கீழே உள்ள கட்டுரை ’தமிழ்க் கலை மன்றம்’ (The Academy of Tamil Culture) என்ற தமிழறிஞர்கள் அமைப்பு அக்காலத்தில் வெளியிட்டு வந்த ‚TAMIL CULTURE‘ என்ற காலாண்டு ஆய்வுச் சஞ்சிகையின் அக்-டிச. 1961 இதழில் வெளியாகியுள்ளது. இந்தச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக பேராசிரியர் கலாநிதி சேவியர் தனிநாயகம் அடிகள் அவர்கள் இருந்திருக்கின்றார்.
மேலும் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட ”தமிழியல் ஆய்வு:சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு” என்ற நூலிலும் இக் கட்டுரை இடம்பெற்று இருக்கின்றது. இந் நூல் தமிழ் இணையக் கல்விக் கழகப் பக்கத்திலும் படிக்கக் கிடைக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறுக.தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு
எழினி-யவனிகா
மயிலை சீனி. வேங்கடசாமி
திரைச் சீலைக்குத் தமிழில் எழினி என்றும் சம்ஸ்கிருத மொழியில் யவனிகா என்றும் பெயர். திரைச்சீலை என்னும் பொருள் உடைய யவனிகா என்னும் சம்ஸ்கிருதச் சொல், யவன என்னும் சொல்லிலிருந்து தோன்றியது என்று கருதப்படுகிறது. கிரேக்க நாட்டிலிருந்து திரைச் சீலை நமது நாட்டுக்கு வந்தது என்றும் ஆகவே யவன நாட்டுத் திரைச்சீலைக்குச் சம்ஸ்கிருதக்காரர் யவனிகாஎன்று பெயர் கொடுத்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இது உண்மை போலவும் தோன்றுகிறது.
கிரேக்க நாட்டின் ஒரு பகுதிக்குப் பண்டைக் காலத்தில் அயோனியா என்று பெயர் இருந்தது. அயோனிய தேசத்துக் கிரேக்கர் அயோனியர் என்று அழைக்கப்பட்டனர். அயோனியராகிய கிரேக்கர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் யவனர் என்று கூறப்பட்டனர். யவனர் பண்டைக் காலத்தில் பேர்போன மாலுமிகளாக இருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கி.பி. முதல் நூற்றாண்டிலே யவனருடைய கப்பல் வாணிகம் பாரத நாட்டிலும் தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் நடைபெற்று வந்தது. ஆகவே, தமிழரும் சம்ஸ்கிருதக்காரரும் கிரேக்கரை யவனர் என்னும் பெயரினால் அறிந்திருந்தார்கள். யவனர் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து நமது நாட்டில் இறக்குமதி செய்த பொருள்களில் திரைச்சீலையும் ஒன்றாக இருக்கலாம் என்றும் ஆகவே யவன நாட்டிலிருந்து வந்த திரைச்சீலைக்கு சம்ஸ்கிருத மொழியில் யவனிகா என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதுவது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
ஆனால், ஆய்ந்தோய்ந்து பார்த்தால் இவ்வாறு கருதுவது தவறு என்றும், யவனிகா என்னும் சம்ஸ்கிருதச் சொல் எழினி என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் தெரிகிறது. தமிழிலிருந்து சில பல சொற்களைச் சம்ஸ்கிருத மொழி கடனாகப் பெற்றுக்கொண்டிருப்பதில் எழினி என்னும் சொல்லும் ஒன்றாகும். இவ்வாறு கூறுவது சிலருக்குப் புதுமையாகவும் வியப்பாகவும் தோன்றும். இந்தக் கட்டுரையில் இதனைத் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.
திரைச்சீலை என்னும் பொருள் உடைய எழினி என்னும் சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழைய தமிழ் நூல்களிலே வழங்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்திலே நிகழ்ந்த இந்திர விழாவின் இறுதி நாளிலே கடலில் நீராடுவதற்குக் கடற்கரைக்குச் சென்ற அரச குமாரர்களும் செல்வப் பிரபுக்களும் மணற்பரப்பிலே எழினிகளால் அமைந்த விடுதிகளில் தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
”அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும்
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகள் மருங்கில் சூழ்தரல் எழினியும்”
என்று சிலம்பு (கடலாடு காதை 155-158) கூறுகிறது.
கோவலனும் மாதவியும் கடல் நீராடக் கடற்கரைக்குச் சென்றவர் மணற்பரப்பிலே புன்னை மர நிழலிலே ஓவியம் எழுதப்பட்ட திரைகளினால் அமைக்கப்பட்ட விடுதியிலே தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
“கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழச்
சிறைசெய் வேலி அகவையின் ஆங்கோர்
புன்னை நீழல் புதுமணற் பரப்பில்
ஓவிய எழினி சூழவுடன் போக்கி
விதானித்துப் படுத்த எண்கால் அமளிமிசை.”
கோவலனும் மாதவியும் இருந்தனர் என்று சிலம்பு (கடலாடு காதை 166-170) கூறுவது காண்க. (ஓவிய எழினி - சித்திரப் பணி எழுதின திரை. அரும்பதவுரை)
சங்க காலத்திலே நாடக மேடைகளில் எழினியாகிய திரைகள் மூன்று விதமாக அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் திரைகள் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்று பெயர் பெற்று இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
”தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேனிலை வைத்துத்
தூண் நிழல் புறப்பட மாண் விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளைவுடன் ஆற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்,”
என்று கூறுவது காண்க.(அரங்கேற்று காதை, 106-113)
இதில் கூறப்பட்ட "ஒருமுக எழினியும் பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு" என்னும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் இவ்வாறு உரை எழுதுகிறார்:
"இடத்தூண் நிலையிடத்தே உருவுதிரையாக ஒருமுக எழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவு திரையாகப் பொருமுக எழினியும் மேற்கட்டுத்திரையாகக் கரந்துவரல் எழினியும் செயற் பாட்டாலே வகுத்து என்க. மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க்கெனக் கொள்க. என்னை?
- அரிதரங்கிற் செய்தெழினி மூன் றமைத்துச் சித்திரத்தாற் பூதரையும் எய்த எழுதி இயற்று
என்றார் பரத சேனாபதியாரும்."
இதனாலே, தமிழர் தமது அரங்க மேடைகளிலே மூன்று வகையான எழினிகளை அமைத்தனர் என்பது தெரிகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்தில் உபவனம் என்னும் பூந்தோட்டத்திலே புத்தர் பெருமானுக்கு அமைக்கப்பட்ட பளிக்கறை (கண்ணாடி) மண்டபம் இருந்தது. அந்தக் கண்ணாடி மண்டபத்திலே, மணிமேகலை என்பவள், உதயகுமரன் என்னும் சோழ அரச குமரன் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அறிந்து, ஒளிந்து கொண்டனள். ஆனால், அரசகுமரன் அவள் பளிக்கறை மண்டபத்திற்குள் இருப்பதைப் பார்த்தான். பார்த்த அவன், அவள் அதற்குள் இருக்கும் இருப்பைக் கண்டு, "கண்ணாடியால் அமைக்கப்பட்ட பொருமுக எழினிக்குள்ளே இருந்து இலக்குமி, பாவைக் கூத்து ஆடுவதுபோல ஓவியன் எழுதியமைத்த பதுமையோ"என்று தனக்குள் எண்ணி வியந்தான் என்று மணிமேகலை என்னும் காவியம் கூறுகிறது.
“இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகம் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
[…]
ஓவியன் உள்ளத்து உன்னியது வியப்போன்
காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து,"
என்று மணிமேகலை (ஐந்தாவது காதை 1-8.) கூறுகிறது.
வாசவதத்தை என்னும் அரசகுமாரி தான் கற்ற இசைக் கலையை அரங்கேற்றியபோது அவள், எழினியால் அமைந்த மண்டபத்திலே இருந்து இசை அரங்கேற்றினாள் என்று பெருங்கதை என்னும் காவியம் கூறுகிறது. அந்த எழினி மண்டபத்தைக் "கண்டங்குத்திய மண்டப எழினி " என்று கூறுகிறது. பல நிறமுள்ள திரைச் சீலைகளினால் கண்டக்கோல் நிறுத்தி மண்டபமாக அமைந்த அரங்கம் என்பது இதன் பொருள். மேலும்,
“எதிர்முகம் வாங்கி எழினி மறை இப்
பதுமா நங்கையும் பையெனப் புகுந்து”
என்றும்,
"கஞ்சிகை எழினியில் கரந்து நிற்போரும்"
என்றும் பெருங்கதை என்னும் காவியம் கூறுகிறது. இவற்றால், திரை என்னும் பொருள் உடைய எழினி என்னும் சொல் தமிழ் மொழியில் வழங்கி வந்தது என்பது தெரிகின்றது.
இந்த எழினி என்னும் சொல்லைத்தான் சம்ஸ்கிருதமொழி கடனாகப் பெற்றுக்கொண்டு இதனை யவனிகா என்று திரித்து வழங்கியது. சம்ஸ்கிருத மொழியில் ழகர எழுத்து இல்லாதபடியால், சம்ஸ்கிருதக்காரர் எழினியில் உள்ள ழகரத்தை உச்சரிக்க முடியாமல், ழகரத்தை வகரமாக்கி உச்சரித்தார்கள். அதாவது எழினியை எவினி என்று உச்சரித்தார்கள். பிறகு எவினி, யவனி யாகி அதன் பின்னர் யவனி, யவனிகா ஆயிற்று.
++++++++++++++++++++++++
இப்படிச் சொன்னால் சம்ஸ்கிருதக்காரர்கள் ஒப்புக்கொள்வார்களா? சம்ஸ்கிருதத்திலிருந்துதான் மற்றப் பாஷைகள் சொற்களைக் கடன் வாங்கின, சம்ஸ்கிருதம் மற்றப் பாஷைகளிலிருந்து கடன் வாங்கவில்லை என்று நம்புகிற, சொல்லுகிற சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள். அவர்கள், எழினி என்னும் தமிழ்ச் சொல்லைச் சம்ஸ்கிருத மொழி கடனாகப் பெற்றுக்கொண்டு யவனிகா வழங்குகிறது என்று சொன்னால், இதை ஏற்றுக்கொள்வார்களா? ஏற்கமாட்டார்கள். ஆனால், சம்ஸ்கித மொழியிலிருந்தே இதற்குச் சான்று காட்டினால், அறிவாளிகள் ஏற்றுக்கொள்வார்கள் அல்லவா? ஆகவே சம்ஸ்கிருதத்திலிருந்தே இதற்குச் சான்று காட்டுவேன்.
சான்று காட்டுவதற்கு முன்னர் இன்னொரு செய்தியையும் தெளிவுபடுத்த வேண்டும். அதென்னவென்றால், கிரேக்கக் கப்பல் வாணிகர் திரைச்சீலைகளை நமது நாட்டில் கொண்டு வந்து இறக்குமதி செய்தார்களா? என்பதுதான். யவனக் கப்பலோட்டிகள் வாணிகப் பொருள்களாகக் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் ஏற்றுமதி செய்துகொண்டுபோன பொருள் இன்னின்னவை என்பதை கிரேக்கர்கள் எழுதி வைத்திருக்கிற பழைய நூல்களிலிருந்து நாம் அறிகிறோம். கிரேக்கர் நமது தேசத்தில் இறக்குமதி செய்த பொருள்களில் திரைச்சீலை கூறப்படவில்லை. யவன நாட்டிலிருந்து திரைச்சீலைகள் நமது தேசத்துக்கு வந்திருக்கவும் முடியாது. ஏனென்றால், அந்தக் காலத்தில் பருத்தித் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது பாரத தேசமும் தமிழ்நாடுந்தான். யவன தேசம் அந்தக் காலத்தில் பருத்தித் துணிகளுக்குப் பெயர் பெறவில்லை. யவன நாட்டிலிருந்து துணிகள் ஏற்றுமதியாகவில்லை. எனவே, பருத்தித் துணிகளினால் செய்யப்படும் எழினி (திரைகள்) யவன நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு இறக்குமதி ஆகியிருக்க முடியாது. பருத்தித் துணிக்குப் பேர் பெற்றிருந்த பாரத தேசம், அத்தொழிலில் வளம் பெறாத யவன நாட்டிலிருந்து திரைச் சீலைகளை இறக்குமதி செய்தது என்றும், யவனர்களால் இறக்குமதியான திரைச்சீலைக்கு யவனிகா என்று பெயர் வந்தது என்றும் கூறுவது பொருத்தமற்றதும் தவறானதும் ஆகும். அது சிறிதும் பொருந்தாது.
மேலும், ஆதிகாலத்திலே கிரேக்கர் தமது நாடக அரங்க மேடைகளிலே திரைச்சீலைகளை அமைக்கும் பழக்கம் உடையவர் அல்லர் என்றும், மிகப் பிற்காலத்திலேதான் அவர்கள் நாடக மேடைகளில் திரைச் சீலைகளை அமைக்கும் வழக்கத்தைக் கற்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூற்று உண்மையானால், நாடக மேடையில் திரை அமைக்கும் பழக்கம் இல்லாத யவன நாட்டிலிருந்து திரைச்சீலை பாரத தேசத்தில் இறக்குமதியாயிற்று என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? யவனர் தமது நாடக மேடையில் திரைகளை ஆதியில் அமைத்திருந்தாலுங்கூட அங்கிருந்து திரைச் சீலை நமது நாட்டுக்கு இறக்குமதி ஆகியிருக்க முடியாது. ஆகவே, யவனிகா என்னும் சொல் யவன என்னும் சொல்லிலிருந்து உண்டானது அல்ல என்பது தெரிகிறது.
எழினி என்னும் தமிழ்ச் சொல் சம்ஸ்கிருதத்தில் யவனிகா என்றாயிற்று என்பதற்குச் சான்று காட்டுவதற்கு முன்னர் இன்னொன்றையும் இங்குக் கூற வேண்டும். எழினி என்னும் சொல் திரைச் சீலைக்குப் பெயராக வழங்கியதும் அல்லாமல், தமிழ் நாட்டிலே மனிதருக்கும் பெயராக அமைந்திருந்தது. எழினி என்னும் பெயருள்ள சிற்றரசர் பரம்பரை ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. எழினி அரசர்களைப் பற்றிச் சங்க நூல்களிலே காண்கிறோம். "அதிகமான் எழினி” என்னும் அரசன் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டு அப்போரிலே உயிர் இழந்தான். அவனை அரிசில் கிழார் என்னும் புலவர்,
”வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
பொய்யா எழினி பொருதுகளம் சேர"
என்று (புறம் 230) பாடுகிறார்.
"வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி" என்பவனை ஒளவையார் கூறுகிறார்.(குறுந்தொகை 80)
"மதியேர் வெண்குடையதியர் கோமான், நெடும்பூண் எழினி” என்பவனை அவரே பாடுகிறார்.(புறம் 392)
”சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி”யைத் தாயங்கண்ணனார் என்னும் புலவர் பாடுகிறார்.(அகம் 105.)
“போர்வல் யானைப் பொலம்பூண் எழினி”யை நக்கீரர் கூறுகிறார்.(அகம் 36)
பெருஞ்சித்திரனாரும் (புறம் 158), மாங்குடி மருதனாரும் (புறம் 396), மாமூலனாரும் (அகம் 197) எழினி என்னும் பெயருள்ள அரசனைப் பாடியுள்ளனர். எனவே, எழினி என்னும் பெயருள்ள அரச குடும்பம் ஒன்று இருந்தது என்பதும் அந்தக் குடும்பத்து அரசரைப் பல புலவர்கள் பாடியுள்ளனர் என்பதும் தெரிகின்றன.
எழினி பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் பிற்காலத்திலும் இருந்தார்கள். அந்தப் பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஒருவன் போளூருக்கு அடுத்த திருமலை என்னும் ஊரிலே குன்றின் மேலேயுள்ள சிகாமணிநாதர் கோவிலில் இயக்கன் இயக்கியர் திருமேனியைப் புதுப்பித்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதி சாசனம், இந்த அரசனை எழினி என்று கூறுகிறது. சம்ஸ்கிருதப் பகுதி சாசனம் எழினியை யவனிகா என்று கூறு கிறது! அதாவது, தமிழ் எழினி, சம்ஸ்கிருதத்தில் யவனிகா என்று அமையும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகிறது !! இந்தச் சாசனத்தைக் கீழே தருகிறேன்.
"ஸ்வஸ்தி ஸ்ரீ சேர வம்சத்து அதிகமான் எழினி செய்த தர்ம யக்ஷரையும் யக்ஷியாரையும் எழுந்தருளுவித்து எறிமணியும் இட்டு கடப்பேரிக்குக் காலும் கண்டு குடுத்தான்."(இது தமிழ்ப் பகுதி சாசனம்.)
"ஸ்ரீமத் கேரள பூப்ரிதா யவனிகா நமனா சுதர்ம்மாத்மனா துண்டீரஹ்வய மண்டலார்ஹ ஸுகிரௌ யக்ஷேஸ்வரௌ கல் பிதௌ.”[1](இது சம்ஸ்கிருதப் பகுதி சாசனம்.)
"இந்தச் சாசனத்திலே தமிழ்ப் பகுதியில் வருகிற எழினி என்னுஞ் சொல் சம்ஸ்கிருதப் பகுதியில் யவனிகா என்று கூறப்பட்டிருப்பது காண்க. இந்தச் சாசனத்தைப் பதிப்பித்த Dr. E. Hultzsch அவர்கள், "திரை என்னும் பொருள் உடைய எழினி என்னும் தமிழ்ச் சொல்லின் சரியான சம்ஸ்கிருதச் சொல் யவனிகா என்பது" என்று விளக்கம் எழுதியிருக்கிறார். Yavanika is the Sanskrit equivalent of the Tamil Elini, 'a curtain'[2] என்று அவர் எழுதியிருக்கிறார்.
எழினி என்னுஞ் சொல் யவனிகா என்றாயிற்று என்பதற்கு நல்லதோர் சான்றினைச் சாசனத்திலிருந்தே காட்டினேன். எனவே, இதனை இனி ஒருவரும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். யவன என்னுஞ் சொல்லிலிருந்து யவனிகா என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் உண்டாயிற்று என்று கூறுவது, மேற்போக்காகப் பார்ப்பவர்க்கு உண்மை போலத் தோன்றினாலும், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் உண்மையில் எழினி என்னும் சொல்லே யவனிகா என்றாயிற்று என்பது பட்டப்பகல் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்றும்,
”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்றும் திருக்குறள் கூறுவது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ்மொழி பல சொற்களைக் கடனாகக் கொண்டிருக்கிறது போலவே, சம்ஸ்கிருத மொழியும் தமிழ்மொழியிலிருந்து பல சொற்களைக் கடன்வாங்கியிருக்கிறது. எடுத்துக் காட்டாகச் சில சொற்களைக் கூறுவோம்:
நீர், அனல், யாடு (ஆடு), கான் (கானகம்), களம், தாமரை, தண்டு, பல்லி, புன்னை, மயில், மல்லிகை, மை, மகள், மாலை, மீன் என்னும் தமிழ்ச் சொற்கள் சம்ஸ்கிருதத்தில் சென்று முறையே நீர, அனல, எட, கானன, கல, தாமரஸ, தண்ட, பல்லீ, புன்னாக, மயூர, மல்லிகா, மஷி, மஹிளா, மாலா, மீனா என்று வழங்குகின்றன. இவை போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சொற்களைத் தமிழிலிருந்தும் வேறு திராவிட மொழிகளிலிருந்தும் சம்ஸ்கிருத பாஷை கடன் வாங்கியிருக்கிறது. சம்ஸ்கிருத மொழி தமிழிலிருந்து கடன் வாங்கிய சொற்களில் யவனிகா என்பதும் ஒன்று என்றும் எழினி என்னும் சொல் யவனிகா என்று ஆயிற்று என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டன.
1.Inscription at Tirumalai near Polur. Pp. 331-332. Epigraphia Indica Vol. VI.↩
2.E.I. Vol. VI. P. 331.↩
அருமையான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விளக்கம் மயிலையாருக்கு வணக்கங்கள்
பதிலளிநீக்கு