இலங்கையில், பெருமளவாக இலங்கையின் தென்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அவற்றின் வளர்ச்சிப் போக்கும் பற்றிய சுருக்கமான பதிவினை கீழ் வரும் இணைய சஞ்சிகையில் ஆங்கிலத்தில் காணமுடிகின்றது.
இலங்கையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அவற்றின் வளர்ச்சியும்-சில சுருக்கக் குறிப்புக்கள்
1. மக்களின் வாழ்நிலை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருப்பதனால் ”வீடு போ கோதா” என்ற கோசத்தின் கீழ், நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏப்றில் மாதம் 3ம் திகதி செய்வதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசியல்-, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தங்களது ஆதரவை வழங்கியமையால் அவை உத்வேகங்கொண்டன.
2. சமையலுக்கான எரிவாயு, குழந்தைகளுக்கான பால்மா உணவுவகைகள், வாகனங்களுக்கான எரிபொருட்கள் போன்றவற்றின் பாரிய பற்றாக்குறையின் காரணமாக ஆங்காங்கே சிறிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை முறியடிக்கும் பொருட்டு அரசு 8 தொடக்கம் 13 மணிநேர மின்சாரத் துண்டிப்பினை மேற்கொள்கின்றது.
3. இறக்குமதி செய்வதற்குத் தேவையான பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயம் இலங்கையிடம் இல்லாது போனதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி திடீரென ஏறுமுகமாக உயர்ந்தது. இலங்கை ரூபாயின் பெறுமதி ஒரு வார காலத்திலேயே 30 % க்கும் அதிகமாக மதிப்பிழந்தது. இப் பெரிய பொருளாதார வீழ்ச்சி அரச நிர்வாகத்தினை ஆட்டங்காண வைத்துள்ளது. இலங்கையின் இன்றைய வெளிநாட்டுக் கடன் சுமாராக 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கின்றது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
4. ”வீடு போ கோதா” என்ற கோசம் பரவலடைந்து இப்போது ”வீடு போங்கடா ராஜபக்சாக்களே” என்று ஒலிக்கின்றது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பலவகை அமைச்சுப் பதவிகளை ராஜபக்ச குடும்பமே தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டமை இப்பொழுது அந்தக் குடும்பத்தின் மீது மக்களின் கோபமாக மாறியிருக்கின்றது. 5. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ராஜபக்சேவின் மனைவியும் ராஜபக்சே குடும்பத்தினரும் மக்களின் கூச்சலினால் த்ரும்பிச் சென்றனர்.
6. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் இருக்கும் மிரிஹான என்ற இடத்தில் வாழும் மக்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி ஒரு பேரணியாகச் சென்றபோது பொலிஸாருக்கும் சில எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலின் பின்னர் வாகனங்கள் எரிக்கப்பட்டன; பொலிஸாரும் இராணுவமும் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கி, போலித் தோட்டா போன்றவற்றின் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சித்தனர். இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் ஊடகவியலாளர்கள் உட்பட பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இவற்றால் பலர் காயமடைந்தனர்; ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 53 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
7. இவற்றால் மக்களை அடக்கிவிட முடியவில்லை. கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு ஆதரவாக 300க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் 3ஆம் திகதி ஆஜராகி, இரவு 10:45 மணிக்கு வழக்கு முடியும் வரை மிரிஹான பொலிஸ் மற்றும் நுகேகொட நீதிமன்றத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர். அரசதரப்பு அவர்கள் அனைவரையும் விளக்க மறியலில் வைத்திருக்கவே நீதிபதியைக் கோரியபோதும் 6 பேரைத் தவிர, மற்றவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
8. ”வீடு போ கோதா” (GoHomeGota)என்ற கோசத்தில் முகநூல் பக்கம் திறந்து பிரச்சாரம் செய்த அனுருத்த பண்டார ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினரால் கடத்தப்பட்டார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் அவர் அடுத்தநாள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
9. மக்கள் போராட்டங்களை முடக்குமுகமாக, ஏப்ரல் 02 ஆம் தேதி நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி ராஜபக்ஷவால் அறிவிக்கப்பட்டது. இதன்படி சனிக்கிழமை , ஏப்றில் 2 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை ஏப்றில் 04 ஆம் தேதி காலை 6.00 மணி வரை , அதாவது 36 மணிநேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்தோடு நள்ளிரவு முதல் சமூக ஊடகத் தளங்கள் யாவும் முடக்கப்பட்டன.
10. “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மட்டும் கூறி, போதிய விளக்கம் அளிக்காமல் அவசரகால சட்டப் பிரகடனம் எடுக்கபட்டது” என்று ராஜபக்ச நியமித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவினரே விசனம் தெரிவித்தனர்.
11. சமூக ஊடகத் தடையை மேற்கொண்டிருக்கக் கூடாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறைமுகமாக தனது சித்தப்பா ஜனாதிபதி ராஜபக்ஷவைக் குறிவைத்து குற்றம் சாட்டியுள்ளார். 12. ஞாயிற்றுக்கிழமை,ஏப்றில் 03 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதிலும், அதனைப் புறக்கணித்து எதிர்க்கட்சி எஸ்ஜெபி வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. வடக்கு கிழக்கைத் தவிர, முக்கியமாக நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. ஜேவிபியும் இவற்றில் இணைந்தது.
13. சமூக ஊடகத் தடை நிக்கப்பட்டது. ராஜபக்ச குடும்ப ஆட்சியை ஒழிப்பது போராட்டத்தின் மையப்பொருளாக மாறியது.
14. ஏப்ரல் 03 ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
15. ஏப்ரல் 04 அன்று, அனேக அரசாங்க எம்.பி.க்களின் வீடுகளுக்கு முன்னால் மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2000 மக்கள் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பூர்வீக வீட்டை நோக்கிச் சென்றனர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கொழும்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
16. வடக்கிலும் கிழக்கிலும் ஏப்ரில் 04 ஆம் திகதி தமிழர்களும் போராட்டத்தை நடத்தினர். கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் தமிழர்களின் பங்கேற்புக் குறைவாக இருந்த போதிலும் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
17. ஏப்ரில் 04 ஆம் திகதி நான்கு புதிய அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி ராஜபக்சேவின் வழக்கறிஞரும் நேற்றுவரை நீதி அமைச்சருமான அலி சப்ரி இப்போது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். முன்னாள் நிதியமைச்சர் பசில் எந்த அமைச்சு நியமனத்தையும் பெறவில்லை.
18. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குத் தமது அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை எதிர்க் கட்சிகளாகவிருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
19. எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா (SJB) நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரியது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) ஜனாதிபதியை ராஜினாமா செய்யவும் , பொதுத் தேர்தலை நடத்தவும் கோரியது. 20. இது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, அதற்குக் காரணமான அரச நிர்வாகக் குளறுபடிகளும் பிரச்சினையாகி நிற்கின்றன. தீர்விற்கான எந்த முகாந்திரமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
21. ”வீடு போ கோதா” (GoHomeGota) ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் நகர்ப்புற மத்திய வர்க்க இளைஞர்கள், ஆண்களும் பெண்களும் பங்குகொள்கின்றனர். தொழிற்சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சிவில் குழுக்கள் போன்றவற்றின் பங்கேற்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இளம் பெற்றோர்கள் தங்கள் கைக் குழந்தைகளுடன் போராட்த்தில் ஈடுபடுவதும் காணக்கூடியதாக இருக்கின்றது.”வீடு போ கோதா”(GoHomeGota)என்ற பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரவச் செய்ய, செய்தி வலையமைப்புக்கள் உருவாகியுள்ளமை அறியக்கிடைக்கின்றது.
22. போர்க் காலப்பகுதியில் (2008-2009) இலங்கை இராணுவத்தில் மருத்துவராக இருந்த, தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் பாதும் கெர்னர் என்பவரே ”வீடு போ கோதா”(GoHomeGota) கோசத்தின் சமூக ஊடக பிரச்சாரத்தின் முன்னணி நபர். சமீபத்திய you tube விவாதத்தில் அவர் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட இடைக்கால அரசு என்ற யோசனையை அவர் நிராகரித்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் அவரது அணியினர் ஓர் அரசியல் கட்சியாக போட்டியிடுவோம் எனவும் பூடகமாகக் கூறியுள்ளார்.
23. அமைப்பினையோ அர்சியற் கருத்தினையோ சாராது அவர்களின் இன்றைய காலமும் அவர்களுக்குரிய எதிர்காலமும் ஆளும் வர்க்கத்தால் சிதைக்கப்படுவதைக் கண்டு கோபமடைந்த மக்கள் என்றும், இலங்கை அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைத் தாம் விரும்புவதாகவும் கூறிக்கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக