நண்பன் கலைச்செல்வன் அவர்கள் மறைந்து நேற்றுடன் (05.03.2022) பதினேழு ஆண்டுகள் சென்றுவிட்டன. அவனது நினைவுகளில் கடந்து செல்லும் இந்தக் காலங்களில் கீழே உள்ள சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.
யார் இந்தக் கலைச்செல்வன்!:
பெயர்: கலைச்செல்வன்
பிறந்த திகதி: 28.03.1960
தந்தை: கனகசிங்கம், தாயார்: ஆச்சிப்பிள்ளை
சகோதரர்கள் : காலம் சென்ற கவிஞர் திருமாவளவன் (கருணாகரன்), கலாநிதி(கலா), கங்காதரன் (ஜீவா), கருணாகரமூர்த்தி (கண்ணன்)
தோழி: லக்ஷ்மி, பெறாமகன்: கபிலன்
இலங்கையில் வாழ்ந்த இடம்: வறுத்தலைவிளான், கட்டுவன்
கல்வி பயின்றது: யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை
தொழில் புரிந்தது: சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை
பிரான்சில் முதலில் கால் பதித்தது: 1984
வாழ்ந்த இடம்: பாரிஸ் மற்றும் பாரிஸின் புறநகர்ப் பகுதிகள்
தொழில் புரிந்தது: காவலாளி, கட்டடப் பணியாளன், உணவகப் பணியாளன்
ஆரம்பத்தில் ஆதரித்திருந்த விடுதலை இயக்கம்: தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOTE)
இலக்கியப் பணிகள்:
1. ஆசிரியர் குழுவில் பங்காற்றிய சஞ்சிகைகளும் தொகுப்புகளும்: தேடல், பள்ளம், எக்ஸில், உயிர்நிழல், இனியும் சூல் கொள், தோற்றுத்தான் போவோமா?
2. எழுதிய சஞ்சிகைகள், தொகுப்புகள்: தூண்டில், கண், சக்தி, தேடல், பள்ளம், அஆஇ, எக்ஸில், உயிர்நிழல், இனியும் சூல் கொள், தோற்றுத்தான் போவோமா?
3. எக்ஸில் வெளியீட்டகத்தை உருவாக்கி, 1992இல் 'மறையாத மறுபாதி: புகலிடப்பெண்கள் கவிதைத் தொகுப்பு முதல் வெளியீடாகிறது.
தொடர்ச்சியாக சி.சிவசேகரம் அவர்களின் 'தமிழில் தரிப்புக் குறிகளின் பயன்பாடு' (1994),
யமுனா ராஜேந்திரனின் 'எனக்குள் பெய்யும் மழை: மூன்றாம் உலகப் பெண்நிலைவாதம்: இருபத்திரண்டு ஆசியக் கவிகள்,(1997),
திருமாவளவனின் 'பனிவயல் உழவு' (2000),
றஷ்மியின் 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்' (2002).
4. உயிர் நிழல் சஞ்சிகையை உருவாக்கியது.
5. 1988-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் ஐரோப்பா தழுவி நடைபெற்ற இலக்கியச் சந்திப்பின் ஆரம்ப காலங்களிலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றியது.
6. விமர்சகன், எழுத்தாளன், பேச்சாளன், சமூக ஆய்வாளன், கலையார்வலன்
கலைச்செல்வனின் அனைத்து ஆக்கங்களையும் ஒன்றாகத் தொகுத்து ”கலைச்செல்வனின் பிரதிகள்” என்ற நூல் வெளியாகி இருக்கின்றது. அந்த நூலுக்கு லக்ஷ்மி அவர்கள் எழுதிய தொகுப்புரையின் ஒரு பகுதி:
2005 மார்ச் 05ம் திகதி கலைச்செல்வன் எம்மை விட்டுநிரந்தரமாகப் பிரிந்து சென்றான். வருடங்கள் பல கடந்தோடிவிட்டன. இருந்தபோதும் அது ஒரு கொடுங்கனவாகவே இன்றும் தோன்றுகின்றது. அவன் சுவாசித்த காற்றும் அவன் வாசித்துக் கடந்து சென்ற புத்தகங்களில் இருக்கும் வாசனையும் இன்றும் இந்த வீட்டுக்குள் இருக்கின்றன. அவனுடைய எழுத்துக்களும் பிரசுரமாகாத கையெழுத்துப்பிரதிகளும் நினைவோடைகளும் குறிப்புகளும் கூடவே அப்படியே இருக்கின்றன. பல நாட்களாகவே அவனின் எழுத்துக்களைத் தொகுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு உள்ளது என்பதை அறிவேன். நண்பர்களும் தோழர்களும் கூடவே அவ்வப்போது எனக்கு உணர்த்தினார்கள். அவனது நெருங்கிய தோழி என்ற வகையிலும் பல பதிவிடாத பிரதிகள் என்னிடம் மட்டுமே உள்ளன என்ற அடிப்படையிலும் இது-எனக்கு மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்வேன். அத்துடன் கலைச்செல்வன் வாழும்போது அவனை வெறுத்தவர்கள் அவனது எழுத்துக்களைக் கையகப்படுத்த முயற்சி செய்ததையும் அறிவேன்.
அவனது எழுத்துக்களை அவன் உருவாக்கிய 'உயிர்நிழல்' வெளியிடுவதே அவனுக்கு அளிக்கும் மரியாதை என்பதும் திண்ணம். ஆனாலும் அது கடினமான பணியாகவே எனக்கு இருந்தது. அவனது எழுத்துக்களுக்குள் ஊடுருவும்போது அவை என்னைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றன. அவை அவ்வளவு உவப்பான காலங்களாக இல்லை. அவனுடனான உறவின் ஈர்ப்பு ஒருபுறமிருக்க, கொடும் யுத்தமும் அரசியல் பிரச்சனைகளும் புலிகளின் அராஜகப் போக்கும் சண்டைகளும் சறுக்கல்களும் துரோகங்களும் நிறைந்தனவாக அவை இருந்தன. அவனற்ற யதார்த்தத்தைச் செரிப்பது இலகுவானதாக இல்லை. இவற்றை எல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு அவனது எழுத்துக்களுக்குள் ஊடுருவுவது எனக்கு மலையளவு கடினமாகவே இருந்தது. சிறுகச் சிறுகச்சேகரித்து, தற்போதுதான் அது சாத்தியப்பட்டிருக்கிறது. தாமதமானதற்கு எல்லாரிடமும் மன்னிப்பை கோரி. கலைச்செல்வனின் எழுத்துக்களை இத்தால் சமர்ப்பிக்கிறேன். […]
அன்புடன், லக்ஷ்மி, உயிர்நிழல், பிரான்ஸ்.
கலைச்செல்வன் (1960-2005): நட்பின் சில குறிப்புக்கள்
ந.சுசீந்திரன்
எங்களுக்குக் கைவந்த அளவுகளில் சில நம்பிக்கைகளை நாங்கள் விதைத்துக் கொண்டுதானிருக்கிறோம். கனவுகளும் முற்றாக அழிந்தொழிந்து போகாமல் எங்களிடத்தில் இன்னமும் எஞ்சியிருக்கத்தான்செய்கின்றன. மரணமும் எங்களைத் துரத்தியடியும், நம்பிக்கை களையும் கனவுகளையும் தகர்த்தபடியும், எஞ்சியவாழ்வை அச்சுறுத்தியடியும் எங்களுடனேயே உறங்கிக் கொண்டிருக்கிறது - எதுவுமறியாத ஓர்அப்பாவியைப் போல.கலைச்செல்வன் துயிலோடு போய் நேற்றுடன் பதினேழு வருடங்களாகிவிட்டன. மனப்பதிவுகளின் கண்ணீரை இன்னும் துடைத்துவிட முடியவில்லை. காலங்கள் இப்படி வேகவேகமாகவேதான் எப்போதும் கழிகின்றதா!
எண்பதுகளின் தொடக்கத்தில் பெருமளவு ஈழத்தமிழ் இளைஞர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு வந்து சேர்ந்தனர். இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள், பல்வேறுவிடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் அவற்றின் திடீர்வளர்ச்சி, மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார,வாழ்வியல் மாற்றங்கள் என்பன இந்த இடப்பெயர்வின்சில காரணிகள் எனக் கொள்ளலாம். இப்படி ஐரோப்பாவிற்கு வந்து சேர்ந்த இளைஞர்களிடம் அரசியல்,இலக்கியம்,மற்றும் விடுதலை இயக்கங்களிடத்தில் சார்புநிலை என்பன இயல்பாகவேகாணக் கிடைத்தன.
1989ம் ஆண்டளவில் சுமார் இருபத்தி ஐந்து சிறுபத்திரிகைகள் ஐரோப்பாவில் இருந்து தமிழில்வெளிவந்தன. அப்போது இலங்கையில் இருந்த எல்லாவிடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாளர் களை இங்கே காண முடிந்தது. இலக்கியச் சந்திப்பு 1988ம்ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெர்மனியில் இருக்கின்ற 'ஹேர்ண'(HERNE) என்ற நகரில் தோற்றம் பெற்று, ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜெர்மனியில் பலவேறு நகரங்களில் நிகழ்வுகண்டது.
1989ம் ஆண்டு பிராங்போட்டில் நடைபெற்ற ஐந்தாவது இலக்கியச் சந்திப்பில் நான் முதன் முதலில் கலைச்செல்வனையும் லக்ஷ்மியையும் சந்தித்தேன்.எல்லாவற்றின்மீதும் ஓர் அவசர அபிப்பிராயம் சொல்லவனாக, அறிதலிலும் ஆய்தலிலும் வேட்கை கொண்ட உற்சாகமான இளைஞனாக, தமிழரின் வாழ்வில் புரட்சிகரமானதும் முற்போக்கானதுமான கலாசார,சிந்தனை மாற்றங்களை உருவாக்க நினைப்பவனுமாக இருந்தான் கலைச்செல்வன்.
1990ம் ஆண்டு தை மாதம் 'பள்ளம்' என்ற ஒரு சஞ்சிகையை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வெளியிட்டான். தமிழர்கள் ஐரோப்பா எங்கும் அரசியல்தஞ்சம் கோரி, தங்கள் இருப்புக்களை உறுதிப்படுத்திக்கொண்டிருந்த ஒரு பொழுதில், ஜனநாயகச் சிந்தை என்பது அந்நியமான ஒரு மனச்சுழல் சமூகத்தில் முதல் இரையாக ஆக்கப்பட்டவன் கலைச்செல்வன், 'பள்ளம்'என்கின்ற அந்த மாற்றுக் கருத்துப் பத்திரிகையை வெளியிட்டதற்காக. வெறுமையான பியர்ப் போத்தல் அது. கையடக்கமான அந்தப் போத்தலை உடைத்து கலைச் செல்வனது முகத்தில் ஏற்றினான் ஒருவன். நல்லவேளையாக அது அவனது கண்களைக் கொன்றுவிடவில்லை. கண்ணில் ஏற வேண்டியது நெற்றியில் ஏறிக் கண்மடலுக்கு மேலான புருவத்தைக் கிழித்திருந்தது.ஒரு மனிதனைக் கடத்திக் கொண்டு போய் தனிஇடத்தில் வைத்து ஐரோப்பாவிலும் சித்திரவதை செய்யலாம் என்ற இடைப்பாடத்தை இடம்பெயர்ந்த தமிழர்கள் - புலி இயக்கச் சண்டியர்கள் இவன் உடலில்தான் கற்றுக்கொண்டனர். எப்படித்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதும் ஜனநாயகப்பண்பு மிக்க மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் மறுத்தோடி அரசியலை எப்போதும் வரித்துக் கொண்டவனாகவே கலைச்செல்வன் வாழ்ந்திருந்தான்.
2001ம் ஆண்டு யூலை மாதம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் விமானநிலையத்தில் இருந்து கலைச்செல்வனை ஏற்றிக்கொண்டு மலையும் கடலும் சங்கமித்து நிற்கும் பேர்கன்(BERGEN) என்கின்ற, நோர்வேயில் இலக்கியச்சந்திப்பு நடைபெறும் இடம் நோக்கிப் பயணப்பட்டோம். வழி கோடைக்காக ஏங்கிக்கிடந்தது. "ஒரு அகதியின் வாழ்வின் முன்னால் தோன்றும் படிகள் யாவும் செங்குத்தானவை" என்று ஆதிப் புகலிடக் கவிஞன் தாந்தே (DANTE) கூறியதாகச்சொல்வார்கள், ஒஸ்லோவில் இருந்து பேர்கன் நோக்கிய எங்களது பாதைகளும் அப்படித்தான் வளைந்து வளைந்து செங்குத்தாக மேலேறிச்சென்றன. நாம் எங்கு போகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை விடவும் நாம் பார்த்தோம், கூடிப் பயணப்பட்டோம் என்பதுவே மனநிறைவைத் தருகின்ற வாழ்வில் ஒரு ஐந்து மணி நேரப் பொழுதை ஆனந்தமாகக் கழித்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
நோர்வேயின் அதியுயர்ந்த மலையின் மீது நாங்கள் இளைப்பாறினோம். இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கோடையின் தொடக்கத்தில் வந்திருந்த கவிஞர்கள் அ.யேசுராசா , சு.வில்வரத்தினம் இருவருக்கும் மலையுச்சியில் படிந்து கிடந்தபனியையும் காட்டிவிட எம்மால் முடிந்தது. உடைந்த புட்டியின் ஆயுதக்கீறல் அடையாளங்கள் சூரிய ஒளிபட்டுத் தெறித்த பனியுறைந்த அந்த மலையுச்சியில் கலைச்செல்வன் முகத்தில் தெளிவுறத் தெரிந்தது.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ராஜனிதிராணகம கொல்லப்பட்டதைக் கண்டித்து பாரிஸில் ஒரு நிகழ்வு துணிச்சலாக நடத்தப்பட்டது. அதன்பின்னர் இலங்கையைச் சேர்ந்த மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையா என்ற எழுத்தாளரின் மறைவையொட்டிய நினைவுக்கூட்டம் அதே நண்பர்களினால் 1990ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது.கண்காணிப்பு அரசியலுக்குப் பணிக்கப்பட்ட, நடைமுறை நாகரிகம், ஜனநாயகம், இங்கிதம் என்ற எதுவும் எங்களிடம் பலிக்காது என்ற வாசகங்கள் முகத்தில் அறையப்பட்ட புலிக்கும்பல் ஒன்றினால் இந்தக் கூட்டம் குழப்பியடிக்கப்பட்டது.
மிகச் சிறிய நண்பர்கள் கூட்டமொன்று - அதுவும் நோஞ்சான் உடல்வாகு நண்பர்கள், எல்லோரும் நடுங்கிப் போயிருந்த கணங்கள் அவை.புகைப்படச் சுருள்களைக்கூட இந்தக் கும்பல் விட்டுவைக்கவில்லை. எஞ்சி இருக்கின்ற புகைப்படமொன்றில் இப்போது காலமாகி விட்டவர்கள் என்று காணக் கூடியதாக புஸ்பராஜா, உமாகாந்தன்,சபாலிங்கம் இவர்களோடு கலைச்செல்வனும் துல்லியமாகவே இருக்கின்றான்.
நாங்கள் சந்திக்கும் போது எவற்றையெல்லாம் பேசினோம் என்று இப்போது சிந்தித்துப் பார்க்கிறேன்.எங்கள் வாழ்வு எங்களை அறியாமலே ஏதோ வகையறியாப் பலவற்றுக்குள்ளே திணிக்கப்பட்டுக்கிடக்கிறது. மீண்டு வருவதற்கான நிரந்தரப் போராட்டத்திற்கு முடிவில்லைப் போலும். உலகம் புகலிடம்தேடி அலைகிறது. புகலிடம் எங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் உலகப் புகலிடச் சமூகங்கள்,அவர்களது புகலிட இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் இன்னபிற விடயங்களில் எல்லாம் எங்கள் காலங்களைப் பொசுக்கினோம்.
ஹிட்லர் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்தபோது, தொடக்கத்தில் ஜேர்மனியில் இருந்து யூத இனப்புத்திஜீவிகளும் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள்,கம்யூனிஸ்ட்டுகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பெருமளவு இடம் பெயர்ந்து பூமிப்பந்தின் பலபாகங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டபோதும் தமது நாட்டில் உருவெடுத்திருக்கும் பாசிச அரசின் முகத்திரையைக் கிழித்து எழுந்தது தான் அவர்களது'ஜெர்மன் புகலிட இலக்கியம்'.
ஜேர்மனிக்கு வெளியே செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான ஒன்றுகூடலினால் சர்வதேசமெங்கும் அன்றைய ஹிட்லரின் பாசிச அரசுக்கெதிரான அணிதிரட்டலை அவர்களால் செய்ய முடிந்தது. தமிழிலும் புகலிட இலக்கியம் என்பதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய புரட்சிகர வரைபு ஒன்றை ஆக்கிவிட முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் கலைச்செல்வன். ஆனால் வெகுஜன ஊடகங்களின் திடீர்ப் பரம்பல், அவசர அவசரமான, புகலிடத்தின் உள்வாங்கல்களைக் கண்டு கொள்ளாத, ஒருபுரிதல்களுடன் கூடிய படைப்புகளையே கொண்டாடின.
இப்படி எழுந்த இந்தக் காட்டுவிளைச்சலில், மரபு பேணப்படுகிறதே தவிர, ஒருமாற்றின் அல்லது புதிதின் கீற்று தொலைவாகிப் போகின்றது."இலக்கியம் என்பது வெடிகுண்டு அல்ல.ஆனாலும், அது ஆகக் குறைந்தது ஒரு வெடிகுண்டின் தாக்கத்தை விளைவிக்கக் கூடியது" (JEAN- PAUL SARTRE)என்று சொல்வார்கள்.
1992இல் கலைச்செல்வனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட 'எக்ஸில்' என்கின்ற பதிப்பகம்,அதற்குப் பின்பு 1998ம் ஆண்டில், 'எக்ஸில்' என்றபெயரையே, தான் உட்படப் பலரால் தொடங்கப்பட்ட சஞ்சிகையின் பெயராகவும் கலைச்செல்வன் முன்மொழிந்தமை புகலிடத்தின் உன்ளார்ந்த தாற்பரியத்தைப் புரிந்து வைத்திருந்த பிரக்ஞையில் முகிழ்த்தவையே.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு வார இறுதியில் நாங்கள் இலங்கையின் முதற் தொழிற்சங்கவாதி கோ. நடேசய்யருக்கு விழாவெடுத்தோம்.அந்த ஆயத்த இரவொன்றில் விடிய விடிய'தேசியம் பற்றி நண்பன் கலைச்செல்வனும் இன்னும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த இரண்டு நண்பர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.மறுநாள் நடைபெறவிருக்கும் அந்த ஐரோப்பியத் தமிழ் மகாநாட்டில் ”அகஸ்தியர் எழுத்துக்களில் அரசியல்” என்பது குறித்து கலைச்செல்வன் பேசவேண்டும். அதை அவனுக்கு ஞாபகப்படுத்திய நான், விவாதத்தை நிறுத்தி தூங்கப் போகுமாறு பணித்தேன் (அன்புக் கட்டளைதான்). இதை விரும்பாத கலைச்செல்வன் (தொடர்ந்து விழித்திருந்து பேசப்போகிறானாம்.) ஒரு குழந்தையைப்போல் அழுதேவிட்டான்.
நினைவுகளைச் சொல்வதில் நான் தோற்றுப்போகிறேன்.விரல் இடுக்கித் தீனிகள், புதுப்புதுப் பெருஞ்சமையல், இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் மாறி மாறிநடந்து அருந்தும் மது, காற்றூதும் நீரோசை ஆற்றங்கரைகளிலும், கோடைமலர் விளைந்த பூங்காக்களிலும், கொட்டிக் குவிந்திறுகிக் கிடக்கும் பனிவெளிகளிலும் படைப்பிலக்கியம் பற்றியோ, இலங்கை-, உலகஅரசியல் பற்றியோ சத்தமிட்ட விவாதங்கள், எங்களது சண்டைகள், எங்களது இருப்புகள், எங்களது நேசங்கள், எங்களது சுமைகள், நாங்கள் பேசுகின்ற விஷயங்கள், விழித்துக் கழித்த இரவுகள், விட்டேத்திப் பயணங்கள், இப்படியாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக