பக்கங்கள்

வெள்ளி, மார்ச் 18, 2022

“அக்கரை இலக்கியம்” -இலங்கை தமிழ் இலக்கிய மரபு

1968 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் வெளிவந்திருக்கின்றது “அக்கரை இலக்கியம்” என்ற நூல். இலங்கை, மலேசியா நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் கொண்டிருக்கும் இந் நூல் வாசகர் வட்டத்தின் 22 ஆவது பிரசுரமாக ஆக்கப்பட்டுள்ளது. ’வாசகர் வட்டம்’ தன் இயங்கு காலத்தில் சுமார் 45 நூல்களை வெளியீடு செய்திருகின்றது. லட்சுமி கிருஸ்ணமூர்த்தி (1925-2009) அவர்கள் 1964 தொடக்கம் 1976 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள். அவரும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்தே இந்த வாசகர் வட்டம் என்ற அமைப்பினை உருவாக்கி BOOKVENTURE என்ற தமது பதிப்பகத்தின் மூலம் இந்த நூல்களை வெளியிட்டிருக்கின்றார். வீட்டினை அடகுவைத்து இந்த நூல்களை வெளியிட்டமை பற்றிப் பல செவ்விகளை லட்சுமி கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியிருக்கின்றார்.இவரது ஆளுமை, சேவைகள் பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிகம் கிடைக்கின்றன.

அண்மையில் இந் நூல் பற்றிய நிகழ்வொன்று ’வாருங்கள் படிப்போம், படைப்போம்’ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, சிங்கப்பூர்வாழ் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் காத்திரமான நீண்டநேரத் திறனாய்வு விரிவுரை ஒன்று இடம்பெற்றது. அந்த விரிவுரைக்குப் பின்னர், கேட்போரிடமிருந்து இலங்கை- மலையக இலக்கியம் பற்றிய அக்கறையான கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றன. அவரது பேச்சில் சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் மேதமை பற்றியும், “அக்கரை இலக்கியம்” நூலில் aவர் எழுதிய இந்தச் சிறு கட்டுரை பற்றியும் விதந்துரைத்தார்.

“அக்கரை இலக்கியம்” என்ற இந் நூலிற்காக அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் (1912-2000) அவர்கள் எழுதிய ”இலங்கைத் தமிழ் இலக்கிய மரபு” என்ற கட்டுரையினை இங்கே பதிவிடுகின்றேன்.




இலங்கை தமிழ் இலக்கிய மரபு

எழுதியவர்: சோ.சிவபாதசுந்தரம்



தமிழ் இலக்கிய வளர்ச்சியைப்பற்றி ஆராயும் போது இலங்கைத் தமிழ் அறிஞர்களின் சேவையைப் புறக் கணித்து, இன்றைய தமிழகத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆராய்வது பொருந்தாது. பல நூற்றாண்டுகளாகவே ஈழநாடு தமிழ் இலக்கியத்துக்கும் புலமைக்கும் மிகப் பெரிய பங்கு சேவை செய்து வந்திருக்கிறது. சங்க காலத்திலேயே ஈழத்து பூதந்தேவனார் முதலிய புலவர்கள் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம். இடைக்காலத்தில், யாழ்ப்பாணத்திலே தனி அரசர்கள் ஆட்சி செலுத்திய போது தமிழ் இலக்கியப் படைப்புக்கள் வளர்க்கப்பட்டன. முக்கிய வடமொழி நூல்கள் பல தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அரசகேசரியின் ”இரகு வம்சம்” கம்பனின் இராமாயணத்துக்கு இணையான தமிழ்க் காவியம்.

பிற்காலத்திலே, பாண்டித்துரைத் தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நடத்திவந்த போது அதில் பங்கு கொண்ட புலவர்களில் யாழ்ப்பாணத்துப் புலவர்களும் வித்வான்களும் மிகப் பலர். கடந்த பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஈழத்திலே, வடக்கே யாழ்ப்பாணத்திலும் கிழக்கே மட்டக்களப்பிலும், தமிழ் இலக்கிய வளர்ச்சி பல்கிப் பெருகியிருந்தது. ஆறுமுகநாவலர் போன்ற பேரறிஞர்களின் விடாமுயற்சியினால் இலங்கையின் தமிழ்க் கல்வித்திட்டத்தில் இலக்கண- இலக்கியத் தகுதி முக்கிய இடம் பெற்றிருந்தது. இன்றுவரையும் அந்த வழி முறை காக்கப்பட்டுவருகிறது.

தமிழகத்திலே, இன்றைய புதுத் தமிழ் இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்களைப்பற்றி ஆராயும்போதெல்லாம் "பண்டிதர்கள்'', ”வித்வான்கள்”, ”தமிழ் ஆசிரியர்கள்'' என்ற இனங்களைச் சேர்ந்தவர்கள், நாவல், சிறுகதை முதலிய கற்பனை இலக்கியத் துறையினருக்கு விரோதமானவர்கள் என்ற ஒரு அபிப்பிராயத்துடன் இருப்பதைக் காணலாம். இலங்கையைப் பொறுத்தவரையில், நல்ல வேளையாக, இந்த ஜாதி வித்தியாசம் கிடையாது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல், பண்டைய இலக்கண - இலக்கிய சம்பிரதாயத்திலேயே அவர்கள் வளர்ந்தவர்களாதலால், அவர்களுக்குத் தமிழ் நாட்டுப் பிரிவினைகள் ஆச்சரியத்தைத் தரலாம்.

ஆனந்த விகடன் '' பத்திரிகை ஆரம்பித்த காலத்தில்-1930, 31 ஆம் ஆண்டுகளில் யாழ்ப் பாணத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு, சிறுகதைகளையும் மற்றும் புதுமைக் கட்டுரைகளையும் தினசரி இலக்கிய ஆராய்ச்சிப் பாடமாக நடத்தியவர் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர், ஆங்கிலம் படிக்காத பழைய பரம்பரை ஆசிரியர், பண்டிதமணி கணபதிப் பிள்ளை. மட்டக் களப்பிலே புதுமைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த சமயத்தில், அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பெற்றிருந் தவர் இலக்கண வித்வான் பெரியதம்பிப் புலவர். இன்று இலங்கையில் எழுதிவரும் தமிழ் எழுத்தாளர்களில் பெரும் பான்மையோர் தமிழ் ஆசிரியர்கள். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றவர்களும், தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற தமிழ் ஆசிரியர்களும், பண்டிதர்களும், வித்வான்களுமே புதுத் தமிழ் இலக்கியப் படைப்பில் முன் நிற்பவர்கள். இந்த அடிப் படையில் ஆராயும்போது, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பங்குக்குத் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய இடமுண்டு.

இலங்கையிலே யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் (இரு பெயரும் தமிழ் மா நிலங்கள்) வெவ்வேறு வகையான பேச்சுத் தமிழை வழக்கில் கொண்டவை. இதன் காரண மாக, தமிழ் நாட்டு வாசகர்களுக்கு இலங்கை எழுத்தாளர் சிலரின் கதைகளில் வரும் சொற்கள் புரியாமலிருக்கலாம். போர்த்துக்கேசியரும் டச்சுக்காரரும் ஆட்சி செய்த காலத்தில் குடிகொண்ட சில அன்னியச் சொற்களும் (கதிரை= நாற்காலி), நாஞ்சில் நாட்டவர் குடியேறிய காலத்தில் வந்து சேர்ந்த மலையாளச் சொற்களும் (என்ரை=என்னுடைய), ஆங்கிலச் சொற்கள் சில தமிழ் வடிவத்தில் வரும்போது யாழ்ப்பாணத்தவர்கள் தமது உச்சரிப்பு முறைக் கேற்பக் கையாளும் எழுத்து முறையும் (Rita = தமிழ் நாட்டில் ரீட்டா; யாழ்ப்பாணத்தில் றீற்றா, அல்லது ரீற்றா. இடையின 'ர 'கரம் பெரும்பாலும் வல்லினமாகவே அவர்கள் உச்சரிப்பதால், மொழிக்கு முதலில் வரும் T என்ற ஆங்கில எழுத்துக்குத் தமிழிலே ' ர 'கரம் போட்டே எழுதுவார்கள்- Taxi=ராக்ஸி), சிங்கள மொழியிலுள்ள சில வார்த்தைகள் தமிழில் பரவிய காரணத்தால் வழக்கில் வந்த சில சொற் களும் (சிங்களத்தில் பிஸ்ஸா= யாழ்ப்பாணத் தமிழில் விசர் = பைத்தியம்) - இத்தகைய பிராந்திய வழக்குத் தமிழ் நாட்டு வாசகர்களுக்கு மலைப்பைத் தரும். இவற்றைத் தவிர, யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் பேச்சுத் தமிழிலுள்ள கொச்சை வெவ்வேறு வடிவங்களாயிருக்கும். தீவுப்பகுதியில் (யாழ்ப்பாண நகரை அடுத்து ஏழு சிறு தீவுகளிருக்கின்றன) பேசப்படும் கொச்சைத் தமிழுக்கும், வடக்கே பருத்தித்துறை, கிழக்கே சாவகச்சேரி, இன்னும் தெற்கே வன்னிப் பகுதி - இவற்றில் வழங்கும் கொச்சைத் தமிழுக்கும் வித்தியாசம் காணலாம்.. மட்டக்களப்புப் பகுதியில் ஒரு "கா ' ஓசை சேர்ப்பார்கள். (சொல்லு- சொல்லுகா !). இத்தகைய பேதங்களையும் புரிந்து கொண்டால், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களையும் சிறுகதைகளையும் படிக்கும்போது ஓட்டம் தடைப்படாது.

இன்னுமொரு செய்தி : யாழ்ப்பாணத்திலும் மட்டக் களப்பிலும் மக்கள் வாழ்க்கை முறையில் தமிழ் நாட்டவர்களுக்குச் சிறிது மாறுபட்ட முறை இருக்கக் காணலாம். 'சோளகம்' என்ற சிறுகதையில் "பச்சையரிசிக் கஞ்சியைச் சொட்டும் சிந்தாமல் குடிக்குமளவிற்கு வறுமை'' என்ற சொற்றொடர் வருகிறது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் புழுங்கல் அரிசியே சாப்பாட்டுக்கு உபயோகப் படுத்துவார்கள். பச்சரிசி 'நொய்' அரிசிபோல, கொஞ்சம் அந்தஸ்தில் குறைவு ; வறுமைக்கு எடுத்துக்காட்டு!

இந்த நூலிலுள்ள சிறு கதைகளில் பெரும்பாலானவையும் இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இந்திய வம்சாவழியினர் வாழும் தேயிலைத் தோட்டப் பகுதி - இவற்றில் காணும் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டும் தன்மையில் அமைந்துள்ளன. அன்றியும், மேல்நாட்டிலும் தமிழகத்திலும் பரவி வரும் இலக்கிய மதம் இன்றைய இலங்கைத் தமிழ் இலக்கியத்திலும் செறிந் திருப்பதைக் காணலாம். கவிதையைப் பொறுத்தவரையில் 'தரிசனம்', இல்லையான காவியம்' இந்த இரண்டும் இலங்கை எழுத்தாளரிடம் காணப்படும் கவிதை மரபை அப்படியே காண்பிக்கின்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தமிழகப் பத்திரிகைகளில் இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. சென்னையிலுள்ள இரண்டொரு பதிப்பகங்கள் இலங்கை ஆசிரியர்களின் சில நாவல்களையும், சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றன. பெரும்பாலும் இந்த வெளியீடுகள் அந்தந்த ஆசிரியர்களின் சொந்த முயற்சியால் வெளியிடப்பட்டவை. " அக்கரை இலக்கியம்'' என்ற இந்த நூல் இலங்கை எழுத் தாளர்களின் படைப்புக்களை ஒரு தனிப்பட்ட இலக்கியக் காட்சியாக அமைத்துத் தமிழ் நாட்டு வாசகர்களுக்கு அளிப்பதில் ஒரு பெருமையுண்டு; இது ஒரு சிறந்த சேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக