பக்கங்கள்

திங்கள், ஜனவரி 17, 2022

சிவசேகரத்தின் கவிதைகள்: நினைவுகளின் சிறு குறிப்பு



கவிஞர் சி.சிவசேகரம் அவர்களின் கவிதைகள் முழுவதையும் தொகுத்து சுமார் 600 பக்கங்கள் கொண்ட நூலாக, பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் காத்திரமான முன்னுரையுடன் வெளிக்கொண்டுவரும் முயற்சி நிறைவேறி வருகின்றது. கடந்த 15ம் தேதி தைமாதம் 2022 அன்று அவரது கவிதைகளை வைத்து ஒரு அளிக்கை மெய்நிகர் நிகழ்வு தோழர் பௌசர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவாக நடைபெற்றது. அடுத்து வரும் இரண்டு வாரங்களில் சி.சிவசேகரம் அவர்களின் கவிதைகள் பற்றிய தொடர் மெய்நிகர் நிகழ்வுகள்(22 & 29 தை 2022) நடைபெற இருக்கின்றன. நேற்றைய நிகழ்வு நடைபெற்றபோது கீழ்வரும் சில நினைவுகள் என்னில் மீளக் கிளம்பின.

சிவசேகரத்தின் கவிதைகள்: நினைவுகளின் சிறு குறிப்பு

***********************************



புகலிட இலக்கியச் சூழலில் கவிஞர் சிவசேகரம் அவர்களின் கவிதைகள் நன்கு பரீச்சயமானவை. அவர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல தமிழ் இலக்கியச் சஞ்சிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அந்த சிறு சஞ்சிகைகளின் வாசகர்கள் தொகை மிகச் சிறியதாயினும் கவிஞர் சிவசேகரம் அவர்களின் ஆக்கங்கள் அவற்றில் வெளிவந்துகொண்டிருந்தன. அச் சிறிய சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை வழங்கி , ஊக்கமளித்து அவற்றுக்கு ஓர் இயங்கு பலமாக இருந்தவர் கவிஞர் சிவசேகரம் அவர்கள்.

அடக்குமுறை, அதற்கு எதிரான ஆயுதப் போராட்டம், பலவேறு ஆயுதப் போராட்டக் குழுக்கள், போன்றவை நிறைந்த சூழலில் இருந்து வெகுதொலைவில் புதிய நாடுகள், புதிய அரசுகள், முற்றிலும் புதிய அன்றாட வாழ்க்கைமுறைகளை எதிர்கொள்வதில் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கைப் புகலிடச் சமூகம் திணறியது.

பெண்ணியம், பெண்விடுதலை, ஏகாதிபத்திய-, நிறவாத எதிர்ப்பு, சூழலியல் பற்றிய பிரக்ஞை, பரந்த உலகளாவிய பார்வை…உலகம்பரந்த அடக்கு முறை எதிப்புச் சமூகங்களுடனான மானசீக இணைப்பு, வெளிநாட்டவர், அந்நியர் என்று கொள்ளப்படுபவர்கள் நாங்களும் தான் என்ற சமூக அடையாள ஏற்பு, சாதி, மத, இன வேறுபாடுகளை எதிர்த்தல் மற்றும் பலப்பல ஜனநாயகப் பண்புகள் போன்றவை இலக்கியத்தின் பேசுபொருளாகவும், மனிதர்களைத் இணைத்துத் தோழமை கொள்ளும் அடையாளங்களாவும் இருந்த சூழலில் கவிஞர் சிவசேகரம் அவர்களும் அவரது பன்முகப் பட்ட எழுத்துக்களும் புகலிடச் சூழலில் இவற்றையே பேசின.

”மனிதத்துதவத்தில் உயர் நெகிழ்வான பண்பும் அரசியற் கருத்துக்களில் மிகக் கறாரான போக்கும் கொண்டவர் என்றே அனேகர் அவர் பற்றிச் சொல்வார்கள். ஆனால் புகலிடச் சூழலில் அவரது கறார் தன்மையை நாங்கள் அதிகம் எதிர்கொண்டதில்லை.

’எக்ஸில்’ வெளியீடாக டிசம்பர் 1992 இல் வெளியாகிய ”மறையாத மறுபாதி” என்ற புகலிடப் பெண்கள் கவிதைத் தொகுப்பு கொண்டுவரப்பட்டது. அதற்கு பொருத்தமான பெயர் தேர்ந்தவர் சிவசேகரம் அவர்கள்.

ஆக்கங்களுக்கு கவிஞர் சிவசேகரம் தரும் பொருத்தமான தலைப்புக்கள் வியப்புக்குரியன.

1989ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தோழர் விஸ்வானந்ததேவன் நினைவுதினம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டது. ”கனிவுமில்லை கருணையுமில்லை” என்ற தலைப்பில் ’தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு’ என்ற ஆய்வுப் பேருரையினை சிவசேகரம் அவர்கள் நிகழ்த்தினார். அந்த ஆய்வுரையின் இன்றும் பொருந்திப்போகும் உள்ளடக்கம் வியப்பிற்குரியது.

அதே நிகழ்வில் ”பாடுவோம் உயர்த்திய குரல்களில்” என்ற இசைத்தலும் இடம்பெற்றது. சிவசேகரம் அவர்களின் ’ஓரிரவு’ மற்றும் ’ஹிட்லறின் டையரிகள்’ என்ற இரண்டு கவிதைகள் : “மாலையிலே முத்தரும்பும் என் பவள மல்லிகையில்…” ; “…இன்று இந்த இலங்கை மண்ணில்….” என்று தொடங்கும் பாடல்களாக இங்கிலாந்தில் வாழும் பராபரன் என்ற இளைஞரது மெட்டில் லண்டன் புகைப்படக் கலைஞன் சாந்தகுணம் மற்றும் அவரது குழுவினரால் பாடப்பெற்றன. இவை ஐரோப்பாவில் பரவலடைந்து நண்பர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களாயின. அத்தோடு தோழர் சிவசேகரத்தின் கவிதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட”புது வரலாறும் நாமே படைப்போம்” என்ற ஓர் இசைப் பேழை இங்கே எம்மிடையில் மிகவும் பரவலடைந்திருந்தது.

நாடகர்கள் பாலேந்திரா, ஆனந்தராணி அவர்கள் ஏற்பாடு செய்த கவிதா நிகழ்வுகளிலும் மேடை அளிப்புக்களிலும் சிவசேகரத்தின் கவிதைகள் நிகழ்த்தப்பட்டதையும் இசையோடு பாடப்பட்டதையும் கண்டு அனுபவித்திருக்கின்றேன். நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் சிவசேகரத்தின் பாடல்களை அந்த நாட்களில் இனிமையாகப் பாடுவார். இலக்கியத்தோடு ஓரளவேனும் ஈடுபாடுடையவர்களுக்கு “பிரம்படி” என்ற கவிதை நெஞ்சினை விட்டகலாததாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

”பிட்டுக்கு மண்சுமந்த
பிரான்மீது பட்ட அடி
அணையைக் கட்டி
முடிக்காத பிழைக்காக…
பிரம்பெடுத்த ஆள்மீது
பிரானை அடித்தற்காக
[…]
ஊரார் மீது……..அடிக்க ஒரு பிரம்பு இருந்தற்காக!!!
*

துரோகி எனத் தீர்த்து முன்னொருநாட் சுட்ட வெடி[…]” என்ற கவிதை எத்தனை ஆண்டுகள் எத்தனை ஆயிரம் தடவைகள் பாடினாலும் இன்னும் தேய்வடையாத தன்மையினைக் கொண்டிலங்குகின்றது என்று சொல்லிவிடலாம். 1992 இல் பிரான்சில் நடந்த இலக்கியச் சந்திப்பு ஒன்றில் இக் கவிதையினை நான் வாசித்தளித்தேன். சபை இதன் கிரகிப்பில் சில கணங்கள் அமைதியில் கிடந்ததை இன்று எண்ணிப் பார்க்கின்றேன்.

”முளைந்து எழுந்து தளிர்த்து வளர்ந்து
செழித்து வளைந்து சரிந்து விழுந்து
இறந்து கிடந்த நெல்லின் தலையில்
இருந்தன நாளைய பரம்பரை நூறு” என்று பாடும்போது இன்றைய கம்பனும்

“தூங்கிக் கிடந்தது காற்று-மிகத்
தூசி படிந்து தெரிந்தது பூமி…” என்று பாடும்போது இன்றைய பாரதியும் எமக்குள் நம்பிக்கையின் நாற்றுக்களை ஊன்றுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக