கொஞ்ச தொலைவு தான் தொடர்ந்து அதுவரை நாம் பேசிச் செல்லலாம். அவர் ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்தாலும் இருப்பார். உங்களுக்குத் தொல்லை இல்லா திருந்தால் வாருங்கள் என்றார். லாவ் ஷவும் அதற்குச் சம்மதித்து இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். திடீரென அவர் '' அடாடா, மறந்து வைத்து விட்டு வந்துவிட்டேன். நண்பர் ஒரு கைக்கடிகாரம் கொணர்வதாகக் கூறினார். திரும்பி வீடு சென்று பணம் எடுத்து வரவேண்டும். என்ன செய்ய கைவசமிருந்தால் ஐம்பது டாலர்கள் கைமாற்றுத் தாருங்கள். நான் ஹோட்டலுக்குத் திரும்பிப் போகும்பொழுது திருப்பித் தந்து விடுகிறேன். அதோ அந்தக் கடைக்குப் போய் வாங்கி வந்து விடுகிறேன் அதுவரை இந்த பார்சலை வைத்திருப்பதில் தொந்தரவு இல்லையே எனப் பரிவுடன் கூறியதும், பெரியவரும் நம்பிக்கையாகத் தம்மிடம் சிறு பொதியையுந்தான் விட்டுச் செல்கிறாரே என்ற நம்பிக் கையில் ஐம்பது டாலரைக் கொடுத்தார். கிழவருக்காகப் பல நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் சென்று கேட்டார். அப்படி அடையாளமுள்ள ஆளே காண வில்லை எனக் கூறினார்கள். ஹோட்டல் திரும்பியதும் பொதியைத் திறக்க செங்கற்கட்டி பல பழைய செய்தித் தாள்களால் சுற்றப்பட்டுக் காட்சி தந்தது. இவ்வகையாக அமெரிக்கர் வாழ்க்கை முறைகளை ஆய்ந்திடச் சென்ற லாவ்ஷவுக்கு இத்தகைய அனுபவம், ஐம்பது டாலர்களைப் புத்திக் கொள்முதல் கணக்கில் பற்று எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

1949-ல் லாவ் ஷ சீனா திரும்பினார்: அமெரிக்காவிலிருந்து புறப்படுகின்ற வேளையில் தான் சீனா திரும்பிச் சென்றதும் மூன்று பிரதிக்ஞைகளுடன் செல்வதாகக் கூறினார் அரசியல், கூட்டங்களில் பங்குற்றல், மேடைப் பேச்சுக்கள் இவை மூன்றிலும் தான் சம்பத்தப்படுவதில்லை என கவ்விடம் கூறினார். தவிரவும் அமெரிக்கர் வாழ்க்கை நெறிகள் தமக்கு ஒத்து போகவில்லை என்றும் அவரிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க வாசத்தில் அவர் ''மத்தள இசைஞன்'' (Drum Singer) ' மஞ்சள் சூறாவளி' (Yellow Storm) ஆகிய இரு நூல்கள் வெளிவந்தன.
இவ்விடம் அவர் கூறிய பிரதிக்ஞைக்கு மாறாக ஷ சீனா திரும்பியதும் அரசின் அங்கங்கள் பலவற்றில் பங்குபற்ற நேர்ந்தது. அரசாங்கத்துக் கல்வி கலாசார ஆலோசகர் அவை, மக்கள் அவை, அரசியல் ஆலோசகர் மாநாடு இவற்றின் உறுப்பினராகவும் அனைத்துச் சீன நுண்கலை அவை, சீன எழுத்தாளர் ஒன்றியம் ஆகிய வற்றின் உபதலைவராகவும், பெய்ஜிங் இலக்கிய நுண் கலை அவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 'மக்கள் கலைஞர்', 'மொழி வல்லுனர்' என்ற சிறப்புப் பட்டங்களும் சூட்டப்பட்டு புகழேணியின் உச்சியில் திகழ்ந்தார். சீன இலக்கிய உலகில் லூசுன்னிற்குப் பின்னர் குமோஜோ (Guo Mozo) சீன எழுத்துலகின் தலைவராகத் திகழ்ந்தார். அவருக்கு அடுத்தபடியாகத் திகழ்ந்த மாவ்டன் (Mao Dun). பாஜின் (BaJin) ஆகியோர் வரிசையில் ஷவும் திகழ்ந்தார்.

அறிஞர்களையும் பண்பாளர்களையும் அரைவேக் காடுகள் குண்டர்கள் கூட்டுறவுடன் "பண்பாட்டுப் புரட்சி" என்ற பெயரில் தங்கள் சொந்தப் பொறாமைகள், பூசல்கள், போட்டிகளைக் கணக்குத் தீர்த்துக் கொண்ட நிகழ்வு சீன வரலாற்றில் ஒரு பெருங் கறையாகத் திகழ்வது. அதிகார பீடத்தில் அமர்ந்த பின் விளைவும் அடாவடித்தனம், அகம்பாவம், கையூட்டல் போன்ற குறைகளைப் போக்குவதற்காகப் பெருநோக்குடன் 1966ல் கிளம்பிய இவ்வியக்கம் அற்பர்களின் பேராசைச் சதியில் முடிந்து 1976 வரை நிலைபெற்றுப் பல அறிஞர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர் களையும் வாட்டி வதைத்தது; பலியும் கொண்டது. இந்த அழிவுச் சூறாவளி ஷவையும் விட்டுவைக்கவில்லை.

இக்கால நிகழ்வுகளை 1967 தொடங்கி 1970 வரை பெய்ஜிங்கில் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தில் கலைப் பகுதி முகவராக இருந்த பால் பெடி (Paul Bady) குறிப்புகள் எழுதியுள்ளார்.
வெளிநாட்டு நூற்கள், புராதன அரிய கலைப் பொருட்கள் சிறப்பான ஓவியங்கள் இவற்றைச் சேகரித்து வைத்திருப்பதை அறிந்திருந்த செம்படையினர் தம் அலுவலகத்திற்கு ஷவை அழைத்து மரியாதை தராது அவமதிப்புடன் நெடுநேரம் நிற்க வைத்தும், தலையில் கோமாளிக் குல்லாய் சூட்டியும், முன்னொரு காலத்தில் அவர் பிற்போக்கு வாதியாகவும், எதிர்ப்புரட்சிக்காரராக இருந்ததாகவும் பலவாறு குற்றஞ்சாட்டி மறு நாளும் வரும்படிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வீடு திரும்பியதும் அவர் அரிதற் சேர்த்த நூற்கள், விலை யுயர்ந்த கலைப் பொருட்கள் அனைத்தும் கிழித்தும், உடைத்தும், நொறுக்கப்பட்டுமிருந்தன. ஷ அழகிய மலர்த்தோட்டம் வைத்திருப்பவர்.வகைவகையான செவ்வந்திப்பூக்கள் (Chrysanthenums) தன்கைப்பட ஆசையுடன் வளர்த்தவர். அப்பூஞ்சோலை அனைத்தையும் அழித்து மிதித்து அதாகுதம் பண்ணியிருந்தனர். இத்தகைய செயல்களைக் கண்ணுற்றதால் மனமுடைந்த லவ் ஷா 24 ஆகஸ்டு 1966-ல் தைய்பிங்குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கருதப்படுகிறது. அன்றைய மறுநாள் தான் அவரது சடலம் அவரது மனைவிக்குக் காணக்கிடைத்தது. எனவே அவரது மனைவி ஷ குண்டர்களால் கொலை செய்யப்பட்டுக் குளத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் எனக் கூறியுள்ளர்.

இவ்வாறாகப் பண்பாட்டுப் புரட்சி தொடக்க காலத்தில் தோன்றிய வெறியாட்டத்திற்குப் பலியான ஷ பிற்காலத்தில் சௌ என் லாய், தெங் சியோ பிங் நிலை நாட்டிய அமைதிக் காலத்தே 1978-ல் அரசாங்க மறுபரிசீலனைக்குப் பின் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு உயர் மதிப்பளிக்கப்பட்டார். பல தலைவர்களும் அறிஞர்களும் கூடி அவரது அஸ்தியை மிக்க மரியாதைகளுடன் வீரர்கள் சமாதிகள் வைப்புத் தளமான பப்பா ஷான் மயானத்தில் புதைத்துச் சின்னம் எழுப்பப்பட்டது.

அவரது நூற்கள் சீன மொழியில் தொகுக்கப்பட்டுப் பல பகுதிகளாக வட்சக்கணக்கில் வெளியிடப்பட்டன. ஆங்கிலத்திலும், அவரது ’ரிக்ஷாக்காரப் பையன்’ நூலினை மொழிபெயர்த்து முன்னர் வெளியிட்ட அமெரிக்கர் அந்நூலின் கடைசி இரண்டு அத்தியாயங்களையும் மாற்றி சுப முடிவாகச் செய்திருந்தார். அவ்வாறன்றி ஷ மூலத்தில் எழுதியபடியே அமைத்து Camel ziangzi என்ற சுத்தப்பதிப்பாக பெய்ஜிங் பிறமொழிப் பதிப்பகம், மற்றும் அவரது சிறுகதைத் தொகுதியான ’கூனற்பிறை’ (Crescent Moon), ’செங்கொடியின் கீழ்’ (Under the Red Banner) என்ற கட்டுரை ’தேநீர்க் கடை’ (Tea House) என்ற நாடக நூல் முதலியவற்றையும் வெளியிட்டுள்ளது.

பதினொரு புதினக் கதைகள், ஆறு சிறு கதைத் தொகுப்புகள், இருபதுக்கு மேற்பட்ட நாடகங்கள் இயற்றிப் பணி புரிந்த லாவ் ஷ சீன இலக்கிய மறுமலர்ச்சித் தந்தையான லூசுன்னுக்கு அடுத்த வரிசையில் வைக்கப்பட்டுப் போற்றப்படுகிறார்.

லூசுன்னின் நூற்களை ஆய்வு செய்த அமெரிக்க அறிஞரான ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரான வில்லி ஏலைல் (Weillam A. Lyell) தனது 'லூசுன் உருவெளித்தோற்றமும் நடைமுறையும்'' என்ற நூலில் லூசுன், லாவ் ஷ ஆகிய இருவரது இலக்கிய ஆக்கங்கள் குறித்துத் திறன்பட எடுத்துக்காட்டியன சாலப் பொருத்தமாகும்.

"சிலர் காதைவிடக் கண்ணைப் பயன்படுத்துவர்; அவர்கள் உருவாக்குபவர்கள், கண்ணை விடக் காதைப் பயன்படுத்துபவர்கள், கதை சொல்பவர்கள். லூசுன் தமது கதைகள் மூலம் சீனா குறித்த புதிய சிந்தனைகளை உருவாக்கித் தன் நாட்டு மக்களுடனும் உலக மக்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறார். மேல் நாடுகளில் ரிக்ஷாக்காரப் பையன் புதினத்தின் மூலம் பெயர்பெற்ற லாவ் ஷ ரஞ்சகமான அமைக்குமப்பால் மேலான நோக்கங்கள் குறித்துமன்றி திறன் மிக்க கதை சொல்பவராகவும் திகழ்கிறார். லாவ் ஷ பாரம்பரியச் சீன தேனீர்க் கடை கதாப் பிரசங்கிகளை ஒத்தவர்; லூசுன்னோ மேலைநாட்டுப் புதின ஆசிரிய அறிஞர்களுக் கிட்டியவர் எனக் கருதலாம்."


இத்தகைய ஆசிரியரின் நெடுங்கதையான 'கூனற் பிறை' தற்காலச் சீன இலக்கிய வரிசையில் பெய்ஜிங் பிற மொழிப் பதிப்பகத்தார் வெளியிட்ட "தற்காலச் சீன புனைகதைகளின் தலைசிறந்த படைப்புகள் 1919- 1949" (Master peises of modern chiniese Fiction 1919- 1949) என்ற ஆங்கிலத் தொகுப்பில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. தவிரவும் அப்பதிப்பகத்தார் வெளியிட்ட Crescent Moon ஆங்கிலத் தொகுப்பில் முகவுரை எழுதிய திருமதி லாவ் ஷவான ஹுஜி கிங் அம்மையாரும் 'கூனற் பிறை' ஆசிரியருக்கு மிகவும் பிடித்த மூன்று கதைகளில் ஒன்று எனக் குறித்திருந்தார். இது கருதியும் முப்பதுகளின் சீனத்து வறுமையினை உணர்த்துவதாகவும் இருந்ததால் இதனைத் தமிழாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கீழைநாட்டு இலக்கியங்களில் குறிப்பாகத் தொன்மை சிறப்புமிக்க சீன நாட்டு இலக்கியங்களில் நம்மவர் ஆவல் கொள்ள வேண்டும். கதாசிரியரும் வாழ்த்த சம்பவங்களும் நிகழ்ந்த காலத்தையும் சூழ்நிலைகளையும் வரலாறுகளையும் முன்னுணர்ந்து கதையைப் படித்தல் வாசகர் கட்குப் பயனளிக்கும் என்ற எண்ணத்தில் பர்னார்டு ஷா[Bernard Shaw(1856-1950)] 'ஒரு பென்னி நாடகத்திற்கு ஒரு பவுன் முன்னுரை' எனத் தனது முன்னுரை குறித்து எழுதியபடி நீண்டு விட்டது. ஆய்வாளர் ஒரு சிலருக்காவது இது பயன் தருமேல் மகிழ்வுறுவேன்.

-கே. கணேஷ், தலாத்து ஓய, கண்டி, இலங்கை; 11.08.1989

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக